அமராவதிச் சிலை
கதையாசிரியர்: மு.கனகராசன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 7,317
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மீருதுவான கானகம். மென்மையான கீதம். ஆஹா! குரல்தானா அது? அப்பப்பா, எத்தனை இனிமை! அந்தப் பசுமைப் பகுதியே மோனலயத்தில் ஆழ்கிறது. இரம்மியமான அந்தச் சுந்தர கானம் காற்றில் இயைந்து மேலே மேலே விண்ணைச் சாடுகிறது.
விண்மீன் இராணிகளுடன் அழகுப் போட்டியிடுவதற்காக அலங்கரித்துக் கொண்டிருந்த நிலவுக் கன்னி இந்த இசையின் இனிமையில் மயங்கித் தன்னைக் கட்டுப்படுத்த இயலாதவளாய்க் கருமுகிற் கூட்டத்துள்ளிருந்து மெதுவாத் தலையை நீட்டிப் ‘பாடுவது யார்’ என்று பார்க்கிறாள். அவளையும் முந்திக் கொண்டு நட்சத்திரக் குல நங்கையர் ‘மினுக்மினுக்’ எனக்கண்ணிமைத்தபடி உற்று உற்று நோக்குகின்றனர். இவர்களின் கண்கள் பிறப்பிக்கும் தன்னொளியினால் அழகே உருவான சுந்தர வாலிபனொருவன் பசுமையே நிறைந்த பச்சைப் புற்றரையில் மல்லார்ந்து கிடப்பதுதான் தெரிகிறது.
யார் அவன்? ஏன் இப்படிக்கிடக்கிறான்?
அவனும் அந்தக்கீதத்திலேயே தன்ணுணர்வுகளைக் கலந்து, தன்னையும் இழந்துதான் மயங்கிக்கிடக்கிறான். மாலையும் இரவும் இரண்டற இணைந்து ஊடல் செய்து இன்பம் சேர்க்கும் அவ் வேளையில் தன்னைத் தழுவி வருடிச் செல்லும் மந்த மாருதம் மென்மையானதா அல்லது அந்த மந்த மாருதத்தை தழுவி வரும் கானம் மென்மையானதா என்ற கலைமெருகேறிய ஐயத்துடன் எழுந்து உட்காருகிறான் அவன்.
“தென்றலே, நீ அருபி ! உன்னைப் போன்றே இந்தக் கானத்திற்கும் உருவம் இல்லை! உங்களிருவருக்கும் புற உருவம் இருக்குமானால் அந்தச் சாயல்களிலே கற்களில் வடித்து உங்களில் எழிலும் மென்மையும் மிக்கவர் யார் என உலகிற்குக் காட்டிக் கலைக்கோவிலேயே ஏன், கலையுலகிலேயே உங்களிருவர்க்கும் தனி இடங்களை சிருஷ்டித்து விடுவேன்” என்று வாய் முணு முணுக்க இதயம் கானத்தால் நிறைய அவனது கால்கள் தன்னையும் மீறி இசைபிறக்கும் திக்கை நாடுகின்றன.
‘அப்பப்பா! பளிங்கா, பதுமையா? முத்தா, சித்திரமா? அல்லது பாவையே தானா? என்னே எழில் ! இப்படியும் ஒரு அழகா?’ சௌந்தர்யங்களெல்லாம் ஒரு கதம்ப சாரமாக வந்தமைந்தாற் போன்ற ஓவிய உருவந்தான் அவள். அவன் வியந்து நின்றான்.
நிலத்தில் இருள் கவிகிறது.
“சே ! நிலவு மங்கையே, உங்களினத்துக்குத்தான் எவ்வளவு பொறாமை. இவள் அழகாயிருக்கிறாள். முத்துச்சரத்தைப் போன்ற அந்த மோகன எழில் உன்னையே பொறாமை கொள்ளச் செய்கின்றதானால்தான் முகத்தை மேகத்துள் மூடிக்கொண்டனையா…? அவன் நிலவை அண்ணார்ந்து நோக்குகிறான்.
நிலவு மீண்டும் வெளிக்கிளம்பிய போது அவள் அந்த எழிலரசி தன் சகியுடன் போவது தெரிகிறது. “ஆ…ஹஹா! போய்விட்டானே!
இதவரை காணாத அவளின் பின்னழகை இரசனையுணர்வோடு பருகுகிறான் அவன். தினமும் அம்மலைச் சாரல் குன்றோரத்திற்கு வரத் தொடங்கினான் அவன். அவளும் வருவாள். வராத நாட்களில் ஏக்கம் தான் அவனுக்கு. வரும் நாட்களில் கணப்போதும் தவறவிடாது அணுஅணுவாக அழகைக் கலையாக்கி அனுபவித்து இரசிப்பான்.
விளைவு……?
அவனுள்ளம் அவளது காதல் சுகானந்தத்திற்காக ஏங்கியது. அவள் அவனை மானசீகமாய்க் காதலித்தான். அவளைத் தன் துணைவியாக்கிக் கொள்ளத் தவித்தான். அதற்கு முன்:-
அழகே உருவான இம் மோன மங்கையை சிலையாக வடித்துவிட்டால்…….? கலையுருவாகச் சமைத்து விட்டால்..? இவ்வெண்ணங்களிலேயே மேலும் சில தினங்கள் கடந்தன. துணிந்து போய் நேரில் நின்றாலல்லவா காதலும் கற்பயுைம் கைகூடுவதற்கு.
அன்று மாலை அவனுக்குத் துணிச்சல் வந்துவிட்டது.
அவளோ, அவனைத் தன் கறுப்புத் திராட்சைக் கண்களால் உருட்டி விழித்துப் பார்த்தாள். தோழியும் மலங்க மலங்க விழித்தாள். அச்சத்திற்கும் நாணத்திற்கும் போட்டி.
பெண்களல்லவா?
“யார் நீங்கள்?” சீற்றமும் துடுக்கும் கலந்த துள்ளலுடன் எழுந்து நிற்கிறாள். அவன் மென் முறுவல் செய்கிறான்.
“வந்து…, நா..ன் நான் அமரசேனன் என்று அழைப்பார்கள்….. ஒரு சிற்பி……”
“என்ன வேண்டும் உங்களுக்கு?’
‘நீங்கள் வேண்டும்’ என்று சொல்லிவிட நினைத்தான். ஆனால் சொல்லவில்லை…. சொல்லமுடியவில்லை.
“ஒன்றுமில்லை சும்மா இப்படி வந்தேன்”
நாட்கள் ஒரு சிலரின் நெஞ்சங்களில் மாத்திரம் தங்கள் ஞாபகத்தைப் பதிய விட்டு மறைகின்றன. தன் விருப்பத்தை எப்படி வெளியிடுவதென்றே அவனுக்கு விளங்கில்லை. ஆனால் இருவருமே அக்குன்றொரத்திற்கு வருவதை நிறுத்தவில்லை. இதனால் அமரசேனின் நெஞ்சம் சிறிது தெம்பு பெற்றிருந்தது. ஒரு நாள்
“தினமும் இங்கு வருகிறீர்களே…. ஏனிப்படி வந்து போகிறீர்கள் என்றறியலாமா?”
“நீங்களும் வருகிறீர்களெ…?”
“உண்மைதான்! நான் இந்த இயற்கையெழிலை எல்லாம் இரசிக்கலாம் என்று வருகிறேன்.”
“இதற்கு முன்னர் நான் உங்களைக் கண்டதில்லையே…?”
‘பேசும் உங்கள் எழிலை நான் மறைந்திருந்து பருகினேன்’ என்று அவன் கூறவில்லை.
“ஆமாம்! நான் இங்கு வந்து ஒரு திங்களுக்கு மேலாகப் போகிறது. ஒவ்வோரிடமாயிருந்து வாழ்க்கை நடாத்துவதென்பதே எனது பொழுது போக்கு. அவ்வப்போது சிலைகள் செதுக்குவேன். தங்கும் ஊர்களில் சிற்பப் பணியாற்றக் கிடைத்தால் வேலை முடியும் வரை அங்கேயே இருப்பேன்” என்கிறான்.
“ஓ…… விசித்திரமாயிருக்கிறது. நீங்கள் தங்கியிருப்பது…?
“அதோ, அந்தப் பள்ளத்தாக்கில் தான்…! இந்த ஒற்றையடிப்பாதையிற் சென்று அந்த மேட்டில் நின்றால் என் குடிசை தெரியும்.”
“மனைவியும் குழந்தையும் தனிமையிலா இருப்பார்கள்….”
“அடடே ! அதெல்லாம் இனிமேல் ஏற்பட்டால் தான்.”
‘ஆண்டவனுக்கு நன்றி’ என்று அவளிதயம் இருமுறை வேகமாக அடித்துக் கொண்டது. அதற்கு உருவம் கொடுப்பதைப் போல ஒரு மோகனப் புன்னகை பிறந்து அமரசேனனின் இதயத்தை வீடாக்கிக் கொள்கிறது.
தொடர்ந்து வந்தவை அனைத்தும் அமரத்துவம் பெற்ற காதலின் நாட்கள் ! ஒரு நாள் ‘காணவில்லை’ என்றால் அன்றைய பொழுதே பாழாகிவிட்டதாக நினைக்கச் செய்தன அவை.
அவள் அவனழகில் மயங்கினாள். அவனுடைய தேன் மொழியில் போதை கொண்டாள். அமரசேனனைக் காதலித்தாள்! அவனில்லையென்றால் தன் வாழ்வே விழல் என்றெண்ணினாள்.
அமரசேனன் அவளைப் பற்றி அவளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டான். அவளின் பெயர் அமராவதி. அரண்மனை நாட்டியக்காரி. நாடே அவளின் நாட்டியத்தில் மயங்கிக் கிடக்கிறது. இவை அவளே கூறி அவன் அறிந்து கொண்டவை. அவனுக்குத் தெரியாததும் இருந்தது. அதுதான்……
ஆமாம் ! அமராவதியின் உருவம் பலரின் உள்ளங்களில் ஆடிக்கொண்டிருந்தது ! அன்று அவள் இராஜநர்த்தகி மட்டும்தான். இன்றோ நாட்டையே ஆட்டியசைக்கக் கூடியவளும் கூட.
ஏனெனில் தளபதி அவளின் கைப்பாவை. அரசபோகத்துகாக அதிகார ஆசையில் இப்படியெல்லாம் ஆகிவிட்டிருந்தாள். நாட்டைத் தன் அடிமைப்படுத்தக் கூடுமானால் அதற்காகப் பத்துப் பேரையாதல் பலிகொள்ளப் பின்னிற்காதவள் தான். அறிந்தோரில் பலர் ‘பைசாசம்’ என்றார்கள். அவளை சிலர் ‘பெண்ணல்ல’ என்றார்கள் – ஆனால்……
அமரசேனன் மீது அமராவதிக்கு ஏற்பட்டது. புனிதமயமான காதல். மென்மைக் குணங்கள் கொண்ட அவ் ஆணழகனின் சுந்தர முகம் அவள் மனதில் நிறைந்து விட்டது. அரச சபையில் ஆடுவதை விட அமரசேனனின் மனதிலாட விரும்பினாள்.
சிற்பி அமரசேனன் மனதில் ‘சிற’பம்’ என் காதலியின் கலையுருவம்’ என்ற நினைவு. அந்த ஆவல் பெருகியது. ‘அழகி அமராவதியை- என் காதலியை- சிலையாக வடிக்க வேண்டும். அதை அகில உலகமும் போற்ற வேண்டும். அந்தச் சிற்பத்தைப் பார்த்தே பெண்மைக்கும் இலக்கணம் கூறவேண்டும். அமரசேனன் என்றொரு சிற்பக் கலைஞன் இருந்தான். இதோ அவனது அமர காதலி அழகுத் தேவதை’ என்றெல்லாம் புகழப்படவேண்டும் எனக் கனவு கண்டான்.
ஒரு நாள். “என் அன்பே! உன் பேரெழில் ஈடு கூற முடியாதது. உன் அழகு என்னைச் சிலையாக்கியது. நானோ அந்த அழகையே கலையாக்கப் போகிறேன். உன்னுருவத்திற்கு சிரஞ்சீவித்துவம் அளிக்கப் போகிறேன். அமர சேனனின் அழியாச் சிற்பங்களில் என் காதலி உன் சிலையும் ஒன்றாக வாழப்போகிறது. சரிதானே அமரா?….”
இன்பக் கண்ணீர் ! உணர்ச்சிக் குவியல்!
“தங்கள் சித்தம்… கண்ணாளா!”
அமரசேனனின் அன்பில் தன்னையே இழந்து இடைக்கிடை நாணமெனும் ‘மஸ்ஸின்’ சீலையில்தன் பார்வையைப் பொதிந்தபடி அவனின் மார்பில் துவண்டாள் அமராவதி.
‘எவருக்குக் கிட்டும் இந்தப் பாக்கியம். எத்தனை இன்பம்?….. நான் சிற்பமாகப் போகிறேன். கல்பகல்பாந்தமாக வாழ போகிறேன். வேலும் வில்லும் சூழ்ந்த கரடு முரடான ராஜமேடையில் ஆடுவதை விட மென்மையான உணர்ச்சிகளின் பிறப்பிடமான அமரசேனரின் இதயத்தில் ஆடுவது எவ்வளவு சுந்தரமானது” பெருமையானது ! நிச்சயமாக ஒரு சாம்ராஜ்ஜியத்துக்கே பேரரசியாய் இருப்பதை விட ஒரு கலையுள்ளத்தில் அடிமையாய் இருப்பதே பாக்கியமானது. ஆரம்பிக்க வேண்டியதுதான் ! ஆனால் எப்படி எந்தக் கோணத்தில் சிலையை அமைப்பது என்ற முடிவுக்கு வரமுடியாமற் தடுமாறினான். அமரசேனன், அமராவதி தன் இதயத்தில் அமரகாவியமாக பதிந்துவிட்டாள். அக்காவியம் சிற்பமாகும் போது உலகமே அதன் பால் ஈர்க்கப்பட்டாற்றான். தன் சிற்பத் திறனுக்கே சிரஞ்சீவித்துவமும் பெருமையும் என நம்பினான். எனவே அப்படியான ஒரு வடிவைக் கற்பனை பண்ணிப் பண்ணி எண்ணியெண்ணி நாளும் பொழுதும் சிந்தனையிலேயே கழிந்தது.
அன்றும் சிற்ப நினைவாகவே துயிலெழுந்தான். காலைக்கடன் முடித்து நீராடிய பின் ஏற்றிய தீபம் பொன் ஓவியமாய் ஒளிர கடவுளை வணங்கி, கலைவாணியை வழிபட்டான்.
அதே நிலையிலமர்ந்து தன்னுணர்வு மறந்து சிற்பத்தின் நினைவே அனைத்துமாய் மோனத்தில் ஐக்கியமாகி விட்ட அவனை எங்கோ தொலை தூரத்தில் கேட்ட கோவில் மணிதான் வயிறும், பசியும் கொண்ட மனிதனாக்கியது. அவனறிவான் அது மீனாட்சியம்மன் ஆலய மணி என்று.
மீனாட்சியம்மை சர்வ அலங்கார தேவியாய் அமரசேனனின் மனத்தே தோன்றினாள். அவன் தெளிந்தகலை நெஞ்சத்தால் தேவியைத் தொழுது வேண்டினான்.
தெய்வ சந்நிதியினின்றெழுந்த அவன் துள்ளிக் குதித்தான் இளம் பாலகனைப் போல. எல்லையற்ற எக்களிப்பு அமராவதிக்குச் சிலையெடுக்க முடிவு செய்து விட்டான் அமரசேனன்.
மறுதினமே தன் காதலி அமராவதியை அழைத்து அவளை கல்லி ேவடிக்கத் தொடங்கினான். கலையுருவம் அவனது சிறப்பான கைவண்ணத்தால் கலையின் வண்ணமாய் மெருகேறிக் கொண்டிருந்தது.
அமராவதி அபிநயித்து நிற்கும் போதெல்லாம் அவளுள்ளம் தன்னில் தானாய் கற்பனையுலகில் நுழைந்து வானம்பாடியாய் கவிதை இசைக்கும்.
‘நான் கலையாகப் போகிறேன் ! என் பெயர் மாத்திமல்ல உருவமும்கூட கல்பகோடி காலங்களுக்கு வாழும் ! ஏடுகளிலெல்லாம் இடம் பெறுவேன்! கல்வெட்டுக்களிலே நிலைத்த விடுவேன். ஓவியங்களிற் பிறப்பேன் ! கவிதைகளிற் தவழுவேன் ! காவியங்களில் வாழ்வேன் ! அவையெல்லாம் என்னை ஏற்றும், போற்றும் வாழ்த்தும் ! உலகமே புகழும் ! நான் கலைக்கரியவள் !! இலக்கியத்திற்குரியவள்…!
‘அமர சேனரைக் காதலிக்கிறேன். அவரோ என்னையே தன் இதயமாக்கிவிட்டார். அவரின் கவிதை நெஞ்சின் கந்தர்வ இராணி நான். என்னுடைய இருதயத்தின் கடைசித் துடிப்பைக் கூட இரத்தமாக்கி என் காதலரின் துாரிகைக்கு வண்ணக்குழம்பாக்கக் காத்திருக்கிறேன்.
கலைஞன் பிரம்மாவை நிகர்த்தவனென்றால், நான் உமையாகி என் அமரசேனருக்குப் பணிபுரிய என்றோ தயாராகி விட்டேன்.
அவரைக் கண்டபோதே எல்லாவற்றையுமே மறந்தேன். கோடி கோடியாகக் கொட்ட இருக்கிறார்கள். ராஜ, தந்திரிகள், வேண்டாம் எனக்கு ! மலை மலையாகத் தருவார்கள் மன்னர்கள். மண்ணுக்குச் சமானம் எனக்கு பரிசுத்தமான கருத்துக்களையும், துாய்மையான உணர்வுகளையும் பிறப்பிக்கும் மிருதுவான சின்னஞ்சிறு இதயப்பரப்பிற்கு, பரந்து விரிந்துகிடக்கும் இப்பிரபஞ்சமே ஈடாக முடியாதுதான்.
‘கடந்து போன என் அவல வாழ்க்கையை அமர சேனர் அறிய வேண்டாம். அது என்னையே அவரிடமிருந்து பிரித்து விடும். அவை என்னுடனே சமாதியாகட்டும். அமரனேர் ‘மழலை மனம்’ என்றும் அவருக்குப் பரிசுத்தமானவளாகவே இருந்து விடுகிறேன்….
‘அவரின் சுந்தர முகம் போதும் ! மின்சார உதடுகள் போதும் ! காந்தக் கண்கள் போதும் ! எல்லாவற்றையும் விட குழந்தைத் தனம் கொண்ட கலை இதயம் போதும் ! இவற்றிற் கீடாக என்னையே அர்ப்பணிக்கப் போகிறேன். அவருக்கு. இனி இந்த நாடும் வேண்டாம். ஆம், இது எங்கள் காதலைத் துண்டாடித் தான் விடும்.
‘எங்கோ சென்று விடுவோம். தொலை துாரத்திற்குப் போய் இல்லறம் நடாத்துவோம். ஒரு சிற்பக் கூடத்தில் காதலைப்படைப்போம். அன்றில்களாய் வாழ்வோம். பிரபஞ்சத்து இன்பங்களையெல்லாம் குவித்துத் தருவார். அவரின் துாரிகைக்கு மையாவேன். இதயத்திற்குத் துடிப்பாவேன். கற்பனைக்குப் பொருளாவேன்.
‘அந்த இடத்தில் என்னை எவருமே இனங்கண்டு கொள்ளமாட்டார்கள். யாரும் என்னை நாட்டியக் காரி என்று கூறமாட்டார்கள். அந்த இன்ப சாம்ராஜ்ஜியத்துக்கே அவர்தான் மன்னர். நான் தான் அரசி. மக்களைக் கடவுள் தருவார்.
சிலை பிறந்துவிட்டது. சிற்பி அமரசேனனின் கலைச்செல்வம் கிடைத்துவிட்டது. அவன் அதை திரையிட்டு மறைத்திருந்தான். சிற்பம் முழுமையெய்தும் வரை அமராவதியே கூடப் பார்க்கக் கூடாதாம். கட்டளையல்ல, அன்புக்கோரிக்கை! ஆனால்…
“முடிந்துவிட்டதல்லவா… காட்டுங்களேன்.”
“இல்லை அமரர்! கண்கள் மாத்திரம் இருக்கின்றன…. அதையும் திறந்துவிட்டால் எல்லாம் பூர்த்தியாகிவிடும்.”
“அதற்கு நான் தேவையில்லையே…!”
“இல்லை அமரா ! அதோ அப்படிப் போயிரு……!”
“முடியாது! நான் பார்க்கத்தான் வேண்டும்!”
அவள் சிணுங்கினாள். இன்னமும் ஒருநாள் பொறுத்திருக்க முடியவில்லை அவளால். அமரசேனன் தடுக்கத் தடுக்க அவளது ஆவல் வளாந்தது. அதிகார மமதையற்ற கலை நெஞ்சின் அன்பு வேண்டுகோளாய் அது இருந்ததால் அமராவதியின் பிடிவாதம் பெருகியது.
அவனோ ‘நாளை, நாளை’ என்றான். அவளுக்கோ அது அந்த ஒரேயொருபொழுது யுகமாகத் தோன்றியது. அவனின் தோளைப்பற்றிக் கெஞ்சினான். தாடையைப் பற்றிக் கொஞ்சினாள். ஈற்றில் கலைஞனுக்கே யுரித்தான மென் மனம் முகிழ்ந்தது.
சிலையை மறைந்திருந்த திரையை விலக்கினாள்.
“ஆ…” … வாய் குழறிப் பின்நகர்ந்தாள் அமராவதி. அவளின் உருவமும் … உள்ளமுங்கூட ஆச்சரியமே அனைத்துமாய், தானே சிலையாய் நிலை குத்தி நின்றுவிட்டாள். ஒரு கணம் அவனும் தடுமாறினான். இரத்தமும் சதையும் இல்லாத தன்னுடைய கலையுருவம் எது என்ற ஐயப்பாடு அந்தச் சிற்பிக்கு.
அந்தச் சிலை ! அதன் நிலை ! அந்தத் தோற்றம்….!
அப்பப்பா ! இப்படியொரு கலையுருவை அமராவதி கனவிலும் கற்பித்துப் பார்த்ததில்லை. யாரே தான் நினைத்திருப்பார்…….?
இதனால்தான் பார்க்க வேண்டாம் என்றாரா? கண்களைத் திறந்துவிட்டால்? பிறகு….? பிறகு இந்தச் சிற்பத்தின் பெருமை பேச உலக அளவு போதாதுதான். கலைஞர்களனைவருமே பிரமிக்கப்போவது நிச்சயம் !…. மக்கள் பெருவெள்ளம் இங்கே பாயப்போகிறது……. தமிழ் கூறும் நல்லுலகமே பெருமிதப் படப்போகிறது. நாமிருவருமே அமரராகப் போகிறோம்.’
அமராவதி கண் மூடி கை இணைத்து வணங்குகிறாள்.
அன்னை மீனாட்சியம்மையின் எழிற்தோற்றம் ! அகிலம் புகழ் லோகநாயகியின் அருட்தோற்றம் ! என்னே மாயை…
நாட்டிய நாயகி அமராவதியின் சாயல் அதில்! அப்பப்பா ! எத்தனை எழிலார்ந்த வதனம். அழகி அமராவதியே மறுபிறப்பெய்திவிட்டாற் போன்ற உயிர் வடிவான கலையுருவம். கலைஞனின் கற்பனைத்திறன்தான் என்னே ! அது கற்பனையின் உன்னத சிற்பம் ! கலை மயமான உயிர்ச்சிலை சந்தேகமில்லை. கலைஞன் பிரமாவை நிகர்த்தவன்தான்.
உமையின் வஸ்திரபரணங்களை எடுத்து அமராவதிக்கச் சார்த்தியலங்கரித்தால் எப்படியிருக்குமோ அப்படியான அணுப்பிசகாத படைப்பு.
அங்கே அமராவதி ‘அன்னை’யினுருவில் சிலையாய் மாறியிருந்தாள்.
சிலையைக் கண்ட மாத்திரத்தில் அமராவதியே தன்னுணர்வு மீறி மெய் மறந்து கைகூப்பித் தொழுதாள் என்றால் அதைவிட அதன் தத்ரூபத் தோற்றத்துக்குச் சான்று ஏன்? தெய்வீக சாயல் படிந்து கலந்த அமரசேனனின் சிற்பம் உலகத்தையே தன்பால் ஈர்க்கத்தான் போகிறது.
“என்ன அமர…….? இப்படிப் பிரமித்துவிட்டாயே?”
“ஹா…! ஆமாம்! நான் மாத்திரமல்ல, உலகேகூட இப்படித்தான் ஆகப்போகிறது.”
“அதற்காகத்தானே இத்தனை சிரமத்துடன் தோற்றுவித்திருக்கிறேன் சரி! சரி! இப்படி இரு, கண்களையும் திறந்துவிடுகிறேன்.”
அமரசேனன் உளியையும் சுத்தியலையும் எடுக்கிறான்.
டொக் ! டொக் ! டொக் !
ஒரு கண் பூர்த்தியாகிவிட்டது. எதிர்பார்த்ததை விட அருமைத் தோற்றம். மற்றதும் திறந்துவிட்டால் அது சிலையன்று உயிர்ப்பாவையேதான்!
டொக் ! டொக் !
“அம்…மா.. !” அபிநயித்து நின்ற அமராவதி மயங்கித் தரையில் சாய்கிறாள். முகத்தில் இரத்தம் வீறிடுகிறது. ‘ஐயோ என் சிற்பம் என்று பதறிய உள்ளத்தினனாக சீர் செய்யலாமா என மீண்டும் உளியைப் பதுக்கினான்.
“படார் !” சிலை சிதறியது. அமரசேனனின் தலையைத் தாக்கியது அதன் பின்னர்…….?
கண்களிரண்டும் பூரணத்துவம் அடைந்திருந்தால் சிலை அப்படியே இருந்திருந்தால்? சிலை அப்படியே இருந்திருந்தால்?
‘சிலை ஏன் உடைந்தது என்ன தவறிழைத்தேன் நான்? உலகுக்கோர் உன்னத கலையுருவைத்தர நினைத்தது தவறா? எழிலரசி அமராவதியைத் தான் அந்தக் கலையின் கருவுருவாக்கியது பிழையா? உலகம் என்னைக் கலைஞனாக ஏற்றுக் கொள்ளாதா?’ என்றெல்லாம் சிந்தித்து விளக்கம் காண அமரசேனனால் இயலவில்லை.
ஏனெனில்,
‘இல்லை ! நான் அந்த அற்புத சிற்பத்தை ஆக்கியே முடிப்பேன் ! என் அமராவதிக்கு அமரத்துவமளித்தே தீருவேன். என்று துள்ளி எழுந்து வந்த அவனை, தன்னைப் போற்றும், புகழும், வாழ்த்தும் என்றெல்லாம் எந்த உலகத்தைப் பார்த்து எண்ணிப் பெருமைப்பட்டானோ அதே உலகம் ஈற்றில் “பைத்தியம்” என்றுதான் கல்லால் அடித்தது.
அமரசேனனின் கடைசிக் காலத்தில் அவளைப் போல வேறொரு பெண் அவனுடன் இணைந்து வாழ்ந்தாள். அந்தப் பெண்ணை அவன் எப்போதும் மனச் சோர்வோ துன்பமோ அடையவிடவில்லை.
அந்த இளம் பெண்ணும் தன்னுடன் சுகதுக்கத்திலெல்லாம் இணைந்து வாழ்ந்தாள். அவனை துன்பப்படுத்தியதே கிடையாது.
ஆனால்…
இதில் ஒரு பெரிய உண்மை என்னவென்றால் அவள்தான் அமராவதி என்றோ அல்லது அவன்தான் அமரசேனன் என்றோ அவர்களிருவருக்குமே தெரியாமலே இந்த மண்ணிலே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதே.
மு.கனகராசன்
ஈழத்துப்படைப்பாளிகளில் மு.கனகராசன் குறிப்பிடத்தக்கவர். சிறுகதைத் துறையில் நல்ல பல படைப்பபுகளை இலங்கைப் பத்திரிகைகள் யாவற்றிலும் தந்தவர். நிவேதனம், தீபத்தை நோக்கி, சுண்டுவிரல் மெட்டி, கல்யாணிகள் என்பன தக்க சிறுகதைகள். அவருடைய சிறுகதைகள் ‘பகவானின் பாதங்களில் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.
– 15.08.1965, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.