அன்பு முத்தம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜார்ஜ் செல்வமும் அவன் மனைவி மரியம்பீபீயும் அந்த நெடுஞ்சாலையின் ஒருபுறம் வட்டாட்சியரின் அலுவலக் ‘காம்பவுண்ட்’ சுவரை ஒட்டினாற்போல் உள்ள புளிய மரத்தடியில் வசித்து வந்தார்கள். அந்த அலுவலகத்திற்கு நேர் எதிரில் நெடுஞ் சாலையின் மறுபக்கத்தில் கல்யாண மண்டபத்தின் காம்பவுண்ட் சுவரை அணைத்தாற்போல் உள்ள ஒரு ஓங்கி வளர்ந்த நெடுஞ்சாலை எண் 80 என்று எழுதப்பட்டுள்ள வேப்பமரத்தின் நிழல்தான் அவன் தற்காலிக செருப்புத் தைக்கும் கடையும், மற்றும் பிரார்த்தனை செய்யும் இடமும்.
ஏழ்மையைப் போர்த்திக்கொண்டு வாழ்கின்ற பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் ஜார்ஜ் செல்வம் குடும்பமும் ஒன்று. ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்’ என்பதுபோல் வசதிபடைத்தோர் அந்தஸ்து என்ற வரப்பு அமைத்து வறுமையை, ஏதுவாகக் கொண்டு வாழ்கின்ற மக்களை ஒதுக்கி வைத்தாலும்; இந்த உலகம் – இந்த பூமி அவர்களையும் வாழ வைக்கத்தான் செய்கின்றது.
சமுதாயத்தில் அவர்கள் பூத்துக் குலுங்கவில்லை என்றாலும் தரிசு நிலத்தில் வீழ்ந்த விதைகளைப்போல் நலிந்து வாழ்கின்றனர். தமக்கென்று ஒரு வீடு இல்லாதவராகவும், அதுவும் ஏதாவது ஒரு கிராமத்தின் வீட்டில் குடியேறி விடுவார்கள். அதைப் போலத்தான் நடைபாதை வாசிகளும் எங்கே கொஞ்சம் இடம் இருந்தாலும் குடிசை அமைத்து விடுவார்கள் என்று தமாஷாகக் கூறுவார் அந்தப் பிரிவு நெடுஞ்சாலை இன்ஜினியர். அவன் மாவட்டங்களிலும், நகர மன்றங்களின் நுழைவாயிலிலும் குடியிருந்தாலும் வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டு மனை வழங்கும் பட்டியலில் அவன் பெயர் இல்லை. அந்த நகராட்சிக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை செய்யும்போது நெடுஞ்சாலை அதிகாரிகள் அந்த இடங்களைக் காலி செய்யும்படி வாய்மொழி நோடீஸ் கொடுப்பார்கள். உடனே அந்தக் குடிசையில் உள்ள தென்னங்கீற்றுகளும் மூங்கில்களும் கட்டுகளாக உருமாறி எங்கோ ஒரு மூலையில் மறைந்து விடும்.
பிரமுகர்களின் விஜயம் முடிந்தவுடன் அந்த மாயக்குடில் மீண்டும் அதே இடத்தில் தோன்றும்.
ஜார்ஜ் செல்வத்தின் வயது சுமார் முப்பத்தைந்து. ஐந்தே முக்கால் அடி உயரம். முடி காடாய் மண்டிக் கிடக்கும். நீண்ட முகம். நடுத்தரமான உடலில் சட்டையில்லாத தோற்றம். இதுதான் அவன் உருவம். ஜார்ஜ் செல்வம் எட்டாம் வகுப்புவரைப் படித்தவன், எதையும் சிந்திக்கும் திறமையுடையவன். அவன் பொழுதுபோக்கு, மாதம் ஒரு முறை இதழ்களுக்கு கட்டுரை. கதை கவிதைகள் எழுதுவதாகும்.
செருப்புகள் புதியதாகத் தைப்பதுடன். பழைய செருப்புக்களையும் பழுதுபார்த்துக் கொடுப்பதும் உண்டு. இது அவனுடைய அன்றாட வேலைகள். விடுமறை நாட்களில் மிகக்குறைந்த வேலையே இருக்கும். அந்த விடுமுறை நாள்களில் நூல் நிலையத்திற்குச் செல்வான். எல்லா சமய நூல்களையும் படிப்பான். அதில் முக்கியமானது பைபிள்தான். தியானம் செய்வான். ஞாயிற்றுக் கிழமைகளில் ‘சர்ச்க்குப் போகத் தவற மாட்டான்.
மீன்கள் நீரில் வாழ்கின்றன என்பதால் கழுவி சுத்தம் செய்யாமல் யாரும் சமைப்பதில்லையே! மனிதன் என்ற லேபில் மட்டும் இருந்தால் போதுமா? அவனில் மனித நேயம் நிரம்பி இருக்கவேண்டாமா? மனிதன் மனிதனாக வாழ இறை வேண்டல் அவசியம். இம்மைக்கும் மறுமைக்கும் இடையே பாலமாக அமைவது பிரார்த்தனை ஒன்றே! இறை வேண்டலுக்கு நேரம், காலம் இடம் பார்க்கத் தேவையில்லை.
சித்திரை மாதத்தில் ஒரு விடுமுறை நாள். மணி சுமார் பிற்பகல் இரண்டு. வேப்பம் பூக்கள் மெத்தை விரிக்க, தென்றல் தாலாட்ட கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான். விழிகள் மூடியும் மூடாமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் நித்திராதேவி நாட்டியமாடிக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு வழிப்போக்கன் நிழலுக்காக அந்த வேப்ப மரத்தடியில் நின்றான். பூமிக்கு சுமார் நான்கு அடி உயரத்தில் அந்த வேப்ப மரத்தில் ஆணி அடித்து மாட்டப் பட்டிருந்த சிலுவையைப் பார்த்து அலுத்துக்கொண்டான். ஜார்ஜ் செல்வம் சிலுவையை நோக்கினான். பின்பு அவன் பார்வை அந்த மரத்திற்குக் கொடுக்கப் பட்டிருந்த எண் என்ன ? என்பதை நோக்கித் தாவிற்று.
“வெள்ளைக்காரன் மைல் கல்லுக்கு எண் கொடுக்காமல் இருந்திருந்தால்,நம்மளவன் அந்தக் கல்லுக்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கடவுளாக்கி விட்டிருப்பான்” என்று தந்தை பெரியார் ஒரு சமயம் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவன் சிந்தனை தாவியது. அசோகச் சக்ரவர்த்தி புத்தரை கடவுளாக வழிபட்டார். மனிதன் கடவுளாக்கப் பட்டான்.
காந்தியவாதிகள் காந்தியடிகள படத்தைக் தேரில் வைத்து ஊர்வலமாக வர காந்திஜியிடம் கேட்டனர். ஆனால் காந்தியடிகள் ‘வருங்கால சந்ததிகள் என்னைக் கடவுளாக வழிபட வகை செய்யாதீர்கள்” என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு,
கற்றனைத் தூறும் அறிவு” – குறள்.
அது தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல் சிந்திக்கச் சிந்திக்கப் பல புதிய விஷயங்கள் வெளியாகும். அவன் சிந்தனை சரித்திர காலத்திற்கும் அப்பால் தாவியது. விக்கிரக ஆராதனை எப்போது, எப்படி தொடங்கப் பட்டிருக்கலாம் என்பதில் அவன சிந்தனை வட்டமிட்டது.
கடவுள் தன் சாயலாக மனிதனைப் படைத்தான். நீரிலும் நிலத்திலும் உள்ள அனைத்தையும் அனுபவிக்க அவனுக்குச் சுதந்திரம் அளித்தான். மனிதன், மண், பெண், பொன் ஆபரண ஆசைகளுக்கு இலக்கானான். பொறாமை, பேராசை முதலியன அவனை ஆட்டிப்படைத்தன. மனச்சாட்சி தாறுமாறாக்கப் பட்டது. மனதில் சமநிலை இழந்தான். மனப்பாரம் அதிகரித்து. மனச்சுமையை இறக்க ஒரு வடிகால் அவனுக்குத் தேவைப் பட்டது. அந்த சுமை தாங்கி மனிதனாக இருந்தால் அவனுடைய பாவச் செயல்கள் வெளிச்சத்திற்கு வரும்.. விளம்பரப் படுத்தப்படும்.. அதனால் ஏற்படும் துன்பங்கள்.. அவதூறுகள்.. ஒரு வழியைக் கண்டு பிடித்தது. சிலைகள் ஓவியங்கள் பேசுவதில்ைைல. அவைகளுக்கு உயிர் இல்லை. தன் மனச் சுமையை வாய்விட்டு அவனிடம் கூறினால், அது அவனுக்கு ஒரு நிவாரணம் என கருதியிருக்கக் கூடும். கடவுள் ஒளிமயமானவர் அவரைப் பார்க்க முடியாது. அவரின் வார்த்தைகளைத்தான் கேட்க முடியம் என்பதை அறிந்தும் மனிதன் தன்னை விக்கிரக ஆராதனைக்கு ஒப்புக் கொடுத்துவிட்டான். அப்படித்தான் ஜார்ஜ் செல்வத்திற்குத் தோன்றியது.
பௌர்ணமி நாள். பஞ்சுப் பொதிகள்போல வெண்மேகங்கள் பெருந்திரளாகக் குவிந்து நிஷ்களமான நீலவானில் பவனி சென்று கொண்டிருந்தன. வயல் வெளியில் முற்றின நெற்கதிர்கள் மஞ்சள் நிறத்துடன் காற்றில் நாணிக் கோணி ரீங்காரமிட்டு ஆடுவதைப் போல மஞ்சமான் அழகி மரியம்-பீபீ வேப்பமரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஜார்ஜ் செல்வத்தை ஏக்கத்துடன் நோக்கினாள். உள்ளத்தின் புழுக்கம் வியர்வையாகப் பெய்தது. தென்றலும் அனலாக இருந்தது. கடந்த கால நினைவுகளின் ஊர்வலம் தொடங்கிற்று.
மெள்ள ஊர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் நின்றது.
பஞ்சாப்பில் நடந்த ஒரு இனக்கலவரத்தில் ஜார்ஜ் செல்வம் தன் பெற்றோரையும் உடமைகளையும் இழந்து அனாதையாக நாகப்பட்டணம் அருகிலுள்ள வேளாங்கண்ணி எனும் தேவமாதா இல்லம் வந்து சேர்ந்தான்.
இப்ராஹிம் மரக்காயர் ‘பேன்ஸி சூ மார்ட்’ கடையில் வேலைக்கு அமர்ந்தான். மரக்காயர் ஓரளவுக்கு வசதியானவர். ஜார்ஜ் செல்வம் நம்பிக்கையுள்ளவன். நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாகத் திகழ்ந்தான். நாணயத்தின் செல்வனும் கூட. ராவுத்தரின் மனதில் இடம் பிடித்து விட்டான் அந்த ஏழை அனாதை.
தாயையிழந்த மரியம் பீபீ தந்தையின் பராமரிப்பில் செல்லமாக வளர்ந்தாள். ராவுத்தருக்கு அவர் வீட்டில் இருந்து காலை டிபன், மதிய சாப்பாடு. மாலை தேநீர் முதலியவற்றை ஜார்ஜ் செல்வம் கடைக்கு எடுத்துச் செல்வான்.
“மகளே! எதுக்கு மத்தியானத்துலே அதிகமாக சோறு அனுப்புறே. அளவா அனுப்புமா இப்படி குடித்தனம் செய்தால் பின்னால கஷ்டப்படுவாய் பேட்டி” என்று அன்பாகக் கடிந்து கொண்டார்.
“போங்க அத்தா! வயிறு கொறையக் கூடாது என்றுதான் நினச்சு சோறு அனுப்புகிறேன் அதுக்குக் கோவிச்சுக்கிறீங்களே!”
தந்தைக்குச் சமாதானம் சொல்வாள்! மனதிற்குள் சிரித்துக் கொள்வாள்.
“பாவம் ஜார்ஜ் ஒட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது கையிலே காசேதும் இருக்குதோ இல்லையோ. சோறுமிச்சப்பட்டா அது சாப்பிட்டுப் போகட்டுமே! அத்தாவும் ஜகாத் (தர்மம்) செஞ்சதா இருக்கட்டுமே! மெள்ள தனக்குள்ளே கூறிக்கொள்வாள்.
இருபத்து நான்கு வயது மரியம் பீபீ தன்னைவிட 10 வயது மூத்த ஜார்ஜ் செல்வத்தின்மீது கொண்டது காதலா. இரக்கமா. மனிதாபிமானமா, பால் உணர்வினால் ஏற்பட்ட இயற்கையின் உந்துதலா.. இனக் கவர்ச்சியா.. தூய அன்பின் பரிவர்த்னையா. ஜார்ஜ் செல்வம் தன் எஜமான் வீட்டிற்குச் செல்லும்போது சில சமயங்களில் கிழிந்த சட்டை அல்லது லுங்கி அணிந்து இருப்பான். அவைகளைத் தைத்துக் கொடுக்க நினைப்பாள்.
அவனிடம் பேசவேண்டும் என்று நினைப்பாள். அந்த எண்ணங்களில் உயர்த்துடிப்பு இருக்கும். அப்பா என்ன நினைப்பார். சில நிமிடங்களில் மரியத்தின் எண்ணங்கள் வீழ்ச்சியடையும். பிறகு ஏக்கத்தின் பெருமூச்சு அவன் வரும் போதெல்லாம் அவனைச்சுற்றியே வட்டமிடும். அவன் கள்ளப் பார்வையும் அதைச் சந்திக்கத் தவறாது. அந்த வலிமைமிக்க கன்னிப்பார்வைகளின் சந்திப்புகளின் மோதல் மத்தாப்பைப் போல் வெடித்துச் சிதறி வாழ்க்கையின் இனம் புரியாத பக்குவப்படாத முதிர்ச்சியில்லாத தத்துவங்களை – குற்றால நீர்வீழ்ச்சி போலக் கொட்டும்.
ஒரு கொள்ளைக் கும்பலின் தீ நாக்குகளுக்கு இப்ரஹிம் மரைக்காயரின் “பேன்ஸி சூ மார்ட்” கடை இரையாகி விட்டது. வீடு கடனில் மூழ்கியது. உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. வாழ்க்கையில் விழுழ்ந்த கோடுகள் அவர் உள்ளத்தை ஆழமாகக் கீறிவிட்டன.
வெடிக்கும் அரும்புகள் அத்தனையும் மலர்ந்து காய்த்து கனிவதில்லையே! அதுபோலத்தான் மனித எண்ணங்களும். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு!
“மகளே! உன்னை நல்ல இடத்துல கொடுக்கணும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையிலே விதி சதி செய்துவிட்டது. என் ஆசை நிறைவேறல. உனக்கு ‘நிக்ஹா’ திருமணம் ஆகும் மட்டும் என்னை அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான். இந்த “துனியா’ உலகத்திலே யாரை நம்பி உன்னை ஒப்படைப்பேன்” மிகுதியான கவலை தாங்க முடியாத மனச்சுமை. துன்ப மிகுதிக்குக் கண்ணீரும் பெரு மூச்சும் தானே வடிகால். நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டார்.
“அத்தா! ‘நைரோல்’ அழாதீர்கள். நீங்கள் யாருக்கும் துரோகம் பண்ணலே. அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான்.
தந்தைக்கு மகள் மரியம் பீபீ ஆறுதல் கூறினாள்.
மகளே! நீ ஜார்ஜ் செல்வத்தைக் கூட்டிட்டு வா நிலவு மேகத்துக்குள் மறைவது போல் மரியம் பீபீ அந்த ஏந்திழையாள். போர்வைக்குள் புகுந்து கொண்டு ஜார்ஜ் செலவத்தை நோக்கி விரைந்தாள். ஜார்ஜ் செல்வமும் அவளைத் தொடர்ந்தான்.
“வரச் சொன்னீங்களா?”
மரக்காயரின் நிலையைக் கண்டு ஜார்ஜ் கண்ணீர் விட்டான்.
“செல்வம் நான் கொடுக்கிறதை ஏற்றுக் கொள்வாயா?’ மனச்சுமை வார்த்தைகளாக வெளிவந்தன.
“எஜமான்! சொல்லுங்க’
“நீ மரியம் பீபீயை கல்யாணம் செய்து கொள்வாயா?”
“எஜமான்” ஒரு கணம் செயலிழந்தாள். “இந்த ஏழை வேலைக்காரனுக்கா தங்கள் அன்பு மகள்! மண வாழ்க்கையைச் சந்திக்கச் சக்தி இல்லாதவன். மேலும் நான் கிறிஸ்தவன்’
நம்பிக்கை, அன்பு இவைகள் ஜாதி, மதம் மொழி, நாடு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதை நன்கு உணர்ந்தவர் மரக்காயர்.
“உன் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. நாம் இப்ராஹிம் சந்ததியாக்கும் சகோதரர்கள்” அவர் பார்வையில் ஒரு நல்ல முடிவு கிடைக்குமா என்ற தவிப்பு இருப்பதை ஜார்ஜ் செல்வம் உணர்ந்தான்.
“உங்கள் வார்த்தைக்கு மறுப்பு சொல்ல முடியாத ஓர் ஏழை வேலைக்காரன் நான்” இப்ராஹிம் மரியம் பீபீ கரங்களை பற்றி ஜார்ஜ் செல்வத்தின் கரங்களில் ஒப்படைத்தார்.
“அல்லாஹ்! அல்லாஹ்!’ அவர் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. நெஞ்சுச் சுமை இறங்கியது. அவர் ஆவியும் பிரிந்தது.
“அத்தா அத்தா அத்தா” கத்தினாள் மரியம் பீபீ.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ! பிறந்தவர் எல்லாம் இறக்கவில்லை என்றால் இந்த பூலோகத்தில் இடம் இருக்குமோ!
நிலா உச்சிக்குச் சென்று கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஜாமக்கோழி கூவிற்று. குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த மரியம் பீபீ வெளியில் வந்தாள்.
கவலையற்று கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஜார்ஜ் செல்வத்தை நோக்கினாள். புளிய மரத்தின் நிழலும், வேப்ப மரத்தின் நிழலும் அசுர தன்மையற்றவைகளாக இருப்பதுபோலவே மரத்தின் பலன்கள் புளிப்பும், கசப்பும் ஆனவைகள். அதைப் போலத்தான் ஒரே மானிட ஜாதியாக இருந்தாலும் இருவேறு மதங்களைச் சார்ந்தவர்களின் சந்ததி எப்படி இருக்கும். மெல்லவும் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றவர்களின் இரண்டுங் கெட்டான் நிலை!
‘மரியம்! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன். உனக்கும் பாதுகாப்பும் கொடுக்கின்றேன். ஆனால் நீ என்று ரெஜினா மேரியாக மாறுகின்றாயோ அன்றுதான் நிஜமான மணவாழ்க்கையின் ஆரம்பம்” என்ற ஜார்ஜ் செல்வத்தின் கண்டிப்பான வார்த்தைகள் அவள் இதயத்தில் அலை மோதியது.
நிலவு ஒளியில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவை பளிச்சென்று தெரிந்தது. ஜார்ஜ் செல்வத்தின் அன்பு. அடக்கம், பணிவு. பாசம் அவள் மனத்திரையில் ஒளிச்சுடராய் மின்னி மறைந்தது.
ஜார்ஜ் செல்வம் அடிக்கடி முணுமுணுக்கும் அன்பே பிரதானம் என்ற பாடல் அவள் செவிகளில் ஒலிப்பதாக உணர்ந்தாள். சாலையைக் கடந்து சென்று முழங்காள் இட்டு சிலுவையை முத்தமிட்டாள்…!
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.