அன்புள்ள அப்பா… – ஒரு பக்க கதை





இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் அப்பாவைப் பார்க்கிறாள் ரம்யா. தம்முடன் படித்த மகேஷைக் காதலித்து ஊரை விட்டு ஓடியவள், எத்தனை நாள் இரவில், அப்பாவுக்காக
அழுதிருப்பாள்.
சின்ன வயதில் அம்மாவை இழந்த அவளையும், தங்கை ருத்ராவையும் எவ்வளவு பாசமாய் வளர்த்தார். பாழாய்ப்போன காதல் இப்படி தந்தையையும், மகளையும் பிரிக்கும் என்று
கனவிலும் நினைக்க வில்லை.
அவருடன் படித்த சுமதிக்கு இப்போதுதான் திருமணம். லேட் மேரேஜ்தான். அவ்வளவு தூரம் வந்து அழைத்தவளைத் தட்ட மனமில்லை. பக்கத்து ஊர்தானே என்று கணவனிடம் பர்மிஷன்
வாங்கிக் கொண்டு வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.
அவள் அப்பாவைப் பார்ப்போம் என்று அவளுக்கு தெரியாது. இரண்டு வருடங்களில் எப்படி மெலிந்து விட்டார். எல்லாம் என்னால் வந்த கவலை, சுகர் வேறு. அவளையும் அறியாமல்
அவள் கண்களில் கண்ணீர். மண்டபத்தில் கூட்டம் இருந்தாலும் பரவாயில்லை. அவர் காலைப் பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது.
அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஃபோன் வந்ததும் ஹாலில் இருந்து எழுந்து கெட்டி மேளச் சத்தத்தில் இருந்து ஒதுங்கிப் போனார். இதுதான் சமயம் என்று விடுவிடுவென ஓடிய ரம்யா சட்டென அப்பாவின் காலில் விழுந்து அழுதாள்.
ஃபோன் பேசுவதை விட்டு அவள் தோளைத் தொட்டுத் தூக்கி “எப்படிடா இருக்கே?’ என்றபோது, அவள் ஓவென அழுது அப்பாவின் மார்பில் சாய்ந்தாள். ரம்யாவைப் பார்க்க வேண்டும் என்று சுமதியிடம் சொல்லித் திருமணத்துக்கு வரவழைத்ததே அவர்தான் என்பது ரம்யாவுக்குத் தெரிய நியாயமில்லை.
– சுமதி (ஜூலை 2011)