அனுபவம் பலவிதம்!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 916
பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு வரும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்து விட்டு இருந்து விடுகின்றனர். ஆனால் பலர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், நிகழ்வுகள் தவிர தம்மைச்சார்ந்தவர்களின் பிரச்சினைகள், நிகழ்வுகளிலும் பங்கேற்பதால் நிறைந்த அனுபவம் பெற்றவர்களாகி விடுகின்றனர்.
நிறைந்த அனுபவமானது தங்களது வாழ்க்கைத்தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.
சிலர் தங்களது அனுபவங்களை நம்முடன் பேசும் போதும் அதைக்காது கொடுத்துக்கேட்பதால் நமது அறிவு விருத்தியாகிறது. பலர் தங்களது அனுபவங்களை புத்தகங்களாக எழுதி வைத்திருப்பதைப்படிக்கும் போதும் பல விசயங்களை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.
சிலருக்கு முன்னோர்களுடைய சொத்துக்கள் நிறைய இருக்கும். அறிவும், அனுபவமும் உள்ள ஒருவர் சம்பாதித்து வைத்து விட்டுப்போயிருப்பார். சொத்துக்களை சந்ததிகளுக்கு கொடுப்பவர்களால் தங்களது அனுபவங்களை முழுமையாகக்கொடுக்க முடிவதில்லை. சொத்து, வசதி இருப்பவர்கள் எதையும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லாததாலும், தேடிச்செல்லாமலேயே தேவைகள் பூர்த்தியாவதாலும் வாழ்வில் மற்றவர்களைப்போல முழுமையான அனுபவம் பெற முடியாமல் வெள்ளந்தியாகவே இருக்கின்றனர்.
வெள்ளந்தி மனம் கொண்டவர்கள், தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர் கொள்ளத்தெரியாமல் போவதால் எதிரிகள் அவர்களை எளிதில் ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து விடுகின்றனர்.
ஏழையாகப்பிறந்த ஒருவர் சம்பாதித்து வைத்து விட்டுப்போவதை அவரது மூன்றாவது தலைமுறையாக வரும் பேரன் உலக விபரமில்லாததால் அழித்து விடுவது, பிறரால் ஏமாற்றப்பட்டு இழந்து விடுவது இதனால் தான். அவனுக்கு சொத்து வந்த விதம் தெரியாது. படிக்காமல், உழைக்காமல் சொத்துக்களை விற்றே அழித்து விடுவான்.
ஒரு செல்வந்தரின் பேரனான அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு கரண் மட்டும் தான். தன்னை பணக்காரனாக அனைவரும் மதிக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த காரில் செல்வது, வித விதமான ஆடைகளை அணிவது, தனது செலவில் நண்பர்களை அழைத்துக்கொண்டு பிக்னிக் செல்வது, ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவது என சொத்துக்களை விற்று பணத்தை தண்ணீராகச்செலவழித்தான்.
செலவு செய்வதற்கு வரவு தேவைப்படுகிறது என்பதையே சிறிதும் அவன் தெரிந்திருக்கவில்லை.
“நீ கஷ்டப்பட்டு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்தலாம். ஆனா மூணாவது தலை முறையே மொத்தமா அழிச்சுப்போடும். சம்பாதிக்கிறத நீயும் கொஞ்சம் செலவு பண்ணி சந்தோசமா இருந்துக்க..” என கிராமங்களில் கஞ்சத்தனமாக இருந்து சொத்து சேர்ப்பவர்களைப்பார்த்து அனுபவப்பட்ட வயதான உறவுகள் பேசுவதுண்டு.
பிறரிடம் வேலைக்கு செல்லும் அளவுக்கு படிக்கவும் இல்லை. பிறருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முதலாளியும் இல்லை.
இருந்த சொத்துக்கள் கரைந்து விட்டன. மனக்கவலையால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டைக்கூட்டிப்பெருக்குவதில்லை. விரக்தியில் பெற்ற தாயையும் அடித்து விரட்டி சகோதரி வீட்டிற்கு அனுப்பி விட்டான். காதலித்த பெண்ணிற்கும் வேறு இடத்தில் திருமணமாகி விட்டது. உறவுகள் யாரும் கரணைப்பார்க்க வருவதில்லை. இவனும் செல்வதில்லை.
இப்படியிருக்க ஒரு நாள் அவனது நண்பன் அவனைப்பார்க்க வந்த போது கரணின் நிலைமையைப்பார்த்து கவலைப்பட்டு கண்ணீர் விட்டதோடு தன்னுடன் அழைத்துச்சென்று விட்டான்.
காலையில் பத்து மணிக்கு மேல் எழுந்து பழகி வித விதமாக சாப்பிட்டவனுக்கு நண்பனின் வாழ்க்கை முறை முற்றிலும் வித்தியாசமாகப்பட்டது.
ஐந்து மணிக்கு எழுந்து மாடுகளை இடம் மாற்றிக்கட்டி விட்டு, மாட்டுச்சாணம் உள்பட குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி குப்பை மேட்டில் கொட்டி விட்டு, மாட்டிலிருந்து பால் கறந்து பக்கத்திலிருக்கும் ஊரில் உள்ள வீடுகளுக்கு ஊற்றி விட்டு வந்து மாடுகளை காட்டிற்குள் கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விட்டு, நேற்றைய மீதமான தண்ணீர் ஊற்றி வைத்த உணவை மோர் சிலுப்பி வெண்ணையெடுத்த பின் ஊற்றி வெங்காயம் கடித்து குடித்து விட்டு காட்டிற்குள் உள்ள விவசாய பயிர்களுக்குள் இருந்த களைப்பயிர்களைப்பிடுங்க மனைவியுடன் சென்று மதியம் வரை வேலை செய்து விட்டு வந்து மதிய உணவை தயார் செய்ய மனைவிக்கு உதவிய நண்பன் ராமனைக்கண்டு ஆச்சர்யம் கொண்டான் கரண்.
“என்னடா இப்படியிருக்கு உன்னோட வாழ்க்கை? நான் முப்பது வருசமா இந்த மாதிரி வாழ்க்கைய ஒரு தடவை கூட பார்த்ததில்லை” என ஆச்சர்யத்துடன் கேட்டான் அவனுக்காக மட்டும் செய்திருந்த தோசையைச்சுவைத்தபடி.
“உலகத்துல தொன்னூறு சதவீதம் பேரு இப்படி கஷ்டப்படறவங்க தான். ஆனா இஷ்டப்பட்டுக்கஷ்டப்படறவங்க. இத வேலையாவே நான் எப்பவும் நினைக்கலை. வாழ்க்கையா நெனைக்கிறேன். காலேஜ் வரும்போது கூட இது போல வேலைய முடிச்சிட்டு, பழைய சோறு மோர் ஊத்தி குடிச்சுப்போட்டுத்தான் வருவேன். ஐடி வேலை எனக்கு பிடிக்காததுனால லட்சங்கள்ல வந்த சம்பளத்தை விட்டுப்போட்டு மறுபடியும் விவசாயத்துக்கே வந்துட்டேன். ஏன்னா இந்த வேலை எனக்குப்பிடிச்சிருக்கு” என்று சொன்னதைக்கேட்டு புதிய அனுபவம் பெற்றவனாய், தன் நண்பனது வேலையில் தானும் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்த பின் மன அழுத்தம் குறைந்து, உடல் எடை குறைந்து வாழ்க்கையே வசந்தமாகத்தெரிந்தது கரணுக்கு.
உலக அழகியைப்போன்ற பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என வசதியான காலத்தில் கல்லூரியில் விரும்பி பழகிய வசதி மிகுந்த அழகிய பெண் தன் நிலை பலவீனமானது கண்டு ஒதுங்கிச்சென்றதையும், தற்போதைய தனது பலவீனமான நிலையையும் பொருட்படுத்தாமல் ராமனின் மனைவியின் தங்கை தன் மீது கபடமற்ற அன்புடன் தன்னை மணந்து கொள்ள விரும்பியதையும், அனுபவ அறிவால் ஒப்பிட்டுப்பார்த்து அவளையே மணம் முடித்து மகிழ்ச்சியான குடும்ப வாழ்வைத்தொடங்கினான் கரண்!