அதே மூக்குத்தி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 1,498 
 
 

தன் கழுத்தில் கத்தி வைத்தவனைப்பார்த்து “தவறு ஏதும் செய்யாத அப்பாவியான என் கழுத்தில் எதற்காக கத்தி வைத்துள்ளீர்கள்..? அதற்கான காரணத்தை மட்டும் உடனே கூறுங்கள். அப்போதாவது நிம்மதியாக எனதுயிர் போகும்…” என சிறிதும் பதற்றமின்றி இயல்பாகப்பேசினான் ஓர் இளைஞன்.

“சாதாரண மனிதனாக இருந்தால் நான் கத்தியை கையில் எடுக்கும் போதே ஜலம் கழித்திருப்பான். ஆனால் நீயோ கழுத்தில் கத்தியை வைத்த பின்பும் பதட்டமின்றி பேசுகிறாய் என்றால் சுத்த வீரன் மட்டுமில்லை, அதற்கும் மேலானவன். உனது முகமே உன்னை அரச பரம்பரை எனக்காட்டிக்கொடுத்து விடுமே… அந்த சந்தேகம் எனக்கும் வந்ததால் தான் உன்னைக்கைது செய்ததோடு உண்மையை வரவழைக்கும் பொருட்டு கத்தியை கழுத்தில் தைரியமாக வைத்தேன். ஆனால் நீ என்னை பொருட்படுத்தாமல், என்னைப்பார்த்து பயம் கொள்ளாமல் என்னைக்கோழையைப்போன்றவன் நிலைக்கு ஆளாக்கி விட்டாய். இதைப்பார்த்துக்கொண்டிருப்பவர்கள் என்னை மதிப்பார்களா….? அவமானம், அவமானம். உன்னைக்கொல்வதால் தான் எனக்கு வீரன் மதிப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்…” என்றான் கழுத்தில் கத்தி வைத்திருப்பவன் கத்தியை சற்று அழுத்தியபடி.

“நீ என்னைக்கொன்றாலும், கொல்லா விட்டாலும் வீரன் எனும் பெயர் உனக்கு கிடைக்காது…”

“எப்படி….?”

“இப்போது நான் பயப்படாமல் இருப்பதால் நீ வீரனில்லை கோழை என நினைப்பவர்கள், என்னைக்கொன்றாயானால் உன்னைக்கோமாளி என நினைப்பர்…”

“எப்படி…? எப்படி…?”

“பயப்படாமலும், அதே சமயம் எதிர்த்து நிற்காமலும் இருப்பவனைக்கொல்பவனும், செத்த பாம்பைக்கொல்பவனும் ஒத்த நிலை கொண்டவன் தான் என்பது மக்களுக்குத்தெரியாதா…?”

“டேய்…. டேய்…. உன்னிடம் கத்தி ஏதுமில்லாமல் கத்திப்பேசி, கொல்லாமல் என்னைக்கொல்ல நினைக்கும் புத்திசாலியான நீ யார்…? எந்த தேசத்தைச்சேர்ந்தவன்….?”

“உங்களுக்கும் எனக்கும் நெருங்கிய உறவு வரும் காலத்தில் உண்டு என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன். என் கழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் கத்தியை எடுத்தால் முழு உண்மையைச்சொல்கிறேன்….” என்றவுடன் அதிர்ந்தவன், மிகுந்த யோசனைக்குப்பின் கத்தியை எடுக்க, எழுந்து நின்றான் இளைஞன்.

“வெகுதூரம் பயணப்பட்டு வந்ததால் மிகுந்த களைப்பில் உள்ளேன். தங்க இடம் கொடுத்து, உண்ண சோறு கொடுத்தால் தங்களிடம் உண்மையைக்கக்கி விடுகிறேன்” என சொன்னதும் அதற்கான ஏற்பாடுகளை வீரர்களை அழைத்துச்செய்யச்சொன்னார் மாளவ தேசத்து தளபதி சிரஞ்சோதி.

பசிக்கு உணவும், படுக்க இடமும் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்டவனாய் வந்த வேளையை முடிக்க திட்டமிட்டான் காளவ தேசத்து பட்டத்து இளவரசன் பரஞ்சோதி. தான் ஓய்வெடுக்கும் வீட்டை நான்கு வீரர்கள் நோட்டமிடுவதால் எளிதில் வெளியேறுவது சிரமாகத்தெரிந்தது.

குறிப்பிட்ட நாழிகைக்குள் வெளியேறவில்லையெனில் தன்னுடன் பாதுகாப்புக்காக வந்த வீரர்கள் தனக்கு ஆபத்து வந்து விட்டதாகக்கருதி மாளவ தேசத்தின் மீது போர் தொடுக்கும்படி மன்னரான தந்தைக்கு ஓலையனுப்பக்கூடும் என்பதால் பலவித தந்திர முயற்சிகளில் ஈடுபடத்தொடங்கினான்.

திடீரென தோன்றிய யோசனைப்படி வீரர்களை அழைத்து தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஒரு வைத்தியரிடம் அழைத்துச்செல்லக்கூறினான். அதற்கு தளபதியும் சம்மதிக்க, அரண்மனை வைத்தியர் வெளியூர் சென்ற காரணத்தால் ஊருக்கு வெளியே காட்டிற்குள் இருக்கும் ஒரு வைத்தியரிடம் வீரர்கள் மாட்டு வண்டியில் அழைத்துச்சென்றனர்.

வைத்தியர் பரஞ்சோதியை சோதித்துப்பார்த்த போது எவ்வித வலியின் அறிகுறிகளும் இல்லாததால், வேறு காரணமாகவோ அல்லது ஆபத்திலிருந்து தப்பிக்கவோ போடும் நாடகமாகவே இருக்குமென புரிந்து கொண்டவர், “ஒரு வாரத்துக்கு இந்த வலி இருக்கும். அதுவரை நடக்கவோ, ஓடவோ முடியாது. நீங்கள் நான் சொல்லியனுப்பிய பின் வாருங்கள்” என துணிந்து பொய்யை வைத்தியர் கூறியதும் வீரர்கள் தாமதிக்காமலும், வைத்தியர் வார்த்தையில் சந்தேகம் கொள்ளாமலும் சென்று விட்டனர்.

“இளவரசே…” என வைத்தியர் சொன்னதும் பரஞ்சோதிக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. ‘பேயிக்கு பயந்து பூதத்திடம் மாட்டிக்கொண்ட கதையாகி விட்டதே…. வைத்தியர் யாரென ஒற்றர்கள் மூலம் நாம் தெரிந்து வைத்திருந்தாலும், வைத்தியர் எவ்வாறு நம்மைக்கண்டு பிடித்திருப்பார்..‌‌.?’ என ஆச்சர்யத்துடன் வைத்தியரையே விடாமல் பார்த்தான்.

“ஒரு சாதாரண வைத்தியனுக்கு எப்படித்தெரிந்திருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் நீங்கள் நினைப்பது போல் பரம்பரை வைத்தியனில்லை. பஞ்சத்துக்கு வைத்தியன். நீங்கள் தேடி வந்த பாஞ்சாலதேசத்து மன்னன் பரமன் நான் தான். பேரரசான தங்கள் காளவ தேசத்துக்கு உட்பட்டு வரி செலுத்தும் சிற்றறரசன். போரில் தோற்றதால் நாட்டை இழந்ததோடு, இந்த மாளவ தேசத்தில் வைத்தியன் வேடத்தில் குடும்பத்துடன் வாழ்க்கை ஓட்டுகிறேன். அதையும் கூட முன் கூட்டியே நீங்கள் தெரிந்து வைத்திருந்தாலும் ஆச்சர்யமில்லை‌. தங்களுடைய கையில் மீன் போன்ற மச்சத்தைக்கண்டவுடன் தான் நான் நீங்கள் யாரெனக்கண்டு பிடித்தேன்” கூறியபோதே கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது பரமனுக்கு.

“திருமணத்துக்குப்பின் ஒரு முறை வளங்கள் நிறைந்த பாஞ்சால தேசத்தைச்சுற்றிப்பார்க்க தங்களது பெற்றோரான மகாராஜா மார்த்தாண்டனும், மகாராணி மாதவியும் எங்களது அரண்மனையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்த போதுதான் நீங்கள் கருவாக உருவானீர்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சி தங்களது பெற்றோருக்கும், எங்கள் குடும்பத்துக்கும். ஆனால் திடீரென தங்களது தாயாருக்கு உடல் நிலை பாதித்தது….” 

“அரண்மனை வைத்தியர் குழந்தை பிறக்கும் வரை தங்களது அரண்மனையிலேயே தங்கி வைத்தியம் பார்த்து ஓய்வெடுக்க வேண்டும் எனக்கூறியிருப்பாரே…?”

“மகாராணியாரான தங்களது தாய் நடந்த அனைத்தையும் தங்களிடம் கூறியிருப்பார் போலிருக்கிறது…? தங்களுக்கு நல்ல உணவு கிடைக்காமல் பசியோடு இருப்பீர்கள் என நினைக்கிறேன்‌. உள்ளே வாருங்கள். எனது மகள்  நிந்தவை தங்களது பசியைப்போக்குவாள்” என கூறி வைத்தியர் எனும் மன்னர் பரமன் வீட்டின் உள்ளே அழைத்துச்சென்று உணவருந்தும் இடத்தில் பரஞ்சோதியை அமர வைத்தார்.

ஓர் அறையிலிருந்து வந்த மல்லிகைப்பூவின் நறுமணம் தனது நாசியில் புகுந்து ஒருவித மயக்கத்தை உண்டாக்கிய மறுகணம் பேரழகி என சொல்லும் அளவுக்கு மலர்ந்த மலர் போன்ற தோற்றத்துடன், ஒடிந்து விடுமோ? என அச்சம் கொள்ள வைக்கும் சிற்றிடை வளைய, அன்னம் போல் நடை நடந்து அருகே வந்த பெண்ணைப்பார்த்து ஒரு கணம் அதிசயித்து, பேச்சிழந்து விட்ட நிலையில் ‘க்கும்’ என இருமி தன்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்த இளவரசி நிந்தவையைப்பார்த்து வணக்கம் வைத்தான். 

கேள்விப்பட்டதை விட ஆயிரம் மடங்கு கவிஞனின் கற்பனைக்கு எட்டாத அழகு அவளிடம் குவிந்து  கிடப்பதைக்கண்டு ஒரு கணம் மூச்சு நின்று வந்தது. வணக்கத்துக்கு புன் சிரிப்பால் பதில் சொன்னவள் இனிப்பு பலகாரங்களை அவனுக்கு நெருக்கமாக நின்று பறிமாற, பசி அதிகமாக இருந்ததால் தயங்காமல் அனைத்தையும் எடுத்து வேகமாக விழுங்கினான் பரஞ்சோதி.

போரில் தந்தையுடன் சென்று எதிரி நாட்டு வீரர்கள் பலரை வெட்டிச்சாய்த்திருந்தாலும் ஒரு பெண்ணின் அருகாமை அவனது உடலை நடுங்கச்செய்தது.

பல வித உணவு வகைகள் பறிமாறப்பட்டதால் வயிற்றுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மதிய நேரம் என்பதால் உண்ட மயக்கம் தீர சிறிது ஓய்வெடுக்க தனியாக அறையும் ஒதுக்கிக்கொடுத்தார் பரமன்.

சிறிது கண்ணயர்ந்த நேரத்தில் பல குதிரைகள் ஓடும் காலடிச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த பரஞ்சோதி, ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது தமது படைகள் குதிரை வியாபாரிகள் வேடத்தில் தம்மைத்தேடி வந்திருப்பதை அறிந்து வைத்தியரிடம் இருந்த வேலைக்காரரை அனுப்பி தான் இங்கிருக்கும் செய்தியைச்சொல்லச்சொன்னான்.

தொடர்ந்து தான் வைத்தியர் வீட்டில் இருந்தால் பலருக்கும் சந்தேகம் வருமெனக்கருதி வியாபாரிகளைப்போல் வந்திருந்த வீரர்களுடன் பின் வாசல் வழியே வெளியேறியபோது கண்ணீருடன் எதிரே வந்து நின்ற நிந்தவையை நோக்கி ‘எனக்கும் உன் மீது காதல் வந்து விட்டது. விரைவில் நாம் பிரியா நிலை ஏற்படும் உபாயத்தை கண்டு பிடித்து இங்கிருந்து உன்னை மீட்பேன்’ எனக்கூறி விடை பெற்றான். 

நிந்தவைக்கு திருமண வயது வந்த போது எதிரி நாட்டுப்படைகளால் நாடிழக்கும் நிலை ஏற்பட்டதால் சுயம் வரம் நடத்த முடியாமல் போனது. சுயம் வரம் நடத்தியிருந்தால் கூட குறுநில மன்னர்களின் வாரிசுகள் தான் வரனாக வந்திருப்பர். ஆனால் இன்று சக்கரவர்த்தியின் வாரிசின் இதயத்தில் புகுந்து விட்டது கடவுளின் செயலன்றி வேறொன்றுமில்லை என நிந்தவையும், அவளது பெற்றோரும் மகிழ்ந்தனர்.

பாஞ்சால நாடு காளவ தேசத்துக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தி வந்தாலும் மாளவ தேசத்துக்கு மிக அருகில் இருப்பதாலும், இயற்கை வளங்கள் நிறைந்த சிறந்த சுற்றுலா ஸ்தலமாக இருப்பதாலும் மாளவ தேசம் தனது தேசத்துடன் பாஞ்சால நாட்டை இணைத்துக்கொள்ள அடிக்கடி படையெடுப்பதுண்டு. அப்படிப்படையெடுத்து பாஞ்சால நாட்டைப்பிடித்ததையறிந்து அந்த நாட்டை மீட்டு தனது சாம்ராஜ்யத்துடன் இணைக்கவே தனது மகனை அனுப்பி வைத்துள்ளார் காளவப்பேரரசர் மார்த்தாண்டன்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் திடீரென குதிரைப்படைகளில் வந்த காளவ தேசத்து வீரர்கள் வைத்தியர் வீட்டைச்சுற்றி வளைத்து அங்கிருந்த அனைவரையும் குதிரையில் அமரச்செய்து வேகமாக காளவ தேசத்தை நோக்கி விரைந்தனர்.

எதிரி நாட்டுப்படைகள் நாட்டிற்குள் புகுந்து வைத்தியர் குடும்பத்தைக்கடத்திச்சென்ற செய்தி தீயாய் பரவியது. மாளவ தேசத்து தளபதி சிரஞ்சோதி மீது அரசர் கடும் சினம் கொண்டார்.

சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞனை கைது செய்யாமல் அவனது வயிற்று வலி நடிப்பை மெய்யென நம்பி வைத்தியரிடம் விட, தற்போது வைத்தியரையும் குடும்பத்துடன் கடத்திச்சென்றுள்ளான்.

வைத்தியரை எதற்காக கடத்த வேண்டும்? ஒரு வேளை அவரது பெண்ணின் அழகில் அந்தக்கள்வன் மயங்கியிருக்க வேண்டும். அல்லது வைத்தியரின் வைத்தியம் அவனது நோயைத்தீர்த்ததால் நிரந்தரமாக அவரை தனக்கு வைத்தியராக வைத்துக்கொள்ள போட்ட திட்டமாக இருக்க வேண்டும். கள்வனை உடனே கண்டு பிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் வராகன் பரிசை அறிவியுங்கள்” என கோபத்துடன் கட்டளையிட்டார் மாளவ தேசத்து மன்னர் கந்தகன்.

பாஞ்சால நாட்டின் குறுநில மன்னன் பரமனைக்கண்ட காளவ தேசத்து மன்னன் மார்த்தாண்டன் அவரைக்கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியைத்தெரிவித்தார்.

“எல்லாம் தங்களது சித்தப்படி தங்களது மகன் இளவரசன் பரஞ்சோதியால் எங்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தோம். திடீரென போர் சட்டங்களை மீறி இரவில் மாளவதேசத்துப்படைகள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த எங்களது வீரர்களைக்கொன்று குவித்து எனது பாஞ்சால நாட்டை அபகரித்துக்கொண்டனர். அந்நியப்படைகள் எங்கள் அரண்மனைக்குள் புகுந்ததும் இளவரசியையும், ராணியையும் அழைத்துக்கொண்டு சாதாரண வைத்தியனைப்போல வேடமிட்டு நாங்கள் வேளியேறிய பின் தங்களுக்கு செய்தி அனுப்பியிருந்தோம். நம் படைகளோடு நமது இளவரசர் வந்து எங்களைக்காப்பாற்றியுள்ளார். எனது பாஞ்சால நாட்டை தாங்கள் மீட்டு தங்களது சாம்ராஜ்யத்தோடு இணைத்தால் காலத்துக்கும் கப்பம் கட்டுவதோடு விசுவாசமாக இருப்பேன்…” எனக்கூறினார் பாஞ்சால மன்னன் பரமன்.

“அரசே கொள்ளை போன எனது தந்தையின் நாட்டை மீட்டுக்கொடுப்பதோடு கொள்ளை போன எனது உள்ளத்தையும் நீங்கள் தான் மீட்டுக்கொடுக்க வேண்டும்” நிந்தவையின் பேச்சு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தாலும் மன்னர் சிரித்தபடி “யாரந்த கள்வன்?” எனக்கேட்டதோடு ‘ரம்பையைப்போன்ற இந்த பேரழகியின் மனதை நம் மகன் கொள்ளையடித்திருந்தால் சந்தோசமே’

என நினைத்தார்.

இளவரசன் பரஞ்சோதியைப்பார்த்தபடி கால் விரல்களால் கோலமிட்டு குனிந்த தலை நிமிராமல் வெட்கப்பட்டாள் நிந்தவை. பதிலுக்கு இளவரசனும் தலை குனிந்து நிற்க இருவரது செயல்களையும் பார்த்து மகிழ்ந்த மன்னர் மார்தாண்டன் பரமனைப்பார்த்து “திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளளலாம்?” எனக்கேட்ட போது விசயம் புரிந்தால் உள்ளம் பூரித்து “தங்கள் சித்தப்படியே நடக்கட்டும்” என்றார்.

அப்போது மன்னர் முன் வந்த மகாராணி மாதவி, உரையாடல்களைப்புரிந்தவளாய் நிந்தவையின் அருகே சென்று “மருமகளே…” எனக்கட்டியணைத்து உச்சி முகர்ந்த போது நிந்தவை அணிந்திருந்த மூக்குத்தியால் ஒரு கணம் அதிர்ந்தார்.

தான் சிறுவயதாக இருக்கும் போது தனது தந்தையின் மகிழ தேசத்தின் மீது போர்தொடுத்த மாளவப்படை அரண்மனையில் புகுந்து தன்னைத்தூக்கிச்சென்ற போது, மகிழப்படை தன்னைக்காப்பாற்ற வந்து விட, தான் அணிந்திருந்த மூக்குத்தியை மட்டும் மாளவப்படை வீரர் ஒருவர் கழட்டிக்கொண்டு தன்னை விட்டுச்சென்றது ஞாபகத்துக்கு வந்தது.

எதிரி நாட்டு அரண்மனையில், அரண்மனை வாசிகளிடம் கிடைக்கும் பொருட்களை தங்கள் நாட்டு அரண்மனைக்கு கொண்டு சேர்க்கும் பழக்கம் வீரர்களுக்கு உள்ளதால் அந்த மூக்குத்தி மாளவதேசத்து மகாராணியிடம் போய் சேர்ந்திருக்கும் என நினைத்திருந்தாள். அது எப்படி பாஞ்சால நாட்டு இளவரசியின் மூக்கில் ஜொலிக்கிறது…? தவிர பாஞ்சால அரசிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவே தன் மகன் கருவுற்று பிறக்கும் வரை அங்கேயே ஓய்வெடுத்தபோது தெரிந்ததும் ஞாபகம் வந்தது.

“மாளவ தேசத்து இளவரசிக்கு எனது வாழ்த்துக்கள்” என மகாராணி மாதவி சொன்னதும் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“மகாராணி உனக்கு சித்தம் ஏதும் கலங்கவில்லையே..‌? பரம எதிரியான மாளவ தேசத்து இளவரசிக்கு இங்கே என்ன வேலை…?” என மன்னர் மனைவியிடம் கோபமாகக்கேட்டார்.

“நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் மன்னா. இந்தக்கேள்விக்கு பாஞ்சால மன்னர் தான் பதில் சொல்ல வேண்டும்” எனக்கூறி தனது இருக்கையில் அமர்ந்தார் மகாராணி.

“எனக்கு குழந்தை இல்லை என்பது உண்மைதான். ஒரு முறை மகாசக்தி கோவிலுக்கு நானும், ராணியும் விரதமிருந்து குழந்தை வரம் வேண்டி சென்றிருந்தோம். அப்போது ஒரு சிறு குழந்தையின் சிரிப்பொலி கேட்டது. அக்குழந்தை யாருமற்ற இடத்தில் யாருடனோ சிரித்து விளையாடுவது போல் இருந்தது. ஆனால் குழந்தையைத்தவிர அங்கு வேறு யாரும் எங்களது கண்களுக்குத் தென்படவில்லை. எல்லாம் பாராசக்தியின் மகிமை என நினைத்து குழந்தை அருகில் சென்றபோது ‘அம்மா’ என்று ஓடிவந்து ராணியின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது குழந்தை. இது கடவுள் எங்களுக்கு கொடுத்த குழந்தை என நினைத்து எடுத்து வந்து அரண்மனையில் வளர்த்து வந்தோம். இதைத்தவிர எங்களுக்கு எதுவும் தெரியாது. மகாராணி கூறுவதைக்கேட்கும் போது அதிசயமாக மனதில் தோன்றுகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு நாட்டின் இளவரசியாகப்போகும் குழந்தையை எதற்காக கோவிலில் விட வேண்டும். அதுவும் விரோதமாக இருக்கும் வேறு நாட்டின் கோவிலில்….?” என பாஞ்சால மன்னன் பரமன் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“இதற்கு பதில் என்னிடம் உள்ளது….” என கூட்டத்திலிருந்து வயதான ஒருவர் வெளிப்பட, அனைவரது பார்வையும் அவர் மேல் விழுந்தது.

“முதலில் காளவ தேசத்து சக்கரவர்த்தியும், பாஞ்சால நாட்டின் மன்னரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் மாளவ தேசத்தைச்சேர்ந்த அரண்மனை சேவகன். நிந்தவைக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் மாளவ சுந்தரி‌. குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும் போது மன்னருக்கு சூளை நோய் தாக்கி படுத்த படுக்கையான சமயம் மலைதேசத்திலிருந்து குறி சொல்ல வந்த குறத்தி ஒருவள் குழந்தையால் தந்தைக்கு கண்டம் உண்டு என்றும், குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்துவிட வேண்டும் எனக்கூறியதைக்கேட்டு மன்னரும் சம்மதிக்க, மகாராணி மட்டும் மனக்கவலையுடன் தத்து கொடுக்க சம்மதிக்கவில்லை. 

‘ஒரு மன்னரின் மகள் சாதாரண பிரஜையிடம் தத்து கொடுத்து வளர்வதற்கு பதிலாக கொன்று விடுவது மேல். அல்லது குழந்தைப்பேறு இல்லாத ஒரு நாட்டு மன்னருக்கு வேண்டுமானால் கொடுத்து விடலாம். இக்குழந்தை எங்கு வளர்ந்தாலும் அரண்மனையில் தான் வளர வேண்டும்’ எனக்கூறி கண்ணீர் சிந்திய போது எனக்கு பாஞ்சால நாடு ஞாபகம் வர, மகாராணியிடம் எனது எண்ணத்தைக்கூறி குழந்தையை அழைத்துக்கொண்டு பாஞ்சால நாட்டிற்கு வந்தேன். மன்னரும், ராணியும் குழந்தை வரம் வேண்டி பௌர்ணமி நாளில் மகாசக்தி கோவிலுக்கு வருவதைத்தெரிந்து கொண்டு கோவிலுக்கு குழந்தையுடன் சென்றேன். அதன் பின் மற்றவையெல்லாம் பாஞ்சால நாட்டு மன்னர் சொன்னதுதான். குழந்தை வளரும் ஒவ்வொரு திங்களும் மாளவ மகாராணிக்கு புறா மூலமாக ஓலையில் செய்தி அனுப்பி வந்தேன்” என்றார் முதியவர்.

இச்செய்தியைக்கேட்டு மிகவும் வருந்திக்கண்ணீர் சிந்தினாள் நிந்தவை. அவளை மறுபடியும் மார்போடு ஒரு தாயைப்போல அணைத்து” கவலைப்பட வேண்டாம். எல்லாம் கடவுளின் சித்தப்படியே நடக்கிறது. ஒரு காலத்தில் மாளவ தேசமும், எனது தந்தை அரசாட்சி புரியும் மகிழ தேசமும் ஒருவரது ஆட்சியின் கீழ் இருந்தது. சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. நீ ஒரு வகையில் எனது சகோதரன் மகள் தான். பரஞ்சோதிக்கு முறைப்பெண் தான். இல்லையென்றால் எனது மூக்குத்தி உனது மூக்கில் ஜொலிக்க முடியுமா…? நீ பிறந்த போதே பரஞ்சோதிக்கு மனைவி என்பது விதி…” எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாதவி.

“உண்மையிலேயே நான் மாளவ தேசத்து வாரிசு என்றாலும் குழந்தையான என்னை வெறுத்து ஒதுக்கிய அவர்களை நானும் வெறுக்கிறேன். பாஞ்சால நாடே என் நாடு. பாஞ்சால இளவரசி என்பதே எனக்குப்பெருமை. இவர்களே என் தாய், தந்தையர். இவர்கள் சொல்லை மீறி என்றும் நடக்க மாட்டேன். தங்களது புதல்வனை மணம் புரிவது நான் பல ஜென்மங்களில் செய்த தவம். ஆனால் ஒரு நிபர்ந்தனை…” என நிந்தவை கூறியதைக்கேட்டு அனைவரும் ‘என்ன?’ எனும் கேள்வியுடன் உற்று நோக்கினர்.

“தற்போது மாளவ தேசத்தின் வசமுள்ள எங்களது பாஞ்சால நாட்டை போரிட்டு மீட்டுக்கொடுங்கள். பாஞ்சால அரண்மணையில் எங்களது திருமணம் நடக்க வேண்டும். அதற்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்” என உறுதி கூறினாள்.

அடுத்த சில தினங்களில் பரஞ்சோதி தனது காதலியின் நிபர்ந்தனையை ஏற்று போரைத்தொடங்கினான்.

சில மாதங்களில் பாஞ்சால நாட்டைக்கைப்பற்றியதோடு‌, மாளவ தேசத்தை முழுவதுமாக வீழ்த்தி காளவ தேசத்தோடு இணைத்தான் பரஞ்சோதி. மாளவ தேசத்து மன்னரும், மகாராணியும் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது கடைசி ஆசை பாஞ்சால நாட்டு அரண்மனை சிறையில் தங்களை அடைக்க வேண்டும் என்பதை பரஞ்சோதி ஏற்றுக்கொண்டான்.

ஒற்றர் மூலமாக பாஞ்சால நாட்டு இளவரசி தான் தங்கள் மகள் என்பதையும் காளவ தேசத்து இளவரசனை பாஞ்சால அரண்மனையில் கைப்பிடிக்கப்போகிறாள் என்பதையும், அத்திருமணம் நடக்குமிடத்திலாவது தாங்கள் இருக்க வேண்டும் என விரும்பியதாலேயே மாளவ தேச மன்னர் கந்தகனும், மகாராணி மந்தகியும் இந்த விருப்பத்தை தெரிவித்தனர் என்பது அவர்களுக்கும், செய்தியை புறா மூலமாக அனுப்பிய நிந்தவையை கண்காணித்து செய்தி அனுப்பும் அரண்மனை சேவகனுக்கும் மட்டுமே தெரியும்.

எதிரி நாட்டு மன்னர்களை சிறை பிடித்து அரண்மனை சிறையில் அடைத்தாலும் மன்னரைப்போலவே மதிக்கப்படுவதும், சிறைக்குள் சுதந்திரமாக விரும்பிய உணவுகளை உண்டு வாழவும் அனுமதிக்கப்படுவர். அவ்விடம் அரண்மனையில் ஒரு பகுதியாகவே இருக்கும். ஆனால் வெளியில் செல்லத்தடை இருக்கும்.

திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடை பெற்றன. மணமக்கள் சிறை வழியாக சென்ற போது” மச்சான்….மச்சான்…..” என சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தான் பரஞ்சோதி.

“என்ன மச்சான் அதுக்குள்ள மறந்திட்டீங்களா..‌? மாளவ தேசத்துல உங்களை சிறை பிடிச்சு கழுத்துல கத்தி வெச்சது நாந்தான். என் பெயர் சிரஞ்சோதி…”

“அடடே நீங்களா…? எனக்கு வயித்து வலி வருகிற அளவுக்கு மோசமான உணவைக்கொடுத்தவர் நீங்கள் தானே….? அப்போதே உங்களுக்கு நான் உறவுக்காரன் என சொன்னேனே…. ? எனக்கு வாக்கு பலிதம் உண்டு என எங்களது அரண்மனை ஜோதிடர் அடிக்கடி கூறுவார். இப்போது உண்மையாகவே தங்களுடைய சகோதரியை திருமணம் செய்வதால் உறவாகி விட்டேன் பார்த்தீர்களா…. நீங்கள் மாளவ தேசத்து தளபதி மட்டுமல்ல பட்டத்து இளவரசன் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். அதனால் தான் போரில் வெற்றி பெற்றதும் உங்களையும், உங்களது பெற்றோரையும் கொல்லாமல் உயிரோடு சிறை பிடிக்கும்படி வீரர்களிடம் கூறியிருந்தேன்‌” எனக்கூறியதைக்கேட்ட நிந்தவை, தான் பார்க்கும் முன்பே தன்னை மனைவியாக அடைய பல வகையில் முயன்று, தன்னைப்பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்திருப்பதை அறிந்ததில் பரஞ்சோதியை நினைத்து மகிழ்ந்த போது அவள் போட்டிருந்த வைர மூக்குத்தி கூடுதல் பிரகாசத்துடன் ஜொலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *