அது ஒரு நிலாக்காலம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 7,423 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

என் தங்கை தமிழரசியின் போட்டோவை இனி என்னிடம் கேக்கவே போல இல்லையென்றும், அவளுடைய போட்டோவை நான் காட்டினால் கூடப் பார்க்கவே போவதில்லையென்றும் சுசுந்தா கோபித்துக் கொண்ட அன்று நேரே ரோஸ்மேரியைப் பார்ப்பதற்காக நான் செயின்ட் தாமஸ் மவுண்ட் புறப்பட்டுச் சென்றபோது நிறைய இசைத்தட்டுக்களை எடுத்துச் சென்றேன். 

இருளில் வெளித் தோட்டத்து மரக் கதவை நெருங்கிய போதே வீட்டுக்குள் ஏதோ அசாதாரணம் தெரிந்தது. 

ரோஸ்மேரியின் அறையில் மட்டும் விளக்கு எரிந்தது. வீட்டுக்குள்ளிருந்து விநோதத் தொனியில் ஓர் அழுகைக் குரல் கேட்டது. வேகமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அறையின் மூலையில் சுவர் ஓரமாக ரோஸ்மேரி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். 

“ரோஸி…ரோஸி… ரோஸி… ரோஸி… ரோஸி…” 

தொடர்ந்து பல நிமிடங்கள் நான் அழைத்த பின் தான் என் குரலை அவள் உணர்ந்தாள். ஜன்னலில் கிடந்த வீட்டுச் சாவியை எடுத்து ஓடி வந்து கதவைத் திறந்தாள். அவளுடைய முகம், உடல் பூராவும் வியர்த்திருந்தது. இசைத்தட்டுக்களை மேஜையில் எறிந்துவிட்டு ரோஸ்மேரியின், கைகளைக் கவலையுடன் பிடித்துக் கொண்டேன்….

“ரோஸி, ஸீலியா எங்கே? ஏன் இப்படி உக்காந்து அழுதிட்டு இருந்தே? ஆண்ட்டி எங்கே?” 

“ஸீலி வெளியில போச்சு, இன்னும் வரலை.”

“ஆண்ட்டி…” 

“நான் தூங்கிட்டிருந்தேன் பாஸ். அது வர்க் முடிச்சிக் கதவைப் பூட்டி தீயை விண்டோ வழியா போட்டுட்டுப் போயிடுச்சி…” 

“சரி, அதுக்கு ஏன் இப்படி மூலையில உக்காந்து அழுதிட்டிருந்தே?” 

“முழிச்சிப் பார்த்தேன், யாருமில்லை. பயமா இருந்துச்சி பாஸ்… நான் தனியா இருக்கமாட்டேன் பாஸ். தனியா இருந்தா…” 

தொடர்ந்து சொல்லத் தயங்கிய ரோஸ்மேரியின் கண்களில் மறுபடியும் பயம் வந்ததைக் கலனித்து விட்டேன், 

”வேணாம் வேணாம்… நீ சொல்ல வேண்டாம்மா… நீ சொல்ல வேண்டாம். புரியுது எனக்கு… என்ன ப்ராப்ளம்னு…? போ, போய் முகத்தையெல்லாம் நல்லா கழுவித் தொடச்சிட்டு வா… நெறைய ரெக்கார்ட்ஸ் கொண்டு வந்திருக்கேன் கேக்கலாம்.” 

ரோஸ்மேரி முகம் கழுவிவிட்டு ஒரு நிமிஷத்தில் வந்தாள். 

“எப்ப இருந்து இந்த ப்ராப்ளம் ஒனக்கு ரோஸி?”

“த்ரீ இயர்ஸாத்தான் பாஸ். நான் சின்ன புள்ளையா இருந்தப்ப இது மாதிரியெல்லாம் வந்ததேயில்லை”

“இப்ப மட்டும் நீ பெரிய பெண்ணாக்கும், ஏம்மா?”

ரோஸ்மேரி சந்தோஷத்துடன் நகம் கடித்தாள்.

“பெரிய பெண் தான்” என்றாள். 

“பெரிய பெண்தான் ஸ்டிக்கரும் கலர் பென்சிலும் வாங்குமோ?” 

“வாங்காதா அப்படின்னா?”

“ஒன்னை மாதிரி சின்னக் கண்ணம்மாதான் வாங்கும் அதெல்லாம்!” 

“நானா சின்னக் கண்ணம்மா?” 

“யெஸ்.” 

“அப்படின்னா பெரிய கண்ணம்மா யார்?” 

“எங்க சுகந்தா!” 

”உன் வுட்பியா?” 

“யெஸ்…” 

ரோஸ்மேரி என் தோளைப் பற்றிக் கொண்டாள்.

“பாஸ்…உன் வுட்பியைப் பார்க்க ஆசையா இருக்கு!” என்றாள். 

“ஆனா அவளுக்கு ஒன்னைப் பார்க்கறதுக்கு ஆசையே இல்லையே கண்ணம்மா!” 

“ஏன் ஆசை இல்லை? நான் அழகா இல்லையா?”

“நீ அழகா இருக்கறதாலதான் அவளுக்கு ஒன்னைப் பார்க்கறதுக்கு ஆசை இல்லை!” 

ரோஸ்மேரிக்கு இதன் பொருள் தெரியவில்லை. 

“ஒன்னை ஒரு நாள் டாக்டர் சாரதா மேனன் கிட்ட கூட்டிட்டு போகப் போறேன்… மாட்டேன்னு சொல்லாம வரணும், தெரியுதா?” 

”வேணாம் பாஸ்… எனக்கு டாக்டர்னு சொன்னாலே பயம் வந்திடும்…” 

“அப்படியெல்லாம் பயப்படக் கூடாது. அந்த டாக்டரம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க… ரொம்ப நல்லவங்க அவங்க!” 

“நீயும் அப்ப என் பக்கத்லயே இருக்கணும்.”

“கண்டிப்பா இருப்பேன்.” 

“அப்படின்னா வருவேன் ” 

“வெரிகுட்… குட் கேர்ள்… இந்தா, இதைப்போடு…”

“யார் இவன்… ட்வோரக்?” 

“ஐ திங்க் இஸ் ஏ பொஹிமியன். அவனோட ந்யூ வால்ட் சிம்ப்பனி இது. இந்த சிம்ப்பனியில் ஒரு டைப் ஆஃப் செக்கோஸ்லோவாக்கியாவோட ஃபோக் ஸ்பிரிட் இருக்குன்னு நெனைக்கிறேன். ரோஸி, நீயும் நானும் சேர்ந்து ஒரு தடவை வியன்னா போயிட்டு வரலாமா?” 

“நீ எந்த ப்ளேஸ் சொன்னாலும் நான் வரேன்.” 

ரோஸி இசைத்தட்டைச் சுழலவிட்டு என்னை நெருக்கி உட்கார்ந்து கொண்டாள். இசை ஒலிக்கத் துவங்கியது. நீக்ரோக்களின் கானம் அமெரிக்க தேசத்து இசைக்களங்களின் நவீனப்படாத காலத்துக்கும் முன்பாகவே ஓர் உன்னத சுருதியை இந்த ந்யூ வர்ல்ட் சிம்ப்பனியின் மூலம் முடுக்கிவிட்ட அந்த இசைமேதை ட்வோரக்கின் வாழ்க்கை அனுபவங்கள் சில என் நினைப்பில் ஆடின. 

”அன்னிக்கு நான் சொன்னேனே – ஒன்னை நர்ஸ்ஸிங் கோர்ஸ்ல சேத்துப் படிக்க வைக்கிறதா…படிக்கிறியா?” 

“வேணாம் பாஸ்…” 

“ஏன் வேணாம்?” 

“ஸ்கூல் ஃபைனல் முடிச்சி த்ரி இயர்ஸ் ஆயிடிச்சி! இனிமே போய் எப்படி பாஸ் மறுபடியும் படிக்க முடியும்?” 

”மனசு வச்சா முடியும் சின்ன கண்ணம்மா!”

“மனசு வச்சாலும் என்னால முடியாது.” 

“குதிரை முட்டை! ஏன் முடியாது? அதோ பார், அந்த அலாரக் கடிகாரத்ல ரேடியம் இருக்கு பார்த்தியா? அதை யார் கண்டுபிடிச்சது தெரியுமா? மேடம் க்யூரி. யார் சொல்லு?” ரோஸி மெளனமாக அமர்ந்திருந்தாள். 

“மேடம் க்யூரி . ஏழைப் பெண்ணான அந்த மேடம் க்யூரி, காதல் தோல்வில மனம் தளறாம இருபத்திநாலு வயசுக்கப்புறம் காலேஜ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சா. படிச்சு பின்னாடி அவ எவ்வளவு பெரிய மனுஷியா ஆனாள்னு தெரியுமா! ஒரு தடவை இல்லை; ரெண்டு தடவை அவ நோபிள் பரிசு வாங்கியிருக்கா! எதுக்காக இதைச் சொல்றேன்னா, படிக்கிறதுக்கு மட்டும் வயசே கெடையாது…அதான்…” 

“எனக்குத் தூக்கம் வருது” ரோஸ்மேரி சிணுங்கினாள். 

“தூக்கம் வந்தா தூங்கு…!” 

“நீ எந்திரிச்சி போயிடக்கூடாது.” 

“இல்ல இல்ல. நீ தூங்கு.” 

“தாங்க்ஸ்.” 

ரோஸ்மேரி குப்புறப் படுத்துக் கொண்டாள்.

“குட் நைட்!” 

“குட் நைட்…” 

சில நிமிஷங்களில் ரோஸ்மேரி தூங்கிவிட்டாள். தூங்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன், ஒரு புஷ்டியான பறவை போலத்தான் அவள் தெரிந்தாள். மிகச் சில தாள்களாக மட்டுமே பரிச்சயமாகி இருக்கும் ஓர் ஆடவனின் அருகில் சுதந்திரமாகத் தூங்க முடிந்திருக்கும் அந்த பெண் குழந்தை நிச்சயமாகப் பவித்திரமானவள் தான். ஸீலியா நினைத்துக் கொண்டிருக்கும் மன வளர்ச்சியின்மை இல்லை, அந்த அறியாமை. அதனால் ரோஸ்மேரியை மனத்தத்துவ மேதையிடம் அழைத்துப் போகச் செய்திருந்த என் முடிவை மாற்றிக் கொண்டேன். 

அவளின் தூக்கம் கலையாமல் இருக்க இசையை நிறுத்தி விட்டு எழுந்து தோட்டத்தில் போய் நின்றேன். வாசலில் ஸீலியா யாராலோ காரில் கொண்டு வந்து இறக்கிவிடப் பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இறங்கியதும் கார் புறப்பட்டுச் சென்றது. என்னைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு சந்தோஷம் வந்ததே – அது எனக்குக் கசப்பாக இருந்தது! தனக்காக இன்னொருவன் தன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வதில் ஒரு விபரீதமான பெண்ணுக்குத்தான் எத்தனை ஆணவமான சந்தோஷம்? 

“ரோஸி தூங்கிடுச்சா பாஸ்?”

“தூங்கியாச்சு” 

உள்ளே வந்தோம்.

“யார் கார் அது?” 

“எங்க பாஸ் கார்!” 

”பெரிய ஆளாத்தான் பிடிச்சிருக்கே!” 

என்னை நெருங்கி வந்து கைகளால் கழுத்தைப் பின்னிக் கொண்டாள். 

“கையை எடு…” 

கையை எடுக்க மறுத்தாள். 

“இன்னிக்கி ஒன்னை விடமாட்டேன்” என்றாள். 

அவளுடைய கைகளில் புதிய பலம் பரவியது, அவளின் வாசனை என் பிடரியை உலுக்குவது போலிருந் தது. உடல் ஒரு வெந்நீர் துறைக்குள் பாய்ந்து கொண்டி ருந்தது. திமிறினேன். தப்பிக் கரையேறுகிற அவசரத்தில் ளீலியாவின் உடலை மறுத்து நெம்பி உதறினேன். ஸீலியா சலிர்த்துக் கொண்டே பெண் குதிரையாய், கடலாய்ப் பொங்கியபடி மூச்சின் வேகம் அதிகரித்தபடி சிறிது தூரத்தில் நின்றாள். சேற்றில் விழுந்து விடக் கூடாதேயென்ற சிலிர்ப்பில் நான் நின்றேன். 

“ப்ளீஸ் கம்… டேக் மி ப்ளீஸ்…!” 

துளித்துளியாக ஸீலியா முன் வாங்கி வந்தாள்!

அங்குலம் அங்குலமாக நான் பின் வாங்கிக் கொண்டிருந்தேன்! 

“வா பாஸ்…” 

“நோ ஸீலியா… நோ…” 

பல கணங்கள் மூச்சு வாங்க என்னைப் பார்த்தபடி சற்றுத் தூரத்தில் நின்று கொண்டே இருந்தவள், “சீ! நீ ஓர் ஆண்பிள்ளையா?” என்று வெறுப்புடன் கேட்டாள்.

இனி என்னை நோக்கி அவள் நெருங்க மாட்டாள் என்பது தெரிந்தது. 

“நீயெல்லாம் ஒரு பொம்பளையா ஸீலியா?” – நான் திருப்பித் தாக்கினேன். 

“நீ ஆம்பளையா இருந்தா அது தெரிஞ்சு போயிருக்கும் ஒனக்கு!” 

எனக்குள் ஆக்ரோஷம் கொந்தளித்தது. ஒரு நிமிஷம் சுகந்தா என் நினைவில் வந்தாள். மிக நெருக்கமான காதலுறவு மலர்ந்து விட்ட பின்னும் இதமான ஒரு முத்தத்துக்கு கூடச் சம்மதிக்காத அவளின் சன்னமான மறுப்பு ஓர் ஊசி முனையாக என் உணர்வுகளில் இறங்கியது. என்னையும் அறியாமலேயே நான் சுகந்தாவிடம் அடிமைத் தளையைத் பூட்டிக் கொண்டிருக்கிறேன்? – இதோ, கை எதிரில் வாசலை வலிய வருவதைக்கூட என்னை நிராகரிக்க வைக்கிறாள் – எங்கிருந்தோ சுகந்தா!

சுகந்தாவின் எதிரில் தான் நான் அவளின் மனிதனாக இருக்க வேண்டும். அவளின் மறைவில் நான் நானாக இருந்தால் போதும்! அதுவே அவளின் மனிதனாக என்னை அவள் சமைத்துவிட்டதற்கு அவளை நான் பழி தீர்த்துக் கொள்கிற தத்துவம்! இந்த தத்துவத்தை ஒரே ஒரு முறை ஸீலியாவுக்குப் படித்துக் காட்டி விட்டால் கூடப் போதும்! ஒரே ஒரு முறை தான்! அப்போது தான் ஸீலியாவும் பாடம் படித்தாற் போலிருக்கும்…என் மனத்தில் இருக்கும் சுகந்தாவுக்கும் பாடம் கற்பித்தது போலிருக்கும்! ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய், அவ்வளவு தான் கல்லை எறிந்து விட்டேன்… 

“ஸீலியா, இதுதான் ஃபர்ஸ்ட் அன்லாஸ்ட். மறுபடி யும் இந்த ரிலேஷன்ஷிப் உன் கிட்ட வச்சிப்பேன்னு மட்டும் கனவுல கூட நெனைச்சிடாதா… புரியுதா?” 

“பார்க்கலாம் அதைத்தான்!” என்றாள் செருக்குடன்.

”குட் நைட்!” 


காலையில் பதினோரு மணி அளவில் ஆபீஸை நோக்கி நடந்த போது, கடைகளில் அன்றைய செய்தி பேப்பர்களில் சென்னையிலிருந்து நேற்று பம்பாய் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியிருந்த செய்தி வெளியாகி இருந்தது. அந்தச் செய்தியைக் கவனித்துக் கொண்டே ஆபிஸை அடைந்தபொழுது ஆபீஸில் எனக்காக சுகந்தா காத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகம் இறுகிப் போயிருந்தது. ஒரு விநாடி எனக்குள் சந்தேகம் – சுகந்தா வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாளா? இதுவரை அவன் என்னைப் பார்ப்பதற்காக ஆபீசுக்கு வந்ததே இல்லையே… 

“என்ன சுசுந்தா-திடீர் விஸிட்? வா வா, உள்ளே வா…” 

எழுந்து என்னுடன் மெளனமாக அறைக்குள் வந்தாள். ‘ஸம்திங் ராங்’ என்பது தெரிந்தது. 

“உக்கார். ஆபீசுக்குப் போகலையா?” 

“ஆபீஸ் இல்லை…” – சுகந்தாவின் குரல் கம்மிப் போயிருந்தது. 

“ஏன் இல்லை?’ 

வெறுமே அவளின் உதடுகள் துடித்தன. “ஓங்க மானேஜர் ரெங்கராஜன் ஏதாவது மிஸ்பிஹேவ் பண்ணிட்டானா?”. ‘இல்லை’ யென்று தலையை அசைத்து விடடுச் சொன்னாள்: 

“ஹி இஸ் நோ மோர்!” 

சட்டென எனக்கு சென்னை-பம்பாய் விமான விபத்து ஞாபகத்தில் வந்தது. சுகந்தாவின் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் உதிர்ந்தன. சிரமப் பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு கண்களை அவசரமாகத் துடைத்தாள். சில நிமிடங்களுக்கு நான் மௌனமாக இருந்தேன். வருத்தத்தில் சுகந்தா தலை குனிந்திருந்தாள். 

“நல்ல காபி சூடா வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?” 

“சரி” என்றாள். 

பணியாளை அழைத்து ஒரு காபி வாங்கி வரச் சொன்னேன், 

“உங்களுக்கு?” 

“வேணாம்மா… நான் இப்பதான் சாப்பிட்டேன்…”

சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். 

“ரெங்கராஜன் அந்த ப்ளேனில் தான் ஒரு கான்ஃபரன் ஸூக்காக பாம்பே போனார்…”

“ஒனக்கு எப்ப நியூஸ் தெரிஞ்சது?” 

“நைட்…” 

“பாவம், அன்லக்கி ஃபெல்லோ, இல்லே?”

காபி வந்தது. 

“ஒங்களுக்குக் கொஞ்சம் வேணுமா?” 

“இல்லம்மா, நீ சாப்பிடு…” 

“பரவால்ல – ஒரு வாய் குடியுங்கோ.” 

“சரி, ஒனக்காக?” 

“ஸிப் பண்ணியே குடியுங்கோ.'” 

நேற்று இரவு இவளை மானசீகமாகப் பழிவாங்க வேண்டுமென்ற உணர்வில் ஸீலியாவுடன் கொண்ட உறவை நினைத்துக் கொண்டே அந்தக் குற்ற உணர்வுடன் காபியை ஒரு வாய் குடித்தேன். முதல் முறையாக அன்று தான் நான் எச்சில் செய்த ஒரு பானத்தை சுகந்தா அருந்தியது! 

“சரி, போனா போறான்! அவனோட விதி முடிஞ்சது. நாம என்ன செய்ய முடியும் அதுக்கு?” 

“எங்கேயாவது வெளியிலே போகலாமா ராம்ஜி?’

“ஓயெஸ். போகலாமே!” 

“மனசே சரியில்லை எனக்கு. ரெண்டு நாள் முன்னாடி கூடக் கேட்டார், நம்ம மேரேஜ் எப்போன்னு… பாவம், நல்ல மனிதர்!” 

”சரி, அந்த ஜென்டில்மேன் ஆத்மா சாந்தி அடையட்டும்! நாம கிளம்பலாமா?” 

“எங்கே போறோம்?” 

“முதல்ல ட்ரைவ் இன் போகலாம்.” 

“இல்லை ராம்ஜி. இன்னிக்குப் பூரா நான் சாப்பிடறதா இல்லை…” 

“ரெங்கராஜன் செத்துப் போனதுக்காகவா?”

“யெஸ்…” 

நான் எழுந்து கொண்டே சுகந்தாவின் கன்னத்தை அன்புடன் தட்டினேன்… “நீ உண்மையிலேயே ரொம்பப் பெரிய மனுஷி சுகந்தா…! சரி, வா. காந்தி மண்டபத்ல போய் இன்னிக்கு ரெண்டு பேருமே ஈவினிங் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம், கமான்…!” 

நானும் சுகந்தாவும் அன்று மாலை ஐந்து மணிவரை கிண்டி காந்தி மண்டபத்தில் உண்ணாவிரதத்தோடு, சிறிது நேரம் மௌன விரதமும் இருந்தோம்! 

அத்தியாயம் – 11

ரெங்கராஜனின் திடீர் மரணம் மிக ஆழத்தில் சுகந்தாவின் மனநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏதோவொரு பயம் கலந்த சோகம். அவளுக்குள் கனமாகவே படிந்து விட்டது. மனித வாழ்க்கையே பெரும் வேதனை மிக்கதாக அவளுக்குத் தெரிந்தது. ஓர் ஆன்ம களைப்புக்கு உள்ளாகிப் போய் விட்ட அசாதாரணமான மெளனம் பல சமயங்களில் அவளின் கண்களில் உறைந்து போயிருந்தது. அதிலும் அவள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவருடைய பெண் கீதா, ஒரு பையனுடன் சமீபத்தில் ஓடிப்போன போது அந்தக் குடும்பத்தில் எழுந்த மனக் குமுறல்களையும் உணர்ச்சி நெரிசல்களையும் பார்த்து சுகந்தாவுக்கு மிகப் பெரிய மன நடுக்கம் வந்து விட்டது. 

‘கீதா வீட்ல அவ அம்மா அப்பா படறபாட்டைப் பார்த்து எனக்கு மனசே ஒரு மாதிரி ஆயிடுத்து ராம்ஜி…” 

“ரைட் ரைட்… புரியுது எனக்கு. ஒரு நாளைக்கி நாமும் இப்படித்தானே ஒருத்தனோட ஓடிப் போகப் போறோம். நம்ம அம்மா அப்பாவும் இப்படித்தானே அன்னைக்கிக் கஷ்டப்படுவாங்கன்னு நெனைச்சிட்டே, பயம் வந்துட்டது…. அதானே?” 

“அதுக்காக நான் பயப்படலை ராம்ஜி. என் அக்கா, தங்கையை நெனைச்சாத்தான் மனசை என்னவோ பண்ணுது..” 

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும். ஒனக்கு ஆட் சேபனை இல்லேன்னா சொல்லு… அவங்களையும் சேத்து இழுத்துட்டு ஓடிடுவோம்…!” 

வெகு நாள்கள் கழித்து என் சுகந்தா அன்றைக்கு என்னைக் கிள்ளினாள். 

இந்தப் பெண்மைக்கே உரிய காதல் கிள்ளல் எல்லாம் சரிதான்! தன் பெண் அவயவங்களை ஓர் ஆடவனுடன் பரிவர்த்தனைப் படுத்திக் கொள்கிற இயல்பான அந்தரங்க இம்சையில் சுகந்தா ரகசியமாக உடல் இளைத்துக் கொண்டிருந்தாள் என்பதெல்லாம் இரங்கத்தக்க உண்மை தான்! 

ஆனால்… 

இந்த ‘ஆனால்’ தான் நிச்சயமான பாதுகாப்புக்கு உரியதாக சுகந்தாவின் மனத்தில் வரித்து வைத்திருந்தது. 

இங்கே ஓர் உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்சுமில்லை. மாம்பலம் சரோஜினி தெருவில் ஒரு வீட்டின் மாடியிலிருந்த என்னுடைய அறைக்கு நான் எத்தனையோ சந்தர்ப்பங்களில் சுகந்தாவை அழைத்திருக்கிறேன். சென்னையில் அந்தப் பெரிய தனியறைதான் என்னுடைய வீடு. அது சுகந்தாவால் பார்வையிடப்பட வேண்டுமென்று நான் மிகவும் நியாயமாகவே ஆசைப்பட்டேன். 

வெட்கமே இல்லாமல்தான் இன்றும் இதை சுகந்தாவிடம் கேட்டேன்! அவள்தான் பதிலே சொல்லாமல் வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தாள். கொஞ்சங்கூடத் தயவு காட்டாமல் என் அறைக்கு வர மறுத்தே விட்டாள். 

“ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேத்தி வைக்கிறத்துக்கு ஒனக்கு இஷ்டமில்லை” என்றேன். 

“சின்ன ஆசை அப்புறம் பெரிய ஆசைல கொண்டு போய் விட்டுடும்…! வேணவே வேணாம்…!” என்றாள். 

உண்மையில் அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நான் மிகவும் மனம் நொந்து போய் விட்டதை உணர்ந்து எனக்கு ஒரு சலுகை போல ஓர் ஐடியா சொன்னாள்: 

“சரி. போனாப் போறது. ரொம்பத்தான் ஆசைப் படறேள்! அதனால் ஒரே ஒரு தடவை ஓங்க ரூமுக்கு வரேன். ஆனா தனியா வரமாட்டேன். ஜானகியும் நானும் சேந்து வரோம்!” 

என்னமோ ஒரு சின்னக் குழந்தையைச் சமாதானம் செய்வது போலத்தான் சமாதானம் செய்தாள். ஆனால் எனக்குத் தான் ஒரே கடுப்பு! 

“அப்ப இப்படிச் செய்யலாம் சுகந்தா.” 

“எப்படி?” 

”வீணா நீ ஏன் சிரமப்படறே. பேசாம ஜானகியை மட்டும் என் ரூமுக்கு அனுப்பு, போதும்!” 

கோபத்தில் சுகந்தாவின் முகம் சிவந்து விட்டது; “ரொம்ப அசிங்கமா பேசறேள் ராம்ஜி! ஜானகி கல்யாணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானவ!” 

“ஸாரி ஸாரி” யென்று சுகந்தாவிடம் பல தடவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்! கல்யாணம் ஆனவளைக் கூப்பிட்டாலும் தப்பு. கல்யாணம் ஆகாதவளைக் கூப்பிடடாலும் தப்பு. அப்படியானால் யாரைத்தான் கூப்பிடுவது? 

“அப்ப வேற யாரையாவது கூப்பிட வேண்டியது தான்!”- எரிச்சலுடன் சொன்னேன். 

“அது ஒங்க இஷ்டம்!” 

ஆனால், எனக்கு யார் மீதும் இஷ்டம் வரவில்லை! ஒரு சின்ன வைராக்கியம் கூட அன்றைக்கு எனக்குள் வந்து விட்டது. தொட்டால் இனி சுகந்தாவைத்தான் தொடுவது. அவளைத் தவிர வேறு எவளையும் மனத்தால் கூடத் தொடுவதில்லை. இது சத்தியம்! 

சுகந்தாவின் உச்சந் தலையில் அடித்து நான் செய்த இந்தச் சத்தியம் பொய்க்கவே இல்லை! அவளைத் தவிர்த்து அதன் பின் எந்தப் பெண்ணையும் நான் என்னுடைய மனத்தால் கூடத் தொடவில்லை. என் சுகந்தாவுக்கு நான் கொடுத்த பெரிய கௌரவம் இது தான்… 

இச்சமயத்தில் என்னுடைய அன்றரட வாழ்க்கையில் ஒரு மாறுதல் வந்தது. அநேகமாக மாதத்தில் பல இரவுகள் நான் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் ரோஸ்மேரியின் வீட்டில் அவளைப் பார்க்கச் சென்றேன். இரண்டே நாள்களில் கிண்டியில் ரோஸ்மேரிக்கு முந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஒரு பென்சில் ஃபேக்டரியில் லேலை வாங்கித் தந்தேனே, அது கூடப் பெரிய விஷயமில்லை; அவளுக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கித் தந்ததும் எனக்குப் பெரிய விஷயமில்லை. அவளுக்கு ஒரு கேமி ரிஸ்ட் வாட்ச், அவளுக்கு ஒரு காமிரா, லாரன்ஸ் அண்ட் மேயோவில் அவளுக்கு ஸன் க்ளாஸ், அவளுக்கு ஓர் ஆடும் நாற்காலி, அவளுக்கு நெய்ல் பாலிஷ், அவளுக்கு லிப்ஸ்டிக், ஸாக்ஸ், கர்சீப், கோயா ஸோப், ஒடிகோலான், ஷாம்பூ… இப்படி அவள் எது கேட்டாலும் நான் வாங்கி வாங்கித் தந்ததெல்லாம் ரோஸ்மேரிக்கு மிக மிகப் பெரிய விஷயமாகி விட்டது. அவளுக்கு நான் ஓர் அதிசய உலகத்தையே திறந்து காட்டியிருப்பது போன்ற ஆச்சரியம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சங்கூடப் பொய்யே இல்லாமல் எனக்கு அவள் புதல்வியாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுடைய எந்த ஒரு சிறு விருப்பத்துக்கும் மறுப்பே தெரிவிக்காத என் தீவிரமான அன்பு ரோஸ்மேரியின் மிக மென்மையான இருதயத்தை மழையாக நனையச் செய்து விட்டது. மழை பெய்து விட்டால் நல்ல பயிர் விளைந்து விடாதா? விளைந்து விட்டது. இதோ, அந்தப் படிமம். 


இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கம் போல ஸீலியா வீட்டில் இல்லை. நானும் ரோஸியும் பேசிக் கொண்டிருந்தோம். 

“பாஸ், எங்க ஆபீஸ்ல ஓர் அழகான மாமி இருக்கு. அந்த மாமி. எனக்கு அலைஸ்று பேர் வச்சிருக்கு…” 

“ரொம்ப டாப்பாத்தான் பேர் வச்சிருக்கு மாமி. கண்டிப்பா அந்த மாமியும் டாப்பாத்தான் இருப்பா!” 

“யூ ஆர் கரெக்ட். அந்த மாமி தினம் ஒரு பேர் வைக்குது எனக்கு…” 

“இன்னிக்கி என்ன பேர் வச்சா மாமி?” 

சிறிது யோசித்தாள் ரோஸ்மேரி… 

“இன்னிக்கி ‘லிட்டில் நெல்’னு கூப்பிட்டா…”

“அடிசக்கை! கனஜோரா பேர் வைக்கிறாளே மாமி. அவளைக் கொஞ்சம் நான் பார்த்தா தேவலையே!” 

“வரயா எங்க ஆபீஸ்க்கு, அந்த மாமியைக் காட்றேன்!” 

“வேணாம் தாயி, வேணாம். ஒரு மாமிகிட்ட நான் படறபாடே தாங்க முடியாம இருக்கு…” 

”சுகந்தாவை சொல்றியா?” 

”யெஸ். சுகந்தா ரொம்ப டாப்பா இருப்பா. நீ லிட்டில் நெல்னா, எங்க சுகந்தா க்ரேட் நெல்!” 

“லிட்டில் நெல் என்கிறது – தட் ஓல்ட் க்யூரியாஸிட்டி ஷாப்தானே பாஸ்?” 

“ஞாபகம் இருக்கா ஒனக்கு அந்த ஸ்டோரி?” 

“சின்ன வயசில மம்மி சொல்லிருக்கு. இப்ப மறந்து போச்சு… நீ அந்த ஸ்டோரி சொல்லு பாஸ்…” 

“எனக்கு மறந்து போச்சும்மா…” 

“அதெல்லாம் முடியாது. இப்ப நீ சொல்லித்தான் ஆவணும்…” 

“சொல்லித்தான் ஆகணுமா ? என்ன நீ பெரிய பேஜாரெல்லாம் பண்ற… நெஜமாவே அந்தக் கதை மறந்து போச்சும்மா…” 

“நீ சொன்னாதான்…” 

“சொல்லாட்டா என்ன செய்வே?” 

“உன் பேண்ட்டைக் கழட்டி விட்டுடுவேன்!”

“பாத்தியா. ஓங்க அக்கா டைப்ல பேச ஆரம்பிக்கிறே! இனிமே ஒன்னை இந்த வீட்ல விட்டு வைக்கக் கூடாது. கம்ப்ளீட்டாவே ஒன்னை அவ கெடுத்து அவ மாதிரி ஆக்கிடுவா… ஒன்னை இனிமே ஒரு ஹாஸ்டல்ல சேத்துட்டுத் தான் மறு வேலை.” 

ரோஸ்மேரி பயத்துடன் என்னைப் பார்த்து விழித்தாள். 

“ப்ளீஸ் ! என்னை மன்னிச்சிடு பாஸ்…” 

“ஒன்னை மன்னிச்சிடறேன். ஆனா, நீ ஸீலியா மாதிரில்லாம் பேசக்கூடாது, தெரியுமா?” 

“தெரியுது பாஸ்.” 

“சரி, படுத்துத் தூங்கு…” 

“தூக்கம் வரல்லியே!” 

“அப்ப எதிரிச்சிப் போய் கழுதை மேய்!”

“நீ மேய்!” 

“ரொம்ப கொழுப்பு வச்சிருச்சி ஒனக்கு…” 

“தட் ஓல்ட் க்யூரியாஸிட்டி ஷாப் கதை சொல்லு…”

“இரு, இரு. அந்தக் கதை மறந்து போச்சு. ஆனா, அந்தக் கதை பத்தி ஓர் இன்ஸிடெண்ட் சொல்றேன். சொல்லட்டா?” 

“சொல்லு…சொல்லு…” 

“முதல்ல அந்த நாவல் இங்லண்ட்ல ஒரு வீக்ஸியில் சீரியஸா பப்ளிஷ் ஆயிட்டிருந்தது.” 

“சரி…” 

“அந்த நாவலோட லாஸ்ட் சேப்டர் பிரிண்ட் ஆன அந்த இஷ்யூ கப்பல்ல அமெரிக்காவுக்குப் போயிட்டிருக்கு…” 

”எனக்கும் ஷிப்ல போகணும் போல இருக்கு. ஒனக்கு ஷிப் பிடிக்குமா பாஸ்?” 

“பிடிக்குமான்னு கேட்டுட்டியே கண்ணம்மா…! முடிவே இல்லாம ஒரு கப்பல்ல போயிட்டே இருக்கணும்னு எனக்குள்ள ஒரு வெறியே உண்டு ரோஸி…” 

”எனக்கு வேற மாதிரி ஆம்பிஷன் பாஸ். நானே ஒரு கப்பலா ஆயிடணும்! ஜோரா ஓஷன்ல போயிட்டே இருக்கணும்.” 

“ஜோர்.” 

“நான் கப்பலா மாறிட்டா. நீதான் கப்பல் கேப்டன்’ 

நிஜமாகவே கடல் மத்தியில் ஒரு கப்பலின் மேல்தளத்தில் நின்றாற் போலத்தான் இருந்தது எனக்கு. நான் கேப்டன்! இந்த ரோஸ்மேரி என்ற உயர்ந்த கப்பலுக்கு நான் கேப்டன்! 

”சரி, என்னமோ சொல்லிட்டு இருந்தியே…?” 

“யெஸ் யெஸ். அந்த நாவலோட லாஸ்ட் சேப்டர் ப்ரிண்ட் ஆன அந்த இஷ்யூ, ஷிப்ல ஸ்டேட்ஸ் போயிட்டே இருக்கு இல்லையா? அந்த ஷிப் ஹார்பர்ல எண்ட்டெர் ஆகப் போகுது. ஹார்பர் போர்ட்ல ஒரே கூட்டம். எக்கச் சக்கமான கூட்டம். அந்த கூட்டத்தைப் பார்த்திட்டு கப்பல்ல வர பெரிய பெரிய மனுஷன் ஒவ்வொருத்தனும் தன்னை ரிஸீல் பண்றதுக்குத்தான் அத்தினி கூட்டமும் நிக்குதுன்னு நெனைச்சிட்டு மனசுக்குள்ள பெரிசா பெருமைப் பட்டுக்கறாங்க. ஷிப் போர்ட்ல போய் நிக்குது அவ்வளவுதான். நின்னுட்டிருந்த அத்தினி கூட்டமும் அடிச்சிப்புடுச்சி அந்த வீக்லி மேகஸினை வாங்கறத்துக்குப் போட்டி போட்டுக்கிட்டு ஓடுது. பாவம், கப்பல்ல வந்த பெரிய மனுஷங்கள்லாம் வாய்ல விரலை வச்சிக்கிட்டு திரு திருன்னு முழிக்கிறானுங்க… எப்படி?” 

நான் விவரித்த இந்தச் சம்பவத்தில் ரோஸ்மேரிக்கு எதுவோ தொடர்பாகவில்லை என்பது தெரிந்தது. 

“ஆமா.இதை எதுக்கு பாஸ் சொல்றே? இதுல ஒரு ஸ்டோரி கூட இல்லையே?” 

“ஸ்டோரி இல்லையா? குதிரை முட்டை! அந்த லிட்டில் நெல்லோட ஸ்டோரி அவ்வளவு அருமையான ஸ்டோரி என்கிறதுக்காகத்தான் இதை இவ்வளவு மெனக் கெட்டு சொல்லிக்கிட்டிருக்கேன்…நீ என்னடான்னா இதைப்போய் எதுக்குச் சொல்றேன்னு சுத்த மடச்ச மாதிரி கேக்கறியே…!” 

நான் திட்டியது ரோஸ்மேரிக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. அவளின் கண்களில்கூட அந்த சந்தோவும் புதியதொரு சாயலில் பளபளத்தது. 

“என்னை உன்னோட டாட்டர் மாதிரின்னுசொல்றதை இனிமே நிறுத்திடுறீயா?” 

“ஏன், என்ன ஆச்சு என் சின்ன கண்ணம்மாவுக்கு?” 

“நான் உனக்கு சின்னக் கண்ணம்மா தானே பாஸ்?”

“நிச்சயமா!” 

“கண்டிப்பா…” 

‘கண்டிப்பா’ என்ற வார்த்தையைச் சொன்ன மறு நிமிஷமே ரோஸ்மேரியின் கண்களில் கண்ட பரவசமும் இன்பமும் அவளின் இருதயத்தை எனக்குச் சூரிய உதயமாகக் காட்டின. 

“மை டியர் கேப்டன்!” 

ரோஸ்மேரியின் கண்களைச் சந்திக்க இயலாமல் என் கண்கள் தாழ்ந்தன…. 

“ஐ லவ் யு பாஸ்!” 

நான் தலை குனிந்துவிட்டேன். 

“இம்மென்ஸ்லி ஐ லவ் யு கேப்டன்.” 

அவமானத்துடன் நான் ரோஸ்மேரியின் வாயை இறுக மூடிவிட்டேன். ‘பேச முடியாமல் நீ வாயை மூடலாம். பேசுவதற்கு எனக்குக் கண்கள் இல்லையா?’ என்பது போல், ரோஸ்மேரியின் கண்கள் காதல் கடலுடன் ஜொலித்தன. 

ரோஸ்மேரி என்ற கப்பலின் கொடிக் கம்பத்தில் பறந்துவிட்ட காதல் பட்டுக் கொடியை இறக்க நான் அவமானத்துடன் பாடுபட்டேன்! அவளின் காதலை கேட்டுக் கொண்டிருப்பதே என் மகளின் எதிரில் நான் ஆடையில்லாமல் நிற்பதற்கு ஒப்பானதாகப்பட்டது! 

“ஏன், என்னை உனக்கு பிடிக்கலையா பாஸ்?”

“அப்படிச் சொல்வேனா நான்? சொல்ல முடியுமா என்னால?” 

“தென் வாட்?” 

சின்னக் கண்ணம்மாவின் இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்படி மனமாச்சர்யங்களை அவளுக்குக் கொச்சைப்பட்டு விடாமல் விளக்குவேன்? பேசாமலேயே இருந்தேன். அவளின் பொன் வர்ணக் கூந்தலை வருடியபடி அமைதியாகவே அமர்ந்திருந்தேன். 

“உன் சுசுந்தாவை மட்டும்தான் லவ் பண்ணுவியா?”

“அப்படித்தான் வெச்சிக்கோயேன்” 

சில நிமிடங்களுக்கு ரோஸ்மேரி அமைதியாக இருந்தாள், 

“அப்ப என்னை மன்னிச்சிடு பாஸ்…” 

”நோ. நோ, நீதான் என்னை மன்னிச்சிடணும். இது வரைக்கும் நீ கேட்டு நான் ஸாரின்னு எதுக்குமே சொன்னது கிடையாது. அதனால் நீதான் இந்த விஷயத்ல என்னை மன்னிக்கணும்…” 

ரோஸ்மேரி பதில் சொல்லாமல் இருந்தாள். அவளின் மௌனம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

கொஞ்சம் நான் இலகுவானேன். ரோஸ்மேரி எழுந்து உட்கார்ந்தாள், கூந்தலை ஒழுங்கு செய்தாள். 

“டஸின் மேட்டர் பாஸ். என்னை நீ லவ் பண்ணாட்டாலும் பரவாயில்லை. ஆனா நான் உன்னை லவ் பண்ணுவேன் – சரியா?” 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“உனக்காக-சரி” 

“நானும் உனக்காக உன்னை மன்னிக்கிறேன். போதுமா?” 

“போதும்.” 

“நீ நல்ல பாஸ்,” 

“கேப்டன்னு சொல்லு.” 

“எங்க டாடிகூட ஆர்மியில் கேப்டன்தான் பாஸ்.” 

சட்டென என் அறிவில் ஒரு மலர் விழுந்தாற் போலிருந்தது. ஏதோ ஒரு சூட்சும இழையில் மனிதர்கள் சந்திக்கிறார்கள், பிரிகிறார்கள், இவளைச் சந்தித்தது போலவே ஒரு நாள் நான் பிரிந்தும் விடுவேனோ என்ற சந்தேகம் வந்தது. தகப்பன் இல்லாமல்; தாய் இருந்தும் இல்லாமல் அடிப்படை உறவு பலமே அற்றுத் தன்னத் தனியாய் வெறும் அழகான பறவை போல் வாழ்க்கையில் தனிமை கொண்டிருக்கும் ரோஸ்மேரிக்குச் சர்வ பொருத்தமும் உள்ள ஓர் ஆண் துணையை அவளுக்கு நான்தான் தேடி அமைத்து தர வேண்டும் என்ற நீதியை எனக்குப் புரிய வைக்கத்தான் என்னை அவள் கேப்டன் என்ற சொந்தம் கொண்டாடியிருக்கிறாள் என்ற தாத்பரியம் புரிந்தது. உண்மையில் நான் காலஞ்சென்ற அவளின் தந்தை கேப்டன் அலெக்ஸாண்டர் சாலமன் அவர்களின் மறு அவதாரம்தான் என அதீதத் தன்மையுடன் கற்பிதம் செய்து கொண்டு கருணையுடன் ரோஸ்மேரியின் பனை நுங்கு போன்ற நெற்றியில் ஒரு முத்தமிட்டேன். 

“தாங்க் யூ மைடியர் கேப்டன்!” 

அத்தியாயம் – 12

அன்று தெரு முனையில் திரும்பியபோதே ரோஸ்மேரியின் வீட்டிலிருந்து ப்யானோ ஒலி பளிங்குத் தரையில் கண்ணாடித் கோலிகள் உருள்கிற நூதன ஒலியாகக் காற்றில் கலந்து வந்தது. உள்ளே நுழைந்தேன். பெப்பி ஆரோமெல்லோவின் நொட்டேஷன்ஸ் வரை யப்பட்ட அட்டவணையை எதிர்படுத்திக் கொண்டு ஸீலியா ப்யானோ பயின்று கொண்டிருந்தாள். 

“என்ன, இன்னிக்கி நைட் அப்பாயிண்ட் மெண்ட் ஒண்ணும் இல்லையா, அதிசயமா வீட்ல இருக்கே…?” 

“நீ வந்ததும் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன் பாஸ்…” 

“ஏன், ஏதாவது அர்ஜெண்ட்டா பணம் தேவையா இருக்கா?” 

“நோ நோ… உன் சின்னக் கண்ணம்மாவை நீ எப்ப கல்யாணம் செய்துக்கப் போறேனு எனக்குத் தெரியணும்” 

திடீர் தாக்குதல் நடத்தினாள். 

ஸீலியாவின் குரலில் தெரிந்த இகழ்ச்சியில் ஏதோ மர்மம் கவிந்திருந்தது. நான் சிறிது தள்ளி நின்ற ரோஸியைப் பார்த்தேன். அந்த முகத்தில் சிறிய கறை படிந்த ஒரு நாணம் இருந்தது. 

பின்னணி போல ப்யானோவை உருட்டிக் கொண்டே ஸீலியா சர்வ அலட்சியமாகச் சொன்ன இந்த விஷயம், முகத்தின் அருகே வெடிகுண்டு வெடித்தாற் போல என்னைத் தாக்கியது. 

ஒரு நிமிஷம் ரோஸ்மேரியைப் பார்த்தேன். கால் பெரு விரலால் தரையைக் கீறியபடி எதையோ அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிற குழந்தை போல, அப்படியும் இப்படியும் ஆடியபடி நின்றாள். 

”என்ன பாஸ், ஒண்ணுமே சொல்லாம நிக்கறே?” – ப்யானோவிலிருந்து எழுந்து ஸீலியா என்னை வந்து தொட்டாள். 

“தொடாத என்னை…” – கோபத்தில் பல்லைக் கடித்தபடி சொன்னேன். ஸீலியா இன்னமும் அலட்சியமாகவே பார்த்தாள் – கையை எடுக்காமலே. 

“இப்ப கையை எடுக்கறியா இல்லையா?” 

அவள் ஒன்றும் எனக்குப் பயப்படுபவளாகத் தெரியவில்லை. 

“என்னை எதுக்கு இப்ப முறைக்கறே நீ?” 

என் கோபம் சிதறிவெடித்தது. 

“எதுக்கு முறைக்கிறேனா?அவ்வளவு நெஞ்சழுத்தமா ஒனக்கு…பாவி! அந்தப் பொண்ணு மனசையும் நாசமாக்கத் துணிஞ்சிட்டியா? அந்த நாச காரியத்தை என் கிட்டேயே வேற நடத்தப் பார்க்கிறியா? வேணாம் ஸீலியா வேணாம். தயவு செஞ்சு உன்னோட பொறுக்கித் தனத்தை உன்னோட நிறுத்திக்க! அநியாயமா அந்தக் கொழந்தையோட மனசைப் பாழாக்கினே – உன்னை நான் கொலை செய்யறதுக்குக் கூட அஞ்ச மாட்டேன். ஜாக்கிரதை! அவளை யார்னு நெனச்சேடி, யார்னு நெனச்சே?” 

“பாஸ்… பார், என்னையெல்லாம் வாடி போடின்னு பேசறதை நிறுத்திக்க! வாடி போடின்னு பேசறதுக்கு நான் ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரி இல்லை… ஆமா…” 

“ஒரு விபசாரியா திரியறதுக்கு வேலைக்காரியா வாழ்றது எவ்வளவோ உத்தமம்…” 

ஸீலியா கறாரான குரலில் என்னை எச்சரித்தாள்:

“அதிகமாப் பேசாத, வேண்டாம். நான் ரொம்பப் பொல்லாதவ…!” 

“பொல்லாதவளா? நீயா? இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்திடுவேன்னு நெனக்காத சல்லி சல்லியாக ஒன்றைக் கூறு போட்டுவேன்! கூறு!” 

ஸீலியா கொதித்து விட்டாள்: “போடா வெளியில்: இம்மீடியட்டா வெளியில போ நீ…” 

என் ஆக்ரோஷம் புயல்போல் கிளம்பியது: “போகாட்டா என்னடி பண்ணுவே?” 

“என்ன பண்ணுவேனா? மினிஸ்டருக்கு போன் பண்ணுவேண்டா…மினிஸ்டருக்கு போன் பண்ணுவேன். விட்டேனா பார் உன்னை…!” 

“எவனுக்கு வேணுமானாலும் போன் பண்ணு! அதுக்கெல்லாம் பயப்படற ஆள் இல்லை நான்…” 

மிக உண்மையாக என்னை எதிர் நோக்சு முடியாத பலவீனத்தில் ஸீலியா பாய்ந்து அவளின் கூரிய நகங்களால் என் முகத்தைப் பிராண்டித் தாக்கினாள். 

எனக்குப் பதில் சொல்லும் துடிப்பு அடங்கி விட்டது. அத்தனை உறவையும் பாலுணர்வு மையமாக்கிக் காணும் ஒரு கணிகையிடம் பேசி வென்று விடத் தேவையே இல்லையென்பது தெரிந்தது. என் உறவு ரோஸ்மேரியிடம் தான். என் நோக்கம் அந்தக் குழந்தையின் செம்மையான எதிர்காலம் தான். இந்த நோக்கத்துக்கு மாசு கற்பிக்க மாசு நிறைந்தவர்களுக்கே சாத்தியம். 

என் முகத்தில் துளித்திருந்த ரத்தத் துளிகளைக் கைக் குட்டையால் அவசரப்படாமல் துடைத்தேன். அவள் என்னைத் திட்டும் திட்டுகளையும் என் உணர்வுகளிலிருந்து துடைத்துக் கொண்டே, 

“நீ என்ன வேணும்னாலும் திட்டிக்க ! அவளுக்காக எந்தத் திட்டையும் வாங்கிப்பேன். என்ன அவமானம் வந்தாலும் தாங்கிப்பேன்…” 

வேகமாக நான் ரோஸ்மேரியின் அறைக்குள் போய் விட்டேன். 

நான் ரோஸியைக் கூப்பிட்டேன். பயந்து கொண்டே வந்தாள். 

“கொஞ்சம் கோகனட் ஆயில் எடுத்திட்டு வாம்மா… மூஞ்சியெல்லாம் எரியுது…” 

எடுத்துக் கொண்டு வந்தாள். அப்போது அவள் பின்னால் ஒரு சிறிய பூனைக்குட்டி கத்தியவாறு வந்தது. 

“இது ஏதும்மா, புதுசா இருக்கு?” 

“பட்ரோட்ல தனியா நின்னுது பாஸ். பாவமா இருந்துச்சி, எடுத்துட்டு வந்துட்டேன்.” 

“பால் ஊத்னியா?” 

“ஊத்தினேன் பாஸ்…” 

“இப்பிடி உட்கார். என் முகத்ல ரத்தம் தெரியற இடத்துலல்லாம் இந்தத் தேங்காயெண்ணெயைத் தடவி விடு, பார்க்கலாம்…” 

கவுனைத் தொடையிடுக்கில் செருகிக்கொண்டு கர்ம சிரத்தையாகச் சின்னக் கண்ணம்மா என் ரத்தக் காயங்களில் எண்ணெய்த் தடவினாள். 

“ரொம்ப எரியுதா?” 

“அநியாயமா எரியுது…” 

“ஸீலியாவை மன்னிச்சிரு பாஸ்ட அது ரொம்ப லிக்கர் சாப்ட்டுச்சி…” 

“உண்மையைச் சொல். அவதானே கன்னா பின்னானு ஒனக்கு எதை எதையோ சொல்லிக் குடுத்தா?” 

ரோஸ்மேரி வருத்தத்துடன் தலை அசைத்தாள். “என்னை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா நிறைய பணம் வரும்னு சொல்லுச்சி.” 

“படுபாவி! அவ விளங்கவே மாட்டா ரோஸி! என்னிக்காவது இந்த மாதிரி அசிங்கம் பிடிச்சவளுங்க சர்வ நாசமாகத்தான் போவாளுங்க. நீ வேணா பார்… பெரிய்ய மினிஸ்டருக்கு போன் பண்ணுவாளாம்! இவ போன் பண்ற மினிஸ்டர் இவளை மாதிரித்தானே இருப்பான்! என்கிட்டே ஒரு கேரக்டர் உண்டு. இம்மாரல் பசங்களுக்கு மட்டும் எந்த காலத்திலும் நான் பயப் பட்டது கெடையாது! அது என்னைப் படைச்ச கடவுளாவே இருந்தாலும் சரி, டோண்ட் கேர்! அஞ்சவே மாட்டேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் என் அப்பாவோட முதல் வாரிசு…!” 

“எண்ணெய்த் தடவியது போதுமா ?”

“போதாதும்மா… காயம் ரொம்ப டீப்!”

“என்னாலதான் பாஸ் உனக்குக் கஷ்டம்…” 

“சேச்சே ! இதெல்லாம் ஒரு கஷ்டமா? ஆனா ரோஸி… உன் முகத்துக்காகத்தான் அவளை அப்படியே விட்டு விட்டேன். இல்லே, அவளோட ஒடம்பு இன்னிக்கி விறைச்சிப் போயிருக்கும்…” 

“அதையெல்லாம் மறந்திடு பாஸ்…” 

“அப்பலே மறந்தாச்சு! ஆனா, ஒண்ணே ஒண்ணை மட்டும் நீ மறந்திடாத, அவகிட்ட நீ கவனமாக இரு. இல்லே. இந்த வீட்டை விட்டு வெளியேறிடு. ஓர் ஆஸ்டல்ல சேந்திடு. இவ எதுக்கும் துணிஞ்சவ. ஒன்னை என்ன வேணும்னாலும் பண்ணிடுவா…” 

”பாஸ் நான் ஒண்ணு சொல்லட்டுமா?”

“சொல்லு!” 

“நான் ஒனக்கு மட்டும் தானாம்! என்னை நீ மேரேஜ் பண்ணிக்கப் போறியாம்… எல்லார்கிட்டேயும் ஸீலி இப்படித்தான் சொல்லி வச்சிருக்கு…” 

“ஓஹோ! இப்படி டீல் பண்றாளா, அவளோட பசங்களை? பரவால்ல. அவனுங்களை நல்லா மிஸ்-லீட் பண்ணி வச்சிருக்கா! அதான். ஒன்னை இங்கே காப்பாத்துது. ஆனா அது வந்து ஒன்னை மிஸ்-லீட் பண்ணிடக்கூடாது… என்ன டார்லிங்?” 

“நீ என்ன சொன்னாலும் கேக்கறேன் பாஸ்…”

“கொஞ்ச நாளைக்கு நீ வேலைக்குப் போயிட்டிரு. எப்படியும் இன்னும் ஆறு மாசத்ல நானும் சுகந்தாவும் கல்யாணம் பண்ணிடுவோம். அப்புறம் ஒனக்கும் ஒரு நல்ல பையனா பார்த்து ஆபட்ஸ்பரியில் வச்சி உன் கல்யாணத்தையும் நடத்தி, ஜோரா ஹனிமூனுக்கு ஒன்னை உங்க அம்மா இருக்கற லண்டனுக்கே அனுப்பி வைக்கிறேன், போதுமா?'” 

மழையைக் கண்டதும் விசிறி வாழையாக விரியும் மயில் தோகை போல. ரோஸ்மேரியின் கண்களில் ஆனந்தத் தோகை விரிந்தது. 

“நான் என் மம்மியைப் பார்த்து டென் ஹியர்ஸ் ஆயிடுச்சி பாஸ்!” 

”ஏன், என்ன ஆச்சு உங்க மம்மிக்கு?”- எசகு பிசகாகக் கேட்டு விட்டேன். 

“அது வந்து பாஸ்…”-ரோஸ்மேரியின் முகமும் குரலும் மாறிப் போயின… 

“வேணாம்மா… வேணாம்… வேணாம் : சோகக் கதைகளே வேண்டாம் எனக்கு! ஹார்டெல்லாம் ரொம்ப வீக்காயிடுச்சி…” 

அன்று ரோஸ்மேரியின் அறையிலேயே தூங்கிப் போனேன். 


மறு நாள் காலை விடிவதற்கு முன்பாகவே ஸீலியா என்னிடம் வந்து நேற்று இரவு நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டாள். அதற்காக நான் அவளை மன்னித்து விட்டேன். ஆனால், ரோஸ்மேரியின அறியாமையை என்னை நோக்கித் தவறாக செலுத்த அவள் எடுத்த முயற்சிக்கு மட்டும் ஸீலியாவை நான் மன்னிக்க மறுத்தேன். கறை படாத ஒரு சிறுமியின் மனத்தைப் பாழ்படுத்த நினைத்தால் அந்த ஒரு பாவமே ஸீலியாவின் வாழ்க்கையைச் சுட்டுப் பொசுக்கி விடுமென்று அவளைப் பலமுறை எச்சரித்தேன். இது அவளுக்கு மட்டுமல்ல ; எந்தப் பெண்ணையுமே தவறாகச் செலுத்துதிற எவருக்குமே நிர்மூலமே முடிவென்றும் சொல்லி அவளைப் பயமுறுத்தினேன். ஸீலியா பதில் ஏதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். 

மாம்பலம் போய் உடை மாற்றிக்கொண்டு ஆபிஸ் வந்த போது மணி பதினொன்று. என் முகத்திலிருந்த காயங்களை எல்லாரும் கேட்டார்கள். ஒருவரிடம் பூனை பிறாண்டி விட்டது என்றேன். இன்னொருவரிடம் எலி பிறாண்டி விட்டது என்றேன். ஆனால், யாரும் நான் சொன்னதை நம்பியதாகத் தெரியவில்லை. 

“சார், மிஸ் சுகந்தா ரெண்டு தடவை போன் பண்ணினாங்க”. – கண்ணன் சொன்னான். 

“எதுவும் சொன்னாங்களா?” 

“வந்ததும் உங்களை ரிங் பண்ணச் சொன்னாங்க…” 

உடனே ரிங் பண்ணினேன். வேறு வேலை? 

“குட் மார்னிங் ராம்ஜி…” 

“குட்மார்னிங் சுகந்தா. வந்ததும் ரிங் பண்ணச் சொன்னியாம்… எதுவும் விசேஷமா?” 

“ரொம்ப விசேஷம். எங்க கௌசல்யாவுக்கு மேரெஜ்!” 

பளீரென ஒரு கதவு என் எதிரில் திறந்து கொண்டாற் போலிருந்தது! கருமேங்கள் கலைந்து ஆகாயம் தெரிவது போலிருந்தது. எனக்கும் சுகந்தாவுக்கும் மணமேடைக்கு மணக்கால் ஊன்றி விட்டாற் போலிருந்தது! 

என் உணர்வுகளில் நாதஸ்வரம் ஒலித்தது. வாழை மரங்கள் தெரிந்தன. கல்யாணப் பந்தி மணம் வீசியது. தாலி மணிகள் கோத்த பொன் சரடு தொங்கியது, மணக் கும் பட்டுப் புடவையில் என் மனைவியாய் சுகந்தாலின் அழகுருவம் பளிச்சிட்டது. இந்த உணர்வுக் குவிப்பு அனைத்துமே கண்களில் ஆனந்தக் கண்ணீராக அரும்பித் தத்தளித்தது. 

“சந்தோஷம் தானே ராம்ஜி?” 

“சாதாரண சந்தோஷமா? இங்கே வந்து பார் கண்ணம்மா. கண்ல தண்ணி வந்திடுச்சி… ரொம்ப சந்தோஷம் டார்லிங். ரொம்ப ரொம்ப சந்தோஷம்… கல்யாணத்துக்கு டேட்டெல்லாம் ஃபிக்ஸ் ஆயிடும் சாம்மா?” 

“டேட் இன்னும் ஃபிக்ஸ் ஆகலை. மேரேஜ் அநேகமா செப்டம்பர் மாதம் தான் இருக்கும். ஆனா, நிச்சயதார்த்தம் நெக்ஸ்ட் வீக்…” 

“வரதட்சணை எல்லாம் பேசி முடிச்சிட்டாங்களா?”

”எல்லாம் முடிஞ்சது ராம்ஜி…” 

“ஒங்கப்பா போட்டு வச்சிருந்த பட்ஜெட்டுக்குள்ள முடிஞ்சிடுச்சா, மேலே போயிடுச்சா?” 

“ரொம்ப மேலே போயிடுத்து. என்னோட பணம் வேற த்ரீ தவுஸன் தரேன்னு ஒத்துண்டிருக்கேன்…” 

“குடு குடு. பாவம், ஒங்கப்பா; அவரும் எவ்வளவு தான் சமாளிப்பார்?” 

“அப்பாவுக்காக கெடையாது. எங்க கௌஸிக்காக…” 

“கௌஸிக்காக எவ்வளவு பணம் வேணும்னாலும் நீ குடு. ஒனக்கு நான் தரேன்… சரி, ஒங்க அக்கா கல்யாணத்துக்கு நான் வரலாமா?” 

“நீங்க வராமலா ராம்ஜி? முதல் இன்விடேசன் உங்களுக்குத்தான்!” 

“ரைட்! அப்ப இன்னிக்கு ஈவினிங் மீட் பண்ணுவோம்”. 

“ஓயெஸ்…!”

“வச்சிரட்டுமா?”

“ஓயெஸ்…!” 

ரிஸீவரை வைத்தேன். பெரும் தேக்கம் திறந்து விடப்பட்டு விட்டது. ஓர் இரும்புக் சுதவு உடைந்து வீழ்ந்துவிட்டது. இனி தமிழரசியின் திருமணம் என்ற சிறிய கதவுதான். அதுவும் வீழ்ந்துவிட்டால் எங்கள் சாம்ராஜ்யம்தான், எங்கள் ஆட்சிதான். இருபத்து நான்கு மணி நேரமும் எங்கள் காதல் களியாட்டம்தான்.

“மிஸ்டர் வைத்யலிங்கம்…” – பலத்த குரலில் கூப்பிட் டேன். வந்தார். 

“எனக்கு ஓர் ஐயாயிரம் ரூபாய் பணம் வேணும். இருக்கா?” 

“இருக்கு சார்!” 

“புத்தம் புது நோட்டாப் பாத்து எண்ணி எடுத்திட்டு வாங்க…!” 

“இதோ எடுத்திட்டு வரேன் சார்…” 

”ஜல்தி!” 

சலவை நோட்டுகளாக வந்த பணத்தை அள்ளி பாக்கெட்டில் திணித்துக் கொண்டு மறுநிமிஷம் ஆபீஸி லிருந்து கிளம்பி விட்டேன்.

– தொடரும்…

– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.

– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *