அது ஒரு நிலாக்காலம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

சுகந்தா பங்களூர் போய் விட்டாள் என்ற உணர்வுடன் பொழுது விடிந்தது. குளித்து விட்டு பங்களூர் பற்றிய செய்திகளை பேப்பரில் ஆர்வத்துடன் படித்தேன். மனம் படிப்பில் லயிக்கவில்லை. எனக்குள் ஸீலியா ஜேஸ்மின் பற்றிய நினைவு ஒரு நீர் மூழ்கிக்கப்பல் போல மிக ஆழத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது ! பேப்பரைத் தூக்கி எறிந்து விட்டு ஆபீஸ் புறப் பட்டேன். பஸ் ஸ்டாப்களில் நின்ற பெண் களை யெல்லாம் ‘நீங்கள் என் சுகந்தா அல்ல’ என்ற செருக்கோடு, சிசுரெட்டில் சாம்பலைத் தட்டி உதிர்கிற அலட்சியத்தில் பார்வை யாலேயே உதிர்த்து விட்டு மாம்பலம் ஸ்டேஷனை நோக்கி நடநதேன்.
தன்னுடைய ஸ்டீல் பீரோவை டெலிவரி எடுக்க ஸீலியா, ஆபீஸுக்கு வந்திருந்தாள். என்னைக் கண்டதும் எழுந்து “குட்மார்னிங் பாஸ்!” என்றாள்.
“குட் மார்னிங்!”
சொல்லி விட்டு என் அறைக்குச் சென்றேன். நாற்காலி யில் அமர விருப்பமில்லாமல் சில விநாடிகள் நின்று கொண்டிருந்தேன் சற்று எலும்புத் தூக்கலாகத் தெரியும் ஸீலியாவின் கன்னம் என் உணர்வுகளைத் தொந்தரவு செய்தது, யோசித்தபடியே உட்கார்ந்தேன். ஒரு பெண்ணை அடைகிற உன்மத்தம் என் புஜங்களில் வியாபித்துப் பரவியது. சிகரெட்டைப் பற்ற வைத்துக் தொண்ட போது ஸீலியா கதவைத் திறந்து கொண்டு, “மே ஐ கமின் ஸார்?” என்றாள்.
“யெஸ், கமின்…”
நன்றி சொல்லி என் எதிரில் உட்கார்ந்தாள். நான் வேண்டுமென்றே.
”ஓகே. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… பார்க்கலாம்” என்றேன்.
“ஓகே சார்… ஸியூ.”
‘”ஸி யூ…”
“இன்னொரு நாள் என் வீட்டுக்கு நீங்க வரணும்!” என்றாள் ஒரு தூண்டில் போடுகிற தொனியுடன், பார்வையுடன்…”
ஒரு கணம் எனக்கு அவளுடைய அறையின் கட்டில் சட்டத்தில் பார்த்த அவளின் உள்ளாடைகள் நினைப்பில் வந்து போயின!
“ஓயெஸ்… கண்டிப்பா வரேன்…!”
“ப்யூட்டிஃயுல் ரிக்கார்ட்ஸ் வச்சிருக்கேன். கண்டிப்பா நீங்க அதையெல்லாம் கேட்கணும்…”
“கண்டிப்பா கேக்கறேன்!”
“தாங்க்யூ வெரி மச்..
ஸீலியா சென்ற பிறகு தறுமணம் அறையில் பரவி இருந்தது. ஒரு சாதாரண உரையாடல் என்ற தோற்றத்தில் ஸீலியா ஏதோ பேரம் நடத்திவிட்டுப் போகிறாள் என்பது என்னுடைய இளமைக்கு இம்சையாக இருந்தது. ப்யூட்டி ஃபுல் ரிக்கார்ட்ஸ் வைத்திருக்கிறாளாம். கண்டிப்பாக நான் கேட்க வேண்டுமாம்! அதற்குத்தானே நான் பிறந்து வளர்ந்திருக்கிறேன்! பிறந்து வளர்ந்திருக்கும் அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமா வென்று கொஞ்சம் சோம்பலுடன் நினைத்துப் பார்த்தேன்.
திரும்பத் திரும்ப அன்று முழுவதும் இந்த விஷயத்தைக் கிளறிக் கிளறிப் பார்த்தேன்! கடைசியில் கிளறுவதற்கு இனி ஒன்றுமே இதில் இல்லையென்ற தீர்மானம் தான் வந்தது! மனைவி என்ற ஸ்தானத்துக்கு சுகந்தாதான் என்று நிச்சயித்துப் பல மாதங்களாகிவிட்டன. அந்த நிச்சயத்துக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ பெண் களைச் சந்திக்கவில்லையா? அதேபோல், சுகந்தாவுக்குப் பிறகு ஒன்றிரண்டு பெண்களைச் சந்திக்க வேண்டாமா?
மதியம் ஒரு மணிக்கே புறப்பட்டு என்னுடைய அறையை அடைந்தேன்.
தியாகராய நகர் சரோஜினு தெருவில் ஒரு பெரிய வீட்டின் மாடியில் சிறிய அறை ஒன்றில் நான் தனியாகத் தங்கியிருந்தேன்.
அறையைத் திறந்தபோது ஒரு பக்கச்சுவர் முழுவதும் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருந்ததை ஆயாசத்துடன் பார்த்தேன். கட்டிலை ஒட்டிய ஷெல்ஃபில் வரிசையாக்கப் பட்டிருந்த இசைத்தட்டுக்களை ஓய்வின்மையோடு கவனித்துக் கொண்டே இருந்தேன். அந்தப் புத்தகங்களிலும் சில இசைத் தட்டுக்களின் பின்னணியிலும் படிந்திருக்கிற காதல் அநுபவங்களைக் கட்டிலில் சாய்ந்தபடி நினைத்துப் பார்த்தேன். மிகப் பல காதலர்களின் வாழ்க்கையில் சோகம்தான் கனமாக எஞ்சிப் போயிருந்தது மனத்தை உறுத்தியது. ஏதேனும் ரூபத்தில் எனக்கும் சுசுந்தாவுக்கும் இடையே துயரம் வந்து நுழைந்து விடுமோ என்ற சன்ன மான பயம் வந்தது. அருகில் இருந்த இசைத்தட்டை எடுத்தேன். பித்தோவன்! சுசுந்தாவை வருடுகிற மயக்கத் தில், அந்த இசைத்தட்டின் அகன்ற உறையைத் தடவிக் கொண்டிருந்தேன், பித்தோவனை, காதல்தான் மிகமிகச் சந்தோஷத்திலும், அதே காதல்தான் மிகமிகத் துக்கத் திலும் ஆழ்த்தியதாம்.
காதலின் ஆனந்தத்தை அள்ளித் தெளிக்கிற பித்தோ வனின் சிம்பனி பிஃப்ளாட் இசைக்கோவையின் சுநாதம் அறையில் நீர் ஊற்றாகத் தெறிக்கத் துவங்கியது. அதன் ஒவ்வொரு துளியிலும் பித்தோவனின் காதல் பெண் ஆஸ்திரிய ராஜரீக தெரஸே தெரிந்தாள். காதல் போதை யும் இசை மயக்கமும் ஒன்றாக என்னை மொய்த்தன. ரோமியோ ஜூலியட் காவியத்தின் ஆளுமையில் இசை அவதியுற்று ஓர் இசை கனபரிமாணத்தைத் தொடுத்த ஷைக்காவ்ஷ்கியை எடுத்தேன் அவள் இல்லாத வாழ்க்கை வெறுமையானதேயென்று கண்ணீர்விட்ட அவனை வெள்ளமாகக் கண்ணீரைக் கொட்ட வைத்து வேறொரு வனை மணந்து விலகிக் கொண்ட அந்த டெஸிரியை நினைத்தேன். காதல் அநுபவங்கள் சோகத்திலேயே முடிந்து போயிருந்த உண்மை என்னைக் கவலைப்படுத் தியது. கொஞ்சம் பயப்படச் செய்தது.
அந்தக் கவலையும் பயமும் பின்னால் உண்மையாகலே நிகழ்ந்து ஒரு வீழ்த்தப்பட்ட பறவையாக நான் தனிமை கொண்டிருந்தபோது என் துக்கத்தின் இழப்பின் எதிரொலியாகத்தான் மொஸார்ட்டின் ஜி மைனர் சிம்பனி எனக்கு ஒலித்ததென்றால் அது மிகையில்லை…
அவசரமாக இரண்டு விரற்கடை கருஞ்சிவப்புத் திரவத்தைக் குப்பியில் சுச்சாவாக ஊற்றிப் பருகினேள். மறுகணம் வாழ்க்கை சூடாகியது! பங்களூரில் சுகந்தா தூங்கிக் கொண்டிருப்பாளென்று நினைத்தேன். அருகில் அவள் இல்லாத வெறுமையை இட்டு திரப்பிக் கொள்கிற சன்னமான ஏக்கத்துடன் பீரோவைத் திறந்தேன். என்னுடைய ஷர்ட்டுகளுக்குக் கீழ்ப் பத்திரமாக வைத்திருந்த சுகந்தாவின் மென்மையான ஃபுல்வாயல் புடவையைத் தன்னிரக்கத்துடன் எடுத்தேன். காதலுடன் முகத்தில் ஒற்றிக் கொண்டேன். கட்டிலில் சாய்ந்து புடவையை மார்பில் பரப்பிக் கொண்டேன்! சுகந்தாலின் புடவை என்னிடம் வந்து சேர்ந்த சம்பவம் மனத்தில் திரவச் சித்திரமாகத் தளும்பத் துவங்கியது…
“அதென்னமா அது, பெரிசா பேப்பர் பொட்டலம்?”
“ஒண்ணுமில்ல சுவாமி ! என்னோட ஸாரி…”
“ஸாரியா? ஆபீஸ்க்கு எதுக்கு எடுத்துட்டுப் போனே? மத்தியானத்துக்கு மேலே ஆபீஸ்லயே வேற ஒரு புடவை மாத்திக்க ஆரம்பிச்சிட்டியா?”
சுகந்தா பலமாக என்னைக் கிள்ளி விட்டுச் சொன் னாள்; ‘”ச்சீ! புத்தி போறதே உங்களுக்கும்! ஜானகி ஒரு நாள் சினிமாவுக்குப் போறச்சே என்னோட இந்த ஸாரியை ஒரே ஒரு தடவை கட்டிட்டுத் தரேன்னு கேட்டா, சரின்னு குடுத்தேன். இன்னிக்கு அதை ஆபீஸ் வரச்சே கொண்டு வந்து குடுத்துட்டா… அதான்…”
எனக்கு கோபம் வந்தது: “உங்களுக்கெல்லாம் மண்டையில் ஏதாச்சும் மூளை கீளை இருக்கா? ஒருத்தர் யூஸ் பண்ற துணியை இன்னொருத்தர் யூஸ் பண்ணலாமா?
சுகந்தா பயந்து போய்ச் சொன்னாள்: “ஸாரி ராம்ஜி! ஜானகிதான் கேட்டா ரொம்ப ஆசையா….”
“கேட்டா குடுத்துடறதா?”
“ஸாரி…! முடியாதுன்னு சொல்ல முடியலை…”
“நோ, யார் கேட்டாலும் நீ முடியாதுன்னுதான் சொல்லணும் ! தெரியுதா?” சசுந்தாவை மிரட்டினேன்.
“சரி ராம்ஜி!”
“நீ என்னோட வுட்பி! ஞாபகம் வச்சிக்க, உன்னோட துணி எதையும் எந்தக் காரணத்தாலேயும் எவ கட்றதுக்கும் குடுக்கக்கூடாது! அது எனக்குப் புடிக்கவே புடிக்காத விஷயம். புரியுதா ? எப்படி நீ எனக்கு மட்டும் சொந்தமோ அதே மாதிரி உன்னோட புடவைகளும் எனக்குத்தான் சொந்தம்! பி கேர்ஃபுல்…”
கொஞ்சம் காதல் பூர்வமாக இவ்விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததும் சுசுந்தா என்னைச் செல்லமாகக் கிள்ளிலிட்டுச் சொன்னாள்: “யப்பா ! ஒரே பொஸஸ்ஸிவ்!”
“நீ கிள்றதா இருந்தாக்கூட என்னை மட்டும்தான் கிள்ளணும்!”
”அப்படியா! வசமா ஒரு நாள் கிள்ளி வச்சா அப்போ தெரியும்.”
“சரி, ஜானகி புடவையை நல்லா வாஷ் பண்ணிக் குடுத்திருக்காளா இல்லே சும்மா அவிழ்த்த உடனே வாரிச் சுருட்டி எடுத்திட்டு வந்துட்டாளா?”
“விடுங்களேன் அந்த மேட்டரை!”
”அதைத் தெரிஞ்சுக்காம வுடமாட்டேன் சுகந்தா!”
“வெறும் த்ரீ அவர்ஸ்தானே கட்டியிருந்தா!அதனால் வாஷ் பண்ணலை.”
“கட்றது ஓசி! இதுல வாஷ் பண்ணாம வேற தரா! சரி; என்கிட்ட குடு, நான் என்னோட துணிகளைப் போடற லாண்டரியில போட்டு ஜோரா வாஷ் பண்ணி ப்ரெஸ் பண்ணித் தரேன்!”
சுகந்தாவின் முகம் சங்கோஜத்தால் சிவந்து விட்டது “நீங்க ஒண்ணும் வாண்ட்ரில கொண்டு போய்ப் போட வேணாம்! சும்மா இருந்தா போறும்” என்றாள்.
“குடுன்னா குடுத்திடு! எடுத்திட்டுப் போய் நானா வாஷ் பண்ணப் போறேன்! லாண்ட்ரிலதான் போடப் போறேன்.’
”அதான் வேண்டாம்ங்கிறேன்!”
“நீ மட்டும் இன்னிக்குப் புடவையைக் குடுக்காம போயீடு… பார்க்கலாம்.”
“கஷ்டம் கஷ்டம்! இந்தாங்கோ”-தலையில் அடித் துக் கொண்டே தந்தாள்.
அன்றைக்கு வாங்கி வந்த அந்தப் புடவையை லாண்ட்ரியில் போட்டுச் சலவை பண்ணிப் பத்திரமாக என்னுடைய பீரோவுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு. லாண்ட்ரிக்காரன் புடவையைத் தொலைத்து விட்டா னென்று சுசுந்தாவிடம் பொய் சொல்லிலிட்டேன்.
சுகந்தா அதை நம்பிவிட்டாள். மிகமிக வருத்தப் பட்டாள். ஜோரான புடவையைப் படுபாவி லாண்ட்ரிக் காரன் தொலைத்து விட்டானேயென்று அழுதேவிட்டாள். எனக்குக்கூடக் கண்ணம்மாவை ஏமாற்றுகிறோமே என்று கஷ்டமாகத்தான் இருந்தது. விளையாட்டுக்காக அப்படிச் சொன்னதாகச் சொல்லி மறுநாள் கொண்டு போய்க் கொடுத்து விடலாமா என்றுகூட நினைத்தேன்… ஆனால், மனம் ‘இருக்கட்டும்-கல்யாணத்துக்கு அப்புறம் திடீரென்று ஒரு நாள் அவளை அசரவைத்து விடலாம்’ என்று கணக்குப் போட்டது! லாண்ட்ரிக்காரனை உதைத்துப் புடவைக்கு உரிய பணத்தை வாங்கி விட்டதாக உபரியாக ஒரு பொய்யைச் சொல்லி என்னுடைய பாக்கெட்டிலிருந்து பணத்தை எண்ணிச் சுகந்தாவிடம் கொடுத்துவிட்டேன். பொய் அதோடு முடியவில்லை. சுகந்தாவின் வீட்டில் விஷயத்தைச் சொல்ல வேண்டுமே! அதற்காக வேறொரு பொய். புடவையை ஜானகிதான் தொலைத்து விட்டதாக; அதற்கு அவள் உடனே பணம் தந்து விட்டதாக…!
இந்தப் புடவை விளையாட்டை நினைக்க நினைக்க சுகந்தாலின் மேல் எனக்குள் இருந்த காதல் பொங்கி வழிவது போலிருந்தது! புடவையை அவளாக நினைத்தபடி முத்தமிட்டேன். புடவையை அவளாக நினைத்து அணைத்துக் கொண்டேன்…இறுதியாக, சுகந்தாவாக நினைத்து ஸீலியாவைக் கட்டித் தழுவிக் கொண்டால் என்னவென்ற ஒப்பீட்டைக் கருஞ்சவப்புத் திரவம் உணர்வுக்குள் விதைத்துப் பார்த்தது. விதை முளைக்க ஆரம்பித்து விடும் போல் தெரிந்தது!
மறுபடியும் மனம் சஞ்சலித்தது. மேலும் சிறிது கருஞ் சிவப்புத் திரவத்தைப் பருகினேன். படிப்படியாக எனக்குள் கிரஹணம் பிடிக்கத் துவங்கியது. என்னுடைய சில பெருமைகளுக்கு சுகந்தா ஏற்றவள் போல என்னுடைய சில சிறுமைகளுக்கு ஸீலியா ஜேஸ்மின் வேண்டியிருந்தான்!
மறுநாள் ஆபீஸ் போனதும் பன்னிரெண்டு மணி அளவில் ஸீலியா பணிபுரியும் நிறுவனத்துக்குடெலிபோன் செய்தேன். சில நிமிடங்களில் ஸீலியா கிடைத்தாள்.
“நெஜமாகவே மிஸ்டர் ராம்குமார், நீங்கதானா பேசறது?”
-ஸீலியாவின் பரவசம் அவளின் குரலில் ஒலித்தது.
“ஏன், ராம்குமார் உங்களுக்கு போன் செய்து பேசக்கூடாதா?”
“நோ நோ,ரொம்ப சர்ப்ரைஸா-இருக்கு-அதனால் அப்படிக் கேட்டேன்,”
“ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்து ரிக்கார்டஸ் கேக்கணும் ஸீலியா! ம்யூஸிக்ல எனக்கு ரொம்ப ரொம்ப இண்ட்ரெஸ்ட் உண்டு. என்னிக்கி வரலாம் சொல்லுங்க?”
“இன்னிக்கு ஈவினிங் வாங்க ராம்குமார்…”
“இன்னிக்கு ஈவினிங் எனக்கு வேற ஒரு அப்பாய்ன்ட் மெண்ட் இருக்கே…”
“நோ நோ. உங்க அப்பாய்ன்ட்மெண்ட்டையெல்லாம் கேன்ஸல் பண்ணிடுங்க…!”
“அப்படியா?”
“ஃபைல் தர்ட்டிக்கு கரெக்டா வந்திடுங்க! நான் வெயிட் பண்றேன்.”
“அப்படியா?”
“கண்டிப்பா நீங்க வந்துதான் ஆகணும்!”
“சரி, உங்க இஷ்டம்…”
“நாட் ஒன்லி தட். நைட் என் வீட்ல நீங்க டின்னர் சாப்பிட்டுத்தான் போகணும்!”
“அப்படியா?”
“ஆமா…”
ரிஸீவரை வைத்ததும் என் புலன்கள் அனைத்தும் மிகக் கூர்மையாக இயங்கத் துவங்கின. என்னருகில் ஒற்றையாக ஒரு நீக்ரோ இளைஞன் இடைவிடாமல் ‘பேங்கோஸ்’ வாசிப்பது போலிருந்தது. ஒரு ரம்மியமான மிதமான வர்ணம் கொண்ட கொசுவலைக்குள் நான் அமர்ந்திருப்பது போலிருந்தது! என்னுடைய இயல்பில் இது ஒரு விநோதம்-கொசுவலைக்குள் பிரவேசித்தாலே எனக்குள் பாலுணர்வு தளும்பத் தொடங்கிவிடும்!
மாலை குளித்து நன்றாக உடை அணிந்து கொள்ள பீரோவைத் திறந்த போது சுசுந்தாலின் புடவை கண்களை நெருடியது. புடவையைக் கண்டு கொள்ளாமல் ஒரு ஷர்ட்டையும் பேண்ட்டையும் எடுத்து அணிந்து கொண்டேன். மெண்டெல்ஸோன் இசைத்தட்டுகள் இரண்டை எடுத்துக் கொண்டு போர்ட்டிகோவில் நின்ற என் ஸ்கூட்டரைப் பார்த்தபடியே மாம்பலம் ஸ்டேஷனை நோக்கி நடந்தேன்…
செயின்ட் தாமஸ் மவுண்ட்டின் மாறுபட்ட கலாசாரம் படிந்திருந்த பல வீடுகளின் கூரைகளைக் கண்டு கொண்டே மிக மெதுவாக நடந்து அழகிய கொசுவலை போல் தெரிந்த ஸீலியாவின் வீட்டுக்குள் – வாசலில் அவள் நின்று வரவேற்க – நான் நுழைந்தேன்…
அன்றைக்கு ஸீலியாவின கவனம் மிக்க கவர்ச்சிகரமான அலங்கரிப்பு, என்னை வசீகரிக்கத்தான்! அன்றைக்கு அவளுடைய அறை மிகத் துல்லியமாகச் சுத்தப்படுத்தப் பட்டிருந்தது. என் மனத்தைத் திருப்திப் படுத்தத்தான்! பக்குவம் தவறாமல் கோழியின் துடைகள் போதுமான சுவையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது, என்னைச் சாந்தப் படுத்தத்தான்! நான் சாந்தமாகி விட்டேன்! தேவைக்கும் மேலாகவே திருப்தியடைந்து விட்டேன்!
உணவுத் தயாராகிப் பரிமாறித் தானும் சாப்பிட்ட பின் ஸீலியாவின் ஆண்ட்டி என்ற வயோதிகப் பெண்மணி, பட்ரோட்டில் இருந்த வேறொரு உறவினர் வீட்டில் இரவு படுத்துக் கொள்கிற வழக்கத்தில் இரவு எட்டரை மணி அளவில் புறப்பட்டுச் சென்று விட்டது! இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஓர் அழகான தாமரைக்குளத்தின் கரையில் தாமரைப் பூ ஒன்றைப் பார்த்தபடி தனியாக உட்கார்ந்திருப்பது போலிருந்தது!
அப்படி உட்கார்ந்திருக்கிற போது எனக்குத் தாமரைப் பூவின் மேல் கல் எறிய வேண்டும் போலிருக்கும்! ஆசை என்ற கல்லை ஸீலியாவின் மேல் எறிய என்னுடைய உணர்வுகள் தயாராகிக் கொண்டிருந்தன. ஆஷாபுத்லியின் ஆங்கில கானத்தைச் சன்னமாக ஒலிக்க விட்டப்படி ஸீலியாவின் அசைவுகளும் கதி மாறிக் கொண்டிருந்தன. நடனமாடிக் கொண்டிருந்த அவளைக் கண்ட படி நான் எழுந்து நின்றேன். ஸீலியாவின் கொஞ்சம் வற்றிப் போன வாசனை மிக்க தோள்களை ஒரு ஆக்டோபஸ் போல் பற்றியபோது – வாசல் மணி ஒலித்தது! சட்டென்று கொசுவலை அறுந்து விழுந்தாற் போலிருந்தது!
ஸீலியா எரிச்சலுடன், “யார் அது?” என்ற பலத்த குரலில் கேட்டாள்.
“நாகராஜ்!” – பதிலும் உரக்கவே வந்தது.
ஸிலியா வெறுப்புடன் வேகமாகப் போய்க் கதவைத் திறந்தாள்.
“நான்தான் இன்னிக்கி உன்னை வரவேண்டாம்னு கண்டிப்பா சொல்லிருந்தேனே!” – ஸீலியா.
“ஏன் வரவேண்டாம்னு சொன்னேன்னு தெரிஞ்சிட்டுப் போகத்தான் வந்தேன்! யார் உள்ள?” – வந்த ‘நாகராஜ்’ குரல்!
அறைக்குள் குற்றவாளி போல நின்று கொண்டிருக்க என் மனம் ஒப்பலில்லை! உள்ளே நிற்பது நான்தானென்று கூறி வெளிப்படவும் மனம் விரும்பவில்லை. ஆனால், எதையும் எதிர் நோக்க நான் தயாராகி விட்டேன்.
“குன்னூர்ல இருந்து கெஸ்ட் வந்திருக்குது நாகராஜ். ஸாரி!”
ஸீலியா பரவாயில்லை. என்னை மாதிரிதான் அவளும் ஜோராகப் பொய் பேசுகிறாள்!
நாகராஜ் மிகவும் கிண்டலாகக் கேட்டான்: “குன்னூரா, உள்ளூரா?” ஸீலியாவிடமிருந்து பதில் இல்லை.
“இன்னொரு நாள் வந்து ஒன்னைக் கவனிக்ற விதத்ல கவனிச்சிக்கிறேன்” – படாரென்று கதவு சாத்தப்படும் சப்தம் கேட்டது. எனக்குள்ளும் திறந்து கொண்டிருந்த ஒரு கதவு படாரென்று சாத்திக் கொண்டது! சிறிது கூட யோசிக்காமல் அந்தச் கொசு வலையை விட்டு வெளியேறி விட்டேன்! ஸீலியா என்னென்னவோ சமாதானம் சொன்னாள்; கெஞ்சினாள்; திரும்பத் திரும்பக் கெஞ்சினாள். என் உணர்வுகள் மறுத்தது மறுத்ததுதான்! தோட்டத்துக் கதவின் அருகில் வந்தும் என் கையைப் பற்றிய ஸீலியாவின் கைகளை உதறிவிட்டு, இருள் கவிந்திருந்த தெருவில் கிண்டி ரயில்வே ஸ்டேஷனை நோக்கி மிக வேகமாக நடந்தேன்.
நடக்க நடக்க எனக்குள் உச்சத்தை அடைந்திருந்த சினம், என் அறைக் கதவைக் காலால் உதைத்துத் திறந்து கட்டிலில் விழுந்து சிறிது நேரத்துக்குப் பிறகே குறையத் துவங்கியது. சிறுமை உணர்வுகள் அத்தனையும் ஆவியாகிப் போயிருக்க பீரோவைத் திறந்து என் சுகந்தாவின் புடவையை எடுத்துக் கட்டிலில் பரப்பி முகம் புதைத்துக் கொண்டேன்!
அத்தியாயம் – 5
மறு நாள் கண்டிப்பாக ஸீலியா எனக்கு டெலிபோன் செய்வாளென்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது பலிக்கவில்லை. இந்த ஏமாற்றம் கூட என் அகங்காரத்தைத் தாக்கியது. உடனே எனக்கு ஸீலியா போன் செய்ய வேண்டும்! அன்று நடந்த சம்பவத்துக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! மறுபடியும் கண்டிப்பாக நான் அவளின் வீட்டுக்கு வந்தே ஆகவேண்டுமென்று அவள் கெஞ்ச வேண்டும்! அதெல்லாம் முடியாது என்று நான் அவளைத் தூக்கியெறிந்து பேச வேண்டும். உடனே அதற்கு அவள் டெலிபோனில் அழவேண்டும். அவள் அழ அழ ரிஸீவரை நான் தடாலென்று வைத்துவிட வேண்டும்…!
என்னுடைய இந்தச்சிறிய ஆசை நான்காவது நாள் தான் பலித்தது! ஆனால், ஸீலியா கெஞ்ச கெஞ்ச அவளைத் தூக்கியெறிந்து பேசவில்லை நான். அவள் அழ அழ நான் ரிஸீவரையும் தடாலென்று வைத்து விட வில்லை!
“ஹலோ ஸீலியா…! அன்னிக்கு நடந்ததில என் நெலைமையில் இருத்தா நீங்க எப்படி ஃபீல் பண்ணியிருப்பீங்க சொல்லுங்க?”
“தப்புத்தான் பாஸ்.”
“மறுபடியும் எப்படி என்னால உங்க வீட்டுக்குள் வர முடியும் – சொல்லுங்க!”
“நீ அப்படிச் சொல்லக் கூடாது பாஸ்! அந்த ஈவெண்ட்டை மறந்து மறுபடியும் என் வீட்டுக்கு நீ வந்தாத்தான் என் மனம் சமாதானம் ஆகும்.”
“என் மனசுக்கு இன்னும் சமாதானமாகலையே ஸீலியா!”
“எனக்கு ஒரே ஒரு சான்ஸ் தா பாஸ்! கண்டிப்பா உன் மனசை நான் சமாதானம் பண்ணிடுவேன்!” என்றாள்.
எனக்கும் மனம் சமாதானம் ஆக வேண்டும் போலிருந்தது! நான் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுச் சொன்னேன்:
“நீ வேற யார் கிட்டேயும் எவ்வளவு நன்றிக் கெட்டத்தனமா வேணும்னாலும் நடந்துக்கலாம். ஆனா, என்கிட்டடே நீ அப்படி நடந்தே… அந்த நிமிஷமே உன்னோட நட்பை கட் பண்ணிடுவேன்…”
“அந்த நிலமையே உனக்கு வராது பாஸ்.”
”ரைட்! அப்ப இன்னிக்கு ஈவினிங் உன் வீட்டுக்கு வரேன்- ஆனா. டின்னர் கின்னரெல்லாம் ஆகாது. சும்மா கொஞ்ச நேரம் உன் கூடப் பேசிட்டு இருந்துட்டு கிளம்பிடுவேன்…!”
“ஒரு சின்ன ரிக்வெஸ்ட் பாஸ்…”
”சொல்லு…”
“குன்னூர்ல என் தங்கை இருக்கு…”
“பேரு?”
“ரோஸ்மேரி பாஸ். அவளுக்கு நீ உன் சிபாரிசுல ஒரு ஜாப் வாங்கித் தரணும்…”
“என்ன படிச்சிருக்கா?”
“ஸ்கூல் ஃபைனல்தான். டைப்ரைட்டிங் தெரியும். ஆனா அது கொஞ்சம் இன்னஸென்ட்! ரொம்ப சைல்டிஷ். ஸாம் டைம்ஸ் ஹிஸ்டிரிக்கல்…! நீதான் அதுக்கு ஹெல்ப் பண்ணணும்…”
”பண்றேன். முதல்ல லெட்டர் போட்டு அவளை மெட்ராஸ் வரச் சொல்லு. ஒரு மாசத்துல கிண்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்லேயே ஏதாவது ப்ரைவேட் யூனிட்ல வேலை வாங்கிடலாம்…”
“ரொம்ப தேங்க்ஸ் பாஸ். அப்ப ஈவினிங் சீக்கிரமா வந்திடு பாஸ்…”
“சீக்கிரமா வந்துட்டு சீக்கிரமாவே போயிடுவேன் சரியா?”
“சரி பாஸ்…”
ரிஸீவரை வைத்தபோது அன்றைய தபால்கள் வந்தன. என் தங்கை தமிழரசியின் கடிதத்தை முதலில் பிரித்துப் படித்தேன். இருபது நாள்களில் அவளுடைய பிறந்தநாள் வருவதை நினைவு படுத்தி எழுதியிருந்தாள். பிறந்த நாளுக்கு வழக்கம் போல ஒரு பட்டுப் புடவை வாங்கித் தரவேண்டும் என்பதையும் எழுதி அதன் கீழ் கோடிட்டிருந்தாள். உடனே காலண்டரைப் புரட்டி, தமிழரசியின் பிறந்த நாளுக்கு நான்கு தினங்கள் முன்பாகவே பெரிய குளம் போகத் தேதியைக் குறித்துக் கொண்டேன். மாலை ஐந்தரை மணிக்கு மறக்காமல் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்தேன்.
“உன்ன மிரட்டிட்டுப் போனானே நாகராஜ்னு ஒருத்தன்… வந்தானா மறுபடியும்?”
“நேத்திக்கு வந்தான்!”
“மறுபடியும் வகுவானா?”
“இன்னிக்கு வரமாட்டான்.”
“ஸீலியா… எனக்கொரு விஷயம் தோணுது… சொல்லட்டுமா?”
“சொல்லு பாஸ்!”
“நீ கொஞ்சம் சரியில்லேன்னு தோணுது எனக்கு! சம்திங் ராங் வித் யூ!” என்றேன்.
ஸீலியா மௌனமாக இருந்தாள். சில நிமிஷங்கள் கழித்துக் கேட்டாள்: “எப்படி சொல்றே பாஸ்?”
“அளவுக்கு மிஞ்சி நீ செண்ட் யூஸ் பண்றதை வச்சிச் சொல்றேன்! சரிதானா நான் சொல்றது?”
ஸீலியாவின் முகத்தில் லேசாக வருத்தம் வந்து போனது. சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்: “நீ சொல்றது சரிதான் பாஸ்!”
“முதல் தடவை நான் இங்கே வந்திருந்தப்ப நீ சொன்னே – உன்னோட டாடி இப்ப உயிரோட இல்லைன்னும் உன்னோட மம்மி லண்டன்ல இருக்கறதாகவும், அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன், தெரிஞ்சுக்கறேன்…”
”அது ரொம்ப க்ரூயல் ஸ்டோரி பாஸ். எனக்கும் சரி, என்னோட யங்கர் சிஸ்டர் ரோஸ்மேரிக்கும் சரி; குடும்பம்னு சொல்ற ஒரு ஃபௌண்டேஷன், வாழ்க்கையிலே இல்லாம போச்சு பாஸ்! ஃபாதர்னு சொல்ற செக்யூரிட்டியும் இல்லை. மதர்னு சொல்ற அஃபெக்ஷனும் இல்லை. இதனால எங்க இன்செக்யூரிட்டியும் வேற வேற விதத்துலே எங்களை அஃபெக்ட் பண்ணிடுச்சி, ரோஸ்மேரியைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஸார்ட் ஆஃப் ஹிஸ்டீரியா மாதிரி வந்துடிச்சி. அவளால தனியா இருக்கவே முடியாது. எப்பவும் அவகூட யாராவது பக்கத்ல இருக்கணும். யாரும் இல்லேனா பயப்படுவா… என்னோட ப்ராப்ளம் வேற மாதிரி! சொல்லிடட்டுமா அதையும். சொன்னா என்னை நீ மோசமா நெனைக்கக் கூடாது…”
“நீ சொல்லப் போறது எவ்வளவு மோசமான விஷயமா இருந்தாலும் அதுக்காக ஒன்னை மோசமா நெனைக்கமாட்டேன், சொல்லு.-”
ஸீலியா உரிமையுடன் எனக்கு மிக நெருக்கமாக வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“எந்த விஷயத்லேயும் எனக்குள்ள ஒரு அப்நார்மல் மஸி வந்திருச்சி பாஸ். எது மேலேயும் எனக்கு ஒரு அடிக்ஷன் மாதிரி! எத்தினி ரிக்கார்ட் வாங்கறேன் பார். அப்படியும் திருப்தி கிடையாது! எத்தினி ட்ரெஸ் வாங்கறேன்… பர்ட்டிகுலர்லி ப்ரா! சொன்னா நீ நம்பமாட்டே பாஸ், ரியலி ஹண்ட்ரட் ப்ரா வச்சிருக்கேன்! ஒரு வாரம் புதுசா ப்ரா வாங்காம இருந்தா போச்சி – தலை வெடிச்சிப் போறாப்பல இருக்கும். ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா ஆயிடுவேன்! அதே மாதிரிதான் செக்ஸும்! அதுலேயும் நான் ஒருவித அடிக்ட்.”
மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு ஒரு வாசனை மிகுந்த இளம் பெண், தன்னைப் பாலுறவு மோகம் கொண்டவள் என்கிற கலவரமான உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்பதை, ஓர் இளம் வாலிபன் கேட்டுக் கொண்டிருப்பது எத்தனை துர்பாக்கியமான அபாயம்?
ஒரு முடிவுக்கு வந்தவனாக, திடீரென்று நான் புறப்படுவதற்கு எழுந்தேன்.
“அப்ப நான் வரட்டுமா ஸீலியா?”
“நாளைக்கு வா பாஸ்!”
“நாளைக்கு என்னால் வரமுடியாது…”
“நாளைக்கு மறுநாள்…?”
“அன்னிக்கும் முடியாது. பங்களூர் போயிருக்கிற என் டார்லிங் வந்திடுவா – அவ வந்திட்டா அவளைப் பாக்கறதுக்குப் போயிடுவேன்…”
ஸீலியாவின் கண்களில் பாவனை மாறியது. என் ஷர்ட்டில் கழண்டிருந்த ஒரு பட்டனைச் சரி செய்தபடியே கேட்டாள்: “டார்லிங் மீன்ஸ்?”
”மை வுட்பி!”
ஸீலியா ஒருவிதத் தன்னிரக்கத்துடன் என்னை மெலிதாக அணைத்தபடி கேட்டாள்: “உன் வுட்பி நேம் என்ன பாஸ்…?”
“சுசுந்தா…!”
“லக்கி வுமன்…!”
“சரி, நீ மறந்திடாம உன் சிஸ்டர் ரோஸ்மேரிக்கு லெட்டர் எழுது – உடனே அவளைப் புறப்பட்டு வரச் சொல்லி. பத்துப் பதினைஞ்சி நாள்லேயே அவளுக்கும் கிண்டியிலேயே ஒரு வேலை பாத்துடலாம்.”
“நாளைக்கே எழுதிர்றேன் பாஸ். ஆனா, உடனே ரோஸி கிளம்பி வர நீதான் ஹெஃப் பண்ணணும்…”
”என்ன பண்ணணும் சொல்லு? டயமாகுது…”
“ஹண்ட்ரட் ரூபீஸ் தா பாஸ், அதை ரோஸிக்கு மணியார்டர் பண்ணிட்டா அது வர்றதுக்கு ஈஸியா இருக்கும்..!”
ஒரு கணம் ஸீலியா என்னிடம் பணம் கேட்டது கொஞ்சம் விகல்பமாக இருந்தாலும், தயங்காமல் பணத்தை எண்ணி அவளிடம் கொடுத்தேன். நன்றி சொல்லி வாங்கிக் கொண்டாள்.
“பாஸ், நீ மார்னிங் கூடப் போகலாம்!” என்றாள். மீண்டும் கைகளால் என் கழுத்தைப் பின்னியபடி.
“இல்லை ஸீலியா. ப்ளீஸ்! நான் போகணும்.” ஆனாலும் ஸீலியாவின் கைகள் என்னைவிட்டு விலகி கொள்ளவில்லை. கண்கள் என் கண்களை விட்டு நீங்க வில்லை. ஸீலியாளின் மிகப் பெரிய வாயின் சாயம் பூசப்பட்ட உதடுகள் உலர்ந்து ஒரு தேவையுடன் சற்றே பிரிந்தன. ஸீலியாவின் கைகள் என் பிடரியை அழுத்தித் தாழ்த்த முயன்றன. சில விநாடிகள் என் மனம் முரண்டு பின் இணங்கியது. ஒரு பெண்ணிடம் விடை பெற்றுக் கொள்ளும்போது, அவளுடன் முத்தம் பகிர்ந்து கொள்வது உறவின் அன்பான வெளிப்பாடு தான் என்ற இலக்கணத்தில், ஸீலியாவின் உதடுகளுக்கு என்னுடைய உதடுகள் பணிந்துவிட்டன.
அடுத்த சில நாள்கள் ஸீலியாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். என் அபிமான எழுத்தாளன் லாரென்ஸ் நினைப்பும், அவனின் படைப்புகளும் ஞாபகத்தில் வந்து போயின. ஹென்றி மில்லரின் சில பாலுணர்வுச் சொற்றொடர்களும் வன்முறைகளும் நினைவில் தோன்றின. வக்ரத்தன்மை கொண்ட ஸீலியாவுடன் அவ்வுறவு எனக்குச் சாத்தியம் தானா என்ற யோசனை வந்தது. சீக்கிரமே என் சுகந்தா பங்கழூரி லிருந்து வந்து விட்டால் நல்லது என்று மனம் எண்ணியது. என்னிடம் ஸீலியாவுக்கு எது தேவைப் படுகிறதோ அதை அவளுக்கு அளிப்பது ஒரு மனிதாபிமானம் தான்! ஒரு வேளை என் மனிதாபிமானத்தின் வெளிப்பாடுகளை அவள் துஷ்பிரயோகம் செய்ய நேர்ந்தால் அப்போது என்னைக் கத்தரித்து அவளை நிராகரித்து விடலாம்.
தொடர்ந்து ஐந்து நாள்கள் புத்தகங்கள் படித்துக் கொண்டும், இசையில் லயித்த படியும் என் ஓய்வு நேரத்தை நான் தனிமையிலேயே கழித்தேன். ஒவ்வொரு நாளும் ஸீலியா மட்டும் எனக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தாள். சுசுந்தாவிடமிருந்து வரப் போகிற செய்தி குறித்து லெட்டரும் இல்லை. வந்து சேர்ந்து விட்டதாக போன் அறிவிப்பும் இல்லை. எரிச்சலுடன் நானே ஒரு நாள் ரிங் பண்ணினேன்:
“ஹலோ!”
“…!”
யாரோ ஆண் குரல்,
சிறிது கோபத்துடன் கேட்டேன்: ”மிஸ் சுசுந்தா இல்லையா?”
“நீங்க யார்?” – இந்தப் பதில், கேள்வியின் தொனியிலேயே தெரிந்து விட்டது ஆள் வந்து சேர்ந்திருப்பது…!
“சுகந்தாவோட ஃபாதர்!” – சிறிதும் தயங்காமல் சொன்னேன்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். அவங்க ஸீட்ல இல்ல – இதோ கூப்பிடறேன்…”
சுகந்தாவின் குரலை வரவேற்க நான் உல்லாசமாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன். இரண்டு நிமிட நிசப்தத்துக்குப் பின் வளையல்களின் அரவம் கேட்டது…
“அப்பா…!”
நான் பேசாமல் இருந்தேன்.
“அப்பா…கூப்பிட்டேளா?”
‘”ஏய்…!”
சுகந்தா குரல் சிறிது தயங்கியது, “ஹலோ…! பேசறது யாரு?”
”உங்க அப்பன்!”
“ராம்ஜி, நீங்க தானா?”
”என்னிக்கு வந்தே? போய்ச் சேர்ந்து ஒரு லெட்டர் கூட எழுதலை. திரும்பி வந்து கல் மாதிரி ஆபீஸ்ல உக்காந்துக்கிட்டே. போன் போடாம வேற இருக்கே. என்னம்மா விஷயம், ஆளை மறந்திட்டியா?”
“இன்னிக்கு மார்னிங்தான் ராம்ஜி வந்தேன். வந்ததும் போன் பண்ணணும்னு நெனைச்சேன். ஒரே பிஸி…”
“சரி, ஸீட்ல இல்லாம எங்கே போனே?”
“பி. எம். ரூம்ல ஒரு சின்ன டிஸ்கஷன். அப்புறம்… பங்களூர்ல இருந்து உங்களுக்காக ஒண்ணு வாங்கிண்டு வந்திருக்கேன்.”
“வெரிகுட் வெரிகுட்! இந்த மாதிரி யாராவது எனக்கு ஏதாச்சும் ஓசியா வாங்கித் தந்தா ரொம்ப இன்ட் ரெஸ்ட்டா இருக்கும். சரி, என்னம்மா வாங்கிட்டு வந்திருக்கே?”
“சஸ்பென்ஸ்!”
“உன் சஸ்பென்ஸ் என்னன்னு ஈவினிங் தெரிஞ்சிட்டுப் போகுது – ஈவினிங் வருவேல்லியா?”
“வராம?”
மாலை ஐந்து பதினைந்து. இருவரும் மெரீனாவில் உழைப்பாளர் சிலைக்கு நேர் பின்னால் மணலில் உட்கார்திருந்தோம்
“ஸோ, பங்களூருக்கு என்னை வுட்டுட்டு நீ மட்டும் தனியா ஜம்னு போயிட்டு வந்திட்டே சரி; எனக்கு என்னவோ பங்களூர்ல இருந்து வாங்கிட்டு வந்திருக்கிறதா சொன்னியே…என்ன அது, காட்டு பார்க்கலாம்…”
சுசுந்தா அவளுடைய ‘பேக்’கிலிருந்து முதலில் ஒரு சிவப்பு வர்ணப் பெட்டியை எடுத்தாள்.
“பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்கோ பார்க்கலாம்…?”
“பெட்டியைப் பார்த்ததுமே தெரிஞ்சி போச்சு என்னன்னு!”
“என்ன?”
”நிரோத்!”
சட்டென்று சுகந்தாலின் முகம் சிவந்து விட்டது. “இப்படியெல்லாம் பேசினா நான் எழுந்து போயிடுவேன்…”
“சும்மா தமாஷ்ம்மா…”
“தமாஷா? கர்மம்? நாக்கை இழுத்து வச்சு ஒருநாள் அறுத்தா தெரியும்…”
“சரி, பெட்டியைத் திறந்து நீயே காட்டிடேன்- என்னன்னு…”
சுகந்தா என் முகத்தைப் பார்த்துக் கொண்டே பெட்டியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்தாள்
பெட்டியில் இருந்தது ஓர் அழகிய மான்கொம்பு போன்ற பொக்கோ பைப்! ஓர் அழகான உறையில் பதப் படுத்தப்பட்ட புகையிலை! எனக்குள் வார்த்தையால் விவரிக்க முடியாத உணர்வுகள் மன, உடல் ஆழத்திலிருந்து பொங்கிச் சிலிர்த்தது என்றே சொல்லலாம். என் மேல் அவளுக்கு இருக்கும் காதலில் என்னுடைய புகை பிடிக்கிற கம்பீர சுபாவத்தைக் கூட எத்தனை பெண்மையுடன் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
சுகந்தாவின் கையில் இருந்த பெட்டியைப் பெற்று மணலில் வைத்து விட்டு, நன்றியுடன் மென்மையான அவளின் கையைப் பற்றிக் கொண்டேன். பரவசத்துடன் அவளின் புறங்கையில் நான் தந்த முத்தத்தைச் சில விநாடிகள் ஒப்புக்கொண்டு அவள் கையை விலக்கிக் கொண்டாள். நாணத்தோடும் சந்தோஷ உணர்வோடும் மையலுடன் சுகந்தாவின் கண்கள் என்னை நோக்கின. என் பார்வையில் தெரிந்த புதியதொரு உணர்வைக் கண்டு அதுவரை அவளில் நான் பார்த்திராத வேறொரு நாணம் உடல் பூராவும் வந்து மொய்த்து விட, கண்களைத் தாழ்த்தியபடி மணலில் ராம்ஜியென்ற என் பெயரை எழுதிக் கொண்டிருந்தாள். அந்த காதல் வெளிப்பாட்டை வெறுமே கண்டு கொண்டு மட்டும் அமர்ந்திருக்க முடியாமல், மீண்டும் என் கைவிரல்கள் தவிப்புடன் அவளின் கையைப்பற்றிக் கொள்ள முயன்றதை சுகந்தாவின் கைகள் சம்மதிக்க வில்லை.
“ப்ளீஸ், வேணாம் ராம்ஜி…!”
“இல்லை சுசுந்தா, ஒரே ஒரு கிஸ் – உன் கைல !”
“ப்ளீஸ், வேணாம் ராம்ஜி!”
“ப்ளீஸ், ஒரே ஒரு தடவை”
சுகந்தா பேசாமல் இருந்தாள்.
“என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்க வேண்டாமா சுசுந்தா?”
மௌனமாகவே இருந்தாள். அந்த மெளனம். பெண்மைக்கே உரிய சம்மதமாகக் காணக் கிடந்தது.
தளிர் போன்ற சுகந்தாவின் கையைப் பற்றி முத்தமிட்டு என் எச்சலை நன்றாகத் துடைத்துவிட்டேன். மறுகணம் எங்கள் இருவரிடையேயும் மூண்டிருந்த உணர்வின் இறுக்கம் தளர்ந்து இருவரும் சமனமானோம்….
“யப்பா…! முடிஞ்சுதா உங்களோட நன்றி?” – அவளும் ஒருவிதமான நன்றியுடன் தான் கேட்டாள்.
“இப்போதைக்கு முடிஞ்சது!”
சுகந்தா மீண்டும் சிறிது நாணம் கொண்டு என்னைச் செல்லமாகக் கிள்ளினாள்.
அத்தியாயம் – 6
நான் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டேன். அட்டைப் பெட்டிக்குள் இருந்த பைப்பை எடுத்தேன்.
“என்ன விலை இது”
“அது என்னத்துக்கு உங்களுக்கு?”
“சும்மா ஓர் ஆசை தான்! நம்ம ஆள் நமக் காக எவ்வளவு செலவு பண்ணியிருக்காள்னு பார்க்கத்தான்?”
“நன்னாயிருக்கா?”
“கன ஜோர்! அது சரி; இதை எப்படி அவ்வளவு டேரிங்கா – ஒரு கல்யாணமாகாத பொண்ணு ஒரு கடையில போய்க் கேட்டு வாங்கினே…?”
“எங்க எம்.டி. பைப் ஸ்மோக் பண்றதைப் பார்த்திருக்கேளே…! எனக்கு சில தீங்ஸ் வாங்கிக்கறத்துக்காக ஷாப்பிங் போயிருந்தேன். அப்போ ஷோ பாக்ஸில் இந்த மாதிரி ஏழெட்டு பைப்ஸை டிஸ்ப்ளே பண்ணி வச்சிருந்தான் கடைக்காரன். உங்க ஞாபகம் வந்தது – வாங்கி உங்களுக்கு ப்ரஸென்ட் பண்ணணும்னு தோணித்து, உடனே வாங்கிட்டேன்…”
“சரி, பைப் வாங்கினே. டுபாக்கோ எப்படி செலக்ட் பண்ணினே?”
“கடைக்காரனே நாலைஞ்சி வெரைட்டீஸ் காட்டினான். நீங்க எப்பவும் கோல்ட்ஃளேக்தானே ஸ்மோக் பண்ணுவேள். ஆனா கோல்ட் ஃளேக் இல்லை – சரின்னு இந்த ப்ளேயர்ஸ் வாங்கினேன். ராம்ஜி, பைப்பை பத்த வையுங்களேன் பார்க்கலாம்…”
“பத்த வைக்கிறதுதான் பெரிய பேஜார், உறிஞ்சி உறிஞ்சி எச்சிலா வரும் கொஞ்ச நாளைக்கு. நாக்கு தொண்டையெல்லாம் எரியும்….”
வெகு நேரம் முயன்றும் காற்று அதிகமாக இருந்ததால் பைப்பைப் பற்ற வைக்க முடியவில்லை.
“மேரேஜுக்கு அப்புறம் நீங்க பைப்தான் ஸ்மோக் பண்ணணும்..”
“நீ சொல்லியாச்சின்னா அதுக்கு அப்பீல் ஏது? ஆனா ஒண்ணு – பைப் குடிக்கிறதா இருந்தா அதுக்கு முன்னாடி மொதல்ல ஒரு கார் வாங்கணும். கார்லதான் பைப்! சும்மா தெருவுல பைப் அடிச்சிக்கிட்டுப் போனா – அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறான்னு கண்டவனும் பேசுவான்…!”
“ரொம்பத்தான் திமிர்!”
“ஒன்னை மாதிரி ஒரு கண்ணம்மா இந்த மாதிரி பைப்பெல்லாம் வாங்கித் தந்தா திமிர் வராம என்ன செய்யும்? சரி, ஒரு வாரத்துக்கு சிகரெட் கிடையாது. பைப்தான். ஆனா, வரும்போதுதான் சிகரெட் ரெண்டு பாக்கெட் வாங்கினேன். தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்க மாட்டேன்.”
”வேணாம்னா சிகரெட் பாக்கெட்ஸை என்கிட்ட தந்திடுங்கோ…”
“எதுக்கு?”
“சும்மாதான்! என் பேக்லேயே வச்சிருக்கேன்! ஒங்களுக்கு வேணும்ங்கற சமயத்ல ஒவ்வொண்ணா எடுத்துத் தரேன்..”
“வேணாம் வேணாம். சிகரெட் உன் பேக்ல இருக்கறதை யாராவது பார்த்துட்டா?”
“ஒருத்தரும் என்னோட பேக்கைத் தொடக்கூட மாட்டா!”
“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு!”
”என்ன சந்தேகம்?”
“டாய்லெட்டுல உட்கார்ந்து சிகரெட் குடிச்சி பார்க்கப் போறியோன்னு!”
“ச்சீ! அப்போ வேணாம். நீங்களே எடுத்திட்டுப் போங்கோ…”
“இல்லை இல்லை. சும்மா தமாஷ். தாராளமா எடுத்துட்டுப் போ…”
“தேங்க்ஸ்…”
மிகவும் முயற்சி செய்து பைப்பைப் பற்ற வைத்துக் கொண்டேன். அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது. “ஆமா, காலையில் நான் ஒனக்கு போன் பண்ணப்ப பிராஞ்ச் மானேஜர் ரூம்ல ஏதோ டிஸ்கஷன்னு சொன்னியே… நான் தான் சொல்லியிருக்கேனே – அந்தப் பய ருமுக்குள்ளல்லாம் போகக் கூடாதுன்னு… எதுக்காகப் போனே?”
“நன்னாயிருக்கே நீங்க சொல்றது…ஆபீஸ் மேட்டர் கூட அவரோட பேசப்படாதா?”
“அதுக்கப்புறம் அவன், கோத்திரம் கீத்தரம்னு ஏதாவது பேச்சை எடுத்தானா?”
“எடுப்பாரா? எடுக்க முடியுமா அவரால்?”- சுசுந்தா நெஞ்சை நிமிர்த்தியபடி கேட்டாள்.
அந்த மிகச் சிறிய உப நினைவை சுகந்தாவின் நேர்மைக்கும் தைரிய சுபாவத்துக்கும் அத்தாட்சியாக இங்கே நினைத்துப் பார்க்கலாம்…
சுகந்தா பணிபுரிந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் இருந்தது. அங்கே உதவி மானேஜராகப் பணியாற்றிக் கொண்டிருந்த 32 வயதான ரெங்கராஜன் மானேஜராக பதவி உயர்வு பெற்று சென்னைக் கிளைக்கு மாற்றலாகி வந்தான். வந்து சேர்ந்த அன்றைக்கே சுகந்தாவைப் பார்த்து மனம் பிரமித்துவிட்டது அவனுக்கு. திருமணத்துக்காகப் பெண் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு, சுகந்தாவும் தன் குலத்தில் பிறந்தவள் என்பதை அறிந்ததும் இனிய அதிர்ச்சியாக இருந்தது உடனே அவள் மேல் காதலாகி விட்டான். சுற்றி வளைத்துப் பேசி அவளின் கோத்ரமும் தெரிந்து கொண்டான். போதாதா? ஒரே குலம், வேறு வேறு கோத்ரம்! ரெங்கராஜனுக்குத் தன் ஒருதலைக் காதல், கல்யாணத்தில் மங்களமடையப் போவதாக மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது.
தன்னுடைய அப்பாவின் மூலம் சுகந்தாவின் அப்பாவை அணுகி, தனக்கு அவளைப் பெண் கேட்டான் – வரதட்சணை ஒரு பைசா கூட வேண்டாமென்ற பெரிய மனசோடு. சுகந்தாவின் அப்பாவுக்கு, ரெங்கராஜனுக்கு சுகந்தாவை மணம் செய்து கொடுப்பதில் துளிக்கூட ஆட்சேபணை இல்லை. ஜாதகங்கள்கூடப் பொருந்தி இருந்ததாம்! ஆனால், ஒரே ஒரு நெருடல், இன்னும் சுகந்தாவின் அக்கா கௌசல்யாவுக்கே திருமணமாகாமல் இருக்கிறது. முதலில் அந்தக் கல்யாணம் முடிய வேண்டும். அப்புறம் இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லி விஷயத்தை ஒத்தி வைத்து விட்டார்.
இந்த விஷயத்தில் சுகந்தாவின் அப்பா துரைஸ்வாமி ஒரு தவறு செய்து விட்டார். சுசுந்தாவிடம் அவளுடைய மானேஜருக்கு அவளைப் பெண் கேட்டார்கள் என்ற விஷயத்தை அவளிடம் சொல்லி விட்டார். தன் மேல் மானேஜருக்கு இந்த அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. என்பதைத் தெரிந்த பின் ஒரு பெண் எத்தனை தர்ம சங்கடத்துடன் ஆபிஸில் வேலை பார்க்க நேரிடும் என்பதை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. இதை ஒரு நாள் சுகந்தா என்னிடம் சொல்லி விட்டாள். எனக்குப் பயங்கரமான கோபம் வந்து விட்டது.
”ஓங்கப்பாவுக்கு மண்டையிலே மூளையே கெடையாதும்மா! என்னமோ ரெங்கராஜன் அவனோட அப்பா கிட்ட சொன்னானாம். அதை வந்து இவருதன் பொண்ணு கிட்ட சொன்னாராம். இன்னும் முதல் பெண்ணுக்கே முடியலை. அப்புறம் தான் இந்தக் சுல்யாணம்னு கரெக்டா அவன்கிட்ட பதில் சொல்றதவிட்டு அறிவு கெட்டத்தனமா உன் கிட்ட வந்து வாயைப் பிளந்து கிட்டு ஏன் உங்க அப்பா இப்படியெல்லாம் சொல்றார்? உங்கப்பா தலையிலே மூளை தான் இருக்கா; இல்லே ஏதாவது களிமண் இருக்கா?”
“எங்க அப்பாவைத் திட்டாதீங்கோ!”
“உதைக்கணும் அந்த ஆளை! என் வாயில கெட்ட கெட்ட வார்த்தையாத்தான் வருது! பெத்த தகப்பன் பண்ற வேலையாம்மா இது?”
“ப்ளீஸ்…!”
“என்ன ப்ளீஸ்? அறைஞ்சிருவேன் ஒன்னையும் சேத்து: நீ வேலைக்குப் போனதெல்லாம் போதும். பேசாம ரிஸைன் பண்ணு. நாளைக்கே கட்ன புடவையோட கிளம்பி வந்திரு. இம்மீடியட்டா ஏதாவது ஒரு கோயில்ல வெச்சி ஒனக்குத் தாலியைக் கட்டிடறேன். அப்புறம் வர்ற விஷயங்களை அப்புறம் பார்ப்போம். கொஞ்சம் ஏமாந்தா அயோக்கியப் பசங்க ஒன்னைத் தூக்கிட்டுப் போனாலும் போயிடுவானுங்க…!”
“ப்ளீஸ்… ராம்ஜி ஏன் இதுக்குப்போய் இவ்வளவு ஆத்திரப் படறேள். இப்போ என்ன ஆயிடுத்து?”
“என்ன ஆயிடுச்சா? ஆபீஸ்ல அந்தப் பயலை எப்படியம்மா ஃபேஸ் பண்ணுவே நீ – இந்த மாதிரி அவனோட மனசில ஓர் ஆசை இருக்குன்னு தெரிஞ்ச அப்புறமும்?”
“அவரோட ஆசை அவருக்குள்ளே, எனக்கென்ன ராம்ஜி?”
“திடீர்னு மனசு தாங்காம அவனோட ஆசையை ஒன்னைத் தனியா ஒரு நாள் கூப்பிட்டுச் சொல்லிட்டான்னா அப்ப என்ன பண்ணுவே?”
“எனக்கு அவர் கிட்ட ஆசையில்லேன்னு சிம்ப்பிளா சொல்லிடுவேன்…”
“விடமாட்டானே! ஒன்னோட மானேஜர் ஆச்சே.. ஏன் ஆசையில்லைன்னு திருப்பிக் கேப்பானே?”
“ஏன்னாக்கா! நான் வேற ஒத்தர்கிட்டே ஆசை வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு கம்னு இருந்திடுவேன்…”
நான் நிதானத்துக்கு வந்து விட்டேன்.
“என்ன ராம்ஜி…இதெல்லாம் பெரிய விஷயமா எனக்கு. ஜாதி விட்டு ஜாதில ஒங்களை மேரேஜ் பண்ணிக்கிறதா நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு. இந்த ரெங்கராஜன் வந்து என்னை என்ன பண்ணிட முடியும் இனிமே? நூறு ரெங்கராஜன் வந்தாலும். நான் ஒங்களுக்குத்தான். இந்த ஒரு விஷயத்ல மட்டும் என்னை இனிமே யாரும் எதுவும் செஞ்சிட முடியாது, போதுமா?”
அன்று என் கண்களில் கலங்கித் தளும்பிய நீர் என்னுடைய நன்றிக் கடன் அன்றி வேறென்ன ?
அந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்கள் கழித்து ரெங்கராஜன் தாங்க முடியாமல் சுகந்தாவைத் தனியாக அழைத்துத் தன் மனத்தைத் திறந்து காட்டி விட்டான். சுகந்தா தயங்காமல் கண் இமைக்காமல் அவனுடைய காதலை ஏற்க மறுத்து, “ஸாரி சார். ஆல்ரெடி ஐம் எங்கேஜ்ட்…” என்று தைரியமாக ரெங்கராஜனை எதிர் நோக்கி அவ்விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.
“பாவம் ராம்ஜி. ரெங்கராஜன் அழுதுட்டார்….நான் அப்படிச் சொன்னதும்.”
“நல்லா அழட்டும். ராஸ்கல் ! ஆபீஸ்ல மானேஜர் வேலை பார்க்க வந்தானா; வேலை பார்க்கற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேக்கறதுக்கு வந்தானா? இனிமே என்னிக்காவது மறுபடியும் இதைப்பத்தி வாயைத் தொறந்தான்னா சொல்லு; சுட்டுப் பொசுக்கிடறேன்….”
“அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டார்…”
“ஒனக்குத் தெரியாது. ஆம்பளைப் பயல்களுக்கு சூடு சொரணையே கெடையாது ! மறுபடியும் என்னிக்காவது லேசா வாலை ஆட்டிப் பாப்பானுங்க, சான்ஸ் கெடைச்சா…”
“அதெல்லாம் ஒண்ணும் வராது… வந்தா நான் பார்த்துக்கறேன்… நீங்க பயப்பட வேண்டாம்…”
அந்த ரெங்கராஜன் என்ற மானேஜரின் அறைக்குள் தான் இவள் ஒரு டிஸ்க்ஷனுக்காகப் போயிருந்தாள்!
“எதுக்கும் ஜாக்ரதையா இருந்துக்க !”
“ஓயெஸ்….”
“ஸோ! பங்களூர் போய் வந்துட்டே – இப்ப என்னோட சிகரெட் பாக்கெட்ஸை எடுத்திட்டு போகப் போறே?”
“யெஸ்…”
“என்னோட சிகரெட் பாக்கெட்ஸை ஏன் உன்கிட்ட வெச்சுக்கணும்னு ஒனக்குத் தோணுதுங்கறதைக் கொஞ்சம் ஸைக்கோ அனலைஸிஸ் பண்ணிப் பார்ப்போமா?”
”ஐயையோ! வேணவே வேணாம். உங்க ஃப்ராய்ட் சைக்காலஜின்னா எனக்கு ஒரே அலர்ஜி!”
“சரி விடு! கெளசல்யா கல்யாண விஷயமா உங்கப்பா ஏதாவது வரன் கிரன் பார்க்கறாரா? இல்லே செக்ரடேரியட்ல ஃபைல் பார்க்கறேன்னு சொல்லிட்டு தூங்கி வழிஞ்சிக்கிட்டிருக்காரா?”
“அலைஞ்சிதான் பார்க்கறார். சரியான ஜாதகமா எதுவும் காணோம்.”
“நீங்க என்ன கோத்ரம் ?”
“ஸ்ரீவத்ஸ கோத்ரம். ஏன், நீங்க போய் ஏதாவது வரன் கிரன் பார்க்கப் போறேளா?”
“நாலு பேர் பார்த்தா தானே நல்லது.”
“உங்க தங்கை தமிழரசி கல்யாணமும் ஒண்ணும் தெரியலையா ராம்ஜி?”
சுவாரஸ்யம் இல்லாம சொன்னேன் : “ஒண்ணும் தெரியலை. சே! இந்த தேசத்ல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுன்னா பெண்ணைப் பெத்தவன் காவடி எடுக்கிறான் ! எத்தனை காவடி எடுத்தாலும் ஒரு பயலுக்கும் புத்தியும் வரமாட்டேங்குது. யாரை வேணுமானாலும் கல்யாணம் செஞ்சுகிட்டு போயிட்டே இருங்கடான்னு அவிழ்த்தும் விடமாட்டேங்கிறான்! செக்குமாடா சுத்றான் கழுத்ல கயிறை மாட்டிக்கிட்டு…”
“இதெல்லாம் சொல்றதுக்கு ஈஸியா இருக்கும் ராம்ஜி.”
“செய்யறதும் ஈஸிதான். ஸ்பெஷல் மேரேஜஸ் ஆக்ட் இருக்கவே இருக்கு. என் பக்கம் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். உன் பக்கம் ரெண்டு ப்ரெண்ட்ஸ். நான் உனக்குத் தாலி கட்டிடறேன். இல்லே, நீ வேணும்னாலும் எனக்குத் தாலி கட்டு! சும்மா ஒன்னை மீட் பண்ணிட்டு பண்ணிட்டு தனியா கிளம்பிப் போறப்பல்லாம் எனக்கு மூடே கெட்டுப் போயிடுது சுகந்தா. அவஸ்தைப்படறேன் நான்”
“நான் மட்டும் சந்தோஷமாவா போறேன்னு நெனைக்கிறேள்?”-சுகந்தாவின் குரல் வித்தியாசமாகியது.
“ஓங்க கௌசல்யா கல்யாணம் எப்ப வேணுமானாலும் நடந்திட்டுப் போகட்டும். அதே மாதிரி எங்க தமிழரசிக்கும் கல்யாணம் எப்ப வேணுமானாலும் நடக்கட்டும் – அதுக்கெல்லாம் காத்திட்டு இருந்தா ஒனக்குத் தலை நரைச்சுப் போயிடும்! எனக்குத் தலை மொட்டையா ஆயிடும்…!”
“அதெல்லாம் ஒண்ணும் ஆயிடாது! எல்லாம் கொஞ்ச நாள்ள நல்லபடியா முடிஞ்சிடும். மொதல்லேயே டிஸைட் பண்ணிண்ட மாதிரி நாமும் உங்க ஊர்ல போய் அட்லீஸ்ட் உங்க பேரெண்ட்ஸ் முன்னாடி ஸிம்ப்பிளா நாம்ம கல்யாணத்தை பண்ணிப்போம்.”
“ஒனக்கென்ன – ரொம்ப ஈஸியா சொல்லிட்டு எழுந்து போயிடுவே? இங்கே மனுஷன் என்ன பாடு படறான்னு ஒனக்கென்ன தெரியும்.”
“எல்லாம் தெரியும்.”
“என்ன தெரியும்…?”
“தெரியும்!”
“தெரியாது ஒனக்கு. தெரிஞ்சா இப்படிப் பேசிட்டுப் பேசிட்டு எழுந்து போயிட்டிருக்க மாட்டே! தெரியுதா?”
நான் என்ன சொல்கிறேனென்று சுகந்தாவுக்குத் தெரிந்துவிட்டது!
“சரி…சரி, வாங்கோ கிளம்பலாம்…!”
“என் ரூமுக்கு வர்றியா?”
“ரொம்பதான் தைரியம்! எழுந்துக்கலாம் – டைம் ஆயிடுத்து. எங்கம்மா சீக்கிரமா வாடின்னா… இப்பவே ஆறரை ஆயிடுத்து.”
நான் ஏக்கத்துடன் கேட்டேன், “அவ்வளவுதானா?”
“அவ்லளவு தான்! கிளம்புங்கோ, கெட்டிங் லேட்-”
“நீ வேணா போ…நான் வரலை…”
சுகந்தாவுக்குக் கோபம் வந்தது. “வெளையாண்டது. போதும் வாங்கோ.”
“நான் வரலை போ…”
“ப்ளீஸ்…வாங்கோ ராம்ஜி. சேந்தே போயிடலாம்…”
“சேந்தே போகணும்னு சட்டமா? ஒனக்கு போகணும்னு தோணுச்சுன்னா எழுந்து போயிட்டே இரு…”
சுகந்தாவின் நாசி விறைத்தது. சிறிது சிவந்தது. “என்னைப் பார்த்து சொல்லுங்க” என்றாள்.
“ஒன்னைப் பார்த்துத்தான் சொல்றேன்! போ- நான் வரலை.”
“ஆல்ரைட்…!”
சுகந்தா எழுந்து நின்றாள், புடவையைச் சரி செய்து கொண்டாள். சில கணங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்லிய குரலில் குட்நைட் சொல்லி விட்டு நகன்றாள். திரும்பிப் பார்த்தேன். தலை குனிந்த படி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். போனால் போகிறாள் என்ற சலிப்பு வந்தது. இரவு சாப்பிட்டு விட்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் போய்விட வேண்டியது தானென்ற வெறுப்பு வந்தது! அயர்வுடன் மணலில் சாய்ந்து படுத்தேன், பாலுணர்வுக் கிளர்ச்சியால் மனமும் உடலும் இம்சைப்பட்டன.
சட்டென என்மேல் நிழல் கவிவது போலிருந்தது. கண்களைத் திறந்தேன். நிலா உதயமாகியது போல், என் சுகந்தாவின் அழகான முகம் என் எதிரில், உயரத்தில், இயல்பான சிரிப்புடன் மலர்ந்திருக்க வாஞ்சையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“வாங்கோ போகலாம்.”
எழுந்து கொள்ளக்கூட முடியாத உணர்வுகளின் ஸ்தம்பிதத்தில் படுத்தே இருந்தேன். நான் எழுந்து கொள்ளும்படி வசதியாக என்னை நோக்கி சுகந்தாலின் கரம் நீண்டது – உணர்வுக் கிலேசம் அத்தனையும் விநாடியில் அணைந்து போக, அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு நான் எழுந்தேன்.
“சுகந்தா, வந்ததுமே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சேன். என் தங்கை தமிழரசியோட பர்த் டே வருது… அதுக்கு ஓர் அருமையான பட்டுப் புடவை எடுத்திட்டுப் பெரியகுளம் போயிட்டு வரலாம்னு இருக்கேன்…”
“கொஞ்ச நாளா ஊருக்குப் போகக் காணோமேனு பார்த்தேன்…”
“புடவை வாங்கப் போறப்ப நீயும் வர்றீயா?”
”வரேன் ராம்ஜி. ஆனா, நீங்க ஊருக்குப் போனா ஒரே வாரத்ல திரும்பிடணும்…”
“நாலே நாள்ல ஓடி வந்திடுவேன்…”
“சரி, ரொம்ப லேட்டாயிடுத்து, எங்கம்மா சுத்துவா, வேகமா நடங்கோ…”
“ஓயெஸ்…!”
– தொடரும்…
– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.
– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.