அதிர்வு





(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பிறேக்கை’ இலேசாகப் பிடித்து, சைக்கிளை ஆமை வேகத்தில் உருளவிட்டு, ஹாண்டிலை நிதானமாய்ப் பிடித்து கால்கள் இரண்டையும் நிலத்தில் பதித்து கைகளிலும், கால்களிலும் நரம்புகள் புடைத்து…. நடுங்க சில வினாடிகள் சீற்றிலிருந்து சைக்கிளைச் சமனிலைப்படுத்தி…. சீற்றிலிருந்து இறங்குகிறான் ஜெயராமன்.
சைக்கிள் கரியலிலுள்ள விறகு கட்டு ஜெயராமனின் தலைக்கு மேலால் உயர்ந்திருக்கின்றது.
சீற்றிலிருந்து இறங்கிய ஜெயராமன் இடது கையால் ‘ஹாண்டி’லை நிதானமாகப் பிடித்து, வலது கையால் விறகுக்கட்டை அணைத்துப்பிடித்து, நெஞ்சோடு சரித்து, சைக்கிளை மெதுவாக நகர்த்தி மதிலோடு சரித்து நிற்பாட்டுகின்றான்.
வறுமையை எதிர்க்க அவன் மேற்கொண்ட தொழில் முயற்சியில் கடந்த இரண்டு வருடங்களாக கற்றுக் கொண்ட அனுபவம்!
நாரியை வளைத்துக் குனிந்து சாறத்தின் கீழ்ப்பகுதியால் முகத்தைத் துடைத்த ஜெயராமன் தலையைத் திருப்பி நிமிர்ந்து நிற்கும் அந்தக் கட்டிடத்தைப் பார்க்கிறான். மேல்மாடிச் சுவரில் எழுதப்பட்டிருந்த பெயரை வாசிக்கிறான்.
‘ரமணன் பதிப்பகம்’
இன்று அதிகாலை தொடக்கம் ஜெயராமன் மனப்பாடம் செய்து கொண்ட பெயர்.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கு ஜெயராமன் வீட்டிலிருந்து விறகு வெட்ட புறப்பட்ட போது அவனது மூத்த மகன் ‘அப்பா… கொப்பி வாங்கக் கன காசு வேணும்… காக்கிலோ கழிவு பேப்பராக வாங்கிக் கொண்டு வாருங்கோ… பிரதான வீதியிலை, ரமணன் பதிப்பகத்திலை தான் வாங்கலாம்’ என்று மிகவும் வேதனையோடு கூறினான். ஒரு கிலோ கழிவு பேப்பரென்று அவன் கூறியிருப்பான். தகப்பனின் பல்லிமுட்டை வருமானத்தை அவன் உணர்ந்திருந்தான். அதனால் தான் காக்கிலோ கழிவு பேப்பரென்று அவன் கூறினான்.
ஜெயராமன் பெரு மூச்சோடு சைக்கிளை உருட்டிக் கொண்டு வர, அவனுக்குப் பின்னால் வந்த அவனது மகள்… வீட்டுப் படலையடியில்…
“அப்பா… காலமை பாணுக்கு மட்டும் தான் காசு கிடக்கு… குசுனியுக்கை உப்புக் கூட இல்லை…” படலையைப் பிடித்தபடி அவள் கூறினாள்.
“ஒண்டுக்கும் யோசிக்காதை… நான் வேளைக்கு வந்திடுவேன்…” ஜெயராமன் வழமை போல் கூறிக்கொண்டான்.
வறுமையால் துரத்தப்பட்டு வறுமையின் எல்லையைத் தாண்டி ஓடி பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டவன் ஜெயராமன். எதையுமே இலகுவாக உள் வாங்கிக் கொள்கும் பக்குவம் மிக்கவன்.
‘ரமணன் பதிப்பக’ வாசலில் அதன் பாதுகாப்பு உத்தியோகத்தரான மகேசன் நிற்கிறான். ஜெயராமன் ஒரு முறை மகேசனை ஏற இறங்கப் பார்க்கிறான்…
மெலிந்த உயர்ந்த தோற்றம், புனிதமான முகம்… மை உறிஞ்சி போல் மகேசனின் குண இயல்பை மேலோட்டமாக ஜெயராமனின் பார்வைக் கோடு உறிஞ்சுகின்றது. மகேசனோடு கதைக்கலாமென்ற துணிவு ஜெயராமனுக்கு ஏற்பட மகேசனை நோக்கி வருகின்றான்.
“கழிவு பேப்பர் எடுக்கலாமா ” ஜெயராமன் மகேசனிடம் கேட்கிறான்.
“ஓம்…”
“ஒரு கிலோ என்ன விலை…”
“நாப்பது ரூபா…”
“அரைக்கிலோ தாறீங்களா…”
“கொஞ்சம் இருங்கோ… முதலாளி வெளியே போட்டார் வந்த உடனே எடுக்கலாம்.” ஜெயராமனின் கேள்விகளுக்குப் பதில் கூறிய படி ஜெயராமனை மிகவம் உன்னிப்பாக அவதானிக்கிறான் மகேசன்.
மகேசனும் பஞ்சப்பட்டவன் பாம்பின் காலைப் பாம்பறியும் என்பார்களே… அது தானோ என்னவோ… ஜெயராமனை மகேசன் இலகுவாக இனங்கண்டு கொள்கிறான். வறுமை வெக்கையில் வறுத்தெடுக்கப்பட்ட ஜெயராமனின் பஞ்சக் கோலம், மை ஒற்றிக் கொள்வது போல் மகேசனின் இதயத்தில் ஒற்றிக் கொள்கிறது.
ஜெயராமன் திரும்பவும் சைக்கிளுக்கருகே வந்து நிற்கிறான்.
கொக்குவில் சந்தியிலுள்ள மரக்காலையில் விறகை விற்று அதன் பின்பு பிரதான வீதிக்கு வந்து கழிவு பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்ட ஜெயராமன் தனது நண்பன் ஒருவரிடம் இருபத்தைந்து ரூபாவைக் கடனாக வாங்கிக் கொண்டு நேரடியாக இங்கு வந்து விட்டான். கழிவு பேப்பரை வாங்கிக கொண்டு கொக்குவில் சந்தியில் விறகை விற்று வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு குளப்பிட்டி வீதியால் வீட்டுக்குச் செல்வது என்பதுதான் அவனது திட்டம்.
“அப்பா… குசுனியுக்கை உப்புக் கூட இல்லை ” காலையில் அவனது மகள் கூறிய வார்த்தைகள் வண்டரிப்பது போல் அவனது உயிர்க் குருத்தை அரித்துக் கொண்டிருக்கின்றது.
மகேசன் ஜெயராமனையே பார்க்கிறான்…
கட்டையான மெலிந்த உள்வளைந்த தோற்றம். குண்டு விழுந்து குருத்துச் சிதறிய தென்னை மரம் போல் வளர்ந்து சரிந்து காதுக்சோணைகளை மறைந்திருக்கும் தலைமயிர், காவி பிடித்த உதடுகள், ஒரு கோடன் சாறம், அழுக்குப் பிடித்த பெனியன்…
மகேசன் பெருமூச்சுவிட்டுக் கொள்கிறான்.
‘ரமணன் பதிப்பகம்’
இப்பகுதியில் மிகப் பிரபல்யமானதொரு பதிப்பகம் இது. இங்கிருந்து வாராந்தப் பத்திரிகை ஒன்று வெளிவருகின்றது. இப்பத்திரிகையின் அளவைக் குறைப்பதற்காக வெட்டப்படும் பேப்பரை இவர்கள் விற்பனை செய்கிறார்கள். மூன்றரை அங்குல அகலமும், இரண்டடி நீளமும் கொண்ட கழிவு பேப்பர்.
பல தேவைகளுக்காக இந்தக் கழிவுப் பேப்பர் வாங்கப்படுகின்றன. உயர்வகுப்பு மாணவர்களும் கணக்குச் செய்து பார்ப்பதற்காகவும் குறிப்பெடுப்பதற்காகவும் இதைப் பயன்படுத்து கின்றனர்.
ஜெயராமனின் மகன் ஏ. எல். வகுப்பு படிக்கிறான். அவனின் படிப்புத் தேவைக்காகவே ஜெயராமனம் இக்கழிவு பேப்பரை வாங்க வந்துள்ளான்.
“முதலாளி வர நேரமாகுமா ?” சில நிமிடங்கள் மெளனமாக நின்ற ஜெயராமன் மகேசனிடம் கேட்கின்றான்…
“எனி வந்திடுவார்”
“அவசரமாகப் போக வேண்டியிருக்கு”
“அப்படி என்ன அவசரம்…”
“விறகை வித்துப்போட்டு… சமையல் சாமான்கள் வாங்கிக் கொண்டு போக வேணும் புள்ளையள் மத்தியானம் ஒண்டும் சாப்பிட்டிருக்காதுகள்…” இப்படிக் கூறிய ஜெயராமன் திரும்பவும் சைக்கிளடிக்கு வந்து நிற்கிறான்.
மகேசன் ஜெயராமனையும் அந்த விறகுக் கட்டையும் பார்க்கிறான். பளையில் விறகைக் கட்டிக் கொண்டு புறப்பட்டால் மாடு வண்டிலை இழுப்பது போல் விறகை இழுத்துக் கொண்டு… எழுது மட்டுவாழ், மிருசுவில், கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி நாவற்குழி வெளிகளைத்தாண்டி… மகேசனின் நரம்புகள் கருகுகின்றன…!
தனது இருக்கையிலிருந்த மகேசன் எழுந்து ஜெயராமன் அருகில் வருகிறான்…!
“ஐயா… எந்த ஊர்…”
“என்ரை சொந்த இடம் மாதகல், அங்கை ஆமிக்காரர் வந்தவை தானே… சகலதையும் இழந்து வந்தோம்… மனுசி கான்சர் சொத்துப் போனா… ஐந்து பிள்ளைகளும் நானும் இப்ப மானிப்பாயிலை இருக்கிறம்…”
“கழிவுப் பேப்பர் என்ன தேவைக்கு…”
“என்ரை மூத்தவன் ஏ.எல் படிக்கிறான். அவனுக்குத் தான்…”
வீடு வாசல் இல்லை: சரியான தொழில் இல்லை… புள்ளையள் பட்டினி… இதுக்குள்ள படிப்பா… மகேசன் தன்னைத் தானே கேட்டுக் கொள்கின்றான்.
“ஐயாவுக்கு எத்தினை பொம்பிளைப் பிள்ளையள்…”
“கடைசி மூண்டும் பொட்டையள்…”
“மூத்ததை உருவாக்கி நல்ல இடத்திலை குடுத்துச் சீதனபாதனம் வாங்கினால் தானே கீழை உள்ளதுகளை கரை சேர்க்கலாம்…” மகேசன் நாட்டு நடைமுறையைக் கூறுகிறான்.
”உப்பிடியான கீழ்த்தர எண்ணம் எனக்கில்லை…” முகத்திலை அடித்தது போல் ஜெயராமன் கூறுகிறான். ஜெயராமனின் முகத்திலிருந்த கனிவு கருகி விட்டதை மகேசன் உணர்ந்து கொண்டு மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறான்.
சில விநாடிகள் நின்ற ஜெயராமன் சைக்கிள் ஹாண்டிலிலுள்ள சீலைப்பைக்குள் இருந்த ஒரு வாழைப் பொத்தியை எடுக்கிறான். எடுத்தவன் றோட்டுக் கரையில் சப்பாணி கொட்டி அமர்ந்து அந்த வாழைப் பொத்தியின் இதழ்களையும் பூக்களையும் பிரித்து நிலத்தில் போடுகிறான்…
இவன் ஏன் இப்படிச் செய்கிறான்?… மகேசனின் மனதில் பெரும் கேள்வி…!
கரும் சிவப்பு நிறமான இதழ்களும், பூக்களும் பிடுங்கப்பட்டு இளம் சிவப்பு நிறமான இதழ்களும் பிடுங்கப்பட்டு இளமஞ்சள் நிறத்தில் வெண் தாமரை மொட்டு வடிவிலான… ஓரளவு பருத்த மொட்டு…
மகேசன் கண்ணிமைக்காமல் பார்த்தபடி இருக்கிறான்…. இந்த மொட்டை இவன் என்ன செய்யப் போகிறான்… மகேசனின் மனதில் அடுத்த கேள்வி…
ஜெயராமன் மொட்டு வடிவிலான அந்த வாழைப் பொத்தியை… பனம் குருத்தை கடிப்பது போல், கடித்துச் சாப்பிடுகிறான்…!
பச்சை வாழைப் பொத்தி., இதைச் சாப்பிடலாமா?
மகேசன் எழுந்து வருகிறான்.
“ஐயா… வாழைப் பொத்தியை பச்சையாய் தின்னலாமா…?
“தின்னலாம் …”
“ஆர் சொன்னது…”
“ஒரு தரும் சொல்லயில்லை… ஒரு நாள் விறகு கட்டிக் கொண்டு வந்தன்… சரியான பசி… கையிலை ஒரு சதம் காசில்லை… வழியிலை எனக்கு பழக்கமானதொரு வாழைத்தோட்டக் காரனை சந்திச்சன். அவன் வீட்டுக்கொண்டு போய் வறுத்துச் சாப்பிட சொல்லி இரண்டு வாழைப் பொத்திகளைத் தந்தான். அதை வாங்கிக் கொண்டு வரயுக்கை தான் வறுத்துச் சாப்பிடுகிறதை சும்மா சாப்பிட்டாலென்ன எண்ட எண்ணம் வந்தது… மேல் பக்கத்தாலை உடைச்சு கழிச்சுப் போட்டுச் சாப்பிட்டன்…பனங் குருத்து மாதிரி இருந்தது. நல்ல பசியைப் பிடிக்கும்… இப்ப சாப்பிட்டால் நாளைக்கு காலமை வரை பசிக்காது…” ஜெயராமன் சர்வசாதாரணமாக கூறுகிறான்.
ஆனால் மகேசன்… அவனது இதயம் வெதும்பி வெடித்து அழுகின்றது… இப்படியுமொரு வறுமையா…?
வறுமையைக் கண்டு வறுமை அழுகின்றது!
“ஐயா உங்களிட்டை ஒண்டு கேட்கட்டா…” வார்த்தைகள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பிரசவிக்கின்றன.
“கேளுங்கோ…”
“குசுனி அடுப்புக்குள்ளை பூனை படுத்திருக்க புள்ளையின்டை படிப்புக்காக செலவழிக்கிறியளே… இப்படியும் ஒரு படிப்பு வேணுமா…” உதடுகள் பிரியாத நிலையில் ஜெயராமன் சிரிக்கிறான்… அர்த்தபுஷ்டியான சிரிப்பு!
“என்னையா சிரிக்கிறியள்”
“தம்பி முதுரை மரம் பட்டு விறகாகி… எரிந்து சாம்பலாகும் வரை நிமிந்துதான் நிற்கும் தமிழன் இவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்தும் இன்னும் முதுரை மரம் போல தான் நிற்கிறானெண்டால்… காரணம் என்னெண்டு தெரியுமா…” இப்படி கேட்ட ஜெயராமன் மகேசனைப் பார்க்கிறான்.
அந்தப்பார்வையில் கண்ணுக்குள் முள்ளெடுக்கும் ஆயுதத்தின் கூர்மை!
மகேசன் புரியாமல் நிற்கிறான்.
“அதுக்கு இரண்டு காரணங்கள்… ஒண்டு தமிழன்ரை கல்வி… அடுத்தது தமிழன்ரை வீரம்…! வறுமைக்குக் கல்வி தீனியானால்… எங்கடை அடுத்த தலைமுறை அடிமைப்பட்டிடும்…” ஜெயராமன் கூறி முடிக்கிறான்.
ஜெயராமனின் பேச்சு, போர்ப் பேரிகையாய் மகேசனின் செவிப்பறையில் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.
முதலாளி வருகின்றார். கழிவு பேப்பரை வாங்கிக் கொண்டு ஜெயராமன் புறப்படுகிறான்.
– ஈழநாடு, 04.05.1995.
– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.
![]() |
கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க... |