அடக்கமுடைமை




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
மனம், மொழி, உடம்பு, ஆகிய இவற்றைத் தீயவழியில் செல்லவிடாமல் அடக்கிக்கொள்ளுதல்
அசோகவனத்தை அழித்த அனுமான் வாலில் துணியைச் சுற்றித் தீயை இராவணன் வைக்கச் சொன்னான். வாலில் தீயினால் சுட்ட புண் பின் குணமாகி மாறி மறைந்தது. ஆனால் இலங்கை வேந்தன் அத்தீவைத்த சமயத்தில் தன் நாக்கினால் கேவலமாக அற்பனே! குரங்கே! என்று இழிவாகப் பேசிக் கொளுத்திய ஆறாத புண்போன்ற சொற்கள் அந்த அனுமனின் மனத்தில் அழியாமல் இருந்து இடைவிடாமல் துன்பம் செய்துகொண்டே இருந் தன. இவை மேலும் மேலும் அழியாமல் துன்பம் செய்ததால் அனுமன் இராமனுடன் போய் அவனைக் கொன்று துன்பம் நீங்கி இன்பம் அடைந்தான். இதனால் ஒருவரை நெருப்பால் சுடுதலைக்காட்டிலும் கொடுஞ்சொல் சொல்லுதல் கொடியது என்று கொடுஞ்சொல்லை எப்படிப்பட்டவரிடத்திலும் கூறு தல் கூடாது என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
தீயினால் = (ஒருவனை ஒருவன்) நெருப்பினால்
சுட்ட = கொளுத்திய
புண் = காயமானது (உடலிலே இருந்தாலும்)
உள் ஆறும் = மனத்தினுள்ளே (அப்பொழுதே) ஆறிப் போகும் – (அப்படி அல்லாமல்)
நாவினால் = நாக்கினால்
சுட்ட வடு = கொளுத்தப்பட்ட தழும்பானது
ஆறாது = மனத்தில் எப்பொழுதும் இடைவிடாமல் அழியாது இருந்து துன்பம் செய்யும்.
கருத்து: தீயினால் சுட்ட புண்ணைவிட நாவினால் கூறிய கடுஞ்சொல் கொடியது.
கேள்வி: ஆறுவதும், ஆறாததும் எவை?
விளக்கம்: தீயினாற் சுட்டது ஆறும்; நாவினாற் சுட் டது ஆறாது என்று வேற்றுமைதோன்றக் கூறியதால் இப்பாடல் வேற்றுமை அணி.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.