அச்சம் அடைந்த அறிஞர்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு புலவர் முதன் முதலாக ஓர் அவையின் கண்ணே சொற்பொழிவு செய்வதற்குச் சென்றார். அவையிலே பல அறிஞர்களும், பொதுமக்களும் கூடியிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடனே புலவருக்கு மிகுந்த நடுக்கம் உண்டாகிவிட்டது. நாம் கூறுவதில் யாதேனும் தவறுகளிருந்தால் இவர்கள் நம்மை இகழ்வார்களே என்று திகிலடைந்துவிட்டார்.
புலவர் பேசுவதற்கு எழுந்தவுடனே அவருடைய வாயிலே இருந்து ஒரு மொழிகூட நன்றாகப் புறப்படவில்லை. தட்டுத்தடுமாறி “அவையோர்களே!” என்றார். பிறகு பேந்தப் பேந்த விழித்தார். பிறகு ஒருவாறு துணிந்து, “நான் பேசுவதற்கு எண்ணியுள்ள செய்தி, ‘ஒழுக்கத்தின் உயர்வு’ என்பதாகும். அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. ஆகையால், நான் இப்போது உங்களுடைய அருமையான பொழுதை வீணாக்குவதற்கு விரும்பவில்லை,” என்று சொல்லிவிட்டுக் கீழே உட்கார்ந்துவிட்டார்.
அவருடைய மனத் தடுமாற்றத்தையும், அதனால் பேச முடியாமல் உட்கார்ந்துவிட்டதையுங் கண்ட அவையோர்கள் கைகொட்டி நகைத்தார்கள். புலவருக்கோ மிகுந்த வெட்கமாகிவிட்டது. இந்தக் கூடடத்தைவிட்டு வெளியே ஓடிப்போகலாமா என்று பார்த்தார். புலவர் மனந்தடுமாறி அன்று தாம் அடைந்த இழிவைப் பிறகு ஒருநாளும் மறக்கவில்லை.
“மனந்தடு மாறேல்” (இ – ள்.) மனம் – உள்ளம், தடுமாறேல் – கலங்காதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955