அசல் தாதா – ஒரு பக்கக் கதை






தரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மூன்று தாதா படங்களும் சில்வர் ஜூப்ளி கொண்டாடின.
இதோ, இன்று தனது அடுத்த படமான ‘அசல் தாதா’ பற்றி அறிவிக்கப் போகிறான்…
நிருபர்கள் கூட்டத்தில் தரண் சொன்னான்:
”இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டெல்லியில் மிகப் பெரிய மனிதர். அவருடைய மகன்தான் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நான் கதாநாயகனின் அடியாட்களில் ஒருவனாக நடிக்கிறேன்…புதுக் கதாநாயகன் நிச்சயம் நம்பர் ஒன் நடிகரா வருவார்!….
அவ்வளவுதான், ரசிகர்கள் கொதித்தார்கள். ‘என்ன இது அக்கிரமம்? எவனோ ஒரு புதுமுகம் கதாநாயகனாக நடிக்க நம்ம தலைவர் கேவலம் ஒரு அடியாளாக நடிப்பதா?
வீட்டில் தரணின் மனைவியும் கடாசினாள்: ”உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? நம்பர் ஒன் ஹீரோவான நீங்க எவனோ ஒரு சுண்டைக்காய் பையன் ஹீரோவா நடிக்கிற படத்தில அவனோட அடியாளாவா நடிக்கணும்?’
”உஷ்!” என அவளை அடக்கினான் தரண். ”அசல் தாதா படத்தோட தயாரிப்பாளர் யார்னு தெரியாமப் பேசாதே…தீர்த்துப்புடுவார் தீர்த்து! டெல்லியில் ஐநூறு அடியாள்களை வைச்சு ஒரு பயங்கர சாம்ராஜ்யத்தையே நடத்திக்கிட்டிருக்கிற ‘ஒரிஜினல் தாதா’ அவர்!
– மார்ச் 2013