அசத்தப்போவது யாரு?





ஒருவழியாக ரெண்டொரு நாளில் பெயிண்டரின் வேலைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிந்ததும் அவனுக்குள் ஒரு அலையோட்டம் மனசுக்குள்..’ பேசின கூலியை என்னதான் கரெக்டா கொடுத்தாலும் கடைசிநாளில் எத்தனை வேலை செஞ்சிருக்கோம் நீங்களே சொல்லுங்க., ஏதாவது சேர்த்துப் போட்டுக் கொடுங்கங்கறது மனித இயல்புதானே…?! வழக்கமாக நடக்கறா மாதிரி இல்லாம, அவனை அசத்தும் வண்ணம் நாமே ஏதாவுது புதுசா செய்வோம்னு நெனைச்சு, அன்றைக்கு வேலைக்கு கூலி கொடுக்கையில் பெயிண்டர் முருகேசை அவன் கேட்டான். ‘இத பாரு முருகேஷ், ரெண்டு நாள்ல வேலையை முடிச்சிருவே கடைசிநாளா உனக்குக் கொஞ்சம் சேர்த்துக் கொடுக்கணும்னு எனக்குத் தோணுது! எவ்வளவு கொடுத்தா உனக்குத் திருப்தியா இருக்கும்னு சொல்லேன்?!’ ரொம்ப எதிர்பார்க்கிறானா? இல்லையா? தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் கேட்டான். ஐநூறு சேர்த்துத் தந்தால் ஐநூறுதானா? ஆயிரம் சேர்த்துத் தந்தால் ஆயிரம் தானா? என நினைப்பார்கள்தானே?!இவன் எப்படி பார்ப்போம் என்று ரெண்டாயிரம் கூட்டித் தரும் எண்ணத்தில் கேட்டான். அவன் ஆயிரம் கேட்டால், நாம் முடிவு செய்த ரெண்டாயிரம் கொடுத்து அவனை அசத்திவிடுவோம்!’ எப்படி நம்ம பிளான்?! என்று கற்பனை செய்து காத்திருக்க…

அவன் நீண்ட யோசனைக்குப் பிறகு… ‘ சார், நீங்க எவ்வளவு கொடுத்தாலும் சரி… நான் கேட்கப்போறதி;ல்லை!’ என்றான் உறுதியாக.
ஓ! இவன் பாலை நம்ம கோர்டில் தள்ளுகிறான் என்று தெரிந்தது.
‘சும்மா சொல்லு!, நானா ஒரு ‘அமவுண்ட்’ கொடுத்து நீ எதிர்பார்த்ததைவிட அது குறைவா இருந்தா!?” என்றான் பாலை அவன் கோர்ட்டுக்கு அடித்துவிட்ட கம்பீரத்தில்…~
பெயிண்டர் முருகேசன் சர்வசாதாரணமாகச் சொன்னான். ‘சார், நீங்க பேசுன கூலியைக் கொடுத்துட்டீங்க.!. மேற்படி பணம் எதுக்கு சார்? அது தர்றதும் தராததும் உங்க மனம்போல!’ என்று அசத்த வியப்பில் மூழ்கினான். பெயிண்டரை இவன் அசத்த நினைக்க, அவனோ இவனை அசத்தி திக்கு முக்காட வைத்தான். இந்தக் காலத்தில் பேசின கூலியே போதும்னு சொல்ற ஆளும் இருக்கா???!!! உலகத்தில் நாமதான் பெரிசுன்னு நெனைக்கிறோம். நம்மைவிடப் பெரியவங்களும் இருக்காங்க அறிவ்லும் அசத்துவதிலும்!!