அக்னி வாசம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 288
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பஞ்சாயத்துலே குத்தவாளியா தலை தொங்கிப் போய் நிக்குற மகனோட பேரப்பயலுக்கு என்ன தீர்ப்பு கிடைக்குமோ’ என்பதில், எல்லாரைவிட கூடுதலான ஆவலோடு காத்துக் கிடக்கின்றாள், அங்காளம்மாள்.
“எடுக்காத எடுப்பை எடுத்துட்டான், மகனோட பேரன். தேவையில்லாத வேலைதான். என்ன செய்ய…? செய்ஞ்சுட்டான். அதுக்காக தண்டிச்சிர்றதா? மடியிலே ‘ஆய்ய்’ இருந்துட்டா… பச்சைப் புள்ளையை என்ன செய்யறது? ஆசனவாயை அறுத்துர முடியுமா? இல்லே… தொடையைத்தான் அறுத்துர முடியுமா? மடியைக் கழுவித் துடைச்சிட்டு, புள்ளையைக் கொஞ்சத்தான் செய்யணும்… அதானே, மனுசத்தன்மை?”
அங்காளம்மாளின் மன நினைவுகள், வாய் முணுமுணுப்புகளாக வெளிக்கசிகின்றன. மகனும், மருமகளும் பதறித் தவித்துப் புலம்புகின்றனர். அவர்களின் மகனும் மருமகளும் ‘கோ, குலை’யென்று கதறியழுகின்றனர்.
“மணிக் கொத்து மாதிரி… ஒத்தைப் புள்ளே பெத்து வளர்த்தோம்… அதையும் ஊர்ப்பஞ்சாயத்துலே தொலைச் சிரணுமா? அட, ஆயிரங் கண்ணுடையாளே… அங்காள பரமேஸ்வரியம்மா… நீதான் எங்க
புள்ளையை காப்பாத்தணும்மா…”
அவநம்பிக்கையும் விரக்தியுமாக அழுது அங்கலாய்க்கிற பேரனின் பெஞ்சாதியின் கண்ணீரைப் பார்க்கிற அங்காளம்மாள்,
“என்னத்துக்கு அழுகுதே? கண்ணைத் தொடைச்சுக்கோ. ஒம்புள்ளைக்கு நல்லதுதான் நடக்கும்!” தைர்யம் சொல்கிற அங்காளம்மாள்.
குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறாள், அங்காளம்மாள். தொண்ணூத்தைந்துக்கும் மேலே வயது. எப்போதோ, உதிர்ந்திருக்க வேண்டிய நெற்று. இன்னும் பூமியில் தொங்கி உட்கார்ந்திருக்கிறது, அழுகின பழமாக.
குவித்து வைத்த கூடைச் சாணிமாதிரி இருக்கிறாள். குத்துக்கால் உயரத்துக்குள் மொத்த உடம்பும் துவண்டு சரிந்து கிடக்கிறது. கழுத்தில் நிற்க மாட்டாமல் ஆடுகிற தலை. சதையெல்லாம் காலமுதுமையில் கரைந்து போக… ஈரத் துணியாக சுருக்கங்கள் நிறைந்த தொலி ஒட்டிக் கிடக்கிறது. குழிக்குள் கிடக்கிற பீளை நிறைந்த கண்ணில், குன்றாத ஒளி. நடுங்கித் தொங்குகிற உதடுகளுக்குள், சிதைவு படாத வரிசைப்பற்கள். இப்பவும், பட்டாணியை ‘கொண்டா, கொண்டா எனக்கும்’ ‘கடீர், கடீரென கடித்து மெல்லும், பாம்படமில்லாத வெறும் காது, கயிறாகத் தொங்குகிறது.
“பஞ்சாயத்து பண்ணுற நாட்டாமை யாரு…?”
தலையாட்டம், கையாட்டம், கழுத்தாட்டம். கேட்கிற கேள்வியில் குரலும் நடுங்கியாடுகிறது.
“ரெங்கசாமிதானா?” அவளது தொடர் கேள்வி. நிதானமும் சீர்குலையாத தைரியமுமாக கேள்வி கேட்கிற அவளிடம் யாரும் பேசத் தயாரில்லை. பதற்றமும் திகிலுமாக பேயறைந்து நிற்கின்றனர். ‘வரப்போகிற தண்டனை எத்தனை கடுமையாக இருக்குமோ’ என்ற கிலி. பீதி படிந்த, கண்ணீரும் கதறலுமாக அவர்கள்.
அங்காளம்மாளின் நிதானமும் தைர்யமும் காலச் சூழலுக்குப் பொருந்தாமல் தனித்து நிற்கிறது, தண்ணீரில் எண்ணெயாக. ‘கெழட்டு முண்டம்… நெலைமை தெரியாம கொஞ்சிக் குழாவுது’ என்று வெறுப்பாகப் பார்க்கிற அவர்கள். அங்காளம்மாவுக்குள் மேளச்சத்தம், தவிலின் முரட்டதிர்வுகள். உறுமி மேளத்தின் உறுமல்கள், நெஞ்சுக்குள் ஆழத்தில் அறுக்கின்றன… பின்னோக்கி பின்னோக்கி… காலப் பெருவெள்ளம் பாய்ந்து பெருக்கெடுத்தோடி வந்த வாழ்க்கை நதியின் பழைய கதியில் நினைவு.
அங்காளத்துக்கு அப்ப வயது முப்பதுக்கும் மேல். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் காங்கிரஸ் பார்ட்டி லீடர் வைத்தியநாத அய்யர் தலைமையில் நாடார்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயப்பிரவேசம் பண்ணி சாமி கும்பிட்டது, ஒரே பரபரப்பாகப் பேசப்பட்ட காலம். எங்கு திரும்பினாலும் இதுதான் பேச்சு.
“அப்பவும் அய்யருக்கு எதுக்கு இம்புட்டுச் சேட்டை?”
“எல்லாம்… முத்துராமலிங்கத் தேவரு குடுத்த தைர்யம். அவரு பக்கபலமா இருக்குற தெம்பு. சாமியைப் பார்க்கப் போய் வெட்டுப்பட்டுச் செத்த மூக்க
மூக்க நாடாரு கதையெல்லாம் நடந்த மதுரையிலே… இப்ப எல்லாத் தாழ்ந்த சாதிகளும் சாமி முன்னாலே.”
“கலிகாலம்பா… காலம் செய்ற கூத்து.’
“சுயராஜ்யம் மட்டும் கேட்டுக்கிட்டிருந்த காங்கிரஸ் பார்ட்டிக்கு, இதெல்லாம் என்னத்துக்கு?”
“சுயராஜ்யம் கேக்குறதுக்கு தங்களோட எல்லா சாதிசனமும் வரணும்லே? அதுக்குத்தான் இந்தச் சமூகச் சீர்திருத்தம்.”
“இருந்தாலும்… இது கடவுளுக்குப் பொறுக்காது.”
“எல்லா ஊர்களிலும் இதே பேச்சு. ஆதரித்தும் எதிர்த்துமாக பல்வேறு தொனியான பேச்சுகள். நாடு நகரமெல்லாம் இதன் அதிர்வுகள். சிறிய சிறிய அளவிலான ஆலயப் பிரவேசங்கள். சிறு தெய்வ சன்னதிகளுக்குள்ளும் துணிச்சலான கலவர நிலவரத்துடன் பிரவேசிப்புகள்.
இந்த ஊருக்குள்ளும் அதன் அதிர்வுகள். அதன் மங்கலான சத்தங்கள். ரெங்கசாமி அப்ப முழுத்த இளவட்டம். இருபத்திரண்டு வயது. துடிப்பான காங்கிரஸ்காரன். ரெங்கசாமி, நாடார். அவனுடன் கூடச்சேர்ந்த காங்கிரஸ் பார்ட்டி நண்பர்கள், பொன்னையா பிள்ளையும்… பெருமாள் சாமி நாயக்கரும்…
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு ஊர்க் கிணறு. வட்டக் கிணறு. நாயக்கர், தேவர், நாடார் மூன்று சாதியினருக்கும் கிணறுகள். வட்டச்சுவர். உருளை மாட்டப்பட்டிருக்கும். கயிறும் வாளியும் போட்டு ‘கீச்சு, மூச்சீ’ என்று இழுப்பார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிணறுகள் கிடையாது. ஊரை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகளின் வாய்க்கால் தண்ணீர்தான்… அவர்களுக்கு. அதுவும் கெஞ்சிக் கூத்தாடி ‘ஐயா, சாமி’ என்று கூழைக்கும்பிடு போட்டுத்தான் தண்ணீர் மோக்க முடியும்.
ரெங்கசாமி வந்து அங்காளம் வாசலில் வந்து நின்றான்.
“என்ன சாமி…..?”’
“நானும், பெருமாள் சாமி நாயக்கரும், பொன்னையா பிள்ளையும் கூடி, ஒரு முடிவுக்கு வந்துருக்கோம்.”
“என்னன்னு?”
“எங்க காங்கிரஸ் பார்ட்டி தலைமையிலே நாயக்கமாரு கெணத்துலே நீ போயி… தண்ணி இறைச்சு எடுக்கணும்..”
“நானா? எங்க சாதியாளுக அந்தக் கிணத்துக்கிட்டேயாச்சும் நெருங்க முடியுமா? நெருங்கிட்டு, உருப்படியாதிரும்பிர முடியுமா?”
அங்காளத்தின் நெஞ்சம் பகீரென்றது. பதற்றத்தில் ஈரல் குலை நடுங்கியது. கண்ணில் அச்ச வெலவெலப்பு.
“என்னை வுட்ருங்க சாமி…”
ரெங்கசாமி சிலிர்ப்போடு கொந்தளித்தான்.
“சாமி, கீமிங்கிறதை மொதல்லே நிறுத்து. மனுசனுக்குமான மரியாதை வேணும். சூடுசுரணை வேணும். ஈனத்தனமான சாதி, என்னத்துக்கு? எல்லாரும் ஒண்ணுதான். சரிநிகர் சமானம்தான்… இதான், காந்தியோட கொள்கை”
“ஒங்க கொள்கையெல்லாம் உங்களோட இருக்கட்டும். பெரிய சாதியாளுக பகையிலே என்னை இழுத்துத் தள்ளாதீக… பட்டிக்காடு. இங்க… நாங்க தாங்க மாட்டோம்.”
“உங்க சாதியிலேயே நீதான் துணிச்சலானவன்னு நாங்க ஒன்னை முடிவு பண்ணுனோம். நீயே இப்படிச் சொன்னா… எப்படி? நாங்க பக்கபலமா இருக்கோம். எங்க காங்கிரஸ் பார்ட்டி இருக்கு. மண்டலக் காங்கிரஸ் அக்ராசனர் வரப்போறாரு…”
ரொம்ப நேரம் பேசினான். துடிப்பான லட்சியப்பற்றுறுதியோடு, எச்சில் தெறிக்க, அனல் பறக்கப் பேசினான். கரைப்பார் கரைத்தால், கரையாததும் கரைந்துவிடுமே. எறும்பு ஊர ஊர… கல்லும் தேயுமே. அங்காளமும் சம்மதித்தாள், ஆகக்கடைசியில்.
“தாழ்ந்த சாதிப் பெண்ணை நாயக்கருமாரு கெணத்துலே தண்ணியெடுக்க வைக்கப் போகுதாம், காங்கிரஸ் பார்ட்டி, பெருமாள் சாமி நாயக்கரே இதுக்கு பக்கபலமாம்…”
நாயக்கமார் ஆட்கள் கொந்தளித்தார்கள். அரிவாள், கம்புகள் தயாரித்தார்கள்.
“இன்னிக்கு நாயக்கமார் கெணறு. விட்டுட்டா… நாளை நம்ம கெணறு” என்ற கொந்தளிப்பில் பிற சாதியினரும் கொதித்தனர்.
ஊரின் தட்பவெப்பமே மாறிற்று. ‘வெட்டணும், குத்தணும். வேல் கம்பைச் சொருகணும்” என்று வீரச்சவடால்கள். வெப்ப அலைகளின் வேனல் தகிப்புகள்.
குறித்த நாளில்…
ஜில்லா காங்கிரஸ் பிரமுகர்கள் வில்வண்டிகளில் வந்து இறங்கினார்கள். கொடியும் நடையுமாக ஏகப்பட்ட தலைக்குல்லாக்கள். எல்லாரும் சேரியில் வந்து சேர்ந்தனர்.
சமபந்தி போஜனத்துக்கு பொன்னையா பிள்ளை வீட்டில் தடபுடலாக சமையல் நடந்துகொண்டிருந்தது.
ஆள் மாறி ஆளாக நாயக்கமார்கள் அங்காளத்தை வந்து பார்த்தனர். “தொலைச்சிருவோம்…” தொலியை உரிச்சிடுவோம்” என்று நெருப்புச் சீறல்கள். மிரட்டல் வார்த்தைகளின் அரிவாள் வீச்சுகள்.
ஊர்த்திருவிழாவுக்கு வருகிறமாதிரி மேள கோஷ்டி வந்து சேர்ந்தது. ஒயிலாட்டக் கோஷ்டியும் வந்தது.
ஊரே… ‘ஜேஜே’ என்றிருந்தது. கோலாகலமும், கொந்தளிப்புமாக… குதூகலமும் கொதிப்புமாக… சந்தோஷ உற்சாகக் களி துள்ளலும், சண்டை மூள்வதற்கான மனத்திமிறல்களுமாக முரண்பட்ட ஜேஜேஜே…”
ஜில்லா அக்ராசனர் கோஷம் போட்டார். எல்லோரும் பின்பற்றி கூட்டுக் குரல்கள் எழுப்பினர்.
“பாரதமாதாகீ… ஜே…”
“சுயராஜ்யம் அடைந்தே தீருவோம்.”
“வந்தே மாதரம்.’
“காங்கிரஸ் பார்ட்டி ஜிந்தா பாத்.”
“சாதி எனும் அரக்கனை ஒழிப்போம்.”
கோஷம் முழக்கியவாறு அவர் முன் நகர… பின்னால் அணிவகுக்கிற ஊர்வலக் கொடித் தொண்டர்கள். பின்னால்… உயரத்தில் ஏந்திப் பிடித்த சமுக்காளப் பந்தல். அதன் நிழலில் மூவர்ணச் சேலையும், குடமும், கயிற்று வாளியுமாக வருகிற வீராங்கனையாக அங்காளம்.
அவளைச் சுற்றி பக்கபலமாக பெருமாள் சாமி நாயக்கர், ரெங்கசாமி, பொன்னையா பிள்ளை, மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள். அவர்களுக்குப் பின்னால், நாதஸ்வர முழக்கத்துடன் கொட்டுமேளப் பேரிடிகள். அடுத்து வருகிற ஒயிலாட்டக் குழு. லயம் தப்பாத தாளகதியுடன் கூடிய ஒயிலாட்டம்.
சேரியை விட்டுப் புறப்பட்ட ஊர்வலம், ஓடையைக் கடந்து ஊருக்குள் நுழைந்து… நாடார் தெரு, தேவர் தெருவைக் கடந்து, நாயக்கமார் தெருவுக்குள் பிரவேசிக்க…
ஊர்வலத்துக்குப் பக்கபலமாக ரெங்கசாமியின் உறவுக்காரர்கள். எல்லாரும் சிலம்பாட்ட மாவீரர்கள்.
உணர்ச்சிமயமான கொள்கை முழக்கங்கள். சுயநலமில்லாத லட்சியப் பெருக்கு. ஊர்வலத்தின் தொண்டர்கள் படை ஏகமாயிற்று. சிலம்பாட்ட வீரர்களின் இரும்புக் கம்பிகள் ஆகாயத்தில் சுழன்று சாகசம் செய்ய…
அரிவாள், கம்பு பம்மிற்று. வேல் கம்புகள் ஒதுங்கிற்று. அங்காளம் நாயக்கமார் கிணற்றில் நீரிறைத்து, குடம் நிரப்பி, இடுப்பில் தூக்கி வைக்கிறபோது…
அவளுக்கு ஒரு புதிய பரவசப் பெருக்கு. ஆனந்தத் துள்ளல். இடுப்பில் உலகையே தூக்கி வைத்த மாதிரியோர் கம்பீரப் பெருமிதத் ததும்பல்… சமத்துவத்தின் மதுர ருசி.
அந்த ரெங்கசாமிதான் எண்பத்தைந்து வயது நாட்டாமை. அங்காளம்மாளுடைய மகனின் பேரனுக்கு தீர்ப்பு சொல்லப் போகிற ஊர்த்தலைவர்.
உயர்சாதிக் குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கிற பேரன். காதலில் பிடிவாதமாக நிற்கிற வாலிபன்.
“கட்டினால், அவளைத்தான் கட்டுவேன்” என்று ஒற்றைக்காலில் நிற்கிறான்.
அவன் துணிச்சலுக்குக் கொஞ்சமும் குறையாமல் அந்தச் சிறு பெண்ணும். பயமறியாத இளங்கன்றுகள்.
ஊர்க்கூட்டம், பெருங்கூட்டமாகியிருந்தது. மனித வெக்கையின் அலை வீசுகிற அளவுக்கு, பெரும் கூட்டம். விசாரணையெல்லாம் முடிந்து விட்டது. ரெங்கசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார்.
“சாதியைத் தாண்டி காதலிச்ச பாவத்துக்கு நாலாயிர ரூவாய் அபராதம். அத்துடன் இந்தக் காதலன், ‘யாதொரு சம்பந்தமுமில்லை’ என்று கையெழுத்திட்டுவிட்டு, ஊரை விட்டே ஓடிப்போய் விட வேண்டும்…”
உயர்மட்டக்குழுவின் கூட்டு முடிவாக தயாராகி விட்ட தீர்ப்பை விளக்கிப் பேசுவது, ரெங்கசாமி பொறுப்பு.
வார்த்தைகளை உள்ளுக்குள் தயாரித்துக் கொண்டிருந்தார். ‘தத்துவம் மாறலாம். கட்சி மாறலாம். மதம் மாறலாம். ஊர் மாறலாம், நாடு மாறலாம். எது மாறினாலும் தடையில்லை, சாதி மட்டும் மாற முடியாது. ஏனெனில் பிறப்பினால் வருவது, அது, பாயிண்டுகளை உள்ளுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார். வரிசை மாற்றி அடுக்கிப் பார்த்தார். யோசனையின் அழுத்தத்தில் முகத் தீவிரம். தளர்ந்த உடம்பில், தாராளமாக விளையாடியிருக்கிற முதுமை. காலப் பயணத்தின் ரேகைகளாக முகச் சுருக்கங்கள். சத்தம் உயர்த்தி… தொண்டையைச் செருமினார்.
“எது வேணும்னாலும் மாற்றிக் கொள்ளலாம். சாதி மட்டும் மாற்றிக்க முடியாது…”
அப்போது..
கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறுகிற இரண்டு பேர், அவர்களால் தூக்கி வரப்படுகிற சதைப் பொட்டலமாக அங்காளம்மாள்.
“எளிய சாதிப் பொண்ணுகளை நேர்மையேயில்லாம கள்ளத்தனமாக மேய்ற மேல் சாதி ஆம்பளைக. அவுக வீட்டுப் பெண்ணை எளிய சாதிப் பையன் நேர்மையா ஆசைப்படக் கூடாதா? அதுதப்பா? மேல் சாதிக் கெணத்துலே எளிய சாதிப் பொண்ணு தண்ணி எடுக்கலாம். பொண்ணு எடுக்கக் கூடாதா? இது என்னய்யா? ஞாயம்? காலமும் வயசும் ஏற ஏற மனுசனுக்கு அறிவு பக்குவப்பட வேண்டாமா? ஒடம்பு கெழடான மாதிரி… மனசுமா கெழடாகணும்?”
அங்காளம்மாளின் பல் போகாத வாயிலிருந்து நடுக்க அதிர்வுகளோடு தெறித்த அனல் துண்டுகள். துணிந்த மனசின் சத்தியச் சீறல்கள்.
ரெங்கசாமி தர்மசங்கடமானார். கூட்டம் குணமிழந்து, திசை தவற… குழப்பமும் சண்டை சச்சரவுகளுமாக பூசல் புயல் கிளம்ப… இரு கூராக கூட்டம் பிளவுபட…
வீராங்கனையாக முழங்குகிற அந்தக் கிழவி.
சுயராஜ்ய தேசத்தில்… இரண்டாம் சுயராஜ்யப் போராட்டத்தின் அக்னி வாசம்.
– நவம்பர் 2009, கல்கி.
– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 21, 2026
அம்பியூலன்ஸ்
நீர்வை பொன்னையன்
September 21, 2026
புலம்பலால் வெளிவந்த உண்மை…
ராமன் செல்வராஜ்
September 21, 2026
