காதல் வேர்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 109 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுந்தரம் பஸ் ஸ்டாண்டு மைதானத்தில் சோம்பலுடன் உட்கார்ந்திருக்கிறான். புஞ்சையில் வேலை ஜோலி நிறைய கிடக்கிறது. தெக்காட்டுப் புஞ்சையில் மிளகாய்ப் பழம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்வதியுடன் சேர்த்து ஏழாட்கள். போனால், சாக்கு பிடித்து, பழப் பெட்டிகளை வாங்கித் தட்டலாம். 

“சாக்குக் கட்டை நீங்க கொண்டு வாரீகளா?” 

பார்வதி அர்த்தத்துடன் கேட்டாள். கேள்விக்குள் கேள்வி ஒன்று உட்கார்ந்திருக்கிறது. ‘வேலைக்குக்கூட வாரீகளா?” என்ற கேள்வி. 

“மாட்டு டாக்டரு வந்தாலும் வந்துருவார்லே? பசு மாட்டுக்கு ஊசி போட்டுரலாம்லே? மொடை அடிச்சுக்கிட்டே இருக்குல்லே?” 

“அப்ப… அவரை எதிர்பார்த்து வீட்லே இருக்கப் போறீகளா?’சர்வ சகஜமான குரலில் அமைதியாகக் கேட்கிறாள். ஆனால், ‘வீட்டிலே சும்மாவே இருக்கப் போறீகளா?’ என்ற குற்றச்சாட்டு முள் ஒளிந்திருந்து உறுத்துவதாக இவன் உணர்ந்தான். அவளது பார்வைக் கடுப்பில் அந்த முள் இருந்தது. 

“சாக்குக் கட்டை நீயே கொண்டு போயிரு” என்று தாழ்ந்த சுருதியில் சொல்லிக் கொண்டே தலைகுனிந்த சுந்தரம், 

அவள் வைத்துக் கொடுத்த சோற்று முன் உட்கார்ந்தான். புளிக்குழம்பு. நறுக்கிய முருங்கைக்காயும் கத்தரிக்காய்த் துண்டுகளும் கிடந்தன. 

“அப்ப… சரி… சாப்ட்டுட்டு வட்டிலைக் கழுவி வைச்சிருங்க. பொழுதாகுது. நா பொறப்படுறேன்” சாக்குக் கட்டை தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாள். குடத்துத் தண்ணீரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள். சோற்றுத் தூக்குச் சட்டியையும் எடுத்துக் கொண்டாள். 

உண்டு முடித்து, எல்லாவற்றையும் ‘ஒதுங்க’ வைத்துவிட்டு கதவைப் பூட்டினான். தொழுவத்தில் எட்டிப் பார்த்தான். சிவலைப் பசு நின்றது. வாலைத் தூக்கி சுழற்றியடிக்கிறது. மூத்திரச் சாணக் கலவை ‘சளா’ரென்று தெறிக்கிறது. இவனைப் பார்க்கிறது. கழுத்தைத் திருப்புகிறது. கரிய கண்ணில் ஒரு வெளிச்ச மின்னல். அடிவயிற்றிலிருந்து புறப்பட்டு உருண்டெழுந்து வெளிப்படுகிற நீள கனைப்பு. இடிமுழக்கம்போன்ற நீள்கனைப்பு. ஆசன வாசலில் பிசுபசுப்பான திரவக் கசிவு. 

புல்லையள்ளிக் காடியில் போட்டான். முற்றிய கன்றாக நிற்கிற பழைய பொட்டைக் குட்டிக்கும் புல்லைப் போடுகிறான். 

“இரு… மாட்டு டாக்டரைக் கூட்டியாந்துருதேன்” என்று பசுவின் முதுகில் தட்டிக் கொடுத்து பாசத்துடன் வருடுகிறான். இவனது வாய்மொழி தெரியாவிட்டாலும், வருடல் மொழியின் உணர்வை அது தெரிந்து கொள்ளும். அதன் வாயிலிருந்து நூலாம்படைமாதிரி நீள்கிற எச்சில். 

பஸ் ஸ்டாண்டு டீக்கடை’ஜே… ஜே…’ என்றிருந்தது. காலை நேர வியாபாரம். அருஞ்சுனை காத்த அய்யனார் சுவாமி படத்துக்குக் கீழே கலர் டி.வி.-யில் ‘சிரிப்பொலி’ கலகலக்கிறது. 

வடைகளைப் பிய்த்து வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்கிறவர்கள். “டீ போடப்பா. ‘ஜோலி கெடக்கு’ என்று துரிதப்படுத்துகிறவர்கள். 

சுந்தரம் போய் நின்றான். 

“ஒரு டீ போடு தம்பி…” 

“வடை சாப்புடலியா?” 

“வேண்டாம் தம்பி.” 

அவன் டீயாற்றுகிற போதே, இவன் கேட்டான். 

“மாட்டு டாக்டரு இங்கிட்டு வந்தாரா?” 

“வந்த மாதிரி தெரியலியே…” 

“வருவாரா…?’ 

“அதெப்படி எனக்குத் தெரியும்?” 

டீ வாங்கினான். உறிஞ்சிக் குடித்தான். பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு வேப்பமரத்தடியில் போய் உட்கார்ந்தான். பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறவர்கள்… வருகிற பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறவர்கள்… மினி பஸ் டிரைவர், கண்டக்டர்… எல்லோருமாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள். இவனும் அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்தான். 

“மாட்டு டாக்டரு இன்னிக்கு வருவாரா?” இன்னும் நாலைந்து பேர்களிடம் விசாரித்துப் பார்த்தான். 

“வரச் சொல்லி யாராச்சும் சொன்னாத்தான் வருவாரு… நீங்க சொல்லி விட்டீகளா?” 

“ரெண்டு மூணு பேருகிட்டே ‘வரச் சொல்லி டாக்டர்கிட்டே சொல்லிருங்க’ன்னு சொல்லியனுப்பிச்சேன்.” “அவங்க போய்… சொன்னாங்களா, இல்லியான்னு தெரியுமா?” 

“தெரியலே…” 

“அப்ப வர்றது சந்தேகந்தான்.” 

இவன் விசாரித்துப் பார்த்த நாலைந்து பேரும் இதே மாதிரித்தான் சொன்னார்கள். 

பார்வதி நினைவுக்குள் வந்தாள். மிளகாய்ப் பழம் எடுக்கிற பார்வதி. வேனலாகக் கொதிக்கிற வெயிலில் வேகிறவள். 

தனது நிரையிலும் மிளகாய்ப் பழம் பொறுக்க வேண்டும். இருட்டுக் காடாகக் கிடக்கிற மிளகாய்ச் செடிகளின் கொழைகளைப் புரட்டி… கிளைகளில் ரத்த மினுமினுப்பாகத் தொங்குகிற மிளகாய்ப் பழங்களைத் தேடிப் தேடிப் பொறுக்க வேண்டும். தப்பவிடாமல் பொறுக்க வேண்டும். மற்றவர்கள் பொறுக்குகிற பழங்களையும் வாங்கி சாக்கில் தட்ட வேண்டும். தண்ணீர் கேட்கிறவர்களுக்கு செம்பில் கொண்டு போய்த் தர வேண்டும். 

பாவம்… ஒற்றை மனுசி. புஞ்சைக்காரி என்பதால் சகல வேலைகளையும் ஓடி ஓடிச் செய்ய வேண்டும். ஏறு வெயிலின் தகிப்பில் ஓடி ஓடி வேலை செய்கிற பார்வதி. 

இவன் வேப்ப மரத்து நிழலில் சும்மா உட்கார்ந்திருக்கிறான். மாட்டு டாக்டரை எதிர்பார்ப்பதாக ஒரு காரணம். சாக்கு. 

நிஜமாகவே அவனுக்குள் கவலையும் குற்ற உணர்ச்சியும் கிடந்து அழுத்துகிறது. தர்மசங்கடப்படுகிறான். 

ஆனால்… இதுவும் முக்கியம். பசு, முடை அடிக்கிற நாட்களிலேயே ஊசி போட்டு விட வேண்டும். போட்டால் தான், சினை தங்கும். கரு வளரும். கன்று போடும், பால் தரும். இதுவும் முக்கியமான வேலைதான். 

ஆனால்…வருவார் என்ற நிச்சயமில்லாத நிலையில் சும்மாவே உட்கார்ந்திருக்கிறோமே… பார்வதி அங்கே வெயிலில் கிடந்து வேகிறாளே… 

அலைபாய்கிற மனசின் நினைவோட்டம். உளைச்சலும் வருத்தமுமான நினைவு ஈக்களின் மொய்ப்பு. 

‘பார்வதி மேல் இரக்கப்பட்டு… புஞ்சைக்குப் போன நேரத்தில்… மாட்டு டாக்டர் வந்துவிட்டுப் போய் விட்டால்…’ 

அப்படியும் ஒரு நினைவுத் தடை. மனப் பதைப்பு. அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓடித் தவிக்கிற இரு மனசு. 

பார்வதி தங்கமானவள்தான். அவளுக்கென்று ஒரு குணமும் இருக்கும். விவசாயக் குணம். விவசாயக் குடும்ப மரபுக் குணம். சோம்பலைச் சகிக்க மாட்டாள். சும்மாயிருப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாள். 

அதற்கான நியாயமான காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், அவள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள். 

“மண்ணுலே பாடுபடுகிற மனுசர் தண்ணிமாதிரி, காத்து மாதிரி ஓடிக் கிட்டே இருக்கணும். கல்லு மாதிரி ஓய்ஞ்சி கெடக்கக் கூடாது” என்று வார்த்தைகளால் விளாசுவாள். 

“ரத்தம் ஓய்ஞ்சு ஓரிடத்துலே நின்னா.. மனுசரு உசுரோட இருக்க முடியுமா?” என்று ஆவேசப்படுவாள். 

“கல்லு ஓடைஞ்சு நொறுங்கி மண்ணாகுது. மண்ணு மனுசருக்கு சோறு தருது… கல்லு, மண்ணாகுற போது… சோறு திங்குற மனுசரு கல்லாகக் கெடக்கலாமா?” 

என்றெல்லாம் வார்த்தைச் சாட்டைகளை வீசுவாள். கழற்றியடிப்பாள். 

“என்னத்துக்கு இப்படி அலப்பரை பண்றே? மனுசரை சும்மா இருக்க விடேன்” என்று சொல்லிவிட்டால்… அம்புட்டுத்தான். அன்னிக்குப் பூராவும் வார்த்தை விளாசல்களும், சாட்டைச் சுழற்சிகளும்… ஆளை ‘உண்டு இல்லை’ என்று பண்ணிவிடும். 

அதோடு நின்றால் பரவாயில்லை. சோம்பலுக்கான தீர்ப்பு ராத்திரியில் தான் கிடைக்கும். 

ஆசையோடு உரிமையோடு தொடப்போகிற கையை வெறுப்புடன் தட்டியெறிந்து விடுவாள். செருப்பால் அடித்து, காலால் மிதித்துத் தள்ளின மாதிரி அவமானமாக இருக்கும். 

“வேலையத்த மனுசருக்கு இதுமட்டும் வேணுமாக்கும்? இதுக்கு மட்டும் ஏலுமோ…?” 

இப்படி சுந்தரத்தை ஏகப்பட்ட தடவைகள் பார்வதி அவமதித்து ‘காயப்’ போட்டிருக்கிறாள். 

பலதையும் யோசிக்கிற சுந்தரம், பின்புறம் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். கங்கின் முன்னேற்றத்தில் நெறு நெறுத்து சடசடக்கிற பீடி இலை. காந்தலான புகை, தொண்டைக்குள் மோதிவிட்டு, நாசி வழியாக வெளியேறுகிறது. அங்கிட்டும் இங்கிட்டுமாக அலை பாய்ந்து வருகிற நினைவுகள். 

பெருமூச்சோடு எழுந்தான். அவனுக்குள் மங்கலாக ஒரு நினைவு. ஒரு முடிவுபோல… ஒரு வேலைத் திட்ட வரைபடம். 

டீக்கடைத் தம்பியிடம் வந்தான். 

“யப்பா…எட்டு பேருக்கு டீ சாப்புடுகிறமாதிரி பார்சல் டீ போட்டுத் தர முடியுமா?” 

“ஏன்… முடியாது? அதானே… எங்க ஜோலி? தூக்குச் சட்டி எங்க? எதுலே டீ போட?” 

“ஏதாவது ஒரு தூக்குச் சட்டியிலே போட்டுத்தா. சாயங்காலம் சட்டியைத் தாரேன்.” 

“ஞாபகமாதந்துரணும்? அயத்துரக் கூடாது?” 

“அதோட… எட்டு வடை பார்சல் கட்டு… எல்லாத்துக்கும் சாயங்காலம் காசு தரேன்.” 

தூக்குச் சட்டி நிறைய டீயுடனும், வடைப் பார்சலுடனும், பிளாஸ்டிக் கிளாஸ்களுடன்… நடையை எட்டிப் போட்டான். புதிதாக வாங்கிய பீடிக் கட்டும், தீப்பெட்டியும் மடியில் இருந்தது. 

வீட்டுத் தாழ்வார நிழலில் சாய்த்துப் போட்டிருந்த சைக்கிளை எடுத்தான். டயர்களில் காற்று இருக்கிறதா என்று நசுக்கிப் பார்த்தான். ‘கிண்ண்’ணென்றிருந்தது. 

அகலக்கேரியலில் நூல் கயிறு சுற்றியிருந்தது. தோள் துண்டில் வடைப் பார்சலையும், கிளாஸ்களையும் கட்டி தோளில் போட்டுக் கொண்டு, ஒரு கையால் ஹாண்டில் பாரைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் டீத் தூக்குச் சட்டியுமாக… 

பெடலை மிதித்தான். தெக்காட்டுப் புஞ்சையை நோக்கி நகர்ந்தது, ஏறு வெயிலின் உச்சம். சித்திரை மாசத்து அக்கினி நட்சத்திரத்து வெயிலின் தீச்சூடான காந்தல். 

வேனலாகக் கொதிக்கிற வெயில் தீயைப் பொருட்படுத்தாமல்.. ஊர்ப் பொரணிகளும், உள்வீட்டுச் சோகக் கதைகளுமாகப் பேச்சும் பெருமூச்சுமாக நடக்கிற வேலை. 

எல்லாப் பெண்களும் தலையில் நுனித் துண்டைக் கட்டி மிச்சத் துண்டை முதுகில் பரத்திவிட்டிருக்கின்றனர். இயற்கையை எதிர்த்து ஜெயிக்கிற மனித உழைப்பின் சமயோசித உத்தி. 

வெயிலில் முகம் குறாவிப் போயிருக்கிற மிளகாய்ச் செடிகள். எலிக்காது போன்ற சிறிய இலைகளும் முகம் வாடித் தொங்குகின்றன. சிவப்பு நிறப் பழ ரத்தங்கள். வாய்க்கால் வரப்புகளில் அகத்தி வரிசைகள். 

எல்லோருக்கும் வடை உபச்சாரம். ஆளுக்கொரு வடை. டீ பரிமாறல். அவனை எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றனர். 

“நேரமறிஞ்சு, கரெக்டா கொண்ணாந்துட்டீக.” 

“பசியறிஞ்சு மகாராசாவுக்கு.’ 

போட்ட சோத்துப் புண்ணியம், 

“இந்த வடையும் டீயும் தர்ற உசுருப் பலத்துலே சாயங்காலம் வரைக்கும் வேலையை முடிச்சிரலாம்.” 

அவரவர் நிரையை விட்டு யாரையும் நகர விடாமல்… இவனே ஓடி ஓடி… வரப்புகளில் பாய்ந்து வடை, டீ செலவு செய்து… வேலை தடைபடாமல் தாமதப்படாமல் பார்த்துக் கொண்ட சுந்தரத்தைப் பெருமிதத்துடன் பார்க்கிற பார்வதி. இவள் வடையை வாங்குகிறபோது பார்த்த பார்வை. பார்வையின் பூத்தூவல். 

“அட… என் செல்ல ராசா” என்று கொஞ்சுகிற பார்வை. 

இவனுக்குள் குளிர்க்கரங்களால் வருடுகிற அந்தப் பார்வை. 

“குனிஞ்ச தலை நிமிராம பழத்தை எடுங்க… வெருசா வூட்டுக்குப் போயிரலாம்.” 

ஒவ்வொருத்தரிடமிருந்தும் பழப் பெட்டிகளை வாங்கிச் சாக்கில் தட்டினான். ஏற்கனவே நிறைந்திருந்த பழச் சாக்குகளைக் குலுக்கி… தூக்கி… குலுக்கி… சாக்கின் வாயை சணலால் கட்டி… 

ஈரப் பழச் சாக்கு. கனத்த பாறைபோல உருட்டாக இருக்கிற சாக்கு. பிரேதக்கனம். மூச்சு பிடித்து, ‘தம்ப்’ பிடித்து தூக்கி தோளில் வைத்து… அப்படியே சைக்கிளுக்குக் கொண்டு வந்து கேரியலில் குறுக்காகப் போட்டு..நேர் செய்து… நூல் கயிறால் கட்டி… 

பெடலை மிதித்து ஏறுகிறபோது… அலை பாய்கிற சைக்கிள். கனம் தாளாமல் தத்தளிக்கிற சைக்கிள். கை பலத்தால் ஹாண்டில் பாரைப் பற்றி… இறுக்கி… ஃபாலன்ஸ் செய்து… 

அவனது வெற்று முதுகு வியர்வையில் பட்டு ஒளித்தெறிப்பாகிற மதிய வெயிலைப் பார்க்கிறாள் பார்வதி. 

உழைப்பு மும்முரத்தில் வெயிலின் உறைப்புத் தெரியவில்லை. சைக்கிள் ஊர் நோக்கி முன்னேறியது. 

ஏழு சாக்குப் பழங்களையும் வாங்கி வாங்கிப் போட்டு மூடையாக்கி… சைக்கிளில் வீடு கொண்டு வந்து சேர்த்து… 

ஏழாவது சாக்கை சைக்கிளில் ஏற்றுவதற்கு முன் அகத்திக் கொழை ஒடித்து… ஒரு கட்டாகக் கட்டி… அதையும் பழச்சாக்கு மேல் வைத்து… நூல் கயிறால் கட்டி… 

புருஷனையே பெருமிதமும் பூரிப்புமாகப் பார்க்கிற பார்வதி. ‘விடியக் காலம் வேற வெட்டிக் கதை ஏதேதோ பேசி கோணக்கால் சாத்துன மனுசரு… இப்ப இம்புட்டு வேர்வை வடிக்கிறாரே… என்ன மந்திர மாயம் இது?’ 

அவளுக்குள் மகிழ்ச்சியுடன் ஓடிய நினைவுகளின் புதிராட்டம். 

“பார்வதி குடுத்து வைச்ச மகராசி. ஒத்தை மனுசியா கெடந்து சீரழியுதாளேன்னு எரக்கப்பட்டு ஒத்தாசை பண்ண ஓடியார்ற ஆம்பளைகளைப் பார்க்க கெடைக்காத காலத்துலே… இப்படியொரு தங்கக்கட்டி.” 

மேலத் தெரு மூக்கம்மாவின் வெள்ளந்தியான பாராட்டுச் சொற்கள், பார்வதிக்குள் பூச்செண்டுகளாக விழுந்தன. பெருமையாக இருந்து கடைசி நிரைக்கு வந்துவிட்டனர். 

மூன்று மணிக்குப் பிறகு- 

பசுவைப் பத்திக் கொண்டு, மாட்டாஸ்பத்திரிக்கு கலிங்கப்பட்டி போகிற சுந்தரம். 

“மாட்டு டாக்டரு நம்ம ஊருக்கு வருவார்லே?” 

“வர்றது நிச்சயமா தெரியலியே… இதை நம்பிக்கிட்டு நாளைக்கடத்துறது நல்லதுல்லே. ரெண்டு மைல்தான். நாம நடந்தா… கொறைஞ்சா போயிருவோம்…?” 

பார்வதிக்கு பதிலைச் சொல்லி விட்டு, கலிங்கப்பட்டி நோக்கி பசுவை நகர்த்துகிற சுந்தரம். பசுவின் மெது நடை. அதற்கேற்ப இவனது இணை நடை. 

மாட்டாஸ்பத்திரியில் பசுவுக்குச் சினை ஊசி போட்டுவிட்டு… ஓட்டலில் நாலு இட்லி ஒரு தோசையைச் சாப்பிட்டு விட்டு… பார்வதிக்கும் ரெண்டு ரவா தோசை பார்சல் வாங்கிக் கொண்டு… 

“ரவா தோசைன்னா… அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று முணுமுணுத்துக் கொண்டபோது… ஆத்ம பங்காளியின் உயிரை உரசுகிற உயிரின் பரவசம், அவனுக்குள். 

பசுவோடு வீடு வந்து சேர்வதற்குள்- 

மணி எட்டாகிவிட்டது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது. அவனது முதுகு வியர்வையை வலது உள்ளங்கையினால் வழித்து நுகர்ந்து பார்க்கிற அந்தப் பாட்டாளி பார்வதி. 

“குளிச்சிட்டு வாங்க… சாப்புடலாம்.” 

இரு… இந்தப் பழச் சாக்குகளைக் களத்துலே போட்டுட்டு வந்துருதேன்…” 

நடந்த நடையில் தொடை எலும்புகள் யாவும் உருவியெடுத்துவிட்டமாதிரி இருந்தது. ‘உட்கார், உட்கார்’ என்று கெஞ்சுகிற குறுகெலும்பு. முதுகெல்லாம் ரணமெடுக்கிற வலி. 

தாழ்வாரத் திண்ணையில் கிடந்த பழச்சாக்குகளை ஒவ்வொன்றாக பார்வதி தூக்கிவிட… தலைச்சுமையாகவே களம் கொண்டு போய்ச் சேர்த்தான். பார்வதி மனப்பூரிப்பு. 

அவன் நெஞ்சு ரோமங்களுக்குள் வியர்வைக் கோடுகள். அதில் அப்பிக் கிடக்கிற சாக்குத் தூசிகள். நெஞ்சு ரோம வியர்வையில் முகம் புதைத்து… உதடுகளைப் பதிக்கிற பார்வதி. கிறங்கிச் சொருகுகிற கண்களுடன் தன்னுடன் உடல் படிகிற அவள். 

“ஏய்ய்… ஏய்ய்… இதென்ன கூத்து? நாத்தமெடுக்குற “ஏய்ய்…ஏய்ய்… வேர்வைக் கசகசப்பு.” 

“வேர்வை, நாத்தமில்லே. வாசம். ஒலகத்துலே உள்ள எல்லாத்தையும் உண்டாக்குகிற வாசம்.” 

உழைப்பைக் கொண்டாடுகிற அந்த சம்சாரிக் குடும்பத்துப் பெண்ணை அதிசயமாகப் பார்க்கற சுந்தரம். 

அன்றைக்கு இரவில்… 

அவனை அவள் கொண்டாடித் திணறடித்தாள். திணறலுக்கு மத்தியில் மூச்சிரைப்புடன் அவன் சொன்னான், போதையில் மிழற்றுகிறவனைப்போல. 

“உண்மையைச் சொல்லட்டா? நீ… ‘காய’ப் போட்டுருவீயோன்னு பயந்து போய்த்தான் அரை மனசோட வேலையை செய்ய ஆரம்பிச்சேன். வேலை செய்யச் செய்ய… மனசு ஒடம்பும் வேலையால முழுசா இழுக்கப்பட்டுருச்சு. இதுக்கு இருக்குற அதே கவர்ச்சி, உழைப்புக்கும் இருக்கு…” 

– ஜூலை 2009, ஓம் சக்தி.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *