வாரந்தோறும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 109 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒன்பதாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதி முடித்து விட்டு, கோடை லீவில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தான், தாழைச்சாமி. அக்கினி நட்சத்திர வெயிலெல்லாம் அவனால் கண்டு கொள்ளப்படாத எறும்புக் கடி மாதிரி. உச்சிமதிய வெயிலில் கிரிக்கெட் விளையாடுகிற மகிழ்ச்சி உக்கிரம். புருவ வியர்வையைக் கட்டை விரலால் வழித்தெறிந்து கொண்டு…. பேட்டை ஓங்கியடிக்க… ஓடி வந்த பந்து இரைச்சலுடன் ஆகாயத்தை நோக்கிப் பறக்க… ஃபீல்டர்ஸ் அண்ணாந்து பார்த்துக்கொண்டே பின்னோக்கி ஓடி, தடுமாறி விழுவதைப் பெருமிதமாக ரசிக்கிற தாழைச்சாமி. பூரிப்பும் களிவெறியுமாகக் குதிக்கிறான். நெஞ்சு விம்முகிறது. 

“சிக்ஸ…ர், சிக்ஸ…ர்… சிக்ஸ…ர்” என்று இவர்கள் போடுகிற கூப்பாடுகளிலும் கூச்சலிலும் சித்திரை மாத வெயில் நடுங்கியதிர்கிறது. தூரத்தில், மின்கம்ப உச்சியில் தோகை தொங்க உட்கார்ந்திருந்த ஆண்மயில், பயத்தில் திடுக்கிட்டு வீறிட்டலறுகிறது. 

அந்த உற்சாக போதையிலும் மனசில் ஓடுகிற ஒரு நினைவு மின்னல். ‘ஐயாகிட்டே ரூவா கேக்கணும். நைட்லே சினிமாவுக்குப் போகணும்.” 

மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகிறபோது, மணி மூணரையாகிவிட்டது. விளையாட்டு மும்முரத்தில் பசியும் நேரமும் போயிற்று. 

ஊர்ப் பொங்கல் வருகிறது. அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா. ‘வெள்ளையடிக்கணும், துணிமணி யெடுக்கணும், கறியெடுக்கணும், பலகாரம் தோசைக்குப் பணம் வேணும்… பொங்கல் வரி குடுக்கணும். இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது’ என்ற மனச்சஞ்சலத்திலும், கவலையிலும் சோர்ந்து துவண்டு கிடந்த சாமிநாதன், திண்ணையில் உட்கார்ந்திருந்தான். 

ஆடி முடித்த களைப்பும், ஆனந்தத் திளைப்புமாக புழுதியும் வேர்வையும் படிந்து அழுக்கான தோற்றத்தில் வீடு நுழைகிற தாழை. 

“என்ன… தொரைக, இப்பத்தான் வீடு தெரியுதா?” “ம்ம்ம்… வெளையாடப் போயிருந்தேன்.” 

“சோத்தை திங்கவும் தொரைகளுக்கு நேரமில்லியோ?” 

ஐயாவின் எகத்தாளமும் பரிகாசமுமான ஏளனக் கேள்விகள். இவனுக்குள் செருப்பால் அடிபட்ட மாதிரியிருக்கிறது. 

மனசெல்லாம் முள் குத்தின வலி. பூரிப்பில் மலர்ந்து அகல மாகியிருந்த அந்தச் சிறிய முகம், உயிர்க்களையிழந்து, குறாவிப் போய்விட்டது. 

“ரூவா… இப்பக் கேக்க முடியாது. நேரம் சீரில்லே” என்று வலியுடன் முணுமுணுத்துக் கொள்கிற தாழை. 

இவனே… கையைக் காலைக் கழுவி, வட்டிலை எடுத்துக் கழுவி உதறி… பானைச் சோற்றில் கைவைத்துப் பெயர்த்து எடுத்தான். குழம்பு இருந்தது கொஞ்சமாய். 

பசி மந்தித்து விட்டது. ஆயினும். சாப்பிட்டான், தாழை. அவனுக்குள் முகம் காட்டுகிற இங்கிலீஷ் வாத்தியார். மீசையில்லாத முகம். ரத்தச் சிவப்பான கண்கள். அவர் வகுப்பு தான் ஒரே அச்சலாத்தி. ஓர் இழவும் புரியமாட்டேன் என்கிறது. அதிலும் அவர் நடத்துகிற கிராமர் பாடம். சுத்தமாக விளங்க மறுக்கிறது. கண்ணைக் கட்டி முள்காட்டில் விட்டமாதிரி இருக்கும். அவரிடம் பட்ட அடிகள் கொஞ்சமில்லை. 

இங்கிலீஷில் நிச்சயம் பெயில்தான். சந்தேகமில்லை. 

அம்மா வருகிறபோது ஐயா போய்விட்டார். நல்லவேளை. 

“யம்மா..”. 

“என்னடா?” 

“ஃப்ரெண்ட்ஸெல்லாம் சினிமாவுக்குப் போறாங்கம்மா…”

தொண்டைக்குள் சத்தமாகப் பேசுகிறான். குழைவான கெஞ்சல் குரல். 

“போவட்டும்… அதுக்கென்ன?” 

“என்னையும் கூப்டுறாங்கம்மா.” 

“அதுக்கு?” 

“பத்துரூவா வேணும்மா… ஐயா… கிட்டே கேக்கலாம்னா… அவரு நல்ல மூட்லே இல்லேம்மா.” 

“கூட்டாளிக போறப்ப… நீ போகாம இருந்தா, நல்லாயிருக்காது. நீ ஆசைப்படுறது ஞாயந்தான்.” 

“ரூவா குடும்மா…” ஆவல் பறப்பில் காற்றடித்த பலூனாக அவன். 

‘அதானடா… ஏங்கிட்டே இல்லே… சல்லிக் காசுகூட இல்லே.” 

வெட்டுப்பட்டு வெயிலில் கிடந்த கொடியாக முகம் வாடிப்போன தாழை. 

“ஏம்மா… ஒரு பத்து ரூவாகூட தரமாட்டீயாம்மா? அதுக்கும் விதியத்துப் போச்சா?” 

அவன் குரலில் மனக்கொதிப்பின் வெப்பம். 

“ஊர்ப்பொங்கச் செலவுக்கு வழி தெரியாம கண்ணு முழி பிதுங்கிப் போயி நிக்குது, வீடு. நீ என்னடான்னா… சினிமாச் செலவுக்கு ரூவா கேட்டு கிணுங்குதே? தாய் தவுட்டுக்கு தவிச்சாளாம், புள்ளே இஞ்சிப்பச்சடி கேட்டுச்சாம்.” 

காட்டமில்லாத அம்மாவின் கோபக் குரலில், ஒருவித சோக நிழலே படிந்திருக்கிறது. இவனுக்குள் உணரமுடிகிறது. ‘ஒரு சினிமாவுக்கு போறதுகூட… இம்புட்டுப் பெரிய மலைப்புரட்டா இருக்குதே…’ 

மலையைப் புரட்டவே முடியவில்லை, கடைசி வரைக்கும். 

“ஏலேய்… தாழை, வாரீயா… வரல்லியா?” 

“காசு இல்லேடா… நாவல்லேடா…” 

இந்த வார்த்தையைச் சொல்லுகிறபோது, இவனுக்குள் ஓர் உடைவு. ஏமாற்ற அறையால் நிகழ்கிற மனச்சரிவு. அழுக வேண்டும்போல ஒரு நெஞ்சுவிம்மல். பீறிட்டுப்பாய்கிற சோகத்தின் முட்டலில் கண்ணோரக்கசிவு. 

இவனுக்குள் தாங்க முடியாத ஏக்க பாரம். 

ஊர், தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, பொங்கலுக்கு. கடன் உடன் வாங்கி… வீடு வெள்ளையடிப்புகள் தோரணப் பின்னல்கள், டிஜிடல் பேனர்கள். ஒரு தடவை அன்னதானத்துக்குப் பொறுப் பேற்று, பக்த கோடிகளை வரவேற்கிற ‘அருஞ்சுனை காத்த அய்யனார் சுவாமி வகையறாக்களின்’ வண்ண டிஜிடல் பேனர். 

மதுரை, சென்னை, கோவை, திருப்பூர், கேரளா என்று தொலைதூரத்திலிருந்து வந்து சேருகிற இந்த ஊரின் முன்னாள் வாசிகள். கோவில் திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிறந்த ஊர் மண்ணை வந்து மிதிக்கிற பரவசத்தை ருசிக்கிற வெளியூர் வாசிகள். கொண்டாட்ட குதூகலம். கூடி மகிழ்கிற மனப் பரவசம். 

பேருந்துகளிலிருந்து கூட்டம் கூட்டமாக பேக்கும் சூட்கேஸுமாக இறங்குகிற ஆட்கள். வெள்ளையும் வெளிச்சமுமாக ஆட்கள். 

பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்கிற தாழை. பஸ்ஸிலிருந்து இறங்குகிற ஒவ்வொரு முகத்தையும் உற்று உற்று கவனிக்கிறான். 

ஏழாப்பு வரைக்கும் இவனுடன் படித்த ஆறுமுகம், இப்போது சென்னையில் மளிகைக்கடையில் வேலை பார்க்கிறான். பொங்கலுக்கு ஊர் வருவதாகச் சொல்லியிருக்கிறான். 

அவனைப் பார்த்து ரெண்டு வருஷமாகிவிட்டது. அவனுக்குப் பட்டப் பெயரே… கந்தலு. என்றைக்குப் பார்த்தாலும் கிழிந்த டவுஷரோ… கிழிந்த சட்டையோ தான் போட்டிருப்பான். கிழியாத சட்டை போட்ட நாளே கிடையாது. எண்ணெய் காணாமல் செம்பட்டையாகிப்போன தலைமுடி. சொங்கு பற்றிய தேகம். 

“ஏலேய் கந்தலு… ஏலேய் கந்தலு”ன்னுதான் அவனைக் கூப்பிடுவார்கள். ஆறுமுகம் என்ற அழகுப் பெயர் யார் நினைவிலும் இருக்காது. 

பாதி வெள்ளையும் மீதி சாம்பலுமாயிருந்த ஜீன்ஸ், கட்டம் போட்ட முழுக்கைச் சட்டை, கருப்பாக இல்லாத கூலிங் கிளாஸ் பெரிய பேக்குடன் வந்து இறங்கிய ஒருவன். 

அடையாளமே தெரியவில்லை. 

“ஏலேய் தாழை” என்கிற பரிச்சயக் குரல். திடுக்கிட்டான். “யாரு…இது? ஆறுமுகமா?” ஆச்சரியமும் வியப்புமாகத் திகைக்கிற தாழை. 

அதற்குள் சிணுங்குகிற செல்போன். முழங்கால் பையிலிருந்து எடுத்துப் பேசினான். 

“வந்துட்டேன்… இப்பத்தான்… ஆட்டும்… ஆட்டும்… தேடிப் பாக்குறேன்… சரி… சரி… ட்ரை பண்றேன்… கெடைக்கும்… கையோட கூட்டிட்டு வந்துருதேன்…” 

போனை அணைத்து பைக்குள் போட்டான். தாழைச்சாமியின் தோளில் கை போட்டான். 

“என்னடா… தாழை நல்லாயிருக்கீயா?” 

“இருக்கேன்… என்னத்தையோ” சோர்வும் அயற்சியுமாக தாழையின் குரல். 

“ஒனக்கென்னடா, ராசா. அம்மா அய்யா கூட சாப்பிட்டுக்கிட்டு… வீட்லே இருக்கே. ஸ்கூலுக்குப் போறே. என்னை மாதிரி மளிகைக் கடையிலே… தூரந்தொலைவுலே… அறியாத ஜனங்களோட… சீரழியுறே?’ 

“இப்பப் பாத்தா… நீதான் ஆபீஸர் மாதிரி டிப் – டாப்பா இருக்கே… ஆள்… ‘ஜம்ம்’ முன்னு இருக்கே…” 

“இது ஊருக்கு வர்றதுக்காக போட்ட வேஷம்டா. அங்க உண்ண நேரமிருக்காது… ஒறங்க நேரமிருக்காது. கக்கூஸ் போக பொழுதிருக்காது. பொழுதுக்கும் கடைக்குள்ளே கெடந்து வேகணும், சாகணும்டா.” 

அவன் இவனைப் பார்த்து பொறாமைப்பட… இவன் அவனைப் பார்த்து பிரமிக்க… பரஸ்பரம் பேசிக் கொள்ள வண்டிவண்டியாக விஷயம் இருக்கிறது. டீக்கடையில் இருவரும் டீயடித்த பிறகு, ஆறுமுகம் அவன் வீட்டுக்குப் போனான். 

தாழையும் ஆறுமுகமும் மூன்று நாளும் கூடவே அலைந்தார்கள். கோவிலில் அன்னதானம். தெருவில் நடை. வண்டி வண்டியாக பேச்சு. பேச்சு… பேச்சுகள். 

ஆறுமுகம், ஞாயிற்றுக்கிழமையின் மாலைப் பொழுதைச் சொன்னான். கொஞ்சம் விட்டு விடுதலையாகிற தப்பித்தல் நேரம். பீச்சுக்குப் போய் கடல் மணலில் கால் புதைய நடந்து விட்டு… வாய்க்கு ருசியாக ஓட்டலில் சாப்பிட்டு விட்டு… சினிமாவுக்குப் போய்விட்டு, வீடு வந்துசேர ராத்திரி மணி பன்னிரண்டாகி விடும். 

அவன் பார்க்காத சினிமாவே இல்லை. ‘பசங்க’கூட பார்த்து விட்டான். ‘கல்லூரி’யை மட்டும் மூன்று தடவை பார்த்திருக்கிறான். ‘பூ’படம் நாலு தடவை பார்த்தானாம். 

புத்தம் புதுப் படங்களையெல்லாம் சுடச்சுட பார்த்து விடுகிறான். பார்த்த சினிமாக்களைப்பற்றி ஆறுமுகம் சொல்லச் சொல்ல… இவனுக்குள் வருகிற ஏக்கம். மெல்லிய பொறாமை. 

“ஆயிரந்தான் இருந்தாலும்… ஒன்னைமாதிரி யோகம் யாருக்கும் அமையாதுடா… அம்மா, ஐயாகூட இருப்பு. வீட்டுச் சாப்பாடு. பாசமான பேச்சு. பள்ளிப் படிப்பு. கிரிக்கெட் விளையாட்டு.” என்று ஆறுமுகம் சொல்கிற போது, அதை இவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. இவனுக்குள் ஒட்டாத குரலாக அது இருந்தது. 

தாழைக்குள் சினிமா அரங்குகள். வாரா வாரம் புதுப் படம் ஒவ்வொரு ஞாயிறும் சினிமா சொர்க்க தரிசனம். 

அவனுக்குள் விரிகிற மாய உலகம். அதன் ஈர்ப்பு, காந்தக் கவர்ச்சி. அந்த மயக்கத்தில்… அவன். 

“டேய்… தாழை, நா போறப்ப ரெண்டு பையங்களோட போகணும். கடைக்குத் தேவைப்படுது. நம்ம ஊர்லே யாரும் வருவாங்களாடா?” 

“என்னடா சொல்றே?” 

“எங்க கடை ஓனர் பத்தாயிரம் ரூவா குடுத்து வுட்டுருக்காரு.” 

“எதுக்கு?” 

“பையன் கெடைச்சா… வீட்டுக்கு ஐயாயிரம் ரூவா முன் அட்வான்ஸ் குடுத்து, கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காரு…” 

ஆறுமுகத்தை நின்று நிதானித்துப் பார்க்கிற தாழைச்சாமி. சற்றே யோசிக்கிற அவன். 

மிரட்டுகிற இங்கிலீஷ். வரப்போகிற பெயில் என்கிற ரிசல்ட். பழைய சினிமா பார்க்கக்கூட பணம் கிடைக்காத நிலைமை. வறட்டிழுப்பு வாழ்க்கை. தவிட்டுக்கு தவிப்பு. 

“பேசாம… நாம போய்ட்டா… என்னா?” 

“என்னடாதாழை?” 

“நாவாரேண்டா…” 

“எங்க?” 

“கடைக்கு?” 

அதிர்ச்சியில் பதறித் துடிக்கிற ஆறுமுகம். 

“ஒனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருச்சா? மடத்தனமா பேசுறே?” 

ஆறுமுகத்தின் மறுப்புகள், தடுப்பு முயற்சிகள்… கோப வார்த்தைகள், மிரட்டல்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ‘வாரந்தோறும் சினிமா என்ற மயக்கத்தோடு தன்னுடன் பஸ்ஸில் பயணம் செய்கிற தாழையைப் பரிதாபமாகப் பார்க்கிற ஆறுமுகம். 

“பொங்கலுக்கு வெட்டுப்படாத கிடா, மளிகைக் கடைக்கு வருது’ என்று நினைக்கிறபோது, அவனுக்குள் ஒரு சோக இருட்டு கவ்வுகிறது. 

– அக்டோபர் 2009, ஓம்சக்தி.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *