அக்கரைப் பச்சை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 1,230
தேர்வு எழுதி முடித்துவிட்டு, பேசிக்கொண்டே ஜெகனும் செல்வியும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.
புதுசா ஸ்கூட்டர் வாங்கியாச்சு என்று கேள்விப்பட்டேன். பிடிவாதமாக இருந்து வாங்கி விட்டாய் போல என்றாள்.
ஆமாம். இல்லாட்டா, வீட்டில இருக்கும் “ஓல்ட் மாடல்” சைக்கிளில்தான் நான் காலேஜ்-க்கு போக வேண்டியிருக்கும். பெரிய சாதனை செய்த பாவனை ஜெகனின் முகத்தில்.
“சரி.சரி இன்னிக்கு எக்ஸாம் எப்படி செய்தாய் ?”
“நன்றாக செய்திருக்கிறேன். நீ எப்படி செய்தாய் ?” என்ற ஜெகன் “பெண்கள் உங்களுக்கெல்லாம் என்னப்பா பாஸ் ஆனா காலேஜ் ; ஃபெய்ல் ஆனா மேரேஜ். ஆனால் எங்களுக்கு அப்படியா ? பாஸ் ஆனா காலேஜ் ; பெயில் ஆனா வில்லேஜ் ….தானே” என்று சிரித்தான் .
“வில்லேஜ், விவசாயம் என்றால் மட்டமா ? ஏன்பா….. இப்படி ஒரு அலட்சிய எண்ணம் உனக்கு” என்று சலித்துக்கொண்டாள் செல்வி .
“நான் அப்படி சொல்லவில்லை. காலேஜ்-ல் சேர்ந்தாலும் படிப்பை முடித்துவிட்டு இங்கேயே விவசாயம் பார்த்துக்கொண்டு இரு என்கிறார் அப்பா. ஆனால் எனக்கு மேலே படித்து வெளியூரில் நல்ல வேலைக்கு போக வேண்டும். அதுதான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ் ; முயற்சிப்பேன். அப்படி நினைத்தபடி கிடைக்கவில்லை என்றால்தான், கை வசம் இருக்கவே இருக்கு விவசாயம், ரைஸ் மில், தோட்டம், துரவு எல்லாம் …..”
“எக்ஸாம்-தான் சாய்ஸ் பார்த்து எழுதுவார்கள். உனக்கு எல்லா விஷயங்களிலும் சாய்ஸ் தான்.”
“உங்க வீட்டில பையன் நீ ஒருத்தன்தானே ; நிலம், நீச்சு எல்லாம் உங்க அப்பா மட்டும்தானே கவனிக்கிறார். வசதி, வருமானத்திற்கும் ஒன்றும் குறைவில்லை. வெளியே வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லையே . உன்னை படிக்க வைக்கிறார். உன் ஆசைக்கு படித்துவிட்டு உன் அப்பா ஆசைப்படி தொழிலில் பங்கு எடுத்தால்தான் என்ன? உங்க அப்பாவுக்கு துணையாக இருந்தால் ஆகாதா ? ”
“இல்லை. எனக்கு நல்லா படித்து, நல்ல வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும். அதுதான் என் கனவு. அதை நோக்கியே என் செயல்கள். என் பயணம் . இந்த கிராமத்திலேயே சுற்றி, சுற்றி வந்து உழைப்பது இரண்டாம் பட்சம்தான்.” ஜெகன் தன் எண்ணத்தில் உறுதியாக நின்றான் .
“உன் ஆசையை, கனவுகளை நான் தப்பு சொல்லவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு. ஆனால் அதற்காக இது வரை உனக்காகவே வாழும் உன் தந்தையையோ அல்லது அவரது தொழிலையோ அலட்சியம் செய்யாதே”
“எனது குடும்பத் தொழில்கள் கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது. வேண்டும்போது நெய்யாக மாற்றிக்கொள்ளலாம். நான் உடனடியாக நெய்யை தேடுகிறேன் என்று வைத்துக்கொள்ளேன்”.
வாழ்க்கையும் வெண்ணெயும் ஒன்றா ? உன் எண்ணப்போக்கே எனக்கு புரியவில்லை . போ. என்று அலுத்துக்கொண்டாள் செல்வி.
ஜெகனும் செல்வியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். ஒரே பள்ளியில் படிக்கின்றவர்கள். பள்ளி இறுதியாண்டில் தேர்வுகள் முடிந்தபோதுதான் மேற்கண்ட உரையாடல் நடந்தது .
காலம் தன் பாட்டிற்கு ஓட, செல்வி கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியையாக அருகில் உள்ள ஊரில் பணியாற்றுகிறாள். ஜெகனும் தன் விருப்பப்படி படித்து வெளியூரில் இன்று நல்ல வேலையும் கிடைத்து விட்டது. அவனது தகப்பனார் அவனுக்கு கல்யாணத்திற்கு பெண் தேடவும் ஆரம்பித்தார். ஆனால் விருப்பப்படி பெண் அமைந்த பாடுதான் இல்லை.
இந்நிலையில்தான் ஊருக்கு வந்த ஜெகன் செல்வியை தேடி வந்தான்.
“வாங்க மாப்பிள்ளை சார் ….வாங்க” என்று கிண்டலாக வரவேற்றாள் செல்வி.
“என்ன. வரவேற்பு எல்லாம் பலமாக இருக்கிறதே ?
“உனக்கு கல்யாணம் செய்ய தீவிரமாக பெண் தேடுவது பற்றி உன் அப்பா சொன்னார். அதனால்தான் இப்படி கூப்பிட்டேன். விரைவில் மாப்பிள்ளையாக மாற என் வாழ்த்துக்கள்” என்றாள் செல்வி.
“நான் மாப்பிள்ளையா….இல்லையா என்பதை நீதான் சொல்ல வேண்டும் ” என்ற ஜெகனை புரியாமல் பார்த்தாள் செல்வி.
“சின்ன வயதிலிருந்து என்னை பற்றி தெரியும்தானே? உன் விருப்பத்தை சொல்லு. என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா?”
“என்ன திடீரென இப்படி கேட்கிறாயே? என்னாச்சு? உன் எதிர்பார்ப்புக்கேற்ற பெண் கிடைக்கவில்லையா? என்னிடமும் ஒன்றும் சொல்லாமல், உன் பெற்றோரிடம் பெண் தேடவும் சொல்லி விட்டு, அப்படி தேடி, உன் விருப்பம் போல பெண் அமையாத போது என் சம்மதம் கேட்கிறாயே ?” கேள்வி கேட்ட செல்வியிடம்,
“கல்யாணம் என்றாலே நான்கு இடம் தேடிப்பார்த்து தேர்வு செய்வதுதானே வழக்கம். அதிலென்ன தப்பு.” வழக்கம்போல் வாதாடினான் ஜெகன்.
“உண்மைதான். அதை நான் தப்பாக சொல்லவில்லை. உன் கல்யாணத்திற்காக பெண் தேடும் முன்னமே என்னிடம் கேட்டிருந்தால் ஒரு வேளை, ஒத்துக்கொண்டு இருப்பேனோ என்னவோ. என்னை விரும்பி மணம் புரிய நினைக்காமல், வேற பெண் கிடைக்காதபோது, வழியில்லாமல் செலக்ட் செய்தது பிடிக்கவில்லை.
உன் மனசு அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கிறது. முடிவு எடுப்பதில் உள்ள தடுமாற்றம் இன்னும் உன்னை விட்டு போகவில்லை பார்த்தாயா?”
“கல்யாணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது. வாழ்நாள் முடிய தொடர வேண்டிய பந்தம். அந்த பந்தத்தை ஒரு காம்ப்ரமைஸ்-ல் தொடங்க எனக்கு விருப்பமில்லை. வாழ்நாள் முழுவதும் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்.”
உன் பாஷையில் சொல்வதென்றால், நான் வெண்ணெயாகவே இருந்து விடுகிறேன். நெய்யாக மாற விருப்பம் இல்லை. என்னை, எனக்காகவே விரும்பி தேடிவரும்
ஒருவருக்கு நான் மாலையிடுவேன். வெண்ணெய் என்றாலே என்றாலே நெய்யாக மாறித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வெண்ணெயை அப்படியே விரும்பும் மனிதர்களும் உண்டு.
உண்மையில் எனக்கு உன் மீது அப்படி ஒரு எண்ணமோ, விருப்பமோ இல்லை.
நீ உன்னுடைய எண்ணத்தை, ஆசையை மட்டுமே யோசிக்கிறாய். அடுத்தவர் மனதைப் பற்றியோ அவர்களது விருப்பத்தையோ யோசிப்பதில்லை. ப்ளீஸ் ….. உன் எண்ணத்தை மாற்றிக்கொள். என்னிடம் இப்படி கேட்டதை மறந்துவிடுகிறேன். நாம் என்றும் இப்படியே நண்பர்களாகவே இருந்து விடுவோம் ஓ.கே” என்று கூறிவிட்டு செல்வி அங்கிருந்து நகர்ந்தாள்.
எதுவுமே அருகில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது; தேடிப்போகும்போது நமக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து வெட்கித் தலை கவிழ்ந்தான் ஜெகன்.