அகல் விளக்கு
கதையாசிரியர்: மு.வரதராசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 101
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம் – 25

ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன்.
பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று எதிர்பார்த்துப் பிரித்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் என் கலக்கத்தை மிகுதிப்படுத்தியது. நான் சோழசிங்கபுரத்துக்குச் சென்றபோது, அவன் இல்லாமற் போனதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பண முடையால் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தான்படும் துன்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான். இந்த வேளை பார்த்துத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்ச் சுகமாக உட்கார்ந்திருப்பதாகக் குறித்திருந்தான். கடைசியாக, எப்படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் தரவேண்டும் என்றும், எந்தக் காரணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது என்றும், இந்தச் சமயத்தில் இந்த உதவி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையே அடியோடு போய்விடும் என்றும் எழுதியிருந்தான்.
தங்கைக்குத் தையல்பொறி வாங்கித் தருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டேன். அதற்காக அந்த மாதச் சம்பளத்திலிருந்து நூறு ரூபாய் தனியே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் இரண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து வைத்தால் அவளுக்கு அதை வாங்கிக் கொடுத்துவிடலாம், அவ்வாறு செய்தால் பொருள் வகையிலும் அந்தக் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்ததாகும். அதைக் கொண்டு அக்கம் பக்கத்தாருக்குச் சோளி சொக்காய் முதலானவை தைத்துக் கொடுத்துத் தன் குடும்பத்துக்குச் சிறு வருவாயும் தேடிக் கொள்வாள் என மகிழ்ந்திருந்தேன். என் திட்டமெல்லாம் வீண் மனக்கோட்டை ஆனதாக வருந்தினேன்.
இரண்டாயிர ரூபாயை யாரிடமிருந்து நான் எப்படி வாங்கித் தருவது? தந்தையாரின் மளிகைக்கடை வீட்டுச் செலவுக்கு வேண்டிய வருவாயைக் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நிலையில் நான் அவரைப் பண உதவி கேட்க முடியாது. அவருக்கு இந்தச் செய்தி தெரிந்தாலும் என்மேல் வருத்தப்படுவார். மாலனுக்கு நான் உதவி செய்யப் போவதாகத் தெரிந்தால் அந்தப் பணம் வீணாகி விடும், திரும்பி வராது என்று அம்மாவும் தடுப்பார். நான் உதவி செய்யாமல் இருப்பதும் முடியாது. மாலனும் பொறுப்போடு பணத்தைக் கையாள்பவனாகவும் தெரியவில்லை. வீண் செலவு செய்பவன் அல்ல. ஆனால், வழியல்லா வழியில் போய் ஏமாந்து கெடுகின்றான். என்ன செய்வது என்று மூன்று நான்கு நாள் கலங்கிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஆயிர ரூபாயாவது அனுப்புவது என்றும் கையில் இருந்த இருநூறோடு இன்னும் எண்ணூறு கடன் வாங்கிச் சேர்த்து அனுப்புவது என்றும் முடிவு செய்தேன். யாரிடம் சென்று கடன் கேட்பது? நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடமே சென்றேன். அவரும் பணவகையில் பலருக்குக் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவர். ஏமாந்த கதைகளை எல்லாம் என்னிடம் விரிவாகச் சொல்லிக் கடைசியில் பணம் கொடுக்க இசைந்தார். மாதம் நூறு நூறாக எட்டு மாதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கொடுத்தார்.
ஆயிரமும் சேர்த்து மாலனுக்கு அனுப்பியபோது விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். கடன் வாங்கி ஆலை வைக்கும் முயற்சி தொடங்கியிருக்கக் கூடாது என்றும் அங்கேயே இருந்து இரவும் பகலும் தொழிலைக் கவனிக்கவேண்டும் என்றும், இனிமேல் சாமியார்கள் பின்னே சுற்றக்கூடாது என்றும், மூடநம்பிக்கைகளைக் குறைத்து உழைப்பையும் உண்மையையும் நம்ப வேண்டும் என்றும் கடுமையாகவே எழுதியிருந்தேன். அவனுடைய மனைவி கற்பகத்தை என் தாய் கண்டு பேசினார் என்றும், அவளாகக் கணவனை விட்டு வரவில்லையாம் என்றும், கணவனோடு எப்போதும் வாழ விரும்புகிறாளாம் என்றும் மாமனார் கொடுத்தால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வற்புறுத்திக் கேட்பது தகாது என்றும், எனக்கு நேரே தெரியாத செய்திகள் போல், அவனுடைய மன உணர்ச்சியைப் புண்படுத்தாத வகையில் குடும்பத்தைப் பற்றியும் அறிவுரை எழுதியிருந்தேன்.
சந்திரன் போல் அவன் கடிதம் எழுதாமல் இருக்கவில்லை. அந்த வகையில் அவன் ஒருபடி மேலானவன் என்றே சொல்ல வேண்டும். உடனே கடிதம் எழுதியிருந்தான். பணம் வந்து சேர்ந்ததற்காக நன்றி தெரிவித்தான். இன்னும் ஓராயிரம் அனுப்ப முடிந்தால் பேருதவியாகும் என்றும் எழுதியிருந்தான். இனிமேல் தொழிலை அக்கறையுடன் கவனிக்க முடியும் என்று உறுதியும் கூறியிருந்தான். ஆனால், தன் மனைவியைப் பற்றி ஒரு சொல்லும் எழுதவில்லை. ஒருகால் இந்தத் துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது என்றும், பணம் வாங்கத் திறமையில்லாத என்னுடைய அறிவுரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எண்ணியிருப்பான். கல்லூரியில் படித்தபோதே சோதிடத்தை நான் நம்பவில்லை. அப்போது, ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று இகழ்ந்தவன் அவன். அதே மனநிலையோடு இப்போதும் என் அறிவுரையை இகழ்ந்து ஒதுக்கியிருக்கக் கூடும். இப்படி மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிப் பணம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணிவிட்டிருப்பான். எப்படியோ போகட்டும். தொழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால் போதும் என்று ஆறுதல் அடைந்தேன்.
ஐந்தாம் மாதம் மனைவியையும் மாதவியையும் அழைத்து வருவதற்காக ரயில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மாலனுக்கு உதவி செய்ததைப் பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். தையல்பொறி வாங்குவது பற்றி அம்மா ஏதாவது கேட்டாலும் திருடனைத் தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
நான் வீட்டுக்குள் நுழைந்தவுடனே தங்கை மணிமேகலையைத் தான் கண்டேன். அவளுக்கு செய்வதாகச் சொன்ன உதவியை நினைத்து மனம் திக்கென்றது. ஒருவாறு மனத்தை மாற்றிக்கொண்டு பேசினேன். மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அம்மா இல்லை. எங்கே என்று கேட்டேன். கற்பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக சொல்லவே அம்மாவும் அவர்களோடு நேற்றுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாள் தங்கை. “நேற்று கற்பகம் அழ, மாமி அழ, வீடு ஒரே துயரமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக அழுதார்கள்” என்றாள் மனைவி.
“என்ன காரணம்? திடீரென்று இறந்துபோன காரணம்” என்றேன்.
“யாருக்குமே தெரியாது. அம்மா வந்தால்தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் வந்தார்.
என்னென்னவோ எண்ணினேன். சந்திரன் ஏதாவது கொடுமை செய்திருப்பானோ என்றும் ஓர் எண்ணம் வந்தது. சே, என்ன கெட்டவனாக இருந்தாலும் அந்த எல்லைக்குப் போயிருக்க மாட்டான் என்று தெளிந்தேன்.
அன்று பகல் உணவுக்கு உட்கார்ந்தபோது, பாக்கியம் தங்கையையும் மனைவியையும் உடன் உட்கார்ந்து உண்ணுமாறு வற்புறுத்தினார். “மாதவி தூங்குகிறாள். அவள் எழுவதற்கு முன்னே சாப்பாட்டு வேலையை முடித்து விடலாம்” என்று வற்புறுத்தி உண்ணச் செய்தார்.
உணவின் போது, கற்பகத்தின் பேச்சைத் தங்கை தொடங்கினாள். “வீட்டில் பிறந்த பெண்ணும் நன்றாக இல்லை. புகுந்த பெண்ணும் இப்படி ஆகிவிட்டாள்” என்று வருந்தினாள். மறுபடியும் அவளே, “பெண்ணாய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. தக்க கணவர் கிடைக்காத பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். நம் நாட்டில் மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?” என்றாள்.
உணவு பரிமாறிக்கொண்டிருந்த பாக்கியம், “மணிமேகலைக்குத் தக்க கணவன் இல்லையா? அவளே துறவியாகிவிட்டாள். ஆண்டாளுக்குக் கணவன் கிடைக்கவில்லையா? மனிதரை மணக்க மாட்டேன் என்று உறுதி பூண்டார்” என்றார்.
“நல்ல கணவராக இல்லை என்று தெரிந்தால் நாமும் அப்படி இருந்துவிடவேண்டும்” என்றாள் தங்கை.
என் இலையில் மோர் விட்டபடியே பாக்கியம் அதற்கும் மறுமொழி சொன்னார். “ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், மீராவைப் போல் திருமணம் ஆனபிறகு கணவனைக் கைவிட்டுப் போகக்கூடாது” என்றார்.
என் மனம் திடுக்கிட்டாற் போல் நின்றது. உணவை மறந்து அவருடைய புதிய கருத்தில் சென்றது. அவர், விட்ட மோர் இலையைவிட்டு ஓடி மனைவியின் இலைப்பக்கம் சென்றது. “அப்புறம் யோசிக்கலாம். சோற்றைப் பிசையுங்கள். மோர் தரையில் ஓடுகிறது” என்று மனைவி சொன்ன போதுதான் என் கைகள் கடமையை உணர்ந்தன. எண்ணிக் கொண்டே உண்டேன். உண்டு முடித்துக் கை அலம்பிய பிறகு, “மீரா செய்ததில் தவறு என்ன? கணவன் உயரவில்லை. தாம் உயர்ந்த நிலையை எட்டி விட்டார். ஆகவே குடும்பத்தைத் துறந்து விட்டார்” என்றேன்.
“சரி இருக்கலாம். காளிகோயிலில் இராமகிருஷ்ணர் தவம் செய்தாரே. அவர் உயர்ந்த நிலையை அடையவில்லையா? அதனால் மனைவி சாரதாமணியை விட்டுத் துறந்துவிடவில்லையே. மனைவியிடத்திலும் கடவுளைக் கண்டாரே. அதுபோல் மீரா கணவனிடத்திலும் தெய்வத்தைக் கண்டு வாழ்ந்திருக்கலாமே” என்றாள் தங்கை.
என் மூளையில் மின்னல் பாய்ந்தது போல் இருந்தது.
“உண்மை, அது சரி” என்றார் பாக்கியம்.
தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். “சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்.
பாக்கியம் மறுமொழி கூறினார்; “நெடுமாறனுடைய மனைவி மங்கையர்க்கரசி என்ன செய்தார்? கணவன் வேறே வழியாகச் சென்றபோதிலும், அவனோடு அன்பாக வாழவில்லையா? கடைசியில் கணவனைத் திருத்தும் முயற்சியில் வெற்றியும் பெறவில்லையா?” என்றார்.
பேசாமல் இருந்தேன்.
“கற்பகத்துக்கு முந்தாநேற்று இரவும் இதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்த வேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடாதே; ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்ப துன்பமே உன் இன்ப துன்பம்; இன்ப துன்பம் மட்டும் அல்ல, ஆக்கமும் அழிவும் கூட அப்படியே இருவர்க்கும் பொதுவாகக் கருதவேண்டும்; கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சி வேண்டும் என்று எவ்வளவோ சொன்னேன். கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும், எதிர்த்துப் பிரிந்து வாழ்வதைவிட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து, சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும், அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்துவிட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை, அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்? எவ்வளவு தியாகம் வேண்டும்? சரியோ தவறோ, ஒருவனோடு பிணைந்து விட்ட வாழ்வு அவனோடேயே போகட்டும் என்ற துணிவு பழங்காலத்தில் பெண்களுக்கு இருந்தது. இந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் இப்படித் துணிய மாட்டாள். கற்பகம் மட்டும் துணிய முடியுமா? அவளைக் குறை கூற முடியாது” என்றார்.
“கற்பகத்திடமும் குறை உண்டா” என்றேன்.
“உண்டு உண்டு. அவளும் பிடிவாதக்காரி. நயமாகப் பேசவும் பழகவும் தெரியாதவள். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ளவள். உண்மையும் நேர்மையும், மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணைக்க முடியாது; அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை. கற்பகத்திடம் அந்தக் குறை உண்டு. எதற்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாள். நயமே இல்லை” என்றார்.
“அவளுடைய அண்ணன் சந்திரனிடம் அந்தக் குறை உண்டு” என்றேன்.
அதற்குள் குழந்தை மாதவி விழித்து அழவே, எங்கள் பேச்சு அந்த அளவில் நின்றது.
மறுநாள் பகல் இரண்டு மணிக்குத்தான் பெருங்காஞ்சியிலிருந்து அம்மா வந்து சேர்ந்தார். வந்ததும் அலுத்துக் களைத்துக் கூடத்தில் உட்கார்ந்தார். செய்தி அறிவதற்காக நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்தோம். அப்போது அப்பாவும் வீட்டில் இருந்தார். அவரும் செய்தி தெரிந்து கொள்வதற்காக நின்றார்.
“கற்பகத்தின் கலியாணத்துக்குப் போனபோது ஒன்றரை நாள் பழகினேன். அவளுடைய அன்பையும் குணத்தையும் நினைத்தால் மனம் கேட்கவில்லை. அய்யோ! பெண்ணே! போய்ப் பிணமாய்ப் பார்த்தேன். நம் வீட்டுக்கு வரணும் வரணும் என்று அவ்வளவு ஆசையாய் இருந்தாளாம். அந்தக் குடும்பம் கொடுத்து வைக்கவில்லை. முகத்தில் பால் வடிகிறது. என்ன களை! என்ன குணம்! ஊரே அழுது விட்டது” என்றார்.
“என்ன’மா உடம்புக்கு” என்றேன்.
“கிணற்றிலே விழுந்து உயிரை விட்டு விட்டாள். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல்தான்.”
இதைக் கேட்டதும் என் நெஞ்சம் குமுறியது.
“அய்யோ, பாவி” என்றாள் என் மனைவி.
அம்மா விரிவாகச் சொல்ல தொடங்கினார். “அடிதடி நடக்கிற குடும்பமாய்ப் போச்சு. எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு நகையாய்க் கேட்டு வாங்கி ஊரில் கண்ட பெண்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டான். அடித்து உதைத்து நகையைக் கழற்றிக் கொண்டு போகும் பழக்கம் இருந்திருக்கிறது. கடன் கேட்டால் ஊரில் கொடுப்பார் இல்லை. பணம் இல்லாதபோது இப்படி நகைகளைக் கழற்றிக் கொண்டு போயிருக்கிறான். ஊரில் அவனைப் பழிக்கிற பழி எல்லாம் கேட்டு உருகிக் குன்றிப் போய்விட்டாள் அந்தப் பெண். முன்நாள் இரவு வந்தபோது, மனத்தில் இருந்ததை எல்லாம் சொல்லிக் கேட்காததை எல்லாம் கேட்டுவிட்டாள். அவன் கோபத்தால் தடியும் தாம்பும் எடுத்து அடித்திருக்கிறான். மூக்குத்தி கேட்டிருக்கிறான். அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டுப் பேசாமல் தோட்டத்துப்பக்கம் போனாள். காவல்காரன், ‘இந்த நேரத்தில் எங்கே’மா. தனியாகப் போகிறீர்களே’ என்று தடுத்துக் கேட்டானாம். ‘தனியாகப் போகாமல், இதற்குக்கூட யார் துணை வருவார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வெளிக்குப் போகிறாள் என்று காவல்காரன் இருந்து விட்டானாம். நேரே தோப்புக் கிணற்றுக்குப் போய் இறங்கி விட்டாள். அந்தப் பாவி பெரும்பாவி சிறிது நேரம் பொறுத்து வெளியே வந்தானாம். காவல்காரனைப் பார்த்து, அவள் வந்தாளா என்று கேட்டானாம். தோப்புக்குப் போனாள் என்று சொல்லவே அவன் பயந்துவிட்டான். ‘போய்த் தேடு, போடா’ என்று காவல்காரனை அனுப்பினானாம். எங்கும் கிடைக்கவில்லை என்று வந்து சொன்னானாம். விடியற்காலையில் போய்ப் பார்த்திருக்கிறான். பிணம் மிதப்பதைப் பார்த்து ஓடி வந்து சொன்னானாம். அந்தப் பாவி அப்போது போனவன் இன்னும் வரவில்லையாம். எங்கெங்கோ கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். எங்கும் கிடைக்கவில்லையாம். இங்கே ஆள் அனுப்பினார்கள். போனோம். அழுதோம். எடுத்துப் போட்டுவிட்டோம். போய்ச் சேர்ந்துவிட்டாள்” என்று சொல்லிக்கொண்டே கண்ணீர் உதிர்த்தார்.
“எங்கே போய்விட்டாராம்?” என்றாள் தங்கை.
“தொழு நோய் ஆஸ்பத்திரிக்குப் போகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானாம், அங்கேதான் போயிருப்பான் பாவி” என்றார் அம்மா.
“போய்த் தொலையட்டும். அங்கேயே ஒழிந்தால் குடும்பத்தைப் பிடித்த தொல்லையே விட்டுப் போகும்” என்று சொல்லிக் கொண்டே அப்பா நகர்ந்தார்.
பாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டே கம்மிய குரலில், “அய்யோ! இப்படியா ஆகணும்?” என்றார். “வெறி பிடித்துத் தப்புச் செய்தாலும் திருந்தக்கூடாதா? படித்த பிள்ளைக்கு நல்ல புத்தகம் கிடைக்கவில்லையா? நல்லவர்களின் பழக்கம் கிடைக்கவில்லையா? காலமெல்லாம் இப்படியா நடத்தை கெட்டு அழிய வேண்டும்? கடவுள் ஏன் இப்படிப் படைக்க வேண்டும்” என்று வருந்தினார்.
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. என் வாழ்க்கையில் நேர்ந்த பெரிய அதிர்ச்சி போல் இருந்தது.
அம்மா இரண்டு நாள் இதே நினைப்பாக இருந்து அடிக்கடி பெருமூச்சு விட்டு வருந்தினார். எனக்கும் இந்தப் பயணத்தின் போது மனம் நன்றாக இல்லை. மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டபோதும் எல்லோரிடத்திலும் துன்பத்தின் சாயல் இருந்தது. அம்மா பேத்தியைக் கையில் வாங்கிக் கண்ணில் ஒத்தி மருமகளிடம் கொடுத்தார். அப்போது மாதவி பாட்டியைப் பார்த்து வாய் திறந்து சிரித்தாள். அதைக் கண்ட போதுதான் அம்மாவின் முகத்தில் சிறு மலர்ச்சி தோன்றியது.
அத்தியாயம் – 26
ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. “நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே உங்களுக்குக் கிடைக்காது. வேண்டுமானால் நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், பெரிய காளத்தி கூசா நிறையத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவேன்” என்று நகர்மன்றத் தலைவர் நகைத்தார். என் குடும்பத்திற்குப் பெரிய விருந்து வைத்தார். குழந்தை மாதவிக்கு ஒரு தங்கச் சங்கிலி செய்து அன்போடு அணிவித்தார்.
குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்னைக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். அந்தத் தொழிலில் எனக்கு முன்னே இருந்தவர் தாம் குடியிருந்த வீட்டையே எனக்கு ஏற்பாடு செய்தார். நுங்கம்பாக்கத்தில் இருந்தது அந்த வீடு. எனக்கு அந்த வீடு பிடித்தமாகவே இருந்தது. அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த சனிக்கிழமையே ஈரோட்டுக்குச் சென்று குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.
ஈரோட்டாரிடம் வாங்கிய எண்ணூறு ரூபாய்க்கடனில் ஐம்பது மட்டுமே திருப்பிக் கொடுத்தேன். அவருக்கு உறுதி கூறியபடி மாதம் நூறு ரூபாய் தர முடியாததை நினைந்து வருந்தினேன். அதற்கு ஒரு கடிதமும் எழுதி மன்னிப்புக் கேட்டிருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு, அந்த மாறுதலின் காரணமாகவும், புது இடத்தில் வாழத் தொடங்கியதன் காரணமாகவும், எதிர்பாராத செலவுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் அவர்க்கு எழுதியிருந்தேன். அவர் அதுபற்றிக் கவலை வேண்டாம் என்று ஆறுதல் அளித்திருந்தார்.
சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது அல்ல. மனைவிக்கு முற்றிலும் புதியது. ஈரோடு மிகப்பிடித்திருந்தது என்றும் சென்னை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் அவள் சொன்னாள். நாள் ஆக ஆக இந்தப் பரபரப்பு மிகுந்த நகரம் அவளுக்குப் பழகிவிட்டது. பல குடும்பத்துப் பெண்கள் அவளுக்கு பழக்கமாகிவிட்டார்கள். கடற்கரையும் உயிர்காட்சிச் சாலையும் அவளுக்கு விருப்பமான இடங்கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன கார் இருந்தால் அடிக்கடி மாதவியை வெளியே அழைத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டுவதற்கு உதவியாக இருக்குமே என்ற அந்த ஒரு குறைதான் அவளுக்கு இருந்தது.
எனக்கும் அந்தக் குறை இல்லாமற் போகவில்லை. ஈரோட்டாரிடம் வாங்கிய கடனை தீர்த்துவிட்டு, தங்கைக்கு ஒரு தையல் பொறியும் வாங்கிக் கொடுத்த பிறகு பாதி பணமாவது சேர்த்துக் கையில் வைத்துக் கொண்டுதான் ஒரு பழைய கார் வாங்க முயற்சி செய்யவேண்டும் என்று உறுதி கொண்டேன். நான் ஈரோட்டிலேயே இருந்திருந்தால் மாதம் நூறு ரூபாய் மீதியாக்கி விரைவில் கடனை அடைத்திருக்க முடியும். சென்னைக்கு வந்த பிறகு மாதம் ஐம்பது மீதியாக்குவதே பெரு முயற்சி ஆயிற்று. எப்படியோ எதிர்பாராத வகையில் வேண்டாத செலவுகள் பெருகிக் கொண்டிருந்தன. ஊர்ப்பக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் நேரே வீட்டைத் தேடி வந்து தங்கியிருக்கத் தொடங்கினார்கள். உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் உடனிருந்து படித்தோம் என்பது தவிர நெருங்கிப் பழகாதவர்கள் பலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் இப்போது நான் பெரிய வேலையில் இருப்பதை அறிந்த பிறகு, நெருங்கிப் பழகியவர்கள்போல் நட்புரிமை கொண்டாடி அடிக்கடி வரத் தொடங்கினார்கள். உண்மையாகவே நெருங்கிப் பழகிய பழைய நண்பர்கள் இரண்டே பேர்தான். அவர்களுள், சந்திரன் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டான். மாலன் இருந்தும் பயன் இல்லாதவனாக மாறிவிட்டான். ஆனால், என் உள்ளத்தில் இடம்பெறாத நண்பர்களும் உறவினர்களும் இப்போது என் வீட்டில் இடம் பெறத் தொடங்கி விட்டார்கள். அவர்களே, நெருங்கி வந்தபோது, “நீங்கள் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள்” என்று நான் சொல்ல முடியுமா? விலக்க முடியுமா? ஆகவே, ஆகும் செலவு ஆகட்டும் என்று எல்லோரையும் ஓரளவு வரவேற்றேன்.
சென்னை சின்ன நகரம் அல்ல; பெரிய நகரம்; அதிலும் பல தாலுக்காக்களையும் கொண்ட ஒரு மாவட்டம் போன்றது. இதைப் பலர் மறந்து விடுகின்றார்கள். ஒரு மாவட்டத்தின் வடகோடியில் ஓர் ஊரில் இருப்பவர்கள், அதே மாவட்டத்தின் தென் கோடியில் மற்றோர் ஊரில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தித் திருமணத்துக்கோ விருந்துக்கோ அழைப்பதில்லை. சென்னை ஒரு பெரிய மாவட்டத்துக்கு நிகரானதாக இருந்தாலும், ஒவ்வொரு திருமணத்துக்கும் அலுவலுக்கும் வருமாறு வற்புறுத்துகிறார்கள், விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நாளில் இந்த நகரத்தில் எத்தனை வீடுகளில் திருமணங்கள், அலுவல்கள், விருந்துகள்! இத்தனைக்கும் போய்வருவது என்றால் யாரால் முடியும்? தொலைவான உறவினர்கள் எல்லாரும் நெருங்கிய உறவினர்கள் போல் தொடர்பு கொண்டாடும்போது என்ன செய்வது? அங்கங்கே போய் வருவதை எவ்வளவோ குறைத்துக் கொண்டேன். ஆனாலும், ஓரளவு செலவு ஏற்பட்டு வந்தது. எனக்கு அவைகளில் வெறுப்பு ஏற்பட்ட போதிலும், என் மனைவிக்கு அவற்றில் சலிப்பு ஏற்படவில்லை. அவள் குழந்தை மாதவியை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓயாமல் போய் வந்தாள். எனக்கு வெளியே போய்வருதல் தொழிலிலேயே அமைந்தது. அவளுக்கு தொழிலோ வீட்டளவில் உள்ளது. வெளிப் போக்குவரத்தில் அவளுக்கு சலிப்பும் வெறுப்பும் ஏற்படாத காரணம் அதுதான் என்று உணர்ந்தேன்.
அவளுக்குப் புதிய நண்பர்கள் ஏற்பட்டது போலவே எனக்கும் புதிய நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் பலர் பொழுதுபோக்குக்காக அல்லது ஏதேனும் உதவியின் காரணமாக என்னோடு பழகியவர்களாகவே இருந்தார்கள். அந்தக் காரணம் தீர்ந்ததும் அவர்களின் நட்பும் தீர்ந்தது போலவே இருந்தது. எங்கேனும் பார்க்கும்போது புன்முறுவல் காட்டுவதும், “எப்படி? நலம்தானே?” என்று பொருளின்றிக் கேட்பதும் அந்த நட்பின் நிழல்போல் நிற்கும். அவர்களின் புன்முறுவலைக் காணும்போதெல்லாம் எனக்குக் காகித மலர்களே நினைவுக்கு வரும். ஆயினும் அவர்களுள்ளும் ஒருசிலர் உள்ளன்பு உடைய நண்பர்களாக – நறுமண மலர்களாக – இருந்தார்கள்.
சந்திரனும் மாலனும் என் வாழ்வை விட்டு நெடுந்தொலைவு நீங்கிவிட்ட போதிலும் என் உள்ளத்தை விட்டு அவ்வாறு நீங்கவில்லை. அவர்களை வெறுத்த போதும், உளமார வெறுத்தேன். அந்த வெறுப்பு என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து எழுந்தது. நெருங்கிய பழக்கம் – உண்மையான நட்புதான் – அதற்குக் காரணம். ஆனால், உள்ளத்திற்கு ஓய்வு இல்லாத வாழ்க்கையில் அந்த ஆழ்ந்த நட்பும் எப்படி விளங்க முடியும்? பலவகையான கடமைகளும் பலரோடு பழகவேண்டிய காரணங்களும், பரபரப்பான போக்குவரவும் மிகுந்த சென்னை வாழ்க்கை இருந்தபடியால், உள்ளத்திற்கு ஓய்வே இல்லை. சந்திரனையும் மாலனையும் நினைத்து வெறுப்பதற்கும் நேரம் இல்லை. சில நாட்கள் அவர்களின் நினைப்பே இல்லாமலும் இருந்திருக்கிறேன். இப்படிச் சில நாட்கள் அவர்களை நினைக்காமலே இருந்து விட்டுத் திடீரென அவர்களின் நினைப்பு வரும்போது நெஞ்சம் உருகும். சந்திரனுடைய மனைவி இறந்தபின் சில நாட்கள் வரையில் அவன்மேல் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்ற அளவிற்கும் வெறுப்புக் கொண்டேன். நாள் ஆக ஆகத் துயரம் குறைவது போலவே வெறுப்பும் குறைந்தது. இளமை நண்பனை மறுபடியும் காண முடியாதா என்று ஏங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளத்தில் அந்த ஏக்கம் இருந்து வந்தது.
மாலனை அடிக்கடி நினைப்பதற்குக் காரணமாக இருந்தவள் என் மனைவியே. கற்பகத்தின் மேல் அவளுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. மாதவியை பெற்றெடுத்து வாலாசாவுக்கு வந்தபோது கற்பகம் அங்கே இருந்தாள் அல்லவா? அப்போது அவள் கற்பகத்தோடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவளுடைய பெருங்காஞ்சி முகவரியை எழுதிக் கொடுக்கச் சொன்னாள். எழுதிக்கொடுத்தேன். அந்த முகவரிக்குக் கடிதம் எழுதும் பழக்கம் வைத்துக் கொண்டாள். அங்கிருந்து ஒவ்வொரு கடிதம் வந்தபோதும் என்னிடம் செய்திகள் சொல்வாள். “கற்பகம் நல்ல பெண். அவளுடைய கணவர் உங்கள் நண்பர் அல்லவா? நீங்கள் அவளுடைய வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யக் கூடாதா? அவருக்கு ஒருமுறை எழுதினால் போதுமா? மறுபடியும் எழுதக் கூடாதா” என்பாள். “நண்பர் நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதாகவே காணோம். நாங்கள் பெண்கள் அப்படி இருக்கவே மாட்டோம். ஆண்களுக்கே கல்மனம்தான்” என்பாள். கற்பகத்திடமிருந்து கடிதம் வந்தபோதெல்லாம் இப்படி ஏதாவது இரக்கத்தோடு சொல்லிக் கொண்டே இருந்தாள். ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். “அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே” என்று கடிந்தாள். “நண்பருக்கு ஒரு முறையாவது அந்த அளவுக்காவது உதவி செய்யாமல் கல்மனத்தோடு இருக்க முடியுமா? பெண்களுக்கு அந்தக் கல்மனம் உண்டு. ஆண்களுக்கு முடியாது?” என்றேன். “போதும், இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் பணம் கொடுத்து உதவும் வேலை வேண்டா” என்றாள். அதற்குப் பிறகு அவள் கற்பகத்தின் கடிதம் பற்றிச் சொன்னாலும், மாலனுக்குச் சொல்லிச் சீர்ப்படுத்தக் கூடாதா என்பதை பற்றி சொல்வதை விட்டுவிட்டாள்.
ஒருமுறை மட்டும் மிக்க இரக்கத்தோடு கடிதத்தைப் படித்து கொண்டிருந்தபோது நான் அணுகிச் சென்றேன். “நான் பார்க்கக்கூடாதா? படி கேட்கலாமே” என்றேன்.
படித்தாள், “இனிமேல் என் கணவர் மனம் திருந்தி வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் போக்கே உலகத்தில் இல்லாத புதிய போக்காக இருக்கிறது. அப்பா யார் யாரிடமோ சொல்லியனுப்பி முயற்சி எல்லாம் செய்து ஆயிற்று. உன்னுடைய கணவரும் தம்மால் ஆனவரையில் முயன்றார் என்று நம்புகிறேன். என் மனமும் மரத்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் கவலையைப் பார்க்கும் போதுதான், என்னால் அவர் துன்பப்படுகிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அப்பா மட்டும் சிறிது மனத் துணிவோடு இருப்பாரானால், நான் இனி அவரோடு வாழும் வாழ்வையே மறந்துவிடுவேன். கொஞ்ச காலம் வாழ்ந்தேன் அல்லவா? அது போதும். எத்தனையோ பெண்கள் அவ்வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவர்கள் இல்லையா? அவர்களை விட என் நிலைமை மேலானது என்று எண்ணிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் நான் புண்ணியம் உடையவள். திருவாய்மொழியும் திருப்பாவையும் எனக்கு இருக்கும்போது என்ன குறை? எப்படியோ அந்த இரண்டு மக்களையும் பார்த்துப் பாராட்டிக்கொண்டு காலம் கழிப்பேன்” என்று கற்பகத்தின் கடிதத்தைப் படித்தாள்.
அப்போது நான் நிறுத்தி, “திருவாய்மொழி பையன், நினைவு இருக்கிறது. திருப்பாவை” என்றேன்.
“மகள். குழந்தை, மறந்துவிட்டீர்களா?” என்றாள்.
“பெயர் தெரியாது அல்லவா? நல்லது. படி” என்றேன் தொடர்ந்து படித்தாள்.
“இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது, அப்பா திண்ணை மேல் உட்கார்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பையன் (அதாவது என் அண்ணன்) போன இடம் தெரியவில்லை, அவன் எங்கே வரப்போகிறான், எத்தனை குறை இருந்தாலும் மானம் உடையவன், எங்கேயாவது உயிரை விட்டு விட்டிருப்பான். இந்தச் சொத்தை எல்லாம் நான் யாருக்கு வைத்து விட்டுப் போகப்போறேன், மருமகன் வந்து எல்லா நிலத்தையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடாதா. இருக்கும் கடனைத் தீர்த்து விட்டுச் சுகமாக வாழலாமே எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லும்போது அவருடைய மனத்தில் மகனைப் பற்றிய வேதனையும் இருக்கிறது. என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அவருடைய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதுதான் இப்போது என் கவலை, – இப்படிக்கு அன்புள்ள கற்பகம்.”
இவ்வாறு மனைவி படித்து முடித்த போது, சாமண்ணாவின் வேதனை என் மனத்திலும் பற்றிக்கொண்டது. சந்திரன் உண்மையாகவே மானம் உடையவன். அதனால்தான் இமாவதியால் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்ததும் கல்லூரி விடுதியை விட்டே ஓடிப்போய் விட்டான். இப்போதும் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்று அறிந்ததும் ஊரை விட்டே ஓடிப்போனான். ஆனால் இந்த மான உணர்ச்சி இருந்த அளவிற்கு அறத்தில் நம்பிக்கையும் நெறியில் தெளிவும் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நம்பிக்கையும் தெளிவும் இல்லாத போது இந்தப் பொல்லாத மானம் இருந்தும் என்ன பயன்? தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும் அழித்துக் கொள்வதற்கும் தான் இந்த மான உணர்ச்சி பயன்படுகிறது என எண்ணிச் சோர்ந்தேன்.
“ஏன் வருந்துகிறீர்கள்?” என்றாள் மனைவி.
“சந்திரன் என்ன ஆனானோ என்று நினைத்தால் மனம் வேதனைபடுகிறது.”
“அந்த ஆள் இனி எப்படிப் போனால் என்ன? மனைவி போய்விட்டாள். குடும்பம் போய்விட்டது. போனவர்களை நினைத்து வருந்திப் பயன் என்ன? இருக்கிறவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? செய்யுங்கள். இப்படிச் சொத்து முழுதும் கிடைக்கும் என்பதைக் கற்பகத்தின் கணவருக்கு எழுதுங்கள்.”
அந்தச் சொல் நொந்த என் மனத்தைக் கோலால் குத்துவது போல் இருந்தது. “ஒருகாலும் நான் அப்படி எழுதமாட்டேன். என் நண்பன் சந்திரன் செத்துப்போனான் என்று நினைக்கவும் என் மனம் இடம் தரவில்லை. அய்யோ வேண்டா” என்றேன்.
மாலனுக்கு வேறு வகையில் கடிதம் எழுதினேன். மறுமொழி வரும் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சலித்தேன். பணம் கடன் கொடுத்த காரணத்தால் இருந்த நட்புக்கும் இடையூறு நேர்ந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டேன்.
முன்னெல்லாம் இப்படி நண்பரிடமிருந்தும் வீட்டாரிடமிருந்தும் கடிதம் வராமல் இருந்தால் அதுவே எனக்குப் பெருங்கவலை ஆகிவிடும். அதையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பேன். சிறு துன்பமும் பெரிதாகத் தோன்றிய காலம் அது. இப்போது பெரிய துன்பமும் சின்னதாகத் தோன்றும் அளவிற்கு மனமாறுதல் ஏற்பட்டுவிட்டது. நன்றியுணர்ச்சி முதலான அடிப்படை உணர்ச்சிகள் அப்படியே இருக்கின்றன. ஆனால் இன்ப துன்ப உணர்ச்சிகள் வரவரக் குறைந்துகொண்டிருக்கின்றன. சிறு தோட்டம் பயிரிடுகிறவன் ஒரு செடி வாடினாலும் கவலைப்படுகிறான்; பெரிய தோட்டம் உடையவன் ஒரு பாத்தியே பட்டுப்போனால் தான் வருந்துகிறான்; பெரிய தோப்பு உடையவன் ஒரு செடிக்காவும் கவலைப்படுவதில்லை; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில்லை. இரண்டு மூன்று பெரிய மரங்கள் பட்டுப்போனால் தான் அவனுடைய மனம் கொஞ்சம் அசையும். அப்போதும் அவன், சின்ன தோட்டம் பயிரிடுகின்றவனைப் போல் அவ்வளவு கவலைப்பட மாட்டான் அல்லவா? என் மனநிலையும் அப்படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து அளவில் என் பழக்கமும் தொடர்பும் இருந்தன. இப்போது பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடும் ஆயிரக்கணக்கானவர்களோடும் பழக நேர்ந்துவிட்டதால், உணர்ச்சிகளின் ஆழம் குறைந்துவிட்டது. அதனால் சந்திரனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்போல் இல்லை எனலாம்.
நான் தொழில் காரணமாகவும் வேறு காரணமாகவும் நூற்றுக்கணக்கானவர்களோடு பழகிய போதிலும், ஒரு சிலர் தான் உண்மையாக என்னுடன் நெருங்கிய பழக்கம் உடையவர்கள். அவர்களிடம் என் மனம் கொஞ்சம் ஆழ்ந்த நட்பும் கொண்டது என்று சொல்லலாம்.
அவர்களுள், என் அலுவலகத்தில் என்னோடு தொழில் செய்த நண்பர் ஒருவர். அவருடைய பெயர் பச்சைமலை. நல்ல பண்புகள் உடையவர். பலரோடு பழகமாட்டார். பழகும் சிலரிடத்தில் அன்பாகப் பழகுவார். அலுவலகத்தில் வேலையாட்களையும் மனம் நோகப் பேசாதவர். ஆனால் வேலையில் திறமையானவர். அப்படிப்பட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டுக்கு வரப் போகப் பழகினார். நாங்களும் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். நாளடைவில் பெண்களுக்குள் பழக்கம் மிகுந்தது. நான் வேலை மிகுதியாக இருந்தபோது மனைவி மட்டும் அங்கே போய் வருவதும் பழக்கமாயிற்று.
ஒரு நாள் இரவு நான் வீட்டுக்குத் திரும்பியதும் “பச்சைமலையின் மனைவி உங்களுக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியுமாமே” என்றாள்.
“உனக்குப் பைத்தியம்! நாம் எங்கிருந்தோ பிழைக்க வந்தோம். நாம் யார்? அவர்கள் யார்? இப்போதுதானே பழக்கம்! என்ன உளறுகிறாய்?” என்றேன்.
“அவர் உங்களுக்குச் சொல்லவே இல்லையா?”
“நீ என்னதான் சொல்கிறாய்?”
“அந்த அம்மாவுக்கும் இத்தனை நாள் தெரியாது. இன்றைக்குத் தான் கண்டுபிடித்தார்கள்.”
“அமெரிக்காவா, ஆஸ்திரேலியாவா. என்னை அவர்கள் கண்டுபிடிக்க.”
“பொய்யா சொல்கிறேன்?”
“என்ன செய்தி? விளக்கமாகச் சொல்.”
அந்த அம்மாவின் அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறார். முன்னமே ஒருமுறை வந்தபோதும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இன்றைக்கு என்னென்னவோ பேசியிருந்து விட்டு, குடும்பத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். அப்போது தெரிந்துவிட்டது.”
“என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன்.
மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன என்று கேட்டார். பேரைச் சொன்னவுடன், சற்று விழித்துப் பார்த்தபடி இருந்துவிட்டு, ஊர் எது என்று கேட்டார். வாலாசா என்று சொன்னவுடன், திகைத்தாற்போல் இருந்தார். உடனே உங்கள் வீட்டுக்காரருக்குச் சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறாரா என்று கேட்டார். அப்போது அவருடைய திகைப்பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. ‘ஆமாம் இருக்கிறார். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?’ என்றேன். ‘சொல்கிறேன். நீ வேலய்யாவுக்கு மனைவியாக வருவதற்கு முன்னிருந்தே அவரை எனக்குத் தெரியும்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, பிறகு தம் தங்கையைப் பார்த்து, ‘தெரியுதா’டி உனக்கு நினைவு வருகிறதா’டி’ என்று கேட்டார். ‘யார்? நம் சந்திர அண்ணாவா!’ என்று பச்சைமலையின் மனைவி உடனே அக்காவைக் கேட்டார். ஆமாம் என்றார் அந்த அக்கா. ‘அவர்தான் அப்போதே எங்கோ போய் விட்டாரே அவரைப் பற்றி அப்புறம் ஒன்றுமே தெரியாதே’ என்றார் தங்கை. எனக்குத் திகைப்பு மிகுதியாயிற்று. ‘அவர் எங்கோ போய்விட்ட செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?’ என்று கேட்டேன். ‘நேற்றுத் திருமணமாகி வந்த உங்களுக்கு அவர் போய்விட்டது எப்படித் தெரியும்?’ என்று அக்கா என்னையே திருப்பிக் கேட்டார்.”
இந்த அளவிற்கு மனைவி சொல்லியவுடன், என் கலக்கம் தீர்ந்து உடனே இமாவதியின் நினைவு வந்துவிட்டது. “அடடா!” என்றேன்.
“ஓ ஓ! உங்களுக்கு இப்போதுதான் யார் என்று தெரிந்ததா?” என்றாள் மனைவி.
“ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பெண். அவளாகத்தான் இருக்க வேண்டும்” என்றேன்.
“பெண்ணா? எனக்கு மேல் வயதில் பெரியவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்.”
“இருக்கலாம் அப்போது பெண்தானே? நானும் சந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் ஆகாத பெண். சரி சொல்லிமுடி. அப்புறம் தான் விரிவாகச் சொல்வேன்.”
“அப்புறம் என்ன? உனக்கு எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, நான் கேட்க, வேடிக்கையாக இருந்தது. அவர் முன்னமே ஒருமுறை ஓடிப்போய் வந்தவர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகு நான் எல்லாம் சொன்னேன். அவருக்குத் திருமணம் ஆனது. மனைவியோடு அன்பாக வாழாதது. அந்த அம்மா கிணற்றில் விழுந்து செத்தது. பிறகு அவர் ஓடிப்போனது எல்லாவற்றையும் நான் சொன்னேன். வியப்போடு கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப்பட்டார். அழாத குறையாக அந்த அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது” என்றாள்.
இவ்வளவு செய்திகளையும் இமாவதிக்குச் சொல்லி இருக்கத் தேவையில்லையே என எண்ணினேன். “இதை எல்லாம் ஏன் சொன்னாய்? அந்த அம்மா சந்திரனைப் பற்றித் தவறாக நினைப்பாரே” என்றேன்.
“அதுதானே இல்லை! இவ்வளவு சொன்ன பிறகும் அந்த அம்மா சந்திரனுக்காக வருத்தப்படுகிறார். இரக்கத்தோடு பேசுகிறார். தமக்குத் தெரிந்தவரையில் சந்திரன் மிக நல்ல குணமுள்ளவர் என்கிறார். அவரைப்போல் நல்ல மனம் உள்ளவர்களைப் பார்ப்பது அருமை என்கிறார். சந்திரனைப் பற்றி நீங்களும் அவ்வளவு நன்றாகச் சொன்னதே இல்லை” என்றாள்.
என் உள்ளம் குழைந்தது. “ஆமாம். அவ்வளவு நல்லவனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் அவன் மேல் ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்லவன்தான் பிறகு இப்படி மாறிக் கெட்டு விட்டான். அதுதான் எனக்கு வருத்தம்” என்றேன்.
“உங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று அந்த அம்மா விரும்புகிறார். என்னோடு உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார். வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னதால் நின்றுவிட்டார். நாளை மறுநாள் அவர்களுடைய ஊருக்கே திரும்பிப் போகிறபடியால் நீங்கள் நாளைக்கே போய்ப் பார்த்துவிடுங்கள். நீங்கள் போகாவிட்டால் அந்த அம்மா தவறாமல் இங்கே வந்துவிடுவார்” என்றாள்.
“அப்படியானால், பச்சைமலையின் மனைவியின் பெயர் என்ன? திருமகளா?” என்றேன்.
“ஆமாம். உங்களுக்கு இவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே. பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே, கணவர் தம் மனைவியைக் கூப்பிடும் போது “திரு” என்று அழைப்பார்” என்றாள்.
“நான் சின்ன வயதில் பார்த்தது உண்டு. அப்போதிருந்தே பெயரும் தெரியும். ஆனால் இந்தக் குடும்பம் என்று எப்படித் தெரியும்?” என்றேன்.
பிறகு, சந்திரன் படித்துக் கொண்டிருந்தபோது இமாவதியின் குடும்பத்தோடு பழகியதும், இமாவதியின் திருமண அழைப்பைப் பார்த்தவுடன் கலங்கி அழுததும், உடனே சொல்லாமல் ஓடிப் போனதும், பிறகு தேடிப் போய் அவனை அழைத்து வந்ததும் எல்லாம் விரிவாக மனைவிக்கும் சொன்னேன்.
“அப்படியானால், அடிப்படையிலேயே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது” என்றாள் மனைவி.
“மெய்தான். அவனுடைய மனமே இன்னொருவரை நம்பாத மனம். யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, ஒத்த உரிமையோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும். நண்பனாகிய என்னிடமும் அப்படிப் பழகவில்லை. வந்த மனைவியிடமும் அவ்வாறு பழகவில்லை. அதனால் உலகமே அவனுக்கு இருண்ட குகையாக இருந்தது. வழி தெரியாமல் தடுமாறித் தடுமாறிக் கெட்டான். மருண்ட போதெல்லாம் வெருண்டு வெருண்டு ஓடினான்” என்றேன்.
காலையில் எழுந்தவுடன் இமாவதியைப் பற்றி மனைவி நினைவூட்டினாள். நானும் அதே நினைவாக இருந்தேன். கடமைகளை விரைந்து முடித்து, பச்சைமலையின் வீட்டுக்குச் சென்றேன். போய் நின்று கதவைத் தட்டியவுடன் “வாங்க! நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்” என்று சொல்லிக் கொண்டே இமாவதி வந்தார்.
“என்ன அய்யா! முன்னமே பழகிய பழக்கம் இருந்தும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே இருந்தீர்கள். இப்போது நான் தான் அந்நியனாக, புதியவனாக நிற்கிறேன்” என்றார் பச்சைமலை.
அவருடைய மனைவி, “வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.
இமாவதியும் நானும் எங்கள் பழைய பேச்சை எடுத்தவுடன் ஒவ்வொருவராக நீங்கினார்கள். இமாவதியின் தங்கை திருமகள் மட்டும் ஒருமுறை வந்து குறுக்கிட்டு, “சந்திர அண்ணா வந்து வாழ்ந்து மறுபடியும் அப்படிப் போய்விட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது” என்றார்.
நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.
“அவர் திரும்பி வந்த பிறகு எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? நான் வந்து பார்த்து உண்மையைச் சொல்லியிருப்பேனே! எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். அவருக்கும் ஆறுதலாக இருந்திருக்குமே” என்றார் இமாவதி ஓரிடத்தில்.
மற்றொரு முறை பேச்சின் இடையே, “வந்த அவராவது பழைய அன்பை நினைத்து எட்டிப் பார்த்திருக்கக் கூடாதா?” என்றார்.
இன்னொரு முறை குறுக்கிட்டு, “நீங்களும் அவரைப் போலவே நடந்து கொண்டீர்கள். எங்கள் முகவரி நன்றாகத் தெரிந்திருந்தும், சென்னையிலேயே தொழில் இருந்தும் எங்களை அடியோடு மறந்து விட்டீர்கள். கல்லூரி நட்பு இவ்வளவுதான் போல் இருக்கிறது” என்றார்.
“சந்திரனுக்கு விருப்பமான பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கவில்லை போல் இருக்கிறது” என்றார் வேறொரு பேச்சின் இடையே.
“எங்கள் அம்மாவிடத்தில் சந்திரன் எவ்வளவு பணிவோடு மரியாதையோடு இருந்தார். சொந்தத் தாய் தந்தையாருக்கு வருத்தம் உண்டாகும்படியாக நடந்தார் என்றால் நம்ப முடியவில்லையே” என்றார் மற்றோர் இடத்தில்.
நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்த போது இமாவதி இப்படி இடையிடையே வியப்புடனும் திகைப்புடனும் பெருமூச்சுவிட்டுச் சில கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தார். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு, “அய்யோ! கடவுள் ஏன் இப்படி அன்பானவர்களை – நல்லவர்களைக் – கெடுக்கிறார்?” என்று மிக மிக வருந்தினார். “எங்கேதான் போயிருப்பார்? தெரிந்தால் நானும் தேடுவேனே! நீங்கள் யாரும் தேடவே இல்லையா? அவ்வளவு தொலைவு நம்பிக்கை இழந்து விட்டதா குடும்பம்?” என்று துன்பப்பட்டார்.
சிறிது நேரம் தரையையே உற்றுப் பார்த்தபடி இருந்து ஒரு பெருமூச்சு விட்டார். அந்தப் பெருமூச்சு, சொல்லாத வேதனையை எல்லாம் சொல்வதுபோல் இருந்தது. வலமும் இடமும் முன்னும் பின்னும் மெல்லத் திரும்பிப் பார்த்தார். “என்னால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவருடைய மனமே கெட்டுப்போவதற்குக் காரணமாக இருந்ததோ என்று இன்னமும் என் நெஞ்சம் என்னைச் சுடுகிறது. என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?” என்றாள்.
அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது.
ஆனாலும் அந்த வினா இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அத்தியாயம் – 27
எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு மணியார்டர் கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு ரூபாய்” என்றார்.
“எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன்.
மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு ரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் ரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன்.
“அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை என்று நோன்பு கொண்டிருந்தேன். அதனால்தான் இதுவரையில் மறைவும் மவுனமும். பணம் சேர்த்துக் கவலை தீர்ந்துவிடவில்லை; மனம் திருந்திக் கவலை தீர்ந்து விட்டது. கடிதத்தில் விரிவு, அன்புள்ள, மாலன்” என்று எழுதியிருந்தான். அதில் கையெழுத்து இட்டுத் தபால்காரரிடம் கொடுத்தேன். அவர் கொடுத்த நூறு ரூபாயும் எண்ணி வாங்கும்போது என் மகள் மாதவி ஓடி வந்து, “அப்பா! அம்மா கூப்பிடுகிறாங்கோ” என்றாள். அவளுடைய பாவாடையும் சொக்காயும் பளபள என்று மின்னுவதையும், அவளுடைய சின்ன நெற்றியில் செந்நிறத் திலகம் பட்டொளி பரப்புவதையும், வாயின் புன்சிரிப்பு என் உள்ளத்தை கொள்ளைக் கொள்வதையும் உணர்ந்தபடியே, “இந்தா! கண்ணு! இதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு” என்றேன். அவள் அதை எண்ணுவது போல் விரல்களால் புரட்டிக்கொண்டே நடந்தாள். அவளுடைய தலையின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்ததையும் தாழம்பூவும் மல்லிகையும் அதற்குத் தூய அழகு தந்து விளங்கியதையும் கண்டேன். “அம்மா! அம்மா! அப்பா ரொம்ப ரூபா கொடுத்தாங்கோ” என்று அவள் சொன்னது கேட்டது.
உடனே அங்கிருந்து என் மனைவி அந்த நோட்டுக்களுடன் விரைந்து வந்து பல்லெல்லாம் தெரிய என் எதிரே நின்று, “பணமே இல்லை, சம்பளம் வந்தால்தான் உண்டு என்று ஏமாற்றினீர்களே? இப்போது மட்டும் எந்தச் செடியிலிருந்து முளைத்தது?” என்றாள்.
மாலன் பணம் அனுப்பியதாகச் சொன்னேன். அயர்ந்து நின்றாள். “அப்படியானால் கற்பகத்துக்கு ஏதோ நல்ல காலம் வரப் போகிறது. வரட்டும். நல்ல பெண் நல்ல படியே வாழ’ணும்” என்று உளமார வாழ்த்தி நின்றாள்.
அன்று அவளை ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால் மாதவிக்கு அணிவன எல்லாம் அணிவித்து, தானும் புதிய சேலை உடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டாம் குழந்தைக்குத் தாய் ஆகும் நிலையில் இருந்தபடியால், வாலாசாவுக்கு அனுப்பும்படியாகப் பெற்றோர் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அவர்களுடைய விருப்பப்படியே அன்று பகல் ரயிலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து, கையில் கொடுத்தனுப்பப் பணம் இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் தபால்காரர் மணியார்டரோடு வந்து நின்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக மகிழ்ந்தேன். மனைவியோ அதில் கற்பகத்தின் நல்வாழ்வையும் கண்டு மகிழ்ந்தாள்.
அவள் மகிழ்ந்ததற்கு ஏற்பவே மாலன் மனம் திருந்திக் கடிதம் எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் போவதற்கு முன் அந்தக் கடிதம் வந்திருந்தால், அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு மிகுதியாகியிருக்கும்.
“நெல் ஆலையை என்னால் தனியே நடத்தமுடியாது என்று தெரிந்து கொண்டேன். அந்த லாரிக்கார நண்பன் முன்வந்து பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இப்போது கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது. இருந்தாலும் பொறுப்பு அவருடையதே. நான் சம்பளக்காரன் போல் இருந்து அவர் சொன்னபடியே உழைக்கிறேன். மாதம் நூற்றைம்பது ரூபாய் குடும்பச் செலவுக்கும் ஐம்பது ரூபாய் பழைய கடன் அடைப்புக்கும் என்று கொடுக்கிறார். அவர் கிழித்த கோட்டை விட்டு விலகாமல் நடக்கிறேன். அதனால் கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு நன்மையாகச் சில மாறுதல்களும் ஏற்பட்டுவிட்டன. மற்றொரு நெல் ஆலைக்காரரின் போட்டி வேகம் தணிந்துவிட்டது. லாரிக்கார நண்பரோடு பகைத்துக் கொள்ள அவரால் முடியாது. ஆகவே வீம்புக்குச் செய்யும் போட்டியை விட்டுவிட்டார். நானும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் கவனம் செலுத்துகிறேன். மாமனாரும் கடைசியில் இரண்டாயிர ரூபாய் தருவதற்கு உடன்பட்டுச் சொல்லியனுப்பினார். நீ முதலில் எழுதிய கடிதத்தை நினைவில் வைத்துக்கொண்டு நான் வேண்டா என்று சொல்லிவிட்டேன். ஆனால் கற்பகத்தை இங்கே அழைத்து வருவதற்காகப் பெருங்காஞ்சிக்கு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். ஊருக்கு வந்து நிலபுலங்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே வாழுமாறு மாமனார் எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. உன்னுடைய அறிவுரையும் எனக்கு வேண்டும். நான் இன்னும் பெருங்காஞ்சிக்கு போகவில்லை கற்பகத்தின் பிடிவாதமான வெறுப்புக்காக அஞ்சி நிற்கிறேன். உன்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணியிருக்கிறேன். நீதான் என் திருமணத்திற்கும் தொடக்கத்தில் உதவியாகக் கடிதம் எழுதியவன். எங்கள் இல்வாழ்க்கை இனிமேல்தான் செம்மையாகத் தொடங்க இருக்கிறது. இதற்கும் நீ முன்வந்து உதவி செய்யவேண்டுகிறேன். நீ வந்து சொன்னால் தான், அவள் பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து என்னை வரவேற்பாள். நீ மறுக்காமல் வரவேண்டும். அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ அங்கே வந்து உன்னை அழைத்து கொண்டு பெருங்காஞ்சிக்குப் போக எண்ணியிருக்கிறேன். வருவேன். மற்றவை நேரில். உன் அன்பன் மாலன்.”
இந்தக் கடிதம் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாக்கியது. அதனால் அன்று பிற்பகல் நான் அலுவலகத்தில் வேலையும் அவ்வளவாகச் செய்யவில்லை. பெரிய விருந்து உண்டு மயங்கியவன்போல் பொழுதைப் போக்கிவிட்டு மணி நாலரை ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டேன். முன் வாயிலருகே வந்தபோது, “அய்யா சாமி” என்பதுபோல் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலே வந்தேன். “வேலு” என்பது போலவே இரண்டு முறை கேட்டது. யாரோ இந்தப் பெயருடையவன் ஒருவனை அழைக்கும் குரல், இதற்காக நம்மைப்போன்ற ஓர் அதிகாரி திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நகர்ந்தேன். மறுபடியும் அதே குரல் இரண்டு முறைகேட்கவே சிறிது திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தேன். “வேலய்யா! வேலு!” என்றதும் நின்றேன். மறுபடியும் நடந்தேன். “அய்யோ மறந்து விட்டாயா? கடவுளே மறந்து விட்டாயா? வேலு!” என்றதும் திகைத்து நின்றேன். சிறிது தொலைவில் ஒருவன் தொப்பென்று தரையில் விழுந்தது கண்டேன். எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த ஒருவர், “உங்களைப் பார்த்துத்தான் கூப்பிட்டுக் கொண்டே வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டார். யாரோ, பாவம்” என்றார். உற்றுப் பார்த்துக்கொண்டே விழுந்தவனை நோக்கி நடந்தேன். குப்புறவிழுந்திருக்கவே யார் என்று தெரியவில்லை. அப்போது அலுவலகத்து வேலையாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவனை நோக்கி, “யார் பார்” என்றேன். அவன் குனிந்து பார்த்து, “யாரோ நோயாளி” என்றான். அதற்குள் பத்துப் பதினைந்து பேர் அங்கே கூடிவிட்டார்கள். விழுந்தவனுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது வெளியே வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்குமாறு வேலையாளிடம் சொன்னேன். அவன் தயங்கித் தயங்கி எடுத்தான். “திருவருட்பா. சந்திரன் என்று பெயர் எழுதியிருக்கிறான்” என்று அவன் சொன்னவுடனே, “ஆ” என்று திகைத்து அலறினேன். “சந்திரா” என்று குனிந்து அழைத்தேன். குரல் இல்லை. மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன். மூர்ச்சை தெளிந்ததும் கண் விழித்துப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்து, “வேலு! வேலு!” என்றான். “என்ன சந்திரா?” என்றேன். “வேலு! வேலு! வேலு!” என்று தலைகுனிந்து விம்மினான். “வீட்டுக்குப் போகலாம், வா. அப்புறம் பேசலாம்” என்று பிடித்து டாக்சியில் உட்கார வைத்தேன்” என் பை எங்கே?” என்றான். வேலையாள் தரையிலிருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.
டாக்சியில் வந்தபோது, அவனுடைய அழகிய முகம் பார்க்க அருவருப்பாக மாறியிருந்ததைக் கண்டு வருந்தினேன். தொழுநோய் அவனுடைய, காதுகளையும் மூக்கையும் அழகிய உதடுகளையும் கெடுத்துப் பாழ்படுத்தி அச்சமான தோற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவனுடைய இனிய குரல் – பெண் வேடம் போட்டு நடித்துப் பாடிப் புகழ்பெற்ற அந்தக் குரல் – கம்மலாய்க் கரகரப்பாய்க் கெட்டும் போனதை எண்ணி வருந்தினேன்.
“அய்யோ! வேலு! உன்னைப் பார்க்கப் போகிறேனா என்று ஏங்கினேன். பார்த்துவிட்டேன் அப்பா, இனி நான் செத்துப் போனாலும் கவலைப் படமாட்டேன். சாகத்தயார்” சாவு வரட்டும், வரட்டும்” என்றான்.
“அப்படி எல்லாம் பேசாதே. கவலைப்படாதே. எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டேன்.
“திருமணியில் இருந்தேன், அங்கிருந்துதான் வருகிறேன்.”
“ஆஸ்பத்திரியிலா?”
“ஆமாம். மருந்து மருந்து ஊசி ஊசி என்று எல்லாம் பார்த்து விட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. மனம் தாங்கவில்லை. உடம்பும் தேறவில்லை. மனத்தையாவது தேற்றிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன் அப்பா” என்றான்.
டாக்சியிலிருந்து இறங்கியதும், நான் சாவி எடுத்து வீட்டைத் திறந்ததைப் பார்த்து, “வீட்டில் யாரும் இல்லையா?” என்றான்.
“ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றேன்.
“நல்லதாச்சு. நான் செய்த புண்ணியம், வீட்டில் யாரும் இல்லை. இந்த நோய் அப்படிப்பட்டது அப்பா. எங்கே போனாலும் இருக்கிறவர்களுக்குத் துன்பம் கொடுக்கிற நோய் இது. இரண்டே நாள் இருந்துவிட்டுப் போய்விடுவேன்” என்றான்.
“இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதம் இரு. எனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றேன்.
அவன் கட்டியிருந்த ஆடையில் இரத்தக் கறையைக் கண்டேன். என் மனம் அருவருப்பும் கொண்டது; வருத்தமும் கொண்டது. இருந்தாலும், நட்பாய்ப் பழகிய பழைய மனம் வந்து இரக்கம் கொண்டது. நாற்காலியைக் காட்டி “உட்காரு” என்றேன்.
தலையை அசைத்து மறுத்தான். “எனக்கு இங்கே இடம் தகாது; யாராவது வருவார்கள்; பார்ப்பார்கள். உனக்கு என்னால் ஒரு குறைவும் வரக்கூடாது வேலு, தோட்டத்துக்குப் போய் அங்கே ஒரு மூலையில் இருப்பேன். அங்கே வா. இடம் காட்டு” என்று முன்னே நடந்தான். அவனுடைய கால்களைப் பார்த்தேன். நான் பார்த்த வீக்கமும் வெடிப்பும் புண்ணும் என் நெஞ்சைப் புண்ணாக்கின. பார்த்த என் நெஞ்சு வெடிப்புகள் உடையதாய் இரத்தம் கசிவது போல் உணர்ந்தேன். கைவிரல்கள் என் கண்ணுக்கும் படாதவாறு மடக்கி வைத்திருந்தான். தோட்டத்தில் தாழ்வாரத்தில் இடம் காட்டினேன்.
“அய்யோ! இந்த இடம் சுத்தமாக இருக்கிறதே. இங்கே நான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது இடம் மாட்டுத் தொழுவம் போல் ஒன்றும் இல்லையா? ஒரு மூலையாக யார் கண்ணுக்கும் படாத இடமாக இருந்தால் போதும்” என்றான்.
“இங்கே யாரும் வரமாட்டார்கள். கட்டில் பிடித்துப் போட்டுவிட்டால் இங்கேயே இருக்கலாம்” என்றேன்.
“கட்டிலா? எனக்கா?” என்று என்னை நிமிர்ந்து பார்த்த போது என் கண்கள் அவனைப் பார்க்கக் கூசின. “ஒரு பழைய பாய் கொடு. அது போதும். நான் போன பிறகு அதைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடவேண்டும்” என்றான்.
உள்ளே சென்று, ஒரு நல்ல பாயும் மெல்லிய மெத்தையும் ஒரு தலையணையும் கொண்டு வந்தேன்.
“வேலு சொன்னால் கேள். விருந்தாளிக்குக் கொண்டு வருவதுபோல் நல்ல பாயும் மெத்தையும் கொண்டு வருகிறாயே. வேண்டாம்’பா. ஏதாவது கந்தல் கொடுபோதும்” என்றான்.
“என் மனம் கேட்காது. பேசாமல் இரு. மறுக்காதே. என் கடமை இது” என்று வற்புறுத்திப் பாய்மேல் மெத்தை பரப்பி உட்காரச் சொன்னேன். அவன் மெத்தையை நீக்கி விட்டுப் பாய்மேல் உட்கார்ந்தான். “குடிக்கத் தண்ணீர் வேண்டும்” என்றான்.
தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவன் இரண்டு கைகளாலும் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவனுடைய கைவிரல்களைப் பார்த்து விட்டேன். என்னைக் கண்டதும் அவன் சொரிவதை நிறுத்தி விட்டுக் கைகளை மடக்கிக் கொண்டான். தண்ணீரை நீட்டினேன். “வை கீழே. நான் எடுத்துக் குடிப்பேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தால் முன்னே போய்ப்பார். அப்புறம் பேசலாம்” என்றான்.
“எனக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. உனக்கு வேண்டியதைச் சொல்.”
“சாப்பாடு யார் சமைப்பது?”
“வேலைக்காரன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து கொடுப்பான்.”
“சரி போதும்.”
நான் உட்கார முயன்றேன்.
“நீ ஏன் இங்கே உட்காரணும். என் அழகைப் பார்க்கணுமா? வேண்டா, வேண்டா, போ” என்று தடுத்தான்.
“அப்படி எல்லாம் சொல்லாதே. உன் அழகையும் பார்த்தேன். உன் துன்பத்தையும் பார்க்கிறேன். என்ன செய்வது?” என்று உட்கார்ந்தேன்.
“வேலு!” என்று தரையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
“தண்ணீர் குடிக்கவில்லையே” என்றேன்.
“உன் எதிரில் இந்தக் கைகளை நீட்டித் தண்ணீர் எடுப்பதற்கு மனம் வரவில்லை, அப்பா. நான் செய்த வினை அப்பா, வினை!”
“புதிய இடத்தில் அச்சப்பட்டுத் தயங்குவதைப்போல் இங்கே இருக்காதே. நோய் வந்துவிட்டது. உன் அழகைப் பாழாக்கிவிட்டது. என்ன செய்வது? நான் பார்க்கிறேன் என்று இப்படித் தயங்கினால் இங்கே நீ வந்து பயன் என்ன? உன் உடம்புக்குத் தகுந்தபடி நடந்துகொள். கைகாலை நீட்டி வசதியாக இரு” என்றேன்.
“வசதியா? எனக்கு இன்னும் வசதி வேண்டுமா?” என்று இருமினான்.
அவன் இருமுவதைக் கேட்கத் துன்பமாக இருந்தது.
“மருந்து வாங்கி வருகிறேன். என்ன மருந்து, எதற்கு என்று சொன்னால்.”
“மருந்தா? இனிமேல் ஒரே மருந்துதான் தேவை; சாவுக்கு மருந்து.”
என் மனம் வாடியது. “நீ இங்கே இருக்கும் வரையில் சாவு இது அது என்று ஒரு பேச்சும் பேசக்கூடாது. இப்படிப் பேசினால் எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா?” என்றேன்.
“சந்திரன் இப்படி ஆவான். உடம்பெல்லாம் புண்ணாய் சீழும் இரத்தமுமாய் உன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்தாயா?” என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை எடுத்துக் குடித்தான். பிறகு, “எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் வேறே யார் வீட்டுக்குப் போவேன்?” என்று கலங்கினான்.
அவனுடைய வீட்டாரைப் பற்றிப் பேசலாம் என்று எண்ணினேன். அந்தப் பேச்சால் அவனுடைய மனம் மேலும் என்ன துன்பப்படுமோ என்று தடுத்துக் கொண்டேன். அவனாகவே அவர்களைப் பற்றிப் பேசும் வரையில் காத்திருப்போம் என்று இருந்தேன்.
தரையைப் பார்த்தபடியே எதையோ சிந்தித்து ஒரு முறை தலை அசைத்தான். வந்தவன் சிறிது களைப்பாறட்டும். புதிய இடத்தில் மனமும் அமைதியுறட்டும் என்று அவனைத் தனியே விடும் நோக்கத்தோடு எழுந்தேன்.
“ஆமாம். ஏதாவது வேலை இருக்கும், போய்ப்பார். நானும் கொஞ்சம் படுத்துக்கொள்வேன். களைப்பாக இருக்கிறது” என்றான்.
“இரண்டு பழம் கொண்டு வருவேன். தின்றுவிட்டுப் படுத்துக்கொள்” என்று மலைவாழைப்பழமும் உலர்ந்த திராட்டையும் கொண்டு போனேன்.
மலைவாழைப்பழம் தின்று, மறுபடியும் தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டுப் படுத்தான்.
சிறிது நேரத்தில் வேளையாள் வந்தான். இரண்டு பேருக்குக் காப்பி வாங்கி வருமாறு சொன்னேன். காப்பி வந்ததும் நானே ஒரு குவளையில் கொண்டு போனேன். சந்திரன் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு எழுப்பாமல் திரும்பினேன்.
வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்” என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் அய்யா இன்று வரமாட்டாராம் என்று சொல்லி விடு” என்றேன்.
வேலையாள் சென்ற பிறகு தோட்டத்திற்குத் திரும்பி வந்து பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்த சந்திரனுடைய முகம், நாற்பது ஐம்பது வயதுள்ள ஒருவனுடைய முகம்போல் இருந்தது. இளமையின் சாயலே இல்லாமல் அந்த முகத்தை நோய் மூடியிருந்தது. கால் விரல்களையும் கை விரல்களையும் நன்றாகப் பார்த்தேன். என் உள்ளத்தில் முன் இருந்த அருவருப்புச் சிறிதும் இல்லாமல் மறைந்து, இரக்கம் மட்டுமே நின்றது. பார்த்துப் பார்த்து வருந்தினேன்.
தொடக்கப் பள்ளியில் நான் படித்திருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர் எப்படியோ தொழு நோய்க்கு ஆளானார். தொழு நோய் அவருடைய முகத்திலும் கை கால்களிலும் உருவெடுத்தபோது நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது அவர் எதிரே வரப்பார்த்ததும் நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். அவருடைய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும்பிச் சென்று விடுவேன். வழக்கமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் அன்பும் பணிவும் உடையவனாய் நடந்த நான் அந்த ஓர் ஆசிரியரிடம் மட்டும் அவ்வாறு நடக்க முடியாமற் போயிற்று. அவரே ஒருநாள் வீட்டுக்கு வந்து, “வேலு” என்று கூப்பிட்டார். வந்து பார்த்தபோது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தொலைவில் இருந்தபடியே பேசிவிட்டுப் போய்விட்டேன். அவர் உட்கார்ந்திருந்த திண்ணைமேல் மூன்று வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவச் செய்தேன். அதன் பிறகும் அந்தத் திண்ணை மேல் உட்காராமலே இருந்தேன். அவ்வாறு அளவுக்குமேல் பயந்திருந்த நான் இப்போது சந்திரனோடு நெருங்கிப் பழகுவதோடு அவனை வீட்டிலேயே வைத்துப் போற்றும் படியாகவும் நேர்ந்ததை எண்ணினேன்.
திரும்பி வந்து என் அறையில் உட்கார்ந்தபடி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபோது அவன் இருமும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். அவன் அசைவதைக் கண்டு, காப்பி எடுத்துச் சென்றேன். முதுகைச் சொரிந்து கொண்டிருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, “என்னால் உனக்குப் பெரிய துன்பம்” என்றான்.
காப்பி குடித்த பிறகு, “உன் தங்கையின் திருமணத்திற்கு நான் ஊருக்கு வந்தபோது, உன் காதுகளைப் பார்த்துச் சந்தேகப்பட்டுச் சொன்னேன்.”
“ஆமாம். என் மூக்கிலும் மினுமினுப்பு மிகுதியாக இருந்ததாகச் சொன்னாய்; சொன்னாய்; மெய்தான். நான் கொஞ்சமும் சந்தேகப்படவில்லையே. மேலும் மேலும் ஆட்டங்கள் ஆடினேன். மேலும் மேலும் உடம்பைக் கெடுத்துக் கொண்டேன். வைத்தியர் பார்த்து, மேகம் என்று சொன்னாரே தவிர, இந்த மேகம் இப்படித் தொழுநோயாக முற்றும் என்று சொல்லவில்லை. யாரோ ஒரு பைத்தியக்காரன் என்னைக் கெடுத்தான். உடம்பில் இந்திரியம் தேங்கிப் புளிப்பதால்தான் இப்படி மேகம் ஏற்படுகிறது என்று பொய் சொல்லிக் கெடுத்தான். வெறி பிடித்த நாய்க்குச் சாராயம் ஊற்றியது போல ஆயிற்று. இந்திரியம் உடம்பில் தேங்காமல் வெளிப்பட வேண்டும் என்று கண்ட பெண்களை எல்லாம் தேடினேன். நல்லவள் கிடைப்பாளா? கெட்டு அழுகிப் போனவள்தான் நினைத்தவுடன் கிடைக்கிறாள். தப்பித்தவறி நல்லவள் ஏமாந்து கிடைத்தால், அவளையும் அழுகல் நோய் உடையவளாகச் செய்து ஒழித்தேன். நான் செய்தது கொஞ்சமான கொடுமையா? அப்போது தெரியலையே” என்று தலையை இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டான்.
என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. சந்திரனோ, உள்ளம் திறந்து தன் குற்றங்களைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றான்.
“அதன் பிறகு, என் நோய் எனக்கே தெரியத் தொடங்கியது. விரல்களில் மினிமினுப்பு ஏற்பட்ட பிறகும் தெரிந்துகொள்ளவில்லை. நகங்களைச் சுற்றி, கணுக்களைச் சுற்றித் தடிப்பு ஏற்பட்டபோது உடம்பெல்லாம் தடிப்பும் தழும்பும் ஏற்பட்டபோது உணர்ந்து கொண்டேன். அந்த ஏமாந்த பெண் – என் மனைவி – உடம்பெல்லாம் இப்படி இருக்கிறதே. மருத்துவரிடம் கவனிக்கக் கூடாதா, கவனிக்கக் கூடாதா, என்று நாலைந்து நாள் முறையிடத் தொடங்கினாள். “சே! கழுதை! வாயைமூடு” என்று அவளை அடக்கிவிட்டேன். மருத்துவரிடம் போனேன். சொல்லிவிட்டார்.”
இப்படிச் சொல்லி நிறுத்தித் தனக்குத்தானே தலையை அசைத்துக் கொண்டான். நான் ஊம் கூட்டவும் இல்லை. அமைதியாக நின்றேன்.
“என் கதையை இன்னும் கேட்கணுமா?” என்றான். அதற்கும் பேசாமல் இருந்தேன். “ஏன் வேலு, நிற்கிறாய்? கேட்கணுமா என் கதையை? சரி சொல்கிறேன் கேள். அதற்குத் தானே நான் இங்கே வந்தேன்? ஆமாம், சொன்னால்தான், என் மனம் சுத்தமாகும், சுத்தமாவது ஏது? பளு குறையும் பாவ மூட்டையைக் கொஞ்சம் இறக்கி வைத்தாற்போல் இருக்கும். வேறு யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் எனக்கு ஆறுதல் ஏற்படும்? அதற்குத்தான் உன்னைத் தேடி வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே இருமினான். இருமலுக்குப் பிறகு மார்பைப் பிடித்து அழுத்திக் கொண்டான். பெருமூச்சு விட்டான். முகத்தில் வியர்வையைத் துடைத்தான். தலையைச் சொரிந்து கொண்டான். “அப்புறம் என்ன? இன்னொரு படுபாவி வந்து சேர்ந்தான்; பக்கத்து ஊரான். அவன் என்னைப் போல் நோயாளி. உனக்குமா இது வந்துவிட்டது” என்றான். “விதி” என்றேன். “இதற்கு ஒரு வழி சொல்கிறார்கள். செய்வாயா?” என்றான். நீ செய்து பலன் கண்டாயா? என்றேன். “என்னால் முடியாது. கையில் காசு இல்லை. உனக்குப் பணம் இருக்கிறது நீ செய்யலாம் என்றான். “கன்னிப் பெண்ணின் உறவு ஏற்பட்டால் இந்த வெப்பு அடங்கி விடும்” என்றான். நான் நம்பவில்லை. பட்டணத்தில் ஒரு படித்த பணக்காரர் இருக்கிறார் என்று அவருடைய கதையைச் சொன்னான். அவருக்கு இந்த நோய் வந்துவிட்டதாம். பெரிய பணக்காரராம், பெரிய பங்களாவாம். ஒரு கூட்டாளியைப் பிடித்தாராம். அந்தக் கூட்டாளி அழகாக இருப்பானாம். அவனைக் காட்டி அவனுக்காக என்று சொல்லி இளம் பெண்கள் பலபேரை காசு கொடுத்து மயக்கிக் கொண்டுவரச் செய்தாராம். என்ன என்னவோ சொன்னான். நான் நம்பிவிட்டேன். எண்ணிப் பார்க்காமல் நம்பி விட்டேன். அந்தப் பணக்காரப் பாவிக்கு நோய் போய் விட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யாமலே நம்பி விட்டேன். ஆசுபத்திரிக்குப் போன பிறகு அந்தப் பணக்காரனைப் பற்றிச் சிலரிடத்தில் என்னைப்போல் நோயாளிகளிடத்தில் சொன்னேன். அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். சுத்தப் பிதற்றல் என்று சொன்னார்கள். அந்தப் பணக்காரன் அதே நோயால் அழுகி அழுகி முகமெல்லாம் கெட்டு அழிந்து செத்தான் என்று சொன்னார்கள். நான் அப்படி ஆராய்ந்து பார்க்கவில்லை. பக்கத்து ஊரான் சொன்னதைக் கேட்டு நம்பிவிட்டேன், நிலத்தின்மேல் கடன் வாங்கத் தலைப்பட்டேன். காசை வாரி இறைத்தேன். சில ஏழைக் குடும்பங்களைக் கெடுத்தேன், கெடுத்தேன். அய்யய்யோ! வேலு! இந்தப் பாவத்துக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன் வேலு! நினைத்தால் மனம் பகீர் என்கிறதே” என்று கவரில் தலையை மோதிக்கொண்டு அழுதான். “அய்யய்யோ” என்று தலையைச் சுவரிலிருந்து எடுத்தபோது, தலையில் ஒரு புண்நைந்து இரத்தம் கசிந்தது.
“என்ன சந்திரா! நீ சும்மா இருக்கமாட்டாயா? இப்படியா தலையை மோதிக்கொள்ள வேண்டும்” என்று புண்மருந்து எடுத்துவரச் சென்றேன்.
திரும்பியபோது, அவன் ஒரு கந்தலால் தலையைத் துடைத்துக் கொண்டிருந்தான். என் கையில் மருந்து இருந்ததைப் பார்த்து, “மருந்து எடுத்துவந்தாயா?” அதைவிடப் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை எடுத்து வந்து ஒவ்வொரு புண்ணிலும் குத்தினாலாவது என் பாவம் தீருமே” என்றான்.
“நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே” என்றேன்.
“எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய் வந்துவிட்டதே. என்னால் எத்தனை குடும்பங்களில் இது பரவப் போகிறதோ! நான் மட்டுமா அழிந்தேன்? ஊரையும் கொஞ்சம் அழித்து விட்டுத்தானே வந்தேன்” இவ்வாறு சொல்லிச் சிறிது அமைதியானான். சரி, போகலாம் என்று அசைந்தேன். மறுபடியும் பேசத் தொடங்கினான்: “ஒன்று நல்லதாச்சு. என் பொண்டாட்டி போய்விட்டாள். நல்லதே செய்தாள். இருந்து நோயால் அழியாமல், தானே செத்து மறைந்தாள்” என்று அமைதியான குரலில் சொன்னான். அப்போது மட்டும் அமைதி இருந்த காரணம் என்ன, ஒருவேளை அந்தத் தற்கொலையைப் பற்றிய பயம் காரணமோ என்று எண்ணினேன். “அடடா! என்ன பாடு படுத்தினேன் அவளை! நல்ல கேள்வி கேட்டாள் என்னை! நீ படித்தவனா என்று சரியான கேள்வி கேட்டாள். எனக்குத் தகும் தகும். நான் படித்தவனா? படிப்பு எங்கோ போச்சு. எப்போதோ போச்சு! படித்தவனா நான்? நான் படித்தவனே அல்ல. நான் ஒரு முட்டாள். இப்போது உணர்கிறேன். அவள் சொன்னபோது உணரவில்லை. இப்படிக் கேட்டாளே என்று அடித்தேன். தடி எடுத்து அடித்தேன். ஆத்திரம் தீர அடித்தேன். அவளும் தன் ஆத்திரத்தை அந்தக் கிணற்றின் அடியில் போய்த் தீர்த்துக்கொண்டாள். வேலு! உனக்குத் தெரியுமா இது?” என்றான்.
நான் பேசாமல் நின்றேன். “தெரியுமா வேலு!” என்று என் முகத்தை பார்த்தான்.
“தெரியும்” என்றேன்.
“உனக்கு மட்டுமா? அம்மாவுக்கும் தெரியுமா?”
நான் பேசவில்லை.
“சொல்லு வேலு! இப்போது சொன்னால் என்ன, சொல்லு வேலு! அம்மா அப்பா எல்லார்க்கும் தெரியுமா?” என்று விடாமல் கேட்டான்.
“தெரியும்” என்றேன்.
“தெரியுமா!” என்று முதலில் மெல்லத் தலையை ஆட்டினான். பிறகு எங்கிருந்தோ உணர்ச்சி மேலிட்டு வந்து அவனை ஆட்டி வைத்தது. “அய்யோ! அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! நான் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டேன் என்று அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! என்னைப் பற்றி என்ன எண்ணினார்களோ, என்ன எண்ணினார்களோ? அய்யோ! அய்யோ!” என்று உடம்பெல்லாம் நடுங்கிக் கதறினான்.
சந்திரன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கலங்கியதையும் கதறியதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. “பழைய கதையை எல்லாம் நினைத்து ஏன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய்? வேண்டா. சும்மா இரு” என்று அப்பால் நகர்ந்தேன்.
“பழைய கதையா? நான் நினைக்கிறேனா? அது போக’லையே! மனத்தை விட்டுப் போக’லையே! நான் என்ன செய்வது?” என்று இருமத் தொடங்கினான்.
இரவு எட்டு மணிக்கு வேலைக்காரன் உணவு கொண்டு வந்ததும்; ஒரு பகுதி உணவைத் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பகுதியை அந்த உணவுத் தூக்கிலேயே வைத்திருக்கச் சொன்னேன். வேலைக்காரனை விட்டுச் சந்திரனுக்கு உணவு இடச் சொல்லலாம் என்றால் அவனுடைய நொந்த மனம் என்ன நினைத்து வருந்துமோ என்று எண்ணினேன். நான் முன்னே சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் போடலாம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. வேலைக்காரனை அனுப்பிவிட்டேன். நானே உணவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றேன். சந்திரன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டேன்.
“வேலு! அம்மாவை நினைத்துக் கொண்டேன்’பா. எவ்வளவு அன்பான மனம் அப்பா! மறுபடியும் எப்போடா பார்க்கப் போகிறேன்? நீலகிரியிலிருந்து நான் வந்த பிறகாவது அம்மா செத்திருக்கக் கூடாதா? அம்மா இருந்திருந்தால் இவ்வளவு கெட்டுப் போயிருக்க மாட்டேன் அப்பா! ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அப்பா வேலு!” என்று மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதான். நான் ஆறுதல் சொன்னேன். “உன்னால் ஆறுதல் பெறலாம் என்றுதான் வந்தேன்’பா. ஆனால் இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மறைந்து போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் புறப்பட்டு வருகின்றன. நான் என்ன செய்வேன் வேலு? என்னால் தாங்க முடியலையே! உடம்பின் எரிச்சல் தினவு பாதை எல்லாம் அடங்கிப் போயிருக்கிறாற் போல் தெரிகிறது. என் மனத்தில்தான் இப்போது எல்லாத் துன்பமும் சேர்ந்துவிட்டது. தாங்க முடியவில்லையே” என்று பொருமினான்.
சாப்பிடச் சொன்னேன். ஒரு சொல்லும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். நான் இலை எடுத்துப்போட முயன்றபோது, “வேலு! உனக்கு இந்த வேலையும் வைக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் செய்கிறேன்’பா” என்று தானே இலையைச் சுருட்டி ஒரு மூலையில் எறிந்தான். கைகழுவ நீர் விட்டேன். கையைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், “அப்பா, வேலு! அம்மாவுக்குப் பிறகு என் மனைவி அன்பாகத்தான் சோறு போட்டாள். நான் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிரில் நின்றது நின்றபடி இருப்பாள். ஒரு நாளாவது உட்காரு என்று நான் சொன்னதே இல்லை. அன்பாகத்தான் சோறு போட்டாள். ஆனால் நான் அன்பு காட்டவில்லை. அடக்குமுறைதான். பயந்து நடுங்கினாள். நான் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தேனோ, அம்மாவுக்கு மேல் இருந்திருப்பாள், கொடுமை செய்துவிட்டேன். கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால், இப்போது எவ்வளவோ உதவியாக இருந்திருப்பாள், எனக்காக உயிரையும் கொடுத்திருப்பாள். ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் கொடுத்தாள்” என்று மெல்லச் சொல்லி அடங்கினான்.
இன்னும் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு வருந்துவான் என்று, “சாப்பிடப் போகிறேன்” என்று சொல்லி நகர்ந்தேன். அவன் நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஏதோ சிந்தையில் இருந்துவிட்டான்.
நான் உண்டு முடித்தபிறகு, தண்ணீர் வேண்டுமா என்று கேட்டுவரச் சந்திரனிடம் சென்றேன். “தண்ணீர் வேண்டுமா?” என்றேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவனுடைய குரல் கேட்டது. சென்று பார்த்தேன். உறங்கிக் கொண்டே இருந்தான். தாழ்வாரத்தில் மெல்ல நடந்தபடி இருந்தேன். என்னென்னவோ சொல்லி உறக்கத்தில் வாய் பிதற்றிக் கொண்டிருந்தான். திருப்பி வந்துவிட்டேன்.
நான் படுக்கச் செல்லுமுன், அம்மா அப்பா என்று சந்திரன் பெருமூச்சு விடும் குரல் கேட்டது. சென்று, “என்ன வேண்டும்?” என்று கேட்டேன். “தண்ணீர் கொடு! உடம்பு கனகன என்று இருக்கிறது. இங்கும் அங்கும் அலைந்தது உடம்புக்கு ஆகவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது” என்றான். “கொஞ்சம் இரு. வெந்நீர் வைத்துக் கொண்டுவருவேன்” என்று அங்கிருந்து வந்து மின்சார அடுப்பில் தண்ணீரைக் காய்ச்சிக் கொண்டுபோனேன். குடித்து “அப்பா!” என்று சோர்ந்து படுத்தான். அவனுடைய மனம் அப்பாவை நினைக்கிறதோ இல்லையோ, வாய் அடிக்கடி சொல்கிறது; அவர் மகனைப் பற்றி மனத்தில் அடிக்கடி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு கிராமத்தில் இருக்கிறார். தெரிந்தால் வந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டே படுக்கச் சென்றேன். சந்திரனுடைய காய்ச்சலை எண்ணி வருந்தினேன். உடம்பின் அலைச்சல் காரணம் என்று சொன்னான். உள்ளத்து உணர்ச்சி வேகமே காரணம் என்று எனக்குத் தோன்றியது. நாளை முதல் இப்படிப்பட்ட வேகமான பேச்சுக்கு இடம் தரக்கூடாது; நான் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்று எண்ணியபடியே உறங்கிவிட்டேன். நள்ளிரவில் ஒருமுறை விழித்து எழுந்துபோய்ப் பார்த்தேன். உடம்பில் இன்னும் காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்க்க அணுகினேன். தொடாமலே பின் வாங்கி வந்துவிட்டேன். காலையில் அவனுடைய குரல் கேட்டு விழித்தேன். “விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது” என்ற அருட்பாவை அவன் உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தான். பாட்டைக் கேட்டு என் மனமும் உருகியது. அவன் விருப்பம்போல் பாடிக்கெண்டு ஆறுதல் பெறட்டும் என்று ஒருவகை ஒலியும் செய்யாமல் அங்கே போகவும் போகாமல் இருந்தேன். அரைமணி நேரம் கழித்து பாடுவது நின்றது. அப்போது அணுகி காய்ச்சல் இல்லையே?” என்றேன் “நின்றுவிட்டது” என்றான். என் மனம் மகிழ்ந்தது.
“ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?” என்றான்.
“நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது” என்றேன்.
“அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு” என்றான்.
“ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார். தங்கை கற்பகம் இருக்கிறாள்” என்றேன்.
“ஏன்? இன்னும் மைத்துனன் வந்து அழைத்துப் போகாமலே இருக்கிறானா?”
“இல்லை, இப்போது அன்பாக இருக்கிறார்கள். மாலன் முன் போல் இல்லை. மனம் திருந்திவிட்டான்.”
“அப்பா! நல்ல செய்தி சொன்னாய் அப்பா. என் வயிற்றிலே பால் வார்த்தாற் போல் இருக்கிறது. நல்லபடி இருக்கட்டும்; போ. கற்பகத்தின் வாழ்க்கையும் கெட்டுப் போகுமே என்று பயந்தேன். ஆசுபத்திரியில் இருந்தபோது அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டேன். நல்லபடி வாழணும்” என்றான்.
காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மிக அமைதியாகப் பேசினான். பழைய சந்திரனுடைய அறிவின் தெளிவை அந்தப் பேச்சில் கண்டேன்.
“வேலு! எனக்கு ஒன்று தோன்றுகிறது. எனக்கு இளமையிலேயே காம உணர்ச்சி மிகுதியாக இருந்தது. என்னைப்போல் எத்தனையோ பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?” என்றான்.
“ஆமாம். உடல்நூல் அறிஞர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவின் ஆற்றல் மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த உணர்ச்சியும் மிகுதியாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போனால் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்குவார்களாம்” என்றேன்.
“அது சரி. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெண்ணின் அன்பு இல்லாமல் பட்டினி போட்டால் கெட்டுப் போவார்களே, நான் அப்படித்தான் கெட்டொழிந்தேன். பழங்காலத்தில் போல பதினெட்டு இருபது வயதில் திருமணம் முடித்துவிட்டால்-“
“படிப்புக்கு இடையூறாகப் போய்விடும். வளர வேண்டிய திறமை வளராமலே போய்விடுமே. அது பெரிய இழப்பு அல்லவா?”
“அதுவும் உண்மைதான்” என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் அவனுடைய தொண்டை கரகரத்தது. கனைத்தான். உடனே இருமல் வந்தது. மார்பைத் தடவிக் கொண்டான். பிறகு தொண்டையை ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டு, “பெண்களின் அன்பைப் பெற முடியாமல் தடுக்கும்போது, அவர்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்கவேண்டும். அதை செய்யாமல்-” என்று சொல்லி நிறுத்தினான். பிறகு “சிலர் முகமூடி போட்டு மறைப்பதும் இதற்குத்தானோ, என்னவோ? துறவியாகும் பெண்களையும் விதவைகளையும் மொட்டை யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஆமாம், பெண்ணின் அழகு பொல்லாதது. கெடுத்துவிடும் என்று பயந்து தான் செய்திருப்பார்கள்.”
“இருந்தாலும் நாகரிகம் அல்ல.”
“அது சரி. ஒப்புக் கொள்கிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? என் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது அந்தப் பெண்ணின் அன்பு கிடைத்தவரையில் கெடாமல் இருந்தேன். நீலகிரியில் அந்தத் தேயிலைத் தோட்டத்திலும் ஒருத்தியின் அன்பு கிடைத்தது. ஒழுங்காகத்தான் இருந்தேன். அவள் முரட்டுப் பெண். முரட்டுப் பெண்ணாக இருந்தாலும், அன்பில் முரட்டுத் தன்மை ஏது? எங்கள் ஊர்தான் என்னைக் கெடுத்துவிட்டது.”
இவ்வாறு அவன் சொன்னபோது, ஊர் அல்ல. ஊரில் இருந்த செல்வம், அதிகாரச் செருக்கு, காசுதான் காரணம் என்று அப்போது எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
“அவர்கள் நானாகத் தேடிப்போன பெண்கள். என் மனைவி அப்படி நான் தேடியவள் அல்ல. அவள் வரும் போதே பயந்து வந்தாள். நான் அவளிடம் அன்பைப் பெறவில்லை. பயத்தைத்தான் பெற்றேன்.”
அவன் முதலில் அன்பைத் தராமல் அதிகாரத்தைக் காட்டியிருப்பான். அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.
“ஊரில் கண்ட பெண்களோடு பழகினேன். அவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். அது ஒரு வாழ்வா! சே! ஊர்ச்சோற்றைத் திருடி உண்பது ஒரு வாழ்வா? நம் உரிமையான உணவு ஆகுமா? இப்படி என்னைப்போல் எத்தனை பிள்ளைகள் கெடுகிறார்களோ என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது என்று கருதுகிறேன்” என்றான்.
மறுபடியும் அவனே பேசத் தொடங்கினான் “அல்லது, ஐரோப்பியர்களைப் போல் அமெரிக்கர்களைப்போல் நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் இளமையில் பழகவொட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிரிப்பதை விட்டுவிட வேண்டும். அழகுப் பசி இயற்கையாக இருக்கிறது. அப்படி இளமையில் கலந்து பழக நிறைய வாய்ப்புகள் இருப்பதால் ஐரோப்பிய இளைஞர்கள் அழகைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கே இயற்கையான பசியை அடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப்பதால், அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படுகிறது. சமுதாயத்திலோ பார்த்துப் பேசியும் பழகுவதற்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிகளை அடக்குவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர் கெட்டுப்போகிறார்கள்” என்றான்.
“ஆண்கள் அழகாக இல்லையா? அழகான ஆண்களோடு பழகி அந்த அழகுப்பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்றேன். வேண்டும் என்றே கேட்டேன்.
“நீ பெரிய பைத்தியக்காரன்! இயற்கை அப்படிப் படைத்திருக்கிறது. ஆணின் கண்ணுக்குப் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். தெருவில் ஏழெட்டுப்பேர் ஆண்களும் பெண்களும் போவதைப் பார்க்கிறாய். யாரை நன்றாகப் பார்ப்பாய்? பெண்களே போகாவிட்டால் ஆண்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்போது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப் புலப்படாது. அப்படியே தான் பெண்களுக்கும், இயற்கை ஏற்படுத்திய கவர்ச்சி அது. நாய்க்கு இறைச்சியைப் பார்த்தால்தான் வாயில் நீர் ஊறும். பசுவுக்குப் புல்லைப் பார்த்தால்தான் வாய் ஊறும். அதுபோல்தான்” என்றான்.
இவ்வளவு அமைதியாக அறிவாகப் பேசுகிறானே என்று வியந்தேன். நேற்றோடு அவனுடைய கதறலும் அழுகையும் உணர்ச்சியும் முடிந்தன என்று மகிழ்ந்தேன்.
ஆனால் மலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, முன் நாள் போலவே உடம்பைச் சொரிந்து கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் அமைதி இல்லாமல் இருந்தான். காப்பி குடித்துக் கால்மணி நேரம் ஆனதும், பெருமூச்சும் அய்யோ என்ற குரலும் கேட்டன. “வேலு! நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்? என்னால் இனிமேல் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? பெற்ற தாய் இல்லை. தந்தை முகத்தில் நான் விழிக்கப்போவதில்லை. கட்டின மனைவியும் இல்லை. ஏன்’பா இந்த வாழ்வு?” என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். சிறிது நேரம் அமைதியானேன். ஏதோ பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப்பால் தெரிந்தது. “நம் தோட்டத்தில் சொக்கான் என்று ஒருத்தன் இருந்தானே, நினைவு இருக்கிறதா? ஏழைக் குடும்பம். அவனுடைய பெண் அழகாக இருந்தாள். பக்கத்து ஊரில் கொடுத்திருந்தான். நான் அந்தக் குடும்பத்தையும் கெடுத்தேன். அப்போது பாவம் என்ற எண்ணமே இல்லாமல் பணம் கொடுத்து ஏமாற்றிவிட்டேன். அப்பா கேள்விப் பட்டிருந்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இப்படிப்பட்ட கெட்ட வழி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது. அந்த உத்தமர் வயிற்றில் பிறந்த நான், எவ்வளவு அநியாயம் செய்தேன். நான் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ, அய்யய்யோ!” என்று ஒரு பேதைப் பெண் போல் புலம்பினான். உடனே, “அப்போதே அதற்குத் தண்டனையும் அனுபவித்தேன். ஒருத்தி என்னை ஏமாற்றினாள். இரண்டு பவுனில் சங்கிலி ஒன்று செய்து போட்டால் சரி என்று ஒருத்தி ஒப்புக் கொண்டாள். மனைவி கழுத்தில் நாலு பவுன் சங்கிலி ஒன்று இருந்தது. அதைக் கழற்றிக் கொண்டு போனேன். அவளுடைய குடிசையில் அவள் சொன்ன நேரத்தில் நுழைந்து சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். வெளியேயிருந்து அவளுடைய கணவனும் இன்னொருத்தனும் திடீரென்று நுழைந்தார்கள். அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு அப்பால் மனைவி கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள். அத்தையின் கை என் முதுகைத் தடவியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து, “என்ன அத்தை! இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீர்களா? என்ன சொன்னாள் இந்த நாய்?” என்று கேட்டு எழுந்தேன். அத்தை பரிவுமிக்க குரலில், “ஒன்றும் இல்லையப்பா. ஏன்டா கண்ணு இப்படி, ராசா போல இருப்பதை விட்டுவிட்டு” என்றார். “போ அத்தை போ. போய் உன் வேலையைப் பார்” என்று அங்கிருந்து எழுந்து அவர்களின் கண்ணுக்குப் படாமல் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். இவ்வளவு தண்டனை பட்ட பிறகும் என்னுடைய ஆணவம் அடங்கியதா? அடங்கவில்லை. வேலு! சொன்னால் நம்புவாயா வேலு! நம்முடைய நண்பன் சந்திரனா இப்படிச் செய்தான் என்று நீ எண்ணுவாய். அவ்வளவு கொடுமை செய்தேன் வேலு! என்னை அடித்துத் துரத்திய அந்த குடிசைக்கு ஒரு நாள் தீ வைத்துவிட்டேன். சந்திரனா செய்தான் என்று எண்ணுகிறாயா நான் அல்ல வேலு. என்னுடைய ஆணவம், என்னுடைய ஆணவம்” என்று பலமுறை கதறினான். மறுபடியும் நேற்றுப் போல் உணர்ச்சி வேகம் அளவுகடந்து போய் உடம்பைக் கெடுக்கக்கூடாதே என்று பயந்து, சொல்லாமல் நகர்ந்து வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, அம்மா அப்பா என்று அவன் மூச்சுவிடும் குரல் கேட்டுச் சென்று, “என்ன, ஏதாவது வேண்டுமா?” என்றேன். “ஒன்றும் தேவை இல்லை. நேற்றுப் போல் காய்ச்சல் வந்துவிட்டது. தலை கனமாக இருக்கிறது” என்று தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினான். தலை வலித் தைலம் கொண்டுபோய்க் கொடுத்தேன். பூசிக் கொண்டான். அதன் பிறகும் அப்பா அம்மா என்று துன்பக் குரல் தணியவில்லை. “குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடு” என்றான். சூடாக ஆர்லிக்ஸ் போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடித்துவிட்டு, “காய்ச்சல் வரவர ஏறுகிறது. என்ன செய்வேன்? நீ போ. நான் படுத்துப் பார்க்கிறேன்” என்றான். “இன்றைக்காவது மருந்து வாங்கி வந்திருக்கலாமே” என்றேன். வேண்டா என்று தடுத்தான்.
அன்று இரவு இரண்டுமுறை எழுந்து போய்ப் பார்த்தேன். முதன் முதலில் வாய் பிதற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். இரண்டாவது முறை சென்றபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மெல்லத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது. தொட்ட பிறகு ஏதோ மனக்குறை ஏற்பட்டது. உடனே சோப் இட்டுக் கையை நன்றாகக் கழுவி விட்டுப் போய்ப் படுத்தேன்.
மறுநாள் காலையில் முன்போலவே அருட்பா பாடிக்கொண்டிருந்தான். “காய்ச்சல் இருக்கிறதா, மருந்து வாங்கி வரட்டுமா?” என்று கேட்டேன். “எனக்கா? எதற்கு மருந்து? காய்ச்சல் இப்போது இல்லையே” என்றான். காப்பி குடித்த பிறகு இன்னும் தெளிவாகப் பேசினாள். உடம்பின் காய்ச்சல் போலவே, உள்ளத்தின் உணர்ச்சி வேகமும் காலையில் அடங்கியிருந்தது. பகலெல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து, மாலையில் மலர்ந்து விடுகிறதே என்று எண்ணினேன். அன்று காலையில் தான் அவன் என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிக்க அக்கறையோடு கேட்டான். அப்போது அவன் காட்டிய அன்பால் என் மனம் உருகியது.
“இல்வாழ்க்கை எப்படி நடக்கிறது? மனைவியும் நீயும் மனம் ஒத்துப் போகிறீர்களா? அன்பாக இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“ஒன்றும் குறைவு இல்லை. ஆனால் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாதவள். உண்மையானவள்; அன்பானவள்” என்றேன்.
“உண்மையும் அன்பும் இருந்தால் போதுமே. நீதான் விட்டுக் கொடுத்துப்போ. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. என்னைப்போல் தலைக்கொழுப்போடு நடக்காதே.”
“நான் விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் போகிறேன். ஆனால்?”
“என்ன குறை? சொல் வேலு! இங்கு இல்லாதபோது பேசினால் என்ன?”
“ஒன்றும் இல்லை. கொஞ்சம் செருக்கு உண்டு.”
“என்ன செருக்கு? பணச் செருக்கா? படிப்புச் செருக்கா அழகுச் செருக்கா?”
“அந்தச் செருக்கு ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இடமும் இல்லை.”
“வேறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் செருக்கு இருக்கலாம்.”
“ஆமாம் அதுதான். மிகப் படித்த பெண்களையும் மதிக்க மாட்டாள். அவர்கள் ஒழுங்கானவர்களா என்று கேட்பாள்.”
“அந்தச் செருக்கு இருந்து போகட்டுமே. அதனால் ஒரு கெடுதியும் இல்லை, நல்லதாச்சு. என் தங்கை கற்பகத்துக்கும் அப்படிப்பட்ட செருக்கு உண்டு. தான் ஒழுங்கானவள் என்றும், கெட்டிக்காரி என்றும் எண்ணிக் கொண்டு, தன் கணவனை ஏமாந்த பேர்வழி என்று சொல்கிறாள். அப்படிப்பட்ட செருக்கு இருந்தால் இருந்து போகட்டும். அந்தச் செருக்கு இல்லாத மனைவியாக வேண்டுமானால் முப்பது வயது உள்ள விதவையாகத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.”
நான் சிரித்தேன்.
“நான் சொல்வது தப்பா? உள்ளதைத்தான் சொல்கிறேன். என்னிடத்தில் உண்மையாகப் பணிவோடு நடந்தவர்கள் இரண்டு பேர். ஒருத்தி நீலகிரித் தேயிலைத் தோட்டக்காரி, காரணம் அவளுடைய பழைய குறையான வாழ்க்கை. மற்றொருத்தி – இறந்துபோன மனைவி; காரணம் அவளுடைய பயம். பயந்த மனைவியைவிட, செருக்கு உள்ள மனைவியே மேல்” என்றான். திடீரென எதையோ நினைத்தவன் போல், “உன் மனைவியை நான் பார்க்கவே இல்லையே” என்றான்.
“பார்த்திருக்கிறாயே. வேலூரில் என் அத்தை மகள்.”
“ஓ! அந்தப் பெண்ணா? சின்ன வயதில் உன் தங்கையோடும் என் தங்கையோடும் சேர்ந்து விளையாடிக் கொண்டு…”
“ஆமாம் அவளே தான்.”
“நீ உன் அத்தை மகளை மணந்து கொள்ளமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாயே, நினைவு இருக்கிறதா? அது சரி. இப்போது ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? நான் ஒன்று சொல்கிறேன். உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் பயன் கிடைக்காமல் ஏமாந்து திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிறார்கள். தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது என்பார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும். குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் வந்தால் போதும் என்று வியாபாரம் செய்கிறவர்கள் அவ்வளவாகக் கெடுவதில்லை. அளவுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக எதிர்பார்த்து வியாபாரம் செய்கிறவர்கள் சிலர் கடைசியில் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாய் போகிறார்கள். சரி, சரி, பட்டுக் கெட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்களை உனக்கு ஏன் சொல்ல வேண்டும். நீதான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறாயே. உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டேன்” என்றான்.
சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு” என்றான்.
அன்று மாலை மறுபடியும் உணர்ச்சி வேகத்தால் கதறுவான், அலறுவான், அதனால் காய்ச்சல் மிகும் என்று எண்ணி அவனெதிரே போய் உட்கார்ந்து பேசாமலே தப்பித்துக் கொண்டிருந்தேன். மாலை சிற்றுண்டியும், காப்பியும் கொடுத்துவிட்டு, அங்கே நிற்காமல் உடனே வந்து விட்டேன். சந்திரன் தானாகவே அழைத்தான். “இன்றைக்குக் காய்ச்சல் முன்னமே வந்துவிட்டது. கண்ணெல்லாம் எரிகிறது. உடம்பெல்லாம் எரிகிறது. கணுவெல்லாம் வலி பொறுக்க முடியவில்லை. மருந்து ஏதாவது வாங்கி வந்தால் தான், தாங்க முடியும்போல் இருக்கிறது” என்றான்.
“உடனே எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய், தொழுநோய் என்பது தவிர மற்றச் செய்தி எல்லாம் சொல்லி மருந்து வாங்கிவந்தேன். மருந்தை உட்கொண்டதும், ஏதோ பேசத் தொடங்குவான் போல் தெரிந்தது. அதற்கு இடம் கொடுக்காமல் வந்து விடவேண்டும் என்று எண்ணி உடனே நகர்ந்து வந்துவிட்டேன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி மேசையருகே உட்கார்ந்து ஏழெட்டு வரிகள் எழுதினேன். சந்திரன் கூப்பிட்ட குரல் கேட்டது. போய் நின்றேன்.
“இன்றைக்கு என் பக்கத்தில் நிற்க மாட்டேன் என்று போய் விடுகிறாயே. என்மேல் வருத்தமா? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?” என்றான்.
“அப்படி ஒன்றும் இல்லையே, கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்” என்றேன்.
“யாருக்கு”
“வீட்டுக்கு”
“உங்கள் வீட்டுக்கா? எங்கள் வீட்டுக்கா?”
“எங்கள் வீட்டுக்குத்தான், உங்கள் வீட்டுக்கு உன்னைக் கேட்காமல் எழுதுவேனா?”
“ஆமாம், வேலு! நான் முன்னமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு என்னைப் பற்றி எதுவும் எழுதி விடாதே. ஒருவேளை அவர்கள் யாராவது வந்தாலும் சொல்லி விடாதே. யாராவது வருவதாகக் கடிதம் வந்தால் எனக்கு முன்னதாகவே சொல்லிவிடு. நான் இங்கிருந்து எங்காவது போய்விடுவேன். என்னிடம் ஒன்றும் மறைக்காதே.”
“இப்படி நான் உன்னை மறைத்து வைத்திருப்பது தெரிந்தால் என்மேல் அவர்கள் வருத்தப்படுவார்களே!”
“வருத்தப்பட்டாலும் சரி. எனக்காகத் தாங்கிக்கொள். என் மனது கேட்காது. நீ மீறிச் செய்யமாட்டாய் என்று நம்பித்தான் இங்கே வந்தேன். இல்லையானால் வந்திருக்க மாட்டேன். என்னுடைய கெட்ட அழுகிய வாழ்வைப் பற்றி அவர்கள் யாரும் தெரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். இந்தச் சீர்கெட்ட முகத்தில் அவர்கள் யாரும் விழிக்கக் கூடாது. தங்கை கற்பகத்தை மட்டுமாவது பார்க்க வேண்டும் என்று நேற்று ஆசை வந்தது. அதுவும் வேண்டா என்று மனத்தைக் கல்லாக்கி கொண்டேன். இன்று உறுதியாய்ச் சொல்லியிருக்கிறேன். நான் செத்தாலும் அவர்களுக்கு தெரிவிக்காதே. நீயே எடுத்துப் போட்டுவிடு. ஒழியட்டும். என் வாழ்வு என்னோடு ஒழியட்டும். நீயே எடுத்துப் போட்டு விடு. யாரும் கொள்ளியும் வைக்க வேண்டாம். மண்ணில் சும்மா போட்டு மண்ணைத் தள்ளி விடு. போதும். இது என் வேண்டுகோள். உன் நண்பனுடைய கடைசி வேண்டுகோள். மறக்காதே” என்றான்.
அந்தச் சொற்கள் என்னைக் கலக்கின. என் நெஞ்சம் உடைந்து, கண்ணீர் வழிந்து நின்றேன். சந்திரன் தலை நிமிர்ந்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டான். “அழுகிறாயா? வேலு! எனக்காக அழுகிறாயா? அழு, அழு. ஆசுபத்திரியில் இருந்த போது, நான் செத்தால் அழுகிறவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று எண்ணினேன். நீ ஒருத்தன் இருக்கிறாய். அழு, வேலு. எனக்காக அழுகிறாய். என் அழுகிய உடலை எடுத்து மண்ணில் போட்டுவிட்டு அழுவதற்கு நீ ஒருவன் இருக்கிறாயே, அது போதும்” என்றான். உடனே என்ன நினைத்துக் கொண்டானோ, தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுத் தன் வலக்கையால் மார்பைப் பற்றிக் கொண்டு விம்மினான். குப்புறப் படுத்துத் தலையணை மேல் தலை வைத்துக்கொண்டு, மடை திறந்தாற்போல் உணர்ச்சி பொங்கி வர அழுதான். சிறிது நேரம் அப்படியே அழுது கொண்டிருந்த பிறகு மெல்ல உணர்ச்சி தணிந்து வரத் தொடங்கியது. கவிழ்ந்தபடியே இருந்தான். இன்னும் அங்கே இருந்தால், ஏதாவது ஒரு பேச்சைத் தொடங்கி மறுபடியும் உணர்ச்சி வசப்படுவான் என்று எண்ணி, அவன் திரும்பிப் பார்ப்பதற்கு முன் வந்துவிட்டேன்.
அன்று இரவு உணவுக்காகச் சென்றபோது, அவன் அமைதியாகப் படுத்து உறங்கி கொண்டிருந்தான், “சந்திரா சந்திரா” என்று இரண்டு குரல் கொடுத்தும் எழவில்லை. மூன்றாவது குரலுக்கு “ஆ” என்று விழித்து “ஏன் வேலு!” என்றான். “உணவுக்கு நேரம் ஆயிற்று” என்றேன். “பசி இல்லை. மிளகு நீரில் கொஞ்சம் சோறு இட்டுக் கரைத்துக் கொடு. குடித்து விட்டுப் படுத்துக் கொள்வேன். வேறு ஒன்றும் வேண்டா” என்றான். அப்படியே மிளகுநீரும் சோறும் கரைத்துக் கொடுத்தேன். குடித்து விட்டுப் படுத்தான். “உடம்பு எப்படி இருக்கிறது?” என்றேன். “உடம்பு காய்ச்சலால் கொதிக்கிறது. உடம்பு எப்படியாவது போகட்டும். சாவுக்காக இப்போது பயமே இல்லை. அழுகின உடம்பு அழியப்போகிறது. அவ்வளவுதானே? நான் தேடி வந்தது கிடைத்து விட்டது. மன அமைதியே இல்லாமல் எவ்வளவோ துன்பப்பட்டேன். அது கிடைத்துவிட்டது. போதும். ஊரை விட்டு வந்த பிறகு, என் மனம் என்றைக்கும் இவ்வளவு அமைதியாக இருந்ததில்லை. இனிமேல் செத்தால் கவலை இல்லை. இதுபோதும்” என்றான்.
இவ்வாறு அவன் தான் பெற்ற மன அமைதியைக் குறித்துப் பேசியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் வீட்டுக்கு வந்த பிறகு நான் அருமை நண்பனுக்குச் செய்த உதவியால் அந்தப் பயனாவது ஏற்பட்டதே என்று மகிழ்ந்தேன்.
நண்பனுடைய மனம் அமைதியுற்ற அன்று இரவு பத்துமணிக்கு வானத்தில் பெரும்புயல் கிளம்பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்கொண்டு பெருங்கூத்து நடத்தத் தொடங்கின. காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. உடனே எழுந்து சென்று சந்திரனைப் பார்த்தேன். அவன் முன்போலவே அமைதியாய்ப் படுத்திருக்கக் கண்டேன். சன்னல் கதவுகளை எல்லாம் சாத்திக் கொக்கி இட்டுத் திரும்பி வந்தேன். காற்றும் மழையும் நடத்தும் போரைப்பற்றி எண்ணியவாறே படுக்கையில் படுத்தேன். காற்றின் பேரொலி சிறிது அடங்குவதுபோல் இருந்தபோது மழைத்துளிகளின் ஓசை மிகுவதும், மழை ஓசை அடங்கும்போது காற்றின் ஒலி மிகுவதும், போரின் வெற்றி தோல்விகளைக் காட்டுவன போல் இருந்தன. பேரிடியாக இருந்த ஒலி மாறி அமைதியான முழக்கம் மீண்டும் வானத்தில் இடையிடையே கேட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல் ஒளி விட்டுவிட்டு என் அறைக்குள் புகுதல் கண்டேன். இவற்றிற்கு இடையே நண்பன் சந்திரன் பெற்ற மன அமைதியைப் பற்றி எண்ணியவாறே உறங்கிவிட்டேன்.
இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன்.
காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந்ததைக் கண்டேன். சரி, உறங்கட்டும் என்று திரும்பிவிட்டேன். பல்துலக்கிக் குளித்தபிறகு சென்று கண்டேன். அப்போதும் அதே நிலையில் படுத்திருக்கக் கண்டதும், என் மனம் திக்கென்றது. நான்கு முறை பெயரிட்டு அழைத்தேன். ஒரு குரலும் இல்லை. அப்போதுதான் அவனுடைய உடம்பில் மூச்சின் அசைவும் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்! கைவிரலை மூக்கின் அருகே கொண்டு சென்றேன். காற்று இல்லாததை உணர்ந்ததும், என்னை மீறிச் “சந்திரா, சந்திரா!” என்று கூக்குரல் இட்டேன். என் உடம்பில் ஒருவகை அச்சம் ஊடுருவியது. கண்ணின் இமைகளை என் விரலால் நீக்கித் திறந்தேன். ஒளியற்றுப் பஞ்சடைந்திருந்தது. தலைமேல் கை வைத்துக் கொண்டு, “அப்பா சந்திரா இதற்காகவா என் வீட்டை தேடி வந்தாய்? சாவதற்காகக் கடைசியில் என்னைத் தேடி வந்தாயா?” என்று அழுதேன்.
கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து சென்று, “யார் அது? என்றேன். “பச்சைமலை” என்ற குரல் கேட்டுத் திறந்தேன், பச்சைமலையும் பக்கத்தில் வேலையாளும் நின்றிருந்தனர். என் கண்களில் கலக்கத்தையும் முகத்தின் வாட்டத்தையும் கண்ட பச்சைமலை, “என்ன அய்யா! ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?” என்றார். நடந்ததைச் சொன்னேன். “நேற்று முந்தாநேற்று ஆபீசில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றுமே சொல்லவில்லையே” என்றார்.
“என்னுடைய வாழ்க்கையிலேயே பெறுவதற்கு அரிய நண்பர், இளமை நண்பர்” என்றேன்.
“முன்னே என் மனைவியும் அவளுடைய அக்காவும் சொன்னார்களே, அந்த நண்பரா?” என்றார்.
“ஆமாம்” என்று சொல்லி உடல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். பச்சை மலை சந்திரனுடைய உடம்பைக் கண்டதும், சிறிது தொலைவிலேயே நின்று திகைப்போடு என்னைப் பார்த்து, “தொழு நோயாளிபோல் தெரிகிறதே” என்றார்.
“ஆமாம்” என்றேன். “இவருடைய வாழ்க்கை குடும்பத்துக்கும் ஊருக்கும் ஒரு பொல்லாத கறைபோல் இருந்தது. ஆனாலும், நெருங்கிப் பழகிய என்னுடைய வாழ்க்கைக்கு இவர்தான் ஒரு நல்ல கரைபோல் இருந்தார். இவர் இல்லையானால் நான் படித்து முன்னேறியிருக்க மாட்டேன். இவர் பட்ட துன்பங்களிலிருந்து எனக்கு அறிவு வரவில்லையானால், நான் இப்படிச் சீராக வாழ்ந்திருக்கமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல நண்பர் கடைசியில் என்னைத் தேடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டார்” என்றேன்.
“மனைவி திருமகள் சொல்லியிருக்கிறாள். சந்திர அண்ணா கூர்மையான அறிவுடையவர் சிறந்த குணங்கள் உடையவர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்” என்றார்.
“அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளமையில் இவரைப் போல் சுறுசுறுப்பும் அழகும் உடையவர்கள் நான் கண்டதில்லை” என்றேன்.
“அய்யோ! அவ்வளவு அழகான உடம்பு இப்படிநோயால் கெட்டு மாறிவிட்டிருக்கிறதே” என்று அவர் பின் வாங்கினார். பிறகு என்னைப் பார்த்து, “சரி, இனிமேல் ஊருக்குத் தந்தி கொடுக்கவேண்டும். முகவரி கொடுங்கள். நான் எழுதிக்கொடுப்பேன். வேலையாளை அனுப்பலாம். ஊரிலிருந்து வீட்டார் வந்த பிறகுதான் மற்ற வேலைகள்” என்றார்.
என் உள்ளத்தே துயரம் மேலெழுந்தது. அழுதேன். அழுதுகொண்டே, “நண்பருடைய வேண்டுகோளின்படி வீட்டார் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது” என்றேன்.
“நோயாளிகள் அப்படிச் சொல்வார்கள். ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா? அவர்கள் கேள்விப்பட்டால் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள்” என்றார்.
“அதையும் சந்திரனே சொன்னார். என்ன வருத்தப்பட்டாலும் வேண்டா வேண்டா என்றார். தம்முடைய கடைசி வேண்டுகோள் என்றும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிக் கேட்டு கொண்டார்” என்றேன்.
“அப்படியானால் சரி” என்று சொல்லிவிட்டு, நண்பர் வேலையாளிடம் அடக்கத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு ஏவினார். என்னிடம் நெருங்கிவந்து, அப்படியானால் வழக்கமான ஊர்வலத்துக்கு இடம் இல்லை. அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு வண்டி வைத்து இடுகாட்டுக்கு கொண்டுபோய் விடுவோம்” என்றார். அதற்கு இசைந்தேன். ஆனால், வண்டியில் உடம்பை ஏற்றியபோது எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அணுகி வந்து பார்த்தார்கள். யார் என்ன என்று என்னைக் கேட்டார்கள். சொன்னேன்.
இடுகாட்டில் வேலையாளும் பச்சைமலையும் வண்டிக்காரனும் தவிர வேறு யாரும் இல்லை. தன் கிராமத்தில் பெரிய வீட்டில் செல்வ மகனாக வளர்ந்த ஒருவனுடைய வாழ்வு இப்படித் திக்கற்ற முடிவு அடைந்து விட்டதே என வருந்தினேன். சந்திரனுடைய முகத்தைப் பார்த்து நெஞ்சு உடைந்து கலங்கினேன். உடம்பைக் குழியில் இறக்குவதற்காக நாங்கள் நான்கு பேரும் பிடிக்கத் தொடங்கியபோது, “இருங்கள் இருங்கள்” என்று ஒலி கேட்டது. “அண்ணா!” என்று கதறிய பெண்ணின் குரல் கேட்டது வண்டி ஒன்று நிற்க, அதிலிருந்து மாலனும் கற்பகமும் இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண்டேன். அழுதுகொண்டே எதிரில் சென்றேன்.
“அண்ணா போய்விட்டாயா? அண்ணாவா?” என்று கதறிக்கொண்டே வந்தாள் கற்பகம்.
“ஆமாம் அம்மா” என்று விம்மினேன்.
உடனே அவள் ஓடிச்சென்று தன் அண்ணனுடைய உடலின் அருகே உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் தொட்டு அழுதாள். “எங்களை எல்லாம் வெறுத்து வந்து விட்டாயா, அண்ணா! அப்பாவுக்கு என்ன சொல்லுவேன் அண்ணா” என்று கதறினாள்.
“உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லி விட்டுச் செத்தார். அதனால்தான் தெரிவிக்கவில்லை” என்று மாலனுக்குச் சொன்னேன். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டே, “பழைய கசப்பு எல்லாம் தீர்ந்து புது வாழ்க்கை தொடங்கும் போது முதன் முதலில் உன் வீட்டுக்கு வர வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டு வந்தோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் வந்து இப்படி ஒரு தொழுநோயாளி செத்து விட்டார் என்ற செய்தியும், நீங்கள் இடுகாட்டுக்குப் போயிருப்பதும் சொன்னார். உடனே தன் அண்ணன்தான் என்று கற்பகம் உணர்ந்துகொண்டு இடுகாட்டுக்குப் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள். அந்த வண்டியிலேயே நேரே இங்கே வந்தோம்” என்றான்.
கற்பகத்தின் கதறல் எளிதில் ஓயவில்லை. நாங்கள் எல்லோரும் சொல்லி ஓயப்படுத்தினோம். அவள் மகன் திருவாய் மொழியைப் பார்த்து, “மாமா’டா, தெரியுதா’டா” என்றாள். மகள் திருப்பாவையைப் பார்த்து, அழுது கொண்டே “மாமா’டி கும்பிடு” என்றாள். அந்தச் சிறுமியோ, எதையோ கண்டு அஞ்சியவள் போல் தன் தாயைப் பார்த்தபடியே இரு சிறு கைகளையும் எடுத்துக் கூப்பினாள்.
இடுக்காட்டிலிருந்து திரும்பியபோதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன், “டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்” என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே, “விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக் கொண்டு, உன் விருப்பம்போல் ஆட முடியாது. தெரிந்துகொள்” என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டகாரரின் ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது.
(முற்றும்)
– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
நன்றி: https://www.projectmadurai.org/
![]() |
மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
August 7, 2026
ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்
நெ.சி.தெய்வசிகாமணி
August 7, 2026
கோழி மொட்டு கம்பெனி…
யுவராஜ் சம்பத்
August 4, 2026
