அனிமல்ஸ் ஒன்லி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 17,685 
 

‘ஆதிபராசக்தி’ படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு ‘அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்’ – விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து விட்டு நண்பர்களுடன் ராஜகுமாரி தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன்.

தங்களது அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கிய சினிமாவை ரசித்துவிட்டு வந்த எங்களைப் பார்த்து தியேட்டர் வாசலில் இருந்த ஓரிரு நாய்கள் நாணத்தால் முகம் சிவந்து நாலாபுறமும் ஓடின. அந்த வாரம் முழுவதும் ஆடு, மாடு, நாய் போன்ற நாலு கால் பிராணிகளைப் பார்க்கும் போதெல்லாம் அவற்றுக்கு சொக்காய், நிஜார் தைத்துக் கொடுக்கலாமா என்று எண்ணும் அளவுக்கு அந்த சினிமா எங்களைப் பாதித்துவிட்டது.

பால் கறக்கும் ஆடு மாடுகள் பணம் கறக்கும் அளவுக்கு அவற்றை வைத்து சினிமா எடுத்து பாப்புலராக்கிய பெருமை ‘தேவர் பிலிம்’ஸுக்கு உண்டு .

ஆனால், அம்மாதிரி படங்களில் மிருகங்கள் அவ்வப்போது வந்து கையாலாகாத கதாநாயகன், கதாநாயகிகளுக்கு உதவ வில்லனை எதிர்த்து வீர சாகசங்கள் மட்டுமே செய்யும்..

ஆனால், இப்படத்திலோ விலங்குகள் ஒரு படி மேலே போய் சரசம் செய்து சல்லாபிக்கின்றன. அடல்ட்ஸ் – ஒன்லி ‘ (Adults only) என்பது போல அனிமல்ஸ் – ஒன்லியான இந்தப் படம், சினிமா உலகில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாமும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் கதாநாயகன், கதாநாயகி டூயட் பாடிக்கொண்டே பூங்காவில் கட்டிப் புரள்வதை அலுப்பில்லாமல் ரசிக்க முடியும்..?

இத்தனைக்கும் கதாநாயகியை வர்ணிக்கக் கதாநாயகன் பாடலில், “மானே… மாதவிப் பொன் மயிலே… நடையில் அன்னமே…. சாடையில் பாம்பே….” என்று உவமைக்கு விலங்குகளைத்தான் நாடவேண்டியிருக்கிறது. பேசாமல் ஒரு மாறுதலுக்குக் கவரிமானும் காட்டு எருமையும் கண்மூடித்தனமாகக் காதலிப்பதாக ஒரு காவியம் படைத்து அதை சினிமாவாக எடுப்பதில் என்ன கெட்டுப் போய்விடும்…?

காட்டு எருமையைக் கதாநாயகனாகப் போடுவதால் அதன் வம்சாவளியான மாடுகள், முதல் நாள் ஒட்டிய சினிமா போஸ்டரைத் தின்னாமலாவது இருக்கும்…

நன்றாக யோசித்துப் பாருங்கள். வில்லன் குதிரை தனது பாசறையான பாழடைந்த பங்களா தொழுவத்தில் ஸ்டைலாகக் கொள்ளு சாப்பிட்டுக்கொண்டிருக்க… அப்போது தொழுவத்தில் பின் பகுதி சுழன்று திரும்ப… அதிலிருந்து மீசை கிருதாவோடு அடியாள் குதிரை வந்து “பாஸ்…. நீங்க சொன்னபடி உங்களை எதிர்த்த அந்த ஜட்கா வண்டிக் குதிரையோட லாடத்தைத் தூங்கறபோது நைஸா கழட்டிட்டேன்… இந்நேரம் அந்தக் கழுதை’ (கோபத்திலே குதிரையைக் கழுதை என்று….) மலை உச்சிலேருந்து சரியா ஓடமுடியாம விழுந்து செத்திருக்கும்!” என்று கூற, அதைக் கேட்டு மகிழ்ந்த வில்லன் குதிரை பி.எஸ்.வீரப்பா பாணியில் (சிரிப்பதற்கு வீரப்பாவைவிட்டால் வேற யாருமே கிடையாதா?) தொடர்ச்சியாக இடியிடியெனக் கனைத்துவிட்டு அடியாள் குதிரையைப் பார்த்து, “காரியத்தைக் கச்சிதமா முடிச்சதுக்கு சன்மானமாக இந்தப் பத்து கட்டு புல்லையும் எடுத்துக்கோ….” என்று கூறினால் படம் பார்க்கும் நமக்கு எவ்வளவு சுவையாக இருக்கும்!

இதே ரீதியில் ஏன் முழுக்க முழுக்க மிருகங்களையே வைத்து, காதல் காவியங்களோ, மசாலா படங்களோ அல்லது நகைச்சுவை சித்திரங்களோ எடுக்கக் கூடாது…?

இதே நினைவில் வீட்டுக்குச் சென்று படுத்தேன். கனவில் காட்சிகள் தொடர ஆரம்பித்தன…

தேவிபாரடைஸில் நூறாவது நாளை எட்டிக் கொண்டிருக்கும் ‘பன்றியார் பிக்சர்ஸாரின்’ முதல் தயாரிப்பான ‘நினைவெல்லாம் நத்தை’ சினிமா பார்க்க நண்பர்களுடன் செல்கிறேன்.

தியேட்டரில் நுழைந்த எங்களுக்குத் தலை சுற்றியது. நாங்கள் சென்றது சினிமா தியேட்டரா அல்லது டிஸ்னி லாண்டா என்று வியக்குமளவுக்கு ஒரே மிருகத் தலைகளாகத் தென்பட்டன… எங்கு பார்த்தாலும் கொம்புகள், வால்கள், தும்பிக்கைகளாக இருந்தன. தனது குட்டி சிங்கத்தை ஸ்கூட்டரின் முன்னே நிறுத்திக்கொண்டு பெண்டாட்டி சிங்கத்தை ‘பிலியனில்’ வைத்துக்கொண்டு ஸ்கூட்டரை பார்க் செய்ய ஒரு புருஷ சிங்கம் விரைந்தது.

ஆபீஸ் விட்டதும் உடனடியாக தியேட்டருக்கு வந்துவிடுவதாகக் கூறிவிட்டு, தாமதமாக வந்து தன்னைக் காக்கவைத்த கணவன் புலியின் மீது பெண் புலி சீறியது. தாமதமாக வந்ததால் டிக்கெட் கிடைக்காமல் திரும்பும் புலி ஜோடியிடம் , லுங்கி கட்டிக்கொண்டு கட்டம் போட்ட பனியன் போட்டிருந்த கரடி ப்ளாக்கில் டிக்கெட் கொடுப்பதாக ஆசை காட்டியது. ஆண் புலி, “பசித்தாலும் புல்லைத் தின்னமாட்டேன்” என்று கரடியிடம் கூறிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்து தியேட்டரில் நடந்து கொண்டிருந்த ‘ஏக் துஜே புலியே’ இந்திப் படத்துக்குச் சென்றது.

ஒட்டகச் சிவிங்கிகளுக்குத்தான் டிக்கெட் வாங்குவது சுலபமாக இருந்தது.

என்னதான் க்யூவின் கடைசியில் நின்றாலும் கழுத்தை நீட்டித் தலையை கவுண்ட்டருக்குள் நுழைத்து ஒட்டகச் சிவிங்கிகள் சாமர்த்தியமாக டிக்கெட் வாங்கின. மிருகங்கள் மாத்திரம் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, என்னையும் எனது நண்பர்களையும் மட்டும் பிரத்யேகமாகப் பார்ப்பதற்கு தியேட்டர் மேனேஜர் காண்டாமிருகம் அனுமதித்தார். (எப்படி என்று கேட்காதீர்கள்… இது என் கனவு…. என் இஷ்டப்படிதான் நடக்கும்…)

சாதாரணமாக சினிமா தியேட்டர்களில் காட்சி துவங்குவதற்கு முன்பாக வளவளவென்ற பேச்சு சத்தம் கேட்பது வழக்கம். நாங்கள் சென்றது மிருகக்காட்சி அல்லவா! உள்ளே நுழைந்த எங்கள் செவிகளில் பிளிறல், உறுமல், கர்ஜித்தல், குரைத்தல், ஊளையிடுதல், கரைதல், கூவுதல் போன்ற தத்தம் பாஷைகளில் பேசிக்கொண்ட மிருகங்களின் சத்தம் விழுந்தது சற்றே விநோதமாக இருந்தது.

முன் வரிசையில் அமர்ந்திருந்த யானையை, நகர்ந்து அடுத்த சீட்டில் உட்கார்ந்து கொள்ளுமாறு பின்வரிசையில் எங்களோடு அமர்ந்திருந்த பசு பவ்யமாகக் கேட்டது.

இண்டர்வெல்லின் போது தன்னோடு வந்திருந்த குட்டியானைக்குப் பால் தரும் பட்சத்தில் ஒதுங்கி அமர்வதாகப் பசுவிடம் பேரம் பேசி நகர்ந்தபொழுது…காலேஜ் கட் அடித்துவிட்டு வந்த குரங்குகள் சாப்பிட்டுப் போட்ட வாழைப்பழத் தோல் ஒன்றில் வழுக்கி யானைக்கும் அடி சறுக்கியது. அதனால் ஏற்பட்ட அமளியில் எல்லா விலங்குகளும் எழுந்து என்னவென்று பார்க்க, ஒரே குழப்பம். நல்லவேளையாக பால்கனியில் அமர்ந்திருந்த சிங்கம், “எல்லோரும் சத்தம் போடாம உக்காருங்கப்பா…சினிமா ஆரம்பிச்சுடுச்சு…” என்று கர்ஜிக்க, கலவரம் அடங்கியது.

தரையில் ஸ்லைடுகள் போடப்பட்டன. ‘மணிபர்ஸ் திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற ஸ்லைடு வந்தவுடன் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கங்காருகள் தமது வயிற்று பர்ஸில் உள்ள குழந்தைகள் பத்திரமாக இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டன.

பகல், மாலை, இரவு காட்சிகளைத் தவிர ஆந்தைகளுக்காக ஸ்பெஷலாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நள்ளிரவுக் காட்சி உண்டு!’ என்றும் ஸ்லைடு போடப்பட்டது. முன்னே இருக்கும் நாற்காலிகளின் மீது தும்பிக்கைகளைப் போட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று யானைகள் எச்சரிக்கப்பட்டன.

அடுத்து வந்தது விளம்பரங்கள். புலி மார்க் சீயக்காய் தூள், குரங்கு மார்க் பீடிகள், மான் மார்க் சோப்புத் தூள் போன்ற விளம்பரங்கள் வந்தபோது அந்தந்த இனத்தைச் சேர்ந்த பிராணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தன.

தனது மேனி வழவழப்பாகவும் மிருதுவாகவும், இருப்பதற்கு. தான் எப்பொழுதும் தவளை மார்க் பவுடரையே உபயோகிப்பதாக, மலைப் பாம்பு ஒன்று ஒயிலாக நெளிந்தபடி திரையில் கூறியது.

குரல் வளம் கெடாமல் இருப்பதற்காக எப்பொழுதும் பாடுவதற்கு முன்பு உபயோகிக்கும் தொண்டைக்கட்டல் நிவாரணியைப் பற்றிப் பிரபல பின்னணிப் பாடகி கழுதை கூறியது…

செய்திச் சுருளில் அமைச்சர் வெடரினரி ஆஸ்பத்திரியைத் திறந்துவைக்கும் காட்சியைக் காட்டியவுடன் படம் பார்க்க வந்த மிருகத்தனமான ரசிகர்கள் சந்தோஷத்தில் கோஷம் இட்டன.

‘நினைவெல்லாம் நத்தை’ வழக்கமான சாதாரண காதல் கதைதான்.

கடலோரம் வாழும் கதாநாயகன் நண்டு, கிராமத்துக் கதாநாயகி நத்தையை ஆத்மார்த்தமாகக் காதலிக்கிறது. இவர்கள் காதலுக்குத் தடையாக, கிராமத்துப் பண்ணையார் வில்லன் ஆமை வருகிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று தெரிந்திருந்தும் கிராமத்து மக்கள் …. மன்னிக்கவும். கிராமத்து மிருகங்கள் ஆமையின் செல்வாக்குக்கு அஞ்சி நண்டு – நத்தை காதலை எதிர்க்கின்றன.

படத்தில் நத்தையும் ஆமையும் நடிப்பதால் பத்து ரீல்களில் முடிந்திருக்க வேண்டிய படம் அனாவசியமாகப் பதினைந்து ரீல்களுக்கு ஊர்ந்து செல்கிறது…

ஒரு காட்சியில் வில்லன் ஆமை கதாநாயகி நத்தையைக் கெடுப்பதற்கான எண்ணத்தோடு மெதுவாக ஊர்ந்து வருகிறது…. நத்தையும் ஆமையிடமிருந்து தப்பிக்க மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறது… இந்தக் காட்சியை ஸ்லோமோஷனில் வேறு காட்டி, டைரக்டர் பொறுமையைச் சோதித்துள்ளார். கதாநாயகன் நண்டு வேகமாக வந்து நத்தையைக் காப்பாற்ற நிறையவே அவகாசம் இருக்கிறது…

கதாநாயகி நத்தை சோகத்தில் அழும்போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த இரண்டு முதலைகள் கண்ணீர் வடித்தன.

இண்டர்வெல்லின் போது கோன் ஐஸ்க்ரீம் விற்றுக்கொண்டிருந்த யானை ஒவ்வொரு முறையும் ஐஸ் க்ரீம் கொடுத்து, காசைத் தும்பிக்கையில் வாங்கியவுடன் காசு கொடுத்த விலங்கின் தலையில் தொட்டு ஆசீர்வாதம் செய்தது. ஒருவேளை கோயில் யானையோ? Part time job-ஆக கோன் ஐஸ் க்ரீம் விற்கிறது போலும்!

இண்டர்வெல்லுக்குப் பிறகு வரும் கனவுக் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாகப் போடப்பட்ட ‘நண்டு வளை செட்டில்’ நத்தை – நண்டு பாடும் டூயட் காட்சி அற்புதம்!

கிளைமாக்ஸ் காட்சியில் நண்டும் நத்தையும் ஊரைவிட்டு ஓடும் போது அவர்களுக்கு ஒரு மனிதன் உதவுவதாகக் காட்டியுள்ளார்கள். சும்மா சொல்லக்கூடாது. படத்தின் டைரக்டர் (கோவேறு கழுதை …) மனிதனாக நடித்தவரை நன்றாகப் பழக்கி நடிக்கவைத்துள்ளார்!

நத்தைக்குத் துணையாக அந்த மனிதன், தரையில் நத்தை போலவே நகர்ந்து ஊர்ந்து செல்லும் போது படம் பார்க்கும் மிருகங்கள் அந்த மனிதனின் நடிப்பைப் பாராட்டிக் கைதட்டின. இதே மனிதன் ‘உயிருள்ளவரை ஒட்டகம்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அல்சேஷன் நாயினால் செல்லமாக வளர்க்கப்படும் மனிதனாக நடித்தவர் என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்த பசு தனது கணவன் காளை மாட்டிடம் கிசுசிசுத்தது…

அந்தப் படத்தில் நடித்த இவர் ஒரு காட்சியில் தனது எஜமானனைப் போலவே தட்டில் பாலை ஊற்றி நக்கிக் குடிக்கும் காட்சி பத்திரிகைகளால் மிகவும் பாராட்டப்பட்டதாம். ‘நினைவெல்லாம் நத்தை’ படம் சுபமாக மங்களத்தில் முடிந்தது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த எங்கள் கண்களில் பட்டது பத்திரிகைக் கடை வாயிலில் தொங்கிய சுடச்சுட சினிமா செய்தி…பிரபல சினிமா நடிகை நாகப்பாம்பு தேவி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சி…குடும்ப வைத்தியர் கீரிப்பிள்ளை தேவி மாம்பலத்தில் புதிதாகக் கட்டிய பங்களா புற்றுக்கு விரைந்தார்…

விசித்திர சொப்பன அனுபவத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டே படுத்தபடி மோட்டுவளையைப் பார்த்தேன்…பல்லி ஒன்று ‘சூ சூ’ கொட்டியது…சாதாரண நாளாக இருந்திருந்தால் பல்லியின் கொட்டலுக்குப் பஞ்சாங்கம் பார்த்திருப்பேன்..

ஆனால், அன்று கதாநாயகி பல்லியைப் பார்த்து, “அடி கள்ளி! வா என்னருகில்” என்று கொஞ்சலாகக் கதாநாயகன் பல்லி கூப்பிடுகிறதோ என்றுதான் தோன்றியது.

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *