தூக்கு
கதையாசிரியர்: வினோத்குமார்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 20,826
கைகளில் அரிவாள், அரிவாளில் இரத்தம். அந்த இரத்தம் பூமிப் பந்தை நோக்கி சரசரவென்று விழுந்து, அந்த இடத்தை சிவப்பு மயமாக்கி மறைந்தது. ஓர் துளி மட்டும் அரிவாளின் முனையில், தொங்கிக் கொண்டிருந்தது. அரிவாளின் சிறு அசைவும், அந்த இரத்த துளியை பூமி மீது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியச் செய்யும்.
ஓர் ஜனக்கூட்டம் அரிவாள்காரனை நோக்கி ஓடி வந்தது. அருகில் சென்ற பல இதயங்கள் பதைபதைத்துப் போனது. “கடவுளே” என்று சில உதடுகள் கடவுளை துணைக்கு அழைத்தது. மேலும் ஒருவர், “இயேசுவே” என்று கிறிஸ்துவை துணைக்கு அழைத்தார். ஆனால், இயேசுவோ, தேவனால் கைவிடப்பட்டு எப்போதோ சிலுவை எய்திவிட்டார்.
கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவன், அருகில் இருந்த மற்ற மனிதர்களை துணைக்கு அழைத்தான்.
அரிவாள்காரன் அருகில் துடித்துக் கொண்டிருக்கும் வெட்டுண்ட அந்த பையனின் உடல், அவளை நோக்கி நகர ஆரம்பித்தது. கண்கள் அவளையே உற்று நோக்கியிருந்தது.
ஆனால் அவள் கண்களில் எச்சலனமும் இல்லை. அவனை ஈர்த்த அக்கண்கள், பல முறை மின்சாரம் பாய்ச்சிய அக்கண்கள் இன்று அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமில்லை என்பதை போல் விழித்திருந்தது. ஆம்…. அவளது கண்கள், இமையாமல் எதையோ நோக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அக்கண்களுக்கு இப்பொழுது பார்வை இல்லை. பிம்பம் இல்லை. அக்கண்ணில், இக்கோர சம்பவத்தின் துன்பம் சிறுதேனும் இல்லை. வலது கண்ணின் அருகில் அரிவாளின் கீறல்கள் இருந்த போதும், வலிகள் இல்லை. மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் காதலனின் வலிகளுக்காக, கண்ணீருமில்லை. ஆனால் இவையனைத்தும், சில நிமிடங்களுக்கு முன் இவள் உயிரிழக்கும் வரையிலும் இருந்தது. பல பரிதாபக் குரல்களுக்கிடையே, ஏற்கனவே அவள் பரிதாபமாக உயிரிழந்திருந்தாள்.
இனி அவளின் உடல் அவளுக்கே சொந்தமில்லை என்றானபின், எப்படி அவனுக்காக துயரப்படவோ, கண்ணீர் சிந்தவோ முடியும்.
இதை பார்த்த, அவனின் கண்கள் அழுகையால் மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டு, கண்ணீரை வெளியேற்றி மீண்டும் மூடிக்கொண்டது.
அவன் இதயம், தனது துடிப்பை உடலுக்கு கொடுத்தது போல, அவன் உடல் துடித்து கொண்டிருந்தது.
கூட்டத்தினை தனது ஒலியால் கெஞ்சிக் கொண்டே வந்து நின்றது அவசர சிகிச்சை ஊர்தி. அவன் உடல் அவசர சிகிச்சை ஊர்தியினுள், அவசர அவசரமாக ஏற்றப்பட்டது. ஆனால், அவன் எண்ணம், அந்த இடத்தை விட்டு இன்னும் நகரவில்லை. அவள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை.
அவசர சிகிச்சை ஊர்தி, தனது காப்பாற்றும் கடமையை செய்யத் தொடங்கியது. மேலும் மருத்துவமனையை நோக்கி ஓடத் தொடங்கியது.
அரிவாள்காரன் அசையாமல் நின்றான். ஆனால், அச்சுறுத்தும்படியாக இருந்தான். போலீஸ் வருவதை கண்டான். அவ்விடம் விட்டு ஓட ஆரம்பித்தான். கருவேல மரங்கள் நிறைந்திருந்த சுடுகாட்டு பாதை வழியாக ஓட்டம் எடுத்தான். இரண்டு போலீஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து அவனை பிடிக்க ஓடினர். ஆனால், அவன் தப்பி ஓடிவிட்டான். அல்லது அங்குள்ள புதர்களில் ஏதேனும் ஒன்றினுள் மறைந்திருக்கக் கூடும்.
அப்பெண்ணின் தாய், தன் மகள் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு, ஓலமிட்டாள். நரிகளைப் போல் ஊளையிட்டாள். அதற்கு காரணமானவன் யார் என்பது தெரிந்ததும் அவள் மூர்ச்சையானாள்.
யார் அந்த கொலைகாரன்? ஏன் இந்த தாய் அதைக் கேட்டவுடன் மூர்ச்சையடைய வேண்டும்? இறந்த தன் மகளை மடியில் எடுத்து வைத்து கதறச் சென்றவள், ஏன் அந்த கொலைகாரன் யாரெனத் தெரிந்ததும் மயங்கி விழுந்தாள்?
காரணமில்லாமல் இல்லை. தன் மகனே இக்காரியத்தை செய்ததை கேட்டு மயங்கியிருக்கக் கூடும். ஆம், அக்கொலைகாரன், கொன்றது தனது சொந்தத் தங்கையை மற்றும் அவள் காதல் கணவனான அந்த அப்பாவி பையனை.
தன் மகளை எண்ணி வருந்தி, தன் மகனுக்கே சாபமிடுவதா? அல்லது தன் மகன் செய்த கொலைக்காக, பாவத்திற்காக கண்ணீர்விடுவதா? என்று அவளுக்கு புரியாமல் குழப்பியதே, அம்மயக்கத்திற்கு காரணமாக இருக்கும். தாய் சற்று நேரம் எழாமல் இருப்பதே, நல்லது. அவளது மகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை அவளின் அமைதியையே அங்குள்ளவர்கள் விரும்பினர்.
அத்தாயின் கண்ணீர், அது தூய்மையானது, பரிதாபமானது. அது பார்ப்பவர்கள் கண்களையும் களங்க வைக்கக் கூடியது. அவள் மூர்ச்சையடையும் முன் கூறிய கடைசி வார்த்தை “என் பொண்ண பலி கொடுக்கவா, நான் இந்த ஜாதில பொறந்தேன்???. என் பையன கொலைகாரனா பாக்கவா நான் இந்த ஜாதில பொறந்தேன்?? என் சொந்த இரத்தமே, அறுத்துக்கிட்டு செத்துக் கெடக்கே,, என் ஆத்தாளே இப்படி செத்துக் கிடக்காளே…. என்ன பண்ணுவேன்???” என கதறி மயக்கமுற்றாள்.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில், இச்செய்தி நாடு முழுவதும் ஊடகங்கள் வாயிலாகப் பரவியது. இவனது புகைப்படமும், இவன் வெட்டிய அந்த கோர சம்பவ காட்சிகளும் நாட்டையே உலுக்கியது. பலர் இதைக் கண்டு கொந்தளித்து போனார்கள். அந்த காட்சி உண்மையில் பதைபதைப்பைக் கொடுத்தது. “மிருகத்தைப் போல் வேட்டையாடும் காட்சி” என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. என்ன நியாயம் இது? ஓர் மிருகம் வேட்டையாடுவது போல் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? மிருகம் தன் பசிக்காக வேட்டையாடுகிறது. எந்த ஒரு விலங்கும் தன்னுடைய கெளரவத்திற்காக, தாம் உயர்ந்த இனம் என்ற ஆணவத்திற்காக வேட்டையாடுவதில்லை. இங்கு நடந்தது ஓர் ஆணவக் கொலை.
தன் தங்கையையே கொன்ற அக்கொலைகாரனின் கல் மனதைக் கண்டு நடுக்கமுற்ற, வேதனையுற்ற, அதே சமயம் அக்கொலைகாரனுக்காக பரிதாபப்பட்ட ஒரு நபர் அவன் தாய். மற்றொரு நபர் அவனது முன்னால் காதலி.
இப்போது அவனைப் பற்றி இவளுக்கு எதுவும் தெரியாது. அவனைப் பற்றி யாரும் ஏதும் தகவல் சொல்ல மாட்டார்களா என ஏங்கி வாழும் ஜீவனிவள். இவள் அவனுக்காக காத்திருந்தாள் என்று கூட சொல்லலாம். முழுமையான காத்திருப்பாக இல்லாமல் இருந்த போதும், அவன் மீண்டும் வரமாட்டானா என ஏங்கியதுண்டு. ஆனால், அதற்கெல்லாம் முன்பு இக்கோரச் செய்தி இவளை எட்டி, இவளை துடிக்கச் செய்து விட்டது. வெட்டப்பட்டது அவன் தங்கை மற்றும் அவள் கனவனென்றாலும், துண்டுபட்டவள் இவள் ஒருவளே.
செய்தியை பார்த்துவிட்டு அதிர்ந்த அவள், தனது கைப்பேசியை எடுத்தாள். அதில் அவனது கைப்பேசி எண், “.” இவ்வாறு சேமிக்கப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் யோசித்தாள். பயந்தாள். அழுதாள். எதற்காக என்று தெரியவில்லை. இருந்தும் கண்ணீரில், தனது கைப்பேசியை அருகில் வைத்துவிட்டு, அதில் மூழ்கிப் போனாள்.
மீண்டும் தனது கைப்பேசியை எடுத்தாள்.
“ஏன்?” என்ற செய்தியை மட்டும் தட்டச்சு செய்தாள். பின்பு யோசனையில் மூழ்கினாள். மீண்டும், நினைவிற்கு வந்தாள். அந்த குறுஞ்செய்தியை அனுப்பினாள். அது அவனைச் சென்றடைந்தா என்பதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
“ஏன்?” என்ற அந்த ஒரு வார்த்தை எந்த அர்த்ததில் அவள் அனுப்பியிருப்பாள். ஏன் சொந்த தங்கையையே கொல்லும் அளவிற்கு ஜாதியை காதலித்தாய், என்றா? அல்லது ஏன் நான் உனக்காக காத்திருந்தேன், ஏன் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று என்னை அசிங்கப்பட, துயரப்பட வைத்துவிட்டாயே, என்ற அர்த்தத்திலா? தெரியவில்லை.
அந்த செய்தி இப்போது அவனைச் சென்றடைந்தது. ஒளிந்திருந்த புதரின் செடிகளுக்கிடையே, அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அவன், முன்பு காத்திருந்த போதெல்லாம் வராத ஒரு குறுஞ்செய்தி, இப்போது வந்ததைக் கண்டு கதறி அழுதான். அவன் கதறல் சத்தம், அருகிலிருந்த புதர்வாசியான ஓர் தவளையை தாவி ஓடச் செய்தது. அத்தவளையை விழுங்க காத்திருந்த பாம்பு ஒன்று குறி தப்பியதை எண்ணி வேறு புறம் சென்றது. அவன் கதறல், தவளையின் உயிரைக் காப்பாற்றிய புன்னியத்தை செய்தது. இருந்தும் தான் செய்த கொலையை பாவம் என்று நினைத்தானா என்று தெரியவில்லை.
அவன் பார்த்துவிட்டதை அந்த ப்ளூ டிக் காட்டிக் கொடுத்துவிட்டது அவளுக்கு. இப்போது அவன் என்ன நினைக்கிறான்? என்னை நியாபகம் உள்ளதா அவனுக்கு? என்னை மதிக்கும் மனிதத்தன்மையில் தான் அவன் உள்ளானா? என்ற பல கேள்விகளை அவள் பார்வை சுமந்திருந்தது. அது கைப்பேசியையே ஊடுருவிப்பார்த்தது. அவன் பதில் என்ன? என்பதை.
ஆனால் இக்குறுஞ்செய்தியால், அதை அனுப்பிய அந்த நபரின் நினைவால் இவன் சூரையாடப்பட்டிருந்தான். கரையை கடந்ததாய் நினைத்த ஓர் தென்றல், புயலாய் மாறி வீசத் தொடங்கியது போல் உணர்ந்தான். பின் உணர்விழந்தான் போலீஸ் அவன் தலையில் அடித்த, அந்த ஓர் அடியில்…….
தலையில் அடித்த அடியில் மயக்கமுற்ற அவனை, போலீஸ் அதிகாரிகள் இரகசியமான இடத்தில் அடைத்து வைத்தனர். காலையில் கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்த வேண்டிய வேலையை தொடங்கினர். ஊருக்குள் சிறு கலவரம் கூட வந்துவிடக் கூடாதென்பதற்காக, இந்த இரகசிய ஏற்பாடு. அவனை இன்னும் தேடுவதாகவே, போலீஸ் அறிக்கையில் தெரிவித்தனர்.
அவன் மயத்தில் இருந்தான். அவள் (அவனது முன்னால் காதலி) துக்கத்தில் இருந்தாள். அவன், இவள் அனுப்பிய “ஏன்?” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டான். ஆனால், இன்னும் பதில் வரவில்லை என்பதை எண்ணி வருந்தினாள். ஒருவேளை தன்னை மறந்துவிட்டானா? அல்லது வெறுத்துவிட்டானா? அல்லது வேறெதுவுமா?
அவன் செய்த ஈவிரக்கமற்றக் கொலையைக் கண்டு, இவள் அவன் மீது அறுவெறுப்பு அடைந்திருந்தாலும், ஏதோ ஒன்று அவனுக்காக வருத்தப்பட தூண்டியது. காரணம், அவன் சிறு வயதில் அப்படி ஜாதி பார்த்து பழகுபவனில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பவனில்லை. அவன் ஏன் இப்படி செய்தான்? அதன் காரணம் என்ன? அல்லது யார் காரணம்? ஒரு வேளை நான் தான் காரணமோ என அவள் தன்னை தானே குற்றம் சாட்டுவது போல் கேள்வி எழுப்பிக் கொண்டாள். “ஆம் நான் தான் காரணம்” என பதிலையும் அளித்துக் கொண்டாள்.
ஒரு காலத்தில் அவள், அவன் காதலிக்கிறான் என்பது தெரிந்தும், தெரியாதது போல் நடந்து கொண்டாள். அவன் நெருங்க முயற்சிக்கும் போதெல்லாம் இவள் விலகி இரசிப்பாள். ஓர் நாள், அவன் நேரடியாக வந்து அவன் விருப்பத்தை தெரிவித்தான். ஆனால், இவள் அதற்கு ஏதும் பேசாமலே இருந்துவிட்டாள்.
பின்பு கல்லூரி முடிந்தது. இதுவரை அவர்கள் பேசிக் கொண்டதில்லை. அவன் மீண்டும் வருவானெனக் காத்திருந்தாள். ஆனால், இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்ததோ இந்த துக்கச் செய்தி தான். மனிதனாக பார்த்த அவனை, இன்று அனைவரும் மிருகமாகப் பார்க்கிறனர். இவளும், உலகின் பார்வையில் அவனை மிருகமாகப் பார்க்க நிர்பந்திக்கப்படுகிறாள். அனைத்து ஊடகமும் திரும்பத் திரும்ப இதையே தான் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இவள் துக்கம் என்னவென்றால், ஒருவேளை தான் அன்று அவனிடம் பேசியிருந்தால்? நாங்கள் இருவரும் காதல் புரிந்திருந்தால்? அவனுக்கு காதலின் அர்த்தம் புரிந்திருந்தால்? இவன் தன் தங்கையை மன்னித்திருப்பானே.. அவளையே கொல்லும் அளவிற்கு எங்கிருந்து வந்தது இந்த விரக்தி? நான் தான், அவனை இப்பெரும் துன்பத்தை இழைக்க காரணமோ? என வருந்தினாள்.
போலீஸார் அவனது கைப்பேசியை அலசிப்பார்த்ததில், சிக்கிய தூசி இவள் அனுப்பிய குறுஞ்செய்தி. உடனடியாக வேறு ஒரு எண்ணிலிருந்து தொடர்புகொண்டபோது, அவள் எடுத்தாள்.
“ஹலோ, யாருங்க?” என்றாள் அமைதியான வருத்தம் தொனிக்கும் குரலில்.
“நான், கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பேசுறேன்.” என்றார் கம்பீரமாக. பின் தெடர்ந்தார், “ஒரு சின்ன விசாரணை. ஸ்டேசன் வரைக்கும் வரணும். இப்போ எங்க இருக்கீங்க.?”
“ஊருல தான் இருக்கிறேன் சார். நான்… (அவள் குரல் கம்மியது) வர்ரேன் சார்.”
யாருக்கும் தெரியாமல் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டாள்.
போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழையும் போது, அவள் கண்கள் சற்று கலங்கியிருந்தது. காரணம், அவன் நினைவுகளா? அல்லது போலீஸ் ஸ்டேசன் என்ற பயமா? என்பது அவளுக்கே தெரியவில்லை. அவள் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள்.
“நீங்க தான, இந்த நம்பர்க்கு மெஸ்சேஜ் அனுப்புனீங்க? இவனுக்கு நீங்க என்ன வேணும்?”
இன்ஸ்பெக்டரிடம் இருந்து அழைப்பு வர, கைப்பேசியை எடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.
அவன் கைவிலங்குடன் ஓர் மூலையில் அமர்ந்திருந்தான். போலீஸாரின் தாக்குதல் அவன் முகத்தில் தங்கியிருந்தது. கண்கள் சற்று வீங்கியிருந்தது. அந்த வீக்கம் சிவப்பு நிறமாக இருந்தது. உதட்டில் இரத்தக் கரையும் இருந்தது. கைகால்கள் வலியால் நடுங்கிக் கொண்டிருந்தது.
“நீ ஏன் இங்க வந்த?” என்றான் நடுங்கிக்கொண்டே. வலியின் காரணமாக ஏற்றம் இறக்கம் இருந்தது அவன் குரலில்.
“இப்படி ஏன் பண்ணுன???” என கேட்டாள் அமைதியாக.
“என் ஜாதிக்காக” என்று முகத்தை கீழ் நோக்கி குனிந்து கொண்டான்.
“இதக் கேட்கும் போது கஷ்டமா இருக்கு. அதுவும் உன்கிட்ட இருந்து வரும் போது, எதோ கத்திய எடுத்து குத்துற மாதிரி இருக்கு” என்று உடைந்தாள். ஆனால், அழக்கூடாது என முடிவு செய்தாள். அவன் செய்தது எவ்விதத்திலும் நியாயம் இல்லையே.
“ஏன் நடிக்குற? என்ன நீ வேணாம்னு ஏன் ஒதுக்குனனு நான் சொல்லட்டா?” என்றான் தரையைப் பார்த்துக் கொண்டே.
“ஏன்? நான் ஒன்னும் உன்ன ஒதுக்கல……” என்றவளை இடைமறித்தான். “ஏன்னா, நாங்கெல்லாம், உன்னவிட கீழ் ஜாதி. அதான..” என்றான் சில கண்ணீர் திவளைகளை வடித்துக் கொண்டே.
“கூட இருக்குறவங்க ஆயிரம் சொல்லுவாங்க. இரண்டு வருஷத்துக்கு அப்புறமும் உன்ன தேடி வந்திருக்கேன். இதெல்லாம் நான் சொல்லி தான் உனக்கு புரியனுமா? உன் கண்ண நல்லா திறந்து பாரு. நான் வந்திருக்கேன். மிருகம் மாதிரி மாறி இருக்குற உன்ன பாக்க வந்திருக்கேன். என்ன நீ இப்போக்கூட புரிஞ்சுக்கவே இல்லைல.” என்று கூறி நிலைதடுமாறி, அவன் முன்னால் தரையில் அமர்ந்தாள்.
அவன் அவளை பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர். இவள் கண்ணில் துக்கம்.
பின் அவன் பேசினான் “நான்……. நான்….. இந்த கொலையப் பண்ணலைனா, எங்க குடும்பத்த இந்த ஊரே ஒதுக்கி வச்சிரும். அதனால,…” என்றவனை இடைமறித்து, “உலகத்துல வாழ்றதுக்கா வேற இடமில்ல?” என்று கேட்டாள்.
“அது ஒரு வலி. மேல உள்ள உங்களுக்கெல்லாம் அது புரியாது” என்றான்
“நிறுத்துறியா.. என்னடா புரியாது?” என்று கோபமாக கத்தியவளை, அவன் இடைமறிது பேச ஆரம்பித்தான் “நான் நேத்து வரைக்கும் கூட உனக்காக தான் காத்திருந்தேன். அதோட வேதனை தெரியுமா உனக்கு? ஒரு வேளை, நான் உன்னவிட கீழ்ஜாதினு, உன்னால ஒதுக்கப்பட்டிருந்தா? அடிக்கடி இதான் தோணும். அதான் காரணமும். எனக்கு தெரியும். நீ மறைக்காத. நான் உன்ன விட கீழ் ஜாதியா இருக்கலாம். ஆனா, எனக்கும் கீழ நிறைய ஜாதி இருக்கு. தெரிஞ்சிக்கோ” என்றான் அழுதபடி.
“எத்தனையோ பேரோட கனவ உடைச்சுட்ட. என்னோட கனவக் கூட இப்போ சுக்கு நூறா உடைச்சுட்டு இருக்க. (அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.) நான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். உனக்காக. எத்தனையோ, பேருந்து வந்தது. என்னை அழைத்துச் செல்ல. அதில், உயர்ரக பேருந்து என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பேருந்து ஏராளம். ஆனால், நான் காத்திருந்தேன். உனக்காக. ஏனெனில், இது ஒரு வாழ்வுப் பயணம். காத்திருப்பதில் தவறில்லை என்றே தோன்றியது. அதனால் காத்திருந்தேன். பயணிக்கும் பாதை எப்படிப்பட்டாதாக இருப்பினும் சரி, உனக்காக காத்திருந்தேன். மேடு பள்ளங்கள் வரலாம். சில சமயம் பள்ளங்களில் மட்டும் சிக்கித் தவிக்கலாம். இருந்தும் உன்னோடு அந்தப் பயணம் என்று எண்ணும் போது, அதை எல்லாம் தகர்த்து செல்லலாம் என்ற கனவினில் காத்திருந்தேன். (சற்று அமைதியானாள். அவள், காத்திருந்தேன், காத்திருந்தேன் என்று சொல்லச் சொல்ல அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. இவள் கண்களில் கட்டுப்படுத்த முடியாத அளவு, கண்ணீர் சுரந்து உடைந்து போகக் காத்திருந்தது.)
மீண்டும் அவள் பேசத் தொடங்கினாள், “ஆனால் இப்போது தான் புரிந்தது, நான் தேர்ந்தெடுத்த பேருந்து குப்பைகளை சுமந்து செல்லும் குப்பை கிடங்கு என்று. அது குப்பையின் துர்னாற்றத்தையும் சுமந்து செல்லும் குப்பை பேருந்து என்று. (பற்களைக் கடித்துக் கொண்டே) குப்பை பேருந்து. இனியும், ஒரு வேளை அதில் நான் பயணித்தால், என்னை அந்த துர்நாற்றம் துன்புறுத்தக்கூடும். நான் யாருக்காக காத்திருந்தேனோ, அந்த சக பயணியே, பயணத்தின் நடுவே என்னை தூக்கி எறியக்கூடும். (மூச்சை மேலும் கீழும் இழுத்தாள்.) தூக்கி எறிந்தால்??? என் உயிர் செல்லாவிட்டால்?? ஒவ்வொரு நாளும் நான் நினைவுகளால் மீண்டும் மீண்டும் தூக்கி எறியப்படுவேன். ( சட்டென கதறி அழுதாள்) நான் இப்போது…. இப்போதும் கூட தூக்கி எறியப்பட்டுவிட்டேன். அப்படி தான் உள்ளது, நீ என்னை உயர்ந்தவள் எனக் கூறியது. நான் அன்று எந்த பாகுபாடும் உன்னில் பார்க்கவில்லை. நீ கூறிய வார்த்தைகளால், உன் பார்வையால் நான் இப்போது உடைந்து விட்டேன். இனியும், நீ கூறிய இந்த வார்த்தையின் ஒலியலைகள் சாகாமல், என்னை மீண்டும் மீண்டும் உடைக்கும்.” என்று கூறி முகங்களை மூடி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவள் கண்ணீரைத் துடைக்க நினைத்தும், முடியாதவனாய் “நான் சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காத. உன்ன கஷ்டப்படுத்த இத சொல்லல. ஆனா, நான் உன்ன உயர்ந்த ஜாதி பொண்ணு, திமிரு புடிச்சவனு நினைச்சது எவ்வளோ தூரம் உண்மையோ, அவ்வளோ தூரம் உன்ன காதலிச்சதும் உண்மை. பயமா இருந்துச்சு, உன் பக்கத்துல வர. (கண்ணீர் நிற்காமல் வந்தது அவனது கண்ணில்) எங்க, நீ என்ன கீழ் ஜாதினு சொல்லி வேணாம்னு சொல்லிருவியோனு பயம். வேணாம்னு சொல்லுறத ஏத்துக்குறதே ஒரு பெரிய வலி. ஆனா, கீழ் ஜாதினு அதுக்கு காரணம் சொல்லிட்டீனா, அது எவ்வளோ பெரிய வலி தெரியுமா? அதுபோக, நான் இந்த ஜாதில பிறந்ததுக்கு நான் காரணம் இல்ல. என்னால அத மாத்தவும் முடியாதே” எனக் கூறி அழுதான்.
“பைத்தியம்டா நீ” எனறாள் கண்களை துடைத்துக் கொண்டே. ” நல்ல பையனா தான், நான் பாத்த வரைக்கும் இருந்த. ஆனா, இப்போ நீ பேசுறது எல்லாம் விஷமா இருக்கு. இனிப் பேசி புண்ணியமில்ல” என்றவள் சட்டென அங்கிருந்து எழுந்தாள் கண்களைத் துடைத்துக் கொண்டு, கிளம்புகிற தொனியில்.
“அது பேரு விஷம் இல்ல. அறியாமை” என்றான் குழந்தை போன்று.
மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
“நீ எனக்காக காத்திருந்தேனு தெரியாது. தெரிஞ்சிருந்தா, நான் எப்பவோ உன்ன வந்து பாத்துருப்பேன்.” என்றான் அழுதவாறே.
“நான் கூட அத வெளிய காட்டிக்கல. என் மேலயும் தப்பு இருக்கு.” என்றாள் குற்ற உணர்ச்சியோடு.
“நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்றான் சற்று தயங்கிக் கொண்டே.
” தாராளமா கேளு.. தயவு செஞ்சி இனி எதையும் மறைக்காத. சில விஷயம் மறைக்க மறைக்க விஷமா மாறிருது. சொல்லு.” என்றாள் பரிவுடன்.
“நீ மட்டும் என்கூட இருந்திருந்தா… (சற்று அமைதியானான்)…. நான் இந்த கொலைய செஞ்சிருக்கவே மாட்டேன்னு தோணுது” என்று கதறிக் கதறி அழுதான். இடையிடையே , “நான் தப்பு பண்ணிட்டேனே… என் தங்கச்சியவே கொன்னுட்டேனே” எனத் தேம்பினான்.
இந்த வார்த்தையை கேட்டவுடன், அவள் சேமித்த கண்ணீர் அனைத்தும் உடைத்த்ய்க் கொண்டு வெளியேறத் தொடங்கியது.
முதல் முதலாக, அவள் அவன் கரங்களை பற்றினாள். அவன் கண்ணீரைத் துடைத்தாள். அவன், அவள் கைகளை இறுக்கமாக பற்றினான். “இக்கரங்கள், அன்றே என் மீது பட்டிருந்தால், என் மனம் தூய்மையாயிருக்குமே…” என்று கூறி அழுதான்.
“அழாதடா” என அவன் கண்களை முதலில் துடைத்தாள். பின்பு அவன் அழும் போது, ஆறுதலாக அவளது கரங்களை அவனிடமே கொடுத்துவிட்டாள்.
அவன் இப்போது மனிதனாகத் தோன்றினான் அவளுக்கு. மனிதனின் ஆன்மா வடிக்கும் கண்ணீர், தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்வதற்கு என்பதை உணர்ந்தாள். இந்த ஆன்மா, தன் கண்ணீரால் தன் பாவத்தை துடைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வான்மா, உடைந்து விழுந்து அழுதது. உடையட்டும் என அவள் சற்று நேரம் விட்டுவிட்டாள். அது தானாவே மீண்டும் ஒழுங்கான ஓர் அமைப்பாக சேரும். அது தானே இயற்கை. அவள் கரங்கள், அவன் மீது ஒட்டியிருக்கும் பாவங்களை பிய்த்து வெளியே வீசுவதைப் போல் உணர்ந்தான்.
சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் உள்ளே வந்தார்.
தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், அதற்கேற்ற தண்டனையைப் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என்பதையும் கூறினான்.
இருவரிடமும், விசாரணை முடிந்து, காலை கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
மக்கள் கொதித்துப் போயிருந்தனர். அரசாங்க வக்கீல், தன் வாதத்தை நிறைவு செய்து, உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஏதும் கூற வேண்டுமா? என நீதிபதி கேட்டார்.
அவன் அமைதியாக தன் கைகளை கூப்பியபடி, “நான் செய்தது குற்றமே. அவர்கள் பிறப்பு எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும். அவர்கள் கள்ள உறவில் பிறந்தவர்களானாலும் சரி, வேசியின் வயிற்றில் பிறந்தவர்களானாலும் சரி, அவர்களும் பிறப்பால் நமக்கு சமமானவர்களே. ஜாதி, மதத்தில் மட்டுமல்ல, நம் பார்வையிலும் இந்த ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. பிறரை தாழ்த்துவதே தவறு, அதுவும் பிறப்பால் தாழ்த்துவது, எவ்வழியிலும் தவறு. நான் செய்தது குற்றமே. அதனால், தண்டனையை ஏற்கிறேன்” என்றான் கண்கள் கலங்க. கோர்டில் உள்ளவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஒரு கணம் அமைதியில் ஆழ்ந்து போயினர். அப்படியே அவளைப் பார்த்தான். அவள் அவன் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போனாள். எவ்வளவு பெரிய உண்மை அது. “பிறரை தாழ்த்துவதே தவறு, அதுவும் பிறப்பால் தாழ்த்துவது, எவ்வழியிலும் தவறு.” அவனைப் பார்த்து, கண் கலங்க தலையை ஆட்டினாள்.
இன்றே தீர்ப்பை வழங்க வேண்டும், தூக்கு தண்டனை வழங்க வேண்டும், நடு ரோட்டில் வெட்ட வேண்டும் என, வெளியில் கூடிய அனைவரும் கூச்சலிட்டனர். தீர்ப்பை இரண்டு மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கிறேன் என கூறி நீதிபதி வெளியேறினார்.
அவள், இவன் அருகில் வந்து நின்றாள். அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். அவனது தம்பி வந்து அருகில் நின்றான். அவனைப் பார்த்து, “பழக்கவழக்கங்களை ஒழுங்காக வைத்துக் கொள். உன்னை நிர்ணயிப்பது, உன்னை சுற்றி உள்ளவர்களே. குப்பை மனங்களிடையே நீ இருந்தால் நீயும் குப்பையாகப் போவாய். முடிந்தால், இந்த ஊரை விட்டு போய்விடு. (அவளைப் ஒரு கணம் பார்த்தான். பின் தம்பியிடம் திரும்பி) இந்த உலகத்தில் வாழாவா இடமில்லை.” என்றான்.
கண்கள் கலங்கியபடி, “முடிந்தால் என் தாயையும் அவ்வப்போது பார்த்துக் கொள்” என்றான் அவளிடம்.
அவள் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். “நீ என் கைகளை பிடிக்கும் இத்தருணம், எனக்கு வாழ வேண்டும் என்ற ஆசையைக் கூட்டுகிறது. ஏதோ வேகத்தில் செய்தாலும், கோபத்தில் செய்தாலும் குற்றம் குற்றமே. அதிகபட்ச தண்டனையையே நான் எதிர்பார்க்கிறேன். அது மரண தண்டனையாகத் தான் இருக்கும்.” என்று கூறி, அவள் கைகளில் இருந்து கண்ணீருடன் விடுபட்டான்.
கோர்ட் மீண்டும் கூடியது. நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
குற்றவாளி தன் தண்டனையை ஒப்புக் கொண்டதாலும், குற்றத்தின் தீவிரம் கருதியும், அவனுக்கு தூக்கு தண்டனையை 15 நாட்களுக்குள் நிறைவேற்ற கோர்ட் உத்தரவிட்டது.
மக்கள் உற்சாகம் அடைந்தனர். நாடே இத்தீர்ப்பை கொண்டாடியது. ஆனால், இத்தீர்ப்பை கொண்டாடாத ஒரே ஆள் அவள் தான். (அவன் குடும்பத்தை தவிர்த்து)
குற்றம் புரிவது தவறு. ஆனால், அதை ஒப்புக்கொண்டு வேதனைப்படும் ஓர் உள்ளத்திற்கு எதற்கு தண்டனை? அவன் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? அவன், ஒருவேளை தான் செய்தது சரிதான் என வாக்குவாதம் புரிந்திருந்தால், அவனை அடைத்து வைக்கலாம். அவன் மீண்டும் தவறு இழைக்காமலிருக்க அவனை சிறையில் வைக்கலாம் அல்லது மரண தண்டனை கூட வழங்கிவிடட்டும். ஆனால், மனமார தவறை ஒப்புக் கொண்ட ஒருவனுக்கு, அவனது மனசாட்சியே தினம் தினம் தண்டனையைக் கொடுக்குமே. அவனுக்கு ஏன் இனி சிறை?, இந்த தூக்கு கயிறு எதற்கு?
நாடே அவன் குற்றவாளி என நினைத்து இத்தீர்ப்பை கொண்டாடுகிறது. ஆனால், அவன் மனம்திருந்திய ஓர் உயிர் என்பதை நினைத்து அவள் வருந்துகிறாள். மனிதன் ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் காட்சியளிக்கிறான். இன்று இவளுக்கு நல்ல ஜீவனாக, உலகத்திற்கோ சாத்தானின் அவதாரமாக.
அவன் மனம் திருந்திவிட்டான். இனி அவனை விட்டுவிட்டால் யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வான். இனி ஏன் அவன் சாக வேண்டும்? மனம்திருந்திய ஓர் உயிர் ஏன் சாக வேண்டும்? என்பதே அவள் ஆதங்கம்.
தீர்ப்பு அளித்த 12-வது நாள், தூக்கிலிட முடிவு செய்தனர். கடைசி விருப்பம் என்னவென்று கேட்க்கப்பட்டது. “எனது ஜாதி சான்றிதழில், ஜாதியை தூக்க வேண்டும். என்னோடு சேர்த்து சாதியையும் தூக்கிலிடவேண்டும். மேலும், அதில் ஜாதி அற்றவன் என்று குறிப்பிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. மனிதகுலத்தின், முதல் நற்செயல் என நம்புகிறேன்” என்றான். அவனது பதில்களைக் கண்டு, நீதிபதி இவனா இக்கொலையை செய்தது என குழம்பினார்.
காலை 3.50 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவள், அசைவற்ற அவன் முகத்தைப் பார்த்தாள். சொந்த தங்கையையே கொன்ற முகமா இது?? நிச்சயம் இல்லை. தான், கல்லூரியில் இரசித்த அந்த பிஞ்சு முகம். கள்ளம் கபடமற்ற முகம். கள்ளம் கபடமற்ற ஆத்மா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடி அவன் முகத்தில் விழுந்தது. காலம் முழுக்க எதற்காக காத்திருந்தானோ, அது (அவள் காதல்) இப்போது நெருக்கத்தில் உள்ளது. ஆனால், அவன் சொந்த கருத்துக்களே, அவனை அதனிடமிருந்து தற்காலிகமாகவும், பின்பு நிரந்தரமாகவும் பிரித்துவிட்டது. அவன் உடல் புதைக்கப்பட்டது. அதனருகில் இவ்வாறு வாசகம் பொறிக்கப்பட்டது. இது அவன் கூறியது தான்.
“அவர்கள் பிறப்பு எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும். அவர்கள் கள்ள உறவில் பிறந்தவர்களானாலும் சரி, வேசியின் வயிற்றில் பிறந்தவர்களானாலும் சரி, அவர்களும் பிறப்பால் நமக்கு சமமானவர்களே. ஜாதி, மதத்தில் மட்டுமல்ல, நம் பார்வையிலும் இந்த ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. பிறரை தாழ்த்துவதே தவறு, அதுவும் பிறப்பால் தாழ்த்துவது, எவ்வழியிலும் தவறு. – இவன் தூக்கிலிடப்பட்டான். அதற்கு முன்பாக இவன் ஜாதி அடையாளமும் தூக்கப்பட்டது.”
உயிரற்றவனுக்கு தூக்கு
அருமை தம்பி