கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 112,479 
 

தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க ஆட்டத்தில் முதல் காயை கண்ணனே நகர்த்துகிறான். கெளரவர்களின் படைத் தலைவனான கர்ணனிடம் பாண்டவர்களை ஒழித்துவிடும் உக்கிரம் இருப்பதை கண்ணன் அறிந்திருந்தான். வரும் வழியில் அங்க தேச அரசனான கர்ணனிடம் நீ சூதனல்ல சத்ரியன் உன் தாய் குந்தி. நீ பாண்டவர்கள் ஐவரில் மூத்தவன் என்ற உண்மையை தெரியப்படுத்திவிட்டுத்தான் குந்தியிடம் வந்து விவரத்தை தெரிவித்தான்.

குந்தி குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள் பிராமண சேவைக்காக துர்வாசர் அளித்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி சூரியனால் முறைதவறி விவாகத்துக்கு முன்னரே தாயானவள். அந்தச் செயலுக்கான பலன்கள் அவளை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்த உலகில் வினைப்பயன் தானே பிறப்பு இறப்பை நிர்ணயிக்கிறது. குந்தியே மறந்துவிட்ட ஒன்று எப்போதோ அவள் எச்சமிட்டது இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

குந்தியை பகடைக்காயாக உருட்ட கண்ணன் முடிவெடுத்ததுவிட்டான். அவனுக்குத் தேவை பாண்டவர்களின் வெற்றி. சுயம்வரத்தில் சூதனென்று திரெளபதி நிராகரித்த போது முன்வந்து வெளிப்படுத்தாத கண்ணன் தனது எண்ணம் ஈடேறும் பொருட்டு கடைசி ஆயுதமாக இந்த அஸ்திரத்தை உபயோகிக்கிறான்.

ராஜ்யத்தை இழந்தவர்களுக்கு ராஜ்யத்தை அடைய வேண்டுமென்ற வெறி இருக்கும். பாண்டவர்களிடம் அந்த வன்மத்தை தீயூட்டி வளர்த்தவள் திரெளபதி. திரெளபதி போர் நிகழ்வதற்கு காரணமாகவும், குந்தி போரின் முடிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்ற சொற்றொடருக்கு இதுவும் காரணமாக அமையக்கூடும்.

பாண்டுவைக் கைப்பிடித்து பட்டத்து ராணியாக ஓர்ஆண்டு மட்டுமே குந்தியால் இருக்க முடிந்தது. பாண்டு இறந்தவுடன் மாத்ரி உடன்கட்டை ஏற அவளது இரு புதல்வர்களையும் தன் மகன்களாகவே வளர்த்து வந்தாள் குந்தி. பாண்டவர்களிடம் எதைக் கொண்டும் பிரிவு வந்துவிடக் கூடாதென்று உறுதியோடு இருந்தாள். அர்ஜூனன் வில்வித்தைக் காண்பித்து வென்று வந்த பரிசுப் பொருளான திரெளபதியை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கும் இதுதான் காரணம்.

ஆளாகிவிட்ட பாண்டவர்களுக்கு அவர்களின் பங்கை அளிக்க திருதுராஷ்டிரன் முன்வர வேண்டுமென குந்தி விரும்பினாள். சூதில் திரெளபதியை பணயம் வைத்து தோற்றதற்காக பீமன் வெகுண்டெழுந்த போது கூட குந்தி தான் அவனைச் சமாதானப்படுத்தினாள். திரெளபதியை துகிலுரித்தபோது ஆண்மையற்றவர்களை பிள்ளைகளாகப் பெற்றுவிட்டோமே என அவள் வயிற்றில் அறைந்து கொண்டாள். அந்த சம்பவத்துக்கு பிறகு ஐம்புலன்களை இயக்கும் மனமாக ஐந்து பேரையும் திரெளபதிதான் இயக்கி வந்தாள்.

இப்போது அவளுக்கு கர்ணன் தன் மகன் என்பதை விட தான் பாண்வர்களின் ராஜமாதா என்பதே முக்கியமாக இருந்தது. ராஜ்யம் பாண்டவர்களுக்கு கிடைக்க தான் கர்ணனிடம் மடிப்பிச்சைக் கேட்க தயாராக இருப்பதாக கண்ணனிடம் அவள் தெரிவித்தாள்.

போருக்கு முதல் நாள் மாலை கங்கைக் கரையில் உலவிக் கொண்டிருந்த கர்ணனை தயக்கத்துடன் சந்திக்கச் சென்றாள் குந்தி.

“என் மகனே எப்படி இருக்கிறாய்”?

“யாரம்மா நீ என்னை உரிமையுடன் மகனே என்று அழைக்கிறாய்”?

“குழந்தாய்! உன்னை இந்த பாழும் நரகத்தில் தள்ளி விட்டவள் நான் தான்”!

“ஓ, உங்களது குரல் என் நெஞ்சைப் பிளக்கிறதே. பூர்வஜென்ம தொடர்போ! யார் நீங்கள் நான் தேரோட்டி அதிவிரதன் மகன் அங்கதேச அரசன்”.

“நான் துர்பாக்கியவதி குந்தி தேவி”.

“ஓ, ராஜமாதாவா!

துரோணாச்சாரியார் சத்ரியனுக்கு மட்டும் தான் அர்ஜூனனை எதிர்த்து நிற்கும் உரிமை உள்ளது என்ற போது அவையிலிருந்த நீங்கள் உங்கள் திருவாயைத் திறந்து என் மகனே என்று அழைத்திருக்கலாமே. துரியோதனன் எனக்கு மகுடம் சூட்டி அங்கதேச அரசையே எனக்கு அளிக்க முன்வந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது நான் கெளரவர்களின் படைத்தலைவன் என்பதால் தானே என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும். துரியோதனனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது. இந்த செல்லாக்காசுக்கு மதிப்பளித்தவனின் முதுகில் குத்துவது நியாயமாகாது”.

“உன்னை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்”!

“என் வேதனை மிகுந்த நெஞ்சம் உங்கள் உள்ளத்தில் இப்போதுதான் இரக்கத்தைச் சுரக்கச் செய்ததா”.

“நீ என் மகன். பாண்டவர்கள் ஐவருள் மூத்தவன்”.

“ஆற்றில் மிதந்த எனக்கு அடைக்கலம் அளித்தவர்களை நான் என்ன செய்வது. சூதனுக்கு ராஜ்யமளித்து உணவு மேஜையில் கெளரவம் பார்க்காது பக்கத்தில் அமரவைத்து உணவு உண்ண இடமளித்து அழகு பார்க்கும் துரியோதனனை என்ன செய்வது. சுயம்வரத்தில் சூதனுக்கு என்னால் மணமுடிக்க முடியாது என்று ஏசிய திரெளபதி உண்டாக்கிய காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறிவிடுமா என்ன”?

“வா உனக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். அஸ்தினாபுரம் உன்னுடையது வா வந்து மகுடம் சூடிக் கொள்”.

“நான் உயிர் என்றால் துரியோதனன் ஆன்மா. என்றாவது உயிர் ஆன்மாவுக்கு துரோகம் செய்யுமா அம்மா. எனக்கு தாய்ப் பாசம் என்னவென்று தெரியாது. நான் சூதன் என்பதால் என் மனைவி படுக்கறையில் கூட அவள் பக்கத்தில் முப்பது வருடங்களாக இடமளிக்கவில்லை தெரியுமா? ராஜ்யத்துக்காக நான் உங்கள் அழைப்பை ஏற்று வருவேனாயின் என்னைவிட ஈனப்பிறவி யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. கனவில் கூட என்னால் துரியோதனனுக்கு துரோகம் இழைக்க முடியாது”.

“நான் செய்த தவறுக்கு, நான் தானே பிராயச்சித்தம் தேட வேண்டும். நீ அரசனாக அரியணையை அலங்கரிப்பதை நான் காண வேண்டாமா? அஸ்தினாபுரம் உனதல்லவா”.

“ஆ! அஸ்தினாபுரம் ராஜமகுடம். துரியோதனனுக்கு துரோகம் செய்துவிட்டு, செய்நன்றி மறந்துவிட்டு இதுநாள் வரை பகைமை பாராட்டியவர்களோடு சிநேகிதம் கொள்வது முடியாத காரியம்”.

“எனக்காக இறங்கி வரக்கூடாதா மகனே. உனக்கு சாமரம் வீச உனது ஐந்து சகோதரர்களும் தயாராய் இருக்கிறார்கள்”.

“துரியோதனனுக்கு என்னால் நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது அம்மா. வேறு ஏதேனும் வேறு கேளம்மா. கொடுத்துச் சிவந்த கரங்கள் அதற்காக காத்திருக்கிறது”.

“நாளை போர் தொடங்கப் போகிறதல்லவா. நீ எனக்கு இரண்டு வரங்கள் தந்தாக வேண்டும், தருவாயா”?

“அம்மா தூக்கி எறிந்தவனிடம் கையேந்த நேர்கிறதே என வருந்துகிறாயா? மாயக் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத இரும்பு இதயமம்மா என்னுடையது. உயிர் மட்டும் துரியோதனனுக்கு வேறு என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறேன்”.

“எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. பாண்டவர்களைக் காக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா! இந்த அன்னையின் கதகதப்பு இன்னும் அவர்களுக்கு தேவைப்படுகிறது கர்ணா. என்னில் ஒருபாதியாக நீ பத்து மாதம் இருந்தாயல்லவா. உனது சகோதரர்களுக்கென்று நீ செய்யப்போவது இது மட்டுந்தான் ஞாபகமிருக்கட்டும் கர்ணா”.

“கண்ணன் சொல்லிக் கொடுத்தானா வரம் கேட்கச் சொல்லி. பாண்டவர்களுக்காக அந்த வேலையும் பார்க்கின்றானா நீ கேளும் அம்மையே”?

“முதலாவது நீ நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும் தான் பிரயோகிக்க வேண்டும். இரண்டாவது மற்ற நான்கு சகோதரர்களுக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது”.

பத்து மாதம் என்னைச் சுமந்ததற்காக நான் இதைச் செய்கிறேன். என் வீரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். போரில் அவர்கள் வென்ற பிறகு தெரிந்து கொள்ளட்டும் நான் அவர்களின் மூத்த சகோதரன் என்று. எந்த தர்ம கிரந்தமும் நியாயத்தை பார்க்காது. செய்நன்றி தான் மிக முக்கியம். இறக்கும் வரை துரியோதனன் நண்பனாகவே இறப்பேன். கண்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் இந்த முறையும் அவன் தந்திரமே வெற்றி பெற்றதென்று. நான் போட்ட பிச்சை தான் ராஜ்யம் என்று. மரணத்தை விழைவிப்பவர்களே வாருங்கள். போரில் வீர மறவனாக உயிர்விடும் பாக்கியத்தை எனக்குத் தாருங்கள். சூதனாக வாழ்ந்து சத்ரியனாக சாவது இவ்வுலகில் நான் ஒருவனாக மட்டுந்தான் இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *