வெற்றி நிச்சயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 6,867 
 

சாரதா கல்விச்சாலை களை கட்டியிருந்தது. பேராசிரியர் நமச்சிவாயத்தின் முப்பத்தியேழு ஆண்டு சேவை பூர்த்தியடைந்து அவருக்குப் பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அரசாங்கம், அவருக்கு ‘நல்லாசிரியர்’ விருது அளித்ததைப் பாராட்டிக் கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையேற்று உரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு ஆகியிருந்தது.

தொலைக்காட்சியில் பேராசிரியரின் சிறப்புப் பேட்டி தொடங்கியது….

“ஐயா! தங்களின் அனுபவம் …. கடமையாற்றி விடைபெறும் இத்தருணத்தில் எவ்வாறு உணருகிறீர்கள்?”

“முதலில் இந்த எளியவனின் சிறிய சேவைக்கு இடமளித்த சாரதா கல்விச்சாலைக்கு எனது நன்றி! மாணவ சமுதாயத்திற்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் அவர்களுக்குக் கற்றுத்தந்து, நல்லவர்களாக, பண்புள்ளவர்களாக, சிறந்தவர்களாக, அறிஞர்களாக, மேதைகளாக உயர்த்தும் பணியே ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்கமுடியாது! சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர்தான் ஆசிரியர்! ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை! ஒழுக்கம், பொது அறிவு, மனிதாபிமானம், தர்ம சிந்தனை, என்று அனைத்தையும் பசுமரத்தாணிபோல் மாணவர்கள் மனதில் பதியச்செய்து அவர்களைச் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதென்பது, ஆசிரியர்களின் உன்னதப் பணியாகும்! அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக மட்டும் ஒரு ஆசிரியர் இருந்துவிட்டால் போதாது. கற்பிக்கும் தொழிலை மனப்பூர்வமாக நேசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்…அவர்களே உண்மையான ஆசிரியர்கள்! அவ்வகையில் அவர்கள் மாணவர்களின் காலக் கண்ணாடி போன்றவர்கள் என்பதில் ஏதும் மிகையில்லை.

இக்கல்விச்சாலையில் படித்த மாணவர்கள் பலர், இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் உயர்பதவி வகிப்பதாகவும் வாழ்க்கையில் மேன்மை அடைந்து வருவதாகவும் மின்னஞ்சல் அனுப்பி எனது நீண்ட பணியைப் பாராட்டியும், பள்ளியை வாழ்த்தியும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்கள். மேலை நாடுகளில் வசிப்பவர்கள், நமது செம்மொழியான தமிழ்மொழியை இன்றைய தலைமுறையினர் ஈடுபாட்டுடன் கற்பதற்கும் வழிவகுத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மட்டற்ற மகிழ்வேற்படுகிறது! பாரதியார் விரக்தியில் சொல்லிப்போன ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ என்பது பொய்த்துப் போகிறதல்லவா?

‘ஐயா! ஏதும் மறக்க முடியாத சம்பவம்….?”

நிறைய உள்ளன…ஆனாலும் ஒரு சம்பவம் எனது அடிமனத்திலே ஒரு அடையாளமாகத் தங்கிவிட்டது. ஜெயக்குமார் என்ற மாணவன் தமிழ்மொழியைச் சரியாகப் படிக்காமல் தேர்ச்சி பெறவில்லை…தமிழ்தானே…என்ற அலட்சிய மனோபாவம்! மற்றைய பாடங்களில் காட்டிய கவனத்தைச் சற்று தமிழிலும் காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்! மன வருத்தத்துடன் அப்பையன் பள்ளியை விட்டுச் சென்றது இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது! …..

அந்தப்பள்ளிக்கும் அவருக்கும் இருந்த பந்தம் நமச்சிவாயத்தின் பேட்டியில் தெரிந்தது…கலெக்டர் வெற்றிச்செல்வன் அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பள்ளியின் சார்பாக வெள்ளிக் கேடயமும், பணமுடிப்பும் தந்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

“பாராட்டுக்கள் ஸார்! இவ்விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு அளவற்ற பெருமை ஸார்..எனது இந்தச் சிறிய பரிசை ஏற்றுக்கொண்டு என்னையும் கௌரவப்படுத்துங்கள் ஸார்”…கலெக்டர் தந்த பரிசுப்பெட்டியை நமச்சிவாயம் நன்றி கூறி வாங்கிக்கொண்டபோது கண்கள் மினுமினுத்தன. கற்றோரைக் கற்றவரே காமுறுவர் அல்லவா?….

ஏகப்பட்ட மலர்க்கொத்துக்களுடனும், வாழ்த்து மடல்களுடனும், பரிசுப்பொருள்களுடனும் மகிழ்ச்சியில் பூரித்த நினைவுகளுடனும் நமச்சிவாயம் வீடு திரும்பினார். கலெக்டர் அளித்த பரிசுப்பொட்டலத்தை ஆவலுடன் பிரித்தார். லேமினேட் செய்யப்பட்ட அவரது புகைப்படமும் கூடவே வாழ்த்துப் பாவுடன் ஒரு கடிதமும்….

“மதிப்பிற்குரிய ஐயா….என்றாவது உங்களைச் சந்தித்து ஆசிபெற வேண்டுமென்பது எனது அவா…சென்ற மாதம் இந்த ஊருக்கு கலெக்டராக மாற்றல் கிடைத்தபோது எனது ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விழாவிற்குத் தலைமை தாங்க அழைத்தபோது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் உணர்ந்தேன். ஸார்! தங்களது பேட்டியில் மறக்கமுடியாத சம்பவமென்று கூறினீர்களே..அந்த மாணவன் ஜெயக்குமார் நான்தான்…ஆம். எனது பெயர் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட வெற்றிச்செல்வன் என்பதாகும்! …

…எனது பெயரை வெற்றிச்செல்வன் என்று மாற்றிக்கொண்டு வேறொரு பள்ளியில் சேர்ந்து படித்தேன்…தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை மெள்ளமெள்ள உணர்ந்து கொண்ட தருணம் அது! சக மாணவர்களின் முன்னால்…’வெள்ளையும் சொள்ளையுமாக இருந்துகொண்டு, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகிறாயே?..உனக்குப் பெரிய கலெக்டர் என்ற எண்ணமா? ஹும்! ஒன்றைப் புரிந்துகொள் …தமிழைக் காவு கொள்ள வெளிமனிதர்கள் யாரும் வேண்டாம்…..கல்வியின் ஒவ்வொரு அம்சத்தையும் வாழ்க்கையோடு பொருத்தி வாழ்பவன் தான் முன்னேற முடியும்! எதையும் அலட்சியப்படுத்தி விட்டேற்றியாக இருப்பவர்களால் எதுவும் சாதிக்க முடியாது….தமிழைப் புறந்தள்ளுபவர் தாயைப் புறந்தள்ளுபவர் மாதிரித்தான்…தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து வாழ எனது வாழ்த்துக்கள்” என்று என்னிடம் தாங்கள் சொல்லி நிறுத்தியபோது…நான் வீணாக்கிய அந்த ஒரு வருடம் என்னை ஏளனமாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்…எனக்குள் அந்த நிமிடமே ஒரு சக்தி பிறந்து எனக்கு வெற்றிப்பாதையைக் காட்டியது…தமிழை ஊன்றிப் படித்தேன்…’பெரிய கலெக்டர் என்ற எண்ணமா? என்று தாங்கள் கேட்ட கேள்வி என்னுள் விதையாக ஊன்றியது…எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அல்லவா? ஒரு இலட்சியத்துடன் படித்து மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேறினேன்…ஆம்! எனது இன்றைய நிலைமைக்குத் தங்களின் போதனையே காரணம்…கலெக்டராகி விட்டேன்…அதுவும் தமிழில் எனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்குப் பணியாற்றுவதில் மிக்க பெருமிதம் கொள்ளுகிறேன்…”…

நமசிவாயத்திற்கு வியர்த்தது….வெற்றிச்செல்வன் அளித்த புகைப்படத்திலிருந்த நமசிவாயம்,..”என்ன? இப்போது மன நிம்மதி ஏற்படுகிறதா? தமிழ் யாரையும் புறந்தள்ளாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா?” என்று வினவுவது போல் உணர்ந்தவர் நிம்மதிப்பெருமூச்சுடன் முறுவலித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *