பிறன் பொருளைத் தன் பொருள் போல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 4,129 
 

மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ என்ற ஐயமுண்டு அவனுக்கு.

மாவட்ட மைய நூலகத்தின் எதிர்ப்புறம் வரிசையாக நீண்டு கிடந்த ஏழெட்டுப் பேருந்துத் தரிப்பான்களில் ஒன்றில் காத்துக் கிடந்தான்.

நகரின் புகழ் பெற்ற அம்மன் கோயில், பரபரப்பான உணவு விடுதி, மகளிர் கல்வியியல் கல்லூரி, பொதுப்பணித்துறை அலுவலகம், வங்கிகளின் ஏ.டி.எம்., தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம். தனியார் சுற்றுச்சுவர்களைக் கவனமாகத் தவிர்த்து, அரசு அலுவலகங்களின் சுற்றுச் சுவரெல்லாம் ஒன்றுக்குப் பக்கலில் ஒன்றாக, ஒன்றுக்கு மேலாக ஒன்றாக வண்ணச் சுவரொட்டிகள்.

போராட்ட அறிவிப்புகள், நினைவு நாள் – பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சினிமா நாயக, நாயகி முகங்கள், நகைக்கடை – துணிக்கடை விளம்பரங்கள், ஊர்வல – பேரணி அறிக்கைகள், சின்ன அளவிலான சாமான், நீளம் தடிமன் விறைப்பு அதிகரிக்க மருத்துவ ஆற்றுப்படைகள்… எங்கும் எதிலும் எவரும் கேட்பாரில்லை போலும்! வரி வசூலிப்பதும், கொடுப்பார் தேடிக் கொள்வதும், வழிப்பறி செய்வதுவும் குலத்தொழில் ஆகிப்போனது. செட்டியார் கப்பலுக்கு செந்தூரான் துணை. பை நிறைந்தால் போதாதா, எவனும் விளம்பரச் சுவரொட்டியை எங்கு ஒட்டினால் என்ன, கிழித்தால் என்ன?

அங்கு அரைமணித் தியாலம் பொறுமையுடன் அரசுப் போக்குவரத்து நிர்வாகத்தின் பேரருள் வேண்டி நின்று கிடக்க வாய்த்தால் காணாதன காணலாம். சிவம் காணலாம். தம்மையே தாம் சாட்டையால் அடித்துத் தமுக்கடித்து இரப்போர்; தமருகம் ஒலித்துத் திமில் பெருத்த காளையின் மேல் வண்ணத் துகில் போர்த்து, கழுத்து மணி அணிவித்து, கொம்பில் குஞ்சலங்கள் தொங்கவிட்டு இரப்போர்; கைவண்டியில் ஊனமுற்றோரை வைத்து இழுத்து, ஒலிபெருக்கியில் யாசகம் கேட்டு இரப்போர்; அந்தகருக்கு கை பிடித்து வழி நடத்தி இரப்போர்; பொழுது போகாமல் வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று இரத்தல் தொழில் முனையும் இரப்போர்; மாலை கட்டிங் வாங்க காசு தேற்ற இரப்போர் என இந்திய வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் கூர்ந்து அவதானிக்கலாம்.

பொதுப்பணித்துறை வாசலிலும், பேருந்துக்கு மக்கள் ஓடியாடும் இடங்களிலும் ஏழெட்டுப் பழவண்டிகள் நிற்கும். எட்டாண்டுகளுக்கு முன்பு செம்மொழி மாநாட்டு ஆயத்தங்களுக்காகப் போட்ட, தரையோடுகள் பாவிய நடைபாதையில் எவரும் நடப்பதற்கு நீதம் இல்லை. குண்டும் குழியுமாக உடைந்து, ஓடுகள் கிளர்ந்து கிடக்கும் இடங்கள் தவிர, மற்ற நீள அகலங்களில் அமர்ந்து பிச்சை கேட்கும் கால் முடப்பட்டோர், பார்வைத் திறனற்றோர், நடக்கமாட்டாத முதியோர். பனங்கிழங்கு, பச்சை நிலக்கடலை, பனை நுங்கு, நாட்டு மருந்து, கர்ச்சீப்பு, சாந்து-வளையல்-காதணி, பிளாஸ்டிக் சாமான்கள், கச்சாயம் விற்போர் எனக் கலந்து கிடப்பார்கள். பேருந்துக்கு காவல் நிற்போர், நடப்போர் சாலையில் கிடப்பார்கள். நகரின் வேறுசில பகுதிகளில் செம்மொழி மாநாட்டு நடைமேடைகளில் குறுக்கு வெட்டி, இருக்கை போட்டு, பஜ்ஜி, போண்டா, சமோசா, காளான் சில்லி, கச்சாயம் என வியாபாரம். அதிகாரம் லாபத்தில் பங்கும் வாங்கும்!

நிழலுக்கு என நிழற்குடைக்குப் பின்புறம் ஒதுங்கி நின்றவன் கண்களை அராவியது சுவரொட்டியில் பல் காட்டிச் சிரித்த முகம் ஒன்று. உட்கரந்த விடத்துடனும் வஞ்சத்துடனும் காழ்ப்புடனும் சம்பாதிக்கும் வெறியுடனும் சூதுடனும் இவர்களால் எப்படி இதுபோல் கறந்த பாலெனச் சிரிக்க இயலுகிறது என்று எண்ணினான். தொழுத கையுள்ளம் படை ஒடுங்கும் போலும்!

சுவரொட்டியில் ஆடம்பரமாகப் பல்காட்டிச் சிரிப்பவர் ஆணாகியரா பெண்ணாகியரா அலியுமாகியரா என்றோ , ஆயுளுடன் மக்கட் சேவையில் மகிழ்பவரா- முன்னாள் துருவ நட்சத்திரமா என்றோ , எந்த வரலாற்றின் எச்சம் என்றோ இந்தக் கதாசிரியன் அறியத் தரமாட்டான்! வேறென்ன, இன்னும் சின்னாட்கள் வாழும் ஆசையே! எனவே ஆண்பால்- பெண்பால் உரைக்காமல், அது வென்ற அஃறிணைப் பெயரால் குறிக்கத் தலைப்படுவான். அவனுள் ஆர்ப்பரித்து எழுந்த கேள்வி, இது எத்தனை இலட்சம் கோடிகள் தமர்க்கும் சுற்றத்தார்க்கும் காம உரிமையினர்க்கும் கொய்தெடுத்துப் பதுக்கி இருக்கும் என்பது! மேலும் அந்தச் சிரிப்பு அவனைத் தொந்தரவு செய்தது. தொந்தரவு செய்யும் அளவுக்கு அவனுக்கு சுரணை இருந்தது என்று கொள்க. அந்த மென்னகை, புன்னகை, இளநகை, நறுநகைக்கு உரை எழுத, நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லார், இளம் பூரணர் என முயன்றாலும் அது தோராயமாக, “ஓம்மால என்ன மயித்தைப் புடுங்க முடியும்லே மூதேவி?” என்று அமையும்.

சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த பொதுப்பணித் துறை சுற்றுச் சுவரோரம் போய்ச் சாய்ந்து நின்றான். ஒரு காலை நிலத்தில் ஊன்றி, மறு காலை மடித்து சுவரில் ஊன்றி. சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த சுவர் அவன் விலா உயரத்துக்கு நின்றது.

சாய்ந்து நிற்பது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது அவனுக்கு. கைக்குழந்தையோடு, கையில் பிடித்திருந்த நர்சரி சிறுவன் அல்லது சிறுமியுடன், கடைத்தெருவில் வாங்கிய சாமான் நிறைந்த பையுடன் எனப் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முதுகில் புத்தகப் பையுடன் மாணவியர் கூட்டமும்.

எவரும் கவனிக்காதபடி, சாய்ந்து நின்ற சுவரில் சற்றே நகர்ந்து இடது கால் நிலத்திலும் வலதுகால் கயமையின் சுவரொட்டி ஓரத்திலுமாக நின்றான். மற்றெவரும் கவனிக்கிறார்களா என்றாய்ந்து சுவரொட்டி உருவத்தின் கழுத்தையும், கன்னத்தையும் செருப்புக் காலால் தேய்த்தான். இன்னும் சிரித்துக் கொண்டிருந்தது முகம். எத்தனை ஆயிரம் கோடிகளோ? எத்தனை கள்ள விலைக் கலவியோ? அனைத்து நகரங்களிலும் இடமிருக்கும் தலம் எல்லாம் ஒட்டப்பட்டு குடி மக்களை நோக்கி, “போங்கடா புல்லே!” என எகத்தாளமாகக் கண்களில் தன்னலக் கொடு நஞ்சு கசியும் சிரிப்பு.

வால் போஸ்டர் ஒட்டியவனோ, கட்சிக்காரனோ கண்டுவிடலாகாது என்ற அச்சம் இருந்தது. அத்தனை அறிவுடையவர் கட்சிக்காரர்களாக இருப்பார்களோ என்ற ஆறுதலும்! பார்த்தாலும் தான் என்ன, அவனுக்கே கூட நமக்கிருக்கும் எண்ணம் இருக்கக்கூடும் என்று நினைத்தான். எல்லோரும் கூலிக்கோ ஆதாயத்துக்கோதானே ஊருக்காக ‘அம்மாடி தாயாரே! அடிக்கிறார்கள்? மேலும் வெளி கிடைத்த இடத்திலெல்லாம் புன்முகங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், இருளும் ஒதுக்கமும் பார்த்து எவனும் முகத்துக்கு நேரே மூத்திரம் பெய்ய மாட்டானா சர்வ சுதந்திரத் துடனும்?

மேலும் சற்று மன உறுதியில், காலை அகற்றி, இரு கால்களையும் நிலத்தில் ஊன்றி, சற்று திருத்தமாக நகர்ந்து நின்றான். நடு முகத்தில், கழுத்தில் இருந்து நெற்றிவரை, வலது செருப்புக்கால் பதியும்படி ஊன்றி நின்றான். மனம், “செருப்பை நக்கு நாயே!” என்று பிளிறியது. அவனுக்குச் சற்று ஆங்காரம் தணிந்தது போலவும் தோற்றிற்று.

சாதாரண ஒரு இந்நாட்டு மன்னர் வேறெதைப் பிடுங்கி வேறெங்கே நட முடியும்? புரட்சித் தீக்குக் காற்று வீசி வளர்க்கவா? கயமையைக் கருவறுக்கக் கடுந்தவம் முனையவா? பல் போய், சொல் போய், ஈளையும் இருமலும் ஆகி பிக்-அப்பும் போய்த் தள்ளாடித் தடியூன்றும் காலத்துக்கு நகர்ந்து போவதன்றி?

முகத்தின் மீது பதிந்து நின்ற காலை நீக்கி, சிரிப்பைப் பார்த்தான். “எமக்கெல்லாம் ஏதுடா பழியஞ்சும் நெறி?” என்பதுபோல் சுவரொட்டி மேலும் கனைத்துச் சிரித்தது. நாய் குரைத்து நாள் புலருமோ என்று தோன்றியது அவனுக்கு!

அவன் பயணமாகும் தோதில், அவன் வழித் தடத்துப் பேருந்து ஒன்று அடைசலாக வந்தது. தனியார் பேருந்துக்கான அங்க இலக்கணங்களுடன் ஆபாசத் திரைப்பாடல்களுடன், பெருத்த இரைச் சலுடனும் நெரிசலுடனும்!

what to choose from rotten apples? நெரிந்து பிதுங்கி, கையிலிருந்த துணிப்பையைப் பாது காத்தபடி, கூட்டத்தோடு கூட்டமாக ஏறினான். வாகான இடம் தேர்ந்து தன்னைப் பொருத்திக் கொள்ளத் துணிந்தான். பேருந்து புறப்பட்டு நூறு மீட்டர் பயணித்து உக்கடம் சாலை சிக்னலில் நின்றது. சிக்னல் கிடைத்ததும் இடப்பக்கம் திரும்பி ஊர்ந்து, வலப்பக்கம் திரும்பி பிரகாசம் சிக்னலில் நின்றது. வியர்க்க ஆரம்பித்தது. பயணச்சீட்டு வாங்க, இடப்பக்கத்து கால் சட்டைப்பையில் கைவிட்டான். பேரண்டப் பெருவெளியாகக் கிடந்தது. வலப்பக்கத்துப் பாக்கெட்டில் செல்ஃபோன் கிடந்தது.

அதற்குள் அடித்து மாற்றிவிட்டார் என்று புரிந்தது. சுவரொட்டியில் சிரித்த முகத்தின் மாயக்கரமாக இருக்குமோ? ஏறிய நிறுத்தத்தில் இருந்து முந்நூறு மீட்டர் கூடப் பேருந்து நகர்ந்திருக்காது. அடுத்த நிறுத்தம் இன்னும் வரவில்லை .

பக்கத்தில் நின்றவர் கேட்டார், “என்ன சார்? பாக்கெட் அடிச்சிட்டானா? இப்பத்தான் ரெண்டு பேர் இறங்கிப் போனான்… கண்டக்டருக்குத் தெரிந்திருக்கும், சொல்ல மாட்டானுக… இறங்கிப் பாருங்க…”
அவனும் அவசரமாக இறங்கினான். எவரிடம் கேட்பது? எவரிடம் முறையிடுவது?

சிக்னல் தாண்டி நூறடி நடந்தால் காவல் நிலையம். முறையிடலாமா என்று தோன்றியது. கூடவே மனக்குறளி பேசியது. எலி ராச்சியத்துக்குப் பயந்து புலி ராச்சியத்துக்குப் போவாயா என்று.

சட்டைப் பையில் வேறு காந்தித் தாள்கள் ஏதும் இல்லை. கால்சட்டைப் பின் பாக்கெட்டில் ஆறு பணத்துக்கான நாணயங்கள் கிடந்தன. ஆறு ரூபாய்க்கான பயணச் சீட்டு வாங்கிவிட்டு, பதினோரு ரூபாய் பயணத்தூரம் வரை போக இயலுமோ? அதுவரை போய் இறங்கி நடக்கலாம். மாற்றாக, மதியம் இரண்டரை மணி வெயிலில், பசித்த வயிற்றுடன், புட்டுவிக்கி குறுக்குப் பாதையில் ஆறேழு கிலோமீட்டர் நடக்கவும் ஆகலாம்.

மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தது மனம். தனது கவனக்குறைவுக்கான சுய தண்டனை. Penance. அலகு குத்திக் கொள்வதைப் போன்ற, நடந்து மலையேறுவதைப் போன்ற, நோன்பு போன்ற… சற்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

பிக்பாக்கெட்காரனை நினைத்தால் பாவமாகவும் இருந்தது. அரை நாள் கூலி கூடத் தேறாது அவனுக்கு. அவனுக்கும் பால் விலை பாக்கெட் ஐம்பது பணம்தானே! பிள்ளைகள் பள்ளியில் பயில்பவர்களாகக் கூட இருக்கலாம். நடிகர் மகன் நடிகன், தலைவன் மகன் தலைவன் என்ற ரீதியில் பிக்பாக்கெட் மகன் பிக்பாக்கெட்டாக ஆகிவிடலாகாது.

இந்தக் காலத்திலும் இதையோர் தொழிலாகச் செய்வாரும் உளரே என்றும் தோன்றியது. ஒருவேளை இந்தத் தொழில் அனுபவத்தில் மக்கள் சேவைக்கு எனப் புகுந்தால் சில ஆயிரம் கோடிகள் ஆட்டையைப் போடலும் ஆகும். வழி நடக்கும் மக்களைப் பார்த்து, ‘கேணப்பயல்கள்’ என்று சுவரொட்டியில் எகத்தாளமாகச் சிரிக்கவும் செய்யலாம். ‘தென்னிந்தியாவின் தீக்கொழுந்தே!’ எனத் தொண்டர் அடியார்கள் போற்றி, பரணி, கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், அந்தாதி பாடலாம்.

ஒரு தேநீர் குடித்தால் நன்றென்று தோன்றியது அவனுக்கு. ஆறு ரூபாய்க்குத் தேநீர் பருகவேண்டும் என்றால் ஜார்க்கண்ட் மாநிலம் வரை நடக்க வேண்டியது வரலாம்!

– காக்கைச் சிறகினிலே, ஜுன் 2020.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *