நதியொழுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 9,974 
 

முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது.

ஆள் வெகுவாக மாறிவிடவில்லை.

அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை. டக் இன் செய்யப்பட்டும் சிறிதும் விம்மாத கட்டுடம்பு. தலைமுடியில் ஓரிழைகூட உதிராமல் அடர்ந்து , வகிடெடுத்து வாரப்பட்ட நேர்த்தி. நரைகூடிக் கிழப்பருவம் எய்திவிடவில்லை! ஆங்கிலம் கசடறக் கைகூடிவிட்டதற்கான மொழியாடல்.

முகத்தில் தேஜஸ். உடற்கட்டில் ஒரு ஆண்மை மையமிட்டிருந்தது.

அவன் ஓட்டிவந்த கார் அவன் ஒட்டுமொத்த தகுதியின் அடிநாதம்.

அவன்தான் என அடையாளம் கண்ட மறுகணமே, அத்து மீறி என் நெஞ்சில் அவள் வந்து புகுந்து கொண்டாள். வாயேன் நம் எஸ்டேட்டுக்குப் போய் நதியைப் பார்த்துவீடு வரலாம் ‘” என்றேன்.

அவன் உடனே , “அல்பெர்ட் எப்படியிருக்கான்?” என்று பேச்சை மாற்றினான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தொடக்க நிலை உரையாடலுக்குப் பிறகு, நதியைப் பற்றி பேச்செடுக்க என் நா வழுக்கி வழுக்கி வலுவிழந்துகொண்டிருந்தது. ஆனால் உள்ளறையில் அவள் நிலைபெற்று நீங்காமல் இருந்தாள்.

ஆமாம். ஏன் பேசவேண்டும்? தேவையற்ற ஒன்று. நெடு நாட்களுக்குப் பிறகான அரிய சந்தர்ப்பத்தில் அவன் கிடைத்திருக்கிறான். பேசுவதில் பயனில்லை. முகமன்தானே நட்பின் ஆதாரம். முகமன் தானே முக்காடிட்டுக்கொள்கிறது. முகம் ஒளியிழக்கும் அவனுக்கு!

குறைந்தபட்சம் அந்த ஊரில் இரண்டாகப் பிரித்து ஓடும் நீரின் நெடும் பாதையையாவது பார்த்து வரலாம் என்றுகூட சொல்ல முடியவில்லை. எங்கள் கால்கள் மணலை நீரை படராத நாளில்லை. நதியோட்டத்தில் வளர்ந்திருந்தோம் நாங்கள். அது என் கண்களில் அழகிய தேவதையாக நிலைத்திருந்தது. மேற்கு மலைத்தொடரிலிருந்து கீழிறங்கி முடிவிலியாக கூந்தலைப்போல சுருண்டு வளைந்து நெளிந்து , பாறைகளில் மோதிச் சிதறி, நீர்த்திவிலைகள் சற்றே கோகினூர் வைரத் துகள்களாக தூவி எழுந்து, இறக்கை முளைத்த நீர்க்குருவி போல மேல் நோக்கித் தெறித்து மீண்டும் நீருக்குள் தலைமுழுகி காணாமற்போகும். பால்யத்தில் பார்த்த அற்புதத்தை மீண்டும் காணவேண்டும். நீர்மட்டத்தின் மேல் இன்ன திசை என்ற திட்டவட்டமற்று சடக்கென்று ஊர்ந்து ஊர்ந்து கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து செல்லும் நீர்ப்பூச்சிகளின் சாகசத்தைப் பார்த்து நாளாயிற்று! ஆற்றுப்படுகையில் கோதுமை மணல். அதன் தரைதட்டி நின்றும், நீந்தியும் இரை தேடும் சென்னாக்கோணிகள். சிலுப்பி வெள்ளித் தகடை மினுக்கி மறையும் கெண்டைகள். ஆற்றங்கரைகளின் மரங்களை தோரணம் கட்டி தலைகீழாய்த் தொங்கவிடும் நீர் பிம்பம். கூழாங்கற்கள் ஆற்றின் கருவிழிகளாய் நோட்டமிடும் நம்மை. நீரில் கால்படும் போது கால்களை ஸ்பரிசிக்கும் நாணம். நாணம் நீருக்கும்தான். கன்னிமை நதி.

எல்லாவற்றுக்கும் வனப்பைச் சேர்க்கும் அந்தி சாய்ந்தது குளிக்க வரும் தாவணித் தேவதைகள்.

இவற்றில் மீண்டும் முகிழ்ந்தெழ ஆசைதான். ஆனால் அந்தக் காட்சி அவனுக்கும் நெஞ்சு சீழ்ப்புண்ணைக் கீறி விடும்.

அவன் மீண்டும் சொன்னான் ‘ வா அலபெர்ட்டை பார்த்துவிட்டு வருவோம் “ என்று. அலபெர்ட் ஒரு திசை மாறிய ஆடு. பள்ளிக்கயிற்றைக் பாதியில் அறுத்துக்கொண்ட ஆடு. பினாங்குக்குக் குடிபெயெர்ந்து கூடாத நண்பர்களின் நட்பால் ஊனமான வாழ்க்கை அவனுடையது. பதினைந்து வயதில் ஊரைவிட்டு அண்ணன் வீட்டுக்குப் புலம் பெயர்ந்தான்.

“அவனுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்குமா?”

“அதற்கு வாய்ப்பில்லை! அவன் ஏழெட்டு முறை பூலாவ் ஜெர்ஜாக்க்குப் போய் வந்தவன். ஜென்மக்குற்றவாளி. அவன் மீண்டும் தூய்மையாக வாய்ப்பில்லாமல் சந்தேகம் எழுந்தால் போலிஸ் தேடி அடைத்து விசாரித்துக் குற்றம் சுமத்தி மீண்டும் உள்ளுக்குத் தள்ளிவிடும் . ஒரு நிராதரவு ஜென்மம்.

“இப்போ வெளியே இருக்கிறானா உள்ளேயா தெரியவில்லை!” என்றேன்.

“பரவாயில்லை நமக்கு நல்ல நேரம் இருந்தால்.” என்றான்.

“சரி வா…” என்று புறப்பட்டுவிட்டோம்.

நான் நாங்கள் வாழ்ந்த ஊரின் அருகாமைக்குக் குடிபெயெர்ந்தவன். ஒரு மணி நேரத்தில் பிடித்துவிடும் தூரம். அவ்வப்போது காரில் கடந்த பொழுதில் எட்டிப்பார்க்கும் சந்தர்ப்பம் தவிர ஊருக்குள்ளேயும் போயிருக்கிறேன். ஆனால் ஊர் அடிச்சுவடு இல்லாமல் மாறிவிட்டிருந்தது. லயத்து வீடுகளுக்குப் பதிலாக தாமான் குடியிருப்பு உருவாகிவிட்டிருந்தது, லயங்கள் இருந்த அடிச்சுவடே இல்லை. ரப்பர் தோப்புகள் குடைசூழ அமைந்த குடியிருப்பு. அந்தப் பச்சைப் போர்வையைப் பாதிக்குமேல் இழந்திருந்தது. ஊரின் எல்லைகளில் இருந்த சிறு காட்டையழித்து ஆலைகள் கட்டப்பட்டிருந்தன. தமிழர்கள் நடமாடிய இடம் வங்காள தேசிகளையும் இந்தோனேசியர்களையும் நிறைந்திருந்தது. மொழி முற்றாக மாறியிருந்தது. இடறிய மலாய் தான். தெரிந்த முகம் என்பது ஏமாற்றக் கணங்கள் கொண்டாதாகவே பெரும்பாலும் இருக்கும். இருப்பினும் ஒரிருவரின் முகத் தோற்றம் கால் நூற்றாண்டுக்கும் முன்னால் பழகிய முகங்களின் சாயலில் அல்லது அச்சு அசல் அவர்களே பிரசன்னமான பிரம்மையை உண்டாக்கும். ஒரு தலைமுறை ஓட்டிவிட்டது. என் வயதையொத்த மக்கள் பெற்றுச்சென்ற தடயங்கள் அவர்கள். அறிவியல் ரீதியாகச் சொன்னால் மரபணுக்கள் கூடிவந்த மறு அவதாரம் அவர்கள். அதே சாயலைக் கொண்டிருந்ததாலும் அவர்களும் அந்நியர்கள்தானே?

ஆனால் அந்த நதியின் கவனம் வடுபோல மீண்டும் மீண்டும் மேலெழுந்து விம்முகிறது. சில சமயம் ஊரைக் கடந்து செல்லும் போது, ஊருக்குள் நுழையும் போது நதி இருந்த நிலப்பகுதி தேடி அலைந்தன கண்கள். ஊரின் சாலைகள் , வீடுகளின் தோற்றமாற்றம், மனிதர்கள் அந்நியமானது என, இவையனைத்தும் நதியின் நிலப்பகுதியைக் காட்ட மறுத்தது. எனக்கென்னவோ புதர் மண்டிய பகுதியில் நதி சுழித்து ஓடிக்கொண்டிருப்பதாக நுட்ப அறிவு சொன்னது.

அவளைப்பற்றிதான் பேச்செழவில்லை. பால்ய பள்ளி நண்பர்கள்! பள்ளி வளாகம். ஆசிரியர்கள். அவர்களின் பெற்றோர்கள். பார்வதி, அகல்யா, சுப்ரமணி, முனியம்மா, தேவான, ரகுநாத், நெல்லிமரம், பார்வதியக்கா, சுப்பு தாத்தா, இவர்களைப் பற்றிகூட ஒரு வார்த்தை பேச மறுக்கிறான். என் நாவும் கட்டிப்போடப்பட்டுதான் இருக்கிறது. யாரைப் பற்றி பேச்செடுத்தாலும் அவளைப்பற்றி மறைமுகமாகப் பேச்செடுத்ததான குற்றமனம் எழுகிறது. அந்த ஊரின் நினைவுப் பாதை எதிலுமே எண்ணமீட்சிபெற மறுக்கிறது அவனுக்கு. அவளின் நிழல் இவை யெல்லாவற்றிலும் படிந்துள்ளதான மனம் வியாபகம் அது. காற்றைப்போல அவள் அங்கெங்கெனாதடி நீக்கமற்றிருக்கும் என்ற ஒருவகைப் பீதி பதிவாகியிருகிறது அவனுக்கு.

“அல்பெர்ட் ஏன் இப்படி ஆனான். நம்மோடே இருந்திருந்தால் அவன் இறக்கைகள் கத்தரிக்கப்பட்டிருக்காது. நம்மைப்போலவே குறைந்தபட்சம் நடுத்தர வாழ்க்கையாவது வாய்த்திருக்கும். சொந்த வீடாவது வாங்கியிருக்கும் தகுதி கூட இல்லாமல் போனதே அவனுக்கு”

“ அவன் போய்ச் சேர்ந்த இடமே கசக்குபவர்களின் கூடாரம் தானே. இடைநிலைப்பள்ளி கல்வியை நிறுத்திவிட்டு அந்தக் கூடாரத்துக்குள் சேர்ந்து அவனும் அதில் ஒருவனாய் மாறிவிட்டிருக்கிறானே. அதனைக் கடத்துபவர்களுக்கு அவன் கைக்கூலி. கைமேல் பணம். அதனால் விதி அவனை விடாமல் விரட்டிக் கொண்டே இருந்திருக்கிறது!”

கடலில் ஒரு திமிங்கலத்தைப்போல நீந்திச் செல்லப்போகும் பெர்ரிக்குள் கார் நுழைந்தது. சமிக்ஞைக்குப் பிறகு அது நீர்ச்சாமரத் துகள்களை வீசி விரைந்தது. பெர்ரியைப் பின் தொடரும் வெண் புறாக்கள் அவை! வெள்ளைத் தோகை விரித்த மயிலொன்றின் நடனம் அது. கரைகளக் கடக்கக் கடக்க கப்பல்துறை தூரமாகிக்கொண்டிருந்தது. பட்டர்வர்த் நகரம் சிறிதாகிக் கொண்டிருந்தது. கட்டடங்கள் நெடுமரம்போல் நிமிர்ந்து கூர்மையாகி மேலெழும்பி முகில்கூட்டத்தைக் கோர்க்கும் விரல்களாய் வளர்ந்திருந்தன.

பள்ளிப்பருவத்தில் இவன் ஆற்றுக்குள் பாய்ந்து ஆழத்துக்குள் மறைந்து சில நிமிடங்கள் ஆள் அரவமற்று, திடீரென வளைந்து வளைந்து துள்ளும் ஒரு மயிறையோடு, அவன் கைகள் முதலில் மேலெழ அவன் பின்னர் தோன்றுவான். பெருமிதப் புன்னகை மலர! நதிக்குள் நுழைந்தானானால் மீனில்லாமல் அவன் வந்ததே இல்லை. இவ்வளவு நேரம் எப்படி மூச்சை இழுத்துப் பிடிக்க முடிகிறது?. எங்கோ சேற்று வலைக்குள் புதைந்திருந்ததை எத்துணை லாவகமாக பற்றி, பிடி வழுவாமல் கரைக்குக் கொண்டு வருகிறான். விஷக் கொடுக்கு மயிறையை கொக்கிபோல விரல்களை அதன் கழுத்து இடையில் வைத்துக் கோர்க்கவேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தீண்டிவிடும். கடுகடுக்கும் ஒருவித இம்சை வலியைக் கொடுக்கும் கொடுக்குத் தீண்டல். ஒருநாளும் இல்லை! அதிர்ஷ்ட வசமாக அவன் அதிலிருந்து தப்பித்தே வந்தான். பிடிபடாமல் தப்பிக்கும் திறமை அவனுக்கு.

கடலை தாண்டும் வரை அவன் ஆற்றைப்பற்றி பேசவே இல்லை. எனக்குக் கடலும் ஆறும் மாறி மாறி நினைவில் மூழ்கி எழுந்து கொண்டே இருந்தது. எங்கள் பால்யத்தையும் பருவ வயதையும் நனைத்து நீராடிய நதி இவனுக்குள் ஏன் எழவில்லை? அவள் நினைப்பு ஒரு பக்கம் இருக்கட்டுமே ஆறு அப்படி என்னதான் செய்துவிட்டது அவனை?

தோட்டத்தைப் பற்றிய என் பேச்சு தொண்டைவரை வந்து வார்த்தையற்று சுணங்கி மீண்டும் தொண்டைக்குழிக்குள் செல்லும் வண்ணமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்பு நாடி வந்தவன். விடு!

அந்த நதிதான் சாட்சி. முழுநிலா பட்டப்பகலென எரிக்கும் நாட்களில் நதி தனக்குள்ளே அமைதியாய் நீராடிக்கொண்டிருக்கும். நிலவை நீர் பிடிக்கும் முயற்சி . நிலா குளிக்கும் தருணம் நீர் ஒழுக்கு தகதகுக்கும். பாறையிலும் கரையிலும் மோதி மோதி ஓடும் , சுடப்படும் தங்கமென ஜொலிக்கும். நிலா ஜுவாலையாக தகிக்கும். புணர்வுத் தருணம் அது. நீருக்கும் நிலாவுக்கும்.

அந்த நிலா முற்றுகையிடும் சற்றே முற்றிய அந்தியில் அவள் வருவாள். யார் கண்களிலும் மேனி பட்டுவிடக்கூடாத இளம்பெண்ணுக்கே உரிய கூச்சத்தோடு. சுற்றி மனித அரவம் இல்லை என அவள் திட்டவட்டமாய் முடிவெடுத்த பிறகே அவள் நீருக்குள் நனைவாள். பாதங்களை மெல்ல நனைத்துச் சிலிர்த்து பின் நீர்ச்சலங்கையொலி கிளப்பாது மூழ்குவாள். கூந்தல் ஈரம் சொட்ட எழும்போது தண்ணீர் முத்துகள் உருண்டோடி நதியில் விழும். அவள் கண்கள் மீண்டும் பரிசோதிக்கும். மேலும் மூழ்குவாள். அப்போது அவள் உடலை நீரும் முக்குளிக்கும். அவள் குறுக்கு மாராப்பு தண்ணீரில் தலையணையாய் விம்மி மேலெழும். அவள் உடல் மின்னல் வெட்டு !வீட்டு வேலைகளின் உடற் களைப்பை நதிநீர் வாங்கிக்கொள்ளும். ஒரு பெண்ணின் களைப்பை இன்னொரு பெண் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பரம் அது.

அது அவளுக்கு எப்போது நேர்ந்தது என்று தெரியவில்லை. இளமையை அள்ளும் சந்தேகம் நிறைந்த தேகம். சிறு தீண்டலில் இளைப்பாறும் பருவம். தனிமை .. சப்தம் துறந்து பொழுது என எல்லாம் கூடிவர அவள் கருவுற்றாள்.

அவள் இப்போது எங்கிருக்கிறாள் என்று துல்லிதமான விபரம் கிடைக்கவில்லை! ஒரு கைக்குழந்தையோடு ஊரிலிருந்து வெளியான நாள் தொட்டு விபரம் கிடைக்கவில்லை. ஆனால் வளர்ந்த பிள்ளையோடு எங்கோ இருக்கிறாள். அவன் இளமையை எட்டியிருப்பான்.

அல்பெர்ட்டைச் சந்திக்க முடியவில்லை. மௌண்டர்சிகினில் ஏதோ ஒரு வாடகை வீட்டில் குடி. அக்கம் பக்கம் விசாரித்ததில் விபரம் கிடைக்கவில்லை. அவனுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் துர்ச்சம்பவத்தை நம்பவே முடியவில்லை! பள்ளிப் பருவத்தில் அவன் தீய வழி போவதற்கான சுவடே இருந்ததில்லை. மீண்டும் சிறைவாசமாக இருக்கலாம். அவனோடு பழகிய நாட்கள், சம்பவங்கள் அவனை மனம் உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருந்தது.

அவன் விடைபெற்ற பின்னர் எனக்கு நதியைப் பார்க்கவேண்டும் என்று தோணியது. அவன் இருப்பும் அந்த நாட்கள் பற்றி அவன் வாய்த்திறக்காமல் இருந்ததும் எனக்கு ந்தியின் மீதான பிரேமை அதிகரிக்கக் காரணமாக இருந்தது. அது எனக்கு இன்னொரு உயிர்த் தோழன். சிறு பிராயம் முதல் ஆடிக் களித்த மகிழ்ச்சி இன்னும் தேங்கிக் கிடக்கிறது. அதன் நீரொழுக்கைக் அள்ளித் தெளித்துக் கொள்ளவேண்டும். பாதங்களில் குளிர் ஏற நனைத்துத் திளைக்க வேண்டும். மூழ்கி எழவேண்டும்.

நதியோடிய நிலப்பகுதி நான் எதிர்பார்த்தது போல புதிய வீடமைப்புப் பகுதிக்கு முன்னூறு நானூறு மீட்டர் எதிர்ப்புறத்தில் இருந்தது. மேட்டுக் குச்சிக்கும் , தோட்ட அலுவலகத்துக்கும், கிராணிமார்கள் மானேஜர் பங்களாவுக்கும், பந்தடித் திடலுக்கும், போகும் செம்மண் சாலைக்குக் குறுக்கே பலகைப் பாலம், வெள்ள அரிப்பு காரணமாக கற்பாலமாக போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. பாலத்துக்குக் கீழ் ஓடும் அந்நதி அங்கே ஒரு குண்டூசி வளைவெடுத்து கரையை முட்டி சுழித்து பாய்ந்து தன் திசை நோக்கி நகரும் . அந்த கற்பாலத்தைக் கண்டு பிடித்துவிட்டால் ஆற்றைக் கண்டுபிடித்துவிடலாம். இதோ வந்து சேர்ந்துவிட்டேன். இரண்டு பக்கத் தடுப்புச் சுவர்கள் காரை பெயர்ந்து, இத்துப்போய் , அதன் மீது பாறைச்செடிகள் முளைத்து இருந்தன. பாலத்துக்குக் கீழே நீர்நிலையை மறைத்தபடி காட்டுத்தனமாக கொடிகளும் முட்செடிகளும் மண்டி மூடிக் கிடந்தது. முன்னர் நதி வளைந்தோடும் பாதையை கொடிகள் கண்டபடி வளர்ந்து மூடிவிட்டிருந்தது. ஆம் எனக்கு அன்னியோன்யமான ஆறு நடந்த இடம்தான் அது. ஆனால் நீர் ஓடிய தடம் எங்கே? நதியின் ஒழுக்கை புதர்கள் மிதித்து தின்று கொண்டிருந்தன. அதன் ஓட்டத்துக்கு பழுது நேர, கரடுமுரடான குறுங்காடு ஓங்கிச் செழித்து நதியை மூச்செறிக்கச் செய்து கொண்டிருந்தது.

“ஐயா இது ஆறு ஒடிய இடம்தானே..? இப்படி மண்டிக்கெடுக்கு,?” ஒரு வயதானவர் குறுக்கே வர நிறுத்திக் கேட்டேன்.

அவர் சொன்னார்,” ஆமாம், ஆறு இருந்த எடம்தான்… தெற்கே செம்பனை ஆலை கட்டப்பட்ட ரெண்டு மூணு வருஷத்தில ஆறு நாசமாயிடுச்சு, ஆலையின் எண்ணெய்க் கழிவெல்லாம் ஆற்றுப் பக்கம் திருப்பி விட்டுட்டாங்க, மீன்கள் எல்லாம் செத்து மெதக்க ஆரம்பிச்சிடுச்சி, யாரும் குளிக்க துவைக்க வரதில்ல. தோட்ட சனம் எவ்வளவோ மன்றாடிப் பாத்துச்சி. அதான் பைப் தண்ணி வசதி கொடுத்தாச்சே. ஆறு எதுக்குன்னு மக்கள் எதிர்ப்ப முறியடிச்சிடுச்சு, அப்போருந்தே ஆறு தன் முகவரிய எழக்க ஆரம்பிச்சு இன்னிக்கி அது இருந்த வரலாறே இல்லாமப் போச்சு. “ கைகளைத் தூக்கி விரித்து எல்லாம் போச்சு என்ற ஏமாற்ற சைகையில் ஆட்டி என்னைக் கடந்து போய்க்கொண்டே இருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *