கோந்து ஸார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 4,135 
 

கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது.

பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது.

பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும் பெற முடியவில்லை.

அதற்கு இயற்கையிலேயே அமைந்த ஞானமும், கடினமான உழைப்பும் வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். அதனால் கோந்துமேல் ஆத்திரம்தான் எழுந்தது.

“போன வாரம் பொண்டாட்டி சமேதரா நம்ப வீட்டுக்கு வந்து, மனுஷன் பாயசத்தையே உறிஞ்சு, உறிஞ்சுக் குடிச்சாரே! அந்த நன்றிகூட இல்லாம, எப்படி என் பாட்டைக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கார்!” என்று வீட்டாரிடம் சொல்லி மாய்ந்துபோவார்கள்.

“என்னமோ, நக்கீரன் பரம்பரையில் வந்தமாதிரிதான்! கண்ணிலே விளக்கெண்ணையும், காதிலே நல்லெண்ணையும் போட்டுக்கொண்டு, `எங்கேடா தப்பு கண்டுபிடிக்கலாம்?’ என்று உட்கார்ந்திருப்பார்,” என்று பிற கலைஞர்களுடன் எவ்வளவுதான் பேசினாலும், அவர்களுடைய மனம் ஆறாது.

அடுத்த முறை, முன்வரிசையில் பேப்பர், பேனாவுடன் அவரைப் பார்த்தால் நடுக்கம் வந்துவிடும்.

அவரோ, எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல் அலட்சியமாக உட்கார்ந்திருப்பார்.

இதனாலேயே, அவரது கலை விமரிசனங்களை தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சாமண்ணா, `கோந்து ஸார் எழுதினால் நம்பலாம்,’ என்று எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வார். அந்த காட்டமான படைப்புகளைப் படிப்பதற்கென்றே பலரும் அப்பத்திரிகையை வாங்கினார்களே!

ஆனால் மனைவி பொன்னம்மாவுக்கு அவரது போக்கு கவலையைத்தான் அளித்தது.

ஒரு முறை, “நீங்க இப்படி எல்லாரையும் கண்டபடி தாக்கி எழுதறது நன்னாவே இல்லே. மத்தவா சாபம் நம்பளை சும்மா விடாது,” என்று மெல்ல ஆரம்பித்தாள்.

“போடி, அசடு. நான் செய்யறது சாமி காரியம். சரஸ்வதி தேவியும், ராக, ஸ்வர தேவதைகளும் இந்த ஞானசூனியங்களால் கஷ்டப்பட விடலாமோ?” என்று அவள் வாயை அடைத்தார்.

கோந்து ஸார் அபூர்வமாக எந்தக் கலைஞரையாவது புகழ்ந்து எழுதினால், அந்தப் பாடகரின் மதிப்பும், அத்துடன் ரேட்டும், உயர்ந்துவிடும்.

விவரம் தெரியாத ஒரு சிலர், “நாளைக்கு என் கச்சேரி நடக்கிறது, மாமா. நீங்க அவசியம் வந்து அதைப்பத்தி நாலு வார்த்தை நல்லதா எழுதணும்,” என்று வேண்டுகோள் விடுப்பார்கள்.

“நல்லதுன்னு இப்பவே எப்படி தீர்மானிக்க முடியும்? நான் எப்படி எழுதுவேன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே?”

கேட்டவர் மிரண்டு போவார். இவரைப்போய் அழைக்க நம் புத்தி போனதே என்று நொந்துகொள்வார். கெஞ்சுவதுபோல், “பரவாயில்ல. சும்மா வாங்கோ!” என்பார்.

“அப்படின்னா என்ன? எழுத வேண்டாமா?” கோந்து சிரிப்பார்.

ஒரு முறை, `கவர்ச்சி’ என்ற பெயரில் அரைகுறையாக உடுத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகை `பரதநாட்டியம்’ ஆடுவதாக இருந்தது.

பத்திரிகைகள் அந்த நிகழ்ச்சியைப்பற்றி முதலிலேயே நிறைய எழுதிக் குவிக்க, சாமண்ணா சும்மா இருப்பாரா? கோந்து ஸாரை அங்கு அனுப்பினார்.

விமரிசனம் ஒரே வாக்கியத்துடன் ஆரம்பித்து முடிந்தது: `நாட்டில் துணிப் பஞ்சமா?’

இன்னொரு நாட்டிய நிகழ்ச்சியைப்பற்றிய அவருடைய கருத்து: `மேடை அலங்காரத்துக்குச் செலுத்திய கவனத்தில் ஒரு சிறு பகுதியையாவது நாட்டியத்தில் காட்டியிருக்கலாம்’.

அடுத்த முறை, அவரைப் பார்த்துவிட்டு, அந்த நாட்டியக்கலைஞர் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்.

இப்படிப்பட்டவரிடம் எப்போது பேசினால் காரியம் ஆகும் என்று புரிந்து வைத்திருந்த பொன்னம்மா, இரவில் படுத்துப் பல நிமிடங்கள் கழிந்தபின், மெள்ள ஆரம்பித்தாள், “என் சிநேகிதி தர்மாம்பா இல்லே? அவ மாட்டுப்பொண் இந்த சனிக்கிழமை ஆடறாளாம். ஏதோ சின்ன எடத்திலேதான்னு சொன்னா. நீங்கதான் எழுதணும்னு ரொம்ப ஆசைப்படறா!” என்று.

“அதுக்கென்ன! போய் பாத்தாப்போச்சு!” என்று `குஷி மூடில்’ ஒத்துக்கொண்டார் கணவரும்.

“அவளே நாலு பேருக்குச் சொல்லித்தராளாம்!” என்று இழுத்தாள் பொன்னம்மா.

“அதான் சரின்னு சொன்னேனே! காது விழலியா ஒனக்கு? மனுஷன் ஒடம்பு ஓய்ஞ்சுபோய் தூங்கறச்சே, என்ன தொணதொணன்னு!” என்று எரிந்து விழுந்தார்.

அவள் பயந்து வாயை மூடிக்கொண்டாள்.

நாட்டியமணி கண்ணுக்குக்கீழ் நிறைய மை தீட்டியிருந்ததில் அழகாகவே இருந்தாள்.

“பரவாயில்லே. ஒடம்பு ஒத்தாப்போல இருக்கு. ரெண்டு குழந்தை பெத்திருக்காளாமே” என்று மனைவி காதில் மட்டும் விழும்படி முணுமுணுத்தார் கோந்து.

பிறகு, ஏதோ சந்தேகம் எழ, “நல்ல கலரா இருக்கா இல்லே?” என்று கேட்டார்.

“பாத்தா தெரியலியா? தர்மாம்பா ஆனமட்டும் தடுத்துப்பாத்தா. அவ பிள்ளை கேக்கலே. இந்த ஹோ ஹெங்கைக் கல்யாணம் பண்ணிண்டான்” என்று கூடிய தகவல் தந்தாள்.

ஹோ ஹெங் ஆட ஆரம்பித்ததும், கோந்துவின் கண்கள் அவள் கால்களில் பதிந்தன.

`தாளகதிக்குச் சரியா ஆடமாட்டாளோ ஒருத்தி? இந்த லட்சணத்திலே, ஒண்ணும் தெரியாத மத்த குழந்தைகளுக்குச் சொல்லி வேற கொடுக்கறாளாமா?’ என்று அவர் மனம் கொதித்தது.

தர்மாம்பாவின் புதல்வன் ஓட்டமும் நடையுமாக அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். “நேத்திக்கு ராத்திரி அவளுக்கு நல்ல ஜூரம்,” என்றான், மன்னிப்புக் கேட்கும் தொனியில்.

தலையை ஒருமுறை மேலும் கீழும் ஆட்டினார் கோந்து ஸார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

`இவர் என்ன எழுதிவிடப்போகிறாரோ!’ என்ற பயம் அவன் குரலில் கேட்டது அவருக்குப் புரியாதா!

“என்ன இப்படி எழுதியிருக்கேள்!” அதிசயப்பட்டுக் கேட்ட மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்தார் கோந்து.

“இது நம்ப கலை. அவ, பாவம், பாஷை தெரியாத சீனப்பொண்ணு. சின்னச் சின்ன குழந்தைகளையும் வெச்சுண்டு, இவ்வளவு தூரம் கத்துக்க எத்தனை மெனக்கெட்டிருப்பா! ஏதோ, தனக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு உண்மையா சொல்லியும் குடுக்கறா! அதைப் பாராட்ட வேண்டாமா?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *