கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 4,731 
 

மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான தோற்றம். இதுதான் ஔவை.

அவள் , பாணர் குடியில் பிறந்த விறலி. இதனால் கலை அவளது நாடி நரம்புகள் எங்கும் ஊடுருவியிருந்தது. அவள் தன் முன்னோர் போன்று வாய்மொழியாக பாட்டுக் கட்டி பாடுபவள் மட்டுமல்ல ,நன்கு கற்றுத் தேர்ந்து புலமை கைவரப் பெற்றவளும் கூட. எழுத்தின் வகை தொகையுடன் சொல்லிலக்கணமும் கற்றுத்தேர்ந்தவள்

“அதியமான் பெரும் வள்ளல் .அவன் இரவலருக்கும் புலவருக்கும் அள்ளி அள்ளி வழங்குபவன், அவனது அரண்மனை வாயில் இவர்களுக்காய் என்றும் திறந்திருக்கும்”.

ஊரெங்கும் பரவியிருந்த செய்தி இது-

இதனை ஔவையின் உறவினரான பாணரும் விறலியரும் கேள்விப்படுகிறார்கள்.. பாணர் விறலியருடன் அவளும் அவன் அரண்மனைக்குச் செல்லுகிறாள்.

அதியமான் அவர்களை வரவேற்று உணவு ,உடை அளித்துப் பரிசில்கள் வழங்குகிறான் . அப்பரிசிலர்களில் ஔவை தனித்தவளாய் துடுக்கானவளாய்த் தெரிகிறாள். அந்தச் சிறிய வயதிலேயே அவளது அறிவும் மதிநுட்பமும் அதியமானை ஆச்சரியப்படவைக்கின்றன,.அவள்மீது அன்பு பிறக்கிறது. தந்தை மகள் மீது கொள்ளும் அன்பை ஒத்தது எனலாமா?

மற்றவர்களுக்கு விடை அளித்துவிட்டு ஔவையை மட்டும் தனது அரண்மனையில் தங்குமாறு வேண்டுகிறான் அதியமான், . ஔவையும் அவனது வேண்டுகோளை ஏற்று அங்கு தங்குகிறாள்.

சிலகாலம் செல்லுகிறது. அதியமான் அவளுக்கு பரிசுகள் வழங்குவதாய்க் காணவில்லை. அனுபவச் சானை இன்னும் அதிகம் படியாத இளமையின் துடுக்குத்தனம் …..ஔவைக்கு கோபம் வருகிறது. அவள் அரண்மனையை விட்டு கோபமாக வெளியேறுகிறாள், போகுமுன் வாயில் காவலனிடம் தனது கோபத்தைக் கொட்டித்தீர்க்கிறாள் அவள்.

“வாயிலோயே வாயிலோயே உன் தலைவன் பரிசிலருக்கு அடையாவாயிலை உடையவன் எனப் பெருமை பாராட்டுகிறார்கள் . ஆனால் அவன் தன்னை அறிந்தவனாகவோ அல்லது எனது தகுதியை அறிந்தவனாகவோ தெரியவில்லை. அவன் என்னை ஆதரிக்கா விட்டாலும் இந்த உலகில் ஆதரிப்பவர்கள் பலர் உள்ளனர்.எத்திசை சென்றாலும் எங்களுக்குச் சோறுகிடைக்கும்”

கோபம் கூட பாட்டாய் உருக்கொள்கிறது.

அவள் அவ்வாறு கோபத்துடன் போவதை அதியமான் அறிந்து அதிர்ச்சியடைகிறான். உடனேயே வாயிலுக்கு வந்து ஔவை போகாதவாறு தடுக்கிறான்.

“ஔவையே என் இல்லம் என்ற கூட்டில் குயிலாக நீவந்தாய். உன் பாட்டில் என்னை நான் காண விழைந்தேன். அவ்வாறு இருக்க பரிசு என்ற கனி பெற்று நீ பறந்து போக எவ்வாறு அனுமதிப்பேன்?”

வீரனின் முரட்டுத்தனத்துக்குள் மனதைக் கனியவைக்கும் பரிவை அவள் காண்கிறாள்.அதன் பின் ஔவை வேறு புரவலரை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்ற்படவில்லை.

“யாழிசையும் குழலிசையும் கால ஒழுங்குடன் இசைக்கப்படுவதால் கேட்பவரை மகிழ்விக்கும் ஆனால் குழந்தையின் மொழி பொருளற்றதாகவும் ஒத்திசைவு இல்லாததாகவும் இருந்த போதும் அதுவே தந்தைக்கு பேரின்பத்தை தரும். அது போலவே எனது மொழியும் மழலையின் மொழிதான் .ஆனாலும் அது உன்னை மகிழ்விக்கிறது” என்றாள் ஔவை.

அதியமான் புன்னகைக்கிறான். இந்தப் பாடலைப் பாடிய ஔவையும் சிறுபெண்தானே. அவளும் என் மகளை ஒத்தவள்தானே என எண்ணியதன் வெளிப்பாடுதானோ அந்தப்புன்னகை-

அதியமானின் அரண்மனையில் தங்கிய போது தான் அவனை நன்றாக அறியும் வாய்ப்பு ஔவைக்குக் கிட்டுகிறது. அங்கு வாழ்ந்தபோதுதான் அவள் அரசியல் பாடத்தையும் கற்றுக்கொள்கிறாள். அது தந்த அனுபவம் அவளது மதிநுட்பத்தை மேலும் கூர்மையாக்குகிறது.

அவள் அதியமானின் வீரம், கொடை ,விருந்தோம்பல் பண்பு , ஆற்றல் , என்ற சிறப்பையெல்லாம் காணும் போது உள்ளம் நெகிழுகிறாள். அந்த நெகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பாடல்கள் பல அவளிடமிருந்து பிறக்கின்றன.

ஒருநாள் அல்ல திருப்பத்திருப்ப பலநாட்கள் பரிசிலர்வந்தாலும் முதல்நாள் வந்த போது எத்தகைய வரவேற்பை வழங்கினானோ அத்தகைய வரவேற்பையே தொடர்ந்தும் வழங்கும் அதியமானின் பண்பு ஔவையை புளகாங்கிதமடையச் செய்கிறது,

ஒருநாள் எட்டுத் தேர்களைச் செய்யும்திறன் வாய்ந்த தச்சன் ஒருமாதகாலம் முயன்று ஒருதேர்க்காலைச் செய்தால் அந்தத் தேர்க்காலுக்கு எத்தகைய வலிமை இருக்குமோ இத்தகைய வலிமைபெற்றுத் திகழும் அதியமானின் ஆற்றல் அவளிடத்தில் வியப்பைத் தருகிறது.

நெடுமான் அஞ்சி, வீட்டுக் கூரையில் செருகி வைத்திருக்கும் தீக்கடைக்கோல் போல சாதாரண காலத்தில் அடங்கிக் கிடப்பதையும். தீ பற்றிக்கொண்ட பின்னர் காட்டையே நிர்மூலமாக்குவதைப் போல போர்களத்தில் பகைவரை அழிப்பதையும் அவனது போர்க்களச் செய்திகள் ஔவைக்கு உணர்த்தின.

குறைந்தளவு கள்ளை அவன் பெற்றிருந்தால் ஔவைக்கு முதலில் வழங்கி விடுவான். பெரிய அளவில்லாத கள்ளைப் பெற்றால் ஔவைக்கும் பிற பாணர் வீரருக்கும் கொடுத்தபின்பு தானும் உண்பான், அவ்வாறு உணவு கிடைத்தாலும் பகிர்ந்து வழங்கினான்.

இதன் போது அவள் அதியமானிடத்தே தாயின் பரிவைக்கண்டாள்.

அவள் அருகிலிருந்து மலரின் மகரந்தம் மணக்கும் தனது கையால் புலால் நாறும் அவளது கூந்தலை அதியமான் வருடி விடும்போது ஔவையும் எந்தையே என விழித்துக் கலங்குவாள்.

வீரனுக்கு போர் அழகு என்பது உண்மையே. வீரயுகத்தில் ஔவை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தன்னைத்தாக்கவருபவனை எதிர்த்துப் போராடவிட்டால் தன் இனமே அழிந்துபடுவது நிச்சயம் . தன்னை நாடிவரும் பகையை எதிர்த்து போரிட்டு சமையத்தில் உயிரை வழங்குவதுதான் வீரம். ஆனால் மூவேந்தர்போல இடம் சிறிதென்று போரிடுவது பேராசை …..அது குடிகளின் அமைதியான வாழ்வுக்கு எதிரி.என்ற நினைப்பு ஔவைக்கு உண்டு.

ஒரு நாட்டின் சிறப்பு நிலத்தின் தன்மை கொண்டு நிர்னயிக்கப் படுவதில்லை .அது அங்குவாழும் ஆடவரது நல்ல பண்பு கொண்டே நிர்னயிக்கப்படுகிறது என்பன ஔவையின் சித்தாந்தங்கள். இந்த சித்தந்தங்களுக்கு அதியமானுக்கும் பூரண உடன்பாடு உண்டு. இன்னும் சொல்லப் போனால் இச்சித்தாந்தங்களே ஔவைபால் அதியமான் மரியாதை கொள்ளவும் காரணமாய் அமைந்தன.

அதியமான் ஔவையை தூதாக.தொண்டைமானிடம் அனுப்ப அவள் தன்பால் கொண்ட அன்பும் அவளது சொல்வன்மையும் தேர்ந்த நூலறிவும் புத்திக்கூர்மையும் மட்டும் காரணங்கள் அல்ல, இந்தச் சித்தாந்தத் தெளிவே காரணம் என்பதை ஔவையும் அறிவாள்.

ஔவை தொண்டைமானிடம் அதியமானின் தூதாகச் சென்றாள். புலமையை அரசுகள் மதித்த காலம் அது. அவளுக்கு வரவேற்ப்பு சிறப்பாக இருந்தது. தொண்டைமான் தானே எழுந்து வந்து அவளை வரவேற்றான் .ஔவை அதியமான்மீது கொண்ட மதிப்பும் அளவற்ற அன்பும் எத்தகையது என்பதுதொண்டைமானுக்கு தெரியும்.

அதனால் ஔவை மீது சிறியதாய் வெறுப்பும் ஐயமும் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவன் அதனை வெளிக்காட்டாது இன்முகம் காட்டிவரவேற்றான். குசலவிசாரிப்புக்கு பின் விருந்தோம்பலும் தடபுடலாக நடந்தது.

விருந்தோம்பல் முடிந்தபின் சற்று ஓய்வெடுக்க ஔவை விரும்பினாள்.. தகடூரில் இருந்து காஞ்சிக்கு அவள் பாணர் வழிகாட்ட நடந்தும் மாட்டுவண்டியிலுமாய் வந்திருக்கிறாள் ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் ஓய்வெடுத்தாலும் அவளது களைப்பு முற்றாக நீங்கிவிடவில்லை . தொண்டைமானின் உணவின் சுவையால் சற்றுக் கூடுதலாகவே உண்டுவிட்டது வேறு ஒருவகை மந்த நிலையை அவளுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஓய்வெடுக்குமாறு ஔவையை அனுப்பிவிட்டு தொண்டைமான் விரைவாக வெளியேறினான் .

தொண்டைமான் ஆயுத சாலைப் பொறுப்பாளனான குமரனை அழைத்தான். . அவனிடம் இன்று மாலைக்குள் ஆயுதசாலை சரியான முறையில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும் எனவும் கொல்லரிடம் இருக்கும் புதிய ஆயுதங்களைப் பெற்று புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஆயுதக் கொட்டிலில் சரியான முறையில் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டான், குமரனுக்கு இந்தப் புதிய உத்தரவின் தேவை எது எனத் தெரியவில்லை.ஆனாலும் அவன் அரசனிடம் அதுபற்றி விளக்கம் கேட்க முற்படவில்லை. அவனிடம் விவாதித்து நிற்க அப்பொழுது அவனுக்கு வேளையில்லை.

மாலை ஔவை எழுந்தவுடன் அவளை எதிர்கொண்டு அழைக்கிறான் தொண்டைமான், அவன் தனது உள்ளத்தின் பரபரப்பை வெளிக்கட்டாது நிதானத்தினை கடைப்பிடிக்க பிரயத்தனப்பட்ட போதும் ஔவையின் தீர்க்க மான பார்வை அவன் உள்ளத்துணர்வை ஊடுருவிச்செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை.

“ஔவை வருகிறாயா என் ஆயுதசாலையைக் காட்டுகிறேன்.”

ஔவைக்கு ஏதோ புரிகிறது .அவள் புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.

ஆயுடக்கொட்டில் மிக நீண்டதாக இருக்கிறது. அதனைச் சுற்றிக் காவலர் பலர் வாளேந்தி நிற்கிறார்கள்.

வாசல் காவலரது வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஔவையும் தொண்டைமானும் கொட்டிலில் உள்ளே சென்றனர். தொண்டமானின் முகத்தில் பெருமை வழிந்தோடியதை ஔவை கவனிக்கத் தவறவில்லை. அங்கிருந்த ஆயுதங்களில் ஔவையின் பார்வை சென்ற போதே தொண்டைமான் அதன் பெருமைகளைக் கூறத்தொடங்கிவிட்டான்.

“இந்த ஆயுதங்கள் யாவும் எமது நாட்டின் கைதேர்ந்த கொல்லர்களால் வடிக்கப்பட்டவை . பார் ஔவையே அம்புகளில் தான் எத்தனைவகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் சென்று எதிரியை தாக்க வல்லன. முருக்கு வாள் கூர்வாள் , வெட்டுவாள் என்பவையும் செய்திறனில் மாறுபட்டவை. வேல்களும் கூட நீண்டதூரம் சென்று தாக்கக் கூடியவை பாரம் குறைந்தனவாகவும் குறுகிய தூரத்துக்கு தாக்க கூடியவை பாரம் கூடியவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன”,தொண்டைமான் ஆர்வமிகுதியுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

“இது என்ன வட்டவடிவில் கத்தி செய்திருக்கிறாயே “ என ஔவை கேட்டபோது தொண்டைமானின் வேகம் தடைப்படுகிறது. அவன் உண்மையில் மகிழ்ச்சியடைந்தான்.

இந்த கத்தியை கயிற்றில் பிணைத்து சுற்றுவோம் . இதன் முனை பட்டால் எதிரி உயிருடன் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை. தொண்டைமானின் பதிலில் பெருமை ததும்புகிறது,

ஆயுதங்கள் யாவும் கறல் பிடிக்காதவாறு எண்ணை பூசப்பட்டு மிகுந்த பளபளப்புடன் காணப்பட்டன. இடையிடையே மயிர்ப்பீலி களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வேறு ஔவைக்கு சிரிப்பை வரவழைத்தது.

என்ன அரசே மென்மைக்கும் வன்மைக்கும் சமரசம் செய்யும் எண்ணமோ ? என ஔவை தொண்டைமானை வினவியபோது அரசனுக்கு அதன் அர்த்தம் புலப்படவில்லை.

இல்லை ஔவையே இந்த ஆயுதங்கள் வன்மையின் அடையாளங்களே. என் பகைவர்கள் என் ஆயுதபலத்தைக் கண்டே நடுநடுங்குவர்.

“ஆனால் நெடுமான் அஞ்சியின் ஆயுதசாலையில் உடைந்த ஆயுதங்களும் கூர்மங்கிய ஆயுதங்களுமே இருக்கின்றன, கொல்லர். உலைக்களத்தில் வேலைசெய்யும் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். நெடுமான் அஞ்சியின் போர்க்களத்தில் இருந்து உடைந்தனவும் கூர் மங்கியனவுமான ஆயுதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்” என்று ஔவை சிறு எள்ளலோடு சொன்ன பொழுதுதான் தொண்டைமானுக்கு உண்மை உறைத்தது.

ஔவையின் வருகையின் நோக்கமும் புலப்படுவது போல இருந்தது.

ஒரு படையின் ஆயுத பலமோ அதன் ஆட்பலமோ ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை. போர் செய்பவனின் உடல் உளப் பலமும் போர் உத்தியுமே வெற்றியின் நிர்னயிக்கும் காரணிகள் என்பதை தொண்டைமானுக்கு அறிவுறுத்தினாள் ஔவை.

மேலும் நெடுமான் அஞ்சி போருக்கு அஞ்சவில்லை என்பதையும் போர் குடிகளுக்கு துன்பத்தை வருவிக்கும் என்பதனால் தொண்டைமானுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதையும் எடுத்துரைத்தாள் . தொண்டைமானுக்கு ஔவையின் சாதுரியமும் பேச்சு வன்மையும் வியப்பைத்தந்தன. நெடுமான் அஞ்சியுடன் நட்பை வளர்த்துக்கொள்ள அவன் இப்பொழுது தாயாராகவிருந்தான்.

அதியமானின் அன்பின் எல்லை எது என்பதை ஔவை அறியும் சந்தர்ப்பம் ஒன்று அவள் வாழ்வில் வந்தது.

அதியமானுக்கு கிடைப்பதற்கு அரிய நெல்லிக் கனி ஒன்று கிடைத்தது. அது மனித ஆயுளை அதிகரிக்கக் கூடிய மருத்துவ குணமுடையது,

மிகவும் உயரமான அதேபோது மிகவும் செங்குத்தான மலையான கஞ்சமலையில் பாறை இடுக்கினில் அந்த நெல்லி மரம் முளைத்திருந்தது , ஆரம்பத்தில் அந்த அரியவகை நெல்லி பூக்களால் மூடப்பட்டிருக்கும், ஆனால் இடையறாது மலையில் பெய்யும் மழையினால் பூக்கள் உதிர்ந்துவிடும்,ஒருசில பூக்கள் மட்டும் தப்பிப் பிழைத்துக் காய்த்தாலும் அவற்றை மலைச்சாரலில் வாழும் ஒருவகைப் புழுக்கள் தமக்கு உணவாக்கிவிடும் . இந்த நிலையில் வேட்டுவர்கள் பலகாலம் காத்திருந்தாலும் கனிகிடைக்காமலே போய்விடுவது வழக்கமாக இருந்துவந்தது,இந்த ஆண்டு ஒரு கனிமட்டும் மரத்தில் இருப்பதை அதியமான் மீது பேரன்பு பூண்ட நீலன் கண்டான். அவன் ஆபத்து நிறைந்த அந்த மலைமேல் மேல் ஏறி மிகக் கடின முயற்சியின் பின் அக்கனியைப் பறித்து அதியமானுக்கு வழங்கியிருந்தான்..

அதனை அவன் தான் உண்டிருக்கலாம் .அல்லது அவனது மகனுக்காவது வழங்கியிருக்கலாம்.ஆனால் அதனை அவன் ஔவைக்கு வழங்கியது அவளது உள்ளத்தை உருக்கி அழுகையை வரவழைத்தது.நன்றிக்கு மேலான உணர்வு ஒன்று உண்டானால்….. அந்த உணர்வு அவள் உயிரெல்லாம் சென்று பரவுகிறது.

“மனிதரில் பலர் தனது அடையாளத்தை இந்த உலகில் பதித்துவைக்க ஆசைப்படுகிறார்கள். தோன்றில் புகழோடு தோன்ற விரும்புகிறார்கள்.எனது புகழ் இந்த நாட்டில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இன்று தெரிகின்றது என்றால் அதற்கு பாணர்களும் உன் போன்ற புலவர்களுமே காரணம்.காலம் கடந்தும் எம் புகழ் நிலைக்க உன் பாடல்களே வழி அமைத்துத் தரப்போகின்றன. அந்த நன்றியை இந்த நெல்லிக்கனி ஈடு செய்துவிடாதுதான்.எனது சிறுகாணிக்கை மட்டுமே இது.” என்ற அதியமானின் வார்த்தையில் அவனது நேர்மையும் பண்பும் வெளிப்பட்டன.

பெருஞ்சேரல் இரும்பொறை என்ற வேந்தனும் மலையமான் திருமுடிக் காரி என்ற சிற்றரசனும் இணைந்து நடத்திய போரில் அதிய மான் வீர மரணம் அடைகிறான்.

இந்த மரணம் ஔவையை மிகவும் பாதித்தது. நட்பாலும் பாசத்தாலும் தன்னுடன் இணைந்த அதியமானின் மரணம் ஔவையின் வாழ்க்கையையே இருளாக்கிவிடுகிறது,

“அதியமானின் நடுகல்லை மயில் பீலி கொண்டு அலங்கரிக்கிறார்கள். கள்ளை கலத்தில் வைத்துப் படையல் வைக்கிறார்கள்,நாட்டை கொடுத்தபோதே அதனை ஏற்றுக்கொள்ளாத அதியமான் இவற்றையா பெற்றுக்கொள்ளப்போகிறான். எல்லாம் முடிந்துவிட்டது. இனி நான் வாழும் வாழ்க்கையில் இரவுபகல் என்ற வேறுபாடு இருக்கப்போவதில்லை.”

வேதனையால் வெதும்புகிறாள் ஔவை.

அதியமான் செய்தநன்றிக்கெல்லாம் ஔவை கைமாறு செய்துவிட்டாள். அதியமானை தன் பாடல்களால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வாழவைத்துவிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *