ஒரு ஒட்டாத உறவாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 4,067 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் – அவ் அவ்போதுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய் இயைபில்லாத ஒட்டுறவாய்…

அந்தக் காலங்களில் அவன் மிகவும் குதூகலமான வனாய் இருந்தான். சிட்டுக் குருவியைப்போல உற்சாகமாய் சுற்றிச்சுற்றி வந்தான். தனக்குள்ளேயும் நண்பர்களிடையேயும் ஓயாது தர்க்கித்துக் கொண்டே இருந்தான். முகத்தில் வசீகரமும் கண்களில் தீட்சணியமுமாய் உலகமே எனக்காக என்பதான ஒரு அலட்சியத்தோடு ஒரு மிடுக்கோடு, ‘உங்களுக்குத் தெரியாது’ என்பதான ஒரு புன்னகையோடு…

அந்தக் காலங்களில் அவனைச் சுற்றி எப்போதுமே நண்பர்களிலிருந்தார்கள். எல்லோரும் இளைஞர்களென்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலோர் இளைஞர்கள். வாழ்வின் ஆதர்ஸத்தைக் காணத் துடிப்பவர்களாய், உற்சாகம் நிறைந்தவர்களாய், சதா ஏன் ஏனென்று கேட்டுக் கொண்டிருப்பவர்களாய்….அரசியல்வாதிகளாய், இலக் கிய வாதிகளாய் நாடகக்காரராய்…பொருளியல் பற்றி, ஆத்மீகம் பற்றி, வர்க்கமுரண்பாடுகள் பற்றி, இனவிடுதலை யைப்பற்றி பேசுபவர்களாய்…அழகை ஆராதிப்பவர்களாய், இயற்கையை வியப்பவர்களாய், தென்னைமர ஓலையில் பட்டுத் தெறிக்கும் நிலவின் கதிர்களை இரசிப்பவர்களாய்…

அவனுக்கு நல்லாய் ஞாபகம் இருக்கிறது. ஒரு மனோகரமான மாலைப் பொழுது; அவனும் நண்பனுமாய் கடற்கரையில் சிறு நடையில் உலாவி வந்தார்கள். வானம் வண்ணமாய் பிரகாசிக்க மஞ்சள் வெய்யில் பட்டு மினுங்கும் கடலலைகள். சோடி, சோடியாய் கும்பல்களாய், தனிமை கொண்டு திரியும் சனங்கள். தாழம்புதர் மறைவில் சல்லாபிக்கும் இளம் காதலர்கள். அடிக்கடி இரைந்து கொண்டு ஓடும் புகை வண்டிகள்.

அவனும் நண்பனுமாய் ஒரு கருங்கற் பாறையில் அமர்ந்து உலகை வியந்து கொண்டிருந்தார்கள். வாழ்கை – அதன் அழகுகள் – அதன் அவலங்கள்; உருண்டோடும் காலச்சக்கரம்; கிண்கிணி நாதமாய் சிரிக்கும் குழந்தை; பிரகாசிக்கும் குறும்புச் கண்களையுடைய சிறுமி; பார்வையால் சிரித்துக் கொள்ளும் அழகி; அலையில் மிதக்கும் வெளிநாட்டுச் சோடி; தூரத்து வானச் சரிவோடு புள்ளியாய் தெரியும் கப்பல்; “வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தின் பூக்கள்” என்ற கவிஞனின் வரிகள்…

“அதோ தென்னைமர ஓலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர்களைப் பார். இப்படியெல்லாம் அழகுகளைச் செய்த அந்த ஆண்டவன் எத்தனை அற்புதமானவன்”.

திடீரெனக் கேட்ட நண்பனின் குரலால் அவன் துணுக்குற்றான். அசைந்தாடும் தென்னைமர ஓலைகளில் பட்டுத் தெறிக்கும் பால் நிலவின் மின்னும் கதிர்களை அவனும் பார்த்தான். அவன் நெஞ்சில் ஏதோ கிளர்வதாக வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அந்த அனுபவத்தில் மனம் விரிவு கொள்வதாய்…

இப்போது அவையெல்லாம் பழங்கதைகளாகி விட்டன. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை…ஒத்த மனப் போக்கில் இயைபு கொள்ளும் நண்பர்கள்…ஒன்றாய்க் காணும் சமநிலைகள்…

வாழ்வின் நினைவுகள் பசுமையானவைதான் இயந் திரமயமான வாழ்கையோட்டத்தில், பகலென்றும் – இர வென்றும் – உண்பதென்றும் – உறங்கலென்றும் நீளும் சுழற்சியில் சில கணங்கள்…சில நிமிசங்கள்..; அந்த மகோன்னதமான பொழுதுகள் தான் வாழ்வின் அர்த்தங்களா?

இளமையில் எப்போதோ ஒரு நாளில், அவன் வாழ் வின் ஒரு கணத்தில் – முதற்காதல் என்னும் அந்த இரம் மியம் நேர்ந்தது. உலக அறிவு சரிவர வராத பேதைப் பருவத்துக் காதல்; கிராமத்துக் கோயிலின் பவள மல் லிகை மரத்தடியில், கண்ணுக்குள் கண் பார்த்து, முகம் பார்த்து நகையரும்பி, தலை கவிழ்ந்து, நிலம் கீறி மனதைச் சிலுப்பிய காதல்; ஓராயிரம் கனவுகளை அவன் மனதில் கிளர்த்திய காதல்; அவனைக் கவிஞனாக்கிய காதல்.

பாலாய் நிலவு சொரிந்த ஒரு முன்னிரவுப் பொழு தில் தான் அந்த அனர்த்தமும் நிகழ்ந்தது. ஒரு இலக்கிய விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில், தற் செயலாக ஏற்பட்ட சந்திப்பில் சம்பாஷித்துக் கொண்டு திரும்புகையில் தான் அது அவனுக்குப் புலனாயிற்று. ஒரு ஒட்டாத உறவாய்…இயைபில்லாத ஒட்டுறவாய்…துண்டு துண்டாக துணுக்குத் துணுக்காக நீளும் சம் பாஷனை. ‘நான் பெரிய அழகி; வீட்டில் ஒரே பிள்ளை; பெற்றோருக்கும் – பெற்றோரின் பெற்றோருக்கும் ஒரே செல் லம்; ஏராளமான சொத்துப் பத்து”

“நீ அழகனென்று சொல்ல முடியாதவன். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவன். பெரிய படிப்புப் படித்தவனென்றும் சொல்ல முடியாது”

அவனுள் அது நொறுங்கிற்று. இவள் எனக்காகத் தன்னைக் கரைக்க முடியாதவள். நான் என்ற அகங்காரம் மிக்கவள். நான் இவளுக்காக என்னைக் கரைக்க முடியாது. அதற்கான தகுதியையும் இவள் கொண்டிருக்கவில்லை;

வாழ்க்கை அந்தக் கணங்களை நினைவில் விட்டு மீண்டும் நீளத் தொடங்கிற்று. ஒட்டுறவில்லாத வாழ்க்கை – ஒன்றில் தன்னைக் கரைக்கத் தெரியாத வாழ்க்கை தன்னை ஒன்றிற்காக – ஒரு மகத்தான அன்பிற்காகத் தன்னை இழக்கத் தெரியாத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாக அவனுக்குப் பட்டது.

அந்தக் காலங்களில், தன்னில் கரைந்து விரிவு கொண்ட அனுபவங்கள்…அப்போது அவனுக்கு ‘நான்’ என்ற அகங்காரமற்ற நண்பர்கள் இருந்தார்கள் ‘தான்’ என்பதை மறந்த காதலி இருந்தாள். ‘நான்’ என்பதையும் ‘தான்’ என்பதையும் மறக்க அவனாலும் முடிந்தது.

இளமைக் கனவுகளோடு ‘ஏதாவது செய்ய வேண்டும் செய்ய வேண்டும்’ என்ற துடிப்புகளும் பொங்கிய காலமது. ஏதாவது செய்ய வேண்டுமென அவனும் பரபரத் செய்யவேண்டும் தான். அவனின் இளைய நண்பர்களும் பரபரத்தார்கள். கடைசியில் மக்களிடையே கலையைப் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக மூவர் ஒன்றினைந்தார்கள் பெரும்பாலும் ஒத்த கருத்துள்ளவர் களாய் மூவர் இணைய மற்றவர்கள் ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்பட்டு அந்த நெருங்கிய கூட்டிற்குள் அகப்படாமல் செய்யப்பட்டார்கள்.

‘பாலா ஒரு அரசியல் கட்சியின் தீவிர செல்வாக் கிற்கு உட்பட்டவன்.’

‘கோபால் ஓரளவு விஷையம் தெரிந்தவனென்றா லும் எல்லாம் தெரிவதாக பம்மாத்து பண்ணு கிறவன்.’

‘சபா எல்லா விதத்திலும் சரியானவன் தான்; ஆனால் அவன் தூர இருப்பதினால் எங்களுடன் ஒத்துழைக்க முடியாதவன்’.

‘காந்தன் பிரச்சனைக்குரிய காதலொன்றில் ஈடு பட்டு முழுநேரத்தையும் அதிலேயே செலவிடுபவன்.’

அந்த மூவர்களுக்குள்ளும் சிறிய சிறிய முரண்கள் இருந்தன தான். வெள்ளிக் கிழமைகளில் தவறாது பிரார்த் தனைக்குச் செல்லும் நண்பனைக் கண்டு மற்றவர்களுக் கோர் இளக்காரம் நிதர்சனமாய்க் காண்கின்ற அடக்கு ஒடுக்கு முறையிலும் பார்க்க வேறேதெதையோ பெரிது படுத்துபவனாய் இருக்கிறவன் ஒருவன். ஏழைப் பெற்றோர், உடன் பிறந்தோர் பற்றி அக்கறை இல்லாமல், இந்த விடயங்களிலேயே ஈடுபாடு கொண்டு திரியும் இன்னொருவன் என்றாலும்; கலையைப்பற்றிய கண்ணோட்டத்தில், வாழ்க்கையைப் பற்றிய புரிந்து கொள்ளுதலில், நேர்மையில். சத்தியத்தில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள்.

துள்ளும் உற்சாகத்தோடு கூடிய அசுர உழைப்பு. நகரம் நகரமாக கிராமங் கிராமமாக அலைச்சல், அவர்களைப் புரிந்து கொண்டு வரவேற்போர் ஒரு சிலரேயாக மற்றவர்கள் நையாண்டி செய்து நக்கலடித்துச் சிரிப் போரையும், பைத்தியக்காரர் என்று பேசுவோராயும், தமது தனிப்பட்ட வாழ்வில் விருப்பு வெறுப்புக்களில் அத்து மீறிப் பிரவேசித்து விட்டதாக விரோதிப்பவர்களுமாய் …

இந்த நேரத்தில் தான் அவனை அவன் நண்பர்கள் சந்தேகித்தார்கள். செய்யாதனவற்றைச் செய்வதாகவும் சொல்லாதனவற்றைச் சொன்னதாகவும் அவன் பழி சுமத் தப்பட்டான். இயக்கத்தின் நல்லனவெல்லாம் தம்மா லேற்பட்டதாகவும் தீயன வெல்லாம் அவனாலேயே நிகழ்ந்தனவாகவும் அவன் புறமொதுக்கப்பட்டான். அவர்கள் பார்வையில் அவன் வெறுத்து ஒதுக்கப்படத் தக்கவனானான். குறிப்பாக அவனுக்கு மிகவும் பிரியமான தனது நடவடிக்கையினால் அவனை வியப்புக்கொள்ள வைக்கிற அந்த நண்பனே அவனை ஒதுக்கத் துணிந்தான்;

எந்த நேரமும் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கிற அந்த பெரிய நகரத்து வீதியை ஒட்டிய நடைபாதையில் மூவரும் நடந்து கொண்டிருக்கையில், நண்பன் ஆத்திரத்துடன் பேசியது ஞாபகம் இருக்கிறது. கைகளை ஆட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கண்கள் சிவந்து வர, அறுந்து அறுந்து வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு விரலை அவன் முகத்திற்கு முன்னே நீட்டி, நான் என்ற அகங்காரம் தொனிக்க…

அவன் தனிமைப்பட்டுப்போனான். தன்னுள் கிளர்ந்த உணர்ச்சிகளும், உற்சாகங்களும் அடங்கியவனாய் நடைப்பிணமாய் போனான். வட்ட முகமும், குத்திட்டு நிற்கும் தலைமயிரும், உள்ளே ஆழ்ந்திருக்கும் கண்களும் முன்னே துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு பற்களுமாய்…உயிரில்லாத ஓவியம் போலானான்.

என்றாலும் வாழ்க்கை நீண்டு கொண்டுதானே இருக் கிறது. சூரியன் உதிப்பதும் – அஸ்தமிப்பதும், மழை பெய்வதும் – வெய்யில் எரிப்பதும் காற்றடிப்பதும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. பழைய நினைவுகளின் மோகனத்தோடு அவனும் வாழ வேண்டித்தானே இருக் கிறது.

ஒரு சிறிய காலச் சலிப்பின் பின் அவன் மீண்டும் இயங்கத் தொடங்கினான். ஒரு ஒட்டாத உறவாக…எச்சரிக்கையோடுதான் அவன் தன்னைச் சார்ந்தவர் களோடு பழகினான். அதுவே ஒரு உறுத்தலாக இருந்தது. மனம் விட்டுச் சிரிக்க முடியாமலிருந்தது. கலகலப்பாக பேச முடியாமலிருந்தது. போலியாக ஹலோ என்று குசலம் விசாரிக்க வேண்டி வந்தது. மனதில் படும் அபிப்பிராயங்களைப் படபடவென்று கொட்டித் தீர்க்க முடியாம லிருந்தது. எவ்வளவு அற்பத்தனமாக….அட கடவுளே!

என்னால் நடிக்க முடியாமலிருக்கிறது. நான் எவ்வளவு பாவி; கையைக் காலை ஆட்டி, சிரித்துப் பேசி, உண் மையை பொய்யாகக் காட்டி, பொய்யை உண்மையாக்கி பச்சையை சிவப்பாக்கி – சிவப்பை நீலமாக்கி காணாததை கண்டதாகச் சத்தியம் செய்து – கண்டதை காணாததாக மழுப்பி, ‘இப்படிச் சொன்னதை நானே என் இரண்டு காதுகளாலும் கேட்டேனென்று அபிநயித்து, கும்பிட்டுக் கூத்தாடி மாய்மாலம் செய்து மயங்க வைத்து…அட போ நீ வாழத் தெரியாத மனுசனப்பா!

தமிழில் நாடகங்கள் பற்றிய ஒரு கருத்தரங்கு. இயல் பான ஆர்வத்தால் அழையா விருந்தாளியாக அவன். சபை களை கட்டிற்று. வாதப் பிரதிவாதங்கள் தூள் பறந்தது.

“தமிழில் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவசியமில்லை. அவை எமது சுயத்தை அழித்துவிடும்”

“உலக நாடக மேதைகளின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் தமிழிற்கு அவசியம் வரவேண்டும். அவை எமது பிரக்ஞை அற்ற நிலையை உலுப்பி ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்திவிடும்”

“தமிழில் உலக நாடகங்களோடு ஈடுநிற்கக் கூடிய நாடகமெதுவும் இதுவரை எழுதப்படவில்லை”

“வடமொழியில் காளிதாசனின் படைப்புகளையும் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும் பார்க்கும் போது, நாடகமென்ற வடிவமே தமிழ் மொழிக்கு ஒத்து வராது போலும்”

“இல்லையில்லை; அந்தக் கருத்தை அண்மைக் காலத்து மொழி பெயர்ப்பு நாடகங்கள் உடைத்துள்ளன”

அவன் தனது கட்டுப் படுத்தப்பட்ட எச்சரிக்கை யான மனோநிலையை மறந்து விட்டிருந்தான். அவன் மனத்தில் உற்சாகமும், ஆர்வமும் துளும்பிற்று. எதிர்ப்பட்ட நண்பனிடம் இயல்பாகவே சிரித்தான், குசலம் விசாரித்தான். கருத்தரங்கு பற்றிய தனது அபிப்பிராயங் களைச் சொன்னான். நண்பனிடம் அபிப்பிராயங்களைக் கேட்டான். இருவருக்கும் முரணான கருத்துக்களின் போது மறுதலித்தான். ஒத்த கருத்துக்களின் போது மகிழ்ந்தான்.

“என்னகாணும் கை தோளுக்கு வருகுது”

திடுக்கிட்டுப் போனவனாய் – சுயநிலை அடைந்தான். அவனின் கை நண்பனின் தோளில் இருந்தது. கடுகடுத்த முகத்துடன் நண்பன் மீண்டும் கேட்டான்.

“என்னகாணும் கை தோளுக்கு வருகுது”:

“நீர் முந்திச் சொல்லிப் போட்டு இப்ப சொல் லேலை என்று சொல்லுறீர்.”

“நான் அழகி – நீ வடிவற்றவன்”.

‘தென்னை மர ஓலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர்களைப் பார்.’

இனிமேல் அந்த அற்புதமான பொழுதுகள் வரப் போவதில்லை. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை…ஒத்த மனப்போக்கில் இயைபு கொள்ளும் நண்பர்கள்…ஒன்றாய்க் காணும் சமநிலைகள்…

இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் அவ் அவ் போதுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய்…இயை பில்லாத ஒட்டுறவாய்…

– 1981, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *