பூமராங்…(எறிவளைதடு)..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 3,697 
 

காலை மணி 8.00…

‘கடுவன்பூனை…டிராகுலா…முசுடு.. பிரம்ம ராட்சசன்’

எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்..

கம்பெனியின் MD வீரராகவன்தான் அந்த திருநாமங்களுக்கு சொந்தக்காரர்…

இன்றைக்கு அவர் வழக்கத்தைவிட அதிக கோபத்தில் இருந்தார்..

ஒரே மகன் சரண்..அவனை எப்படியும் மருத்துவராக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்..

காலையில் நீட் தேர்வு முடிவுகள் அவருடைய கனவை தவிடுபொடியாக்கிவிட்டதே..

“உன்னெல்லாம் டாக்டராக்கணும்னு நெனச்சேனே. என்னச் சொல்லணும்…

ஸார் இனிமே பைக்கை எடுத்துட்டு ஜாலியா ஊர சுத்துங்க…

தங்கம்..உம்பிள்ளைக்கு மூணு வேளையும் விதவிதமா சமச்சு போடு.. அப்பப்போ வீடுன்னு ஒண்ணு இருக்குன்னு அப்பத்தான் ஐயாவுக்கு நெனவுக்கு வரும்…!!

சக்கர தூக்கலா போட்டு பாயசம் பண்ணி வை…..”

8.30…

படாரென்று டிரைவர் காளமேகம் திறந்த வைத்திருந்த கார் கதவை சார்த்திக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பியவர் மனம் குமுறிக் கொண்டிருந்தது..

9.00..

கேபினில் போய் உட்கார்ந்தவருக்கு டேபிளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது..மண்டை காய்ந்தது…

பெல் சத்தம் கேட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தான் அட்டெண்டர் பாபு..

“ஏம்பா.. வந்ததும் டேபிள்ள ஐஸ் வாட்டர் இருக்கணும்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்..இது உனக்கு கடைசி வார்னிங்..அடுத்தது மெமோதான்”

“சாரி சார்.. இதோ கொண்டு வந்திட்டே இருக்கேன்…”

டேபிளில் எதையோ தேடினார்..

இன்ட்டர்காமை எடுத்தவர்..

“வரதராஜன்… கம் டு மை கேபின் இம்மீடியட்லி…”

வந்தார் மேனேஜர் வரதராஜன்..

பார்க்கப்போனால் வீரராகவனுக்கு பத்து வருஷம் சீனியர்.அவரைவிட பதினைந்து வயது மூத்தவர்..

ஆனாலும் மேனேஜராகவேதான் இருக்கிறார்.

கீழே இருப்பவர்கள் எல்லாம் தாண்டி தாண்டி மேலே போய்விட்டார்கள்..

வந்தவரை உட்காரக் கூட சொல்லவில்லை..

“உங்கள ஏன் பிரமோஷன் பண்ணாம வச்சிருக்காங்கன்னு இப்ப புரியுது..!!”

மரியாதையாக ஆரம்பிப்பாரேயொழிய பின் ஏகவசனத்துக்கு வந்து விடுவார்..!!!

நடுவில் நிறைய பீப் போடும் அளவுக்கு கெட்ட வார்த்தை சரமாரியாக வரும்..

“இன்னைக்கு பத்து மணிக்குள்ள ஃபைல் மேஜைக்கு வரலைன்னா நீங்க அப்படியே வீட்டுக்கு போக வேண்டியதுதான்.

காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் சீட்ட தேச்சிட்டு மாசம் பொறந்தா சம்ளத்த மட்டும் கைநீட்டி கூசாம வாங்கிட்டு போறதுக்குத்தான் வரதுன்னா எல்லோரும் வீட்டிலேயே இருந்துக்க வேண்டியதுதான்..!!!!!

யூ கேன் கோ நௌ…”

வரதராஜன் முகமெல்லாம் சிவந்து விட்டது..எம்.டி. எரிந்து விழுவது ஒன்றும் அபூர்வமில்லை.. ஆனால் இன்றைக்கு கொஞ்சம் அதிகம்தான்..

வீட்டுக்கு எப்படி காரை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார் என்றே தெரியவில்லை..

மாலை 6.00…

பட்டுப்புடவையுடன் வாசலில் நின்ற கற்பகத்தைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது..

அவரது நண்பன் மாதவராவின் அறுபதாம் கல்யாண விருந்து..

“என்னங்க லேட்டு.. எவ்வளவு தடவ போன் போட்டேன்..எடுக்கவே இல்லையே.. சீக்கிரம் கிளம்புங்க… நாம்தான் கடைசியா இருக்கப்போறோம் “

“ஆமா.. விருந்து ஒண்ணுதான் கொறைச்சல்..வேணும்னா டிரைவர வரச் சொல்லி நீ போய்ட்டு வா… நான் வர மூடுல இல்லை…”

“நல்லாருக்கு.. உங்க நண்பர் கல்யாணம்.. எனக்கென்ன தனியா போகணும்னு தலையெழுத்தா…?? நானும் போகல.”

கோபத்துடன் படுக்கையறை கதவை அறைந்து சாத்திவிட்டு பட்டுப்புடவையைக் கழற்றி வீசினாள்…

சரி..சீரியலையாவது பார்க்கலாம் என்று டிராயிங் ரூமுக்கு வந்தவள் அங்கே இரண்டு நண்பர்களுடன் பெரிதாக ஸ்பீக்கரை அலறவிட்டபடி கூத்தடித்துக் கொண்டிருந்த திலீப்பை பார்த்ததும் வெறி பிடித்தமாதிரி கத்த ஆரம்பித்தாள்…!

“ஏண்டா .. திலீப்.எப்படா அம்மா.. அப்பா வெளியே தொலைவாங்கன்னு காத்துட்டிருந்தியா..??

ஏம்பா.. உங்களுக்கெல்லாம் படிச்சு வாழ்க்கையில முன்னேறணும்னு அக்கறையே கெடையாதா…????

உங்களோட சேந்தப்புறம்தான் திலீப் எல்லா சப்ஜெக்ட்லயும் அரியர்ஸ் வச்சிருக்கான்..

போய் படிக்கிற வழியப் பாருங்க.!!

7.00.

அமலனுக்கும் பிரமோத்துக்கும் அவமானத்தால் முகம் வெளிறியது.

“சாரி ஆன்ட்டி.. சாரி திலீப்..”

விருட்டென வெளியே வந்த அமலன்..

“ஏறுடா வண்டில..வெக்கம்..மானமிருந்தா இனி இவுங்க வீட்டுப் படிய மிதிக்க மாட்டேன்…”

ஆத்திரத்தில் பைக்கை ஒரு உதை உதைத்து …கண்மண் தெரியாமல் வண்டியை ஓட்டினான்…

“ஏய்..அமலா.. ஓவர் ஸ்பீடு போறடா.. கூல் மச்சான்…”

அமலன் காதில் ஒன்றும் ஏறவில்லை…

வண்டி தாறுமாறாக ஓடத் துவங்கியது..

“டேய்… டேய்..என்று பிரமோத் கத்துவதற்கும் எதிரே வந்த புத்தம்புது ஹீயுண்டாய் கிரேட்டா கார் அவன் மீது மோதுவதற்கும் சரியாக இருந்தது..

காரை ஓட்டி வந்தது ஒரு இளம்பெண்..இருபதில் இருந்தாள்..

நல்லவேளை சடன் பிரேக் போட்டதில் பெரிய விபத்திலிருந்து இருவருமே தப்பித்தார்கள்..

ஆனால் அந்தப்பெண் மயக்கம் போட்டுவிட்டாள்..

காருக்கு அங்கங்கே சிராய்ப்புகள்.. கண்ணாடியில் விரிசல்..

அமலனும் பிரமோத்தும் லேசான காயத்துடன் உயிர் தப்பியது அதிசயம்தான்..

கூட்டம் கூடி விட்டது..

தப்பு அமலன் பேரில்… ஒருவன் அமலன் சட்டைக்காலரைப் பிடித்தான்..

உடனே வந்த போலீஸ் கேஸ் புக் பண்ணிவிட்டார்..

யாரோ ஒரு பரோபகாரி ஆம்பலன்சுக்கு போன் பண்ண உடனே அந்தப் பெண்ணைத் தூக்கி போட்டுக்கொண்டு பறந்தது ஆம்புலன்ஸ்..

அமலனும் பிரமோத்தும் போலீஸ் கஸ்டடியில்…

அன்றுமுழுதுமே மூடவுட்டான வீரராகவன் வீட்டிற்குள் நுழைந்ததும் ..

8.00…

“ஆறு மனமே ஆறு” என்று அவரிடம் வேண்டி கேட்டுக் கொண்டது அவரது மொபைல்…

“என்ன…ஆக்ஸிடென்ட்டா..ஜீவன் ஹாஸ்பிட்டலா… உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே..இதோ உடனே கிளம்பி வரேன்…

தங்கம்..சீக்கிரம் வா…!!! சினேகா கார்ல சின்ன ஆக்ஸிடென்ட்..!

உடனே அலறாத..லேசான மயக்கம்தான்..!

உன் தடிப்பய வீட்ல இருக்கானா..?? இல்ல வெளிய சுத்தக் கிளம்பிட்டானா…?

இன்னைக்கு முழிச்ச நேரமே சரியில்லை…”

புலம்பிக் கொண்டே வண்டியில் ஏறுகிறார் வீரராகவன்…!

காலை..7.30..

தேன்மொழி எப்போதுமே உற்சாகம் நிறைந்த பெண்..

‘அவள் செந்தமிழ் தேன்மொழியாள்…..நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள். ‘

ஆனால் இன்று வழக்கத்தைவிட கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம் அவள் வைத்த மஞ்சள் ரோஜோ ஒரு மொட்டு விட்டதுதான்…

சின்னச் சின்ன விஷயம் போதும்.அவளை மகிழ்விக்க.. அவள் மகிழ்ச்சியைத் தன்னைச் சுற்றிலும் பரவ விடும் கலையைக் கற்றவள்..

‘பூஸ்ட்’ என்றுதான் அவளைச் செல்லமாக தோழிகள் அழைப்பார்கள்….

காலையில் கீச் கீச்சென்று கத்தும் தவிட்டுக் குருவி கூட்டம் , மார்கழி மாத மெல்லிய பனித்திரை, வாசலில் விசாலி போட்ட தாமரைப்பூ கோலம், ‘ நான் எங்கே கண்டுபிடி ‘ என்று மறைந்து கொண்டு மணம் பரப்பும் செண்பகப்பூ , பால்காரனின் மணிச்சத்தம் , அன்று வந்த தினசரியின் முரமுரப்பான பக்கங்கள்…
எல்லாம்.. எல்லாம்….

தேன்மொழியைப் பார்ப்பவர்கள் அவளை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கலாம்.

ஆனால் அவளை முழுதும் அறிந்தவர்களுக்குத தெரியும் அவள் நடந்து வந்த பாதை எத்தனை கரடு முரடான , கல்லும் முள்ளும் நிறைந்த பாதை என்று..

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வளர்ந்தவள்..

திருமணமான ஒரு வருடத்தில் எட்டுமாத மலர்கொடி வயிற்றில் இருக்கும் போது விபத்தில் கணவனைப் பறிகொடுத்தவள்..

ஐந்து வருடங்களுக்கு முன் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவள்..

தன்னந்தனியாக நின்று மகளை பையோடெக்னாலஜி படிக்க வைத்து இப்போது அவளின் எதிர்கால வாழ்க்கை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு…..

8.30..

ரேவதியிடமிருந்து ஃபோன்..

“தேன் மொழி.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..ஃப்ரீயா இருக்கியா..?”

“சொல்லுடா..உனக்கில்லாத உதவியா??”

“இன்னைக்கு நர்சிங் ஹோம்ல நான் இருந்தே ஆகணும்… அம்மாவ பாத்துக்கிற நர்ஸ் வரல… இன்னைக்கு ஒரு நாள் அம்மா கூட இருக்க முடியுமா….???”

“வித் பிளஷர் .. கரும்பு கசக்குமா..இப்பவே வரேன்…”

அரை மணியில் ரேவதி வீட்டில் இருந்தாள் கனிமொழி…

9.30

கருணாம்பா தொன்னூறில் இருப்பவள்… படுக்கையில் விழுந்து இரண்டு வருடமாகிறது.. தேன்மொழி என்றால் உயிர்….

ரேவதி அப்படியே கனிமொழியைக் கட்டிக்கொண்டாள்…
உன்ன மாதிரி ஃபிரண்ட் கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..

10.00

ரேவதி நிர்வாக மேலாளராய் வேலை செய்யும் மருத்துவ மனையின் OP அன்று நிரம்பி வழிந்தது..

அவசர அவசரமாக வெள்ளை சீரூடையை மாட்டிக் கொண்டு வந்தவள் சுருசுருப்பானாள்.

12.30

பார்க்க வேண்டிய ஃபைல்களப் பார்த்து முடித்தாள் …

அங்கு மடிசார் புடவையுடன் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியைப் பார்த்தாள்..

பக்கத்தில் தலையில் கட்டுப்போட்ட பத்து வயது சிறுவன்..

“பாட்டி.. ரொம்ப நேரமாச்சு போலயே நீங்க வந்து.???”

“ஆமாம் குழந்தை..எம்பேரன் பிரகலாதன்.விளையாடும்போது தலைல பந்து பட்டு ரத்தமா கொட்டித்து.

பக்கத்து ஆஸ்பத்திரில காட்டி கட்டு போட்டுண்டு வந்தேன்…

அவாதான் பெரிய ஆஸ்பத்திரில காண்பிக்கணும்னு சொன்னா..

இந்த சமயம் பார்த்து எம்பிள்ள , மாட்டுப்பொண் ரெண்டு பேரும் வேல விஷயமா வெளியூர் போயிருக்கா…

பிள்ளை ஹைதராபாத்தில்..!!!

இங்க நானும் மாட்டுப்பொண் காஞ்சனாவும்..பிரகலாதும்..

அவ நாளைக்குத்தான் டில்லியிலிருந்து வரா…தகவல் சொல்லிட்டேன்..

நான் இந்த மாதிரி தனியா மாட்டிண்டதேயில்ல… என்ன பண்ணனும்னு ஒண்ணுமே தெரியல..யாரப் பாக்கணும்னும் புரியல..!!!!

“கவலைப்படாதீங்க பாட்டி.. எல்லாம் நான் பாத்துக்கிறேன்…”

தேன்மோழியைக் கூப்பிட்டு விவரத்தை சொன்னாள்…

3.30

ரேவதி ரிசப்ஷனிலிருந்த சோனாவிடம் தாழ்ந்த குரலில்,

“என்ன சோனா..பாட்டிய இப்படி காக்க வைக்கலாமா..??

பையனுக்கு உள்ள ஏதாவது அடிபட்டிருந்தா எமர்ஜென்சி கேசாயிடாதா….?”

“சாரி .மேம்.. இன்னைக்கு ஓவர் ரஷ்.. இப்பத்தான் கடைசி பேஷன்ட்டோட ஃபார்ம் பூர்த்தி பண்ணி உள்ள அனுப்பிச்சேன்..

பாட்டி பேசாமலிருந்ததால யாருக்கோ வெயிட் பண்றாங்கன்னு ..!!!
ஆனாலும் தப்புதான்…!!!! சாரி…”

எனிவே..டோன்ட் ரிப்பீட் இட் அகெய்ன்..இங்க வர ஒவ்வொரு நோயாளியோட உயிரும் விலைமதிப்பில்லாதது. எப்பவும் நினைவில இருக்கட்டும்…”

“பாட்டி வாங்க…”

ரேவதி எல்லா ஃபார்மாலிட்டியையும் முடித்துக் கொடுத்தாள்…

5.00

பேரனை இரண்டு நாட்கள் ஆப்ஸர்வேஷனில் வைக்க வேண்டியதாயிற்று..

வேலை முடிந்ததும் ரேவதி பிரகலாதை பார்த்துக் கொள்ள , பாட்டி டிரைவருடன் போய் வேண்டிய துணிமணிகளை எடுத்துக் கொண்டு வந்தாள்..

தேன்மொழி மட்டும் இல்லாமலிருந்தால் …????

காலை 6.00

பிரகலாதின் அப்பா குருமூர்த்தி ஐந்து மணி ஃபிளைட்டைப் பிடித்து ஹைதராபாத்திலிருந்து உடனே வந்து விட்டான்..

ரேவதி அவன் வரும்வரை காத்திருந்து அப்புறம்தான் வீடு திரும்பினாள்..

7.30

“தேன்மொழி.. இன்று போல நான் என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை. எல்லாம் உன்னால்தான்…!!!

நடந்ததை ஒரு வரி விடாமல் சொல்லிமுடித்தாள்..

அம்மாவ பாத்துக்க நர்சும் வந்தாச்சு..வா என்னோட நர்சிங் ஹோமுக்கு.. குருவுக்கு உன்னைப் பாக்கணுமாம்.”

9.30

நல்லவேளை..பிரகலாதுக்கு ஒன்றும் சீரியசாக இல்லை..

குரு ரேவதிக்கு திரும்ப திரும்ப நன்றி சொன்னான்..

“குரு.. இவளால் தான் இந்த உதவியை பாட்டிக்கு என்னால் செய்யமுடிந்தது..”

குரு ஹைதராபாத்திலுள்ள மருந்துக்கம்பெனியின் நிர்வாக மேலாளர்..

“மலர்கொடி… வித்தியாசமான பெயர்..சமீபமா கேள்விப்பட்டமாதிரி….!!

நியாபகம் வந்திட்டுது..

போனவாரம் நடந்த கேம்பஸ் இன்டர்வியூல ஷார்ட் லிஸ்ட் ஆகியிருக்கா.. ரொம்பவே புத்திசாலி.. எங்க கம்பெனிக்கே ஒரு அஸெட்டா இருப்பா…”

மாலை 6.00

“ஹலோ அம்மா.. வீட்டுக்கு திரும்பிட்டீங்களா..?? ரேவதி ஆன்ட்டியும் பாட்டியும் நல்லா இருக்காங்களா..??

பிரகலாதுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே…??

வெரி குட் நீயூஸ் ஃபார் யூ…!

நான் கேம்பஸ் இன்டர்வியூ போனேனில்ல… !

‘தன்வந்திரி ஃபார்மா’

அதில நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சிருக்கு.. ரொம்ப கவுரவமான போஸ்ட்.. இன்னும் ஒரு மாசத்தில அஃபீஷியல் லெட்டர் வந்திடும்..

உன் கனவு நனவாகப்போகுது அம்மா..

மலர்கொடியிடமிருந்து வந்த செய்தி தேன்மொழிக்கு தேனாய் இனித்தது….

அவளது மஞ்சள் ரோஜா இன்றைக்கு பூத்து மலர்கொடியின் முகத்தைத் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது…….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *