நீரு பூத்த நெருப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 3,063 
 

ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு வீட்டிற்குள் வந்து, கதவைச் சாத்தினார்கள்.

கால்மணி நேரத்தில் காலிங் பெல்லிற்குப் பதிலாக கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ராமநாத சாஸ்திரியே… நடன நிகழ்ச்சிக்குத் தயாரானவர்போல், பின்புறம் வேட்டியைத் தார்பாய்த்து, முன்புறம் விசிறிபோல் சுங்கு விட்டு – அதாவது மடிப்பிட்டு, பூணுாலைப் பாதி மறைத்து, மீதியைக் காட்டும் துண்டும், முன்வழுக்கையும், பின்குடுமியுமாய் காட்சியளித்தார். அவரைப் பார்த்ததும், தம்பதியர் பரவசப்பட்டார்கள். பக்கத்து மெயின்ரோட்டில் உள்ள ஏழைப் பிள்ளையாரின் அர்ச்சகர். சுபிட்சமாய் இருப்பீங்கோ… ஒஹோன்னு வாழ்வீங்கோ…’ என்று பக்தர்களை உற்சாகப்படுத்துகிறவர். அதேசமயம், யாராவது இடக்கு மடக்காகக் கேட்டால், இந்த வேலையெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதிங்கோ… எனக்கு குஸ்தியும் தெரியும்…’ என்று சவால் பாணியில் சொல்கிற மனிதர். தட்டில் விழும் ஒரு பைசாவைக்கூட வீட்டிற்குக் கொண்டு போகாதவர். எவர் வீட்டிற்கும் போகாத அப்பேர்பட்டவர், வாக்களித்ததுபோல் வந்ததில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு, பிறகு சாஸ்திரியை போட்டி போட்டு உபசரித்தனர்.

வாங்க சாமி! நீங்க எங்கே வரமாட்டிங்களோன்னு பயந்து போயிட்டோம்.”

“ஆமாம் சாஸ்திரி ஸார். நீங்க வரமாட்டிங்கன்னு நினைத்து ஆபீஸ் போறதுக்கு ஆயத்தம் ஆனேன். அதுக்குள்ள வந்துட்டிங்க..”

ராமநாத சாஸ்திரி, ஒரு கணம் துர்வாசரானார். மறு கணம் விசுவாமித்திரர்போல், அவர்களை, வயிறு எக்கிப் பார்த்தார். அடுத்த கணம் வசிட்டரானார். பின்னர், இந்த மும்முனிகளாலும் ஆட்கொண்டவர் போல், ஆண்டவ- அகிலா தம்பதியை ஆட்டிப்படைத்து பேசுவதுபோல் பேசினார்.

“இதுக்குத்தான் நான் எவர் வீட்டுக்கும் வரமாட்டேங்கிறது. ஒரு சொல்லு சொன்னால், அந்த சொல்லுலயே நிற்கிறவன் நான். இல்லாட்டி சொல்லமாட்டேன். நீங்க சொல்றதைப் பார்த்து, அழுவுறதா, சிரிக்கிறதான்னு நேக்கு புரியல…”

ஆண்டவனும் அகிலாவும், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சாஸ்திரியை யார் சிரிக்க வைப்பது, என்று அந்தக் கண்கள் பேசிக்கொண்டன. அகிலா, முந்திக் கொண்டாள்.

“உட்காருங்க சாமி… மோரா… ரசனாவா….”

“ரெண்டும் வேண்டாம். மொதல்ல வந்த காரியத்தைப் urrrrt itrt.”

“அதுல உட்காருங்க சாஸ்திரி ஸார்.”

ராமநாத சாஸ்திரி, ஆண்டவன், சுட்டிக்காட்டிய ஒற்றைச் சோபா இருக்கையில் உட்காராமல், அந்த வீட்டின் பளிங்குத் தரையில், இரண்டுக் கால்களையும் விரித்துப்போட்டு, இரண்டு கரங்களையும் முதுகிற்குப் பின்னால் முட்டுக்கொடுத்து, உட்கார்ந்தார். மேலே எகிறிய மின்விசிறியில், அவரது நடுத்தலை முடி, முன்தலை பொட்டல் மேட்டில், கதிரடிப்பதுபோல், சாய்ந்து சாய்ந்து மோதியது. அந்தம்மா, பதறிப் போனாள்.

“என்ன சாமி நீங்க… சோபாவுல… உட்காருங்கோ…”

“என் வசதிப்படி, என்னை விட்டுடுங்கோ… நேக்கு இதுதான் வசதி. இந்த வேனா வெயிலுல நடந்த களைப்புல, இப்படி காலு கைய விரித்துப்போட்டு, ஒடம்பை நனைத்த வேர்வைய மின்விசிறி, துளித்துளியாய் ஆவியாக்கிறதுல இருக்கிற சுகமே தனி. உங்க வீடு என்கிறதுனால, இப்படி உரிமையோடு எசகு பிசகாய் உட்காருறேன். பிறத்தியார் வீட்டுல, அது பிராமணாள் வீடா இருந்தாலும், ஆசாரமாத்தான் உட்காருவேன். ஏன் நிக்கிறேள்? நீங்க பாட்டுக்கு சோபாவுல உட்காருங்கோ. மரியாதையும் அன்பும் மனசுலதான் இருக்கணும். இந்த ஏழைப் பிராமணன் மேல, அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்குன்னு நேக்குத் தெரியும்”

உச்சி குளிர்ந்த ஆண்டவன், சாஸ்திரி சாருக்கு முன்னால் தரையிலேயே உட்கார்ந்தார். இதற்கு மரியாதை மட்டும் காரணமில்லை. அந்த வேணலில், சோபா இருக்கையின் இலவம் பஞ்சு சூட்டைவிட, அந்தப் பளிங்குத்தரை கிளுகிளுப்பாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். இந்தச் சமயத்தில், அந்தம்மா ஒரு வெள்ளி டம்ளரில் மோர் கொண்டு வந்தாள். அதை, சாஸ்திரி கைநீட்டி, வாங்கப் போனபோது, அதைக் கொடுக்க மறந்தவளாய், கணவனைப் பார்த்து செல்லக் கத்தினாள்.

“ஏங்க! உங்களுக்கு சென்ஸ் ஆப் டிசிபிலின் இருக்குதா? பாருங்க சாமி… அரைமணி நேரத்துக்கு முன்னால டயனால் போட்டுட்டு, இந்நேரம் கேப்பைக்கூழ் குடிச்சிருக்கணும். நீரழிவு நோய் இருக்கிறதே இவருக்கு மறந்து போகுது. சாமீ”

“இந்தம்மா மட்டும் என்னவாம்… பிளட் பிரஷருக்கு இந்நேரம் மாத்திரை சாப்பிட்டிருக்கணும். என்னை கவனிக்கிறதுலயயே, தன்னை கவனிக்க மாட்டக்காள்… காந்தாரி கண்ணை கட்டிக்கிட்டது மாதிரி, நான் மருந்து சாப்பிட்டால்தான், இந்தம்மா சாப்பிடுவாளாம். ஆபீஸுக்குப் போன்போட்டு, என்னோட உதவியாளர்கிட்ட, நான், சாப்பிட்டேனான்னு கன்பார்ம் செய்த பிறகுதான், இந்தம்மா சாப்பிடுவாங்க.”

“இவர் மட்டும் என்னவாம் சாமி… காபி கொண்டு வந்து,

முகத்துக்கு ஆவி பிடிக்கிறது மாதிரி, எதிரே நீட்டிக்கிட்டே என்னை எழுப்புவார்.”

அறுபத்தைந்தைத் தாண்டிய சாஸ்திரி, ஐம்பதைத் தாண்டாத அந்தத் தம்பதியரை நோக்கி, ஆசிர்வாதப் பார்வையில் பேசினார்.

‘ஸ்ரீராமனுக்குக் சிதை, நளனுக்குத் தமயந்தி, சிவனுக்கு சக்தி, இந்த மானுட ஆண்டவனுக்கு, இந்த அகிலாம்மா.”

உடல் நேர்த்தியாலும், புது நிறத்தாலும், உயரத்தாலும், அகலத்தாலும் ஒன்றுபட்டுத் தோன்றும், அந்த ஜோடியை, ஒரு தந்தைக்குரிய நிலையில், கண்களால் அள்ளிப் பருகிய சாஸ்திரி, அப்படிப் பருகியதை, வாய் வழியாய் அன்புப் பிரவாகமாய் வெளிப்படுத்தினார்.

“நான் உங்களுக்கு எப்பவும் சொல்றதை, இப்பவும் சொல்றேன். நீங்க தீர்க்காயுசா இருப்பேள். ரத்தக் கொதிப்போ… நீரழிவோ… இஸ்கிமாவோ… அல்சரோ… உங்களை ஒன்றும் செய்யாது. எல்லாம் நம்ம பிள்ளையார் பார்த்துக்குவார். சரி… ஜாதகங்களை எடுத்துட்டு வாரேளா?…”

“ஒரு சிறு விண்ணப்பம் சாமி. பிள்ளையார் பார்த்துக்குவார்தான். அப்படி அவர் பார்த்துக்கிறதுக்கு, நாமும் தகுதியாய் இருக்கணுமே. இவருக்கு கேழ்வரகு கஞ்சி காய்ச்சி, நல்லா ஆறிட்டுது. ஒரு மூணு கிளாஸ் போட்டுட்டு வந்துட்டார்னா… அப்புறம் ஆற அமரப் பார்க்கலாம். தயவுசெய்து, கொஞ்சம் நேரம். நீரழிவு நோய்க்கு நாம ஒத்துழைப்பு கொடுத்தால்தான், அது நமக்கு ஒத்துழைப்பு கொடுக்குமுன்னு, டாக்டர் சொல்றார்.”

ராமநாத சாஸ்திரிக்கு, கோபமான கோபம். அந்தம்மா, பிள்ளையாரை விட, டாக்டரை உசத்தியாய் நினைக்கிற கோபம். தன் வீட்டிலும் காத்திருக்கும் கேப்பைக்கூழ், இந்நேரம் கட்டியாகி இருக்குமே என்ற பசிக்கோபம். விசுவாமித்திரர்போல் கட்டாகவும், துர்வாசர்போல் ரைட்டாகவும் பேசப்போனார். அதற்குள், அந்தம்மா ஒடிப்போய், கணவருக்கு கேழ்வரகுக் கஞ்சி கொண்டு வந்த கையோடு, இன்னொரு கையில் ஒரு தட்டு நிறைய நாகப்பழங்களைக் கொண்டுவந்து, சாமியின் வயிற்றுக்கு எதிர்ப்பக்கம் வைத்தபடியே, சாப்பிடுங்க சாமி. பசியும் அடங்கும். நீரழிவுக்கும் நல்லது. என்று ஆகார ஆற்றுப்படுத்தல் செய்தாள்.

சாஸ்திரியின் கடுகடுப்பு, புன்னகையானது. அந்தச் சமயத்தில், வேண்டாவெறுப்பாய் கேழ்வரகுக் கஞ்சியை குடித்தபடியே, அதன் துகள்கள் உடம்பெங்கும் சிந்தும்படி, ஆண்டவன், சாஸ்திரி சாரிடம் முறையிட்டார்.

“எப்போ பார்த்தாலும், விரதம்… விரதமுன்னு உடம்பை நோகடிக்காள் சாஸ்திரி ஸ்ார். இவள் விரதத்தால, எனக்கு சாப்பிட மனசே போகமாட்டேக்கு. நீங்களாவது புத்தி சொல்லுங்க..”

“இந்தா பாருங்கம்மா! ‘உடலார் அழிந்தால்… உயிரார் அழிவர். ஊனுடம்பு ஆலயம்… உள்ளம் திருக்கோயில். இப்படி நான் சொல்லல. திருமூலர் சொல்லியிருக்கார். உங்களுக்கோ ரத்தக் கொதிப்போடு, அல்சரும் இருக்கு. அதுக்கு விரதம் ஒத்துக்காது. காலையிலும் மாலையிலும் பிள்ளையாரை மானசீகமாய் நினைத்து, தலையில மூணு குட்டு குட்டிக்கங்கோ. அது எல்லா விரதங்களையும்விட மேலானது.”

“ஓங்க உத்தரவு சாமி.”

கேழ்வரகுக்கூழ், பாத்திரத்தின் அடிவாரத்தைக் காட்டியபோது, நாகப்பழங்களை சாஸ்திரி, கொட்டைகளாக்கிய போது, சம்ையலறைக்குச் சென்று, ஒரு குலை திராட்சைப் பழங்களைத் தின்றுவிட்டு, உள்ளறையில் போய் ஒரு காகிதக் கத்தைகளை எடுத்துக்கொண்டு, சாஸ்திரி முன்னால் உட்கார்ந்த கணவனுக்கு அருகே உட்கார்ந்தபடியே, அகிலா, ஒருபாடு அழாமல் அழுது தீர்த்தாள்.

“எங்கப் பையனுக்கு பெண் தேவை’ன்னு, இவரை பத்திரிகையில விளம்பரம் போடச் சொன்னேன். நானே எழுதிக் கொடுத்தேன். ஆனா, இவரு என் எழுத்துல குளறுபடி பண்ணிட்டடார்… சாதிப்பேரை முதல்ல போடாமல், சம்பள வகையறாக்களைப் போட்டார். பொதுவா, பெண்ணோ, பிள்ளையோ வச்சிருக்கவங்க, பத்திரிகை விளம்பரத்துல, முதல்ல சாதிப்பேர் இருக்குதான்னுதான் பார்ப்பாங்களாம். அதுக்குமேல பார்க்க மாட்டாங்களாம். இதனால பத்தே பத்து ஜாதகம் மட்டும்தான் வந்தது சாமி…”

“ஆனா, ஒங்க கையில நிறைய இருக்குதே.”

“அதை ஏன் கேட்கிறீங்க சாஸ்திரி ஸார்? இந்தக் கல்யாணப் புரோக்கருங்க, அடிக்கிற கூத்திருக்கே… பெருங்கூத்து… இவங்க ஆபீஸ்ல, ஆயிரம் ரூபாய் கட்டணும். அவங்களே விளம்பரம் போடுவாங்க. அவங்ககிட்ட விளம்பரத்தை நம்பி வருகிற, இருபது பேர்கிட்ட, தலைக்கு ஆயிரம் ஆயிரமாய் கரந்துடுவாங்க. லாரி புரோக்கரை நம்பலாம். வீட்டு புரோக்கரை நம்பலாம். ஆனால், இந்த கல்யாண புரோக்கர்களை மட்டும் நம்பக்கூடாது. கல்யாணம் நடத்துறது நாம். இவங்க இடையில புகுந்து, வரதட்சணைக்கு மேல பணம் அடிக்கிறாங்க. விளம்பரத்துல ஜாதகம் குறையா வந்ததுனால, நாங்களும் ஒரு புரோக்கர்கிட்ட ஆயிரம் ரூபாய் அழுது, எங்களுக்கு தேவையான ரெண்டு ஜாதகத்தை எடுத்து வந்தோம்.”

“அவங்களும் பிழைக்க வேண்டாமோ? நான்தான் அசடு. ஆனால், அந்த அசட்டுத் தனத்திலயும் ஒரு சுகம். சரி… ஜாதகத்தை நீட்டுங்கோ. வீட்டுக்குள்ள கொண்டுபோன மோர் டம்ளரையும் எடுத்தாங்ாே.”

“அய்யய்யோ… நானும் அசடு சாமி. கொண்டு வந்ததை கொண்டு போயிட்டேன் பாருங்க. ஏங்க… உங்களைத்தான், சாப்பிட்ட பிறகு, மாத்திரைங்கள போட்டுக்கணுமே. ஏன் போடல?”

“நீதானே எனக்குத் தருவே.”

“இவர் சரியானக் குழந்தை. ஒரே ஒரு நிமிடம் பொறுங்க சாமி…”

சாஸ்திரி, பல்லைக் கடித்தபோது, நிதானமாய் உள்ளறைக்குள் நடந்து, ஒரு பாலித்தின் பையை உப்பவைத்த மாத்திரைகளை கணவரிடம் நீட்டிவிட்டு, அதே நடைவேகத்தில், சமையலறைக்குப்போய், வெண்ணெய்யாய் திரண்ட மோர் டம்ளரை, சாஸ்திரியிடம் நீட்டினாள். சாஸ்திரியும், அந்த மோரை பார்க்காமலேயே குடித்துவிட்டு, உதட்டில் ஒட்டிய வெண்ணைய் திரட்சியை, துடைத்தபடியே, “சரி. பார்ப்போமா…” என்றார்.

அகிலா, தயாராய் வைத்திருந்த அந்தக் காகிதக் கத்தைகளை, தர வாரியாகப் பிரித்தாள். பெரிய படிப்பும், பெரிய இடமும் முதலிடம்… இதைப்போல், டி.டி.பி.யில் எடுத்த காகிதங்கள், சுமாராக இருந்தாலும் இரண்டாவது இடம்… பெரிய இடமாக இருந்தாலும், பேனாவால் எழுதப்பட்ட காகிதங்களுக்கு கடைசி இடம். எழுதுகிறதுக்கே கஞ்சத்தனம் பிடிக்கிறவங்க, மாப்பிள்ளைக்கு என்னத்த செய்யப் போறாங்க.

கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருந்த ஒரு காகிதத்தை எடுத்த சாஸ்திரி, அதற்குக்குரிய பெண்ணின் ஜாதகத்தை உற்றுப் பார்த்தார். ஆண்டவன்.அகிலா மகனின் ஜாதகம், அவருக்கு அத்துபடி என்பதால், அதை ஒப்புக்குப் பார்த்தார். பிறகு, இது ஒத்துவராது என்றார். ஆண்டவன், மன்றாடுவதுபோல் விவரம் கூறினார்.

“பெரிய இடம் சாஸ்திரி ஸார். கார் இருக்குது, பங்களா இருக்குது… நூறு பவுன் நகை போடுறதா சொல்லியிருக்காங்க… வாரிசு இல்லாத குடும்பம் வேற…”

“இந்தாப் பாருங்கோ மிஸ்டர் ஆண்டவன்! உங்க விருப்பத்துக்கு நான் பார்க்க முடியாது. ஜாதகம் என்ன சொல்லுதோ, அதைத்தான் சொல்ல முடியும். இல்லாட்டி, வேற ஆளை பார்த்துக்கங்கோ.”

“இவரு தப்பா பேசிட்டார். ஆர்வக் கோளாறுதான் காரணம். மன்னிச்சிடுங்க சாமி.”

“ஆர்வம் இருக்கணும். ஆனால், கோளாறு இருக்கப்படாது. இந்தப் பொண்ணு பெரிய இடமாய் இருக்கலாம். ஆனாலும், இது திருவாதி நட்சத்திரம். இதற்கான மிருகம் நாய். ஒங்க பையனோட நட்சத்திரம் கேட்டை. இதற்கு உரிய மிருகம் மான். நாயும் மானும் பகை மிருகங்கள். அப்புறம் ஒங்க இண்டம்.”

அகிலாவின் ஏமாற்றம், முகத்தில் வேர்வைத் துளிகளாக வெளிப்பட்டன. ஆனாலும், இந்தப் பிள்ளையார் குருக்கள் சொல்லைத் தட்டமுடியாது. இவர் சொன்னால், சொன்னபடி நடக்கும்.

ராமநாத சாஸ்திரி, அந்தக் காகிதக் கத்தைகளை, ஒவ்வொன்றாகப் பார்த்தார். நான்கைந்து ஜாதங்களை கழித்துக் கட்டிவிட்டு, இன்னொன்றை எடுத்துப் பார்த்தார். அதிக நேரமாய் பார்த்துக்கொண்டே இருந்தார். அகிலா-ஆண்டவன் முகங்களில், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே… அதனை நிதானமான வார்த்தைகளாக ஆண்டவன் வெளிப்படுத்தினார்.

“இந்த ஜாதகம் நல்லா இருக்குதோ சாஸ்திரி ஸ்ார். நல்லாத்தான் இருக்கும்.”

“நல்ல ஜாதகந்தான். ஒங்க பையனும், இந்தப் பொண்ணும் நகமும் சதையும் மாதிரி நன்னா இருப்பாள். ஆனாலும், ஒங்க வீட்டுக்கு ஆகாது.”

“அவங்க நல்லா இருந்தா போதாதா சாமி? அதுக்குமேல என்ன வேணும்?”

“ஏடாகோடமாய் பேசாதம்மா… எழுந்து போய்க்கிட்டே இருப்பேன். இது ஆயில்ய நட்சத்திரம். இந்தப் பொண்ணு ஒங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே, நீங்க ரெண்டு பேரோ, அல்லது ரெண்டுல ஒருத்தரோ மண்டைய போட்டுடுவேள். சம்மதமா?”

சம்மதமில்லை என்பதுபோல், தம்பதியர், சிரித்து மழுப்பியபோது, சாஸ்திரி, ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து, அதற்கு நேர்முக வர்ணனை கொடுத்தார். ஒன்று நாகதோஷமாம்… இன்னொன்று செவ்வாய் தோஷமாம்… மற்றொன்னு ஏக நட்சத்திரமாம். இப்படி ஒவ்வொன்றையும் நிராகரித்துக்கொண்டே போன சாஸ்திரி, அவர்களது முகத்தில் ஏற்பட்ட கலக்கத்தைப் பார்த்துவிட்டு, ஆறுதலாய்ப் பேசினார்.

“நான் இப்படி வேண்டாமுன்னு சொல்றத தப்பர் நினைக்காதேள். ஓங்கமேல இருக்கிற விசுவாசந்தான் அப்படி பேசவைக்குது. உங்க பிள்ளாண்டான், என்னோட பிள்ளாண்டான் மாதிரி. மணமக்களுக்கு தினம், கணம், மகேந்திரம், திர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், வேதை, நாடி… இப்படி பத்துப் பொருத்தங்கள் இருக்கணும். எல்லாம் இருக்கிறது கஷ்டம். ஆனால், பத்துக்கு ஏழு இருந்தால், உத்தமம். ஆறு இருந்தால், மத்திமம். ஐந்தோ அல்லது ஐந்துக்கு கீழேயோ இருந்தால், அதமம்..”

சாஸ்திரி, பேசி முடித்துவிட்டு, இன்னொரு காகிதத்தை எடுத்தார். அந்தச் சமயத்தில், ஒரு இளைஞன் உள்ளே வரலாமா வேண்டாமா என்பதுபோல், நடைவாசலுக்கு உள்ளே ஒரு காலும், வெளியே ஒரு காலுமாக நின்றான். அகிலா கேட்டாள்.

“என்னடா. வேளகெட்ட வேளையில.”

“நீங்கதானம்மா வரச்சொன்னிங்க… அயர்ன்பண்ண துணி இருக்குன்னு சொன்னிங்களே.”

“ஆமாம் மறந்துட்டேன். இதோ நில்லு.”

அகிலா, உள்ளேபோய், ஒரு சந்தனக்கலர் சபாரி பேண்டையும், சட்டையையும் எடுத்து வந்து, அந்த இளைஞனிடம் நீட்டினாள். ஆண்டவன், மனைவியைக் கண்டித்தார்.

“இந்த வெயிலுல எப்படிம்மா சபாரி போட்டுக்க முடியும்?”

“இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டியில கலந்துக்கிடுlங்க… மறந்துட்டீங்களா? சாதாரண சட்டைப் பேண்ட்ல போனால், உங்களை வாட்ச்மேனே வெளியில தள்ளுவான்.”

கவனம் கலைந்த கோபத்தில், சாஸ்திரி, அவர்களைக் கடுமையாகப் பார்த்தார். கலகலப்பாய் சிரித்த அகிலாவோ, சாஸ்திரி, தனது மனைவியையே மனதுக்குள் திட்டும்படி விளக்கமளித்தாள்.

“இவர் குழந்தை. இவருக்கு துணிமணி எடுக்கிறதுல இருந்து, எதுக்கு எது மேட்சுன்னு எடுத்துக் கொடுக்கிறது வரைக்கும் நான்தான்.”

“ஆமாம் சாஸ்திரி ஸார். நாங்க ரெண்டு பேரும், ஒரே சமயத்துல சிவலோகம் போக முடியாது. இவள், பூவோட பொட்டோட போகணும் என்கிறாள் நானோ, இவளுக்கு முன்னால போகணும் என்கிறேன். இவள் இல்லாமல், என்னால வாழ முடியுமுன்னு நினைத்துக்கூட பார்க்க முடியல. எங்க ரெண்டு பேர்ல யாரு சாமி முன்னால போவாங்க?”

“இதோ பாருங்கோ… நான் கல்யாணப் பொருத்தம்தான் பார்க்க வந்தேன். அபசகுனமா பேசாதேள், எல்லாம் பிள்ளையார் பார்த்துக்குவார். சரி… விஷயத்திற்கு வருவோம். இதோ இந்த ஜாதகம் இருக்கே… இது சுத்த ஜாதகம். இந்தப் பெண்ணால, ஒங்க பையன் எங்கேயோ போகப்போறான். அன்னப்பறவை மாதிரி வாழப்போறாள். இதையே முடிச்சிடுங்கோ. இப்படிப்பட்ட ஒரு நல்ல சுத்த ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா… ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, அவரோட பையனுக்கு இருக்கு. அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, இந்தப் பொண்ணுக்கு இருக்கு. இப்படி நாலுமே சுத்த ஜாதகமாய் அமையுறது ரொம்ப அபூர்வம். உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும், பிரமாதமாய் வாழ்வாள். ஓங்களோட மறுபதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சுடுங்கோ.”

ஆண்டவனும், அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர், அந்த ஜாதகத்தை, அகிலாம்மா வாங்கி, தனியாக வைத்துக்கொண்டாள். உள்ளறைக்குப்போய், ஒரு தாம்பளத் தட்டில், வெற்றிலைப் பாக்கையும், ஒரு சிப்பு வாழைப்பழத்தையும், ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வைத்து, தனக்கு சாமியான சாஸ்திரியிடம், பணிவன்போடு நீட்டினாள். அவரும் எழுந்துநின்று, வாழைப்பழத்தை வேட்டி முந்தியிலும், ரூபாய் நோட்டை” பைக்குள்ளும் போட்டபடியே, வெற்றிலை கொண்ட தாம்பளத் தட்டை திருப்பிக் கொடுத்தார். பாக்கை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டார். அது கடிபடும் முன்பே, ஒங்களுக்குன்னு அர்ச்சித்த விபூதி குங்குமத்தை கொடுக்க மறந்துட்டேன் பாருங்கோ… இந்தாங்கோ. என்றார்.

ஒரு கை மேல் இன்னொரு கையை வைத்தபடி, இருவரும், சாஸ்திரி நீட்டிய விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டார்கள்.

அகிலா, குங்குமத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு, நெற்றியில் இட்டுக்கொண்டாள். எஞ்சிய குங்குமத்தை, லிங்கம் பொறித்த ஆட்டியன் வில்லையாய் தொங்கும் தாலியின் இரண்டு பக்கமும் வைத்து, தங்கச் செயினோடு அவற்றை மேலே துக்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

இந்த நிகழ்வை பரவசமாகப் பார்த்த சாஸ்திரி, “நன்னா இருப்பேள்” என்று சொன்னபடியே, படியிறங்கிப் போய்விட்டார்.

ஆண்டவனும் அகிலாவும் அந்தக் கூடத்திற்குள், அங்கும் இங்குமாய் நடைபோட்டார்கள். குறுக்கும் நெடுக்குமாய், ஒருவரை ஒருவர் மோதாக் குறையாய் நடந்தார்கள். கால்மணி நேரத்திற்குப் பிறகு, ஆண்டவன் இழுத்து இழுத்துப் பேசினார்.

“நல்ல இடந்தான். கார் இருக்கு… பங்களா இருக்கு… பதவி இருக்கு. ஆனாலும்…”

அகிலா, அவரை நேருக்கு நேராய் பார்த்தபடியே, திட்டவட்டமாக திர்ப்பளிப்பதுபோல் பேசினாள்.

“இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.”

– மே 2000 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *