கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,364 
 

(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார். காந்திமதி அவளுடைய வீட்டுத் திண்ணையில் தூணை மார்போடு கட்டியபடி நின்று கொண்டிருந்தாள்.

கடலின் அலை வேகமாகப் பின் வாங்குவது போல, சபரிநாதனின் கோபமும் காந்திமதியைப் பார்த்ததும் கொஞ்சம் உள்வாங்கியது. டப்பா கட்டு கட்டிய வேட்டியை மெதுவாக கீழே இறக்கிவிட்டார். இது காந்திமதிக்கு சபரிநாதன் காட்டுகிற மெளன மரியாதை! இருவரின் பார்வையும் வழக்கம்போல் தயக்கத்துடன் சந்தித்துக்கொண்டன.

காந்திமதியின் வீட்டைத் தாண்டியதும் சபரிநாதன் மறுபடியும் வேட்டியைத் தூக்கி கட்டிக்கொண்டு நடந்தார். அவருடைய கணுக்காலின் கரும் பச்சை நிறத் திரட்சி காந்திமதியின் சுவாசத்தை சூடாக்கியது. சபரிநாதனுக்கு பனங்காய் போன்ற வலிமையான முழங்கால்கள். தெருவில் அவர் நடந்து போகிற நேரங்களில் காந்திமதி அவசர அவசரமாக அவருடைய கரும் பச்சை நிற முழங்கால்களைப் பார்த்து விடுவாள். ஆணின் கால்கள் அவளுக்கு இப்படி வளமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் ராத்திரி தூங்குவதற்கு முன்னால் காந்திமதி சபரிநாதனின் முழங்கால்களை மனசால் மார்போடு கட்டிப் பிடிப்பது உண்டு…! விரக தாபம்!

குறுக்குப் பாதையில் நடந்து சபரிநாதன் படித்துறையை நெருங்கி விட்டிருந்தார். உணர்வுகளில் இன்னமும் கோபம் பட படத்துக் கொண்டிருந்தது. வாய்க்கால் படித்துறையில் சற்றுநேரம் நின்றார். தாமிரபரணி ஓசையின்றி சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. எதிர்க்கரை மரங்களில் தேன் கொத்திகள் நிறைய தெரிந்தன.

பின்னால் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்டு சபரிநாதன் திரும்பிப் பார்த்தார். அவருடைய பெரிய பாட்டி வயிற்றுச் சித்தி எழுபது வயசான கோமதி வந்து கொண்டிருந்தாள். சபரிநாதனுக்கு இந்தச் சித்தியை பிடிக்காது. ஓட்டை வாய்க்காரி, பெரிய கோட்டிக்காரி!

“எல்லாம் கேள்விப்பட்டேன்…”

“என்னன்னு?”

“நான் கேள்விப்பட்டது கெடக்கட்டும்.. எதுக்கு சபரி ஒனக்கு அப்படி ஒரு கோபம் வந்திச்சி? ஒன்னை அவனுங்க தேர்தல்லதானே நிக்கச் சொன்னானுங்க…”

“அவங்க வேற ஒண்ணும் சொல்லலையா?”

“அத நீதான் சொல்லேன்.”

“நான் பெண்டாட்டி இல்லாம செத்த சவமாட்டம் நிக்கறேனாம். இப்படி பைத்தியக்காரப் பய கணக்கா நிக்கறதுக்கு தேர்தல்ல நின்னு இவனுங்களுக்கு நாலு காரியம் செஞ்சா எனக்கும் நல்லதாம், ஊருக்கும் நல்லதாம்… இப்ப நான் எதுல இவனுங்களைவிட கெட்டுப் போயிட்டேனாம்? ம்? எல்லாம் கட்டுச் சோத்துக்கு மேளம் அடிக்கிறவனுங்க சித்தி! பெண்டாட்டி இல்லேங்கிற ஒரே காரணத்தால தேர்தல்ல நான் நிக்கணுமாம். ஏன் பெண்டாட்டி இருந்தா நிக்கப்படாதாமா?”

“ஒரு ஆறுதலுக்காக அவுங்க சொன்னதா நெனச்சுக்கோயேன் சபரி..”

“ஏதாச்சும் சொல்லிடப் போறேன் சித்தி! நெசமாவே ஆறுதல் சொல்றதா இருந்தா, புண்ணாக்குல தொவையல் பண்ணிச் சாப்பிடற இந்தப் பயக என்ன சொல்லியிருக்கணும் தெரியுமா… ஏலே சபரிநாதா, ஏன்லே இப்படிப் பெஞ்சாதி இல்லாம கிறுக்கன் கணக்கா பேயா அலையுற! ஒன்கிட்டப் பணம் இல்லையா; சொத்து சுகம் இல்லையா? பேசாம இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிட்டு சொகுசா இருப்பியான்னு சொல்லியிருக்கணும் சித்தி! அதைச் சொல்லாம…”

“எப்டி எப்டி..?” கோமதியின் பஞ்சடைத்த கண்களே பெரிய வட்டக்கெண்டை மீன் அளவிற்கு விரிந்து விட்டன. “ஓஹோ இன்னொரு கல்யாணம் உன்னை பண்ணிக்கச் சொல்லணுமா?”

சபரிநாதன் ஒரு மாதிரியாக பேய் முழி முழித்தார். தான் என்ன சொன்னோம் என்று ஒரு நிமிஷம் அவருக்கே உறைக்கவில்லை.

“இதையே என்கிட்ட நீ வந்து சொல்லியிருந்தீன்னா இந்நேரம் நானே ஒனக்குப் பொண்ணைப் பாத்து கட்டிவச்சி… அவளும் இந்நேரம் முழுகாம இருந்திருப்பா..!”

கடுப்பாகி விட்டார் சபரிநாதன். “அட, நீங்க ஒண்ணு சித்தி… நான் ஏதோ வயித்தெரிச்சல்ல வாய் தவறி எதையோ சொன்னா…”

“நீ வாய் தப்பிச் சொன்னீயோ; இல்லை மூக்குத் தப்பி சொன்னீயோ, ஒனக்கு ஒருத்திய பாத்து கட்டி வச்சிட்டுத்தான் மறு ஜோலி எனக்கு.”

இதைச் சொன்ன அடுத்த நிமிஷம் கிழவி அங்கு நிற்கவில்லை… கயிரை அறுத்துக்கொண்டால் எருமை மாடு உற்சாகத்தில் ஓட்டம் ஒன்று ஓடுமே! அந்த மாதிரி ஒரு ஓட்டமிட்டாள் கோமதி. ஆனால் எருமைமாடு ஓட்டத்தோடு நிறுத்திக்கொள்ளும்! இந்த கோமதி சித்தி ஊரெல்லாம் தண்டோரா போட்டுவிட்டுத்தான் நிறுத்துவாள்.

சபரிநாதன் திகிலடைந்து போய் நின்று கொண்டிருந்தார்.

படித்துறையில் நின்று ஒருமணி நேரமாக சபரிநாதன் தலையைச் சொரிந்து கொண்டிருந்தார். கோமதி சித்தி பெரிய கோட்டிக்காரி என்று நன்றாகத் தெரிந்தும் இப்படி வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது அவருக்கு.

இப்போது கோமதியைப் பொறுத்தவரை சபரிதான் ‘கோட்டி’ பிடித்த மனுஷன். அதுவும் கல்யாணக் கோட்டி! இன்று பொழுது சாய்வதற்குள் சபரியின் இந்தக் கல்யாணக் கோட்டி விஷயம் வீட்டுக்கு வீடு கோமதியால் ‘ஸ்பீடு போஸ்ட்’டில் டெலிவரி செய்யப்பட்டு விடும்! இந்த மாதிரி விஷயங்களில் கோமதி நெல்லை எக்ஸ்பிரஸ்!

சபரிநாதன் திகிலுடன் பெருமாள்கோயில் கோபுரத்தைப் பார்த்தார். “பெருமாளே, நெசமாவே வாய் தவறித்தான் அப்படிச் சொன்னேன். அந்த மாதிரி ஆசையெல்லாம் எனக்குள்ள கெடையவே கெடையாது சாமி! எப்படியாவது கோட்டிக்காரி வாயை அடைச்சிடு, ஒனக்குப் பன்னீரால் அபிஷேகம் பண்றேன், என் மானத்தைக் காப்பாத்திடு..”

படித்துறையில் நின்றபடி சபரிநாதன் கிட்டத்தட்ட புலம்பவே செய்தார். ஆனால் எத்தனை நேரத்திற்குத்தான் அங்கேயே நின்று கொண்டிருப்பது? கிளம்பலாம் என்று நினைத்தபோது பறந்து வந்து கொண்டிருந்த சில காக்கைகளுக்கு நேரங்கெட்ட நேரத்தில் சபரிநாதனை அடையாளம்வேறு தெரிந்து விட்டது. சரேலென பாய்ந்த ஒரு காக்கை அவரின் தலையில் இறக்கைகளால் ஒரு தட்டு தட்டிவிட்டுப் பறந்தது!

உடல் சிலிர்த்த சபரிநாதனுக்கு ஒன்று உறுதியாகிவிட்டது. அவருக்கு நேரம் சரியில்லை. இந்நேரம் கோமதிச் சித்தி போய் ஊர் பூராவும் ஓதி விட்டிருப்பாள். ஆள் ஆளுக்கு அவரை ஒரு மாதிரியாகப் பார்க்கப் போகிறார்கள். எல்லாராலும் வந்து “அப்படியா சங்கதி?” என்று அவரிடம் கேட்க முடியாது. ஆனால் அப்படியா சங்கதி என்கிற மாதிரி ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவரைப் பார்க்க முடியும்! கெளரவம் எரிந்து சாம்பலாகப் பார்த்தாலே போதுமே சபரிநாதனுக்கு.

சரி, நடக்கிறபடி நடக்கட்டும் என்ற நினைப்பில் சபரிநாதன் துண்டை உதறி தலையைச்சுற்றி தலைப்பாகை கட்டிக்கொண்டார். வேட்டியைத் தூக்கி ‘டப்பா’ கட்டு கட்டிக்கொண்டார். சாயங்காலங்களில் படித்துறைப் பக்கம் வந்துவிட்டு வீடு திரும்புகிறபோது இப்படி தலைப்பாகை கட்டி நடப்பது சபரிநாதனின் ஸ்டைல்!

பத்தடி நடந்திருக்க மாட்டார், கட்டுச் சோற்றுக்கு மேளம் தட்டும் பூபதி சபரிநாதனுக்கு குறுக்கே போனான். வேண்டுமென்றே குறுக்கே போவது போல இருந்தது. அவனைப் பார்க்காதவர் மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார். அடுத்த இருபதாவது அடியில் புண்ணாக்கில் துவையல் செய்து சாப்பிடுகிற சென்னிமலையும் சொல்லி வைத்தமாதிரி குறுக்கே போனான்! என்ன செய்ய, சரியில்லாத நேரத்தில்… சபரிநாதன் அவனையும் பார்க்காதவர் மாதிரிதான் போக வேண்டியிருந்தது.

காந்திமதியின் வீட்டுத் திண்ணை காலியாக இருப்பதை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டார். வீட்டை வேகமாகத் தாண்டி விடலாம் என்ற அவசரத்தில் நடையை எட்டிப் போட்டார். அப்படி எட்டிப் போட்டு என்ன செய்ய…

ஏதோ ஒரு ஜோலியாக பக்கத்து வீட்டுக்குள் போய்விட்டு வெளிப்பட்ட காந்திமதி அவளுடைய வீட்டுப் படியில் அப்படியே நின்றுவிட்டாள். சபரிநாதன் எதற்காகத் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு போக வேண்டும், அவள் முன்னால்? சபரிநாதன் அவளைப் பார்க்காமல் தலையைத் தொங்க போட்டபடி விர்ரென்று நடந்தார்.

அதனால் காந்திமதியின் பார்வை எப்படி இருந்தது என்பதை அவரால் பார்க்க முடியவில்லை. ஆனால் காலில் குத்திய முள்ளை எடுக்க நின்ற சகுந்தலை மாதிரி நின்றுவிட்டதில் அவள் மனசு புரிந்தது; நெல்லை எக்ஸ்பிரஸ் இந்த வழியாக எல்லா ஸ்டேஷனிலும் நின்று போயிருப்பதும் புரிந்தது…!

இந்த இடத்தில்தான் சபரிநாதன் தப்புப் பண்ணிவிட்டார். தலையைத் தூக்காமல் வேகநடை போட்டதில் ‘டப்பா’ கட்டுக் கட்டியிருந்த வேட்டியை எப்போதும்போல கீழே இறக்கிவிட மறந்து போய்விட்டார்…! ‘அப்ப கோமதி ஆச்சி சொன்னது நெசந்தான் போலிருக்கு’ என்று உடனே காந்திமதியின் மனசு இதை விகற்பமாகப் பார்த்தது. வேட்டியை மரியாதைக்காக இறக்கி விடாமல் அலட்சியமாகப் போகிறாரே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *