என்னைப் பார் காய்ச்சல் வரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 4,227 
 

பாகம் 1 | பாகம் 2

இராமநாதபுரம் நகரிலுள்ள ஒரு அமைதியான, அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு அழகானத் தெரு இளங்கோவடிகள் தெரு. என் வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி மாயா அக்காவின் வீடு. அக்காவின் தாயார் ஒரு சிறியப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். என் வீட்டில் பள்ளிப்பருவத்தில் வாங்கியுண்ணத் தரப்படும் முக்கால்வாசி சில்லறைகள் அந்தக் கடையைத் தான் சென்றடையும். ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், புளிப்பு மிட்டாய், கொக்கோச்சு, கடலை மிட்டாய், கல்கோனா மற்றும் பன்னீர் சோடா என்று அக்கடையில் வாங்கி ருசித்த பண்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் மாயா அக்காவின் குடும்பம் எனக்கு உறவுமுறைக் குடும்பம் என்பதால் அம்மாவின் கணக்கில் கூட சிலநேரம் பொருட்களை வாங்குவது வழக்கம். கடைக்கு செல்லும்போதெல்லாம் மாயா அக்கா அருகிலிருந்தால் அன்புடன் நலம் விசாரிப்பார். அவருடன் விடுமுறை நாட்களைக் கழிக்கவென்று ஒரு சிறுவர், சிறுமியர் கூட்டம் அவரைப் படைசூழ இருப்பது வழக்கம். அழகானவர் மற்றும் அன்பானவர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் குழந்தைகளுக்கு! சொல்லவா வேண்டும்.

மாயா அக்கா வீட்டின் எதிர்ப்புறம் இரண்டாவது வீடு என் பெரியப்பாவின் வீடு. என் வீடும் அதேத் தெருவில் இருப்பதால் அடிக்கடி என் பெரியப்பா வீட்டிற்குச் செல்வதுண்டு. பெரியப்பாவின் வீட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் அந்தக் கடையை கடக்க வேண்டியிருப்பதால் அசைபோட ஏதாவது வாங்கிவுண்பது வழக்கம். அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பள்ளி விடுமுறை நாளில் அம்மா என்னைத் தலைக்குக் குளிப்பாட்டி காலையுணவு ஊட்டிவிட்டு, தன் கடமையை அவர் முடித்தார். நான் அம்மாவிடம் ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு, அம்மா! நான் பெரியப்பா வீட்டிற்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தேன்.

மாயா அக்காவின் அம்மாவிடம் ஒரு ரூபாயை நீட்டி, அத்தை ஒரு ரூபாய்க்கு தேன்மிட்டாய் தாருங்களென்று கூறினேன். அப்பொழுது அந்தக் கடைக்கு வழக்கமாய் பன்னீர் சோடா போடவரும் அண்ணன், பழையக் காலி போத்தல்களை பெற்றுக்கொண்டு புதிய போத்தல்களை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தார். நான் தேன் மிட்டாய்களை கைகளில் பெற்ற அக்கணமே, அவர் அந்த அத்தையிடம் அக்கா! உங்கள் வீட்டின் பின்புறம் ஏதோ புகை வருவது போலத் தெரிகிறது என்றார். அத்தையோ என் மகள் சுடுதண்ணி வைத்துக் கொண்டிருப்பாள் எனக் கூறினார். இதைக் காதில் வாங்கிய நான், கைகளில் தேன் மிட்டாயைப் பெற்றுக்கொண்டு என் பெரியம்மா வீட்டிற்குப் புறப்பட்டேன்.

என் பெரியம்மா வீட்டின் நிலைக் கதவை நான் திறந்த அக்கணம், வெளியே பயங்கர அலறல் சத்தம். உடனே என் பெரியம்மா வெளியே நிகழ்ந்ததைப் பார்த்துவிட்டு வீட்டினுள் குழந்தைகள் இருப்பதால் நிலைக்கதவை மூடிவைத்து சிறிது நேரம் யாரும் வெளியே செல்லாதிர்க்கள் எனத் தடுத்தார். அடுத்ததாக வீட்டிற்குள் வந்த பெரியப்பா தரையில் புரண்டு அழுதார். என்னதான் நடக்கிறது என்ற அச்சத்தில் நானும் என் அண்ணனும், அக்காவும் திகைத்துப்போய் நின்றோம். சிறிது நேரத்தில் என் பெரியம்மா வெளியே சென்று நிகழ்ந்ததை விசாரித்துவிட்டு மாயா தன் உடம்பிற்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாளாம். அவளை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்று கூறி, என் பெரியப்பாவைத் தேற்றினார்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் என் அம்மா பெரியப்பா வீட்டிற்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். என் பிள்ளை இங்கே தான் இருக்கானா! என்று கூறி என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அவரது சேலையால் என் தலையை மூடி அந்த அக்கா எரிந்தப் பகுதி என் கண்களுக்கு எட்டாத வண்ணம் பெரியப்பா வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு இரண்டடி அகலக் குறுக்குச் சந்தின் வழியே என் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கள் வீட்டிற்கும் பெரியப்பா வீட்டிற்கும் எளிதில் சென்று திரும்பும் வகையில் பெரியப்பாவால் வாங்கப்பட்டப் பாதைதான் அது. பாதையை ஒட்டிய இருபுறமும் வேறு நபர்களின் வீடு உள்ளது.

அது மிகவும் குறுகலான பாதை என்பதால் இரவு நேரம் பார்க்க மிகவும் பயமாக இருக்கும். அதனாலேயே இரவு நேரங்களில் நான் பின்புறக் கதவுகளை திறப்பதில்லை. மேலும் அந்தச் சந்தின் தொடக்கத்தில் என் வீட்டின் பின்புற வாசலையொட்டி வைத்திருக்கப்படும் முருங்கை மரம் இரவு நேரங்களில் பார்க்கவே பயமுறுத்தும். இதனாலேயே பள்ளிப் பருவங்களில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதெல்லாம் என் அம்மாவை அழைத்துக் கொண்டுதான் செல்லுவேன். சிறுநீர் இருக்கும் அக்கணம் கூட என் அம்மா இருக்கிறாரா என்று சோதிக்க அவருடன் பேச்சுக் கொடுப்பது வழக்கம். அப்படியோரு அச்சுறுத்துமிடம் என் வீட்டின் பின்புறம். மேலும் சிறுவயதிலேயே நான் என் அப்பத்தாவின் மீது வைத்திருந்த பாசத்தால், அவர் இறந்த பின்பும் கூட பகலில் விடிந்ததும் அந்த பின்புறக் கதவின் வழியே என் அப்பத்தா தினமும் காலையில் பால் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்றெல்லாம் உட்கார்ந்திருக்கிறேன். அதைக்கண்டு என் பெரியப்பா என்னைத் தூக்கி வைத்துக் கண்கலங்கியதுண்டு. சிறுவயதில் இரவில் தூக்கத்தில் எழுந்து நான் பின்புற வாசல் நோக்கிச் செல்வதை நோட்டமிட்ட என் அம்மா, இரவில் வீட்டினுள் இருந்து பின்புறம் செல்வதற்கான முந்தையக் கதவின் வழியில் மர நாற்காலியால் தடுப்பும் போட்டதுண்டு.

பிறகு வீட்டிற்கு வந்த நான் மாயா அக்காவிற்கு என்ன நிகழ்ந்து என்று அம்மாவிடம் விசாரிக்க ஆரம்பித்தேன்…

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *