தேவதையைக் கண்டேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 9,773 
 

ஞாயிற்றுக்கிழமை, காலைப் பொழுது. பலருக்கு அன்று ஒரு நாள்தான் ஓய்வாக இருக்கும் நாள். எனக்கும் தான். நான் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட நேரம் தூங்கி எழுவேன். அம்மா செய்து வைத்திருக்கும் சிற்றுண்டியைச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிடுவேன். இரவு ஏழு மணிக்குப் பிறகுதான் மறுநாள் வேலைக்குப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வரும், கூடவே பதற்றமும் ஏற்படும். இன்று ஏனோ சீக்கிரம் எழுந்துவிட்டேன். குளித்துவிட்டு வந்த எனக்கு மேசையில் தயாராய் இருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டுக் கூடத்தில் அமர்ந்து தமிழ் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். நாட்டுநடப்புச் செய்திகளை மட்டும் படித்தேன். அப்போது சமையலறையிலிருந்த வானொலியில் ஒலித்தது அந்தப்பாடல்… ‘தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்துவிட்டாள்’… செய்தித்தாள் என் கையிலிருந்து நழுவ என் மனமோ பாடலின் வரிகளில் லயித்தது. மறைந்த கவிஞர் ந.முத்துகுமாரின் உயிரோட்டமான அந்தப் பாடலைக் கேட்டவுடன், என் மனம்; சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பறந்தது.

நீலா…! அதுதான் அவள் பெயர். என் பதின்ம வயதில் என் மனதைத் தொட்ட ஒரே பெண் அவளே. இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்திருப்பதும் அவளே! கவிஞர் வடித்த வரிகள் போல என் உயிருடன் கலந்துவிட்டவள். அந்த இரட்டைச்சடையில், நீலநிறப் பள்ளிச் சீருடையில்… நீலாவைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் ரெக்கைக் கட்டிப் பறந்தது!

உயர்நிலை மூன்றாம் வகுப்பு தவணை ஒன்று வரை ஒரே வகுப்பில் படித்தோம். பிறகு ஒரு நாள் அவள் பள்ளிக்கு வரவில்லை! மூன்று நாட்களுக்குப் பிறகு அவள் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய்விட்டாள் என்று தெரியவந்தது! எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன பெரிய தவறு நான் செய்துவிட்டேன்? அவளுக்குக் கடிதம் கொடுத்தது தவறா? அதற்காகப் பள்ளியை விட்டு போவதா? குற்ற உணர்வால் என் மனம் குழம்பியது. யாருடனும் சகஜமாகப் பேசி பழகாத நீலாவைப் பற்றி யாரிடம் கேட்பது? என் மனம் குழம்பியது. வகுப்பாசிரியர் கூட எங்களிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடன் பேசும் ஜமுனாவுக்குகூட காரணம் தெரியவில்லை! ஏன்? ஏன்? இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை….நான் பெருமூச்சு விட்டபோது, “ராம்குமார், நான் சொல்றது காதில் விழுதா?” என்ற அம்மாவின் சற்று அதட்டலான குரலைக் கேட்ட பின்தான் பழைய நினைவுகளிலிருந்து நான் விடுப்பட்டேன்.

“என்னம்மா? என்ன சொன்னீங்க?” என்று நான் கேட்டபோது, அம்மா தன் கோபத்தை மறைத்துக்கொண்டு தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்தார். “எத்தனை முறை சொல்வது,” என்று சலித்துக்கொண்டார். “கல்யாண வயசு தாண்டிப் போச்சு, இனி யார் பொண்ணு கொடுப்பா?” வாய் முணுமுணுக்க அம்மாவின் கைகள் தட்டுகளைக் கழுவிக்கொண்டிருந்தன. இது அம்மா அன்றாடம் பாடும் பல்லவி. எனக்குக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. எழுபது வயதாகும் அம்மா இன்னும் எனக்கு சமைத்துப் போடுகிறார். பகுதி நேரப் பணிப்பெண் வாரம் ஒரு முறை வந்து வீட்டைச் சுத்தம்; செய்துவிட்டுப் போவாள்;. என் ஒரே தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டோம். அவளும் தன் கணவர், இரண்டு பிள்ளைகள் என்று நன்றாக வாழ்கிறாள். அவளும் இங்கே வரும்போதெல்லாம், “அண்ணா எப்போது கல்யாணம் செய்துக்க போறீங்க?” “என் தோழி ஒருத்தி தயராய் இருக்கிறாள்” என்று கேட்டுச் சளித்துக்கொண்டதும் எனக்குப் பழகிப்போயின. மச்சானும் சொல்லி அழுத்துவிட்டார். என் நண்பர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டனர். இவர்கள் எல்லாம் என் மீதுள்ள அக்கறையால்தான் சொல்கிறார்கள் என்று எனக்கும்; புரிகிறது. எனக்கு இப்போது நாற்பது வயது. இதுவரை திருமணத்தைப் பற்றி நான் நினைக்கவில்லை. நீலா என்ன ஆனாள் என்று இதுவரை தெரியவில்லை. அவளை என்னால் மறக்கவும் முடியவில்லை. முட்டாள் என்று சொல்லுங்கள், பைத்தியக்காரன் என்று சொல்லுங்கள் எனக்குக் கவலையில்லை. நீலா மீது நான் வைத்திருக்கும் பவித்திரமான அன்புதான் அதற்கு காரணம். அவள் என்ன ஆனாள்; என்று தெரிந்துகொள்ளாத வரை என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் காலம் ஓடிவிட்டது என்பதுதான் உண்மை. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரில் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இந்தப் பத்து பதினைந்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ச்சிக் கண்டுவிட்டது. முகநூல், இன்சடர்கிரம் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்டன. அதிலெல்லாம் கூட நீலாவைத் தேடினேன். அந்தப் பெயரில் உள்ள எல்லாரையும் அலசிவிட்டேன். அவள் மட்டும் அதில் இல்லை. அப்படி அலசித் தேடியதில் என்னுடன் படித்த சிலரைக் கூட கண்டு பிடித்தவிட்டேன் ஆனால் நீலாவை மட்டும் கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஒரு முறையாவது அவளைப் பார்த்துவிடமாட்டோமா என்ற என் ஆதங்கத்தை யார் அறிவார்? என் பழைய நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல என் கைப்பேசி ஒலித்தது. என் நண்பன் ராஜாவின் பெயரைப் பார்த்ததும் அவசரமாக, “டேய் ராஜா! என்ன காலையிலேயே?’’ என்று நான் கேட்க, மறுமுனையில் அவன் “ராம்குமார் டேய்! சீக்கிரம் கிளம்பி வா” என்றான். “என்னடா? எங்கே வரணும்?” அமைதியாகக் கேட்டேன். “நீ நீலாவைப் பார்க்கணுமா வேணமா?” என்றான் வேகமாக. “நீ என்ன சொல்ற? நீலாவா…உண்மையாகவா?;” இப்போது நான் அவசரப்பட்டேன். “ஆமா நீ உடனே கிளம்பி யீஷ{ன் மகா மாரியம்மன் கோயிலுக்கு வா.’’ நான் மேலும் கேட்பதற்குள் கைப்பேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனக்குக் கைகால் ஓடவில்லை. மனம் துள்ளியதா? குழம்பியதா? எனக்குப் புரியவில்லை! அரக்கப்பறக்க ஒரு சட்டையை எடுத்துமாட்டிக்கொண்டு கிளம்பினேன். மணியைப் பார்த்தேன் … பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. “அம்மா, போய் வரேன், சாப்பாடு வேண்டாம்,” என்று சொல்லிக்கொண்டு கிளம்பினேன். என்னிடம் காணப்பட்ட தடுமாற்றத்தையும் அவசரத்தையும் கண்ட அம்மா, “பத்திரமாகப் போய் வா,’’ என்றார் அமைதியாக.

என் கார் புக்கிட் தீமா விரைவுச் சாலைக்குள் நுழைந்து பின் மண்டாய் சாலை வழியாக யீஷ{ன் நோக்கி ஓடியது. பதற்றம், குழப்பம், மகிழ்ச்சி இவை-

யெல்லாம் கலந்த உணர்ச்சிகளோடு என் மனம் போராடினாலும், காரை வேகக் கட்டுப்பாட்டிற்குள்ளேயே நான் ஓட்டிச்சென்றது ஆச்சரியம்தான்! ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் காலை வேளை என்பதாலும் சாலையில் வாகனங்களின் நெரிசல் இல்லை. மனம் மட்டும் பதைப்பதைத்தது. சற்று முன் ராஜா சொன்னது உண்மையா? அவன் பார்த்தது நீலாவைத்தானா?

எப்படியோ அரைமணி நேரத்தில் கோயிலை அடைந்தேன்;. காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வேக வேகமாக திருமண மண்டபத்தை நோக்கி நடந்தேன். அங்கே வாசலில் ராஜா கையைப் பிசைந்துக்கொண்டு நின்றிருந்தான். என்னைக் கண்டதும் என் கையைப்பிடித்து மண்டபத்துக்குள் இழுத்துச் சென்றான். “அதோ மேடையைப் பார்! என் மனைவிக்குப் பக்கத்தில்,” என்று அவன் கை நீட்டிய திசையில் என் பார்வையை ஓடவிட்டேன். ஜமுனாவுக்குப் பக்கத்தில்…அது நீலாதான் என்று உறுதி செய்துகொள்ள எனக்கு சில வினாடிகள் ஆயின. ஆமாம் அது அவளே தான். கொஞ்சம் சதை போட்டிருந்தாள். இரட்டைச்சடைக்குப் பதிலாக கொண்டைப் போட்டு மல்லிகைச்சரம் சுற்றியிருந்தாள். ஆனால் அதே எளிமைத் தோற்றம்! மிகையில்லா இந்தத் தோற்றத்தில் கூட நீலா எனக்கு அழகான தேவதையாக தெரிந்தாள். “பார்த்துவிட்டாயா? சரி வா கிளம்பலாம்,” என்றான் ராஜா. “டேய் என்ன சொல்ற? யாரை இவ்வளவு காலமாக தேடினேனோ அவள் இப்போ இங்கே இருக்கிறாள்! ஏன் போனாள்? எங்கே போனாள்? என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?” நான் தயங்கி நின்றேன். அவன் மனைவி எங்களை நோக்கி வந்தாள். “அண்ணா! எப்படி இருக்கிங்க?” நலம் விசாரித்தாள். மேடையைப் பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள் திரும்பி ஜமுனாவை நோக்கின. அவை இலேசாக கலங்கியிருப்பதைப் பார்த்த ஜமுனா பதறியவாறு, “அண்ணா, அது நம்ம நீலாதான். அவகூட இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவ உறவினர் கல்யாணத்துக்கு வந்திருக்கா. சில விபரங்க தெரிந்து…அவள் முடிப்பதற்குள், “என்ன? சீக்கிரம் சொல்…பய செத்துடுவான்.” “வாய கழுவுங்க,” என்று ராஜாவை அடக்கினாள். “ராம் மன்னிச்சுக்க…என்னால் உன்னை இப்படி பார்க்கமுடியலடா,” என்று என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டான். “இப்படி உட்கார்,” என்று சொல்லி என்னை அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தான். திருமணம் முடிந்து பாதி கூட்டம் கிளம்பிவிட்டிருந்தது. மேடை மட்டும் கலகலப்பாய் இருந்தது. மணமக்களுடன் சேர்ந்து சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நீலாவைப் பார்த்தேன். அவள் சில பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் என்னைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அன்று போலவே இப்போதும் இருக்கிறாளே! திமிர் பிடித்தவள். என் மனம் வேதனையால் வெம்பியது. “டேய் வாடா போகலாம்,” என்று சொல்லி எழுந்து நடந்தேன். ராஜாவும் ஜமுனாவும் ஒன்றும் சொல்லாமல் என் பின்னால் வந்தனர். “ஜமுனா! மொய்ப்பணம்…’’ என்று ராஜா இழுக்க. ‘ம…அப்போதே கொடுத்திட்டேன்,” என்றாள்.

என் காரை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்ததும் நான் நின்றேன். கோயில் மண்டபத்தை நோக்கி என் பார்வையை திருப்பினேன். அதைப் பார்த்த ஜமுனா, “அண்ணா! அவ மேல ஒரு தப்புமில்லை. நீலாவின் குடும்பம் சிங்கப்பூர் நிரந்திரவாசிகள்னு தெரியுமல…அவங்க அப்பாவுக்கு இங்க வேல இல்லாம போயிடுச்சு. அதனால அவர் எல்லாரையும் அழைச்சுகிட்டு ஜொகூரில் உள்ள அவங்க ஊரான மூவாருக்குப் போயிட்டாங்க. எல்லாம் சட்டுசட்டுணு நடந்ததால அவளால் எனக்குக்கூட செய்தி சொல்லமுடியாம போயிட்டுனு சொல்லி வருத்தப்பட்டா”. “ம்…” கொட்டிய ராஐh “அப்புறம்!” என்றான். “கிளம்பிய அவசரத்துல அவளுடைய முகவரி அட்டையும் தொலைஞ்சு போச்சாம்…” விளக்கினாள் ஜமுனா.

“நீலாவுக்கு திருமணம்…?” இழுத்தேன் நான். “ஆயிடுச்சு அண்ணா.” அதைக் கேட்டதும் என் நெஞ்சு வலித்தது. “அவங்க சொந்தத்திலேய கல்யாணம் செஞ்சி இரண்டு பிள்ளைங்க இருக்காங்க,” என்றாள். குறுக்கிட்ட ராஜா “இவ்வளவு விசயத்தையும் அரை மணி நேரத்தில் பேசிட்டிங்கனு சொல்லு, பேஷ்,” என்று கிண்டல் செய்தான். ஜமுனா அவனைப் பார்த்து முறைத்தாள். வேதனையிலும் அவர்களைப் பார்த்த எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. சிரித்துவிட்டேன். “அப்பாடா…இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு,” என்ற ராஜா முகத்தில் மகிழ்ச்சி. ஜமுனாவுக்கும்தான். “அண்ணா, நீலா நம்ம வகுப்பு மாணவர்களப் பத்தி கேட்டா…உங்களயும்தான்,” என்றவுடன் “என்ன?” என்றேன் ஆச்சரியமும் பரவசமும் கலந்த குரலில். “நீலா என்னப் பற்றிக் கேட்டாளா?” “ஆமாம், நீங்க நல்லா இருக்கிங்கனு சொன்னேன் …மன்னிச்சுக்குங்க.” “நீ சொன்னது சரிதான் ஜமுனா,” என்றேன் மெல்லிய குரலில். இது போதும் எனக்கு. இத்தனை ஆண்டுகள் எனக்கு இருந்த குற்ற உணர்வுக்கும் குழப்பத்திற்கும் இன்று விடை கிடைத்துவிட்டது. என் மனம் தெளிவடைந்திருப்பதை உணர்ந்தேன். இனி எனக்கு எந்தக் குழப்பமும் கிடையாது.

“சரி வாங்க நாம தேக்காவுக்குப் போகலாம்…சாப்பாடு என் செலவு,” என்றேன் சிரித்துக்கொண்டே. “உன் செலவு தானே? ம் … நாங்க தயார்!” என்று ராஜா சொல்ல, ஜமுனா தலையை ஆட்டினாள். என் கைப்பேசியை எடுத்து அம்மாவுடன் பேசினேன், “அம்மா தேக்காவுக்குப் போறேன் ஏதாவது வாங்கணுமா? சரி…அப்புறம் அம்மா…நீங்க சொல்லிக்கிட்டு இருந்தீங்கள அந்தப் பொண்ணு…ஆ கேட்டுப் பாருங்க,” சொல்லிவிட்டுக் கைப்பேசியை வைத்தேன். கணவனும் மனைவியும் என்னை வாயடைந்துப் போய் பார்த்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி! “சபாஷ் அப்படினா நீலாவை மறந்துட்டாயா?” ராஜாதான் கேட்டான். “முதலில் திருமணம் ஆகட்டும்,” நான் சிரித்து மழுப்பினேன். இத்தனை காலம் கழித்து என் தேவதையைக் கண்டவிட்ட நிம்மதி, இது போதும் எனக்கு!

– தமிழ் முரசு, சிங்கப்பூர் (8th மார்ச் 2020)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *