கிரீட ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 13,225 
 

அந்தத் தம்பதிகள் மஹா பெரியவா மீது மட்டற்ற பக்தியும், மரியாதையும் உடையவர்கள். தரிசனத்திற்கு போகும்போது ஏதாவது நவீனமாகப் பொருள் செய்து கொண்டுபோய் சமர்ப்பணம் செய்வார்கள்.

ஒரு தடவை வெல்வெட்டில் இரண்டு வகைக் கிரீடம் செய்துகொண்டு போனார்கள். ஒன்று சிவலிங்கம் போல் தோற்றமளிக்கும் மாடல், மற்றொன்று அம்பாள் சிரசில் வைத்துக் கொள்ளும் மாதிரி, ஒரு பிறைச் சந்திரனுடன் கூடியது.

அவர்கள் கிரீடங்களை பெரியவாளிடம் சமர்ப்பித்தது மாலை வேளையில்; இருட்டும் நேரம்வரை பெரியவாளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சாதாரணமாக கிரீடம் சமர்ப்பித்தால், அதைத் தன் சிரசில் வைத்து ஆனந்தமாகக் காட்சி தரும் பெரியவா, அன்றைய தினம் அவர்கள் கொடுத்த கிரீடங்களை அவ்வளவு நேரமாகியும் அணிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு அது மிகவும் ஏமாற்றமாகவும், என்ன தவறு செய்தோம்? என்று பயமாகவும் இருந்தது.

கூட்டம் முற்றிலும் வடிந்து தம்பதியினர் இருவர் மட்டும் அங்கு இருந்தார்கள். பெரியவா தம்பதிகளை அழைத்தார். தம்பதியினர் பதற்றத்துடன் அருகில் சென்று நின்றனர்.

“இங்கே பின்பக்கத்திலே தொண்டை மண்டல ஆதீனம் என்று ஒரு சிவமடம் இருக்கு… தெரியுமா?”

“கேள்விப் பட்டிருக்கேன். ஆனா எங்கே இருக்குன்னு தெரியாது…”

“விசாரித்து தெரிஞ்சுக்கோ…”

“சரி.”

“நாளைக்கு விடியற்காலம் இந்தக் கிரீடங்களை யாருக்கும் தெரியாமல், அந்த மடத்தின் வாசற்படியில் வெச்சிட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்துடுங்கோ. யார் கிட்டேயும் இது பற்றிப் பேசவேண்டாம்… நீங்கள் அங்கே போய் வைக்கிறதும் யாருக்கும் தெரியக்கூடாது. புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது…”

பெரியவாளிடம் பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே இருவரும் வந்தார்கள். உடனே அங்கே இங்கே விசாரித்து, தொண்டை மண்டல ஆதீன மடம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, நாலைந்து தடவைகள் அந்தத் தெருவில் நடந்து நோட்டம் விட்டார்கள்!

மறுநாள், இருள் பிரியாத வைகறைப் பொழுது, தம்பதியினர் இரண்டு கிரீடங்களையும் அந்த மடத்தின் வாயிற்படியில் வைத்துவிட்டு, திரும்பிப் பாராமல் வேகமாகக் கடந்து சென்று விட்டார்கள். அவர்கள் கிரீடங்களை வாயிற்படியில் வைத்தபோது, மடத்தின் வெளிப்புறக் கதவுகள் அகலத் திறந்துதான் இருந்தன. ஆனால் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை.

அன்று பத்தரைமணி வாக்கில் பெரியவாளைச் சென்று தரிசனம் செய்தபோது, “வெச்சுட்டியா?” என்று கேட்டார். “ஆம்” என்று தம்பதியினர் தலையை ஆட்டி ஆமோதித்தனர்.

“யாரும் பார்க்கலையே?”

“இல்லை.”

இருவரும் பெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.

தம்பதியினர் ஏகத்துக்கும் குழம்பினர்.

‘பெரியவா இப்படி ஏன் செய்யச் சொன்னார்? ஏன் பிறர் கண்களில் படாமல் வைக்கச் சொன்னார்கள்? ஏன் திரும்பிப் பார்க்காமல் வரச் சொன்னார்கள்? தொண்டை மண்டல ஆதீன கர்த்தருக்கு அனுப்ப விரும்பியிருந்தால், அதைப் பகிங்கரமாகவே செய்திருக்கலாமே? இது என்ன தேவ ரகசியம்?’

அவர்களால் பெரியவாளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதுதானே அந்த மஹானின் தனித்துவம்…

இன்றளவும் அந்தத் தம்பதியினருக்கு அதற்கான விடை கிடைக்கவில்லை…

பிரபலமான ஒரு பாடகரின் புதல்வன் பெரியவா தரிசனத்திற்கு வந்திருந்தார். அவரும் சிறந்த பாடகர்தான்.

சிறிதுநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த பெரியவா திடீரென்று, “நான் இப்போ ஒரு பாட்டு பாடப்போறேன்” என்றார்.

எல்லோரும் பெரியவாளை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

உடனே பெரியவா தியாகப் பிரும்மத்தின் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

“நாத தனுமனிசம் சங்கரம்…” என்று தொடங்கி, அனுபல்லவியில், “சரிகமபதநி வர ஸப்த ஸ்வரம் வித்யா லோலம்” என்று பாடி நிறுத்தினார்.

பாடகர் பையனைப் பார்த்து, “உனக்கு ஞாபகம் இருக்கோ? இதைச் சின்ன வயசிலே நீ பாடிக் காட்டினபோது, இந்த வரிக்கு அடுத்த வரி மறந்து போய்த் தடுமாறினாயே…” என்று கேட்டார்.

“ஆமாம் பெரியவா… ரொம்ப வருஷத்துக்கு முன்னே.”

பாடகரின் பையன் அதிர்ந்து போனான். பெரியவாளுடைய நினைவாற்றல் உலகப் பிரசித்தம்.

பெரியவா தன் இயல்பான குரலில் சங்கீதமாகப் பாடியதைக் கேட்கும் மகத்தான பேறு அப்போது அங்கே கூடியிருந்தவர்களைத் தவிர, வேறு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்!?

“செவிகாள், கேண்மின்களோ” என்கிற தேவார வரி, அன்றைக்கு அர்த்தமாயிற்று.

அந்தப் பிசிறு தட்டாத கந்தர்வக் கானம் இன்றைக்கும் காதுகளில் ஒலிக்கிறது…

ஒருமுறை பெரியவா தரிசனத்துக்குப் போனபோது, பெரியவாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, வெல்வெட் துணியில் விசிறி தயாரித்து எடுத்துச் சென்றோம்.

விசிறியின் ஓரங்களில் மயில் இறகுகள்; நடுப்பகுதியில் ஜரிகையால் செய்யப்பட்ட சங்கு வடிவம் ஒருபுறம்; மறுபுறம் சக்கரம்.

பெரியவா விசிறியை வாங்கி வைத்துக் கொண்டார். ஆனால் அதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக ஒருமுறையாவது விசிறிக் கொள்ளவும் செய்யவில்லை.

“நீங்க எப்போ, எப்படி ஊருக்குப் போவேள்?”

“காலையில் புறப்பட்டு திருச்சி வழியாகப் புதுக்கோட்டை போவோம்…”

“திருச்சிக்குப் பக்கத்திலேதான் ஸ்ரீரங்கம். அங்கே ஜீயர் சுவாமிகள் இருக்கார். அவரிடம் இந்த விசிறியை நான் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு அப்பறமா புதுக்கோட்டை போங்கோ. செய்வீர்களா?”

“கண்டிப்பா பெரியவா.”

ஸ்ரீரங்கம் சென்று நாங்கள் விசாரித்தபோது, ஜீயர் ஸ்வாமிகள் கோயிலிலுள்ள தசாவதார சந்நிதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்று கொஞ்ச நேரம் காத்து நின்றோம். பின்னர் ஜீயர் எங்களை அழைப்பதாக ஒரு சிஷ்யர் வந்து தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் தெற்குக் கோபுரம் கட்டிய அவர்கள், ஒரு பழுத்த பழமாக ஒரு கட்டிலில் அமர்ந்து இருந்தார்கள். யப்பா என்ன ஒரு தேஜஸ்?

நாங்கள் பக்தியுடன் அவரைச் சேவித்துவிட்டு, “இந்த விசிறியை, காஞ்சிப் பெரியவா தாங்களிடம் சமர்ப்பிக்கச் சொன்னார்கள்…” என்று சொல்லி விசிறியை அவர்கள் திருமுன் வைத்தோம்.

ஜீயர் அதை மிகுந்த மரியாதையுடன் எடுத்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, இரண்டு முறைகள் தனக்காக விசிறிக்கொண்டார். பிறகு அதைப் பவ்யமாகத் தன்னருகில் வைத்துக் கொண்டார்.

நாங்கள் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விடை பெற்றோம்.

அன்று பெரியவா தயவில் எங்களுக்கு ஒரு வைஷ்ணவ ஆச்சாரியாரின் தரிசனமும், கல்கண்டு பிரசாதமும் கிடைத்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *