கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 51,249 
 

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப் பொறுத்தவரை எளிது. என் காரண அறிவும், நான் கற்றுத் தேர்ந்த கல்வி எனக்குக் கொடுத்திருக்கிற பின்புலமும் ஆவிகள் இல்லை என்று நான் அறுதியிட்டுக் கூற உதவி செய்யும். ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையிருந்ததில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை. ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.

ஆவிகள் மீதான நம்பிக்கையின்மை என் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தடையாக நின்றது. முதுகலையில் உளவியல் எடுத்துப் படித்த பின்பு, முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்த போது எனக்கு வழிகாட்டியாகக் கிடைத்த பேராசிரியர் என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன தலைப்பு பாரா நார்மல் பிஹேவியர் மற்றும் பாரா சைக்காலஜி. அதிலும் கடைசியாக நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரை ஆவிகள் பற்றியதாக இருந்தது. ஆவிகளை நேரில் கண்டதாகச் சொல்கிறவர்கள், ஆவிகளோடு தொடர்பு கொள்வதாகச் சொல்கிறவர்கள் இந்த மாதிரியான நபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட அனுபவத்திற்குப் பின் அவர்களது உளவியலில் ஏற்பட்டிருக்கிற பாதிப்பு குறித்துத்தான் ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையத்திலும், புத்தகங்களிலும் நான் தேடின ஆவிகள் பற்றிய அனுபவங்கள் காதுகளுக்குள் குரல் கேட்டல், நிழல் மனிதன் ஒருவன் தொடர்ந்து வருவது, படுக்கையில் தினமும் அருகில் உறங்கும் பெண் என விசித்திரமானவையும், வினோதமானவையுமான நிகழ்வுகளாக இருந்தன. என்னதான் இணையத்திலும், நூல்களிலும் இது சம்பந்தமான தகவல்கள் குவிந்து கிடப்பினும், நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறைந்த பட்சம் எழுபது சதவீதமாவது இருக்க வேண்டும் என்று என் வழிகாட்டிப் பேராசிரியர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
முப்பது சதவீதத்தை முடித்து விட்டு மீதி எழுபது சதவீதத்துக்குத் திணறிக் கொண்டிருந்தேன். சேந்தமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண்ணுக்கு ஆவி பீடித்திருப்பதாகவும், நாற்பது வருடங்களுக்கு முன் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதால் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஓர் இளைஞனின் ஆவிதான் அவள் மீது இறங்கியிருக்கிறதென்றும் நாமக்கல்லில் இருக்கிற என் சித்தப்பா தகவல் கொடுத்தார். ஆவி பீடிக்கும் சமயங்களில் ஆண்குரலில் பேசுகிறாளாம். நாற்பது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறாளாம். தன்னைக் கொன்றவர்களின் தலைமுறை தழைக்கக் கூடாது என்பதற்காகவே அந்தப் பெண்ணின் மீது இறங்கியிருப்பதாகவும், அவர்களை வேரறுக்காமல் விடமாட்டேன் என்றும் நடுத்தெருவில் வந்து வெறியாட்டம் போடுகிறாளாம். எல்லை முனியப்பன் கோயில் பூசாரியைக் கொண்டு அவளுக்குப் பேயோட்டும் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது போனால் நிறையத் தகவல்கள் சேகரிக்க முடியும் என்று என் சித்தப்பா சொன்னார்.

சேந்தமங்கலத்திற்குப் போவதற்காக மனதளவில் என்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான் நவநி மாமா அலைபேசியில் கூப்பிட்டார்.

‘மாமா எத்தனை வருஷம் ஆச்சு? லோக்கல் நம்பரா இருக்கு. எப்ப இந்தியா வந்தீங்க?’ என்றேன்.

‘நாலு நாளாச்சு. இப்போ ஏற்காட்டில் தங்கியிருக்கேன். உன்னைப் பாக்கணும். வர்றியா?’

மாமாவை வீட்டுக்கு வாங்க என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. ‘ மாமா, நாளைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. சேந்தமங்கலம் வரைக்கும் போகணும். நாளான்னிக்கு வரட்டுமா?’

‘இல்லை. நான் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பறேன். நீ அந்த வேலையை அப்புறம் பண்ணக் கூடாதா? நான் உன்னைப் பாக்கறது கூட அவ்வளவு சிரமமா?’ என்றார். அவரது குரலில் குற்றம் சாட்டும் தொனி இருந்தது.

அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் மிகுந்துதான் இருந்தது. சேந்தமங்கலம், பயணத்தை இன்னொரு நாள் ஒத்திப் போட்டு விடலாம். முதலில் நவநி மாமாவைப் பார்க்கலாம். பத்து வருடங்களிருக்குமா அவரைப் பார்த்து?

ஏற்காட்டில் அவரைப் பார்த்து விட்டு அங்கிருந்து சேந்தமங்கலம் சென்று விடலாம் என்ற திட்டத்துடன் என் ஆய்வுக்குறிப்புகளை ஒரு பையில் எடுத்துப் போட்டுக் கொண்டு, மறுநாள் காலை கிளம்பிப் பேருந்தில் ஏற்காடு பயணமானேன். வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. தெரிந்தால் நிச்சயம் போகவிட மாட்டார்கள்.

என் அத்தை பையன் நவநி மாமா என்கிற நவநீத கிருஷ்ணன் பத்து வருடங்களுக்கு முன் என் வாழ்வின் கதாநாயகன். அவர் உடையணிகிற நேர்த்தியும், நடையின் கம்பீரமும், மென்மையான அதே நேரம் அழுத்தமான பேச்சும், நான் இருக்கிறேன் ஆதரவாய் என்று சொல்லும், உதட்டில் நிரந்தரமாகவே தங்கியிருக்கிற புன்னகையும் எவரையும் பார்த்ததும் வசீகரித்து விடும். நான் அவரைப் பார்த்துப் பார்த்து, பெரியவனானால் இவரைப் போலவே நானும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இப்போது கூட தொண்ணூறு சதவீதம் அவரைப் போலவேதான் என்னைப் பாவித்துக் கொண்டு நடந்து கொள்கிறேன்.

அவரது வசீகரம் என்னைக் கவர்ந்தது போலவே என் அக்காவையும் கவர்ந்தது. நவநி மாமாவுக்கும் அக்காவைப் பிடித்திருந்தது. அக்கா பனிரெண்டாவது முடிக்கும் வரை, நவநி மாமாவும், அவளும் பழகிக் கொள்வதையும், நெருங்கிப் பேசுவதையும் எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. நவநி மாமாவின் பெற்றோர் அவருடைய சிறு வயதிலேயே ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவரது பாட்டியின் ஆதரவில்தான் படித்து வந்தார். எங்கள் குடும்பம் கொஞ்சம் வசதி கூடின குடும்பமாக இருந்த படியால் நவநி மாமா எங்களோடு நெருங்கி வருவது என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. கையில் காசு இல்லாவிட்டால் கவர்ச்சி, வசீகரம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?

குறிப்பாக எங்கே இவன் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய் விடுவானோ என்று அவருக்கு பயமிருந்தது. அந்த பயத்தாலேயே அக்கா கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகு நவநி மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பெற்றோர் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தனர். நவநி மாமாவும் புரிந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
அந்த நாட்களில்தான் நான் நவநி மாமாவுக்கு நெருக்கமானேன். அக்காவுக்கும், அவருக்குமிடையே கடிதப் பரிமாற்றத்துக்கும், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் நான்தான் உதவினேன். மாமா கொலுசு, மெட்டி, கைக்கடிகாரம், கைப்பை என்று விதவிதமாக என்னிடம் கொடுத்து அனுப்புவார். அக்காவிடமிருந்து இதுவரை ஒரே ஒரு பரிசுதான் அவருக்குச் சென்றிருக்கிறது.. ஒரு வெள்ளிக் குத்து விளக்கு. இதென்ன எண்பதுகளின் திரைப்படக் காதலர்கள் போல நடந்து கொள்கிறீர்கள் என்று நான் கிண்டலடித்தது ஞாபகம் வருகிறது. அக்காவுக்குக் கல்லூரி முடிந்ததும் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் நவநி மாமாவுக்கு துபாயில் மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. வெளிநாட்டு வேலை என்றால் என் அப்பா நிச்சயம் மனமுவந்து தன் பெண்ணைக் கொடுப்பார். பிரச்னை ஏதுமின்றி அக்காவைத் திருமணம் செய்து கொள்ளலாம். பூரிப்பாகவும், துள்ளலாகவும் துபாய் புறப்பட்டுப் போனார்.

அவர் போனபின் அப்பாவுக்கு வசதியாகப் போயிற்று. அமெரிக்காவிலிருந்து வந்த வரனை அக்காவுக்கு முடித்து அனுப்பி வைத்து விட்டார். துபாயை விட அமெரிக்கா பெரிய இடமாயிற்றே! தகவல் நிச்சயம் மாமாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் அக்கா திருமணத்திலிருந்து அவர் எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்ற தகவலே இல்லை, இப்போது என்னைக் கூப்பிடும் வரைக்கும்.

மாலையில் ஏற்காடு சென்று சேர்ந்ததும் அவர் அலைபேசியில் வழிகாட்டியபடி அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தேன். மான் பூங்காவுக்கு எதிரில் உள்ள ஓர் ஒற்றையடிபாதயில் சென்றால் மரங்கள் சூழ்ந்த ஓர் ஆடம்பரமான வில்லா வீடு. ஏதோ பயணியர் விடுதி போலிருந்தது. வாசலிலேயே மாமா நின்றிருந்தார். என்னை பார்த்து அதே ஆதரவுப் புன்னகையைக் காட்டி, ‘உள்ளே வா’ என்றார்.

இத்தனை வருடங்கள் மாமாவிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தின மாதிரித் தெரியவில்லை. அப்படியேதான் இருந்தார். கன்னங்கள் கொஞ்சம் சதை போட்டிருந்தன; தொந்தி கொஞ்சம் போட்டிருந்தது. ஆனால் முகத்தில் இப்போது நிரந்தரமாக ஒரு சோகக்களை தங்கி விட்டிருந்தது.

‘இத்தனை நாள் எங்கே போனீங்க மாமா?’ என்றேன்.

‘அயர்லாந்திலே இருக்கேன்’, என்றார். ‘உன் அக்காவுக்குக் கல்யாணம் ஆனதும் ரொம்ப நொந்து போயிட்டேன். பணம் இல்லாத்தத்துனாலதான் உங்க அக்கா எனக்குக் கிடைக்கலங்கற வெறியில, நிறையப் பணம் சம்பாதிக்கணும்னு தோணிச்சு. அயர்லாந்தில டப்ளினுக்கு ஒரு சாஃப்ட்வேர் டிசைனராப் போனேன். அங்கு நான் தயாரிச்ச வர்ச்சுவல் சிட்டி சாஃப்ட்வேர் இன்னிக்கு யு.கே முழுக்கப் பிரபலம். மாசம் பத்தாயிரம் டாலர் சம்பளம் குடுத்தான். இன்னிக்கு நேஷனல் பாண்டுகள்ல மட்டும் என் பேரில எண்பது லட்சம் ரூபாய் இருக்கு. ஆனால் என்ன பண்றது? இன்னும் தனியாத்தான் இருக்கேன்’ என்றார்.

‘கல்யாணம் பண்ணிக்கலயா, மாமா?’

‘முடியலடா. மறக்க முடியல உங்க அக்காவை. அவளோட எல்லா நினைவுகளையும் தூக்கிப் போட்டுரணும்னுதான் நினைக்கிறேன். ஆனால் முடியல. நான் தயாரிச்ச சாஃப்ட்வேர் பேர் என்ன தெரியுமா? அகல் விசி.’ என்றார்.

நான் புன்னகைத்தேன். அக்கா பெயர் அகல்யா. அவரால் இன்னும் மறக்க முடியவில்லைதான்.

பச்சை நிறத்தில் உருண்டையான ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரவத்தைக் கோப்பையொன்றில் ஊற்றினார். ‘நீ குடிப்பியா? காலேஜெல்லாம் முடிச்சிட்டே’ என்றார்.

‘சேச்சே அந்தப் பழக்கமெல்லாம் இல்லை’ என்றேன். நான் நண்பர்களோடு பியர் குடித்ததுண்டு. ஆனால் இது பிராந்தியோ விஸ்கியோ (இந்த இரண்டு பெயர்கள்தாம் எனக்குப் பொதுவாகத் தெரிந்தவை) தெரியவில்லை. அவர் முன்னிலையில் இன்னும் அதே பதினாலு வயதுச் சிறுவனாகத்தான் உணர்ந்தேன். அவர் ஒரு கோப்பை முடித்து விட்டு இன்னொரு கோப்பை என்று தொடர்ந்து கொண்டே இருந்தார்.சரிதான். தமிழ் சூழலில் காதல் தோல்விக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்தப் பாதையில்தான் இது செல்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

‘இது வாடகை வீடா?’ என்றேன். அப்போதுதான் அந்த வீட்டைக் கவனித்திருந்தேன். வீடு தூய்மையாக இருந்தது. தரையும் மரத்தாலானது. அங்கங்கே மலர் ஜாடிகள் வைக்கப்பட்டு, சுவர்களில் நவீன ஓவியங்கள் தொங்கவிடப்பட்டு, உயர்ரக தேக்கு நாற்காலிகளும், மேஜையும் கட்டிலுமாகத் திருத்தமாக இருந்தது.

‘இதுவா, இதை நான் வாங்கி ஏழு வருஷமாச்சு. இந்தியா வரும் போதெல்லாம் இங்கதான் தங்குவேன்’

‘ஏன் மாமா, ஒரு தடவை கூட எங்களை வந்து பாக்கணும்னு தோணல இல்ல?’ என்றேன்.

தான் பலமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பி அதற்கு முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கான மனவலிமையைத் தான் இதுவரை பெறவில்லை என்றும் கூறினார். அங்கே தான் வந்தால் வீணாகத் தகராறுதான் ஏற்படும் என்பதலாயே, எங்கள் உறவினர்களைப் பொறுத்தவரை தான் இறந்து போய்விட்டவராகவே இருக்க விரும்பியதாகவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு தான் அயர்லாந்தில் நிலைபெறுவதற்காகப் பட்ட சிரமங்களையும், அங்கு தான் நிகழ்த்திய சாதனைகளையும் விவரித்துக் கொண்டே போனார்.

அதிகாலை மூன்று மணி ஆகி விட்டிருந்தது. இதுவரையிலும் இரண்டு பாட்டில்களை முடித்திருந்தார். என்னால் என்னவென்று புரிந்து கிரகித்துக் கொள்ள முடியாத புலம்பல் ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்ட வண்ணமே இருந்தது. இதற்கு மேல் போனால் அவர் மயங்கி விழுவதற்கோ, வாந்தி எடுத்துவிடுவதற்கோ அபாயம் இருந்த போதிலும், இத்தோடு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறுவதற்குத் தயக்கமாகத்தானிருந்தது.

‘நான் காலையில சில டெலிகேட்ஸைப் பார்க்க வேண்டியிருக்கு. காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விட்டுப் பத்துப் பதினோரு மணிக்கெல்லாம் திரும்பி வந்துடுவேன். நீ இங்கேயே தூங்கிட்டிரு. நான் வந்ததும் ரெண்டு பேரும் ஏற்காடு சுத்திப் பார்க்கலாம்.’ என்றார். பிறகு என் அருகில் பார்வையைச் செலுத்தி, ‘அதென்ன பையில?’ என்றார்.

அது என் ஆய்வுக்கான குறிப்புகள் அதில் இருக்கின்றன என்று சொல்லி, என் ஆய்வு பற்றியும், ஆவிகள் பற்றியதான என் தேடுதல் பற்றியும் அவரிடம் விளக்கினேன்.

அவர் சிரித்துக் கொண்டார். ‘சரி. நீ அந்த சோஃபாவில படுத்துக்கோ. கம்பளி இருக்கு. நான் உள்ள கட்டில்ல படுத்துக்கறேன். காலையில எந்திரிச்சிட்டீன்னா குளிச்சு ரெடியாயிரு. கெய்சர்ல சுடுதண்ணி போட்டுக்க. ஃப்ரிட்ஜ்ல இருந்து ஏதாவது சாப்பிடு.’ என்றபடி உள்ளே போனவர் திரும்பி, ‘அந்தப் பையைக் கொடு’ என்று என்னிடமிருந்து வாங்கி மேஜை மேல் வைத்தார்.

படுத்து நெடுநேரமாகியும் மாமாவின் புலம்பல் அறைக்குள்ளிருந்து கேட்டபடியே இருந்தது. சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கி விட்டேன். காலையில் விழிப்பு வந்தபோது மணி ஏழரையாகியிருந்தது. மாமா உள்ளே இல்லை. வெளியே போயிருக்க வேண்டும். அவரது படுக்கைக்கு அருகில் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. நான் குளித்து விட்டுச் சிறிது நேரம் உள்ளேயே இருந்து அந்த வீட்டை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பிறகு சலிப்பு மேலிட வெளியே கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.

ஒரு உணவகத்தில் சிற்றுண்டியை முடித்து விட்டு, சற்று நேரம் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோ பிடித்தேன். அதன் ஓட்டுனர் இருநூறு ரூபாய் கொடுத்தால் ஏற்காடு முழுக்க சுத்திக் காட்டுகிறேனென்றான். லேடீஸ் சீட், பட்டுப் பண்ணை, கரடிக்குகை என்று சுற்றினோம். ஒவ்வொரு இடத்திலும் சார் போலாமா, சார் போலாமா என்று ஓட்டுனர் அவசரப்படுத்தியபடியே இருந்தான். இறுதியில் நான் பொறுமையிழந்து என்னைக் கொண்டு போய் மான் பூங்காவுக்கு அருகில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டேன்.

போகும் வழியில் ஓட்டுனர் என்னிடம், ‘ பாஸ், என்ன படிக்கிறீங்களா?’ என்றான்.

‘ஆமாம். பாரா சைக்காலஜி.’

‘நான் கூட யெம்மேங்க பாஸ். சோசியாலஜி. அண்ணாமலைல பண்ணியிருக்கேன். அதென்னங்க பாஸ் பாரா சைக்காலஜி?’

நான் விளக்கினேன்.

‘அட! அப்ப நீங்க ஜி.எச். பத்தித் தெரிஞ்சிகிட்டா உதவியா இருக்குமே!’

‘ஜி. எச்சா? ஏன் அங்க யாராவது ஆவி பார்த்த மன நோயாளிங்க இருக்காங்களா?’ என்றேன்.

‘அதில்லிங்க பாஸ். இங்க ஏற்காட்டில ஜி.எச்னா கோஸ்ட் ஹவுஸ். பேய் வீடு. உள்ள போக முடியாது. போலீஸ் தடுப்பு போட்டிருக்கு. தூர நின்னு வேணா பார்த்துக்கலாம்.’

‘அதென்னது அது? சொல்லுங்களேன்’ என்றேன்.

‘அதிருக்கும் பாஸ், ஏழெட்டு வருஷம். இங்கிலாந்தோ, அயர்லாந்தோ ஒரு ஃபாரின் நாட்டில இருந்து… நம்ம ஆள்தான்…பெரிய கைபார்ட்டின்னு நினைக்கிறேன். இங்க வந்து அந்த வீட்டை வாங்கினான். வாங்கி ஒரு மாசத்துக்கு ஆளு வீட்டை விட்டே வெளிய வரல. பெருங்குடிகாரன். வீட்டுக்குள்ள இருந்தே பாட்டில் பாட்டிலா குடிச்சே தீர்த்துருக்கான். அப்புறம் ஒரு நாள் தொண்டையில சுட்டுகிட்டுச் செத்துப் போயிட்டான். அப்ப அது பெரிய ந்யூசு. நான் அப்ப ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். நம்மூர் ஆளு ஒருத்தன் கையில துப்பாக்கி இருக்கறதே பெரிய ந்யூசு இல்லையா?…’

அவன் தொடர்வதற்காகக் காத்திருந்தேன்.

‘அப்புறம் போலீஸ் வந்து கேசெல்லாம் எழுதி…அவன் எந்த நாட்டில இருந்து வந்தானோ அங்க விசாரிச்சா இவனப் பத்தி ஒண்ணுமே தெரியல. கொஞ்ச நாள் காத்திருந்து பார்த்துட்டு, அநாதைப் பொணமாத்தான் எரிச்சாங்க. அப்பலேர்ந்து வீடு பூட்டித்தாங்கெடக்கு…’

‘ஆனா கொஞ்ச நாள்ல ஊருக்குள்ள ஒரு வதந்தி பரவ ஆரம்பிச்சுச்சு. தினம் சரியா பனிரெண்டு மணிக்கு பெட்ரூம்ல தானா விளக்கு எரியற மாதிரி. விளக்குன்னா, ஏதோ அகல் விளக்கு, நெய் விளக்கு மாதிரி. ஒவ்வொரு ராத்திரியும் சின்னதா தீபம் எரியறது ஜன்னல் வழியா தெரியறது. கூடவே விடாது அழுகைக் குரல். கேவல் சத்தம். ஒரு ஆம்பளை அழுதுகிட்டே புலம்பற மாதிரி. ரெண்டு, மூணு பேரு யதேச்சையா இதப் பார்க்கப் போய் ஜூரம் கண்டு படுத்த படுக்கையாயிட்டாங்க. இப்போ புதுசா அந்த ஆளோட ஆவி வெளிய வந்து உலாத்துறதாகவும் பேசிக்கறாங்க.’ என்றான்.

மான் பூங்கா வந்து விட்டது. ‘ அந்த வீடு எங்க இருக்கு?’ என்றேன். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை முற்றிலும் உணர்ந்தவனாக.

‘இங்கதாங்க. எதுத்தாப்பில ஒத்தயடிப்பாதை போகுதுல்ல. அதுக்கப்புறம் நிறைய மரம், வீடே தெரியாது. கொஞ்சம் உத்துப் பார்த்தாத்தான் தெரியும். உள்ளே போயிராதீங்க. உயிருக்கு நான் கேரண்டி இல்ல. அந்த கேஸ் டீடெய்ல்ஸ் வேணும்னா சொல்லுங்க. எஸ்.ஐ நம்ம ஆளுதான். அறிமுகப்படுத்தி வைக்கிறேன். வரட்டுமா பாஸ்!’ என்றான்.

நான் மான் பூங்காவுக்கு அருகில் இறங்கி எதிரில் தெரிந்த ஒற்றையடிப்பாதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆட்டோ ஓட்டுனர் முக்கு திரும்பப்போனவன் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து என்னருகில் நிறுத்தினான். ‘என்ன பாஸ் பேகை மறந்து ஆட்டோவிலேயே வுட்டுட்டீங்க. இந்தாங்க பாஸ்.’ என்றான். நான் என் பையை வாங்கிக் கொண்டு அவனுக்கு நன்றி சொல்லி வழியனுப்பினேன்.

எனக்கு ஏதோ புரிந்த மாதிரித் தெரிந்தது. சட்டென்று என் பையைத் தூக்கி ஜிப்பைத் திறந்து பார்த்தேன். உள்ளே பளபளவென்று வெள்ளிக் குத்து விளக்கு ஒன்று படுத்துக் கிடந்தது.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஜி.எச்

  1. உண்மையில் நன்றாக இருந்தது. தொடக்கம் கொஞ்சம் வளவள.

  2. I really enjoyed your story and final conclusion i did not expect and very heart touching story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *