ஸ்பரிசம்!
கதையாசிரியர்: வி.கே.லக்ஷ்மிநாராயணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 159

மகாலக்ஷ்மி பக்கத்து வீட்டு ஃப்ரெண்டை அழைத்துக்கொண்டு பார்க்குக்குச் சென்றதும் வாசல் கதவைத் தாழிட்ட கமலா விடு விடுவென்று புருஷன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
“என்னங்க !” கமலா அழைக்க விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் படுத்திருந்த சாரங்கன் அவளை நோக்கித் திரும்பி ‘என்ன’ என்பதுபோல் பார்த்தான்.
“கொஞ்சம் ஹாலுக்கு வாங்க. முக்கியமான விஷயம் ஒண்ணு பேசணும்.”
உடனே சாரங்கன் எழுந்து கட்டிலைவிட்டு இறங்கி ஹாலுக்குள் நுழைந்து சோஃபாவில் அமர்ந்தான். கமலாவும் கணவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“மகா நேத்து சாயங்காலம் மனசு வருத்தப்பட்டு ஒண்ணு சொன்னா. நீங்க அவகிட்ட முகம் கொடுத்து பேசறதில்ல. அவளைக்கண்டாலே வெறுத்துப் போய் ஒதுங்குறீங்க அப்படின்னு. ஏங்க இபபடி இரு க்கீங்க ? இன்னும் மகாவை உங்க மகளா ஏத்துக்க தயங்குறீங்களா…. பாவம்ங்க !தயவுசெய்து உங்கப் போக்க மாத்திக்குங்க !”:
“கமலா! எனக்கு மகாமேல கோபமில்ல. ஆனால் ஏனோ அவள்கிட்ட அப்பாவாக பழக மனசு இடம் கொடுக்கமாட்டேங்குறது!”
“நீங்க இப்படி பேசறது சரியில்லீங். 21 வருஷமா மகா நம்ம வீட்டில இருக்கா. நம்மக்கிட்ட பாசத்தோடும் அன்போடும் பழகறா. நம்மள உயிருக்குயிரான பெற்றோரா பாவிக்கிறா. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் நீங்கள் நடந்து கொள்றதுதான் உங்களுக்கு நல்லது. நீங்கள் இப்படி விட்டேர்த்தியா இருக்கும் பட்சத்தில் ஒருவேளை அவள் நமக்குப் பிறக்கவில்லை என்கிற உண்மையை அறிந்தால்மகாவோட மனசு சுக்குநூறா உடைஞ்சு போகாதா….அதுக்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா?”
“சரி கமலா ! நான் நாளையிலேர்ந்து முயற்சி செய்கிறேன்.”
“ப்ளீஸ்..மகாகிட்ட அன்போடு பழகுங்க. முகத்தில சிரிப்பை வச்சுக்கிட்ட அவள்கிட்ட பேசுங்க. மகா நம்மள நம்பி வந்தவ.அவளை உதாசீனம் செய்தால் அவள் எங்கு போவாள் ! நாளைக்கே கல்யாணம் காட்சின்னு நடக்கலாம். அப்போ நீங்க மகாவைவிட்டு தள்ளிப்போனால் பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க ? எல்லாத்தையும் உணர்ந்து செயல்படுங்க அப்புறம் உங்கள் இஷ்டம் !” கமலா எழுந்து செல்ல ஆயாசத்தோடு சாய்ந்து கொண்டான் சாரங்கன்.
திருமணமாகி வருஷங்கள் ஓடியும் கமலாவுக்கு குழந்தைப் பேறு கிட்டவில்லை. ஆஸ்தி பாஸ்தி என்று ஏராளமாய் இருக்கு. ஆனாலும் குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்காமல் போனதை நினைத்து பெருங்கவலை கொண்டனர் இருவரும். கடைசியில் வேறு வழியின்றி ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
நல்ல நாள் பார்த்து சற்றுத் தொலைவில் உள்ள ஒரு குழந்தை காப்பகத்துக்குச் சென்றனர்.
இருவரும் ஏற்கனவே பேசி வைத்தபடி ஒரு அழகான பெண்குழந்தை யைத் தேர்ந்தெடுத்தனர். காப்பகத்துக்கு கணிசமான ஒரு தொகையை செக் மூலம் வழங்கினான் சாரங்கன்.
வீட்டுக்குக் கொண்டவந்த குழந்தைக்கு மகாலக்ஷ்மி என்ற பெயரிட்டார்கள். ஆரம்பத்தில் மகாலக்ஷ்மியிடம் அன்பைக் கொட்டி மகிழ்ந்தான் சாரங்கன். ஆனால் நாள் செல்லச் செல்ல அவனுக்கு மகா மீது அன்பு குறைந்தது. அவள் இன்னும் வளர வளர இடைவெளி விட்டான். இன்னதென்று சொல்லமுடியாத வெறுப்பை வளர்த்துக்கொண்டான் சாரங்கன்.
மாறாக என்றும்போல் அதே பாசம், அன்பை மகாமீது காட்டி காட்டி மகிழ்ந்தாள் கமலா.
மறுநாள் காலை தந்தைக்கு காஃபி எடுத்துக்கொண்டு அவன் படுத்திருந்த அறைக்குள் வழக்கமான தயக்கத்துடன் நுழைந்தாள் மகாலக்ஷ்மி.
அப்பொழுதுதான் படுக்கையைவிட்டு எழுந்தான் சாரங்கன். எதேச்சையாகத் திரும்பியவன் கை பட்டு மகா கையில் இருந்து டம்ளர் எகிறி மொத்த காஃபியும் சாரங்கன் உடலில் தெறித்து வழிந்தோடியது.
சாரங்கனுக்கு மூர்க்கத்தனமாய் கோபம் வந்தது. ” தடிமாடு ! காஃபி டம்ளரக்கூட ஒழுங்கா வச்சிக்கத் துப்பில்ல ” என்றபடி மகா முதுகில் ஓங்கி அறைந்தான்.
ஆடிப்போன மகாலக்ஷ்மி உடனே சுதாரித்துக்கொண்டாள். திடீரென அவள் முகத்தில் பிரகாசம்.கண்களில் களிப்பின் எதிரொலி. உடல் சந்தோஷப் படபடப்பில் ஆடிக்கொண்டிருந்தது.
மகாலஷ்மியிடம் காணப்பட்ட எதிர்மறையான ரியாக்ஷ்ன் சாரங்கனை குழப்பியது. அதற்கான விளக்கத்தை மகாவே கூறினாள்.
“அப்பா, நேற்றுவரை என்னை நீங்கள் உங்கள் தோளில் போட்டுக் கொஞ்சியதாக நினைவில் இல்லை. ஆசையோடு உங்கள் கையைப் பற்றியபடி எங்கும் வெளியில் சென்றதாகவும் தெரியவி ல்லை..என்னைப் பார்த்தாலே வெறுத்து ஒதுங்குகிறீர்கள். இதையெல்லாம் நினைச்சு நான் உள்ளுக்ள்ளயே அழுதிருக்கேன். அம்மாவுக்கும் தெரியும். ஆனால் இன்று எதிர்பாராமல் காஃபி உங்கள் மீது கொட்டி விட்டது. அதற்கு கிடைத்த பரிசு உங்களின் கோபம் கொண்ட பளார் அடி! அட்லீஸ்ட் அதுக்காகவாவது உங்கள் கை என் முதுகில் பட்டதே! அந்த ஸ்பரிசம்…அது ஒன்றே போதும் டாடி!”
மகாலக்ஷ்மி தைரியமாக வாயைத் திறந்து தன் மனத்தில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தாள்.
மகாவின் ஒவ்வொரு வார்த்தையும் சாரங்கன் மனத்தைச் சுற்றி இருந்த பாறாங்கல்லை பொடிப் பொடியாக்கியது. மனம் நிர்மலமாகியது.
சட்டென்று மகாவின் இரு உள்ளங்கைகளையும் பற்றி தன் நெற்றிமீது வைத்தபடி குலுங்கி அழ ஆரம்பித்தான் சாரங்கன்.
“என்னை மன்னித்துவிடு மகா! இத்தனை நாள் நான் உன்னை உதாசீனம் செய்ததற்கு வேதனைப்படுகிறேன். உன் அருமை புரியாமல் உன்னை அலட்சியப்படுத்தியதுக்கு வெட்கப்படு கிறேன். என் அன்புக்காகவும் பாசத்துக்காகவும் உன்னை எப்படியெல்லாம் ஏங்கவைத்தேன்! சே…நான் மனுஷனே இல்ல…”
“ஐயோ…அப்பா..கண் கலங்காதேள். மனசு தாங்காமல் அப்படி பேசிவிட்டேன். நீங்கள்தான் என்னை மன்னிக்கவேண்டும்….”
இந்தக்காட்சியை அறைக்கு வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கமலாவுக்கு நெகிழ்ச்சியில் கண்கள் பனித்தன. இத்தனை நாளாக நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்த வேதனையும்கவலையும் அவள் மனதை விட்டொழிந்தன.