வேலம்மாவுக்கு விடுதலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 2,112 
 
 

(முன் குறிப்பு – இந்தியா விடுதலை பெற்றது 1947ம் ஆண்டு என்பதை அறிவோம். ஐம்பது ஆண்டுகள் கழித்து இந்த கதை 1997ல் நடப்பது போல் நான் எழுதியிருக்கிறேன்.)

“பாட்டி…இன்னிக்கி ராமரு கதை, ராவணன் கதை எல்லாம் வேணாம். வேறெ கதை சொல்லு…” வேலம்மாவின் பேரன் தெளிவாகக் கேட்டான்.

“உனக்கு புரியற வயசோ என்னவோ, எனக்கு சொல்ற வயசு எப்பவோ வந்தாச்சுடா, குமாரு. எல்லா மனுசங்க வாழ்க்கையும் கதைதான் போயேன்.”

வேலம்மா தன்னுடைய கதையையே சொல்ல ஆரம்பித்தாள்.

எத்தனையோ வருசம் ஓடிடுச்சி. ஆனா நெஞ்சுல அன்னக்கி ராத்திரி மட்டும் நல்லாவே தங்கிடுச்சி. நடுநிசி தாண்டி, நாய்கூட குரைக்கறதை நிறுத்திடுச்சி. எனக்குதான் தூக்கம் பிடிக்கலை…பாயில புரண்டேன்…மனசுல ஏதோ பயம். நெஞ்சு திக்கு திக்குனு அடிச்சுகிச்சி.

நாலு நாளுக்கு முன்னால என் புருசன் – அதான்டா, உன் தாத்தா – வீட்டைவுட்டு போனாரு. அப்ப நான் அவருகிட்ட சொன்னதை நினைச்சுகிட்டேன்.

“காந்தி சொல்றாப்போல உங்களால இருக்க முடியாதா? மத்தவங்களோட சேந்துகிட்டு பிரிட்டுசுகாரவங்களை பழிவாங்க போவேணாம்…அவங்கிட்ட மாட்டினா…நீங்க திரும்ப முடியுமா? வேணாங்க…இந்த எட்டு வயசு பிள்ளையை வச்சிகிட்டு நான் தனியா என்ன செய்யறது?”

என் கண்ணு ரெண்டும் குளம்…ஒண்ணுமே பேசாம புருசன் இருட்டுல மறைஞ்சிட்டாரு. யாரோ பிரிட்டுசு ஆபீசரு எங்க ஊர் பக்கமா வாரானாம்… அவனை ‘கவனிக்கணும்னு’ போனாரு.

வாசல் கதவை யாரோ தட்டினாப் போல இருக்கவே, முனகிக்கிட்டே புரண்டு படுத்தான் கந்தன்…அதான் உன்னை பெத்த எம்புள்ளை…அதான் அவனுக்கு அப்ப எட்டு வயசு…

சிம்னி வௌக்கை பெரிசு பண்ணி கந்தன் முவத்தை பாத்தேன்… காந்தி, நேருன்னு பேருகளை சொல்லிப் பாத்தானே தவுர பிரிட்டிசுகாரவங்க இந்தியாவை அடிமையா வைச்சருக்கறது பத்தி அவனுக்கு புரியலை. அடிக்கடி அவனோட அப்பா நாளு கணக்கா வீட்டுக்கே வராம இருக்கறதும் புரியலை.

கதவை தொறந்தேன். ஒரு குள்ளமான ஆளும் அவன்கூட ஒரு சின்ன பையனும் இருந்தாங்க. கையிலே அரிக்கேன் வௌக்கு வைச்சிருந்த குள்ள ஆளை எப்பவோ என் புருசன்கூட பாத்திருக்கேன். அவன் எதாச்சும் சேதி கொணாந்தா நாடு இருக்கற நில வரத்துல அது நல்ல சேதியாவே இருக்காதுன்னு நான் நினைச்சது சரியாப் போச்சு.

“வேலம்மா..சீக்கிரமா என்கூட வா புள்ளெ…அவசரமா போவணும்”

“என்ன ஆச்சுடா? என் புருசன் எங்கே…?” துக்கத்தை அடக்க முடியாம அழுதுட்டேன்.

“அழுவாதே…என்கூட வா…அங்கே போய் பேசிக்கலாம்…”

“கந்தன் தூங்கறானே…பிள்ளையை தனியா உட்டுட்டு எப்படி?”

“இந்த பையனை கந்தனோட உட்டுட்டு போவலாம்…சீக்கிரமே நீ திரும்பிடலாம்”

சின்ன பையன் தலையை ஆட்டிச்சி…அதுங்கிட்ட சிம்னி வெளக்கை குடுத்து உள்ளே அனுப்பிட்டு, தலையை கோதிகிட்டே குள்ள ஆளு காட்டின வழியிலே போனேன்.

அரிக்கேன் திரியை சின்னதாகிட்டு குள்ள ஆளு வேகமா நடந்தான். நானும் அவன் பின்னாலேயே பயத்தோடத்தான் நடந்தேன். என் புருசனை எந்த கோலத்துல பாக்கப் போறேனோன்னு மனசு பதறிகிட்டே நடந்தேன்.

வயல், வாய்க்கால், பாத்தி, பயிரு, கரும்புத்தோட்டம், கருவேல மரம்னு எல்லாத்தையிம் கடந்து போனா பாறையும் பள்ளமும் வரும். எப்பவோ ஒரு தடவை என் புருசன்கூட அந்தப் பக்கம் போனது நாபகம் வந்தது. அங்கதான், உன் தாத்தாவும் அவரு சகாக்களும் பிரிட்டுசு காரவங்களுக்கு எதிப்பா புரட்சி பேசுவாங்க… மணிக்கணக்கா, ரெம்ப ஆவேசமா பேசுவாங்க. உன் தாத்தா நல்லாவே பேசுவாரு…

நாங்க நடந்துகிட்டே இருந்தப்போ நரிங்க போடற ஊளை சத்தம் கேட்டுது. அந்த நேரத்துல அந்த

சத்தம் என்னை ஒரு உலுக்கு உலுக்கிடுச்சி. வரப்புமேலே நான் அப்படியே உக்காந்துட்டேன்.

“என்ன வேலம்மா…குந்திட்டியே…எந்திரி போவணும்”

“என்ன ஆச்சுன்னு சொல்ல மாட்டியா? இப்டி போயிகிட்டே இருந்தா?”

“இதோ வந்தாச்சு தானே? சூ…சூ…பேசாதே…” குள்ளன் மெதுவா சொல்லிகிட்டே தூரத்துல எதையோ காட்டினான்.

உத்துப் பாத்தேன்…பள பளன்னு…மின்மினி பூச்சிகளா? வௌங்கலை…

“அதெல்லாம் பிரிட்டுசு சிப்பாய்ங்க கையில இருக்கற கத்தி…பள பளன்னு மின்னுது”

ஐயைய்யோ…சிப்பாயிங்க யாரை தேடறாங்களோ? மனசு அலையறதாலே புத்தி தெளிவா இல்லை..ஆனா, சட்டுனு புரிஞ்சிப் போச்சு…வேற யாரை தேடுவாங்க? என் புருசனைத்தான்.

சட்டுனு என் கையைப் பிடிச்சு வேகமா இழுத்துகிட்டு குள்ளன் சரிவான அந்த பள்ளத்துல இறங்கினான். பள்ளத்துலே ஆறு பேர் குனிஞ்சு யாரையோ பாத்துகிட்டு நிக்கற மாதிரி இருந்தாங்க. கிட்ட போனதும்தான் என் புருசன் உடம்பு பள்ளத்துல இருந்தது தெரிஞ்சுது.

“அடப்பாவி மனுசா..போயிட்டியா…?” அப்படின்னு கதறணும்போல இருந்திச்சு… குள்ளன் என் வாயை அடைக்கிறதுக்கு முன்னாலே சிப்பாயிங்களோட பள பள கத்தியின் நெனப்பு என் கத்தலை நிறுத்திடுச்சு.

பள்ளத்துல உக்காந்து, புருசன் தலையை என் மடியிலே வைச்சுகிட்டு அழுதேன். அவரு மார்லேயும் கையிலேயும் துப்பாக்கி குண்டு பட்டு இரத்தம் உறைஞ்சு போய் கிடந்தது. உசிரு போய் எவ்ளோ நேரமாச்சுன்னு தெரியலே.

“வேலம்மா… நாங்களும் ஆடிப்போய்தான் நிக்கறோம்… எங்களாலெ ஒண்ணுமே செய்யமுடியலே…உன் புருசனோட உடம்பைதான் தூக்கிட்டு வர முடிஞ்சுது. அந்த வெறிபிடிச்ச சிப்பாயிங்க எங்களையும் துரத்திகிட்டு வராங்க. நீதான் பாக்கறயே…”

நான் அழுவறதை நிறுத்தினேன். சட்டுனு ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். என் புருசன் நாட்டுக்கு குடுத்த உசிருக்கு மதிப்பு வேணாமா? நாட்டு விடுதலைக்கு பாடு படற இந்த ஆளுங்களையாவது காப்பத்த முடியுமான்னு பாக்கலாம். அப்பதானே என் புருசன் நாட்டுமேல வைச்ச பக்திக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கும்?

எழுந்து நின்னேன். “வாங்க, போவலாம்… எல்லாரும் என் வீட்லே கொஞ்சநாள் தலைமறைவா இருக்கலாம்..”

“உன் வீட்லயா?”

“என் புருசன் உசிரோட இருந்தா எங்க வீட்டுக்கு வருவீங்கல்ல?”

“உன் வீட்டுக்கு மட்டும் சிப்பாயிங்க வரமாட்டாங்களா என்ன?” கேலியோ இல்லை உண்மை தெரியாமலோ கேட்ட ஆளை ஏறிட்டு பாத்தேன். அவன் புதுசா சேந்தவனா இருப்பான்… விவரம் புரியாதவன்.

“என் வீடு இருக்கறது பிரிட்டுசு இந்தியாவுல இல்லேன்னு உனக்கு தெரியாது போல…பிரெஞ்சு காரவங்க பகுதியிலதானே இருக்கு…எங்க பக்கமா பிரிட்டிசு சிப்பாயிங்க வரமாட்டாங்க… வரக்கூடாதாம்…என் புருசனுக்கு இதெல்லாம் நல்லா தெரிஞ்சுதானே இத்தனை வருசமா எதிப்பு, புரச்சின்னு நின்னாரு…இதுலெயே அந்த மனுசன் உசிரு போயிடுச்சே..”

என்னாலே மேலே பேச முடியாம தொண்டை அடைச்சுது.

புருசன் உடம்பை ஆளுங்க தூக்கிகிட்டு பிரஞ்சு பகுதியில இருந்த என் வீட்டுக்கு வேகமா நடந்தாங்க. நானும் அழுதுகிட்டெ பின்னால நடந்தேன்.

விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் நடுவுல எல்லைக் கோடு …அந்த எல்லையிலேருந்து

ஒரு மைல் தொலைவுலே பிரஞ்சு பகுதியிலேதான் உன் தாத்தா வீடு கட்டினாரு…அந்த காலத்துல பிரிட்டிசு சிப்பாயிங்க பிடிச்சிடுவாங்களோன்னு பயந்து அடிக்கடி பாண்டிச்சேரிக்கு நிறைய பேர் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க…பிரிட்டிசு காரவங்களுக்கு யார் எதிரிங்களோ அவங்களை பிரெஞ்சு காரவங்களுக்கு ரொம்பவே புடிக்கும்… அதனாலே எங்களுக்கு அந்த சின்ன ஊர்ல தொந்தரவே இல்லெ..

கந்தனுக்கு – அதான்டா உன் அப்பனுக்கு – வயசு பத்து…அப்ப எனக்கு அழைப்பு வந்துடுச்சி. பிரிட்டிசு சிப்பாயிங்க கிட்டே நான் மாட்டிகிட்டேன். ஏதோ நினைப்புல ஒரு நாள் நான் வயலு வரப்பெல்லாம் தாண்டி அவங்க பகுதியிலே நடந்து போனப்போ என்னை பிடிச்சிட்டாங்க…ரொம்ப காலமா எனக்கு வலை விரிச்சி காத்துகிட்டு இருந்தாங்கன்னு அப்பறம்தான் தெரிஞ்சுது.

நான் அவங்களுக்கு எதிரா பெரிய சதி செஞ்சவளாம். அந்த மாதிரி சதி செஞ்ச ஆளுங்களுக்கு நான் பதுங்கறதுக்கு இடம் தந்தவளாம். என்னை செயில்ல கூட போட்டாங்க. நான் என்ன தியாகியா என்ன? கும்பலோட ஒருத்தியா செயிலுக்கு போனவ. அவ்ளோதான். நல்ல காலமா, அடுத்த சில மாசத்துல இந்தியாவுக்கு விடுதலை வந்துடுச்சு. செயிலேருந்து எல்லாரையும் விட்டுட்டாங்க…

ஆனா…ஊருக்கு திரும்பின எனக்கு வேறே ஒரு கொடுமையான செயிலு காத்துகிட்டு இருக்கும்னு நான் நினைக்கவேயில்லை. இந்த செயில்லதான் நான் இன்னமும் இருந்துகிட்டு இருக்கேன்…

என்னை நடத்தை கெட்டவன்னு ஊர்காரவங்க ஏசினாங்க…எனக்கு உலகமே இருண்டுடிச்சி. எதுவுமே புரியலெ…என் ஊட்டுக்கு ஆளுங்க கண்ட நேரத்துல வந்துட்டுப் போனாங்களாம். புருசன் போனதுலேருந்து இப்படித்தான் என் வயித்தை கழுவினேனாமே…வாய் கூசாம ஏசினாங்க…என் நடத்தை கெட்ட குணத்துக்கு செயிலேயே வைக்காம ஏன் வெளியே உட்டாங்கன்னு கேட்டாங்க.

இதெல்லாம்கூட எனக்கு பழகிடும்னு பட்டுது…இதைவிட பேரிடியா இன்னொரு விசயம் நடந்தது. என் புள்ளை கந்தனோட மனசை கலைச்சுட்டாங்க. என்னை பத்தி அவனுக்கு தாங்க முடியாத அவமானம். என்னைவிட்டு ரொம்ப தூரம், எங்கெயோ ஓடிட்டான். என்னால் தாங்கவே முடியலே…வருச கணக்கா தேடினேன்…கண்டு பிடிக்கவே முடியலே.

என் முகத்துலே எத்தனை சுருக்கம் பாத்தியாடா குமாரு? இப்ப எனக்கு என்ன வயசுன்னு கேட்டா சரியா சொல்ல தெரியாது. எண்பதை தாண்டிடுச்சா? தெரியலையே…நமக்கு விடுதலை வந்தே அம்பது வருசமாச்சே, ராசா.

கந்தன் எப்படி ஒரு நாள் மாயமா மறைஞ்சானோ அப்படியே திடீர்னு ஒரு நாள் என் முன்னால வந்து நின்னான். அவன் பெரிய ஆளா வளந்து, கல்யாணம் கட்டி, உன்னையும் பெத்துகிட்டு வந்து நின்னான். அவனால என்னை உட்டுட்டு எப்படி இருக்க முடிஞ்சதுன்னு எனக்கு தெரியலெ. அவன் எங்கே போனான், என்ன செஞ்சான், எப்படி வளந்தான் – இதெல்லாத்தையும் நீதான் அவங்கிட்ட கேக்கணும். நான் அதை கேக்கறபோதெல்லாம் என் வாயை அடைச்சிட்டான்.

“அம்மா, என் கூட வந்துடு…ஆனா பழசெல்லாம் பேச கூடாது” இப்படின்னு சொல்லி அவன் என்னை வைச்சு காப்பாத்தறதா கூப்புட்டான்.

“பழசு இல்லேன்னா புதுசுக்கு ஏதுடா மவுசு?”

“நீ செஞ்ச காரியத்துக்கு எப்பவுமே மவுசு கிடையாது” ன்னு கத்தினான்.

“நான் செஞ்சது எதுவுமே தப்பு கிடையாதுடா கந்தா” இப்படி கதறலாம்னு நெனச்சேன். ஆனா, செய்யலே, வாயை பொத்திகிட்டு அவனோட புறப்பட்டு வந்துட்டேன்.

மறுபடியும் என் கந்தனை வுட்டுட்டு என்னால இருக்க முடியாது, இருக்கணுமா? அவன் என்னிக்கி கோவத்தை குறைச்சி கொஞ்சமாவது நிதானமா எங்கிட்ட பேசறானோ அப்ப என் கதையை அவனுக்கு சொல்லிக்கலாம்னு கிளம்பினேன்.

“இன்னி வரைக்கும் கந்தன்கிட்ட சொல்றதுக்கு சரியான நேரம் வரலே. ஆனா உன்கிட்ட யாவது கதையா சொல்லலாம்னு இப்ப கொட்டிட்டேன்.”

நான் பிரஞ்சு பகுதியில வீட்டை வெச்சிகிட்டு இருந்தனே தவிர, என் புருசன் உசிரை குடிச்ச அந்த பிரிட்டுசு காரவங்களை எப்படியாச்சும் நாட்டைவிட்டு துரத்தணும்னு ஒரு வெறி வந்துச்சி…அந்த காலத்துல நம்ம நாட்டு சனங்களுக்கு இருந்த வெறி என்னையும் தொத்திகிச்சு. என் புருசன் ஏன் புரட்சியில இறங்கினாருன்னு வெளங்கிச்சு. நேரடியா என்னால ஒண்ணும் செய்ய முடியலெ. ஆனா, பிரிட்டுசுகாரவங்களை தாக்கிட்டு வந்த என் புருசனோட சகாக்கள் எப்ப வந்தாலும் ஊட்டுல தங்க இடம் குடுத்தேன். சாப்பாடு இருந்தா போட்டேன். தண்ணி இருந்தா குடுத்தேன். ஆனா, என் மானத்தை மட்டும் யாருக்கும் விலை பேசினதே இல்லைடா, குமாரு. இந்த உண்மை தெரியாத ஊர் சனங்க என்னை ஏசி பேசினாங்க. நான் அதை பத்தி சட்டை செய்யவேயில்லை. இந்த விசயம் கந்தனுக்கு இன்னமும் புரியலையேடா… என் தலைவிதி இப்படி.

“எனக்கு இத்தனை நேரம் பேசினதுல மூச்சு வாங்குதுடா… குமாரு, போய் ஒரு தம்ளர் தண்ணி கொண்டா…”

கையால புடவைத் தலைப்பை விசிறி கொஞ்சம் ஆசுவாச படுத்திகிட்டேன். கண்ணை மூடின போது பள்ளத்துல என் புருசன் இரத்தக் கறையோட கிடந்த காட்சி தெரிஞ்சுது.

“இந்தா தண்ணி…நிதானமா குடி…”

கையில தம்ளருடன் வந்தது குமார் இல்லை…கந்தன்!

“குமார் எங்கடா? அவங்கிட்டதானெ நான் தண்ணி கேட்டேன்…”

“நீ இதுவரைக்கும் அவனுக்கு சொன்ன பழைய கதை முழுக்க நான் கேட்டுகிட்டு இருந்தேன். இத்தனை நாள் பொறுமையே இல்லாம, உன்னையும் பேசவுடாம, நான் உன்னை கண்டபடி ஏசிட்டேன். நீ எனக்காக மட்டுமில்லெ நம்ம நாட்டுக்காகவும் முடிஞ்சதை செஞ்சிருக்கே. நாட்டுக்கு விடுதலை கிடைச்சு அம்பது வருசமாச்சு. ஆனா, உனக்கு விடுதலை இல்லாம நான் தப்பு செஞ்சிட்டேனே…என்னை மன்னிச்சிடு.”

கந்தன் கண் கலங்கி என் அருகே உட்காந்தான். தம்ளரை கீழே வைச்சிட்டு, கந்தனுடைய கையை என் வரண்ட கையில எடுத்து வைச்சபோது நடுங்கிய என் கையை கந்தன் இறுக பிடிச்சிகிட்டான். அவன் சின்ன குழந்தையா இருந்தப்போ என் விரலை அவன் குட்டி விரல்களில் எப்படி பிடிச்சிக்குவானோ அது போல உணர்ச்சியில நான் தத்தளிச்சு போயிட்டேன்.

“எனக்கும் இன்னிக்கி விடுதலை கெடச்சிடுச்சுடா, கந்தா!” குமார் ஓடிவந்து எங்க ரெண்டு பேரையும் கட்டிகிட்டான்.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *