வெட்டுப்பட்டவை
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 146

இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின.
1. ஹெலன்.. இளம் விதவை.அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். மாரடைப்பு காரணமாக. ஹலனுக்கும் அவருக்கும் பதினைந்து ஆண்டுகள் வயது வித்யாசம். கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர் ஹெலன்
2. மருத்துவர் ரகுராமன். மனோதத்துவ மருத்துவர். சமீபத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் ஞாயிறில் அவர்களின் கூட்டத்திலிருந்துத் தப்பிப்பதற்காக பிரார்த்தனைக்கு வருவதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். நன்கு .புல்லாங்குழல் வாசிப்பார்..
3. தோழர் கே. குப்புசாமி.எண்பதுகளில் பொதுவுடமை இயக்கத்தில் உறுப்பினராகவும் தீவிரமானவராகவும் இருந்தவர். அப்போது கொஞ்சம் தெரு நாடகங்களில் நடித்திருப்தை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.அதுவும் அயனஸ்கோவின் த லீடர், சங்கரப்பிள்ளையின் கழுதையும் கிழவனும் நாடகங்கள் தமிழில் நடத்தப்பட போது அதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தது.. இப்போது ரியல் எஸ்டேட் வியாபாரம். பொதுவுடமைக்கட்சிகளுக்கு தாரளமாக நன்கொடை தருவது அவர் வழக்கம். பழக்க விசுவாசம் என்பார். ஆளும்கட்சிகளுக்கு அதிகம் தருவார். அவர் தேவ சங்கீதம் கேட்க இங்கு வருவார்.
4. நவீன சூத்திரதாரி என்ற சிறுபத்திரிக்கையைத் தொண்ணூறுகளில் நடத்திய ஆதி பக்தவச்சலம் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார்.தொகுப்பாக வந்ததில்லை. தீவிர பிஜேபி ஆதரவாளராகி விட்டார். ஜக்கி வாசுதேவ் முகசாயல் வந்து விட்டது அவரின் பேச்சிலும் கூட ஜக்கி பாதிப்பு. இப்போது. அவரின் முகநூல் குறிப்புகள் படிக்கப் பதட்டமாக இருக்கும். நிறைய வசவுகள் எதிர்கட்சிக்காரர்கள் மீது இருக்கும். பயப்படவே வைக்கும்.
5. பாதிரியாரின் பேச்சில் பவுத்தம், ஜென், மற்றும் கிறிஸ்துவோடு பல விசயங்கள் இருப்பதால் அவற்றைக் குறிப்பெடுக்க வருபவர் குருலிங்கம். இளம் பெண். கிறிஸ்துவ இலக்கியத்தில் போதனை என்றத் தலைப்பில் ஆய்வு செய்பவர்.
ஞாயிற்று கிழமை வழக்கம் போல லாரன்ஸ் பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இன்று தேவாலயத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஈக்கள் மொய்த்தத் தின்பண்டம் போல்.
தேவாலயத்தினுள் ஆண்கள் அமர பதினைந்து வரிசையில் பத்து சேர்கள் வீதம் இடதுபுறமும், பெண்கள் அமர அதே போல வலது புறமும் போடப்பட்டிருந்தது
சிறுவர்,சிறுமியர் பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்திருந்தார்கள்.கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்தார்கள்.
எலுசம்மா முன்னால் போய் கம்பளத்தில் அமர்ந்துக்கொண்டார்.அவளது மடியில் மேரி அமர்ந்திருந்தாள்.
“மேரி, கீழெ உட்காரு. ஃபாதர் பாத்துட்டே இருக்கார்.அப்புறம் பூசெ முடிஞ்சதும் உன்னெ கூப்பிட்டு திட்டுவார்.”
“சரிம்மா நான் கீழேயே உட்காருறேன்”
எலுசம்மா மடியிலிருந்து இறங்கி கீழே கம்பளத்தில் உட்கார்ந்தாள் மேரி. முதல் வாசகம் முடிந்த பின், பாடல் குழுவினர் பாடல் பாடினார்கள். அதை தொடர்ந்து இரண்டாம் வாசகம் படிப்பதற்காக, அலோசியஸ் எழுந்து பீடத்திற்குச் சென்றார்.
மைக் முன்னால் நின்று, அலோசியஸ் பைபிளை புரட்டினார்.
பிறகு எதிரே இருந்த மக்களை பார்த்தார்,
திருதூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்.
அதிகாரம் – 1 : 18 முதல் 22 வரை.
சகோதர,சகோதரிகளே,
“நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும்,’இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே. நானும், சில்வானும், தீமொத்தேயுவும் உங்கள் இடையே இருந்த போது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிருஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என்று உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறவேறுகின்றன. அதனால் தான் நாம் கடவுளை போற்றி புகழும் போது,அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களுடன் சேர்த்துள்ளார். இவ்வாறு கிருஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையை பதித்தார்”
அலோசியஸ் மீண்டும் மக்களை பார்த்து, “இது ஆண்டவரின் அருள்வாக்கு” என்றார் சற்றே புன்னகையுடன். அவர் தோள்கள் விரிந்தன சட்டென.
அனைவரும், இறைவனுக்கு மகிமை.
அலோசியஸ் இரண்டாம் வாசகத்தை படித்து முடித்து விட்டு பைபிளை மூடி வைத்தார். பிறகு கீழே இறங்கினார்.
அடுத்ததாக நற்செய்தி வாசகம் படிப்பதற்காக பாதிரியார் லாரன்ஸ் இருக்கையி லிருந்து எழுந்தார். அப்போது பாடல் குழுவினர் “அல்லேலூயா… அல்லேலூயா… அல்லேலூயா… அல்லேலூயா…” என்று பாடி நிறுத்த, பாதிரியார் “‘நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா…” என்று பாதிரியார் ராகத்துடன் பாட, தொடர்ந்து பாடல் குழுவினர்,
“அல்லேலூயா… அல்லேலூயா… அல்லேலூயா.. அல்லேலூயா…”
பாடி முடித்தனர்.அலைகளின் இரைச்சல் போல் ஓய்ந்தது.
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,அவர் அணிந்திருந்தவெள்ளை அங்கியின் மீது போட்டிருக்கும் சிவப்பு அங்கியை சரிசெய்தார்.சிலர் அப்போது தான் தேவாலயத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள்.
பாதிரியாரின் கண்கள் அந்த ஐந்து பேரைத் தேடின,
“பிலோ, நற்செய்தி வாசகம் வந்திருச்சு, இப்ப சர்ச்சுக்குள்ளெ போன ஃபாதர் ஒரு மாதிரியா பார்ப்பார். அப்புறம் பிரசங்கத்துல நம்மளெ மேற்கோள் காட்டி பேச ஆரம்பிச்சிருவார். அவர் அதிலெ கில்லாடி “
“அதுக்குன்னு வெளியவே நின்னிட்டு இருக்க முடியுமா? வாக்கா உள்ளே போலாம்”
பிலோவும், லிசாவும் தங்கள் சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தார்கள்.
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு, பைபிளை திறந்தார். மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள்.சடவுடன் சில் முதியோர்கள் எழுந்தார்கள்.
“பிதா,சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால…”
அனைவரும் நெற்றியில் சிலுவை அடையாளத்தை போட்டுக்கொண்டு, “ஆமென்” என்றார்கள்.
“புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து,வாசகம். அதிகாரம் 15. இறைவசனங்கள் 18 முதல் 21 முடிய…
“அக்காலத்தில் இயேசு தன் சீடரை நோக்கி கூறியது:
உலகு உங்களை வெறுகிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.நீங்கள் உலகை சார்ந்தவர்களாக இருந்திருந்தால்,தனக்கு சொந்தமானவர்கள் என்னும் முறையில் உங்களுக்கு அன்பு செலுத்தி இருக்கும்.
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.
நீங்கள் உலகை சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. பணியாளர் தலைவரை விட பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்கு கூறியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.என்னை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.என் வார்த்தையை கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைபிடிப்பார்கள்! என் பெயரின்பொருட்டு உங்களை இப்படியெல்லாம்நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துக் கொள்ளவில்லை. இது வாழ்வு தரும் ஆண்டவரின் நற்செய்தி.”
மக்கள் அனைவரும், “ஆண்டவரை உமக்கு மகிமை.” என்றார்கள்
அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். இருக்கை இல்லாதவர்கள் சம்மணம் போட்டு,தரையில் விரித்து இருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்தார்கள். பாதிரியார் தொண்டையை கனைத்துச் சரிசெய்துவிட்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“கிருஸ்துவின் அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவசனத்தில் புனித யோவான் என்ன சொல்கிறார்,நீங்கள் இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.
காரணம் நீங்கள் இயேசு கிருஸ்துவால் தேர்ந்துக் கொள்ளப்பட்டவர்கள். அவருடைய பிள்ளைகள்.
ஆனால் இந்த மறை உண்மையை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.இதை தான் ஒரு ஜென் ஞானி சொல்கிறார்,
‘ மனிதன் தன் சொந்த நிழலில் நின்றுக் கொண்டே, ஏன் இருட்டாக இருக்கிறது’ என்று கவலை கொள்கிறான்.’ என்றார்.
“மேலும்,இயேசு கிருஸ்து மக்களுக்கு அன்பை போதிக்கிறார்.நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்’ என்கிறார்.
இதைதான் ஒரு ஜென் தத்துவம், ‘எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ, அப்போதல்லாம் அன்பாய் இருங்கள்.
எப்போதும் அன்பாய் இருப்பது சாத்தியமே’ என்கிறது.”
உடனே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் எழுந்தனர் ,அவர்கள் எழுந்ததில் அவசரம் இருந்தது.
“ஃபாதர் நீங்க என்ன எப்பவும் பிரசங்கத்துல ஜென் தத்துவங்களை சொல்றீங்க?”
“கிருஸ்துவமும், பௌத்தமும் கலந்ததே ஜென் என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இதை சொன்னேன்”
“ஃபாதர் இது சர்ச், சர்வமத ஆன்மீக மேடையில்லை. அதனால கிருஸ்வத்தை மட்டும் சொல்லுங்க. இல்லெ எடத்தெ காலி பண்ணுங்க”
சத்தம் வலுத்தது. குரலில் ரகளை செய்யத் தொடங்கினார்கள்.
உடனே அருகே அருகில் அமர்ந்திருந்த மற்றவர்கள்,அவர்களை சமாதானப் படுத்தினார்கள். குரல்களும் கைகளும் சமாதானப்படுத்த உயர்ந்தன.
“தம்பி, பூசெ முடியட்டும். அப்புறம் ஃபாதர் ரூம்ல வெச்சு இதெ பேசிக்கலாம்”
இளைஞர்கள் அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தேவாலயத்தி லிருந்து விரைசலாக வெளியே வந்தார்கள்.
அவர் எதிர்பார்த்த ஐந்து பேரும் இன்று வரவில்லை என்பது சிறு வருத்தமாக இருந்தது.
மக்கள் கூட்டமாக தேவாலியத்திலிருந்து வெளியே வந்தார்கள். சலசலப்புடன் கூட்டம் கலைந்தது.ஃபாதர் லாரன்ஸ் சர்ச் உள்ளறைக்கு சென்று அங்கியின் மேல் தரித்திருந்த சிவப்புடையை கழற்றி வைத்தார். உதவியாளர் அன்று எடுத்த உண்டியலை எடுத்துக் கொண்டு ஃபாதர் ரூமுக்கு போனார்.ஃபாதர் அவருக்கு பின்னாலயே போனார்.சர்ச்சுக்கு வெளியில், இளைஞர்கள் கூட்டமாக நின்று கமிட்டி உறுப்பினர்களிடம் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் சற்று கூடிக்கொண்டிருந்தது. அவர் காதுகளில் விழும் அளவில் சத்தம் இருந்தது.
“இங்கெ பாருங்க நீங்க சொன்னதால தான் நாங்க பேசாம இருந்தோம். இல்லெ பாதி பூசெயிலயே ஃபாதரெ வெளியெ துரத்தி இருப்போம்.”
“இங்கெ பாரு தாமஸ்.எல்லா விசயத்திலயும், எடுத்தேன்,கவுத்தேன்னு பேசக்கூடாது.”
“அவர் நம்ம சர்ச்சுல நின்னுட்டு, நம்ம மதத்தெ விட சிறந்தது பௌத்தமுன்னு சொல்லுவார். அதுக்கு நாம தலையாட்டுனுமா?”
“அவர் சொல்றெ விசயத்துல இருக்குறெ நல்லதெ நாம எடுத்துக்கலாம். மத்ததை விட்டுடலாம்”
“மத்ததெ விட்டுடலாமா? இல்லெ மதத்தெ விட்டுடலாமா? இங்கெ பாருண்ணெ இந்த சப்பக்கட்டு எல்லாம் வேண்டாம். இப்ப ஃபாதர் ரூமுக்கு போறோம்.இதெ பத்தி பேசுறோம்.”
“ஆண்ட்டோ இப்ப தான் பூசெ முடிஞ்சு போயிருக்கார். கொஞ்சம் ஓய்வெடுப்பார். இந்த நேரத்துல நாம போய் பிரச்சனை பண்ணுறது நல்லா இருக்காது. நாம எல்லாம் இப்ப வீட்டுக்கு போலாம், மதிய சாப்பாடு முடிச்சிட்டு, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு நாங்க கமிட்டி மெம்பர் வந்து ஃபாதர்கிட்டெ இதப்பத்தி பேசுறோம். அவர் ஒத்து வராட்டி, இதபத்தி பிஷப் ஹவுஸ்ல புகார் பண்ணலாம். அவங்க முடிவு பண்ணி, நம்ம சர்ச்க்கு புது ஃபாதரெ அனுப்புவாங்க. அதவிட்டுட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணுனா, நாளைக்கு நம்ம மதத்தை பத்தி அடுத்தவங்க கேவலமாக பேசுறெ நெனமைக்கு வந்துரும்”
“இங்கெ பாருங்க சார்லஸ் அண்ணன் சொல்றதுதான் சரி, நம்ம மதத்தை நாமளே கேவலப்படுத்தக் கூடாது. அதனால சாயங்காலம் வரெ பொறுமையா இருங்க”
கமிட்டி மெம்பர் பேச்சை தட்டமுடியாமல்,
இளைஞர்கள் எல்லாம் சர்ச் வளாகத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள். எறும்புகளின் வரிசையாய் சென்றார்கள்.
“இந்த பயலுகளெ சமாதானம் பண்ணுறதுக்குள்ளெ உயிரே போயிடுச்சு. சாயங்காலம் ஃபாதர்கிட்ட பேசி நாம ஒரு முடிவு எடுக்காட்டி, பயலுக பெரிய பிரச்சனை பண்ணீடுவானுங்க.நம்மளெயும் விடமாட்டானுங்க”
“சரி சாயங்காலம் அஞ்சுமணிக்கு சுதா பேக்கரியில எல்லோரும் கூடுங்க.நல்ல ஸ்டாங்கா ஒரு டீ சாப்பிடுறோம். அப்புறம் நேரா ஃபாதர் ரூமுக்கு போறோம். பேசுறோம்.”
“சரிண்ணே,அப்ப நாம கிளம்பலாமா?”
அனைவரும் தேவாலய வளாகத்திலிருந்து கலைந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். இதுவரை இங்கு நடந்தவற்றை எல்லாம் ஃபாதரின் உதவியாளர் பார்த்துவிட்டு,நேராக ஃபாதரிடம் போகிறார்.
“என்ன நிக்கோலஸ் கூட்டம் முடிஞ்சதா?”
“கூட்டம் முடிஞ்சது. முதல்லயே அந்த பயலுக போயிட்டாங்க. நம்ம கமிட்டி மெம்பர் மட்டும் தான் இவ்ளோ நேரம் பேசீட்டு இருந்தாங்க.”
“என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?”
“அது தெரியலெ ஃபாதர்.நான் இங்கெ நம்ம தோட்டத்தில இருந்து தான் பார்த்தேன். அதனால அவங்க பேசுன சில வார்த்தைகள் தான் கேட்டுச்சு.பிஷப் ஹவுஸ், நாங்க பேசுறோம், கண்டீஷன் அஞ்சுமணிக்கு மேலெ…இப்படிதான் கேட்டுச்சு.”
“அவ்ளோதான் விசயம்.இதுபுரியலையா?”
“உங்களுக்கு புரிஞ்சதுங்களா? எனக்கு எதுவும் புரியலெ”
பொய்யாய் சில வார்த்தைகள் வந்து விழுந்தன.
“நிக்கோலஸ், நம்ம கமிட்டி மெம்பர்ஸ் எல்லாம் சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேலெ என்ன சந்திச்சு பேசப் போறாங்க. அவங்க கண்டீஷனுக்கு நான் ஒத்துக்காட்டி, அவங்க பிஷப் ஹவுஸ்ல என்ன பத்தி புகார் கொடுக்க போறாங்க. இவ்ளோ தான் விசயம்”
“ஃபாதர் எப்படி ஃபாதர்”
ஃபாதர் பதில் சொல்லாமல் சிரித்தார். அவரின் வெண்மைப்பற்கள் பளிச்சிட்டன. முன்பே வெள்ளை ஆடையில் அவர் பளிச்சென்றிருந்தார்.
நிக்கோலஸ் தலையை சொரிந்தபடி நின்றார்.ஏகமாய் தாடியை வளர்த்துக் கொண்டார் சமீபத்தில்.
“என்ன நிக்கோலஸ் என்ன வேணும் சொல்லு?”
“ஃபாதர்.. மாப்ளெ வந்திருக்காரு.இன்னைக்கு ஞாயிற்று கிழமை”
“உனக்கு ஒயின் பாட்டில் வேணும்.அதுதானே?”
நிக்கோலஸ் மௌனமாக சிரித்தார். அவனின் பற்களும் வெண்மையாகப் பளிச்சிட்டன.
“உள்ளெ போய் ஒண்ணு எடுத்துக்கோ”
உடனே, நிக்கோலஸ் உள்ளறைக்கு சென்று திருப்பலிக்கு பயன்படுத்தும் ஒயின் பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி, பிறந்த குழந்தையை பாதுகாத்துக் கொண்டு வருவது போல கொண்டு வந்தார்.
ஃபாதரிடம் சொல்லிவிட்டு,வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்து மூடிவிட்டு,வண்டியை அங்கிருந்து கிளப்பினார்.
வண்டி சத்தம் ஏதோ மயக்கத்திலிருக்கிற மாதிரி இருந்தது.
சமையல் அறையின் வாசம் எங்குமாய் பரவியிருந்தது,
“என்ன எலுசம்மா, சர்ச்சில நடந்த கூத்தெ பாத்தியா?”
“ஆமாக்கா,ஃபாதர் பிரசங்கம் வச்சிட்டு இருந்தாரு.திடீர்னு ஒருத்தர் எழுந்திரிச்சு, நிறுத்துங்கிறார்.ஃபாதர் அப்படி தப்பா எதுவும் சொல்லல. நல்ல விசயங்களெ தான் சொன்னார்.”
“ஃபாதர் சொன்ன விசயத்துல இவனுங்களுக்கு பிரச்சனை இல்லை.”
“அப்புறம் ஏன் இப்படி பண்ணுறாங்க”
“திருவிழா சமயத்துல கலெக்ஷன் பண்ணுறெ பணத்துல கொஞ்சம் இவனுங்க சுருட்டிடுறாங்க. அதெ கண்டுபிடிச்ச ஃபாதர் இவனுங்களெ திட்டீட்டார். திட்டீட்டார்ன்னா கொஞ்ச அதிகமாவே திட்டீட்டார். அன்னையில இருந்து இவனுங்க இந்த ஃபாதரை எப்ப இந்த சர்ச்சில இருந்து துரத்தலாமுன்னு காத்திட்டு இருந்தானுங்க. இப்ப ஃபாதரும் இப்படி பண்ணெ, இதெ இவனுங்க ஃபாதர் பங்கு மக்களெ மதமாற்றம் பண்ண பாக்குறார்ன்னு ரூட்டெ போடுறானுங்க. பவுத்தம், ஜென்ன்னு குழப்பறாங்க. இதுதான் விசயம்.”
” ஏக்கா நீ தான் இங்கெயெ இருக்குறெ? அப்புறம் வெளியில நடக்குறெ விசயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”
“அடிக்கடி என்னெ பாக்க அந்தோணியம்மாள்ன்னு ஒருத்தி வராளே? அவ எதுக்கு வர, என்ன பாக்கவெ? வெளியில நடக்குற சங்கதியெ எல்லாம் எங்கிட்ட சொல்லீட்டு சாப்பிட்டுட்டு போவா?”
“அப்ப அதுதான் உங்க உளவுத்துறையா?”
“அப்படியும் வெச்சுக்கலாம். சரி வறுக்குறெ மீனெ ஃபிரிஜ்ல இருந்து வெளியில எடுத்து வை.”
எலுசம்மா ஃபிரிஜ்ஜெ திறந்து மீனை எடுத்து வெளியில் வைத்தாள். அது மிளகாய்க் காரலுடன் சிவப்பாக இருந்தது. பிறகு வெங்காயத்தை வெட்டத் தொடங்கினாள். சமையலறையில் அப்போதைக்கு வெங்காயம் வெட்டுப்பட்டது. அது சின்னக் குவியலாகிக் கொண்டிருந்தது.
வெளியே வெட்டுபட்டவையாக பல விசயங்கள் இருந்தன.
கிறிஸ்துவின் போதனைகள், ஜென், பவுத்தம். இவையெல்லாம் மீறி உள்ளூர் பகைமை, பொறாமை. வசூல் பிரச்சினை என்றபடி…
அப்போதைக்கு வெட்டுபடலிருந்து தப்பிக்க சிலருக்கு ஒயின் பாட்டிலும் உதவியது.
– உயிர்மை இதழ்
![]() |
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு…மேலும் படிக்க... |
