விநோதமான மனிதர்
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 112

கண்ணன் ஒரு பழமைவாதி என்று அந்த ஊர் மக்களால் அறியப்படுபவர்.. அவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்ந்துக் கொண்டு வருபவர் என்று சொன்னால் அது மிகையில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…
அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகன் இவரை பார்த்து மிகவும் எரிச்சல் அடையும் அளவுக்கு அவர் எந்தவித டிஜிட்டல் கருவியையும் அவரோடு பயணிக்க விட்டதில்லை..
அவர் ஒரு பட்டன் போன் தான் வைத்திருப்பார்.. அதையும் இப்போது இருக்கும் மக்கள் போல ஒரு மூன்றாவது கையை போல எங்கேயும் எடுத்துக் கொண்டு செல்பவர் அல்ல.. சொல்லப் போனால் அந்த போன் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் தான் இருப்பார்… வெளியூருக்கு போகும் போது கூட அவர் அதை எடுத்துக் கொண்டு போவதில்லை…இது பற்றி அவரது மனைவி ஜானகி மகனிடம் குறைப்பட்டு கொண்டால் உடனே அவரை பார்த்து எங்காவது போகும் போது அந்த போனை எடுத்து கொண்டு போனால் என்ன அப்பா.. அந்த போனை நான் உங்களுக்கு வாங்கி கொடுத்ததே நீங்கள் எங்காவது போனால் குறிப்பாக உங்கள் நண்பர்கள் வீட்டுக்கு போனால் நேரம் தெரியாமல் பேசுவீர்கள்..பிறகு இரவு ஆகி விடும் அங்கேயே தங்கி விட சொன்னார்கள் என்று தங்கி விட்டு காலையில் தான் வருவீர்கள்… அப்போது உங்களை எந்த நண்பர்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்று வரிசையாக போன் செய்து கேட்பது எங்களுக்கு ஒரு சங்கடம் என்றால் அவர்கள் அதை வைத்து கேலி செய்து சிரிப்பது ஒரு சங்கடம் என்று சொல்லி சலித்துக் கொள்வான்…
அப்போதெல்லாம் அவர் அட போப்பா வழி முழுவதும் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை..குறிப்பாக பேருந்து இங்கேயே ஏறி இருக்க மாட்டேன். உனது அம்மா என்னங்க எங்கே இருக்கிறீர்கள்..பஸ் ஏறி விட்டீர்களா என்றும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை நான் கிரிக்கெட் லைவ் கமெண்ரி கொடுப்பது போல உங்கள் அம்மாவுக்கு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்..அதனால் நான் எனது நண்பர் காவல் துறையில் தான் இருக்கிறார்..அவரிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லி விட்டு தான் போவேனாக்ககும் என்று பெருமையாக சொல்லவும் இன்னும் அதிகமாக அவரது மகன் மதனுக்கு இன்னும் கோபம் அதிகமாக வந்தது..
இது என்ன பா பெரிய சலிப்பு… இதெல்லாம் கேலிக்குரிய விஷயமா போப்பா போய் வேலையை பார்… இந்த உலகம் எதையாவது குறைப்பட்டுக் கொண்டும் கேலி செய்துக் கொண்டும் தான் இருக்கும்..என்று சிரித்துக்கொண்டே அவர் வேலையை பார்க்க சென்று விடுவார்…
இந்த பதில் எப்போதும் வரும் பதில் தான்.. அப்போதெல்லாம் மதன் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விடுவான்.. மேலும் அவரது தாய் ஜானகியிடம் அம்மா அவரை திருத்த முடியாது..அவரை பற்றி என்னிடம் சொல்லி என்னை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதே… அவர் எப்படியோ போகட்டும் என்று சொல்லி விட்டு போய் விடுவான்..
இப்படி தான் அவர் வாழ்க்கை அவருக்கு டிஜிட்டல் இம்சை இல்லாமலும் மற்றவர்களுக்கு அவர் ஒரு இம்சையாகவும் காட்சி அளித்தார்…
ஒரு நாள் அவர் வீட்டில் இருக்கும் போது அவரது நண்பர் குமரேசன் அழைத்து இருந்தார்.. அப்போது அவர் முற்றத்தில் இங்கும் அங்கும் பறந்து திரிந்த குருவிக்கு அரிசியை ஒரு தட்டில் எடுத்து வந்து வைத்து அது சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தார்..
ஜானகி தான் எப்போதும் அவரது போனை எடுப்பார்.. அவர் அந்த போனை எடுத்து கொண்டு அவரிடம் வந்தார்… அவரது செயலில் தலையில் அடித்துக் கொண்டே ஏங்க உங்களுக்கு போன்.. உங்கள் நண்பர் குமரேசன் தான் தொடர்பில் இருக்கிறார்.. பேசுங்கள் ஏதோ அவசரமாக இருக்கும் போல அவரது குரல் பதட்டமாக இருந்தது என்று சொல்லி அவரிடம் அலைபேசியை தந்தார்..
அவர் டேய் கண்ணா என் போனுக்கு குறுந்தகவல் வந்து கொண்டே உள்ளது டா.. என் வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டார்கள் டா.. இது எப்படி டா நடக்கும் என்று குரலில் பதட்டமாக கேட்டார்.. குரல் தழுதழுத்தது…
அவரது மகன் அரபு நாடு ஒன்றில் பணி செய்து வருகிறான்.. அவன் அனுப்பி வைத்த பணத்தை தான் இழந்து நிற்கிறார் என்று கண்ணன் புரிந்துக் கொண்டு சரி டா குமரேசா…பதட்டப்படாதே… கொஞ்சம் தண்ணீர் குடி… நான் வருகிறேன்.. நமது நண்பன் தண்டபாணி தான் காவல் துறையில் எஸ் ஐ ஆக இருக்கிறான் அல்லவா அவனிடம் போகலாம்.. அதற்கு முன்னால் உனது வங்கிக்கு தகவல் சொல்லி உனது கணக்கில் உள்ள தொகை மேலும் பறி போகாமல் இருக்க வங்கி ஏடிஎம் கார்டை லாக் செய்ய சொல் உடனடியாக.. நான் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு அவசரம் அவசரமாக ஜானகி என் சட்டையை எடுத்து வா என்று வேகமாக குரல் கொடுத்தார்…
ஜானகி தனது அடுப்பில் உள்ள வேலைகளை விட்டு விட்டு இதோ வரேன்ங்க என்று சொல்லி கொண்டே அவரது சட்டையை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு என்னங்க என்னாச்சு என்றாள்…
அதெல்லாம் ஒன்றும் இல்லை.. எனது நண்பன் குமரேசன் இருக்கிறான் இல்லையா அவன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை யாரோ ஒரு லட்சம் வரைக்கும் திருடி விட்டார்களாம்.. நான் வந்து சொல்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்று அவசரப்படுத்தினார்…
உடனடியாக சமையல் அறையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு பாட்டில் தண்ணீர் ஊற்றி அதை ஒரு சிறிய பையில் போட்டு அவரிடம் கொடுத்துக் கொண்டே என்னங்க இப்படி எல்லாமா நடக்கும் என்று ஆதங்கமாக கேட்டாள் ஜானகி…
ஆமாம் ஜானகி இது டிஜிட்டல் திருட்டு.. இதெல்லாம் தினமும் நான் செய்தித்தாளில் வாசித்து வருகிறேன்…
இப்படி எல்லாம் நடந்துக் கொண்டே இருந்தாலும் மக்கள் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா… இது வரை செய்தித்தாளில் வாசித்து வந்தேன் எனது நண்பனுக்கே இந்த நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை…என்று சொல்லி கொண்டே தனது காலில் காலணி மாட்டிக் கொண்டே வரேன் ஜானகி.. நான் நாளை தான் வருவேன்.. நீ என்னை எதிர்பார்க்காதே என்று முதன் முறையாக ஜானகியிடம் தனது வருகையை பற்றி சொல்லி விட்டு வேகமாக நடக்கிறார்…
அந்த ஊருக்கு வரும் டவுன் பஸ் வரும் நேரம் தான் தற்போது. அதை பிடிப்பதற்காக கொஞ்சம் நடையை கூட்டினார்… அவரது நண்பன் குமரேசன் ஊர் இவரது ஊரில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அந்த ஊரை சென்றடைய இதை விட்டால் மாலையில் தான் பேருந்து என்பதால்…
ஜானகிக்கோ தனது கணவன் எத்தனையோ உலக விவகாரங்கள் தெரிந்து இருந்தும் ஏன் பழமைவாதியாக இருக்கிறார் என்று புரிந்தது…சே எப்படி எல்லாம் தனது கணவரை இப்படி பழமைவாதியாக இருக்காதீர்கள் என்று தானும் தன் மகன் மதனும் திட்டி இருப்போம்.. அது தான் தற்போது அவருக்கு பாதுகாப்பு போல.. அவர் பாட்டுக்கு அவர் உலகை சிருஷ்டித்து வாழ்ந்து விட்டு போகட்டுமே.. நமக்கு ஒரு கொள்கை என்றால் அவருக்கு ஒரு கொள்கை.. அந்த கொள்கையால் அப்படி ஒன்றும் பெரிய மோசமான நிகழ்வு நடக்க போவதில்லை.. பிறகு ஏன் அவரை கடிந்து கொள்ள வேண்டும் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு தனது மீதி சமையல் வேலையை முடித்து கொண்டு முற்றத்தில் கொஞ்சம் காற்று வாங்க வந்தாள்…
அங்கே அந்த இரண்டு குருவிகள் அவரது கணவர் வைத்த அரிசியை சாப்பிட்டு விட்டு இவளை பார்த்ததும் தனது சிறகை படபடத்து வேகமாக வெளியே பறந்து சென்றது…அவரை பார்த்து பயம் இல்லை என்னை பார்த்து பயம் என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே முணுமுணுத்து அங்கே உள்ள மரக் கட்டிலில் அமர்ந்து வெளியே உள்ள மரத்தின் இலைகள் அசைவதை முதன் முறையாக மிகவும் ரசனையோடு லயித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அங்கே அந்த இரண்டு குருவிகளும் அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கீச் கீச்சென்று தனக்குள் ஏதோ பாஷை பரிமாறிக் கொண்டதை வேடிக்கை பார்த்தாள் ஜானகி..
எவ்வளவு அழகு..அதை விடுத்து தனது மகன் வாங்கி கொடுத்த தொடு திரையில் நாம் யார் யாரோ போடும் ரீல்ஸ்ல் மனதை பறிக்கொடுத்தோமே என்று முதன் முறையாக கவலைப் பட்டாள் ஜானகி…
அதை அப்படியே ரசித்துக் கொண்டே சமையல் களைப்பு தீர கண்ணயர்ந்தாள்.. அந்த குருவிகள் இப்போது தாலாட்டியது ஜானகிக்காக தனது குரலில்…