விதிகளுக்கப்பால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 63 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறு மாதங்களுக்கு முன்வரை இந்த அலுவலகத்தின் இரும்புக் கதவு கூட. ராமன் சார் வரும்போது நடுங்குவது போலிருக்கும். குப்பை தூசியெல்லாம் பறந்து போயிருக்க வேண்டும். 

ராமன் சார் இந்த அலுவலகத்தில் ஒரு உதவியாளர் தான் .ஆனால், உட்கார்ந்திருந்தது சிம்மாசனத்தில். பதினோரு வருஷமாய் ஒரே சீட்டில் உட்கார்ந்திருந் தார். நூற்றிநாற்பத்தி ரெண்டு பேர் வேலைபார்க்கும் இந்த மாவட்ட அலுவலகத்திற்கும், பதினோரு தாலுகாக்களிலுமுள்ள நூற்றிப்பத்துப் பேருக்கும் இன்க்ரிமெண்ட் போடுவது, லீவ் சேங்ஷனுக்கு எழுதி வைப்பது முதல் இன்ன ஊரில் இன்ன சீட்டில் இன்னார் வேலை செய்யலாமேஎன்று நிர்ணயித்து ஆணை எழுதி வைக்கும் எஸ்டாபிளிஷ்மெண்ட் அசிஸ்டெண்ட். 

காலை எட்டரை மணிக்கெல்லாம் ராமன் சார் ஆபீசுக்கு வந்துவிடுவார். அவர் மேசையில் தான் வருகைப் பதிவேடு கிடக்கும். அவருக்கு முன்னால் நின்றுதான் எல்லா ஊழியர்களும் கையெழுத்திட வேண்டும். ‘வணக்கம் சார்’ என்று சொல்லி வரும் ஒவ்வொருவருக்கும் பேனாக் கையைப்பாதிக்கு உயர்த் திவிட்டு எழுதிக் கொண்டிருப்பார். பயமும் மரியாதை யுமாய் நின்று கையெழுத்திட்டு விட்டுப்போவார்கள். 

ஒன்பதே முக்காலுக்கு விதிப்படி அலுவலகம் இயங்கத் துவங்க வேண்டும். அந்த நேரம் வந்ததும் பேனாவை மேசைமேல் வைத்துவிட்டு வருகைப் பதிவேட்டை மூடப் போகும்போது ஒரு ஊழியர் தலைவிரி கோல மாக ஓடிவந்து கையெழுத்திட நிற்பார். மூக்குக் கண்ணாடியை மேலே தள்ளி விட்டுக் கொண்டு 

காண்டு அந்த ஊழியரை ராமன் சார் ஒரு பார்வை பார்ப்பார். ‘நீயெல்லாம் ஒரு மனுஷன். உனக்கெல்லாம் ஒரு அரசாங்க உத்தியோகம்’ என்பது போலிருக்கும். 

ராமன் சாரின் சீட் அதிகாரியின் தள்ளுகதவிற்கு அருகில். அதிகாரியைப் பார்க்கப் போகிற எந்த ஊழியரும் வெளியாளும் ராமன் சாரிடம் கார ணத்தைச் சொல்லாமல் உள்ளே நுழைய முடியாது. எண்பது சதமானம் அவராலேயே பைசல் செய்யப் பட்டு விடும். மீறி உள்ளே நுழைந்து அதிகாரியிடம் ஏதேனும் குறை சொன்னால், ‘போய் ராமன் சாரைப் பாருங்க’ என்பார் அவர். 

வாலாஜாவிலிருந்து செங்கற்பட்டுக்கு மாற்றல் வேண்டுமென்று மன்னார் மூன்று வருடங்களாய்க் கேட்டுப் பார்த்தார். கிடைக்காத ஆத்திரத்தில் ‘ராமன் சார்’ என்கிற பெயரை கோபத்தில் ‘ராமன்’ என்று குறிப்பிட்டுப் பேசியதை ராமன் சாரே கேட்டு விட்டார். 

இதைத் தெரிந்து கொண்ட மன்னார் அவர் காதில் விழும்படி ‘பல ஆயிரம் சார் சேர்த்து ஜெபித்துப் பார்த்தார். ராமன் சார் அசையவில்லை. ஒருநாள் மன்னாருக்கு ஆவேசம் வந்து எல்லோரையும் தள்ளிவிட்டு அதிகாரியின் அறைக்குள் நுழைந்து மாற்றல் கேட்டு இரைச்சல் போட்டார். ராமன் சாரைப் பற்றித் தாறு மாறாய்ப் புகார்களை அடுக்கினார். பொறுமையின்றிக் கேட்டுவிட்டு அதிகாரி கோபமாய்ச் சொன்னார்: ‘சரி சரி’ போய் ராமன் சாரைப் பாருங்க’ 

அப்புறம் மன்னார் ரெண்டு வருசங்களுக்குத் தொடர்ந்து வெகுதூரத்திலிருந்த ஒரு கோவிலுக்குப் பாதயாத்திரை போய்விட்டு அப்புறம் அதையும் நிறுத்தினார். ராமன் சார் அதே மூக்குக் கண்ணாடியோடு அதே சீட்டில் உட்கார்ந்திருந்தார். 

பனிரெண்டு மணிக்கு யாரையாவது ராமன் சார் கூப்பிட்டனுப்பினால் கால் பின்னித்தான் அந்த ஆள் ராமன் சார் சீட்டிற்கு வந்து நிற்பார். அந்த நேரம், தபால் பிரித்து அதிகாரியின் பார்வைக்குப் பின் ராமன் சார் மேசையிலிருக்கும் நேரம். கூப்பிடப்பட்ட ஆளுக்குத் தன் மேலோ, தன் வேலையின் மேலோ என்ன வம்பு தபாலில் இருக்கிறதோ என்று பயம். 

அந்த நேரங்களில் ராமன் சாரைப் பார்க்கும் போது, இரவு அகால நேரத்தில் இருளடைந்து கிடக்கும் ஒரு பெரிய பங்களா முன் நிற்கும்போது ஏற்படும் திகில் வரும். மேலேயிருந்து வந்திருக்கும் ஒரு கடிதத்தை உருவி, வந்தவர் முன் போடுவார். ‘இன்னிக்கு சாய்ங் காலம் பதில் எழுதி வைங்க’ என்பார் ராமன் சார். பழைய ரெக்கார்டுகளைத் தேடி ஏழு இடங்களில் கூட்டல் தொகை சரி பார்த்து எழுதிவைக்க வேண்டிய கனமிருக்கும் கடிதத்தில். 

“குறைஞ்சது ஒரு வரமாவது வேணுமே” என்று ஆரம்பித்தால் “சரி, அப்படியே அதை வைச்சுட்டுப் போங்க. நான் பதில் எழுதி வைச்சுடறேன். ஆபீசர் இன்னிக்கே வேணும்னுட்டார்” என்பார். அதிகாரி வெளியில் ராமன் சார் சீட்டில் உட்கார்ந்திருப்பது போலவும், ஒரு உதவியாளர் உள்ளே அதிகாரி சீட்டில் இருப்பது போலவும் அந்த நேரங்களில் தோன்றும். 

மாலையில் அதிகாரி வீட்டிற்குப் புறப்படும்போது ராமன் சார் அவரோடு வாசலுக்கு வருவார். அந்த சமயங்களில் எப்போதாவது ராமன் சார் திரும்பிப் பார்ப்பார். அந்த செக்ஷன் சூபரின்டெண்டெண்ட் உட்பட ஐந்து உதவியாளர்களும், அலுவலகத்திலுள்ள எட்டு பியூன்களும் இரண்டு வாட்சுமேன்களும் நிற்க வேண்டும். ஒருநாள் பியூன்பாபு அந்த ஒரு நேரத்தில் டீ குடிக்கப் போய்விட்டான். வினாடிப் பார்வையில் ராமன் சார் பார்த்து விட்டார். மறு நாள் அவன் லபோ லபோ என்று கதறிக் கொண்டே மதுராந்த கத்திற்கு மாற்றலில் போக வேண்டியதாயிற்று. 

ராமன் சார் செக்ஷனுக்கு ஒரு சூபரின்டெண்டெண்ட் உண்டு. ராமன் சார் அவருக்குக் கீழே வேலை பார்த்தார் என்று பெயர்தான். முக்கால்வாசி ஃபைல்களை அதிகாரியிடம் நேரிலேயே கையெழுத்து வாங்கி விடுவார் ராமன் சார். உப்புச்சப்பில்லாத சில ஃபைல் கள் மட்டும் சூபரின்டெண்டெண்ட் மூலம் போகும். 

ராமன் சார் எழுதியதற்கும் மேல் மெத்தப்படித்த வராய் நினைத்துக் கொண்டு வேறு விதிகளையும், வேறு வாக்கியங்களையும் ஒரு சூபரின்டெண்டெண்ட் எழுதி னார்.ஆறு ஃபைல்கள் தான் அவர் பார்த்தார். அப்புறம் அவர், அலுவலகத்தின் குப்பை செக்ஷன் ஒன்றுக்குப் போக வேண்டியதாயிற்று. 

ராமன் சார் ஃபைல்களில் எழுதுகிற நேரத்திற்கு அதிகமாகவே, வருகிற அரசாணைகளையும், விதித் திருத்தங்களையும் படித்துக் கொண்டிருப்பார். பல லாகக்களின் ஜாம்பவான்கள் வெகு நேரம் காத்தி ருந்து சிக்கலான சில எஸ்டாபிளிஷ்மெண்ட் விஷயங் களைக் கேட்டுக் கொண்டும், கற்றுக் கொண்டும் செல் வார்கள். பல அரசாணைகளின் எண்களையும், தேதி களையும் அவர் மனப்பாடமாய்ச் சொல்வதைக்கேட்டு யாருக்கும் பிரமிப்பு வரும். 

பிரமிப்பு வரும். இந்த அலுவலகத்திலும் சிலர் ராமன்சார் மேல் பொறாமை கொண்டு அர சாணைகளையும், கத்தை கத்தையாய் இருக்கும் விதித் தொகுப்புகளையும் படித்து மேதாவியாகப் பார்த்தார் கள். குறி பிசகி வேறெங்கோ போய் வறட்டு வாதம் தான் பண்ண முடிந்தது அவர்களால். ராமன் சாரின் துல்லியம் யாருக்கும் வரவில்லை. 

இரவு எட்டுமணிக்குத்தான் அலுவலகத்தை விட்டுக் கிளம்புவார். நாலைந்து ஃபைல்களை ஒன்றாய்க் கட்டி மேசை மீது வைத்து டிராயரைப் பூட்டுவார். வராற் தாவிலுள்ள அவருடைய சைக்கிள் கேரியரில் அந்த ஃபைல் கட்டைக் கொண்டுபோய் வைப்பான் ஒரு பியூன். 

ராமன் சாருக்கு இந்த அரசாணைகள், விதித்தொகுப்பு கள், அதிகாரிகளின் சொந்த நலன், அலுவலக நலன் களுக்கப்பால் பிடித்தமானதுஏதாவதுண்டா என்பதைப் பற்றி ஊழியர்கள் ரகசியமாய் விவாதிப்பதுண்டு. அப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க அநேகர் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொண்டார்கள். ஒன்றுமே அகப்படவில்லை. 

இளம் பிராய மனசில் வெளியே சொல்ல முடியாத மாதிரி ஏதாவது காயம் பட்டிருக்கலாம் என்பது சிலரின் ஊகம். அவருக்கு நடந்த கல்யாணம் அவருக்கு இஷ்டமில்லாமல் நடந்ததென்று அவருடைய தூரத்து உறவினர் ஒருவரை விசரரித்துத் தெரிந்து கொண்ட தாய் ராமசுப்பிரமணியம் சொன்னார். குடும்பத்தோடு தெருவில் நடந்ததாக, தியேட்டரில் பார்த்ததாக, பஸ் சில் ஏறியதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. அவர் வசிக்கும் தெருவில் குடியிருக்கும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பெருமாள் ஒருமுறை சொன்னார்: அந்த வீட்டிற்கு வேறு ஜனம் வருவதில்லை. ஒரு சத்தம் அந்த வீட்டில் கேட்டதில்லை. 

இந்த அலுவலகத்தில் வந்துசேரும் அதிகாரிகளைத் தவிர, ராமன் சாருக்கு நெருக்கமானவர்கள் வேறு யாருமில்லை. மாற்றலாகிப்போன அதிகாரிகளிடம் இருந்து பச்சை மையில் எழுதிய கடிதங்கள் அவ்வப் போது ராமன் சாருக்கு வரும். அவர்களின் குடும்பங் கள் நண்பர்கள் உறவினர்கள் இந்த ஊருக்கு வருவார் கள். ராமன் சாரின் செல்வாக்கில் கார் போகும்; பியூன்கள் சேவகம் செய்ய ஓடுவார்கள். கார் கோவில் குளம், ஊர் சுற்றி வரும். ராமன் சார் ரயிலேற்றப் போவார். நன்றி சொல்லிப் பச்சை மையில் மறுபடி கடிதம் வரும். 

ஒரு வருடமுன்னால் ரெங்கராஜன் ஒரு உதவியாளராக சென்னையில் இருந்து மாற்றலாகி இந்த அலுவலகத் திற்கு வந்தான். முழங்கால் வரை ஒரு பனை மரத்தில் பாதி உயரம். பிடரி தாண்டிச் செழித்த முடி. ராமன் சாருக்கு அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த யூனியன்களைத் தட்டிஎழுப்பி னான். அது ராமன் சார் காலடியில் கிடத்துஅதுவரை. குட்மார்னிங், வணக்கம் போடுவதில் து ஆரம்பித்தது. 

”நாம் குட்மார்னிங் சொல்கிறோம். நிமிர்ந்து முழுக் கையையும் தூக்கி குட்மார்னிங் சொல்லாத ஆளுக்கு எதுக்காக தினமும் குட்மார்னிங் சொல்ல வோண்டும்? முதலில் இது ஒரு மோசமான கலாசாரம். அப்புறம் நாம் வேறு. அவர் சார்ந்த நிர்வாகம் வேறு என்று பிரித்து அப்படியே காலம் பூராவும் வைத்துக்கொள்ள நினைக்கும் சதி. நாம் அடிமைகளுமில்லை; மிஸ்டர் ராமன் நம்மை விட உயர்ந்த ஒரு அதிகாரியுமில்லை. நாளையிலிருந்து யாரும் அவருக்கு குட்மார்னிங் சொல்ல வேண்டாம்” என்றான் ஒருநாள். 

மறுநாளே நாற்பது பேருக்கு மேல் ராமன் சாருக்கு குட்மார்னிங் சொல்லவில்லை. எப்போதும் பாறை போல் முகத்தை வைத்திருக்கும் ராமன் சார் முகத்தில் கறுப்பு தெரிந்தது. பேனாவைத் திறந்துவைத்துக் குனிந்து எழுதாமலேயே பத்து நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருந்தார். பனிரெண்டு மணிக்குள் இரண்டு தடவை பாத்ரூமுக்குப் போய் வந்தார். 

ராமன் சார் செக்ஷனுக்கு ஒரு செக்ஷன் தள்ளி ரெங்க ராஜன் வேலை பார்க்கும் செக்ஷன். அலுவலக நேரம் முடிந்தும் வேலையிருக்கும். பலரும் எழுதிக் கொண்டி ருப்பார்கள். இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் மாலை ஏழு மணி இருக்கும். ரெங்கராஜன் ஒரு ஃபைலை எடுத்து எழுதப்போகுமுன் மென்மையாய் ஒரு பாட்டுப் பாடினான். கேட்டதும் மனசை இழுக்கும் குரல். ஆங்காங்கே உட்ார்ந்து வேலை செய்து கொண் டிருந்தவர்கள் வேலைகளை நிறுத்திக்கண்கள் செருகக் கேட்டுக் கொண்டு இருந்தனர். 

ஒரு பியூன் ரெங்கராஜனிடம் வந்து “ராமன் சார் பாட்டை நிறுத்திட்டு வேலையைக் கவனிக்கச் சொன் னார் என்றான். பாட்டில் ஒன்றியிருந்த ரெங்க ராஜன் மோனம் கலைந்தான். ஒரு நிமிடம் சுற்றிலும் பார்த்தான். எல்லோரும் பாட்டில் லயித்திருந்தார்கள். பிறகு பியூனைப் பார்த்துச் சொன்னான்: ஆபீஸ் நேரம் முடிஞ்சிருச்சுன்னு போய் சொல்லு மிஸ்டர் ராமன்ட்ட சிறிது நேரங்கழித்து ரெங்கராஜனும் மற்றவர்களும் பார்க்க ராமன் சார் ஃபைல்களைக்கூட எடுத்துக் கொள்ளாமல் வெளியேறினார், அன்றுதான் ஏழு மணிக்கே அவர் ஆபீசை விட்டு வெளியேறியது. 

தொடர்ந்து மறுநாளும் ஏழு மணிக்கெல்லாம் ரெங்க ராஜன் பாடிக் கொண்டே வேலை பார்க்க, உடனேயே ராமன் சார் ஆபீசை விட்டு வெளியேறினார். அன்று சொன்னான் ரெங்கராஜன்: “மிஸ்டர் ராமனுக்கு சர்க்கார் விதிகளுக்கும், சங்கீதத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் பிடி பட ஆரம்பிச்சிருச்சு. 

ரெங்கராஜனை மாடி செக்ஷனுக்கு மாற்றி ஒரு ஆணையை எழுதி அதிகாரியின் கையெழுத்துக்கு அனுப்பினார் ராமன் சார். அதிகாரி ரெங்கராஜனைக் கூப்பிட்டு விசாரித்தார். ராமன் சார் இதை எதிர் பார்க்கவில்லை. முகம் ஒருமாதிரியாகிவிட்டது. ரெங்க ராஜன் அதிகாரியிடம்சொன்னான்: நீங்க நாளைக்கு காலையிலெ மாத்துங்க, நாளைக்கு மாலையிலெ அதுக்குப் பலனிருக்கும்.’ 

அப்புறம் ராமன் சார் மூன்று தடவைக்கு மேல் அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு உள்ளே போய் வந்தார். ஒரு வழியாய் மாலை ஐந்து மணிக்கு ரெங்கராஜன் மாடி செக்ஷனுக்கு மாற்றி ஆணை தரப்பட்டது. அவனைச் சுற்றிக் கூட்டமும் சத்தமுமாயிருந்தது. 

காலையில் முதலில் ராமன்சாரும், அப்புறம் அதிகாரி யும் பார்த்தது ஒரு அழகான பொம்மையின் படம். அரை ஆள் உயரத்தில், கீழே ‘அதிகாரி’ என்று எழுதி, அப்புறம் அகல வாட்டில் உறுமும் புலியின் படம். கீழே ‘மிஸ்டர் ராமன் என்றெழுதி. நாலைந்து பழைய கோரிக்கைகளையும் சேர்த்து ‘ரெங்கராஜனை மாற்றாதே’ என்று காது கிழிபட வாசலில் ஆர்ப் பாட்டம். ஆர்ப்பாட்டம் நடக்கையில் இரண்டு தடவை ராமன் சார் ஆபீசர் ரூமுக்குள் போய் வந்தார். 

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அதிகாரி ரெங்கராஜனைக் கூப்பிட்டனுப்பினார். அவன் மூன்று பேரோடு உள்ளே போனான். வெகு நேரம் விவாதம் நடந்தது. ரெங்கராஜன் கடைசியாய்ச் சொன்னான்: “மிஸ்டர் ராமன் பிரதமரானால் எம் எஸ் சையே நாடுகடத்துவார்.” 

ரெங்கராஜன் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டே வெளியே வந்தான். படங்கள் சுருட்டப் பட்டன. ராமன் சார் உள்ளே போய்விட்டு வந்தார். முகம் கைகாலெல்லாம் வேர்த்து வேர்த்து வந்தது ராமன் சாருக்கு. தபால் பார்க்கவில்லை: பேனாவை எடுத்து ஒருவரி எழுதவில்லை. எதிரேயிருந்த சுவரையே பார்த்துக் கொண்டிருந்தவர் நாற்காலியில் சாய்ந்து படுத்தார். மேலே உத்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். 

ஒரு மணி நேரங்கழித்து எழுந்து வெளியே போனார். மறுநாள் காலையில் வந்தார். தனக்குத்தானே பேச ஆரம்பித்தார். அதிகாரி என்ன சொன்னாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஆளுக்கொரு விதமாய்ப் பேசினார்கள். ரெங்கராஜன் மாடி செக்ஷனுக்குப் போட்ட ஆணை ரத்தாகிவிட்டது என்பது மட்டும் சலசலப்போடு பரவியது. 

திடீரென்று ராமன் சார் அலுவலகத்திற்கு வரவில்லை. வீட்டிலேயே இருந்தார். அவர் மனைவி அழுது கொண்டேயிருப்பதாய் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பெருமாள் சொன்னார். 

சில நாள் கழித்து ராமன் சார் வீட்டிலுமில்லை என்று தகவல் வந்தது. ஒரு மாதங்கழித்து ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து அவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அலுவலகமே திரண்டு வேடிக்கை பார்க்க அவர் ஃபைல்களைப் பிரித்துப் படித்துக் கொண்டேயிருந்தார். மெல்ல அவரை இழுத்து அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்குப் போனேன். 

அன்றுதான் அவர் வீட்டைப் பார்த்தேன்.ஆயிரம் உயிர் களின் ஆர்ப்பரிப்போடிருந்தவரின் வீடு உயிரற்றுக் கிடந்தது. ஒரு பெண்ணுக்குப் பத்து வயசிருக்கும். ஒரு பெண் ஐந்து வயசில் நின்றாள். அந்த அம்மாளை ஒடித்துக் கூடையில் வைத்து விடலாம். 

இரண்டு மாதங்கழித்து அவர் மைத்துனன் வாலண்டி யர் ரிடையர் மெண்டுக்கு கையெழுத்து வாங்கிக் கொடுத்து இன்று அவருக்கு பென்ஷனும் கிராஜுட்டியும் வாங்கிக் கொடுக்க வேண்டும். பில் தயாராகிப் பாஸ் பண்ணி பேங்க்கிற்குப் போய்விட்டது. நிறையத் தொகை வரும். பணம் வாங்கி வீட்டில் கொண்டு போய் சேர்த்துவிட்டு வரச் சொல்லி அதிகாரி சொல்லி யிருந்தார். 

அறுபத்தாறாயிரம் ரூபாய். கட்டுகளாய் வாங்கி ஒரு மஞ்சள் பையில் போட்டு அவரிடம் கௌண்ட்டரருகே கொடுத்தேன். அவரோடு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன். 

கடை வீதி வந்ததும் ஒரு சந்திற்குள் விடுவிடுவென்று நடந்தார். என்ன செய்யக் காத்திருக்கிறாரோ என்று நானும் பின்னாலேயே ஓடினேன். இசைக் கருவிகள் விற்கும் ஒரு கடை முன்னால் நின்றார். ‘புல்புல்தாரா ஒண்ணு கொடு’ என்றார்; விலை கேட்கவில்லை. 

கையில் புல்புல்தாராவை வாங்கிக் கொண்டு கற்றுக் கொள்ளும் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு, ஒரு முறை கம்பியில் தட்டினார். ரீங்காரம் உருண்டது. மறுபடியும் தட்டினார். பொங்கப் பொங்கத் தட்டிக் கொண்டேயிருந்தார். விரல்களால் பட்டன்களை அழுத்தினார். இன்ன ராகம் என்றில்லாமல் எந்த ராகத்தையோ தேடித் துடிப்பது போல் தட்டிக் கொண்டேயிருந்தார். 

பிறகு ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் வெகு நளினமாய்த் தூக்கி நெஞ்சோடு வைத்துக் கொண் டார். விலைத் தொகையை மஞ்சள் பைக்குள் கை விட்டு எடுத்துக் கொடுத்தார். வீட்டில் விட்டு வரும் போது மனசை யாரோ சுண்டிச் சுண்டி தட்டுவது போலவும், ரீங்காரம் தெருப்பூராவும் கேட்பதுபோலவு மிருந்தது. 

ஒரு மாதங்கழித்து ஒரு நாள் இருட்டிக் கொண்டிருக் கும்போது நானும் ரெங்கராஜனும் சந்நிதித்தெருவில் அவரைப் பார்த்தோம். புல்புல்தாராவைக் குழந்தை யைத் தூக்கிப் போவது போல் நெஞ்சோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டு வேகவேகமாய் மறைந்து போனார். திரும்பிப் பார்த்தேன். ரெங்கராஜன் கண்களைத் துடைத்துத் துடைத்துக் கொண்டே அழுதான். 

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *