வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 154
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 10-12 | இதழ் 13-15 | இதழ் 16-18
இதழ் 13 – துறவியர் மடம்

ஆக்டேவ் மூரட் சென்ட் ஸல்பிஸ் துறவியர் மடத் தில் ஓர் உறுப்பினராய்ச் சேர்க்கப்பட்டபோது அவனுக்கு 24 ஆண்டுப் பருவம். லாரைன் இன்னும் சிராம் மோன் ஆகாமல் 13 வயதுக் கன்னிப் பெண்ணாய்த் தாய்மைக் கன்னிமாடத்தில் பயின்று வந்தாள்.இரண்டு சமய நிலையங்களும் அருகேதாமிருந்தன.
துறவியர் மடத்தில் ஆக்டேவ் மூரட் இரண்டாண் டுகள் கழித்தான். “சீறும் பகைமைகள், இருள்நிறைந்த பொறாமை உள்ளங்கள், வஞ்சகச் சூழ்ச்சி வலைகள் இவைகள் மற்றப் பொதுமக்களிடையே காணப்பெறுவதை விட சமயத்துறைவரிடமும் எவ்வளவோ மிகுதியாக விளங்குகின்றன” என்ற ஆக்டேவின் முடிவு ஸென்ட் ஸல்பிஸ் துறவிமாடத்திலுள்ள அவர் அனுபவங்களைக் குறித்துக் காட்டுகின்றன.
துறவிகளிடையே யுள்ள முக்கிய கட்சி வேறுபாடு முதியோர், இளைஞர் என்பதே. இரு சாராரிடையிலும் உள்ளார்ந்த சமயப் பற்றோ, நல்லுள்ளமோ சிறிதும் கிடையாது. இளைஞர் போக்கில் ஐயம், அவர்கள் களி யாட்டங்களில் கண்டனம், அவர்கள் இன்ப ஆர்வம் கண்டு புழுக்கம், அவர்கள் நற்பெயர், செல்வாக்குப் பெறாமல் தடுக்கும் உறுதி ஆகிய இவையே முதியோ ரின் ஓய்வு ஒழிவற்ற வாழ்க்கைப் பண்புகளாக யிருந் தன. சிறு குறும்புகள், பேரச்சம், இவற்றுள் கரந்து பேரவா ஆகியவை இளைஞர் பண்புகளாயிருந்தன. இவ்விரு சாராரையும் சாராமல் இருந்தவன் திருத் தந்தை டூர்னிக்கெட். அவன் நடுத்தர வயதுடையவனா யினும் இளைஞரிடம் பொறாமைகொள்ளவில்லை. அதே சமயம் இளைஞரிடம் உள்ள பேரவாவும் குறும்புகளும் அவனைத் தீண்டவில்லை. துறவு வாழ்வு மேற்கொண்ட வரிடையே விவிலிய நூலை ஆர்வத்துடன் கற்றுஅதன் உரைகளை உணர்ச்சியுடன் உருப்பண்ணிக் குடித்தவன் அவன் ஒருவனே. ஆக்டேவ் மூரட்டிடம் பரிவும் நேசமும் காட்டியவனும் அவன் ஒருவனாகவே அமைந்தான். அவன் சமயப்பற்று, அவன் நகைச்சுவை, அவன் கலையார்வம் ஆகியவற்தைத் தடுக்கவில்லை.
மடத் தலைவன் திரு. குத்தூரியர் ஒருநாள் தன் துறவியர் குழாத்தினரனைவரையும் ஒரு திருக்கூட்டமாகக் கூட்டும்படி பணியிட்டிருந்தான். மடத்தைச் சார்ந்த ஏதோ முக்கிய செய்தி அலசியாராயப்பட விருந்ததென்பது அத்துறவியரின் பரபரப்பிலும் முணு முணுப்புக்களிலும் தெளிவாக விளங்கின. அவர்கள் கண்கள் அடிக்கடி ஆக்டேவ் மூரட்டைக் குறி பார்த்தன.
மூரட் அருகிலேயே இடித்துக்கொண்டுவந்த முது துறவி ஒருவர் “அப்பனே! உன் முகமெல்லாம் கரி; உன் கைவிரல்களிலெல்லாம் இப்படி மையாயிருக்கிறதே ?” என்று கடுப்புடன் கேட்டார். மை எழுத்தாண்மையின் அறிகுறி. துறவிகளுக்கு ஐயத்தையும் கசப்பையும் வளர்க்க எழுத்தாண்மையைவிட வேறு எதுவும் வேண்டாம். மூரட் மீது அவர் தோழர்கள் பெருமுயற்சியுடன் உருவாக்கிவந்த குற்றச் சாட்டு அவர் எழுத்தாண்மை சார்ந்ததாகவே இருந்தது.
எல்லாரும் வந்து கூடியாய்விட்டது. தலைமை யிருக்கையில் மடத்தலைவர் அமர்ந்திருந்தார். முணு முணுப் பெல்லாம் அடங்கி எல்லாரும் சந்தடியின்றி அவரையே நோக்கினர்.
அமைதிக்கு முற்றுப்புள்ளியிட்டு அவர் எழுந்து பேசலானார். “தோழர்களே! நம் அன்பர் அப்போ ஆக்டேவ் மூரட் நம் எச்சரிக்கைகளை மீறித் தூயதாளில் மீண்டும் அழுக்கு மை கொட்டி வருகிறதாக அறிகிறோம்” என்று அவர் தொடங்கினார். மூரட் அவரை நிமிர்ந்து நோக்கினான். அவரோ “தாங்கள் இப்போது பேச வேண்டாம். சிறிது பொறுத்திருங்கள்” என்று அமைத்துவிட்டு மீண்டும் “இச் செய்தி பற்றி இன்று இக் கூட்டத்தில் முடிவு செய்தபின், நாம் அனை வரும் கைகால்களைத் தேய்ப்புத் தாளும் கல்லுமிட்டுக் கழுவித் தூயநிலையிலேயே நம் பணியில் மீண்டும் ஈடு படுவோமாக” என்றார்.
குற்றச்சாட்டில் ஆக்டேவ் மூரட் எழுத்தாண்மைத் திறம், அவர் நகைத்திறக் குறும்புகள், நடிப்புத்திறம், தோற்ற நடையுடை யாவும் வகுத்தாராயப்பட்டன. ‘விலங்கு பறவைகள் குரலோசைகளைக் கூடச் செய்து காட்டுவதில் நம் மூரட் திறமையுடையவர். கோழி இரு தடவை கூவுமுன் நீ மூன்று தடவை என்னை மறுத்துக் கூறுவாய்’ என்று தூய திரு. பீட்டரிடம் இயேசு கூறினாரல்லவா? அந்நிகழ்ச்சியை நான் விரித்துரைக்கும்போது, அதற்குச் செவிப்புலச் சான்று விளக்கமாக மூரட் கோழியாகக் கூவி என் பேச்சுக்கு நாடகப் பண்பு ஊட்டினார்” என்றார் ஒருவர்.
தூர்னிக்கட் இது கேட்டு விலாப்புடைக்க நகைக்காமலிருக்க முடியவில்லை. தலைவர் எச்சரிக்கை கூடச் சிரிப்பை அடக்க உதவவில்லை. அவர் அமைந்தாலும் அவர் முகமும் உடலும் அமைய மறுத்துக் கலகலத்து நகைப்பில் குலுங்கின. தலைவர் சீற்றம் இதனால் மிகுந்தது. அப்படியும் பக்கத்திலிருந்த தோழர் ஒருவர் தந்த மூக்குத் தூளை நிரம்ப இழுத்து மூளைக்கு வேறு திசையில் கவனமூட்டிய பின்பே அவர் சிரிப்பு அடங்கிற்று.
தலைவர் யாவரையும் கையுயர்த்தி எச்சரித்து விட்டுக் குற்றப் பத்திரிகை வாசித்தார்.
“திரு அப்பே அக்டேவ் மூரட் இன்ப நாட்ட முடையவராயிருக்கிறார். அவர் பேச்சும் எழுத்தும் பிறருக்கு இன்பமூட்டும் தன்மையுடையவையாகவே இருக்கின்றன. இவை ஒரு மடத்துக்கு உகந்தவையா? ஒரு துறவிக்குப் பெருமை தருபவையா? நம் மடத்துக் கட்டுப்பாடுகள் அவர் ஆர்வங்களை அடக்க முடிய வில்லை. அவை அதை இன்னும் தீட்டிப் பளபளப் பாக்குகின்றன. அவர் துறவியர் பணிக்கு ஏற்றவரல்லர் என்றே நான் எண்ணுகிறேன்.”
“இது அவரே அறிந்து ஒத்துக்கொள்ளும் செய்தி யாயிற்றே! ஆயிரம் தடவை அவர் கூறியிருக்கிறார் இதை. மேலும் மனத்திலுள்ளதை வெளியிடும் வாய்மையை ஒழித்துப் பொய்யை நடிப்பதிலும் மாள்வதே மேலானது என்னும் அவர்தம் கொள்கையை வலி யுறுத்தியுள்ளார். ஆகவே இது அவர் குற்றமோ, அவர்மீது குற்றச்சாட்டோ ஆகாது. அவரை ஏற்றுக் கொண்ட நம் குற்றமும் நம்மீதுள்ள குற்றச்சாட்டுமே ஆகும்” என்றார் தூர்னிக்கட்.
தலைவர் குத்தூரியர் அவரை மீண்டும் தடுத்துத் தொடர்ந்து பேசினார்.
“ஆம்! அவரே ஒத்துக் கொள்கிறார். இது குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. நம் குற்றச் சாட்டைப்பற்றி அவரே தம் ஆசிரியர் அப்பே பார்க் கட்டுக்கு எழுதுகிறார்; ‘நான் அனைவராலும் குற்றம் சாட்டப்படுகிறேன்-குற்றச்சாட்டும் நேர்மையற்ற தன்று’ என்று. தாய்க்கு எழுதும் கடிதத்திலோ ‘இங்கே அழகுடைய பொருள்களுக்குக் குறைவில்லை – அழகுடைய சிறுமிகளும் பலர். எதைப்பற்றியும் நான் கவிதை எழுதத் தவறுவதில்லை – எல்லாரையும் காதலிக்கிறேன்; யாரைக் காதலிப்பது, யாரைக் காதலிக்காமலிருப்பது என்று வேற்றுமைப்படுத்த முடியாததனால்!’ என்று எழுதுகிறார். அன்னையிடம் கூட இவர் வேறு செய்திகள் எழுதமுடியவில்லை’ என்றார் தலைவர்.
குற்றச்சாட்டு யாவராலும் ஆதரிக்கப்பட்டது. ஆனால் அவர் போலந்து அரண்மனைச் சிறுவராதலால்,. அவரைத் தாமாக நீக்கி, அரசர் பகைமையை வாங்கிக் கொள்ள மடத்துத் துறவிகள் துணியவில்லை. அவ ரைக் கொண்டே அதைவிட்டுச் செல்ல இணக்கம் பெறு விப்பதென்று அவர்கள் முடிவு செய்தனர். இம் முடி வைத் தெரிவிக்கும்படி ஆக்டேவ் மூரட் அழைத்துவரப் பணிக்கப் பெற்றார்.
மூரட் அச்சமயம் ஃபிரஞ்சு நாட்டு மன்னவை யிலுள்ள தம் அத்தைக்குக் கடிதம் வரைந்து கொண்டி ருந்தார். அழைப்புக் கொண்டு வந்தவனிடம் ‘இதோ வருகிறேன் என்று சொல்’ என்று கூறியவராய் மீண்டும் கடிதத்தில் ஆழ்ந்துவிட்டார். காத்திருந்த துறவியர் கூட்டம் கலைந்தது. பின் வழிபாட்டு நேரம் வந்தது. அதற்கான மணி அடித்தது. யாவரும் தொழுகை மேடை சுற்றிக் கூடினர். மூரட் கடிதம் அப்போதும் முடிவுபெறவில்லை. தொழுகையின் அவசர மணிகூட அக்கடிதத்தின் ஒரு நகையாடற் குறிப்பாயிற்று. “இக்கடிதத்தை இன்னும் நீட்டிக்க முடியவில்லை. அதோ கடவுள் தொழுகை மணியடித்து அழைக்கிறார். இங்கே ஓயாது தொழுகை மீது தொழுகையாய், தொழுகையே தொழிலாய் இருக்கிறது. கடவுள் ஒரு கலைஞராயிருந்தால், அவர்கூடச் சலிப்புத் தட்டாமல் எப்படி ஓயாது ஏன் ஏன் என்று அடியார் வழிபாட்டுக்கே மறுமொழி கொடுத்துக் கொண்டிருக்க முடியுமோ தெரியவில்லை… இன்று தங்களால்-தங்க ளுக்குக் கடிதம் எழுதுவதால் கடவுள் அழைப்பை இரண்டு தடவை புறக்கணிக்க வேண்டியதாயிற்று. வானுலகில் கடவுள் என்மீது குற்றம் சாட்டினால், நான் பொறுப்பை உங்கள் மீது தான் போடவேண்டி வரும்.”
துறவியர் கூட்டத்தின் முடிவு மாலையில் ஆக்டேவ் மூரட் காதுக்கெட்டியது. துறவிகளுக்கோ, தாய் தந்தையர்களுக்கோ எத்தகைய பொறுப்பு மில்லாமல் தானே துறவி மடத்தின் கட்டுப்பாடுகளை ஒரேயடியாக மீறுவதென்று அவன் துணிந்தான்.
பார்க்கெட்டுக்கு அவன் தன் உறுதியைத் தெரிவித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினான். தன் நண்பர் டூர்னிகெட்டுக்கு அன்புகனிந்த ஒரு குறிப்பை எழுதி வைத் தான். பின் தன் இன்றியமையாப் பொருள் களைக் கட்டி யெடுத்துக்கொண்டு, துறவியுடை நீத்துப் பொதுவுடையில் உலவச் செல்பவன் போலப் புலர் காலையில் எழுந்து சென்றான். வழக்கமாக அவன் இவ்வாறு சென்று ஏழையருடன் ஊடாடுவதும், நாட்டுப்புற நங்கையருடன் களியாடுவதும் வழக்கம். ஆகவே யாரும் அவனை அச்சமயம் கண்டிருந்தாலும் அவன் புதிய முடிவை உணர்ந்திருக்க முடியாது.
பாலும் பதநீரும் விற்கும் சிறுமி ஒருத்திமீது அவன் வெளிச் செல்லும் வேகத்தில் மோதிக் கொண் டான். ‘பால் சிந்தி விட்டதா ? அது பற்றிக் கவலைப் படாதே. சிந்தியதற்கு மேல் பணம் தந்து விடுகிறேன்’ என்றான் மூரட். மூரட்டின் நற்பணிகளையும் நற் பண் பையும் அங்கே அறியாதவர் கிடையாது. அவள் புன் முறுவலுடன், ‘தங்கள் பணம் தங்களிடம் இருந்தால், என்னிடமிருப்பது போலத்தான். என் பெயர் கூறிச் செலவு செய்யுங்கள்’ என்று கூறியகன்றாள்.
அவள் அவன் மறு மொழிக்குக்கூடக் காத்திராமல் பாடிக்கொண்டே சென்றாள்.
“பாவம். நல்ல ஆள்தான். சிறிது பைத்தியம்” என்று சிறுமி முனகிக் கொண்டு போனாள். அன்று மூரட்டுக்கும் கவிதைப் பைத்தியம் உச்ச நிலைக்குச் சென்றது.
உறவும் பொறுப்பும் புறக்கணித்தே
உதவா பொய்மூட்டைகள் வீசிஎறிந்தேன்;
இறைவா! பொய்மை மரபின்றேல்
நரக கதியெனில், அது ஏற்பேன்!
வாழ்வில் இன்பம் நான் துய்ப்பேன்
அது பழியாம் எனின், அது பழியாகுக,
துறவோர் மரபு தொலைத்திட்டேன்
துளங்கும் அதன்புகழ் பிறர்க்காகுக,
துறவின் துறவே எனக்காகுக.
என்று அவன் பாடிக் கொண்டு சென்றான்.
அவன் போனதுபற்றி மடத்துறவியர் கழிவிரக் கம் கொள்ளவேயில்லை. அவன் மடத்திலிருக்கையில் புனைபெயருடன் எழுதிய ‘கோலகொண்டா அரசி, அலைன்’ வால்ட்டேரால் கூடப் புகழப்பெற்றது. அதன் ஆசிரியர் மூரட்தான் என்று அரண்மனை யெங்கும் தெரிந்துவிட்டது. உலகம் புனைகதை எழுதிய துறவியைப் புகழ்ந்தது. ஆனால் துறவி மடம் இப்பாராட்டைக் கண்டனமாகக் கருதியது. தம் மடத்தின் பெயருடன் அவன் தொடர்பறுந்ததே நல்லது என்று கருதி அவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர்.
இதழ் 14 – லக்ஸம்பர்க் கோமகன்
அப்பே ஆக்டேவ் மூரட் இப்போது அப்பே (துறவுத் தந்தை) ஆயில்லை. அவன் உடலில் பழைய தட்டுத் தடங்கலற்ற துடிப்பும் இயற்கை ஊக்கமும் பரந்தன. அவன் நடை உடை தோற்றம் எப்போதும் போலவே அசட்டைத் தன்மை வாய்ந்ததாயினும், மடத்தின் கட்டுப்பாடும் பருவத்தின் இயல்பும் தம் வேலையை ஓரளவு செய்திருந்தன. அவன் தோற்றத் தில் இப்போது அசட்டைத்தனம் இருந்தது -ஆனால் அது அருவருப்பு ஊட்டத்தக்கதாயில்லை. பாதி இரக்கமும் பாதி கவர்ச்சியும் ஊட்டத்தக்கதாகவே இருந்தது: உயர்குடி மக்களிடையேயுள்ள மரபுகளில் சில அவன் இயற்கையோடியற்கையாகப் படிந்துவிட்டன. அவ்வப்போது உரையாடல் மேடையில் அவன் திடுமெனப் பேச்சை நிறுத்தித் தூங்கிவிடுவான். அவனிடமிருந்து நீக்க முடியாத பழைய கெட்ட பழக்கம் இதுவொன்றே. ஆனால் இதுகூட எவர் வெறுப்பையும் தூண்டவில்லை. ஏனெனில் அத்தூக்கத்திலிருந்து அவன் எதிர்பாராது எழுந்ததும், தூக்கத்துக்கும் சேர்த்து வட்டியுடன் ஏதாவது நகைத் திறமுடைய துணுக்கு, குறும்புமிக்க வசை அல்லது இயற்கை வாய்மையுடைய கவிதை ஆகியவற்றை வாரிக் கொட்டுவான். அவன் வழக்கம் போலப் பொதுமக்களிடையே எதிர்பாரா நண்பனாகவும் இன்னருட் குறும்புத் தெய்வமாகவும் உலவினான். ஆனால் அதே சமயம் உயர்குடியினரிடையிலும் அவன் ஒரு நல்ல பொழுது போக்குக் கவிஞனாய், விகடகவியாய் விளங்கினான்.
அவன் பல இடங்களிலும் சுற்றித்திரிந்து இப்போது பாரிஸ் வந்து தன் அத்தை லக்ஸம்பர்க் கோமக ளில்லத்தில் தங்கினான்.
லக்ஸம்பர்க் கோமகள் பாரிஸின் காதலரசியாக இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது அவள் உயர்குடியினரால் மதிப்புப் பெற்றதில்லை. உயர்குடி இளைஞரை மட்டுமே அவள் கவர முடிந்தது. அவள் பகட்டு வாழ்வு இளமையின் எல்லை தாண்டவில்லை. ஆனால் இப்போது இளமையின் இயற்கை யெல்லையை அணுகுந்தோறும், அவள் காதலரசியாக மட்டுமிராமல், கலையரசியாகவும், பண்பரசியாகவும் உருமாறி வந்தாள். அவள் இன்னும் பேரழகுயுடையவளாகவே இருந்தாள். அவள் செல்வமும் அனுபவமும் உயர்குடி யினர் மதிப்பை விலைபெற்றன. பொது மக்களையும் அவள் வாழ்க்கை மாறுதல் வயப்படுத்திற்று. அவள் ஞாயிறு தவறாமல் திருக்கோயில் சென்று மண்டியிட்டு வழிபாடாற்றத் தொடங்கினாள். வழியில் ஏழையரிடம் பரிவு காட்டிப் பெரும் பண்பின் மதிப்புப் பெற்றாள். அவள் இல்லத்தில் நாள்தோறும் வந்து குழுமும் இர வலர்களுக்கு அவள் தன் நீண்ட பிரம்பின் நுனியால் வெள்ளி பொன் நாணயங்கள் வழங்கி வள்ளன்மை உரிமை கோரினாள். இப் புது முறைகளுக்கேற்ப அவள் தோழமையும் இளங் காதலருக்குக் கட்டுப்பட் டிராமல், சீமான்கள், சீமாட்டிகள், கலைஞர், கற்றோர் ஆகியவரை உட்படுத்திற்று.
கோமகள் மாறிய வாழ்வுக்குக் கவிதையஞ் செல் வன் ஆக்டேவ் மூரட்டின் வருகை எல்லா வகையிலும் பொருத்தமாயிருந்தது. காதல், கவிதை, பெருமிதம், வசை, ஓசைத்திறம் ஆகியவற்றின் ஒரு கூட்டாக, விளங்கிய அவள் வாழ்வு அதே பண்புகளை யவாவிய கோமான் வாழ்விற் பதித்த ஒரு முத்தாயிற்று. அவ் வாழ்வின் பல்வண்ண மணி ஒளிகளிடையே அதன் தூய வெண்ணகை முறுவலித்து முகிழ்ந்தது.
இயற்கையின் அழகிடையே பலவண்ணப் புதுமை கள் திரைநீக்கி இடையிடையே தலைகாட்டுவதுண்டு.
வாழ்க்கையின் செயற்கை வனப்பினிடையே இத் தகைய புது வண்ணங்கள் மறைந்து நின்று நகை யாடும். மூரட்டின் அரைத்துயில் கனவுகள் இவற் றைத் தம் அகக் கண்ணால் கண்டு தம் மின்னற்கலை யுரைகளால் தீட்டிக் காட்டும். மயிலென நடந்து திரியும் மாதர் இடுப்பகலத்தை மிகைபடுத்திக் காட்டும் உட்கட்டு வைத்த கச்சைகளின் ஊசலாட்டமும், ஆட லிடையே வெளிப்பட்டு மின்னும் செம்பஞ்சுக் குழம் பூட்டிய அவர்களது செஞ்செவேலன்ன சிவந்த உள்ளங் கால்களும், எல்லாரிடமும் ஒப்புரவுடன் ஊடாடுவது போலப் பாவித்து உண்மையில் தம் காதலியர் திசையிலேயே அடிக்கடி நடமாடும் ஆடவர் கண்ணோக்கையும், மறைப்பது போலப் பாவித்து யாவருக்கும் தம் ஐவிரல்களிலும் நிறைந்த மோதிர வரிசை யைக் காட்டும் செல்வர் திறமை நயமும் யாவும் மூரட் டின் கவிதையுள்ளத்தில் படம் பிடித்து அவ்வப்போது அவன் பாடல்களில் காட்டப்பட்டன. பாரிஸின் காதல், வீரம், கலை ஆகியவற்றின் முக்கூட்டாக அவன் விளங்கினான்.
கோமகள் இல்லத்தின் விருந்தினரைப் போலல் லாமல், எப்போதும் அவளுடனே இருந்து அவள் இல் லத்தை ஆட்கொண்ட ஓர் உயிர் உண்டு. அதுவும் ஒரு பெருமாட்டி போலவே நடத்தப்பட்டது. பெரு மாட்டி பிரில்லன்ட் என்றே அது அழைக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அது பெருமாட்டியல்ல ஒரு பூனை மட்டுமே. கோமகளின் கலைவாழ்வுக்குப் பெருமாட்டி பிரில்லன்ட் ஒரு முத்தாய்ப்பு. கோமகள் விருந்தின ரைச் சென்று வரவேற்பாள். அவர்களுடன் ஊடாடு வாள். பெருமாட்டி பிரில்லன்ட் இருந்த இடத்திலி ருந்துதான் எல்லாரையும் வரவேற்பது. அவள் பேச்செல்லாம் சிறிது தலையசைவு, கண்ணைப் பாதி திறத்தல், அவ்வப்போது அமைந்த ஆனால் பல பொருள் பொதிந்த பார்வைகள் ஆகியவற்றினுள்ளே அடங்கியிருந்தது. விருந்தினர் சார்பான வேலைகள் ஓய்ந்தபோது கோமகள் பெருமாட்டி பிரில்லன்டின் தனித் தொண்டிலேயே ஈடுபடுவாள். கோமகள் தன் மனையையும் தன் மனையின் பணியாட்களையும் ஆண் டாள். பெருமாட்டி பிரில்லன்ட் அவள் மீது ஆட்சி செலுத்திற்று.
பெருமாட்டி பிரில்லன்ட் கோமகளைவிட ஆக்டேவ் மூரட்டிடம் மிகுதி உரிமை கொண்டாடிற்று. மூரட் வாழ்வில் இப்போது கவலையும் பொறுப்பும் மிகுந்தன. பாரிஸ் வாழ்வு செலவைப் பெருக்கிற்று. ஏழை மக்களுக்கு அவன் செய்த திருத்தொண்டும் இச்செலவும் அவன் போலந்துப் பண்ணையிலிருந்து வரும் அரைகுறை வருமானத்தைவிட எவ்வளவோ பெருக்க மடைந்தது. அவன் கடன் பட்டான். கடன்காரர் களுக்குத் தவணை சொல்லிச் சொல்லி அலுத்தான். பகலில் அவர்களைக் காண்பதற்கஞ்சி இரவிலே வெளியே சென்றுவரத் தொடங்கினான்.
பெருமாட்டி பிரில்லன்டினிடம் மூரட் தன் துயரக் கதைகளை யெல்லாம் கூறுவான். அதன் கனிந்த பார் வையும் வால் குழைப்பும் அவனுக்கு அடிக்கடி ஆறுத லளிக்கும். மூரட்டும் நன்றியறிதலுடன் தன் உணவில் ஒரு பங்கு அதற்கீந்து அதன் நட்பைப் பேணினான். வெளியே சென்றால் அதற்குத் தின்பண்டம் வாங்காமல் அவன் வருவதில்லை. அவன் வரவறிந்து அதுவும் கண் திறக்கத் தவறியதில்லை. தின்பண்டம் பிடித்த மாயிருந்தால் அது வால் குழைக்கும். இல்லாவிட்டால் வாயிலிட்டதை உடனே விழுங்கி விட்டுக் கண்ணை மீட்டும் மூடிக்கொள்ளும். அவ்வப்போது மூரட் வேட்டையாடப் போவான். வேட்டையாடும் உடை யிட்டவுடனே பெருமாட்டி பிரில்லன்ட் வழக்கமீறிய சு சுறுசுறுப்புக் காட்டிச் சற்று எழுந்து நின்று நெளித் துக் கொள்ளும். வேட்டையாடி இரண்டொரு வெள் ளெலித் தலைகள் அல்லது வெண்முயல் தலைகள் கொண்டு வந்து கொடுத்தபின்தான் அது அமைதி யுடன் எப்போதும் போலத் துயில் கொள்ளும்.
ஒரு நாள் வழக்கம் போலப் பூனையுடன் பேசிக் கொண்டேயிருந்து மூரட் திடீரென்று தூங்கி விட்டான். பெருமாட்டி பிரில்லன்ட் அவனைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து அதன்பின் அவன் மடியில் சாய்ந்து புரண்டது. பின் அவனைப் போலவே அதுவும் வழக்கப்படி தூக்கத் துள் ஆழ்ந்தது. மூரட் விழித்தெழுந்தபோது அது துயிலிலாழ்ந்திருந்தது. பலவகையிலும் தன்னை யொத்த அத்தோழனிடம் அவன் அன்பும் பாசமும் வழிந்தோடிற்று. அவன் அதன் மீது தன் கவிதை யார்வத்தைப் பரவவிட்டான்.
- உலகம் எங்கணும் தேடினும் உன்னைப்போல்
இலகு வாணகை மேனியாள் கண்டிலேன்
அலகில் பூனை இனத்துள் அரிவையர்
கலக மிட்டுனை நத்தினர் மெச்சினார். - நத்தி என்பயன் நானில மங்கைமார்
நித்தங் காதல் அலைந்தனர் நாடியே;
ஒத்து யாவரும் நின்னிசை பாடநீ
மொத்தக் காத லரசியே ஆயினாய்! - தாங்கு காதல் அரசிநீ யாகிய
பாங்கு யாதெனுனக் காக்குவென் அல்லனோ?
ஈங்கு பாமகள் ஆகிய கோமகள்
ஓங்கு காத லுரிமையினா லன்றோ ? - காதல் பாடிமெய்க் காதல் பெறாதவிந்
நோதல் சான்றபொய் வாழ்விது வாழுவேன்,
தீதி லாதுனைப் போலொரு பூனையாய்
காதல் தெய்வதங் கைவந்தி லேன் அந்தோ!
ஆக்டேவ் மூரட் வாழ்வில் உண்மையில் காதல் இடம்பெறாமலில்லை. ஆனால் அவன் காதல் இன்னும் கலைக் காதலாகவே இருந்தது. அது விளையாட்டுக் காதலளவுக்கு மேல் என்றும் செல்வதில்லை. கோமக ளின் பணி நாடிச் செல்ல வேண்டியிருந்தது. அத்திரு வாட்டி அவன் பாடலிலும் உரையாடலிலும் மிகுதி ஈடுபட்டு அவனுடன் மாலைநேர முற்றும் அளவளாவி யிருந்தாள். இரவுணவையும் அங்கேயே உண்டு இரவு முழுதும் தன்னுடனே தங்கியிருந்து விடும்படி திரு வாட்டி காதலழைப்புத் தந்தாள். உணவு முடிந்து சிறு குடியுடனும் சிற்றுண்டியுடனும் சிற்றுரையாட அமர்ந் திருக்கும் சமயம் அவள் பழங்காதல் பழக்கமுடைய உரிமைக் காதலன் ஒருவன் வந்து இடைமறித்தான். பாரிஸ் வாழ்வில் காதற்போட்டி கைகலப்புப் போட்டியாய், சாதல் விளையாட்டாக மாறுவதுண்டு. காதல் வீரனாயினும் வீரக் காதல் நாடாத மூரட் மற்றவகை யான போட்டிகளை விரும்பாமல் சீட்டாட்டப் போட்டி யையே தேர்ந்தெடுத்தான். “காதலுக்காகக் கழுத்தறுத்துக் கொள்வானேன் ? வெற்றி தோல்வி காதலில் முடிவதுதானே? இருவரும் சீட்டாடி வென்றவன் திருவாட்டியின் காதலை உரிமையால் பெறுவது தானே!” என்றான் அவன்.
எதிரியும் ஏற்றான். காதலில் எதிரி வென்றான். மூரட் மனமுறிவுற்றுக் கோமகளில்லமே வந்தான்.
ஆனால் அன்று கோமகள் டி-லீஞ் இளவரசன் ஒரு நடிகை வீட்டில் அளித்த விருந்தாட்டிற்குச் சென்றி ருந்தாள். உறவினரின் உரிமை பாராட்டி, அவன் அங்கே சென்றான். காதலால் நைந்த கவிஞர் உள்ளத்துக்கு நடிகையர் ஆடல் பாடல் நல்ல மருந்தாய் உதவிற்று.
இதழ் 15 – காதலர் சந்திப்பு
பழைய காதலரசி புதிய உயர்குடி நாகரிகத் லைவி-கோமகள் லக்ஸம்பர்க்கின் வருகை நடிகை நங்கையர் கலா ஆர்வங்களைப் பெருக்கிற்று. இளவரசன் டி-லீஞ் அவர்கள் ஆடல்பாடல்களிலீடு பட்டு வழக்கமீறி மிகுதி குடித்து அயர்ந்து சாய்ந்து விட்டான். அத்துடன் பெண்குலம் தன் பெருமையைப் பேணித் தம் தனிக்கூடம் சென்று திரையிட்டது. பெண்டிர் கலையுலகம் கண் மறைந்து செல்ல, ஆடவர் கண்துயில் கொள்ள, ஆக்டேவ் மீண்டும் தனியேவிடப் பட்டான். ஆனால் பூனை உலகப் பெருமாட்டி பிரில்லன்ட் மட்டும் தன் அரைத்துயில் கண்களால் அவனை இன்னும் கடைக்கணித்துக் கொண்டிருந்தாள்.
ஆக்டேவும் அன்று சிறிது மிகுதியாகவே தேறல் பருகியிருந்தான். அவன் கண் முன் அவன் பழங் காலப் போலந்துக் காட்சிகள் வட்டமிட்டன. போலந்து அவனுக்கு வாழ்க்கையின் துறக்க வாயிலாகத்தான் இன்னும் காட்சியளித்தது. ஆனால் அழகுத் தெய்வமாகவே நடித்த தாய் அதை விட்டு அவனைத் துரத்தி னாள். எங்கும் ஏழை மக்கள் குடில்கள் அவனுக்குத் திறந்தே இருந்தன. அவற்றில் அவன் ஆறுதலும் தேறுதலும்பெற்றான். ஆனால் அவை அவன் அவாக்களை நிறைவேற்றவில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்ததாக மட்டும் அவனுக்குத் தோன்றிற்று. அது இன்னதென அவனாலும் எண்ணிப்பார்க்க முடிய வில்லை. உயர்குடி விருந்து மேடைகளில் அவன் தத்தித் தத்திப் பறக்கும் இராவிட்டில்கள் போல எட் டாது உறவாடினான். அவன் உள்ளம் அவற்றின் இன்பங்களில் பற்றவில்லை.
ஒரு வேளை பாரிஸ் அரண்மனை வாழ்விடையே ஊடாடும் வாய்ப்புப் பெற்றால்! தாய் மரபினர் பலர் ஆடியயர்ந்த இடம் அது. ஆனால் உயர் குடியில் அவ னுக்கு ‘வாயில்’ வகுத்த அவன் கவிதை அரண்மனை யில் அவனுக்கு ‘வாயில்’ அடைத்தது. அவன் வசை தேர்ந்த நாவுக்கு அரசி அஞ்சினாள். பொறாமையும் புழுக்கமும் நிறைந்த மன்னர் அவையில் அவன் வசை பொறாமைகள் அகற்றும் நன்மருந்து என்பதை அவள் அறியவில்லை. நன்மை தீமைப் பகுத்தறிவும் இல்லாது போயது எவ்வளவு வருந்தத்தக்கது!
இவ் வெண்ணங்களிடையே ஆக்டேவ் மூரட் தன்னை மறந்தான். அவன் கண் மூடிற்று. அவன் கவிதையங் கனவுகளில் ஆழ்ந்தான்.
அவன் எத்தகைய கனவுக் காட்சிகளில் திளைத் தான் என்பது அவனுக்கே தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சலசலப்பு, ஒரு மூச்சு-அதனிடையே அவன் அரையுணர்வு திரும்பிற்று. கண்ணைத் திறக்காமலே அவன் தன் சூழ்நிலையில் கருத்துச் செலுத்தினான்.
அவன் கண் விழித்தபோது அவன் கண்ட காட்சி அவன் வாழ்நாள் முழுவதும் அவனை விட்டகலா திருந்தது. பாரிஸின் கலை, அரண்மனையின் கலைப் பகட்டு-இயற்கையின் எழிலும் இனிமையும் எளிமை யும் தெய்வங்களின் முகங்களில் காணப்படுவதாகக் கூறப்படும் பரந்த அருளிரக்கம்-கண்ணையும் கருத் தையும் பறிக்கும் இன்னதென்று கூறமுடியாத ஒரு கவர்ச்சி-இத்தனையும் ஓர் உருக் கொண்டு அவன் முன்னே நடமிட்டது. அதன் ஆற்றலில் அவன் உடல் உயிர் உள்ளம் மூன்றும் ஈடுபட்டு அவன் மீண்டும் தன்னை யிழந்தான்.
அழகிய பெண்கள் அவனுக்குப் புதிதல்ல. அவளைப் பார்க்கிலும் பகட்டான அழகை-அவள் தோற்றத்திலும் துடிப்புடைய இளமையை-அவள் கவர்ச்சியிலும் முனைப்பான கவர்ச்சியை அவன் கண் டிருந்தான். ஆனால் அக்கூட்டுக் கலவை கவிதையின் கூட்டுக் கலவை போல், உலகியல்பில் கால் வைத்து, கனவுலகில் நிலவுவது போன்றதா யிருந்தது. அவ் வனப்பு கண் கடந்த வனப்பு. அதன் ஒளி காட்சி கடந்து அகக்கண்களில் ஊடாடித் திகழ்வதாயிருந்தது.
அவன் கண்ட காட்சி வேறு எதுவும் அன்று. அதே விருந்தில் அன்று வந்து கலந்து கொண்டிருந்த லாரைன் சிராம்மோனையே.
மாது சிராம்மோன் இப்போது கைம்பெண். கணவன் இறந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டன. ஆனால் அவள் தன் கைம்பெண் கோலத்தை இன்னும் களையவில்லை. துயர் ஆடையாய் மேற்கொண்ட கறுப்பு நிலையாகவே அவள் தூய வெண்பொன்னிறத்தை எடுத் துக் காட்டும் நல்லாடையாக விளங்கிற்று. கைம்மைக் கோலமோ, தாய்மையோ அவள் கன்னியழகில் பெரு. மாறுதல் உண்டு பண்ணவில்லை-உண்டுபண்ணிய மாறுதலும் அவற்றின் ஒளியைப் பெருக்கி அமைதி யால் வனப்பூட்டியதேயன்றி வேறன்று.
இயற்கையின் எளிமையில் ஆர்வங்கொண்டும் அதனால் நிறைவடையாத மாது சிராம்மோன் மாளிகை விருந்துகளிலும் கலந்து கொள்ள முடிந்ததே தவிர முழுதும் அதனால் நிறைவுபெற முடியவில்லை. அவள் உள்ளத்தின் துன்ப மின்னதென்றும் அவளால் குறிப் பிட்டுணர முடியவில்லை. கணவனிடம் அவள் நேசம் பெரிது. அவன் இறந்ததற்காக அவள் உள்ளூர வருந் தினாள். ஆனால் ஓராண்டுக்குப்பின் அவள் வருத்தம் குறையவில்லை. கணவன் பிரிவால் வந்த வருத்தமா யிருந்தால்தானே நாள் செல்லச் செல்லக் குறையும்? பிள்ளைகளிடம் அவள் தன் உயிரையே இரு கூறிட்டு உரித்து வைத்திருந்தாள். அவர்களைக் காணும்போது அவள் உள்ளம் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெற்றது. ஆனால் அவ்வுணர்ச்சி யின்பமுளது. பாசிபடர்ந்த குளத்தில் விழுந்த கல் சிறிது பாசியை விலக்குவது போல, அம் மகிழ்ச்சி அவள் நிலையான துன்பத்தைச் சிறிதே அகற்றிப் பின் மீண்டும் பழைய நிலைமையி லேயே கொண்டுபோய் விட்டது.
டிலீஞ் தந்த அவ்விருந்தில் அவள் உரையாடல்கள் எல்லாராலும் வியந்து பாராட்டப்பட்டன. அடிக்கடி ஆக்டேவின் பாடலும் அவள் காதில் விழுந்தது. அப் பாடல்களை அவள் அடிக்கடி உயர்குடி விற்பன்னரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுவது கண்டும் அவ்வப்போது அவற்றின் நயம் பாராட்டியும் உள் ளாள். இன்று அக்கவிஞனே விருந்தில் கலந்து கொண்டுள்ளான் என்றும் அவள் கேட்டாள். ஆனால் விருந்தின் அமளியில் அவள் அவனைக் காணவில்லை. விருந்தின் குடியாட்டில் அவள் ஒதுங்கியிருந்தாள்.
குடியாட்டுத் தீவிரமானபோது எல்லாப் பெண் களும் அவளிருந்த பெண்கள் கூடத்திற்கு வந்துவிட்ட னர். ஆனால் அவர்களும் ஆடிப்பாடி அலுத்துப் போயி ருந்தனர். விடிந்த பின்னரே அவர்கள் தத்தம் மாளிகை சென்று முழு ஓய்வு கொள்ளமுடியும். ஆகவே அவர் கள் சாய்மஞ்சங்களில் ஆங்காங்கமர்ந்து சாய்ந்தனர். கண்கள் ஒவ்வொரு இணையாக இணைந்து மூடின. மாது சிராம்மோனுக்கு மட்டும் உறக்கமும் வரவில்லை; விருந்து மண்டபத்தின் புழுக்கமும் தாங்கவில்லை. விடி யற்காலமானால், வெளியே சென்று வரலாம். அது வரை மாளிகையினுள்ளேயே சுற்றிப் பார்க்க எண்ணி அவள் வெளிக்கிளம்பினாள்.
ஆக்டேவ் இருந்த பகுதி கிட்டத்தட்ட வெறுமை யாகவே அவளுக்குக் காணப்பட்டது. ஆக்டேவ் மூரட்டின் நலிந்த உடல் அதைச் சுற்றிப் பொதிந்திருந்த கந்தலாடைகளுடன் மஞ்சத்துடன் மஞ்சமாகக் காட்சி யளித்தது. தான் தனிமையிலிருப்பதாக எண்ணிய அவள் அங்கிருந்த கண்ணாடி ஒன்றில் தன் நிழலை நோக்கித் தன்னாடையணிகளைச் சரிப்படுத்திக் கொண் டிருந்தாள்.
அச்சமயம் ஒரு நெடு மூச்சுக் கேட்டு அவள் திரும் பிப் பார்த்தாள். மஞ்சத்தில் சோர்ந்து கிடந்த உருவம் அவள் கண்ணில் பட்டது. அது யாரோ? எவரோ? ஆனால் அம் முகத்தில் ஏதோ ஒன்று அவள் ஆர்வம், இரக்கம், அன்பு ஆகிய பல்வகை உணர்ச்சிகளையும் ஒருங்கே இயக்கிற்று; பிள்ளையிடம் தாய் கொள்ளும் கவலை, உடன் பிறந்தாரிடம் உடன்பிறந்தாள் கொள் ளும் பாசம், கணவனிடம் மனைவி கொள்ளும் உரிமை நட்பு, நண்பரிடம் கொள்ளும் பரிவு யாவும் அவள் உள் ளத்தில் ஒருங்கே எழுந்தன. அவன் சோர்வு நோய் காரணமாகவா, வெறிமயக்கத்தாலா அல்லது வெறும் தூக்கத்தினால்தானா என்றறிய அவள் நெஞ்சம் ஆவல் கொண்டு துடித்தது. தனிமை உள்ளார்ந்த மனித உணர்ச்சிகளுக்கு வலுத்தர, அவள் அவனண்டை வந்து குனிந்து அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த் தாள். அவன் தலை காயவில்லை. பின் நெஞ்சையும் கை யையும் தொட்டுப் பார்த்தாள். நாடிகள் சரியாகவே ஓடின. அவள் கவலை தீர்ந்தது.
ஆக்டேவ் காலடி ஓசையும் ஆடைச் சலசலப்பும் கேட்டு அரை விழிப்புக் கொண்டது இப்போதுதான்.
ஆக்டேவ் கையிலிருந்து இச்சமயம் ஒரு புத்தகம் பாதி நழுவிக் கொண்டிருந்தது. அது என்ன புத்தகம் என்று அவள் காண அவாவினாள். துணிந்து அதை அவன் கையினின்று எடுத்துப் பார்த்தாள். அதன் பெயர் அவளுக்கு வியப்பதிர்ச்சி தந்தது. அது அவள் எப்போதும் விரும்பி வாசித்த -அவள் மொழி பெயர்த்துவந்த ஹோரோஸின் ஆடற்பாக்கள். அதை அவள் எடுத்துத் தற்போக்காகத் திறந்தாள். அதுமுன் அடிக்கடி திருப்பிய ஒரு பக்கமாகவே திறந்தது. அப்பக்கத்திலுள்ள ஓர் இலத்தீன் பாடலை அவள் தனக் குள் வாசித்துக் கொண்டாள்.
“மாதேர் சைவாகு’ பிடினும்…”
காதலுக்குரிய நங்கை ஒரு கணத்தில் கலை நங்கை யாக மாறினாள். பாட்டைத் திரும்பத் திரும்ப முனகிக் கொண்டே அதன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டாள். ‘ஆம். இது சரி, இது போதும் என்று எண்ணுகிறேன்’ என்ற முன்னுரையுடன் தாய் மொழி ஆக்கம் வெளி வந்தது.
“என் காதல் வாழ்வு கழிந்த தென்றெண்ணினேன்!–
எனில் காதல்வேள்தன் அருங்குதலைச்சிறார்
சூழ…”
மொழிபெயர்ப்புக் கலையை இடைமறித்துப் புத்த கம் தொப்பென்று கீழே விழுந்தது. அவ்வரவம் கேட் டஞ்சிய பெருமாட்டி பிரில்லன்ட் ஆக்டேவ் மடியி னின்று குதித்துப் பாய்ந்தோடிற்று. ஆக்டேவ் மூரட் தன் அரைத்துயில் நாடகம் விடுத்து நனவரங்கத்தில் துணிந்தேற முன்வந்தான்.
அவள் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் செய்து “ஆக்டேவ், தம்மை யொத்த கலைஞன், தம் கலைக்கு வணக்கம் செலுத்துகிறேன்” என்றாள்.
அவன் துணிந்து அவளையே நோக்கி அவள் கவர்ச்சியைப் பருகினான்.
அவள் அதிர்ச்சியுற்றுத் தன் வயமிழந்து அப் பார் வையில் வதங்கினாள்.
அவன் உள்ளம் துடித்தது.
அவள் ஆர்வம் முன் தள்ள, அச்சம் பின் தள்ள அகப்போர் ஆடினாள்.
இருவரும் நெடுரேம் பேசவில்லை.
எல்லையற்ற கால வெளி எல்லையற்ற காலத்துடன் கலந்து கொண்டது. ஓர் ஆடவனும் பெண்ணும் அக் கலப்பிடையே செயலற்று நின்றனர்.
மனித உலகின் உணர்வு இருவரையும் கால எல்லை யினின்று தட்டி எழுப்பிற்று. கால எல்லை வருங்காலத் தின் தொலை விளிம்பிலும் இருக்கலாம். கனவுலகின் மாயத்திரையின் பின்னும் இருக்கலாம். நிகழ் கால மும் நனவும் அவற்றை எப்படி வேறு பிரித்தறிய முடியும்? மனித சமூகத்தில் உறுப்பினரான மனிதர் சமூக உறுப்பினராக மட்டும்தானே பரிமாறிக் கொள்ள முடியும்?
கனவுலகின் மோனவரம்பை அவள் சிறுகத் தட்டி யுடைத்தாள். வழக்கமான மனித உலகின் வெற்றுரை களைக் கொண்டு, “தங்களை இனிய தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள்.
“தூக்கம் இனிதோ, இல்லையோ; விழிப்பு இனி தென்று காண்கிறேன்” என்றான் அவன்.
அவள்: நான் ஓர் எழுத்தாளர். அத்துடன் இலத் தீனக் கவிதையில் ஈடுபட்டவள். இலத்தீனக் கவிதை யில் ஈடுபட்ட மற்றொரு உள்ளத்துடன் பழகும் வாய்ப் புக் கிட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவன் : அப்படியானால் தாங்கள் என் நண்பர். என் ஆசிரியர் அப்பேத லீலை அறிவீர்களா?
அவன்: ஆ, அவர் தங்களுக்கு நண்பரா? நானும் அவர் மாணவியே. இன்று காலையில் கூட அவரிடம் தான் பாடங் கேட்டேன். என்ன அரிய புலமை நயம், அவரிடத்தில்!
அவன்: ஹோரோஸ், விர்ஜில் ஆகிய மலைகளில் ஏற முடியாதபோது நான் எப்போதும் அவர் துணையைத் தான் நாடுவது. படைவீடுகளில் நான் காலம் கழிக்கும் போது என் அவப் பொழுதை நற்பொழுதாக்க நான் இதனைப் பயன்படுத்துகிறேன். ஆனால் தாங்கள்-தங் கள் இயற்கை வனப்பைக் காணத் தாங்கள் உயர் குடிப் பசப்பருள் ஒருவர் என்று எண்ண முடியவில்லை. அதே சமயம் உங்கள் மெல் விரல்கள் மை படத் தக்கவையாக வும் தோற்றவில்லை.
அவள்: மைமட்டுமென்ன, அடிக்கடி சாயமும் தோய்ந்திருப்பதுண்டு. தாங்கள் அப்போது பார்த் தால் என்ன சொல்வீர்களோ?
அவன்: ஆகா; கவிதை நங்கை மட்டுமன்றி ஓவிய நங்கையும் உங்களிடம் வீற்றிருக்கின்றனரோ? … சரி, சரி, இத்தனை கலைப்பண்பு இந்த நாடோடிக் கவிஞ னுடன் தன் முழுப் பொழுதைப் போக்கிவிடக் கூடாது. இசையாடல் அரங்கம் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். தாங்கள் அதை விட்டு…
அவள்: தரக் கேடில்லை. நான் அதில் சலிப்படைந்த பின்தான் வந்தேன்.
அவன்: அதற்காக வருந்துகிறேன். ஏனெனில் தங்களுடன் ஓர் ஆடல் ஆடி மகிழ எண்ணியிருந்தேன்.
அவள்: அதற்காக வருந்த வேண்டியதில்லை, ஐயனே. நான் ஆடலிற் கலப்பதில்லை. நான் இன்னும் இழவுத் துயராற்றிக் கொண்டுதான் இருக்கிறேன் என் பதை என் கறுப்பங்கியிலிருந்து தாங்கள் கண்டு கொண்டிருக்கலாம். ஆயினும் மாடியிருக்கையில் சென்ற மர்ந்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அது ஆடுவதினும் இனிது. மனித உலகைக் கண்ணுறும் வானவர் போல ஈடுபடாமலே ஈடுபடலாம். வரு கிறீர்களா?
அவன்: (இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்) நான் ஆட லில் அவ்வளவு தேர்ந்தவனல்ல. அதைப் பார்வையிடு வதில் தங்களுடன் அதனினும் எளிதாகப் போட்டியிட முடியும்.
ஆக்டேவ் தன் கட்டிளைமையிலும் அந்த சந்த முடையவனல்ல. ஆனால் அவன் நெட்டையான உ உறுதி வாய்ந்த உடலுடையவனாயிருந்தான். லாரைன் பார் வைக்கு அந்த சந்த முடையவளாயினும் அவனைப் பார்க்க, மிக நடுத்தர உயரமுடையவளாகவே காணப் பட்டாள். அவன் தோள்களில் சார்ந்து அவள் அரங்க மேடை சென்ற காட்சி கமுகினைப்பற்றி வாழை வளர் வது போன்றிருந்தது.
ஆடல் பாடல் மேளங்கள் அரங்கில் ஒரு சிறிது நேரமே ஓய்ந்திருந்தன. பெண்டிர் ஓய்வகத்திலிருந்து ஒவ்வொருவராகத் திரும்பி அரங்கேறினர். வெறி மயக்க நீங்கிய ஆடவரும் ஒவ்வொருவராக எழுந்து வந்து கலந்தனர். முழவங்கள் முழங்கின. குழல்கள் இயம்பின. பன்னிற வண்ணங்கள் பறந்து சுழன்றன. பல்லிய இசைகள் அவற்றுடன் ஒத்துக் கூத்தாடின.
அவர்கள் ஆடல் அரங்கின் மாறுபாடுகளைப் பற்றிப் பேசினர். 18 ஆம் நூற்றாண்டிறுதியில் ஆட லரங்கைப் பற்றிய சிற்றின்பக் களியாட்டங்களை ஆக்டேவ் வெறுத்தான். பழைய கலை இலக்கணம் வழுவாத செந்திற ஆடலை அவன் புகழ்ந்தான். அவன் பழமைப் பற்றில் அவள் ஈடுபட்டாள். ஆனால் புது மையை அவள் உடனிருந்து பழிக்க முடியவில்லை. புதுமை ஆடலின் தோற்றுதல் தலைவியான அரசியிடம் அவள் பற்றுக் கொண்டவள். ஆக்டேவ் புதிய அரண் மனை வாழ்வைகண்டித்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.
ஆக்டேவின் திறந்த உள்ளம், கட்டற்ற போக்கு ஆகி யவை அவளுக்குப் பிடித்திருந்தன. ஆனால் காதல், பெண்டிர் ஆகிய வகைகளில் அவன் கொண்டிருந்த கருத்தும் அவன் வாழ்க்கைப் போக்கைப் பற்றி அவள் கேட்டிருந்த செய்திகளும் அவளுக்கு எச்சரிக்கை யூட்டின. பெண்டிரைப் பற்றியும் காதலைப் பற்றியும் அவன் பேசியபோது அவள் அதில் ஈடுபடவில்லை. அவன் காதல் பற்றிய தன்பாடலொன்றைப் பாடினான்:
மெல்லிய காதல் துடிப்பு
மேன்மேல் வளர்ந்திடில் வெடிப்பு
நாளாக ஆகத் துவர்ப்பே
இன்பம் பழகிடில் புளிப்பே
எத்தனை மெல்லி தாகிய
பொன்மலர்ச் சங்கிலி யாயினும்
அழுத்த மிகுந்திடின் உறுத்தும்
தத்துறு காலையின் ஆர்வம்
தளர்தரு மாலையில் சோர்வே
அதன்மே லெதுவும் வருத்தும்
எங்கும் சுற்றித் திரியாமல்
இடையிடை வெட்டிப் பிரியாமல்
தங்கும் காதல் உவர்ப்பாகும்.
தன் பாட்டையோ பேச்சையோ லாரைன் கவனிக்காதிருப்பது கண்டு ஆக்டேவுக்குச் சுருக்கென்றது. ஒரு பெண்ணின் புறக்கணிப்புக்கண்டு அவன் இதுவரை உளைவுற்றதில்லை. அவன் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி எழுந்துபோக எண்ணினான். இளவரசன் டிலீஞ் அப்பக்கம் வந்து அவனைப் பழைய நட்புரிமையுடன் அழைக்கவே அவன் லாரைனிடம் விடை பெற்றுப் பிரிந்தான்.
அவன் தன் அருகேயிருந்து எழுந்தபோதுதான் லாரைனுக்குத் தன் உள்ளம் அவன் போன திசையே போக விரும்புவது தெரிந்தது.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.