கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 175 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 7-9 | இதழ் 10-12 | இதழ் 13-15

ஏடு 2 – அவன்

இதழ் 10 – வழியிற் பிறந்த மகவு

பதினைந்தாம் லூயி காலத்திய ஃபிரஞ்சு நாட்டரசி போலந்து நாட்டினள். அவள் தந்தை போலந்து மன்னன் ஸ்டானிஸ் லாஸ் லெக்ஸின்ஸ்கி. ஃபிரஞ்சு நாட்டரசன் உறவு மூலம் அவன் மதிப்பு மற்ற அரசர் களிடையே உயர்வடைந்தது. அவன் வாழ்வின் பிற் பகுதி இதனால் வளமுற்றது. இயற்கையிலேயே இன்ப வாழ்வில் விருப்புடையவன் அவன். இப்போது அவ னுடைய அரண்மனை பல நாட்டுச் சிறந்த கலைஞர் களுக்கும் இன்ப வாழ்வையே நோக்கமாகக்கொண்ட பல உயர்குடி ஆடவர் பெண்டிருக்கும் நல்விருந்துக் கூடமாயிற்று. ஆயினும் அரசவையின் மதிப்பு இதனால் குன்றவில்லை. 

போலந்து அரசவைக்குப் பொலிவூட்டிய அவைத் தலைவி கோமாட்டி டி பஃவ்வர்ஸ் என்ற அழகி. அவள் காதலை ஒரு கலையாகவும், கலையை ஒரு காதல் விளை யாட்டாகவும் ஆக்கியவள். கலையிலும் இன்பத்திலும் மூழ்கி, அத்துடன் அரசியல் சூழ்ச்சி நயங்களிலும் வல்லவனா யிருந்த ஸ்டானிஸ் லாஸுக்கு அவள் எல்லாவகையிலும் உற்ற துணைவியாகவும் கைக் கருவியாகவும் அமைந்தாள். அவன் அரசியல் வாழ்வின் நண்பர்கள் அனைவரும் அவளுக்கும் நண்பர்கள். அரசன் ஆடிய நாடகங்களில் அர சியல் காட்சி அங்கத்தில் அவளிருந்து நடிப்பாள்; அடுத்த அரசியல் காட்சி தொடங்கு முன் கோமாட்டி டி பஃவ் வர்ஸ் இடைக் காட்சி அங்கம் நடத்தி அரசன் நாட கத்தைத் திறம்பட இயக்குவாள். அரசனிடம் அவளுக் குள்ள செல்வாக்கை மன்னவையிலுள்ள அனைவரும் அறிந்து, அவளையே அரசன் விருப்பங்களை இயக்கும் திறவுகோலாகப் பயன்படுத்தினர். அவள் கண்ணசைக் தால் அரசன் கோல் அசையும். அரசிகூட அவள் ஆற்றலை அடிக்கடி பயன்படுத்திக்கொள்ளத் தயங்க வில்லை. இதனால் அவள் அரசனுக்கும் அரசிக்கும் மேற்பட்ட ஆற்றலுடையவளாகவும், அவர்களைவிட எல்லார்க்கும் இனியவளாகவும் அமைந்தாள். 

அரசன் ஸ்டானிஸ்லாஸ் மிகப்பருத்த உடலுடைய வன். வாழ்வின் பிற்பகுதியில் அவன் இன்ப வாழ்வும் சோம்பலும் பெருகின. உடல் பின்னும் அளவில் பெருத்தது. அவன் பெரும்பாலும் அரண்மனையை விட்டு வெளியே செல்வதை நிறுத்திக்கொண் டிருந்தான். இன்றியமையாது செல்லவேண்டி யிருக் தாலும் ஏவலர் அவனை நாற்காலியுடன் தூக்கிக் கொண்டுபோய்த்தான் வண்டியிலேற்றுவர். படுக்கவும் இருக்கவும் அவனுக்கு நாற்காலி வேறு, படுக்கை வேறு என்ற வேற்றுமை கிடையாது. படுக்கையே, விரித்தால் கட்டில், மடக்கினால் நாற்காலி என்ற முறை யில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலும் அவனிடம் மாறாதிருந்த பழம்பண்பு அவன் பேச்சுத் திற மூம் நயமும், அவன் மூளைத் திறமும் மட்டுமே. இவற் றின் பயனாக ஃபிரஞ்சுப் பேரரசனுக்கு அடுத் தபடியான மதிப்பு அவனுக்கும் அவன் அரசவைக்கும் ஐரோப்பா வெங்கும் இருந்து வந்தது. 

கலையழகியாகவும் காதற்கலை மகளாகவும் இருந்த கோமாட்டி டிபஃவ்வர்ஸின் உடல், உளம் இரண்டுமே ஆண்டின் போக்கால் மாறுபடாமல் இருந்தன. அவள் என்றும் கன்னிக் கலையழகியாகவே இருந்தாள். இளைஞரும் கலைஞரும் எப்போதும் அவளைச் சுற்றி வட்டமிட்ட வண்ணமாகவே இருந்தார்கள். அவள் அழகு மட்டுமின்றி அவள் பேச்சும் எல்லாரையும் கவர்ந் தது. நீண்ட நாள் அவளுடன் பழகியவர்களுக்குத் தான் அவள் வயது ஓரளவுக்காவது தெரியவரும். ஆனால் அத்தகையவர்கூடத் தாம் பருவமாறினும் அவள் பருவமாறாதிருந்தது கண்டு வியப்படைந்தனர்! சிறப்பாக இந்நிலை அரசன் ஸ்டானிஸ் லாஸுக்குத் தான் ஏற்பட்டிருந்தது. அவன் முன்போலவே அவளை நடத்தி வந்தான். முன்போலவே அரண்மனையாட்சி முழுவதும் அவள் கையிலே விடப்பட்டிருந்தது. ஆனால் முன்போல அவன் அவளுடன் ஓடியாட, இன்ப விளையாட்டுக்களில் கலக்க முடியவில்லை. அவளுக்கும் உள்ளுர அவனிடம் முன் உள்ள கவர்ச்சி கிடையாது. அவள் கலைக்கும் வாழ்வுக்கும் அவன் இப்போது அவ்வளவு பொருத்தமாயில்லை. ஆயினும் அவன் அரசன்; அவள் அரசவைக் கலையரசி. அத்துடன் அவனிடம் அவள் உள்ளூரக்கொண்டிருந்த நட்புணர்ச் சியும் மதிப்பும் சிறிதும் மாறாதிருந்தன. ஆகவே அவள் தன் வெறுப்பை முற்றிலும் அடக்கிக்கொண்டு, தன் வாழ்க்கை நாடகத்திடையே அவனிடம் மற்றொரு நாடகம் நடித்து வந்தாள். அரசனுடைய அரசியல் நாடகங்களுக்குப் புறம்பாகத் தான் நடத்திய கலை நாடகங்களை அவள் அவன் கண்ணில் படாமல் மாறாட் டம் செய்து வந்தாள். 

அவள் நாடகத்தின் மிகமிகப் புதுமைவாய்ந்த கட்டம் 1738-ம் ஆண்டுக்கு உரியது. வழக்கம்போலவே அவள் ஆடினாள், பாடினாள், உரையாடினாள். அவள் காதலர் எப்போதும் போலவே அவளைச் சுற்றி வட்ட மிட்டு வந்தனர். ஆனால் இவ்வளவு பேருக்கும் தெரி யாது, அவள் அடிவயிற்றின் நிலை. அவள் ஓட்ட சாட்டமும் சுறுசுறுப்பும் இன்பக் கேளிக்கையும் அவர் கள் கண்களை அவ்வளவு திறமையாக மறைத்தன! 

போலந்து நாட்டின் தலைசிறந்த வழக்கு மன்றத் தலைவர் ஒருவரே கோமாட்டி பஃவ்வர்ஸின் மிகப் புத்தம் புதிய காதலர். அவர் வழக்கறிவின் திறமெல் லாம் அவள் கையில் பம்பரமாயாடிற்று. அவளது ஒரு புன்முறுவலுக்காக அவர் ஏங்கிக் கிடந்தார். அவள் பல இளைஞருடன் களித்து வாய்விட்டுச் சிரித்துப் பேசுவாள். ஆனால் அவள் அவரை மதிப்புடன் நடத் தினாள். அத்துடன் அவள் அவரை ஒருகணம் தன்னை விட்டு அப்பாற் செல்ல விடுவதில்லை. அவர் அறிவுரை களைக் கேட்பாள்; அவருடன் வாதாடுவாள். அவர் நட்பைப்பற்றிப் பிறரிடம் பெரிதாகப்பேசி, அவரைத் தன்னிடம் ஈடுபடுத்துவாள். அவர் கலைச்சுவைத் திறத் தைப் புகழ்ந்து, அவரை அடிக்கடி இன்பக் கனவுல குக்கு ஏற்றி இறக்குவாள். 

ஒருநாள் வழக்கு மன்றத் தலைவரிடம் அவள் திடுமெனத் தன் முறைகளை மாற்றினாள். அண்மையிலுள்ள நகரத்துக்குச் சென்று சில துணிமணிகள் வாங்க வேண்டுமென்றும். அச்சமயத்திலும் தான் அவர் தோழமையைவிட விரும்பாததால், தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணுவதாகவும் அவரிடம் அவள் கூறினாள். அப்பு வாய்ப்பை ஆர்வத்துடன் வரவேற்றார். இருவரும் ஒரே வண்டியிலேறி நகர் சென்றனர். நகரில் பொருள்கள் வாங்கியபின் அவள் வண்டியோட்டியை வேறு வேலை கொடுத்தனுப்பி விட்டாள். அவன் வருவதற்காகக் காத்திருப்பவள் போல் அவள் பிற்பகல் வரை நகரில் தங்கினாள். அதன் பின் மன்றத்தலைவரை நோக்கி, “இந்த வண்டியோட்டி களை நம்பி இங்கே வந்தது தவறு. அவனை ஒரு வேலையாக அரண்மனைக்கு அனுப்பினேன். அவன் நாம் போலிருக்கிறது. இன்று திரும்பமாட்டான் இன்று இந்நகரில் தங்கி அவதிப்படத்தான் வேண்டு மென்று அஞ்சுகிறேன்” என்றாள். 

மன் -தலை: தாங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நான்தான் உங்களுடனிருக்கிறேனே. வண்டிக்காரன் வராவிட்டால் போகிறது. நானே- 

கோ-டி: வேண்டாம் -வேண்டாம். தாங்கள் என் விருந்தினர். அத்துடன் ஒரு வழக்கு மன்றத் தலைவர்! 

மன் – தலை: நான் தங்கள் உயிர் நண்பன். என் னிடம் தாங்கள் எவ்வகை வேறுபாடும் காட்ட வேண்டியதில்லை.

“அது தெரியாதா எனக்கு ?” என்று அவள் ஆர்வத்துடன் அவர் கையைப் பற்றினாள். அவர் இப் பெரும் பேற்றை நழுவவிடாமல் கையை இறுகப் பற்றினார். அவள் அக் கையைத் தான் பற்றாவிடினும் அவர் பற்றியபின் எடுக்க முடியவில்லை. அவள் சோர் வுற்றவள்போல் தன் கையை அதன் முழுப்பளுவுடன் அவர் கைமீது கிடக்கவிட்டாள். 

வழியில் வண்டி விரைவாகச் செல்லும்போது அவள் “இப்போது என்ன இவ்வளவு அவசரம் ? வழி யில் காட்சிகள் கவர்ச்சிகரமாயிருக்கின்றன. மெள்ள இயற்கைக் காட்சியைக் கண்டின்புற்றுச் செல்வோம்” என்றாள். 

காதலன் நெஞ்சு களிவுற்று நெகிழ்ந்தது. அவர் குதிரை மீது கடிவாளத்தையிட்டு அதனை ஒரு தூக்க நடைபோட விட்டார். அவள் ஒன்றும் பேசாதது கண்டு மெல்லத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்கள் அரைத்துயில் கொள்வது போன்றிருந்தன. உடல் மெல்லத் துவண்டு அவர் மீது சாய்ந்தது. அத்தறு வாயில் அவரிடம் காதல் தெய்வமே இறங்கி வந்து வரந் தருவதுபோலிருந்தது. அவர் அவளை அணைத்து தன்மீது சாத்தினார். 

அவள் சற்றுக் கண் திறந்தாள். “இப்போது எதுவரை வந்திருக்கிறோம்?” என்று கேட்டாள். தாம் மிக மெள்ளச் செல்வதற்காக அவள் எங்கே கண்டிக் கப்போகிறாளோ என்று அஞ்சியவராய் அவர் “விரை வில் வந்துவிடுவோம். சிற்றோடை யருகிலுள்ள மரத் திட்டுக்கு வந்துவிட்டோம்” என்றார். 

“சிறிது இங்கே தங்கி விட்டுப் போகலாமல்லவா ? குதிரைகளும் இளைப்பாறித் தண்ணீர் குடிக்குமே” என்றாள் அவள். 

அமுதம் அருகில் இருந்தும், அதை எடுக்கத் துணி வில்லாதவர்போலத்தான் இருந்தார் அவர். வலிந்த அழைப்புப்போன்ற இவ்வுரை அவரை ஊக்கியது. அவர் அச்சம் எல்லாம் தீர்ந்தது. தன்னைப்போல அடங் காக் காதலுடையவள் அழைப்பாகவே இச்செயலை அவர் கருதினார். அவர் உடலில் மின்சாரம்போல ஆர் வம் வந்து பாய்ந்தது. அவர் அவளைச் சருகுபோலத் தாங்கிச் சென்று மரத்தடியில் கிடத்தினார். அவள் றிசிது நீர் வேண்டும் என்றாள். மன்றத்தலைவர் விரைந்து ஓன டைப் பக்கம் சென்று தம் கை கொண்டமட்டும் தண்ணீர் கொண்டு வந்தார். 

வந்தபோது அவர் கண்ட காட்சி அவரைத் தூக்கி வாரிப்போட்டது. அவள் அருகே ஒரு பச்சைப் பசுங் குழவி கிடந்தது. அவர் அதுபற்றி தம் வியப்பை வெளியிடத் தொடங்குமுன், அது தன் கதையைத் தொடங்கி ‘வீல் வீல்’ என்று கத்திற்று. 

கோமாட்டி முகத்தில் ஒரு மெல்லிய குறும்புநகை யின் சாயல் தென்பட்டது. அவள் மன்றத்தலைவரை அருகில் அழைத்து அவர் கையை உரிமையுடன் பற்றி முத்தமிட்டுத் “தாங்கள் உண்மையான நண்பர் என்று எனக்குத் தெரியும். இனி என் நட்புரிமையில் முதல் இடம் உங்களுக்குத்தான். ஆனால், தாங்கள் இன்னும் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றாள். 

தம்முதல் ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு, வழக்க மான நட்புணர்ச்சி விடாமல் அவர் “என்ன உதவியா யினும் கூறுக” என்றார். ‘ஏதோ பெரிய உதவியாய்த் தானிருக்க வேண்டும்’ என்று அவர் எதிர்பார்த்தார். 

“அரண்மனை சென்றவுடன் தாங்கள்தான் இந்நற் செய்தியை அரசருக்குப் பக்குவமாய்க் கூறவேண்டும். இது நானும் எதிர்பாராத செய்தி என்பதைத் தாங்கள் அறிவிக்க வேண்டும்.” 

மன்றத் தலைவர் அவள் முன் கருதலைக் கண்டு வியந்தார். ஸ்டானிஸ் லாஸ் ஒரு பிள்ளையின் தந்தையாகக் கூடிய பருவங் கடந்து வந்தாராதலால் அவர் தவறாக ஐயங்கொள்ளக்கூட இடமிருக்கக் கூடாது என்பது அவள் எண்ணமா யிருக்க வேண்டும் என்று அவர் அறிந்து கொண்டார். 

ஆனால், பிள்ளை ஸ்டானிஸ் லாஸ் அரசரின் பிள்ளை தான் என்பதை அதன் குறும்புநகை அப்போதே காட்டிற்று. அது கொழு கொழு வென்று இருந்தது. முன்னமே கோமாட்டி கொண்டு வந்திருந்த மெல்லாடையில் பொதியப்பெற்று அது தாளில் பொதிந்த பேரீச்சம் பழச்சுளைகள் போல் கண்ணைக் கவர்ந்தது. 

நகர் சென்ற கோமாட்டி பற்றி யாவரும் கவலை யுறத் தொடங்கியிருந்தனர். வண்டிவந்து நின்றதுமே அவர்கள் வந்து பார்த்தனர். கோமாட்டி எங்கே என்ற அவர்கள் கேள்விக்கு மன்றத் தலைவர் “உள்ளே பாருங்கள்” என்று கூறி விரைந்தகன்றார். 

விரைவில் மன்னர் ஸ்டானிஸ் லாஸ் நாற்காலியி லிருந்து தாமே எழுந்து வந்து குழந்தையை எடுத் தணைத்தார். அது “நீதான் என் தந்தை, நீதான் என் தந்தை” என்று கூறுவதுபோல அவரைச் சுட்டிக் காட்டிச்சிரித்தது. அவர் உள்ளம் மிகமிகக் குளிர்ந்தது, 

உள்ளத்தில் பொறாமை கொண்டது அரசிமட்டுமே. ஆனால், குழந்தையிடம் யார் பற்றுதல் கொண்டாலும் தாய் அதனை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காததுகண்டு அவள்கூடக் குழந்தையிடம் சிறிது இரக்கம் கொண் டாள். குழந்தையை எடுத்துக் கொஞ்சுபவருடன் குலவி விட்டுக் கோமாட்டி தன் இன்ப வாழ்வில் மீண்டும் மிதந்தாள். தந்தையும் தாயும் இருக்கையிலேயே குழந்தை தந்தையும் தாயும் அற்ற குழந்தையாக, ஆனால் பலராலும் பாராட்டப்பெற்று வளர்ந்தது. 

கோமாட்டியின் புதுமை வாய்ந்த வாழ்க்கை, குழந்தையின் புதுமை வாய்ந்த பிறப்பு வளர்ப்பு ஆகி யவைபற்றிய பேச்சே போலந்தின் தலைநகரத்து மக்கள்’ பொழுதுபோக்குப் பேச்சாயிருந்தது. 

அந்நாளைய மக்கள் பலரும் தத்தம் வாழ்க்கையின் இறுதிக்கல்லறை வாசகத்தைத் தாமே எழுதி, கல்லறை செல்லு முன்பே பரப்பிவிடுவது வழக்கம். கோமாட்டி தனக்குத் தேர்ந்துகொண்ட வாசகம் இது: 

இன்பம் விழைந்தாள் இன்பத்தில் தான்மிதந்தாள்
இன்ப அமைதியீண் டெய்தினாள்-இன்ப 
உலகுக்குக் காத்திருக்கத் தாளாம லிம்மை 
உலகிலே பெற்றாள் உவந்து. 

கோமாட்டி பெற்ற மகவு தாயின் கலைத் திறத்துடன் தந்தையின்  நகைத் திறமும் தன் சார்பில் வசைத் திறமும் கூட்டிப் பாடக் கற்றுக்கொண்டான். அவன் கவிதைகள் வால்தேரின் வசைத்திறமும், ரூஸோவின் கலைத்திறமும், பழைய ஃபிரஞ்சுக் கவிதை யின் இனிமையும் நயமும் ஒருங்கே உடையதாயிருந் தன. தன் புதுமைப் பிறப்பையும் புதுமை வாழ்வையும் உட்பொதிந்து அவன் தன் கல்லறை வாசகமாக எழுதிய பாடல் இது. 

ஈதோ ஒரு கவி வீரன் பெருவாழ்க்கை 
ஈதோ குதிபெருங் கானாறு-ஈதோ 
வழிநெறியே வாழ்வென்னும் நல்லுரை நாட்ட
வழியிடைத் தோன்றினான் வந்து. 

இளைய ஸ்டானிஸ் லாஸ் சிலநாட்களிலேயே அரண் மனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலிருந்த ஒரு சிற்றூரில் ஒரு குடியானவனிடம் வளர்க்கப்படும் படி விடப்பட்டான். குடியானவனுக்கு நாய்கள் மீதும் கால்நடைகள் மீதும் மிகவும் விருப்பம். ஸ்டானிஸ் லாஸையும் நாய்களைப்போலவே அன்பாக நாய்க் கொட்டிலிலிட்டு வளர்த்தான். ஸ்டானிஸ் லாஸ் என்ற அவன் பெயரும் விரைவில் மறக்கப்பட்டது. தாய் தன் குழந்தை என்று கவலைகொள்ளாதபோது, தந்தை எப்படிக் கவலைகொள்ள முடியும்? அவன் முதற்பெயர் வழக்காறற்று, தாயின் பட்டப் பெயருக்கும் அவன் உரியவனாகாமல், ஆக்டேவ் மூரட் என்ற அவன் குடிப் பெயர் ஒன்றினால் மட்டுமே அவன் குறிக்கப்பெற்றான். தாய் தந்தையரின் உரிமையாக அவனுக்குப்பட்டம், செல்வம், அறிவு ஆகிய எதுவுமில்லை. தந்தையின் மூலம் ஸ்லாவிய (போலந்து) இனத்துக்குரிய நகைத் திறமும் கவலையற்ற தன்மையும்; தாயின் மூலம் ஃபிரான்சுக் சூரிய கலை நயமும் மட்டும் அவனுடைய மரபுச் செல்வங்களாக விளங்கின. 

இதழ் 11 – விகடக் கவிஞனும் விகடக் குள்ளனும்

ஒருநாள் மன்னர் ஸ்டானிஸ் லாஸ் கோமாட்டி டி-பஃவ்வர்ஸுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந் தார். “என் பெயருடைய நம் சிறிய ஸ்டானிஸ் லாஸ் இன்று வருகிறானாம்” என்று அவர் பேச்சைத் தொடங் கினார். ஸ்டானிஸ் லாஸ் டி-பஃவ்வர்ஸுக்கு இப்போது ஒன்பது ஆண்டுப் பருவமாயிற்று. 

“அவன் அறிவு நிலைபற்றி என்னென்னவோ கேள்விப்படுகிறேன். அவன் அறிவு மந்தமுடையவனா யிருந்தால், அவன் அறிவைத் தீட்ட இங்கே சில விளை யாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணுகிறேன்” என்றாள் கோமாட்டி. 

“அவனுடன் நான் விளையாடமாட்டேன்” என்றாள் சிறுமி காதரீன்! அவள் ஆறுவயதுடையவள். டி-பஃவ்வர்ஸ் பிறந்ததன் பின் அரசிபெற்ற பெண் அவள். அவள் அண்ணன் சார்லஸும் ‘நானும் விளை யாடப் போவதில்லை” என்று சுளித்தான். இருபிள்ளை களும் டி-பஃவ்வர்ஸை வெறுக்கும்படி அவர்கள் அன்னையால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். 

சிறுவன் ஸ்டானிஸ் லாஸ் எதிர்பார்த்த வேளைக்கு முன்பே வந்துவிட்டான். அரசனும் கோமாட்டியும் அப்போது வெளியே போயிருந்தனர். அரண்மனையில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுள் எவரும் டி-பஃவ்வர்ஸை வளர்ந்தபின் பார்த்தவர் களல்லர். சிறுவனுக்கும் யாரையும் தெரியாது. தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளவும் சிறுவனாகிய அவன் அறியவில்லை. அப்பருவத்திலுள்ள சிறுவர்களைப் போலவே அவன் தான் என்றும் காணாத, ஆனால் அடிக்கடி கேள்விப்பட்ட தன் அன்னையைக் காண ஆவலுடையவனாயிருந்தான். ஆனால், அச்சிறு வன் கேள்விக்கு ‘அவள் அரண்மனையில் இல்லை’ என்ற விடை தவிர எவரும் வேறு எதுவும் சொல்ல வில்லை. அறியாத இடத்தில் எங்கே போவது, யாரைக் கேட்பது என்று விளங்காமல் அவன் விழித்தான். உண்மையில் அவனுக்கென்று அறை ஒழிதுத்விடப்பட்டிருந்தது. ஆனால், அவனை எவரும் இனமறியாததால், எவரும் அவனை அங்கே இட்டுச்செல்லவில்லை. 

தாயைச் சிறிது மறந்து தன்னுடன் விளையாடும். நாய்களை நினைத்துக்கொண்டவனாய்ச் சிறுவன் தோட். டத்தின் பக்கம் சென்று பாதைகளிடையே உலாவினான். 

சிறுவன் மந்த அறிவுடையவன் என்றே கோமாட்டி டி -பஃவ்வர்ஸ் கேள்விப்பட்டிருந்தாள். பார்வைக்கு அவன் மந்த அறிவுடையவனாகத்தான் காணப்பட்டான். ஆனால் உண்மையில் அவன் அறிவு மந்த முடையவனல்ல. அவன் பிறந்த நாளிலிருந்து தாய் என்ற பெயரைத் தவிரத் தாயன்பு இன்னதென்று அனுபவித்தறியாதவன். பிற சிறுவர்களைத் தாய் அன்புடனணைப்பதுபோல, தானும் தாயிடம் சென்றால் அணைத்துக்கொள்வாள், ஆதரிப்பாள் என்று மட்டும் அவன் எண்ணினான். அவன் அறிவுணர்ந்த நாள்முதல் அவனை எல்லாரும் துன்புறுத்தி அலைக்கழித்தே வந்தனர். அவர்களிடமிருந்து தப்புவதற்கு அவன் பிள்ளையுள்ளம் கண்ட ஒரே வழி ஒன்றும் தெரியாத வன்போல விழித்திருந்து நழுவி விடுவதுதான். அவன் வாய்விட்டுப் பேசுவதும் மனம் திறந்து விளையாடு வதும் நாயுடனும் வண்டு தேனீக்களுடனும் மலர் களுடனும்தான். இவ்வியற்கைப் பொருள்களி னிடையே அவனறிவு இயற்கையாக வாயாடாமல் வளர்ந்து வந்தது. அவன் பேசுவது குறைவு. பேச எண்ணுவது மிகுதி. அப்பேச்சுக்கள் அவன் உள்ளத் தினுள்ளேயே அகஉரையாடல்களாக இருந்தன. அவன் ஓர் அரைகுறைப் பித்துக்கொள்ளி என்ற எண்ணத்தை இது உறுதிப்படுத்திற்று. 

சிறுவன் தோற்றமும் அவனைப் பற்றிய எண் ணத்தை உயர்த்தவில்லை. அவன் தலைமயிரை யாரும் வாரி முடிப்பதில்லை. அது என்றும் எண்ணெயறியா மலே இருந்தது. மழைத்துளியும் பனித்துளியும் அதை வளர்த்தன. காற்றும் பனியும் படிவித்தபடி யெல்லாம் அது படிந்தது. அவன் ஆடை கந்தல்களாயிருந்தது. அதை அவன் மனம் போன போக்கிலெல்லாம் உடுத் திருந்தான். அவன் முகம் தூசி படர்ந்தும் ஒழுங் காகக் கழுவப் பெறாமலும் பஞ்சடைந்திருந்தது. 

அவன் சில சமயம் பரக்கப் பரக்க விழிப்பான். அப்போதுதான் அவன் புதிய சூழ்நிலைகளை ஆராய் கிறான் என்பதை எவரும் அறிவதில்லை. சிலசமயம் அவன் கருவிழிகள் இமையுட் சென்று மறையும். கண் வெள்ளொளி படர்ந்திருக்கும். அப்போது அவ னிடம் மடமைப் பித்தும் உச்ச நிலையடைந்திருக்கிறது என்று பலரும் எண்ணிக் கொள்வார்கள். அப்போது தான் அவன் உள்ளம் மிக வேகமாகச் சிந்திக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். 

தாயினைப் பற்றிய ஏக்கத்திலிருந்து நாயின் நினை வுக்கும் நாயின் நினைவிலிருந்து காட்டு மலர்களின் நினைவுக்கும் அவன் உள்ளம் தாவிக்கொண்டிருந்தது; அவன் மிக ஆழ்ந்த அறிவுத் தூக்கத்திலிருந்தான். ஆனால் நேரமாக ஆகப் பசி அவன் வயிற்றை அலைத்தது. மேலே விழித்தகண் விழித்தபடி நடந்து கொண்டிருந்தான். பாதை வழியே கால் சென்றாலும் எங்கே செல்கிறோம் என்று அவன் அறியவில்லை. 

அப்போது “டே, யாரடா அது? தடிபோலப் பாதை நடுவிலே வருகிறே. ஒத்திப் போடா” என்று ஒரு குரல் கேட்டது. 

குரல் பெரிதாயிருந்தது. ஆளையே காண முடிய வில்லை. ஓசை நிலத்திலிருந்து வருவது போலிருந்தது. அவன் மேலும் நடந்தான். ஓசை நிலத்திலிருந்து வருகிறது என்ற அவன் ஐயம் மேலும் வலுப்பெறுவது போலிருந்தது. ஏனென்றால் அக்குரல் “என் மேலே மிதிச்சுடாதெடா, படவா ? உனக்குக் கண் தெரியலே’ என்று கதறிற்று. 

கூர்ந்து கவனித்தபோது தான் அக்குரல் கோழி யின் செஞ்சூட்டுப் போலத் தெரிந்த ஒரு தொப்பி அணிந்த பொம்மை உருவத்திலிருந்து வந்தது என்று தெரிந்தது. பொம்மை தலை உயாத்தியபோது அது உயிருள்ள உருவம் என்று தெரிந்தது. சிறுவன் குறளி குள்ளர் பற்றிக் கேட்டிருந்தான். எங்கே பட்டப் பகலில் ஒரு குறளியிடம் வந்து சிக்கிவிட்டோமே என்று அவன் அஞ்சினான். சாவிக் கொத்தின் ஒலி கேட்டால் குறளிகள் அஞ்சி ஓடும் என்று அவன் கேட் டிருந்தான். ஆகவே அவன் சட்டைப் பையிலிருந்த சாவியை எடுத்து ஓசைபடக் குலுக்கினான்! 

அவன் கருத்தை அவ்வுருவம் ஊகித்துக் கொண்டது. ஆகவே கடுங்கோபத்துடன் “நான் குறளியல்லடா, பித்துக்குள்ளி; மனிதன்தான். ஆனால் உன்னைப்போல மந்த புத்தியில்லெ; நல்ல புத்திக்காரன்” என்றான். 

சிறுவன் அச்சந் தெளிந்து விட்டது. ஆனால் இப்போது உருவத்தின் கோபம் சிறுவனுக்கு வந்தது. அவன் உள்ளபடியே அவ்வுருவத்தைக் காலால் மிதித் துத் துவட்டலாமா ? என்று எண்ணினான். அது செய் யாமல் விலகப் போனான்; 

குள்ள உருவம் கை கொட்டிச் சிரித்து “ஏண்டா, மானங்கெட்டவனே! உனக்கு இங்கே என்ன வேலை? நாய்க் கொட்டில்லே கிடந்த பயல் அங்கேயே கிடக்கிறதுதானே!” என்றான். 

இத்தடவை சிறுவன் குனிந்து குள்ளனைப் பிடித் துக் குலுக்கிச் சுற்றினான். சிறுவனாயினும் உறுதியும் வலுவும் வாய்ந்த ஆக்டேவ் மூரட்டின் பிடியில் அவன் மூச்சுத் திணறி ‘வீல் வீல்’ என்று கதறினான். அச்சமயம் ஆக்டேவ் மூரட்டை அறிந்த அரண்மனைத் தலைமைத் தவசுக்காரன் அங்கே வந்தான். அவன் “ஸ்டானிஸ், ஸ்டானிஸ்” அவனை விட்டு விடு, அவன் அரண்மனைச் செல்வக் கோமாளி. அவனை விட்டு விடு” என்று கூறினான். 

ஸ்டானிஸ் லாஸ் (ஆக்டேவ் மூரட்) விடுவதா யில்லை. கோமாளியும் கதறலுக்கிடையில் மேலும் மேலும் வசவுகளை வாரிக் கொட்டினான். கடைசியில் தவசுக்காரன் தன் சட்டையிலிருந்து ஆரஞ்சுப் பழ மொன்றை எடுத்துச் சிறுவன் முன் நீட்டினான். பசியின் கொடுமையைக்கூட மறந்து சண்டையீலீடுபட்டிருந்த சிறுவன் உடனே கோமாளியைக் கைவிட்டுப் பழத்தில் நாட்டம் செலுத்தினான். ஆனால் இங்கே கோமாளி அவனை முறியடித்து விட்டான். அவன் இம்மெனுமுன் பாய்ந்து பழத்தைத் தட்டிக்கொண்டு, மின்னலெனப் பறந்தான். 

சமையற்காரன் ‘சனி ஒழிந்தது. இனி நீ வந்த செய்தி சொல்லலாம். இவனுடன் ஏன் நீ தொல்லையில் மாட்டிக் கொண்டாய்?’ என்றான். 

சிறுவன் ஆக்டேவ் “நான் மாட்டிக் கொள்ளவில்லை. அவனாக வந்து வல்லடி வழக்குத் தொடுக்கிறான். இவன் யார்? இங்கே இவனுக்கு என்ன இவ்வளவு சலுகை?” என்றான். 

சமையற்காரன் : “இவன் யாரென்பது யாருக் கும் தெரியாது. தன் குள்ளத் தன்மையால் முதலில் எல்லார் இரக்கத்தையும் மன்னர் விருப்பத்தையும் கவர்ந்தான். மன்னர் சலுகைகள் பெறுந்தோறும் அவன் அகமும் பிடிவாதமும் குறும்புகளும் உச்ச நிலைக்கு ஏறி விட்டன. இப்போது அவனைக் கண்டால் எவருக்கும் அச்சம். மன்னன் அவனிடம் வத்தை நம்பிக்கையால் பலரை அவன் மன்னனுக்காகாத வர்கள் ஆக்கி விட்டான். இப்போது அவன் பிடி வாதம் அரசனையும் மிஞ்சித்தான் போகிறது. ஆனால் எவர் போக்குக்கும் விட்டுக்கொடுக்காத அரசன் அவனுக்கு விட்டுக் கொடுத்து வருகிறான். சரி இது கிடக்கட்டும். அவன் திசைக்கு நீ போக வேண்டாம்; இப்போது நீ பசியாயிருக்கிறாய். இதோ இவற்றைச் சாப்பிடு” என்று தன் சட்டைப்பைகளில் கொண்டு வந்த தின்பண்டப் பெட்டியைத் திறந்து வைத்தான். 

சிறுவன் வேறொன்றும் பேசாமல் பசியார்வத் துடன் சிற்றுண்டிகளை எடுத்தருந்தினான். 

அப்போது அடிசிற் களத்தின் மேற்பார்வை யாளன் அங்கே வந்தான். சமையற்காரன் அவனைச் சிறுவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். “ஸ்டா னிஸ்லாஸ், இவன் ஒரு கலைஞன். ஆனால் மற்றக் கலைகளுடன் சமையல், சிற்றுண்டிக் கலைகளையும் கலந்து நம் போலந்து அரண்மனைச் சமையலுக்கே ஒரு புதுமை அளித்திருக்கிறான்.” 

சிறுவன் : சமையற் கலையில் மற்றக் கலை களுக்கு இடமேது? இருந்தாலும் அத்திறத்தின் பயன் என்ன? 

மேற்பார்வையாளர் சிரித்துக்கொண்டு “நேரே பார்க்கும்வரை எல்லாரும் அப்படித்தான் கூறுவார்கள். என் கலையின் தன்மைகளில் சிலவற்றை இதோ பார்” என்று ஒரு புத்தகத்தை நீட்டினான். 

புத்தகத்தில் நிறையப் படங்கள் இருந்தன. சில சிற்றுண்டிகளைப் பலவகையில் அடுக்கி வைக்கும் முறைகள், சில சிற்றுண்டிகள் செய்யுமுறை பற்றிய விளக்கங்கள். சிறுவன் கவனம் படங்களில் தான் பெரிதும் ஈடுபட்டது. “இதெல்லாம் சரி, அரண்மனையில் இது எவ்வகையில் பயன்படும்?” என்று கேட்டான். 

மேற்பார்வையாளன் : தின்பண்டங்களை அரசன் விரும்பும் பொருள்கள் வடிவில் செய்து உண்பதற்கு முன்பே அவரை உணவின் வடிவில் நான் மகிழ வைக்கிறேன். எடுத்துக் காட்டாக இன்று அரசன் விரும்பி வேட்டையாடும் கலை மான் திரியும் அடர்ந்த காட்டைச் சித்திரித்துக் காட்ட எண்ணியிருந்தேன். ஆனால் அரசன் செயற்கை ஊற்றுக்களில் மிகுதி ஈடுபட்டிருப்பது கேட்டு இப்போது திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். இன்று நீயும் என் மாலைக் கலைப் படைப்பைக் கண்ணாரக் காணலாம். 

மன்னனும் கோமாட்டியும் வந்தபின் யாவரும் உணவு மேடையைச் சுற்றிக் கூடினர். மேடையை மறைத்து மூடியிருந்த திரை விலக்கப்பட்டதும் அனை வருந் திகைத்தே போயினர். அளவிற் சிறிதாய்- ஆனால் உருவில் முற்றிலும் ஒரு சிறிய அரண்மனை முற்றத்தை ஒத்திருந்தது. உணவு மேடைக் காட்சி. தேனும் பாலும் பழச்சாறும் தனித்தனி நடுமையத் திருந்த ஓர் அணங்குருவத்தின் கைகளிலிருந்த சிறு குடங்களிலிருந்தும் அன்னங்களின் அலகுகளிலிருந்தும் வழிந்தோடின. கீழ் விழுந்த சாறுகள் அழ காக ஓடைகள் போல் வளைந்து சென்று ஆங்காங்கே குளங்கள் போலும் ஏரிகள் போலும் அமைக்கப்பட் டிருந்த குடைவுகளைச் சென்று நிரப்பின. ஓடையின் திருப்பங்களிலும் ஆங்காங்கே உள்ள மேடுகளிலும் அழகிய கற்கண்டுச் சிலையுருவங்களும் பூந்தோட்டங் களும் வைக்கப்பட்டிருந்தன. 

மன்னனும் மற்றனைவரும் இக்கலைக்காட்சியைக் கண்டு வியந்தனர். 

ஒரு நாளைக்குள் உணவாக வயிற்றில் அடைபடும் பொருளிலா இத்தகைய கலைப் பண்பைச் செலவு செய்ய வேண்டும் என்று சிறுவன் எண்ணிக் கொண் டான். ஆனால் அவன் இதனை வெளியிட்டுச் சொல்ல வில்லை. “உன். திறமைக்கு நீ வெர்செல்ஸ் அரண் மனையில் இருக்க வேண்டும்” என்றான். 

மேற்பார்வையாளன்: “உனக்கு இட்போது என்ன தெரியும் வெர்செல்ஸ் அரண்மனையின் கதைகள். இங்கேயாவது என் கலைப் படைப்பு அன்றன்றாட உணவில் அழிந்து விடுகிறது. அங்கே உணவுப் பொருள் விருந்தினர் உணவாகக்கூட ஆவதில்லை. உணவாக்காமல் பதுக்கி வைத்த உணவுப்பொருள், உண்பாருக்கு வழங்காமல் ஒதுக்கிவைத்த தின் பண் டங்கள், உணவு வாங்காமல் திருட்டுக் கணக்கில் மீத்துவைத்த பணம் எல்லாம் பணியாட்கள் கைப் பொருளாகின்றன. அங்கே என் கலைக்கு இடமில்லை. பொய்மை, வஞ்சகம், ஆகியவற்றுக்கே முதலிடம். அதைக் காண இங்குள்ள கவலையற்ற சோம்பல் வாழ்வு கூடக் கேடில்லை.” 

தான் உள்ளத்தில் எண்ணியதைக் கலைஞனும் எண்ணியது கண்டு சிறுவன் வியப்படைந்தான். ஆனால் அவன் அறியாத செய்திகளும் உலகில் பல நிகழ்கின்றன என்று உணரலானான். 

சமையல் துறையில் ஏற்பட்ட இவ்விரு நண்பர் களுமே போலந்து அரண்மனையில் ஆக்டேவ் மூரட்டுக் குக் கிட்டிய இரண்டு நண்பர்கள். வேறு யாவரும் அவனைக் கவனிக்கவில்லை. கோமாட்டியிடம் தொடக்க முதலே சிறுவன் மிகுதி ஈடுபாடு காட்டினான். ஆனால் அவள் அவனை விரும்பவோ, வெறுக்கவோ செய்ய வில்லை. அவனைத் தன் மகனாக நடத்துவதை விட அயலானாக நடத்துவதிலேயே அவள் நாட்டங் கொண் டாள். இது அவனுக்கும் ஓரளவு பிடித்தமாகவே இருந்தது. கண்ட கண்டவரிடமெல்லாம் தொல்லை யையே அனுபவித்து வந்த சிறுவனுக்குத் தொல்லை தராத தாய்கூட இனிய பண்புடைய தாயாகவே தோற்றினாள். இத்துடன் தாயின் கலைப் பண்பும் திறமையும் நயமிக்க வசைப் பேச்சுக்களும் அவன் கலையார்வத்தைத் தூண்டி யெழுப்பின. மக்கள் உளப் பாங்கறிந்து அவள் உறையாடுவதையும், சூழலுக்கேற்ற வகையில் பிறரை நையாண்டி செய்து சிறு பாக்கள் இயற்றிச் சார்த்துக்கவி பாடுவதையும் அவன் உட னிருந்து கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். அவ்வப் போது அவன் உள்ளத்திலும் அதே போன்ற உறை யாடல்களும் பாடல்களும் நிழலாடத் தொடங்கின. அவன் வாய் திறவாமலே உள்ளந் திறந்து இவற்றில் ஊடாடினான். இத்தகைய கன,வார்வங்களைத் தூண்டிய அத்தாயின் வாழ்க்கையில் பிறர் காணக்கூடும் கோணல் மாணல்களும் குறைகளும் அவன் கண்ணில் படாததில் வியப்பில்லை. அவன் பெண்மை பற்றிய எந்த ஒழுக்க மரபைக் கொண்டும் தாயை அளவிட முனையவில்லை. உண்மையில் அவள் வாழ்க்கை மரபைக் கொண்டே அவள் பெண்மையை அளவிட்டான். அவ் வளவு முறையால் அவன் கண்டதெல்லாம் அவள் திறமையும் நயமும் மற்ற எப்பெண்டிரிடமும் காண முடியாத அருஞ் சிறப்புக்கள் என்பதே. 

தாயை அவன் உள்ளம் பாராட்டியது போலவே மன்னனையும் அவன் அமைதியான, தீம்பற்ற குறும்பு கலந்த அவன் இன்ப வாழ்வையும் பாராட்டிற்று. அவன் விருப்பு வெறுப்புக்கள் தாயைக் கவரவில்லை; ஆனால் அவன் உள்ளத்தின் பாராட்டு மன்னன் உள்ளத்திலும் நேசத்தை வளர்த்தது. மன்னனுக்கு இயற்கை வெளியின் காட்சிகளிலும் தோட்டம் துறவு களிலும் ஈடுபாடு மிகுதி. ஆக்டேவ் மூரட் அவனிடம் அடிக்கடி சென்று அவ்வின்பத்தில் பங்கு கொண் டான். அத்துடன் மன்னனுக்கு விருப்பமான வேட்டை, நாய்கள், செயற்கை நீரூற்றுக்கள் ஆகியவற்றில் சிறு வனுக்கும் விருப்பம் மிகுதி. மன்னன் தன் நீரூற்றைப் பிறர்கண்டு மகிழ்ந்து பாராட்டுவதில் சொக்குபவன். எனவே (ஆக்டேவ் மூரட்) அவன் அன்பிற்குப் பெரிதும் ஆளானான். 

வயது ஏற ஏற,ஆக்டேவின் புறவாழ்வில் எத்தகைய கலைப் மாறுதலும் ஏற்படாமல், அகவாழ்வு மட்டும் பண்பு மிகுதியாகி வளர்ந்து வந்தது. இது அவன் பித்துக் கொள்ளித் தோற்றத்தை வளர்த்தது. அவன் மன்னவையில் எல்லாருடனும் நெருங்கிப் பழகாமல், சமையல்காரர் பணியாட்களுடனேயே பழகி வந்தான். அதேசமயம் அவன் மற்ற பணியாட்களைப்போல முற்றிலும் ஒதுங்கிவிடவும் இல்லை. உரையாடல் நெருக்கடிக ளினிடையில், உரையாடல் போக்கு மிகமிக மந்தமாயிருக்கும் சமயத்தில் அவன் சொல்லம்பு ஒன்று வந்து விழுந்து உயிர்ப்பும் கலகலப்பும் ஊட்டும் அல்லது அவன் வசைப்பாட்டு ஒன்று குண்டு சிதறியது போல் சிதறி எல்லாரையும் அதிரவைக்கும். பொதுப் படப் பித்துக்கொள்ளி என்று கருதப்பட்ட அவன் இங்ஙனம் கலை, உரையாடல்களில் கலந்து தன்னைச் சூழத் தன் கலையார்வத்தில் அவாக்கொண்ட ஒரு சிறு சூழலையும் உண்டுபண்ணி வந்தான். 

அவன் இரு திற மயக்கமுடைய போக்குக் கண்டு கோமாட்டிக்கும் அரசனுக்கும் கவலை பிறந்தது. நன்மை எது, தீமை எது என்றறியாத போலந்து அரண் மனைச் சூழலிடையே கூட அவன் தீ நெறிப்பட்டு விடு வானோ என்ற பீதி ஏற்பட்டது. ஆயினும் கோவிலகத் துறவி ஒருவர் பேச்சில் அவன் அடிக்கடி ஈடுபடுவதை மன்னன் கவனித்தான். கோவிலகத் துறையில் அவன் உள் ஆர்வம் உடையவனாயிருக்கிறான் என்ற தப்பெண் ணம் காரணமாக, கோவிலகத் துறைக்கே அவனைப் பயிற்றுவித்து, அவனைக் கடைத்தேற்றுவிக்க அவர் கள் திருவுளங்கொண்டனர். 

இதழ் 12 – பாரிஸ் நோக்கி

ஆக்டேவ் மூரட்டுக்குச் சமயத்துறைப் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்துறவி அப்பே பார்க்கெட் என்பவர். அவர் பெயரளவில்தான் துறவியே தவிர, உண்மையில் மன்னனையும் மன்னவை யையும் மகிழ்வித்துத் தம்மிடம் ஈடுபடுத்தப் போதிய கலைத் திறமும் உரையாடல் திறமும் உடையவர். கோமாட்டியைப் போலவே அவரும் இம்மெனுமுன் பாட்டுக்கள் கட்டிப் பிறரை மகிழ்விப்பார். ஆனால், அவர் பாடல்களில் வசைத் திறம் மிகுதி. அவ்வசை யெதிர்ப்புக்கு ஆளானது சமயமும் சமய நம்பிக்கை களுமே. மன்னன் இவ்வசைத் திறத்தில் ஈடுபட்டு அவரைப் பாராட்டினான். அது ஒரு கலைப் போக்கு மட்டுமே என்றுதான் அரசன் நினைத்தான். அதுவே அவர் சமயம் பற்றிய கருத்து என அவன் எண்ண வில்லை. எண்ணியிருந்தால் அவரைச் சமயத்துறைக் காகப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய சிறுவனுக்கு. ஆசிரியராக்கி யிருக்கமாட்டான். 

சமயம், வாழ்க்கை, இளமை ஆகியவை பற்றிய அப்பே பார்க்கெட்டின் கருத்துக்களை அவரது கீழ் வரும் பாடல் எடுத்துக் காட்டுகிறது: 

எப்படியும் இன்பம், எப்படியும் களியாட்டம்
இவையேஎன் வாழ்வின் எழிலார்ந்த தத்துவங்கள்!
செப்பிடுமிவ் இன்பம் தெவிட்டுகின்ற அப்போழுதே
அப்பெரு வாழ்வில் வீண்பொழுதென் றறைந்திடுவேன்!
இன்று கழிவதுபோல் என்றும் கழியுமென்றால்
நன்றே இளமை கழிந்த தெனநான் மகிழ்வேன்;
தப்பும் தவறும் எண்ணிக் கழிவிரக்கம் நான்கொள்ளேன்! 

சமயத்தைப் புறவேடமாகக் கொண்ட அர ரண்மனை யின் இன்ப வாழ்வினர் அவர் சமயத்தைத் தாக்கி வசைபாடுவது கேட்டு மகிழ்ந்தனர். அதுவும் கலைமரபு சார்ந்த வேடமென்றே கொண்டனர். முதல் நாளிலேயே உணவு மேடையில் அவர் கடவுள் வணக்கம் செலுத் தும் பொறுப்புத் தரப்பட்டது. ஆனால், அவரோ “கடவுள் தரும் உணவை உண்பதைவிட உயர் வணக் கம் எதுவும் நான் அறியேன்” என்றார். இன்ப வாழ்வுப் போக்குக்கு அவர் தந்த புதுவிளக்கம் எல்லாருக்கும் பிடித்தமாகவே இருந்தது. அடிக்கடி “பைபிளையும் வழிபாட்டு ஏடுகளையும்விட எனக்கு வால்ட்டேரிடமே மிகுதி விருப்பம்” என்பார். இது அவர் காலத்துக் கேற்ற அறிவுத்திறம் என யாவரும் போற்றினர். 

நாள் முழுதும் இன்ப வாழ்வில் கழித்துவந்த அரசன் நாளிறுதியில் உறங்குமுன் விவிலிய நூலுரை கேட்டுத் தன் உள்ளார்ந்த சிறு பழி பாவங்களைக் கழு விக்கொண்டு விடுவதுண்டு. அப்பே பார்க்கெட் ஒரு நாள் இங்ஙனம் விவிலிய நூல் வாசிக்கும் பணி தரப் பட்டார். அன்று துறவியும் தம் சமயக் கட்டுப்பாடுகளெல்லாம் துறந்து நன்கு உண்டு குடித்துக் குடிமயக் கத்தில் பாதியும் சோர்வு காரணமான உறக்க மயக்கத் திலும் ஆழ்ந்திருந்தார். அவர் கண்முன் விவிலிய நூலின் எழுத்துக்கள் கூளிகளாகவும் குறளிகளாகவும் துள்ளிக் குதித்தாடின. ஆகவே, “கடவுள் கனவில் பிறங்கும் ஒளி உருவுடன் யாக்கோபின் முன் தோன் றினார்” என்று வாசிக்குமிடத்தில் ‘கடவுள் கவின்மிக்க குரங்குருவுடன் யாக்கோபின் முன்வந்து தோன்றினார்’ என்று படித்தார். அரைக் குடிமயக்கத்தில்கூட அரச னுக்கு இது பொருத்தமற்ற வாசகம் எனத் தோன் றிற்று. “என்ன அடிகளே, கடவுள் குரங்காகவோ தோற்றினார்?” என்று கேட்டான். ‘ஆம் அரசே, கடவுள் எல்லா வடிவிலும் தோற்றுவார். விரும்புவார் விரும்பும் வடிவிலெல்லாம் விளங்குவான் எம் மெய் இறைவன்” என்று துறவி விளக்கம் தந்தார்! 

கோமாட்டியிடம் அப்பே பார்க்கெட் எப்போதும் காதல்துறை சார்ந்த உவமைகளிலும் நயநுட்பங்களி லுமே ஊடாடினார். அவள் அவர் துறவி என்பதைக் கூட மறந்து அவருடன் காதல் விளையாடல்கள் விளை யாடினாள் ! யார் யார் எத்தகையவர் என்றறிந்து அவ் வவர்க்கேற்ற உருவும் பண்பும் உடையவராய், ஒரு புதுமைக் கண்ணனாய் பார்க்கெட் அரண்மனை வாழ்வில் உலவினார். ஆக்டேவ்மூரட் தாயிடமிருந்தும் மன்னரிட மிருந்தும் பெற்ற வாழ்க்கைத் தத்துவம் இத்துறவிக் கோலம் பூண்ட கலைப் பேரரசன் ஒண் கலையால் உறு திப்பட்டது. இன்ப வாழ்வு முற்றிலும் தெவிட்டாம லிருக்க இடையிடையே வழங்க வேண்டிய காரம்தான் சமயம் என்ற எண்ணமே அவனுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. 

அரண்மனை வாழ்வு, அன்னை, மன்னன், அப்பே பார்க்கெட் ஆகிய இத்தனை சூழல்களிலி ரு ந் து ஆக்டேவ் மூரட் பல பாடங்களும் பல திறங்களும் பெற்றான். ஆனால், அவன் உள்ளார்ந்த இளமைத் துடிப்பு எதனாலும் பண்படவில்லை. அத்துடன் பார்க் கெட்டிடமிருந்து அவன் சமய எதிர்ப்பை மட்டுமே கற்றான். அவர் சமயப்புற வேடத்தை அவன் கற்றுக் கொள்ளவில்லை. அரண்மனை வாழ்விலிருந்து அவன் காதல் பசப்பைக் கற்றுக்கொண்டான். ஆனால், அவன் உள்ளம் அது இன்னதென்றறியாமல், அதனை ஒரு விளையாட்டுப் பொழுது போக்காக மட்டுமே கொண் டது. இசை, நாடகம், கூத்துக்கள் ஆகியவற்றுடன் அதுவும் ஒரு பொழுதுபோக்கு என்றே அவன் எண்ணி னான். இத்தனையையும் கடந்து அவன் சூழலில் எவரிட மும் இல்லாத ஒரு சமயப் பண்பு மட்டும் அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் உள்ளம் அன்பின் கவர்ச்சி நாடிற்று. மக்கள் யாவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் அவனிடம் ஊறித் ததும்பிற்று, அன்னையின் பாடல்களிலும் துறவியின் வசைப்பாக்களிலும் காணமுடியாத ஓர் உயர் ஒளிக் கவர்ச்சியை இது அவன் உரையாடல்களுக்கும் பாடல் களுக்கும் தந்து பொதுமக்களை அவனிடம் பெரி தும் ஈடுபடுத்தின. அவனும் பெருமக்களிடையே ஒரு கோமாளியாகவும் பொதுமக்களிடையே ஒரு சிறு தெய்வமாகவும் ஊடாடினான். கேலி, களியாட்டங்களி டையே அவன் உணவற்றோருக்கு உணவு தேடியளித் தான். இன்னற்பட்டோருக்கு ஆறுதலுரை யளித்துத் தேற்றுவித்தான். 

ஆக்டேவ் மூரட்டுக்கு 18 ஆண்டானபோது மன் னன் ஸ்டானிஸ் லாஸ் தன் பெயர் கொண்ட இச் சிறுவனுக்கு இரண்டு சிறு பண்ணைகளை அளித்தான். மன் னனை ஆட்டிவைத்த கோமாட்டி, என்றும் மன்னனிடம் தனக்கென எதுவும் குறையிருந்ததில்லை. மனன னுடைமைகளையே அவள் தன்னுடைமைகளாக உரிமை யுடன் ஆண்டு வந்ததால் அவளுக்குத் தனிப்பட எதுவும் கொடுக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படவுமில்லை. எனவேதான் அவளுரிமை எண்ணி அவள் சிறுவனுக்கு அரசன் இவற்றை அளித்தான். இவ்வுடைமைகள் மூரட்டின் உள்ளார்ந்த செல்வப்பற்றின்மை, அருட்பணி இயல்புகள் ஆகியவற்றை வெளிக்கொணர உதவின. அவன் தன் செல்வத்தைத் தன் பணியாட்கள் நலனுக் கென ஒதுக்கி, தன் நாடோடி வாழ்வுக்கும் தன் திருத் தொண்டுகளுக்கும் வேண்டிய சிறு தொகையே எடுத் துக்கொண்டான். அவன் ஏழமைத் தோற்றம் சிறிதும் அகலவில்லை; அவன் ஏழ்மை மனப்பான்மைதான் அகன்றது. அவன் கலைவளர்ந்தது; அவன் வள்ளன்மை பெருகிற்று. உயர் வகுப்பாரிடையேயும் விகடகவி என்ற அவன் நிலை சிறிது உறுதிப்பட்டது. அவன் பாக்கள் உயர்குடி மக்களிடையே வாயுரையாக எங்கும் பரந்தன. பாரிஸ் அரண்மனையில் கூட அவை பாடிப் பரவப்பட்டன. 

விவிலிய நூற்கதைகள், கருத்துக்கள், சமயப் பாடல்கள் அவன் கைப்பட்டுத் திரிந்து உருமாறித் தவித்தன. எல்லாம் காதல், பெண்டிர் பகட்டாரவாரம் விடுதலை, களியாட்டம், கூத்து மயமாக மிளிர்ந்தன. துறவிகள், சமயத் துறையினர் பலரிடையேகூட இவை உள்ளூரப் பாராட்டும் ஆதரவும் பெற்றன ! நான்ஸி யிலுள்ள ஒரு கலைக்கழகம் அவனை வெளிப்படையாகப் பாராட்டித தம் கழக உறுப்பினர் உரிமை தந்து பெருமைப் படுத்திற்று. 

வசை தேர்ந்த அவன் கலைப் புகழ் உலகில் பரங் தது. அதே சமயம் அவன் சமயப் பயிற்சியும் நிறை வுற்றதாக அப்பே பார்க்கெட் அறிவித்தார். கோமாட்டி அவனைப் பாரிஸுக்கு அனுப்பி அங்குள்ள மடங்கள் ஒன்றில் மேற்பயிற்சி பெற்று உறுப்பினராக்க எண் ணங்கொண்டாள். இதில் அவன் படித்தரத்தை உயர்த் தவே அவனுக்குப் பண்ணை நிலங்களும் தரப்பட்டன. ஆனால், ஆக்டேவ் மூரட்டுக்குப் போலந்தில் இன்ப வாழ்வை விட்டுப் பாரிஸுக்குப் போக விருப்பமில்லை. அவன் முதல் தடவையாக தன் தாயிடம் மன்றாடி னான். “அம்மா ! எனக்குச் சமயத்துறையே பிடிக்க வில்லை. அதைத்தான் உங்களுக்காக ஏற்க வேண்டு மானால், போலந்திலேயே ஒரு பணியில் அமர்த்தலாமே. நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் மன நிறைவுடன் இங் கேயே கழித்திருக்கிறீர்கள். எனக்கும் இதுபோதும், பாரிஸ் எதற்கு ?” என்று அவன் வாதாடினான். 

கோமாட்டிக்குக்கூட இப்பொழுது அவன்மீது சிறிது கனிவு தோன்றிற்று. ஆனால், அவள் உறுதி மாறவில்லை. “தம்பி, சமயத்துறையை நாங்கள் உனக்கு ஒரு பிழைப்பாகக் கருதவில்லை. உன் அறிவு சுடர்விட்டு ஒளிர அது நல்ல இடம். பாரிஸ்தான் அதற்கு ஏற்ற இடம். பாரிஸ்தான் உலகின் உச்சி; உண்மையான உலகம். உன் பாட்டி, முப்பாட்டி, என் சிற்றன்னை, அத்தை யாவரும் அங்கேதான் புகழ்பட வாழ்ந்துள்ளார்கள். நான் போலந்தில் வாழ்ந்தேனென் றால், அது நம் மரபில் ஒரு கறை மட்டுமே. பாரிஸில் என் ஆட்சிக்குப் போட்டி யுண்டு. இங்கே போட்டி யற்ற ஆட்சி கிடைத்தது-தங்கினேன். ஆனால், நீ இளைஞன்; உன் எதிர்காலம் பாரிஸில்தான் இருக்க முடியும். வாழ்வின் ஓய்வுக் காலத்தில் வேண்டுமானால் நீ இங்கே வரலாம். அதற்காகவே உனக்குப் பண்ணை கள் அளிக்கும்படி அரசனைத் தூண்டினேன்” என்றாள் அவள். 

தாயிடம் அவனுக்கு எப்போதுமே நேசமும் பெரு மையும் உண்டு. ஆனால், தாய் தன்னிடம் நேசம் காட்டி யதை அவன் அன்றுதான் கண்டான். 

“எனக்குப் பெருவாழ்வு வேண்டாம். இங்குள்ள இன்ப வாழ்வே போதும்” என்றான் ஆக்டேவ் மூரட் கண்ணீருடன். 

“தாய் தந்தையர் அங்ஙனம் விரும்ப முடியாது ஸ்தானி ! மேலும் பாரிஸ் என்றால் இன்பம். நீ பாரி ஸின் இன்பக் கதிரொளியைக் கண்டால், இங்குள்ள இன்பங்கள் யாவும் நிலவொளியாகவும் மின்னொளியாக வும் மங்கி மறையும். போ, என் சொல்லைத் தட்டாதே” என்று பெருமிதத்துடன் ஆணையிட்டாள் அன்னை. 

வேறு போக்கில்லாமல், கால் முன்னிழுப்ப, உள்ளம் பின்னிழுக்க, பாரிஸ் நோக்கிப் பயணப்பட்டான் இளைஞன்.

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *