வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 114
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 26-28 | இதழ் 29-31 | இதழ் 32-34
இதழ் 29 – தப்பெண்ணம்

கூடலில் பிரிவு போன்ற துன்பம் வேறில்லை. பிரிவிடையே கூடுவது போன்ற இன்பமும் பிறிதில்லை. அடுத்த இரண்டாண்டுகளிலும் மூரட்டும் லாரைனும் இவ் இன்ப துன்பமிரண்டனையும் மாறி மாறித் துய்த் தனர். காரம், காரத்துக்குப் பின்னர் தித்திப்பு; தித்திப் புக்குப் பின் காரம் என்ற உணவு முறையில் தித்திப் .பின் சுவையைக் காரம் பெருக்குகிறது. காரம் இடையே வந்து தித்திப்பை மட்டுப்படுத்தினாலும், அது மீண்டும் தித்திப்பின் சுவைத்திறத்தைப் பெருக்கவே உதவு கிறது. இது போலவே துன்பத்திடையே இன்பத்தை எதிர் பார்க்கும் இன்பம்; அதைத் தொடர்ந்த இன்பம், அவ்வின்பத்தின் பின், பின்நோக்கி அதனை நினைக்கும் இன்பம் என அவர்கள் வாழ்க்கை நெளிந்து நெளிந்து ஓடிற்று. மூரட் அடிக்கடி நாட்டுப்புறம் வந்து தன் வீட்டில் தங்கியிருப்பான். அவ்வேளைகளில் முன்னிர வில் ஒரு உருவம் போர்வை ஒன்றைப் போர்த்துக் கொண்டு கிளைவழிகளில் நடந்துவரும். மூரட் அவ் வுருவின் வரவை எதிர் நோக்கி நின்று, அதை உள்ளே வரவேற்றபின் கதவை உள்ளிருந்து தாழிடுவான். இவ் வுருவம் வேறுயாருமன்று. லாரைன் தான்! வண்டியில் வராமல் நடந்து வருவதனாலும், முகமூடி இராவேளை யில் வருவதனாலும் அது இன்னாரென்று யாரும் ஐயு றவே இடமில்லாதிருந்தது. விடியற்காலையில் அவள் அவனிடமிருந்து பிரியா விடைபெற்று எவரும் எழுமுன் உட்சென்று தன் அறையில் சிறிது கண்ணயர்வாள்.
நேரே சந்திக்க முடியாத சமயம் அவள் கடிதங்கள் அவனை நாடிவரும். அவன் கடிதங்கள் அவளை நாடிச் செல்லும். அவள் கடிதங்கள் அவன் உயிராயிருந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு மனப்பாடமாய் அவள் உள்ளத்தில் என்றும் நீங்காதிருந்தன. அவற்றின் உணர்ச்சி வேகம் அவளை அவன் காதலியாக விசை வண்டியில் ஈர்த்துச் செல்வது போன்றிருந்தன.
“உன்னை நினைக்கும் போது என் உள்ளத்தில் பல் வகை உணர்ச்சிகள் ஒரே காலத்தில் வந்து மோதுகின் றன. உனக்குரிய ஒரு உடன் பிறந்தான், ஒரு உடன் பிறந்தாள், ஒரு மகன், ஒரு நண்பன், ஒரு மனைவி இன்னும் நன்றாகச் சொன்னால் ஒரு காதற்கிழத்தி ஆகிய இத்தனை பேரின் கனிவுகளும் என் உள்ளத்தில் எழு கின்றன”
“நம் உயிர்கள் ஒன்றாய்விட்டன. நாம் இனி எப்படி தனித்தனி வாழ முடியும்…நான் உயிர்க்கும் மூச்சை விட் நீ எனக்கு இன்றியமையாதவளாய் விட்டாய்.”
“என் நண்ப, உன்னிடம் விடைபெற்றுக்கொள் கிறேன். என் காதலி, உன்னிடம் இத்துடன் விடை பெற்றுக்கொள்கிறேன். நான் பதினைந்தாண்டு பருவமா யிருந்து, நம் காலம் பொன்னார்ந்த பழங் காலமாயிருந்தால் எப்படி இன்பக் காதல் உணர்ச்சியில் களிப்பேனோ, அப்படி உன் காதலில் களிக்கிறேன்.”
“ஒருவருக்கொருவர் முற்றிலும் உளம் பொருந்தி, ஒருவருக்கெனவே ஒருவர் படைக்கப்பட்டவராய், காதலென்னுங் கடுந்தீயில் தூய்மையுற்று ஒரே குளம்பில் உருகி ஒன்றுபட்ட இரு உயிர்களின் கூட்டுறவுக்கு முன் இந்த உலகத்தின் திரண்ட செல்வங்கள் கூட எம்மட்டு?”
“உயிர் என்றும் முதுமையடைவதில்லை. என் உயிரோ தன்னகத்துக் கால எல்லைவரை கூட அணைய முடியாத காதல் கொழுந் தீ சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.”
மூரட் உள்ளத்தைப் பீறிட்டு அவன் மைக்கோலின் வழி உருகியோடிய காதல் நெருப்புப் பிழம்புகள் இவை! அவை இன்ப நெருப்பாய் லாரைன் உள்ளத்தை வதக்கிப் பிழிந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு அவன் காதல் வாய்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தின.
“நான் இத்துடன் விடை கொள்கிறேன், என் அருமை, என் அருமைத் துணைவரே! என் ஆழ்ந்த இடையறாக் காதலில் சலித்துவிடாதேயுங்கள். அது எவரும் அறிய முடியா அருமையுடையது. அது எனக்கு இனிமையின் ஓயாத ஊற்று. என் கவலைகள் அனைத்தினிடையேயும், என் சுமைகளைத் தாங்க எனக்கு உதவும் ஒரு உறுதி வாய்ந்த நண்பனாய் அது இயங்குகிறது.”
“இத்துடன் முடிக்கிறேன். என் வாழ்வின் இன்பமே! துன்பமே! இன்பதுன்பமே!”
அவள் இதற்கு முன் எவரையும் காதலித்தேயறியா தவள். பருவத்தின் முதற்றொடக்க நிலை கடந்த இவ் வுணர்ச்சி அவளை இளந் தளிர்போல் அதிரவைத்தது- ஆனால் அதே சமயம் அது அவள் குருதிகளினூடே மின்னாற்றல்போல் விருவிருப்பூட்டி அவளுக்கும் புத் திளமை தந்தன. மறுபுறம் அவனோ என்றும் இது போல் காதலித்ததில்லை. பருவங் கடந்த அவன் காதல் அவன் ஆண்மையைத் தளர்த்தவில்லை-ஆனால் பெண்மையைப் பற்றி ஏளனமாகக் கருதி அதே சமயம் அவர்களைத் தன் காதல் விளையாட்டால் அடிமைப் படுத்திய அவன் உள்ளம் இன்று ஒரு பெண்ணின் காதலுக்குத் துடிதுடித்து நின்றது.
உள்ளங்கள் இணைந்த பின்னும் அவன் ஆணவம், அடக்குமுறை, கோபதாபங்கள் அகலவில்லை. அவன் அவளுடன் அடிக்கடி ஆரவாரம் செய்து பூசலிட்டான். அவளும் அடிக்கடி பிடிவாதமுள்ளவளாகவே இருந்த தனால் பூசல் சில சமயம் புயலாக எழும். அவர்கள் மறைகாதலின் மறைப்புக்குக்கூட சிலசமயம் இப் பூசல்கள் பங்கமாய்விடுமோ என்ற நிலை அடைவ துண்டு. ஆனால் உள்ளத்தின் வேறுபாட்டை நீக்கும் இணைக்கும் அவர்கள் உடல் இணைப்பு அமைந்தது. கோபத்திடையே வேட்கை மிகுந்தது. அணைப்பிடையே வெறுப்பு மறைந்தது.
அவள் குற்றங்கள் அவனுக்குத் தெரியாமலில்லை. அவன் பெண்ணுக்கு அடிமையல்ல. அவள் காதலின் வலிமைதான் அவனை ஓரளவு தன்னுடன் பிணித்து வைத்தது என்று அவள் அறிந்தாள். உலகெலாம் சுற்றிய மரபில் வந்தவன் அவன். பெண்டிர் வேட்டை யாடியவன். அவன் பழக்கவழக்கங்களை அவள் காதல் கூட மாற்ற முடியவில்லை. காதலுக்குக்கூட அவன் அடங்கி நடக்கவில்லை. அடிக்கடி ஆடு மாடுகளை நடத்தும் கோனான் குரலும் நடையும் அவன் காதலில் இருந்தன. ஆனால் காதலில் அவள் பட்டபாடு! அவளுக் காக அவன் துடித்த துடிப்பு! காதல் ஆர்வம்! இவை அவன் உள்ளத்தைத் தன்வேகத்தில் அடித்துக்கொண்டு சென்றன. அவள் குழந்தை போன்ற பண்பு, ஒருமை நினைவுகள் அவனைக் கவர்ந்தன.
சண்டையின் பின் ஆறுதலில்கூட அவளிடம் தணிவுக்கும் பணிவுக்கும் இடமில்லை. ஒரு பூசற் புயலின் பின் இணக்கம் ஏற்பட்டதும் மறு கடிதத்தில் “குற்றங்கள் அனைத்தும் உன்புறமே என்பதை இப்போ தாவது அறிந்தது பற்றி மகிழ்ச்சி. ஆனால் குற்றங்கள் எத்தனை உன்னிடமிருந்தாலும் அத்தனையும் மன்னிக்கும் பரந்த நெஞ்சம் எனது என்பதனால் நீ கவலையற்றிருக் கலாம். எக்காரணங் கொண்டும் உன்னை நான் விட் டோடிவிட முடியாது” என்று அவன் அன்புக் கடிதம் வரைந்தான்.
ஒரு நாள் வழிநடை விடுதி ஒன்றில் முன்னிரவில் சந்திப்பதென அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கம்போல லாரைன் எளியஉடையில் இன்னாரெனத் தெரியாமலே வருவதாக இருந்ததால், மூரட் தன் பெயராலேயே ஓர் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் லாரைனுக்குப் பகல் நேரமே அன்று போகா ததால் நண்பகலுக்கு முன்பே அவ்விடுதிக்கு வந்து விட்டாள். இந்தத் தொலையிடத்தில் எளிய உடையில் தன்னை யாரும் அறியமாட்டார்கள் என்று அவள் நினைத் திருந்தாள். ஆனால் அவள் யார் என்று அறியாவிட் டாலும், அவள் நடையுடை தோற்றம் பேச்சுக்கள் அவள் குடியுயர்வை மறைக்கமுடியவில்லை. உயர்குடி நங்கை இவ்வாறு உருமாறி வருவதன் குறிப்பை ஒருவாறு மக்கள் உணர்ந்திருந்தனர். விடுதித் தலைவர் இதனால் அவளைத் தானே வந்து வரவேற்று வணங்கினான். இது அவளுக்கு வெட்கமாயிற்று. ஏவலரும் காவலரும் அவளைக் கண்ணடித்து உறுத்து நோக்கலாயினர். அவள் கடுநோக்கில் அவர்கள் அஞ்சி ஒடுங்கினாலும் நோக்குத் திரும்பியதே முன்னிலும் கலகலவென்று சிற் றாரவாரம் செய்தனர்.
பிறர் கண்களுக்குத் தப்பும்படி அவள் காய்கறித் தோட்டத்தில் சென்று நண்பகல்வரை உலாவலானாள். மூரட் எப்போது வருவான், நான் காத்திருப்பதைக் கண்டு அவன் எவ்வளவு வியப்பும் மகிழ்வும்கொள்வான் என் என்ற சிந்தனையிலேயே அவள் ஆழ்ந்திருந்தாள், அத்துடன் அவனுக்கு விருப்பமான நாட்டுப்புற உணவுகளை எண்ணி அவள் தனக்குள் சிரிக்காமலிருக்க முடியவில்லை. அச்சிரிப்பு மறையவும் ஒரு பெண் குரல் அவளைத் திடுக்கிடச் செய்தது. அதே உணவு களின் பெயர்களைக் கூறி அவற்றை முன்கூட்டி வட்டித்து வையுங்கள். மூரட்டுக்கு அவைகள்தாம் பிடிக்கும். ஆனால் எனக்கு வேறு உணவு வட்டித்து வையுங்கள்” என்று அப்பெண்குரல் ஏவலரிடம் உரத்துக் கூறிற்று. அத்துடன் அக்குரல் தன்னருகே வருவ தாகத் தோற்றவே அவள் திரும்பிப் பார்த்தாள். போலிப் பகட்டுடையுடுத்திப் பசப்பிய ஒரு நாணங் கெட்ட மாது அவளை நோக்கி நடந்தாள். அவள் கீழ்மைக் குணம் அவள் நடையுடையினும் தெள்ளத் தெளிய விளங்கிற்று. மூரட் இன்னுமா காதல் விளை யாட்டுகள் விளையாடுகிறான், அதுவும் இத்தகைய மாது டன் என்று அவள் எண்ணியபோது சினம் ஒருபுறம், புழுக்கம் ஒருபுறம் அவளைக் தின்னத் தொடங்கிற்று. இதற்கிடையே அம்மாது லாரைனை உற்று நோக்கி அவளை இடித்துக்கொண்டு போனதன்றி, அவள் கேட்க “ஓகோ, இதுவேறேயா?” என்றபோது அவள் அங்கம் பதைபதைத்தது. ஒரு கீழ் மகளுடன் கீழ் மகளாக நடத்தி ஒரே இடத்தில் இருவரை வரவழைத் திருக்கிறான் என்றெண்ணம் அவளைப் பொசுக்கிற்று. அவள் சீற்றத்துடன் மூரட் அறைக்கு வந்து விடுதிப் பணியாளை அழைத்து “என் வண்டியைக் கட்டு, நான் போகவேண்டும்” என்றாள்.
அம்மாது “தொலையுதா சனி” என்று அடுத்த அறையில் வாய்விட்டுக் கூறியது அவள் காதில் எரி கொள்ளியாய்ப் பாய்ந்தது. அவள் சீற்றம் முன்னிலும் பதின்மடங்காயிற்று. தன் காதலால், தன் குடிமதிப்பு, தாய்ப்பாசம் எல்லாவற்றையும் விடச்செய்து, இந்த நடுத்தரக் குடியாளன் காமக் கிழத்தியாகத் தான் இழித்து நடத்தப்பட நேர்ந்ததே என்று அவள் தன் ஏழை நெஞ்சையே இடித்துரைத்தாள்.
இந்நிலையில், மூட்டை முடிச்சுகளுடன் அவள் வெளியேறும்போது மூரட் அங்கே வந்தான். லாரைனைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அவன் மற்ற மாதை எதிர்பார்த்து, அவள் திட்டப்படிதான் நண்பகலில் வந் திருக்கிறான் என்று நினைத்து அவள் கோபம் அவளையும் மீறியது. அவன் ஏதேதோ பேச எழுந்ததும், அவள் சினம் செந்தீயாக மாறி “உன்னை நான் கண்டு பேசியது போதும். இனி என் கண்முன் என்றும் வரவேண்டிய தில்லை” என்று கூறி வண்டியேறிச் சென்றுவிட்டாள்.
மூரட் கல்லாய்ச் சமைந்து நின்றான்! அவன் கடுஞ் சினத்தின்முன் அவன் ஆண்மை முற்றிலும் பறந்தது. அதன் காரணத்தை அவன் முற்றிலும் அறியவும் முடியவில்லை. அவள் எப்படி நண்பகலிலேயே வங் தாள், வந்தபின் என்ன நடந்தது என்பதை அவன் அறிய முடியவில்லை.
அடுத்த அறையிலுள்ள இழிதரமாது அவனிடம் வந்து பேச முன்வந்தபோதுதான் அவனுக்குச் செய்தி ஒருவாறு விளங்கிற்று. அவள் அவன் பழங் காதலி யருள் ஒருத்தி. அவள் கேட்டபோதெல்லாம் அவன் ஏதாவது காசு பணம் கொடுக்காமலிருப்பதில்லை. அவள் அவனிடம் நாய்க்குட்டியின் பாசத்துடனும் பண்புடனும் நடந்தும் வந்திருந்தாள். அன்று அவன் அவ்விடம் வருவதைத் தன் நண்பனான விடுதியாள னால் தெரிந்தே அவள் அவனை முன்கூட்டிச் சந்திக்க எண்ணினாள். நண்பகல் அவன் வருவதை அவள் அறிந்த வகை இதுவே.
மூரட் இத்திருவுருவத்தை இன்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ”சனியனே! என் முகத்தில் இனி விழிக் காதே. போய்த் தொலை” என்று லாரைன் தன்னிடம் பேசிய பேச்சினும் கடும் பேச்சுக்கூறி எரிந்து விழுந் தான். என்றும் அவன் சீற்றங் கண்டறியாத பகட்டுடை யணிந்த அவ் ஏழைப் பெண் நடுங்கி ஒதுங்கிச் சென்றாள்.
சீற்றம், புழுக்கம், தற்பழிப்பு ஆகிய நரகவெங் தீக்களிடையே லாரைன் பதைபதைத்து வெந்து கொண்டிருந்தாள்.
இருளில் திடுமென மின்னல் ஏற்பட்டு இடியேறுண் டவன்போல மூரட் உணர்விழந்து செயலற்றுத் திரிந்தான்.
இதழ் 30 – புயலின்பின் அமைதி
“சாவின் தடத்தை என் உள்ளத்தில் பதித்துச் சென்று விட்டாய். இன்பத்தின் தொலை அளவுக்குக் கூட என் மனத்தில் இடமில்லாது போயிற்று. கூதிர்ப் பருவத்தில் இலைகள் உதிர்வதுபோல என் ஆர்வக் கனவுகள் எல்லாம் உலர்ந்து உதிர்ந்து விட்டன. நாள் செல்லச் செல்ல, மணி செல்லச் செல்ல, என் மன இருள் செறிகிறது. என் ஆண்மை அகன்றது. நான் வலி விழந்தேன். பதினைந்தில் எழவேண்டிய காதல் நாற் பத்தைந்தில் எழுந்தது. எப்படியோ பொறுத்தேன். அப்பருவத்திலும் நேர்ந்த துன்பம் இன்று நேர்ந்தால் என்ன செய்வேன். தாயே குழந்தையைத் தள்ளி உதறி னால், குழந்தை என்ன செய்யும்! அக் குழந்தையினும் திக்கற்றவனானேன்!
நம் காதல் நம் பருவத்தில், நம் நீண்ட நாள் அனுப வங்களின் பின் நட்பின் அமைதி பெற்றிருக்க வேண் டும். இன்று நீ அமைதி யளித்துவிட்டாய்-அது நட்பின் அமைதிதானா? நீயே எண்ணிப்பார்!
என் நெஞ்சம் இடிந்துவிட்டது. உன்மீது என்னால் குறை கூறவும் இயலாத நிலையில் இருக்கிறேன். இத் துன்பம் என் ஆற்றலை மீறிவிட்டது. பதினைந்து வயதுக் குழந்தைபோல என்னை நடத்திவிட்டாய். நிலை மையை நீயாக ஆர அமரப் பார்க்கவுமில்லை. என் விளக்க விடைகளைச் செவி கொடுத்துக் கேட்கவும் இடம் வைக்கவில்லை. குற்றத்துக்குத் தண்டனை பெற் றால், குற்றம் தீரலாம். காரணத்துடன் காரியம் நிகழ்ந் தால், காரணம் விலக்கிக் காரியம் தடுக்கலாம். குற்ற மறியாத் தண்டனை, காரணமறியாக் காரியம் நடக்கும் வாழ்வில் எதையறிந்து எதைச் செய்வது? எப்போதும் எதிர்பாராத் தீமைக்கு அஞ்சி, எதையும் எதிர்பார்த்து, குருட்டு விதியின் பிடியில் வாழ்வதெப்படி?
என்னால் என் சார்பில் ஒன்று மட்டுமே கூறமுடியும். என் மன அமைதி, என் இன்பத்தை நீ துரத்திவிட்டாய். ஆனால் அந்த அமைதியையும் இன்பத்தையும்விட நீ எனக்கு இன்றியமையாதவளாக இன்னும் இருக்கிறாய். என் உயிரும் என் மூச்சும் மட்டுமல்ல, என் அறிவும் என் உணர்வும் உன் கை நொடிப்பில் இருக்கிறது. நீ என்ன செய்வாயோ, செய்ய மாட்டாயோ? நான் யார் அதைக் கூற….
கசக்கி எறியப்பட்டவன்.
அவன் குற்றத்திற்கு விளக்கம் இக் கடிதத்தி லில்லை. விளக்கம் கூறத்தான் இடந்தரவில்லை என்ற குற்றச்சாட்டின்முன் இது ஒரு குற்றமல்லதான். ஆயினும் இக்கடிதம் எழுதியவன் ஆயிரம் கொலை செய்திருப்பினும், அவள் மன்னித்திருப்பாள். காதலன் விளக்கத்தில் காதலைவிட வேறு என்ன வேண்டும்? காதலன் விளக்கத்தில் காதலைவிட வேறு என்ன வேண்டும்? அவன் காதற்புயல் சூறைக் காற்றாயடிப்பது கண்டாள். அவன் இன்னும் காதல் விளையாட்டு விளையாடத்தான் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளலாம். அப்போதும் என்ன? அது அவன் முன் வாழ்வின் நிழல். தன் ஒளிபடாத இடத்தில் அதைக் கறைப்படுத்தட்டும். அதுவும் தன் நிலைமையின் குற்றம், தங்கள் சூழ்நிலையின் குறைமட்டுமே. அவன் உள்ளத்தில் அவள் நிறைந்திருக்கிறாள்-ஆம். இனி குறைகாணும் படலம் அகன்றுவிட்டது. விளக்கங் கூற வேண்டுந் தேவை இனி இருக்க வேண்டியதில்லை. இனி அவன் குறைகள் தன் குறைகள். அவன் திருந்தும் பொறுப்பு அவனதல்ல, தனது. இந்நினைவுகளால் காத லென்னும் குன்றின் கொடுமுடி யேறினாள் லாரைன். கொடுமுடியிலிருந்து கடலிற் குதிக்கவோ, அல்லது அப்படியே வானிற் பறக்கவோ அவள் சித்தமானாள். அவன் கடிதம் புயலின்பின் அமைதியாய், கார்கால முகிலின்பின் வானவில்லாய்க் கனிவுற்றது.
“என்னை வெறுத்துவிடாதே. என் குழந்தாய்! என் சீற்றத்தின் உயரம் என் அளவிடமுடியாத அன்பின் ஆழம் மட்டுமே. ஆனால் நீ என் காதற் குழந்தை. உன்னை நான் குழந்தையாகத்தான் நடத்த வேண்டும். சீற்றத்தின் உயரம், காதலின் ஆழம் இரண்டும்பற்றி இனி உன்னைக் கவலைப்பட விடமாட்டேன். உன் காதல் கிள இனி நீ எது செய்யினும் உன்னைக் கொத்தாது. நீ இன்னுணவு தரினும் கசப்புணவு தரினும், அது இனிமையாகவே பேசும்.
“என் வானில் திரியும் பறவையே! இனி நீ எங்கே வேண்டுமானாலும் போ. ஆனால் என்னை மறவாமல் எப்போதும் திரும்பி வா. என் கை இரையுடன் எப்போதும் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
“உன் காதலைப்பற்றிக்கூட இனி நான் கவலைப்பட மாட்டேன். என் காதலைப்பற்றிய கவலையே எனக்குப் பெரிதாகிவிட்டது. நீ யாரைக் காதலிக்கிறாய் என்பது பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. உலகில் எவரையும் விட நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைமட்டும் நீ மறக்காதிருந்தால் போதும். உன்னுடன் வாழக் கிடைப்பதுவரை, அல்லது அந்நம்பிக்கை உள்ளவரை என் வாழ்வு எனது.
இனிக் கசக்கி எறியாத கை”.
அவள் தன்னையும் கடந்துவிட்டாள். தன் காதலையும் கடந்துவிட்டாள் என்பதை அவன் கண்டான். ஆனால் அவள் கடிதம் இப்போதும் குறையே கண்டது. ‘குறைகள்யாவும் உன்னுடையனவே. ஆனால் தண்டனை யடைந்தவன் நான்” என்ற பல்லவியுடன் தொடங்கி “சென்ற காலப் பிழைகள், இப்போதைய பிழைகள் வருங்காலப் பிழைகள் யாவும் நான் மறக்கிறேன் ஆனால் ஒரு குறை இன்னும் உறுத்துகிறது. சினமாறிய கடிதத்தில்கூட உன் அன்பு முத்தம் அனுப்பவில்லை!? என்று எழுதியிருந்தான்.
அவன் சிறுபிள்ளைத்தனமான ஆர்வம் அவள் பெண்மையைக் கலகலக்க வைத்தது.
அவன் கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளதென அவள் கடிதமூலம் கேட்டு அவள் அவனுக்கு எழுதிய கடிதம் இது.
“உங்கள் நிலை கேட்டுக் கலங்குகிறேன். ஆனால் அ த னை ச் சரிப்படுத்த வழியுண்டு. கண்ணுக்குக் கட்டுக் கட்டிவைத்துப் புகுங்கள். வெளியே பகலிலல்ல, வீட்டினுள் இருக்கும் போதும், இரவிலும். ஆம்! இருட்டில்கூட என் குறைகளைத் தங்கள் கண்கள் சிறிதுகாலம் துளைத்துப் பார்க்காமலிருக்கட்டும். என்னை அறிய உங்களுக்குக் கண்ணால் காணவும் காதால் கேட்கவும்கூட இனித் தேவைப்படா தென்று எண்ணுகிறேன். தங்கள் நெஞ்சு என் நெஞ்சையறியும், தங்கள் உடல் என் உடலை அறியும்!
தங்கள் புற உயிர்.
இதழ் 31 – மீட்டும் பிரிவு
ஸ்பா என்னும் மருந்து நீரூற்று நகரில் லாரைன் சென்று சில நாள் கழித்தாள். மூரட்டும் அடிக்கடி அங்கே சென்று அவளைக் கண்டு வந்தான். ஆனால் அங்கே நீடித்திருந்ததன் காரணமாக லாரைனுக்குப் பல புதிய நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களுள் புல்லர் என்ற ஆங்கிலக் குடும்பத்துடன் அவள் நன்கு பழகிக் கிட்டத்தட்டக் குடும்பத்தில் ஒருத்தியாகக் காட்சி யளித்தாள். அவள் அவ்வளவு எளிதாக அயலாருடன் பழகி விட்டது கண்டு மூரட் உள்ளுறப் பொறாமை கொண்டான். தன் பைங்கிளி பிறர் கையில் சென்று அமர்வதுகூட அவனுக்குப் பிடிக்கவில்லை. தான் தன் கிளியை மணந்தபின்தான் தன் கிளியாகப் பாராட்ட முடியும் என்பதை அவன் மறந்தான்.
இளவரசன் டிலீஞின் மாளிகைக்கு மீண்டும் ஒரு முறை லாரைன் விருந்தினளாய்ச் சென்றாள். பின் அர ரண்மனையிலேயே அவள் ஒரு நாடகத்தில் பங்கு கொண்டாள். இப்போது இளமைப் பருவமடைந்து வந்த அகஸ்டி அரமகனாகவும் நடித்தனர். மூரட் மீ து: இருந்த அரண்மனைத் தடைகூட அகன்றது. அவன் மக்கள் கிளர்ச்சியின் தலைவன். ஃவிகாரோவாக நடித் தான். நாடகம் சிறப்புறப் பாராட்டப்பட்டது. குறிப் பாக மூரட்டின் வீர உரையும் நடிப்பும் பலராலும் மெச்சிப் புகழப்பட்டன. ஆனால் அந்தோ, அவன் நடிப்பு வரவிருக்கும் பிரஞ்சுப் புரட்சியெனும் சூறா வளிக்கு ஒரு முன்னறிவிப்பு ஆயிற்று.
ரூசோ, வால்ட்டேர் ஆகிய எழுத்தாளர் எழுத்தில் கரு முளைத்து, அரசியல் சூழ்ச்சியாளர் பூசல்களால் கருமுதிர்ந்து, மக்கள் வறுமை, வெனிஸ் முப்போரின் இன்னல்கள், அரண்மனை பெருமக்கள் ஆரவாரச் செலவுகளால் ஏற்பட்ட வரிச்சுமை ஆகியவற்றால் மக்கள் பெருங்கடல் கொந்தளித்தெழுந்தது. மன்னர் பதினாறாம் லூயி பதினான்காம் லூயியின் ஆணவப் பெருந்தகைமைப் பண்புக்கு நேரெதிர் பண்புடை யவன். அவன் புயல் வருமுன்பே இளந்தளிர்போல் நடுங்கினான். ஆக்டேவுடன் மீண்டும் நாடகம் நடிக்கப் படுவதை அவன் தடை செய்தான். நேரிடையாக ஆக் டேவிடம் அவன் “நீ பெருங்குடியிற் பிறந்தவன் என் பதனால், ஏதோ அறிவின் சிகரத்தை எட்டிவிட்டதாக நினைக்கிறாய். உனக்குத் தரப்பட்ட சலுகை பெரிது. அதற்கு நீ செய்யும் கைம்மாறு என்ன?” என்று இடித்துரைத்தான்.
அது ஆக்டேவ் மூரட்டின் உள்ளத்தை மட்டும் தைக்கவில்லை. இதுவரை மன்னர் பெருங்குடியாளரை நேரடியாக இப்படிக் கடிந்தது கிடையாது. மக்களை நடுங்கி ஒடுங்க வைத்த பதினான்காம் லூயிகூட எந் தப் பெருமகனையும் இவ்வாறு கூறத் துணிந்தது கிடையாது. பெருமக்கள் யாவரும் முணுமுணுத்தனர். ஆனால் இதுவும் வரப்போகும் புயலின் ஒரு முன்னறி விப்பாகவே அமைந்தது. அப்புயலில் அரசன் உயி ருக்கு இடையூறு விளைந்தது. பெருமக்கள் பெயரும் உருவும் மறைந்து ஓடி ஒளிக்க வேண்டியதாயிற்று.
மன்னர் நட்பின் அறிகுறி; பெருமக்கள் மரபுக்குரிய நடை உடை தோற்றத்தின் சிறு நிழல், அத்தகைய ஐயம்கூட இப்போது பாரிஸ் வட்டாரத்தில் மக்கள் கடுஞ் சீற்றத்துக்கு இரையாயிற்று.
ஆனால் புயல் புற எல்லையில் அடிக்கத் தொடங்கிய பின்பும் பூங்காவில் பொன் மலர்கள் பொலிவுடனேயே நின்றன. நறுமணம் புயல்வாடையை மறக்க வைத்துக் கொண்டிருந்தது.
1784-ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு விழா வில் அரசிளஞ் சிறுவர்க்கு விளையாட்டுப் பொம்மைகள் கூட வாங்கவில்லை. அரசி தன் அரண்மனை ஆரவாரச் செலவுகளைக் குறைக்க இட்டிருந்த திட்டத்துக்கு இது ஒரு முன்முகம். இதே ஆண்டுத் தொடக்கத்திலேயே மூரட் லாரைன் மூலம் அரசியால் கொலுவிருக்கை தரப் பட்டு மதிக்கப்பெற்றான். அச்சமயம் அவன் அவள் மீது பாடிய சாத்துக்கவி அரண்மனை வாணர்களுக்குக் களிப்பூட்டியது. அதில் உள்ளூர அரசிக்கு அளிக்கப் பட்டிருந்த அறிவுரை எச்சரிக்கையை யாரும் கவனிக்க வில்லை. அரசியிடம் நேசங்கொண்டிருந்த லாரைன் கூட அதனைப் பிற்காலத்திலேயே காண முடிந்தது. அவளும் பேச்சு நயம் எழுத்து நயம் உடையவளாயினும், இத்தகைய புதை பொருள் அவள் இலக்கிய நடைக்கு அப்பாற்பட்டிருந்தது. தன் தாயிடமிருந்து மூரட் பெற்றிருந்த தனி மரபுடைமை அது.
அடுத்த ஆண்டு அரசியின் வாழ்வில் காலமெனும் நச்சரவம் புகுந்த ஆண்டு. அவள் ஊதாரிச் செல வினங்களில் ஒன்று பற்றிய கதை வெளியாயிற்று. அவள் நாட்டுப் புறத்தில் ஒரு பண்ணையில் சென்று மக்கள் மனக் கண்ணுக்கு மறைந்து வாழத் தொடங் கினாள். அதே ஆண்டு மூரட்டின் ஊதாரி வாழ்விலும் பெருந்தடை ஏற்பட்டது. அவன் கடன்காரர் அவனைச் சூழ்ந்து அவன் மதிப்புக் கோட்டையைத் தகர்க்க முற் பட்டனர். அவனுக்குப் புதிதாகக் கிடைத்த சில அரசியல் நண்பர்கள் அறிவுரையால் அவன் இக் கடன் தொல்லையிலிருந்து மீளவும் முடியுமானால் பெருந்திரள் பொருள் திரட்டவும் புதிய கனாத்திட்ட மிட்டான். அதன் படி அவன் ஸெனகல் என்ற வெளிநாட்டுத் துறை முகத்தின் ஃபிரெஞ்சு ஆட்சித் தலைவனாகச் சென்றான்.
ஸென கல் செல்லுமுன் அவனை விடைகொடுத் தனுப்பச் சென்ற லாரைன் அவன் பிரிவுத் துயரை அடக்க முடியாமல் துடித்தாள், ஆனால் தன் துடிப்பை அவனிடம் காட்ட விரும்பாது அவள் தன்னை அடக்கிக் கொண்டாள். அவள் நிலையிலி ரு து அவன் தேற்றினான்.
அவள் தலைமயிர்களிடையே பல நரை காணத் தொடங்கியிருந்தன, அவள் கைகள் அவற்றிடையே விளையாடின. “அன்பே, நீ வருமுன் இம் முடி முழு தும் பொன் முடியாகி விடக்கூடும்” என்றாள்.
அவன் தன் இன்னல்களிடையேகூட நகைத்துக் கொண்டு, “உன் பொன்முடிகளுக்கேற்ற வெள்ளி முடியாவது எனக்கு அப்போது கிடைக்குமே” என்றான், அவள் அவன் தோள்மீது புரண்ட தன் முடிகளின் ஒரு குழலை எடுத்துக்காட்டி “இது நீலமாயிற்றே” நீலமுடி பொன் முடியாகாதா?” என்றான்.
சற்றுப்பின் விளையாட்டுப் பேச்சை நிறுத்தி “என் அன்பே, உன் வயது என் காதலில் ஒரு மாறு பாடும் செய்யாது. உன் வயது, உடல், உடலழகு எல்லாம் நான் கடந்து விட்டேன். ஆயினும் உன் கவலை கழிவிரக்கங்கூட அற்ற என் கல் மனத்தின் கொடுமையை நினைவூட்டுகிறது. நான் உன்னை வாழ்க்கை முழுதும் வதைத்து விட்டேன். இன்னும் எத்தனை நாள் நீ வதைபட வேண்டுமோ என்ற எண்ணம் என் கல் மனத்தின் உறுதியையும் கலைக்கப் பார்க்கிறது” என்றான்.
“நீங்கள் வதைப்பது உண்மைதான். ஆனால் அவ் வதைப்பே எனக்கு இன்பமாகவும் தோற்றுகிறது. இவ் வதைப்புக்கு மாறாக யாரேனும் இன்பங்களைக்கொட்டி னாலும் நான் விரும்பமாட்டேன். அத்துடன் உங்கள் கல் மனம்தான் என் உயர்குடி வரம்புகளின் இருப்புக் கோட்டைகளைத் தகர்த்து, நம் இருவர் கைக்கும் அடங் காத இவ்விளமையை ஓரளவு இருவரும் துய்க்கச் செய்தது. நான் அதுபற்றிக் குறைபட்டதுண்டு. கழி விரக்கங் கொள்ள வேண்டியதில்லை. நான் என் மனப் படி நடந்திருந்தால் இன்று நான்கழிவிரங்கியே இருக்க வேண்டும்; உங்கள் குறைகளும் குணங்களாக எனக்கு இப்போது காணப்படுவதால் நான் தங்கள் குறை களைக்கூட விரும்பத் தொடங்கியுள்ளேன்” என்றாள் அவள்.
அவன் உடனே “அது போலத்தான் இன்று துய ராகத் தோற்றுபவையும் நாளை இன்பமாகத் தோற்று வது உறுதி. ஆகவே மனநிறைவுடன் எனக்கு விடை தருக” என்று தன் ஆறுதலுரைக்கு முத்தாய்ப்பு வைத்தான்.
ஆவர்கள் சந்தித்தது ஆக்டேவ் மூரட் வீட்டில். காலை ஒளி கிட்டிற்று. அவள் இன்னும் அசைவதாகக் காணோம். இத்தடவை அவளை அவன் கைப்பிடித்து வாயிலண்டை கொண்டுவந்து தழுதழுத்த ஆனால் உறுதியான குரலில், “பொழுதாகி விட்டது. இனி நீ தங்கக்கூடாது. அத்துடன் நானும் பயணமாக வேண்டும். என் கடிதங்கள் என் மனத்தைப் படம் பிடித் தனுப்பும். உன் கடிதங்கள் என் இலக்கியமாயிருக்கும். இதோ நான் உள்ளே போய்விடப் போகிறேன். விடைதந்து விடைபெற்றுக் கொள்க” என்றான்.
அவள் தன் களையிழந்த முகத்தை மறைத்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றாள்.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.