வரவேற்கப்படாத விருந்தாளி!
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையை முடித்து விட்டு மாங்குளத்து உபதேசியார் திரித்துவதாஸ் வழக்கம்போல் கோயில் மண்டபத்தில் அமர்ந்தார்.
உள்ளூரில் கடை வைத்திருப்பவரும், ஊருக்கு வாயாடியுமான சர்க்கிள் கமிட்டி மெம்பர் திரு. சத்தியம்-
‘என்ன வாத்தியாரே, நம்ம கடையில நிறைய வெள்ளைப் பேப்பர் இருப்பு இருந்து போச்சி. முதலாம் வகுப்பிலிருந்து எல்லாப் பயல்களையும் பேப்பர்ல பரீட்சை எழுதச் சொல்லுமே’ என்று பிஸினஸ் நேக்காகக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்தார்.
நெல்லையில் தன் பெயரில் நாலைந்து லாரிகள் ஓடிக்கொண்டிருக்கும் சர்ச் கவுன்சில் மெம்பர் சந்தோஷம்-
‘என்ன செப்டம்பர்ல நம்ம சர்ச் எலக்ஷன் ஆரம்பிக்குதாமே’ என்று சொல்லிக்கொண்டே மடிப்புக் கலையாத துண்டை மண்டபத்துப் படியில் போட்டு உட்கார்ந்தார்.
பர்மா பென்ஷனரும், உள்ளூர்க் குட்டிப் பண்ணையாரும் அத்தியட்சாதீன கவுன்சில் உறுப்பினருமான திரு.நேசமணியும், ரிட்டயர்ட் சப் இன்ஸ்பெக்டர் திரு. ரிச்சர்டும்கூட அங்கு வந்து சேர்ந்தது ஆச்சரியமாய்த்தானிருந்தது.
அவிந்து புழுங்கும் கொடிய வேனல் காலம். கிறிஸ்தவக் கோயில் மண்டபத்தைச் சுற்றி மூன்று வேம்புகள் நிற்பதால் ஊரில் எந்த இடத்தையும் விட அங்குதான் அழகான காற்று வரும்.
பங்குனிப் புழுக்கத்தைவிட அங்குக் கூடியிருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவருக்கும் மனப்புழுக்கம் அதிகம் உண்டு. ஆனால், அதைக் காட்டாமல் உள்ளுக்குள் கறுவிக்கொண்டு மேலுக்கு வேண்டா வெறுப்பாகத் தங்கள் தங்கப் பற்களையும், தந்தப்பற்களையும், காவிநிறப் பற்களையும், புகையிலை படிந்த கறுப்புப் பற்களையும் காட்டிச் சிரித்துக்கொண்டார்கள்.
பேச்சுவாக்கில் நெல்லை அங்கே உட்கார்ந்திருந்த யாவரும் பேச்சுவாக்கில் ஆதீனத்திலுள்ள பல பெரிய மனிதர்களின் இரகசியங்களைப் பரகசியமாக்கினர்.
பக்கத்தில் நின்ற ஒன்றிரண்டு விவசாய மக்கள் திறந்த வாய் மூடாமல் விந்தையோடு கேட்டு நின்றார்கள்.
உபதேசியார் திரித்துவதாஸ் மட்டும் என்ன பேசினாலும் குற்றம் என்ற பயத்தில் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இந்நேரம் திடீரென்று அங்குவந்து நின்ற ஒரு ஜீவன் அனைவரையும் வணங்கியது.
எல்லோர் கண்களிலும் பரிகாசப்பார்வை நிறைந்தன.
‘என்ன பிரசங்கியார்வாள், பெரிய மூட்டை?’ என்றார் பர்மா பென்ஷனர். ஒடிந்த குரலில் ‘ட்ராக்ஸ்’ என்றார் பிரசங்கியார். ‘பிரசங்கிமாரைத் திறந்துதான் விட்டிருக்கிறது’ என்று அலுத்துக் கொண்டே அவர் கொடுத்த இலவச துண்டுப் பிரசுரங்களைப் பார்வையிட்டார் கடைக்காரர் சத்தியம்.
‘வரவேற்கப்படாத விருந்தாளி’ என்று மகுடமிட்டு இயேசுவைக் குறித்து எழுதியிருந்த அந்தப் பிரசுரம், எல்லோர் கைகளிலுமிருந்து ஏககாலத்தில் நகைத்துக் கொண்டிருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் அர்த்த புஷ்டியுடன் மனதிற்குள் சிரித்துக் கொண்டே பிரதியைப் படித்தார்.
வீட்டில் பழையது இல்லாமல் காலை பத்து மணி ஆகியும் இன்னும் சாப்பிடாதிருக்கிற உபதேசியார், பிரசங்கியார் இங்கே தங்கிவிடுவாரோவென்று பயந்து, ‘நீங்கள் இங்கு வந்து நாலு மாதம் கூட ஆகல்லியே, வேறு சபை கிடைக்கல்லியாக்கும்’ என்றார் விரக்தியோடு.
பிரசங்கியார் அவசர அவசரமாகத் தம் கோட்டுப் பையிலிருந்த டைரியை எடுத்து ‘சரியாய் இன்றோடு ஆறுமாதம் முடிகிறது.. ஒவ்வொரு ஊருக்கும் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் போவேன். முந்தின உபதேசியாரையா சோறும் போட்டு ஒரு ரூபாயும் கொடுத்து அனுப்புவார்கள், என்றார் மிக மரியாதையாக.
லாரி முதலாளி சந்தோஷம் தமது இலண்டன் நேவிகட் சிகரெட் புகையைச் சுண்டிவிட்டுத் தொண்டைக்கு மேலே சிரித்தார். திருவாளர் ரிச்சர்ட் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
‘நம்ம பிஷப் இப்படி மாமூல் பிச்சைக்காரர்களுக்கெல்லாம் ஏன் லைசன்ஸ் கொடுக்கிறார்?’
பிரசங்கியார் பரிதாபமாக விழித்தார்.
அவரின் மருண்ட பார்வையும், வெருண்ட தோற்றமும் தனக்குச் சாதகமாக முடியலாம் என்றெண்ணிய உபதேசியார், ‘எங்கே உங்கள் லைசன்ஸ்?’ என்றார்.
ஏழெட்டுத் துணிகள் போட்டு சுற்றி மிகப்பத்திரமாகப் பொதிந்து வைத்திருந்த பல ஒட்டுகள் உள்ள ஒரு கிழிந்த கடுதாசியை எடுத்துக் கொடுத்தார்.
பண்ணையார் இடது கையில் வாங்கி அலட்சியமாகப் பிரித்துப் பார்த்தார்.
‘லைசன்ஸ் காலாவதியாகி ஒரு வாரம் ஆகிவிட்டதே’ என்றார் பண்ணையார்.
உபதேசியாருக்கு ஒரே உற்சாகம்.
வரவேற்கப்படாத விருந்தாளியோ மிரள மிரள விழித்தார்.
குயுக்தியாக ஒரு பொருத்தமான காரணத்தைச் சொன்னார் பிரசங்கியார்.
‘நம்ம பிஷப் அமெரிக்கா போயிருக்கிறார்; வந்த பிறகு தான்…’
‘லைசன்சை புதுப்பித்த பின்பு வாரும் இப்போ போரும்’ என்றார் கடைக்காரர் முரட்டுக்குரலில்.
‘உபதேசியாரைய்யா, வீட்டிற்குப் போய் ஒரு ஜெபம்பண்ணி விட்டுப் போகிறேன்’ என்று பிரசங்கியார் அழாக்குறையாகச் சொன்னார். கூட்டம் கலைந்தது.
பிரசங்கியார் பேரின்பத்திற்கு வயது நாற்பத்தெட்டாகிறது. பதினெட்டு வயதிலிருந்தே தனி உபதேசியாராகப் பல சபைகளில் இருபது வருடங்கள் ஊழியம் செய்தார். அந்தச் சபைகளிலெல்லாம் இப்பொழுது கிறிஸ்தவப் பள்ளிகள் தோன்றி ‘ஆடு மேய்த்தாற் போலும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற்போலும் அந்தந்த ஊர் உபாத்திமாரே பள்ளி வேலையோடு சபைகளையும் கவனித்துக் கொண்டதால் பேரின்பம் உபதேசியாருக்கு வேலை இல்லை.
இருபது வருடங்களாக மரத்துப்போன தொழிலை விட்டு அவருக்கு வேறு என்ன தொழிலைச் செய்ய முடியும்? பாவம், அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடையாது.
உழுகிறவனுக்குச் சாட்டைக் கம்பும் – கிறிஸ்தவப்பிரசங்கிக்குப் பைபிளும் தானே மிச்சம்!
பைபிளைத் தூக்கிக்கொண்டு சுயேச்சைப் பிரசங்கியாராகக் கிளம்பினார்.
‘பிடி சாதம் கொடுங்கள்’ என்ற உள் அர்த்தத்தில் அத்தியட்சர் அனுமதியும் கிடைத்தது. ஏதாவதொரு திசையை நோக்கிக் கிளம்பினால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத் தான் மீண்டும் வீடுவந்து சேருவார்.
வயிற்றுப்பாடு போக ஏதோ பத்து, இருபது ரூபாயுடன் வருவார். அதுதான், துணிமணி, நன்மை தீமை, பிள்ளைகள் படிப்பு முதலிய வீட்டுச் செலவுகளுக்கு…
கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளிகளும், பயிற்சி பெற்ற ஆரம்ப ஆசிரியர்களும் குவியக் குவியப் பிரசங்கிமாரும் குவிந்தனர்.
அவர்களை விசாரித்து அனுமதி வழங்குவதே அத்தியட்சருக்குப் பெரும் வேலையாய் விட்டது. பிரசங்கிமார் பெருகினர்; பிரசங்கங்கள் மலிந்தன; பிரசங்க மார்க்கட் மந்தமானது! பல தினங்கள் பச்சைத் தண்ணீரைக் குடித்துப் படுத்து உருள வேண்டியதாயிற்று. பசியும் நிர்வாணமும் அவரை இயேசுவின் அன்பிலிருந்து பிரித்துவிடுமா?
இப்பொழுதெல்லாம் அவருக்குப் ‘பின்னால் வேண்டுமே பிள்ளைகளுக்கு வேண்டுமே’ என்ற பேராசை கிடையாது.
நாளைக்கு வேண்டுமே என்ற நப்பாசை கூடக் கிடையாது.
‘இன்றைக்குரிய ஆகாரத்தை இப்பொழுதே தாரும்’ என்பதுதான் அவரது விடாப்பிடியான வேண்டுகோள்.
அவர் தோளில் தொங்கும் தோல் பையில் முன்பெல்லாம் பைபிள், பல்பொடி, பவுடர், எண்ணெய், ஒருமாற்று உடுப்பு இவையெல்லாம் இருக்கும். இப்பொழுது அவைகளை யெல்லாம் தள்ளிவிட்டுத் திருமறையும், துண்டுப்பிரதிகளும் மட்டுமே உள்ளன.
இலவசத் துண்டுப்பிரசுரங்களை இமயமளவாய் அமெரிக்கப் பக்தி நிறுவனம் ஒன்று அனுப்பிக்கொண்டிருந்தது.
ஒருநாள், நம்பிப்பாறை என்ற ஊருக்கு ஒரு ரூபாய் கொடுத்து பஸ்ஸில் ஏறிப் போயிருந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமை. அந்த ஊர் உபதேசியார் கடுவம் பூனைபோல் சீறி விழுந்தார். இரவு ஜெபத்திலாவது பிரசங்கத்திற்கு இடம் கொடுக்கும்படி கெஞ்சினார்.
உபதேசியார் மிகப் பரிதாபமாகச் சொன்னார்;
‘பிரசங்கியார்வாள், இரவு ஜெபத்திற்கு ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே கோயிலுக்கு வருவர். மலேசியாவிலிந்து ஒரு சகோதரர் நேர்ச்சையாக முன்னூறு ரூபாய் அனுப்பினார். அதை வைத்து மின்சார இணைப்பு எடுத்து கோயிலை விளக்குகளால் அலங்கரித்து விட்டோம். எரிந்தாலும் எரியாவிட்டாலும் குறைந்த பட்ச மின்சாரக் கட்டணம் வருகிறது. அதற்காகக் கோயிலைத் திறந்து விளக்கைப்போட்டு மணி அடித்து கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லி விட்டு கதவை மூடிவிடுவோம். வேண்டுமானால் இன்று மத்தியான ஆராதனையில் பேசுங்கள்; என் மனைவி பேறு காலத்திற்குத் தாய் வீட்டிற்குப் போயிருக்கிறதால் சாப்பாடு போட முடியாது’ என்றார் துக்கம் நிறைந்த தொனியில்,
பிரசங்கியாரும் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல்,
‘மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ என்ற வேத வாக்கிய மேற்கோளில் பிரசங்கம் செய்து விட்டு நடையைக் கட்டினார்.
இந்தப் பிரசங்கத் தொழிலுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டுப் பீடி சுற்றப் போய்விடலாமென்று பலமுறை நினைத்தார். ஆனால், நிலவேளைகளில் அவருக்குக் கிடைக்கும் மகத்தான வரவேற்பையும், கொழுத்த விருந்தையும் நன்றி மறந்து விட முடியுமா?
எப்படியோ பத்து வருடங்கள் உருண்டுவிட்டன. எத்தனை ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினாரோ, ஆண்டவருக்கே வெளிச்சம்.
நேற்று இரவு விளக்குக்கூடப் பொருத்தாத ஓர் அணைந்த கோயிலினுள் அகப்பட்டுக்கொண்டார். பசி செவியைப் பிய்த்தது. கண்ணை உள்ளே தள்ளியது. கையில் ஒரு பைசா கிடையாது. நல்ல வேளை படுக்கவாவது ஓடம் கிடைத்ததே!
காலையில் எழுந்து மாங்குளத்துக்கு வருகிற வழியில் ஒரு கிணற்றில் கருங்கடல் போல் தண்ணீர் கிடந்தது.
குளித்து மூன்று நாட்களாகி விட்டன.
‘கர்த்தர் நீதிமான்களைப் பசியால் வருந்த விடார்’ என்ற துணிவில் நன்கு குளித்துவிட்டு மாங்குளம் வந்தடைந்தார்.
மண்டபத்து மகான்களிடம் அவருக்கு ‘மாபெரும் வரவேற்பு கிடைத்தது!
குளித்து விட்டதால் பசி குடலைச் சுருட்டியது. கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கும் பிஷப் லைசன்ஸ் காலாவதியாகி விட்டதால் கால்கள் பின்னலாடி நடுங்கின.
தோள்பட்டையில் தொங்கிய தோல்பையைத் தாங்கத் திராணியற்று நின்று கொண்டிருந்தார்.
வாத்தியார் வீட்டிற்கு ஜெபம் பண்ணப் போனாலாவது ஒரு தம்ளர் காப்பித் தண்ணீர் கிடையாதாவென்ற ஏக்கத்தில் ‘ஒரு ஜெபம் செய்துவிட்டுப் போகிறேன்’ என்றார்.
உபதேசியார் மனைவி ஓலைப்பாயை விரிக்க – பிரசங்கியார் தோல் பை சுமையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ஜெபித்தார். தோல் பையின் பளுவைக் குறைக்க வேண்டி ‘வரவேற்கப்படாத விருந்தாளி’ என்ற பிரசுரங்கள் அடங்கிய மூன்று பெரிய கட்டுகளைத் தூக்கி உபதேசியாரிடம் கொடுத்துவிட்டு எழும்பினார்.
கருணை வடியக் கனிந்து நின்ற உபதேசியாரின் மனைவி ஒரு கப் காப்பி கொண்டுவந்து பிரசங்கியாருக்குச் சுடச்சுடக் கொடுத்தாள்.
கச்சிதமாகக் குடித்துவிட்டு நம்பிக்கை வீண்போகாமல் கிளம்பினார். பிரசங்கியார் வாசல்படியைக் கடக்குமுன் உபதேசியார் தம் மனைவியிடம், ‘உன்னைக் காப்பி கொடுக்கச் சொன்னது யார்? இப்படிக் கொடுத்துப் பழக்கினால் மாதம் மூன்றுமுறை ஆளை அரிக்க வருவான்க’ என்று கண்களில் கனல் கக்க எரிந்து விழுந்தார்.
அவர் மனைவி ஓடிவந்து கணவனின் வாயைப் பொத்திக் கொண்டு ‘ச்ச்சூ… சும்மா இருங்க, அந்த மனுஷன் தந்திருக்கிற தாளே எட்டணாவுக்குப் போதும்’ என்றாள்.
இவ்வார்த்தை சுவர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பிரசங்கியார் பேரின்பம் காதில் விழுந்து விட்டது.
அவர் நடந்துகொண்டேயிருந்தார். காப்பித் தண்ணீர் உள்ளே போய் கடும்பசியைக் கிளப்பியது.
‘பசி வந்திடப்பத்தும் பறந்து போம்’ என்பார்கள்.
ஏன் நாமும் அந்த யுக்தியைக் கையாளக்கூடாது?’ இவ்விதம் தம்மையே கேட்டுக் கொண்டார் பிரசங்கியார்.
‘கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்குத் திரிய வேண்டும்?
ஆம், அதுதான் சரி.
தலையில் தராசுடனும் – பழைய கடுதாசுடனும் அவ்வழியே வந்துகோண்டிருந்த நபரிடம்,
‘பேப்பர் கிலோ எவ்வளவு?’ என்றார்.
‘ஒரு ரூபாய்’ என்றார், பேப்பர் வியாபாரி.
தோல்பை துவண்டது.
மூன்று ரூபாயைக் கைநிறைய எண்ணிக்கொண்டு அந்த வரவேற்கப்படாத விருந்தாளி, முனியாண்டி விலாஸ் ஓட்டலை நோக்கி நடந்தார்.
குறிப்பு :
- ஓய்வூதியம் பெறாத 1950களில் உபாத்திமாரும், உபதேசிமாரும் பட்ட பாடுகளை இக்கதை படம் பிடித்துக் காட்டுகிறது.
- 1959, ‘வாலிபர் தோழன்’ இதழிலும், 1971 ஆகஸ்ட் “நூறு ஜீவனுள்ள கதைகள்” என்ற நூலிலும் பிரசுரமான கதை.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 51
