லங்கா தகனம்




(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயோ! என்னைக் கொல்ல வாறாங்க! என்னைக் காப்பாத்துங்கோ!”
தலைவிரிகோலமாய், அலறியபடியே அவள் ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
அவளுடைய முகத்தில் பீதி.
கொலை வெறியர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவள் அவலக் குரல் எழுப்பியபடியே ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
“அவளைப் பிடியடா! அடியடா! வெட்டடா! கொல்லடா!”
பொல்லுகள், தடிகள், கத்திகள், வாள்களைச் சுழற்றிக் கொண்டு, முப்பது நாப்பது கொலைப்பாதகர்கள் அட்டகாச மாய்க் கத்தியபடியே அவளைத் துரத்திக் கொண்டிருக் கின்றனர்.
அவர்களில் அநேகர் நாட்டுச் சாராயப் போதை தலைக்கேறி, தமிழர்களை அழித்தொழிக்கும் ஏகாக்கிர சிந்தையர்களாய் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
பேரினவாத அரசின் ஆசியுடன் அந்த நவீன நரகாசுரர் கள் இன சங்கரிப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இன சங்காரம் தொடங்கி, நாடெங்கும் வியாபித்து, ஆயிரமாயிரம் மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் எல்லோரும் கண்டகண்ட இடங்களில் சங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிங்களவர்களின் வீடுகளில் வாடகைக்கிருந்த தமிழர் களின் பொருள் பண்டங்களெல்லாம் வெளியே எடுத்துப் போடப்பட்டுத் தீயிட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தங்களுடைய சொந்த வீடுகளிலிருந்த தமிழரின் பொருள் பண்டம் எல்லாம் வீடுகளுடன் கொளுத்தி எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடைத் தெருக்களில், ஏற்கனவே அடையாளம் காணப் பட்ட தமிழர்களின் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடிக் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாடசாலைகளும் வணக்கஸ்தலங்களும எரித்துச் சேதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொலை,கொள்ளை, பாலியல்வல்லுறவு எல்லாம் முதலாளி த்துவப் பிற்போக்கு அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த இன சங்காரத்திற்கு மூன்று நாட்கள் தார்மீக அரசால் ‘விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.
“ஐயோ! என்னைக் காப்பாத்துங்கோ! என்னைக் கொல்ல வாறாங்க! என்னைக் காப்பாத்துங்கோ!”
கூக்குரலிட்டபடியே அவள் ஓடிக் கொண்டிருக்கின்றாள். சாலையின் இரு மருங்கிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிலர் அவளுக்காக அனுதாபப்படுகின்றனர். ஆனால் ஒருவர் தானும் அவளைக் காப்பாற்றுவதற்குத் துணியவில்லை.
‘ஐயோ பாவம்! இவளின்ரை கையாலை வரியக் கணக்காய் நாங்கள் காய்கறிகள் வாங்கிச் சாப்பிட்டம் இப்ப இவளைக் காப்பாத்த முடியவில்லையே?’
தயாவதி அவளுக்காகப் பச்சாதாபப்படுகின்றாள்.
‘இவளைக் காப்பாத்தினால் நாளைக்கு எங்கடை பாடு வில்லங்கமாகுமே?’
குணசீலிக்கு ஆதங்கம்.
‘முன்பொரு தடவை இனக்கலவரம் நடக்கேக்கை ஒரு தமிழ் குடும்பத்துக்கு அடைக்கலம் குடுத்ததுக்காக, பியசீலியாக்களின்ரை ஜன்னல் கண்ணாடியளை அடிச்சுடைச்ச தோடை, கொஞ்ச நாளாய் இரவிலை அவளின்ரை வீட்டுக்குக் கல்லெறிஞ்சு அந்த வீட்டுக்காறருக்குத் தொல்லை குடுத்தா ங்கள்! இப்ப நாங்கள் இந்த அபலைக்கு உதவினால் எங்கடை பாடும் அதே கதிதான்’.
மனம் புழுங்குகின்றாள் குணசீலி.
“என்னைக் காப்பாத்துங்கோ! ஐயோ என்னைக் காப்பா த்துங்கோ!
சாலையோரம் நின்றுகொண்டிருப்பவர்களை அவள் கெஞ்சுகின்றாள்.
“வேணும். நல்லாய் வேணும். இந்தப் பறைத் தமிழ் நாயளை கண்ட நிண்ட இடங்களிலை அடிச்சுக் கொல்ல வேணும். உயிரோடை எரிக்க வேணும்.”
விமலதாசா கறுவிக்கொண்டு கூறுகின்றான்.
“அடியடா! அவளைக் கொல்லடா!”
ரத்தக் காடேறிகள் ஆர்ப்பரித்துக் கொண்டு அவளை விரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இன சங்காரம் தொடங்கி இன்று மூன்றாவது நாள். வெறியாட்டம் தணிந்து, சற்று அமைதி போலத் தோன்றுகின்றது.
தனது குடும்பத்துக்கு வரக்கூடிய ஆபத்தையும் பொருட் படுத்தாது அவளுக்கு அடைக்கலம் கொடுத்து, ரத்த வெறிபிடித்த காடேறிப் பிசாசுகளின் நரவேட்டையிலிருந்து அவளை மறைத்து வைத்திருந்து பாதுகாத்தது பீற்றர் ஐயாவின் ஏழைக் குடும்பம். அவர்கள் வற்புறுத்தித் தடுத்தும், அவர்களுடைய சொல்லைக் கேட்காமல், தனது அன்புக் கணவனையும், பதின்நான்கு வயது செல்ல மகனையும் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வேட்கையில், அவர் களைத் தேடி அவள் புறப்பட்டு விட்டாள்.
தனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை. தன்ரை கணவனையும் அன்புச் செல்வத்தையும் தேடிப்பிடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவள் சென்று கொண்டிருக்கின்றாள்.
சந்தையடியில் பதுங்கியிருந்த ஒரு பிணந்தின்னிக் கும்பல் அவளைக் கண்டுவிட்டது.
“பிடியடா அவளை!’
ஒருவன் கத்துகின்றான்.
“அந்தத் தமிழ் நாயைக் கொல்லடா!”
மற்றொருவன் கர்ச்சிக்கின்றான்.
அவள் இதை எதிர்பார்க்கவில்லை.
திகைப்புற்றுத் தடுமாறி நிற்கின்றாள் அவள்.
அவளை நோக்கி அந்தக் கொலைக் கும்பல் பாய்ந்தோடி வருகின்றது.
கணப்பொழுதில் அவள் தன்னைக் சுதாரிச்சுக் கொள்கின்றாள்.
அவள் ஓடத் தொடங்கினாள்.
ரத்த வெறி பிடித்த அந்தப் பிணந்தின்னிக் கழுகு களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவள் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
பாலத்தடிக்கு அவள் வந்துவிட்டாள்.
இந்தப் பாலத்தில் வைத்துத்தான் முந்தநாள் பட்டப் பகலில், பாதுகாப்புப் படையினர் பார்த்துக் கொண்டிருக்க இனவெறியர்கள் ஒரு அப்பாவி மனிதனைத் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றார்கள். அவனது சடலத்தை இந்தக் கால்வாய்க்குள் வீசி எறிந்தார்கள்.
இந்த நரவேட்டைக்காரர்களால் கொலை செய்யப்பட்டவன அவளது கணவன்தான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? அவள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கின்றாள்.
கல்லெறி தூரத்தில் பன்சலை.
பன்சாலையில் தனக்குத் தஞ்சம் கிடைக்கும் என்று அவள் நம்புகின்றாள்.
அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் போதிக்கின்ற புத்தபகவானுடைய புனித இடமல்லவா பன்சலை?
பன்சலை நோக்கி அவள் விரைந்தோடிக் கொண்டிருக்கின்றாள்.
ஒரு ‘பஜ்றோ’ வாகனம் பன்சலை அண்டி வீதி ஓரத்தில் நிற்கின்றது.
‘பஜ்றோ’ வாகனத்திற்குள் பால்போன்ற தூய வெள்ளுடைப் பிரமுகர்; கசிப்பு மன்னன்.
பன்சலைக்கு அண்மையிலுள்ள மது விற்பனை நிலைய த்தின் உரிமையாளன் தான் அவன்.
வெள்ளை தூய்மையின் சின்னம். தனது இருண்ட இதயத்தின் வக்கிரத்தனங்களை மூடி மறைக்கும் வேசமாய் வெள்ளுடையையே அவனுடைய தலைவனும், அவனும், சகாக்களும் எப்பொழுதும் அணிந்து வருகின்றார்கள்.
உலகின் தீமைகள் அனைத்தும் உருவெடுத்து வந்த வன் தான் அவர்களுடைய அரசியல் மாபியாக் கும்பலின் தலைவன்.
தங்கள் தலைவனின் ஆணையின்படி கடந்த மூன்று தினங்களாய் இனசங்காரத்தை அவனும் சகாக்களும் தீவிர மாய் நடத்தி வருகின்றார்கள்.
பன்சலைக்கு முன்னால் நிற்கின்ற ‘பஜ்றோ’ வாகனத்திற்குள்ளிருந்து ஏழெட்டு பெரிய சிவப்பு, மஞ்சள் பிளாஸ்டிக் ‘கான்கள்’ மது விற்பனை நிலையத்திற்குள் எடுத்துச் செல்கின்றனர் சிலர். சிவப்புக் ‘கான்’களுக்குள் பெற்றோல், மஞ்சள் ‘கான்’களுக்குள் கசிப்பு.
அந்த மது விற்பனை நிலையத்திற்கு முன்னால் பழைய ‘ரயர்கள்’ கும்பல் கும்பலாய் குவித்து வைக்கப் பட்டிருக்கின்றன.
அவள் பன்சலையடிக்கு வந்து விட்டாள்.
ஒரு பால புத்த பிக்கு அவசர அவசரமாய் பன்சலைக்கு முன்னாலுள்ள ‘கேற்’றைத் திறந்து விட்டு பன்சலைக்குள் வரும்படி அவளை அழைக்கின்றது.
இதை பெரிய பிக்கு கண்டுவிட்டார்.
அவர் ஓடோடி வந்து, பால பிக்குவை ஒரு புறம் தள்ளிவிட்டு பன்சலைக் ‘கேற்’றை மூடுகின்றார்.
அவள் வேறு வழியின்றி சந்தியை நோக்கி ஓடுகின்றாள்.
அன்று பகல் பத்து மணியளவில், அந்த நாற்சந்தியின் நடுவில், ஒரு சிறுவன் மீது பெற்றோல் ஊற்றி, பெரிய ரயர் போட்டு, அவன் அலற அலற தீயிட்டு எரித்தார்கள் கொலை பாதகர்கள்.
இந்தக் கோரக் காட்சியை அப்பா பிக்கு பார்த்து விட்டது.
அந்தச் சிறுவன் எழுப்பிய மரண ஓலம் பால பிக்குவின் பிஞ்சு உள்ளத்தில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. இதனால் அந்த இளம் தளிர் திக்பிரமை பிடித்துச் சலித்துப் போயிருந்தது.
பெரிய பிக்கு பன்சலைக் கேற்றை முடிய சம்பவம் பால பிக்குவுக்கு மேலும் பேரிடியாய் விழுந்தது. பெரிய பிக்கு மீதும் பன்சலை வாழ்க்கை மீதும் வெறுப்பை ஏற்படுத்தியது. ‘இன்று இரவே நான் இந்த மஞ்சள் காவி உடையை கழற்றி எறிந்து விட்டு எனது கிராமத்துக்கே ஓடி விட வேண்டும்.’
மனவைராக்கியம் ஏற்பட்டது பால பிக்குவிற்கு.
சந்தியில் அரை குறையாக எரிந்து கிடக்கும் ஒரு சிறுவனின் சடலத்தப் பார்க்கின்றாள் அவள்.
‘ஐயோ பாவம் இந்தப் பாலன்! ‘
அவள் உள்ளம் அந்தப் பாலகனுக்காகப் பரிதவிக்கின்றது.
அரைகுறையாக எரிந்த நிலையில் கிடக்கின்ற அந்தச் சடலம் அவளுடைய அன்பு மகனுடையதுதான் என்பதை அவள் எப்படி அறிவாள்?
அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சந்தியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
ஓடி, ஓடி அவள் நன்றாகக் களைத்துவிட்டாள். கால்கள் தள்ளாடுகின்றன.
மரண தேவதை அவளை விரட்டிக் கொண்டிருக்கின்றது. மூச்சைப் பிடித்தபடியே அவள் ஓடுகின்றாள். சந்தியிலிருந்து சற்றுத் தூரத்தில், தெற்குப் புறமாக ஒரு சிறிய சந்து.
பிரதான வீதியிலிருந்து அவள் திடீரென வெட்டித் திரும்பி, சந்திற்குள் பாய்ந்தோடுகின்றாள்.
ஒரு கொலை வெறியன் அவளைக் கண்டுவிட்டான். “அடோ! அவள் சந்துக்குள் ஓடுகிறாளடா!” அவன் கத்துகின்றான்.
யமகிங்கரர்கள் சந்துக்குள் அவளைத் துரத்திச் செல்கின்றனர்.
சந்தின் தொங்கலில் விஷகடி வைத்தியர் ஜெயவீராவின வீடு.
‘கேற்’றடியில் ஒரு குள்ளமான மனிதர்.
வெள்ளை ‘சறம்’. அரைக் கை வெள்ளை நாசனல். கொம்பு மீசை. கொட்டைப் பாக்களவு குடுமி.
“ஐயோ! மாத்தயா! என்னைக் காப்பாத்துங்கோ!”
தன் இரு கைகளையும் முன் நீட்டியவாறே, அலறிய படியே அவரை நோக்கி ஓடி வருகின்றாள்.
அவர் கேற்றைத் திறக்கின்றார்.
“உள்ளை போ!”
உரத்துக் கத்துகின்றார்.
அவள் உள்ளே செல்கின்றாள்.
அவர் ‘கேற்’றை மூடிவிட்டு சிலையாய் நிற்கின்றார்.
கொலைக் கும்பல் கேற்றடிக்கு வந்துவிட்டது.
கேற் மூடிக் கிடக்கின்றது.
நந்தியாய் நிற்கின்றார் ஜெயவீர.
“வெதமாத்தயா கேற்றைத் திறவுங்கோ!”
ஆவேசமாய்க் கத்துகின்றார்கள் நரகாசுரர்கள்.
“எதற்கு?”
நிதானமாகக் கேட்கின்றார்.
அவரில் எதுவித சலனமுமில்லை.
“அந்தத் தமிழ் நாயைக் கொல்ல வேணும்.”
அவர்கள் கொக்கரிக்கின்றனர்.
“எதற்காக?”
“அவள் பறைத் தமிழ் நாய். அவளைத் துண்டு துண்டாய் வெட்டிக் கொல்ல வேணும்.”
அட்டகாசமாய் அவர்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
“கேற் திறக்கேலாது.”
நிதானமாக, உறுதியுடன் கூறுகின்றார்.
“கேற்றைத் திறவுங்கோ. இல்லாட்டி நாங்கள் உடைப்பம்.”
“சரி. எங்கை உடையுங்கோ பாப்பம்.”
அவர் சவால் விடுகின்றார்.
“வெதமாத்தயா! கேற்றைத் திறவுங்கோ! திறவுங்கோ!”
மூர்க்கத்தனமாய்க் கத்துகின்றனர்.
“உதுதானோடா சிங்களவன்ரை வீரம்?”
வெதமாத்தயா ஆவேசமாய்ச் சாடுகின்றார்.
கொதித்துக் கொண்டு நின்ற அந்த கொலைகாறா ஜெயவீராவை வியப்பாய்ப் பார்க்கின்றனர்.
“கேவலம், வெறுங்கையோடை, தன்னந்தனியனாய் நிக்கிற ஒரு பெண்பிளையை ஐம்பது ஆம்பிளையள் ஆயுதங்களோடை கொல்லத் துரத்திறதுதான் சிங்களவன்ரை வீர மோடா?”
ஜெயவீர வெதமாத்தயாவின் ஆக்ரோஷ வார்த்தைகள் சாட்டையடியாய் அந்த இனவெறிக் கொலைகாறர்களைச் சாடி, முட்டி மோதுகின்றன
இனவெறிக் கொலைகாறர்கள் திகைத்துத் திணறி நிற்கின்றனர்.
வெதமாத்தயாவின் உக்ரோஷ வர்த்ததைகள் அவர்களை அவமானத்தால் கூனிக் குறுகச் செய்துவிட்டன.
அந்தக் குறுகிய மனிதரது உருவம் மேலே, மேலே வளர்ந்து உயர்ந்தோங்கி, அவர்கள் மீது அமர்ந்து, அவர் களது அற்ப ஆத்மாவை அமுக்கி நசுக்கி, மூச்சுத் திணறச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு.
வெதமாத்தயா அவர்கள் முன் விஸ்வரூபமாய் நிற்கின்றார்.
அவரது விழிகளில் தீ ஜூவாலை பிரவகித்துக் கொண்டிருக்கின்றது.
அதன் வஜ்ர பயங்கரப் பார்வையின் முன் அவர்கள் திக்கித் திணறிப் போய் செய்வதறியாது நிற்கின்றனர்.
சிறுமைப்படுத்தப்பட்டு, அவமானத்தால் தலை குனிந்த வர்களாய், மெதுவாக அவர்கள் அவ்விடத்திலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
“உந்த வெதமாத்தயா சிங்களவனுக்குப் பிறக்கேல்லையடா. தமிழனுக்குத்தான் பிறந்திருக்க வேணும்.”
தலைகுனிவோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பவர்களில் ஒருவன் வெறுப்புடன் வெப்பியாரமாய்க் கூறுகின்றான்.
– 1984
– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.
நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |