றாஸாபுரம் தபால் நிலையம் – ஒரு பார்சல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 27 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

சரியான கேள்வியைக் கூட கேட்கும் தொனியில் கேட்க வேண்டும். இல்லை எனில் அது உள்ளிருக்கும் மிருகத்தை எழுப்பும்.  

ஆறு பேர் நிற்கும் வரிசைக்கு முக்கால் மணி நேரம் எடுத்துக் கொள்ளும் அந்தப் பெண்மணியை தனியார் மையத்தில் வேலைக்கு விட வேண்டுமென தோன்றியது. இது வழக்கம் போல நம் இயல்பென்று நினைத்தேன். பிறகு அதைத் தொட்டு அதன் சோம்பேறித்தனத்திற்கு சம்பளம் தரும் மன்னர் அலுவலகத்தைத் திட்ட தோன்றியது. இங்கு யோசித்திருக்க வேண்டும். யோசனையைக் கருத்து மழுங்கடித்து விட்டது.

நிற்க நிற்க நகர வேண்டும் வரிசை. இல்லையென்றால் அது நீரில்லாத வாய்க்கால் வெடிப்பு.

கொரியர் காரர்கள் தான் கோப்ரேட் இல்லை என்று இங்கே வந்தால்… இதுங்க அதுக்கு மேல. கருத்து வேரூன்றத் தொடங்கி விட்டிருக்கிறது. அப்படி இப்படி என்று வரிசை நகர்ந்து என்முறைக்கு வந்து விட.. பார்சலை நீட்டினேன். அதை வாங்கி எடை போடும் போதே டம்மென்று போட்டது சுள்ளென்று இருந்தது. உள்ள என்ன என்ற கேள்விகூட அவரின் மாமியாரிடம் பேசும் பாவனையில் இருந்தது. உள்ள புக்ஸ் என்றேன். என்னை ஒரு பார்வை. கையில் தூக்கி கனம் பார்த்த பார்சலை ஒரு பார்வை. முகவரி பார்த்துக் கொண்டே வந்த அந்த மன்னர் ஊழியர் ஃப்ரம் அட்ரஸ்-ல் வீட்டு நம்பர் போடவில்லை என்று என்னிடமே சொல்லி இருக்கலாம்.   

இனி நடந்தவைகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

“ஐயோ சார் வீட்டு நம்பர் போடல…” னு கிட்டத்தட்ட புகார். எங்கிருந்தோ ஒரு ஆனந்த் பாந்தவன் ஓடி வந்தாரு.. பார்சலை வாங்கி டக்குனு முன்னால போட்டு… “டேய் மயிறு மூடிட்டு வீட்டு நம்பர் எழுது…” அப்படிங்கற தோரணைல.. கேட்டார்.

ஒரு கணம் அந்த மன்னர் அலுவலகத்தில் அலுவலக பாய் போல என்னை நானே எண்ணினேன். யுத்த மகாராஜா உள்ளிருந்து எட்டிக் குதித்து வரிசையில் நின்றார். பிறகு ஆரம்பமானது போர். யுத்தம் யுத்தம் யுத்தம். எதிரிகள் மட்டுமல்ல… எலிஜிபிள் இடியட்களும் ஆயுதத்தை எடுத்து நீட்டுவார்கள்.

முடியாது… நம்பர் எழுத முடியாது – தீர்க்கமாக கத்தினேன்.

தப்பு சார் தப்பு தப்பு தப்பு என்றே அந்த ஆனந்த் பாந்தவன் கத்திக் கொண்டிருந்தார். அதற்குள் அடுத்தடுத்த நாற்காலி மீசைகள் எகிறிக் கொண்டு வர… ஹலோ நில்லுங்க.. ஒவ்வொருத்தரா பேசுங்க. மொத்தமா கத்தினா நான் யார்கிட்ட பேசறது என்று மீண்டும் கத்தினேன். உடல்மொழி மாறிவிட்டிருந்தது. கோப நடுக்கம் கூடி விட்டிருந்தது.

“முந்தா நேத்து வந்த கவரை இன்னைக்கு வந்து குடுக்கறீங்களே. அதெல்லாம் எதுல சேர்த்தி…”

முதல் பாலை சாமிக்கு குடுத்துட்டு அடுத்த பாலை தொடு பூமிக்கு தர்ற மாதிரி…  தயாராகி விட்டேன். மனித வெடிகுண்டு போல இது மனசு வெடிகுண்டு. எந்த பக்கம் பேசினாலும் வெடிக்கும்.

“அப்டியெல்லாம் இருக்காதே… “

மயிரே இல்லாத மன்னர் அலுவலக மண்டை கனம்  மறுதலிப்பதில் கூட மஜாவாகவே இருந்தது.

“அதெல்லாம் இருக்கு.. உங்க சீல் ஒரு டேட்டும்… உங்க ஆளுங்க கொண்டு வந்து சேக்கறது இன்னொரு டேட்டுமா எத்தனையோ முறை இருந்துருக்கே”

வெடி நிற்கவில்லை.

“அது அது…. அது எனக்கு தெரியாது…”

கொஞ்சம் உள்வாங்கிய மொழியில் சகிக்கவில்லை சரித்திர நாயகனைப் பார்க்க.

“இந்த விஷயத்துக்கு சண்டைக்கு வர மேனேஜர் அந்த விஷயத்துக்கு பொறுப்பு ஆகணும்ல சாரே…”

கிண்டல் என் மொழியில் கூவியது.

“ஒரு நம்பர் எழுத சொன்னதுக்கு என்னெல்லாம் பேசறீங்க… தப்பு தப்பு தப்பு சார்…”

“தப்புனு சொல்லாதீங்க. எனக்கு வீட்டு நம்பரே  கிடையாது… இப்ப என்ன பண்ணுவீங்க…”

“அப்ப அனுப்ப முடியாது…”

“அப்ப லெட்டர்ல எழுதி தாங்க..”

அதற்குள் ஒரு மத்தியஸ்தர் உள்ளே வந்து சமாதானப்படுத்த.. சரி குடு என்று வாங்கி நம்பரை எழுதிக் கொடுத்தேன். ஆனாலும் தூண்டப்பட்ட ஈகோ சும்மா விடவில்லை.

நம்பர் எழுதினா மட்டும் சரியா வந்து குடுத்தறீங்களா… எப்படியும் வீதி முக்குல நின்னு போன்தான பண்ண போறீங்க…

அதெல்லாம் எனக்கு தெரியாது… என்று கொடூர முகத்தில் கொந்தளித்தார்.

அப்ப இதுக்கு மட்டும் ஏன் உள்ள வரீங்க.. நான் அவுங்ககூட தான பேசிட்டுருக்கேன்” என்றேன்.

சக மீசைகள் ஹேய்.. என்று ஒருசேர கத்தியபடியே அவர் மேனேஜர் என்று கூச்சலிட்டது.

உங்களுக்கு தான் மேனேஜர்.. எங்களுக்கு இல்லை…

ஒரு நம்பரை எழுத எவ்ளோ பேசற-  அதே கொடூர குரல்.

நீங்க மட்டும் ஒரு வாடிக்கையாளர்கிட்ட பேசற மாதிரியா பேசறீங்க…-  உச்ச கோபத்தில் சொற் தடுமாற்றம் வந்து விட்டது.

அதற்கும் அதே கத்தல்… வாடிக்கையாளர் இல்ல…

சரி சேவை செய்யறீங்கனே வச்சுக்கோங்க. அதை மரியாதையோடு செய்யலாம்ல” – நானும் கத்தினேன். பதிலுக்கு பதில்.. கேள்விக்கு கேள்வி. ஈகோவுக்கு ஈகோ.

வரிசையில் நின்று கொண்டிருக்கையில்… பின் இருக்கையில் சமோசா தின்றபடி சிரித்து சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஒரு பெண் ஊழியரின் ஞாபகம் வந்தது. அவனவன் வரிசையில் மணிக்கணக்கா நிக்கறான்…  எவ்ளோ ஜாலியா அரட்டை என்ற ஒப்பீட்டு கோபம் அப்போதே தொடங்கி இருக்க வேண்டும்.  

“தப்பு தப்புனு சொல்லாதீங்க. என்னவோ கொலை குத்தம் பண்ணின மாதிரி. ஃப்ரம் அட்ரஸ்ல வீட்டு நம்பர் எழுதல. அவ்ளோதான. இந்த மாதிரி எத்தனையோ முறை அனுப்பி இருக்கேன். அப்பெல்லாம் ஒண்ணுமே சொல்லலயே. இப்ப என்ன திடீர்னு பெர்பெக்சன் பிச்சுக்கிட்டு வந்துருச்சு. பேரும் வீதியும் இருக்குல்ல. போதும். வந்துரும்…”- முடிவு கட்டி நிற்கும் என்னைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது.

“நாம என்ன பெரிய மினிஸ்டரா சார்.. அப்பிடி வற்ரதுக்கு…”  -மீண்டும் நக்கல் அந்தப்பக்கம்.

“பெரிய மினிஸ்டர்க்கு மட்டும் தான் அப்பிடி வரணுமா சார்… நாங்கெல்லாம் பெரிய ஆளா ஆக கூடாதா…” – டிபென்ஸ் இந்தப் பக்கம்.

பொறுப்புள்ள ஓர் அதிகாரி பேண்ட்டை சுருட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றத நினைச்சு பரிதாபம் வந்தாலும்… இந்தாளுக்கு வேலை இல்ல போல. அதான் பொழுது போக மல்லுக்கு நிக்கறான் என்று வந்த யோசனையை சுருட்டி பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன்.

பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் திக்கு முக்காடியது. எவனாவது வீடியோ எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் வரவும் வாய்ப்பிருக்கிறது. உள்ளே எனக்கு பட்டது. தவறு நம் மீது தான். அந்த மேனேஜரின் அணுகுமுறை கோபப்படுத்தி இருக்கிறது, ஆனால் அதைக் கொண்டு இந்த வாதத்தில் வெற்றி கொள்ள இயலாது.

பார்சலை வாங்கி வேகமாய் அவர்கள் போட்டது கோபத்தை தூண்டி இருக்கிறது. யோசிக்க யோசிக்க கோபம் அதிகம் ஆனது. 

வீட்டு எண்ணை எழுதிக் கொடுத்தும் ஈகோ விடவில்லை. அது போலியான நம்பர். சும்மாதான் எழுதிருக்கேன். இப்ப என்ன பண்ணுவீங்க என்றேன். 

கிறுக்கனை பார்ப்பது போல பார்த்தார்கள். ஒரு நல்ல சக நாற்காலி இடையில் வந்து இரண்டு பக்கத்தையும் அமைதி படுத்தி விடுங்க விடுங்க என்று சொல்ல… என் பார்வை இப்போது கொடுக்குகள் பக்கம் திரும்பியது. மன்னருக்கு ஒன்றென்றால் கூடி விடும் ஜெய் ஜக்கா கூட்டம் போலவே தோன்ற… அந்த ஊழியர் இன்னமும் சமோசாவை சாஸில் தொட்டு வாய்க்குள் விட்டபடியே இருந்தார். மனதுக்குள் துப்புவதாக நினைத்து சத்தம் வராமல் துப்பி விட்டு நகர்ந்தேன். ஆனால் அடுத்த கணமே வருத்தப்பட்டேன். ஏன் இப்படி செய்தேன். என்ன நடக்கிறது. ஒரு சின்ன விஷயம். அதற்கு ஏன் இத்தனை சண்டை.

அந்த மேனேஜர் என் ஈகோவை தொட்டு விட்டார். மரியாதை இல்லாமல் அணுகி விட்டார். எண் எழுதாமல் விட்டது என் தவறு தான். அதைக் கொலை குற்றத்துக்கு சமமாக பாவித்து தப்பு தப்பு என்று நெஞ்சு நெஞ்சாய் அடித்து என்னுள் இருந்த மிருகத்தை படாரென வெளியே கொண்டு வந்து விட்டார். சரி இப்போது என்ன செய்வது. அறத்தோடு இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்பும் நான் ஏன் முறை தவறினேன். மரியாதை. அது கிடைக்காததால் மிருகம் வெளியேறி அத்துமீறல் நடந்து விட்டிருக்கிறது. பொறுமையைக் கையாளும் நான் எப்படி இந்த முரண்பாட்டில் சிக்கினேன். அவர்களின் லெதாஜிக்… என் அணுகுமுறையில் ஆயுதத்தை தூக்க செய்திருக்கிறது.

முரண்டு பிடித்த… திமிர் பிடித்த ஒருவனைத் தானே அங்கு எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதே நேரம் அந்த மேனேஜரிடம் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கேட்டேன் தானே.

எவ்ளோ நேரம் சார் வரிசையில நிக்கறது. ஆறு பேருக்கு முக்கா மணிநேரம் நேரம் எடுத்துக்கிட்டா எங்களுக்கு வேற வேலை இல்லையா.

எல்லாரும் பொறுமையா நிக்கறாங்கள்ல.. உங்களுக்கென்ன…

அவுங்க பொறுமையா நிக்கல. கேக்க முடியாம நிக்கறாங்க. பயம். மன்னர் அலுவலகத்தில் எதும் பேசி வீண் பிரச்சனைய… இந்தா நான் வாரி கட்டிக்கிட்ட மாதிரி கட்டுக்குவோமோனு பயம். அதான்… மண்ணு மாதிரி நிக்காறங்க என்றேன். அய்யயோ அந்தாளு கூட பேசற கோபத்துல இவுங்களையும் போட்டு தாக்கிட்டேன். ஆனா அதுக்கும் எவனும் எந்த எதிர்வினையும் காட்டல. ஃபோனை நோண்டிட்டு குமிஞ்சே நின்னானுங்க… அலைபேசி அடிமைங்க. 

மற்றவங்க மாதிரி ஏன் நாம இல்ல என்ற கேள்வி இரவெல்லாம் என்னை இம்சித்தது. வாங்கி அந்த வீட்டு நம்பரை எழுதி குடுத்துருந்தா சீன் ஓவர். அதுக்கு என்னென்னவோ பேசி… அப்ப வீடு இல்லாதவன் லெட்டர் போட முடியாதா என்று கேட்டேனே. அதுக்கு அந்த மேனேஜர் என்ன சொன்னார் என்று நினைவில் இல்லை. கோபம் கூடி விட்டால் ரத்தம் ஓடி ஓடி குதியாட்டம் போடுகிறது. நடுக்கம் வந்து விடுகிறது. வியர்வை கொப்பளித்து விடுகிறது. எதுவும் மனதில் பதிவதில்லை. படபடவென பொரிந்து விடுகிறது. வார்த்தைகளை விட்டு விடுகிறோம். நிதானத்தை இழக்கச் செய்த கோபத்தின் மீது கோபம் வந்தது.

அனுப்ப முடியாதுனு சொன்னதுக்கு… அப்போ ப்ளாக்ல எழுதி குடுங்க என்றேனே. 

சட்டம் எல்லாம் சரியாகத்தான் பேசியிருக்கிறேன். ஆனால் முதல் முழு தவறே என்னுடையது. அங்கேயே இந்த கேஸ் நிற்காது இல்லையா. சரி அதற்கு… அந்த அலுவலக பாய் அணுகுமுறையை ஆமோதித்து அமைதியாக வந்து விட வேண்டுமா. அப்புறம் என்னமோ சொல்லுச்சே அந்த ஒத்தை விரல் டைப்பி. என்ன இது இப்பிடி ஒரு பேரு. ஏன் ரித்திக் ரேஷன்னு தான் பேர் இருக்கணுமா. என் பேருக்கு என்ன. அதுதான் என் பேர் என்று அழுத்தி சொல்ல அதை டைப்பிக்கவும் அந்த வியாக்கியான வினோதினிக்கு தெரியவில்லை. என்னை விட்டிருந்தால் கூட படபடவென டைப்பி கொடுத்திருப்பேன். ஒரு விரல்ல குத்தி குத்தி எப்போ முடிக்கறது.. வேலையும் தெரியறது இல்ல… சோம்பேறி வேற, விளங்குமா மன்னர் அலுவலகம்.

இதற்கிடையில் ‘பயனாளர்’ சொல் கடைசி வரை நினைவுக்கு வரவேயில்லை. கோபத்தில் கொலை செய்வதெல்லாம் இப்படித்தான் போல. அறிவை மங்கச் செய்து விடுகிறது.

அப்பிடி இப்படி என்று நம்பர் எழுதி பதிவு செய்து… 72 ரூபாய் என்றபோது மீண்டும் சிக்கல். எப்போதும் சில்லறை சரியாக கொண்டிருப்பவன் இன்று நூறு ரூபாய் தாளோடு நின்றேன். இத்தனை பேச்சு பேசி விட்டு சில்லறை இல்லை என்று எப்படி சொல்ல. இந்தச் சூழலை எப்படி சமாளிக்க. மனதுக்குள் ஓட்டம். பின்னிருந்த வரிசை விநோதமாக என்னை எட்டி எட்டி பார்க்கிறது. சிவப்பு தொப்பிக்கும்… க்ரே தாடிக்கும்… பேசும் பேச்சுக்கும்… ஆள் ஒரு மாதிரி என்ற முணுமுணுப்புக்கு வாய்ப்பிருக்கிறது. 72 போக 28 ஐ கவுண்ட்டர் ஸ்லேப் மீது வீசாத குறையாக வைத்தது… வேகத்துக்கு சரியான எதிர்ப்பத வெண்கல வீரமங்கை. மீண்டும் கோபம். 20 ரூபாயை எடுத்துக் கொண்டு மிச்ச சில்லறையை அப்படியே விட்டு விட்டு நகர்ந்து விட்டேன்.

காசு காசு என்று வந்த குரல்களுக்கு ஒரு லுக்கு. வெளியே வந்த பிறகு அதற்கும் யோசனை. ஏன் அப்படி செய்தோம். காசை வீசுவது போல போட்டது தான் அதற்கு காரணம். அப்படி என்றால் 20 ரூபாயையும் சேர்த்துதானே விட்டிருக்க வேண்டும். குழப்ப கொந்தளிப்பிலும் ஒரு தெளிவு. 

இனி இந்த மாதிரி தவறுகள் செய்து விடவே கூடாது. சுய நினைவோடு எதை ஒன்றையும் அணுகும்போது… இந்த மாதிரி எல்லை மீறல்கள் நம்மில் நடக்காது. நாகூர் ரூமி சொல்வது போல “அந்தச் சம்பவம் நடக்கும் போதே அதைக் கவனித்து விட வேண்டும். முடிந்த பிறகு நினைத்துப் பார்த்து கவனத்தில் கொண்டு வரக்கூடாது. அதற்கு பெயர் தான் கான்ஷியஸ்… நுட்பத்தோடு எப்போதும் இருப்பது…” இதுவரை இந்த மாதிரி கிறுக்குத்தனங்கள் எல்லாமே வேறு ஏதோ சிந்தனையில் இருக்கையில் தான் நிகழ்ந்திருக்கிறது.

இரண்டே நாளில்… மீண்டும் நூல் அனுப்ப வேண்டிய தேவை. அதே தபால் அலுவலகம். மண்டையில் கனம் இருந்தால்தான் உடலில் பயம் இருக்கும். நமக்கு இதய சுத்தம் இருக்கிறது. வரிசையில் நின்று விட்டேன். இன்றும்கூட அந்த ஊழி பெண்மணி எதையோ தின்று கொண்டுதானிருந்தாள். அவுங்களுக்கும் பசிக்கும்ல என்று திரும்பிக் கொண்டேன்.

என் முறைக்கு வர அதே முக்கால் மணி நேரம். எனக்கு முன் இந்த முறை மூன்றே பேர் தான்.

அட அவர் ஒரு விரலில் குத்தி குத்தி வந்து சேர நேரம் ஆகும்தான… அந்த விநோத வியாக்கியானதுக்கு. என் பொறுமையைச் சோதிக்க கடவுள் திட்டமிட்டிருக்கலாம். அதற்கு இதை விட வேறு இடம் ஏது. சுற்றிலும் கவனம் கொண்டேன். சிவப்பு தொப்பி காட்டி கொடுத்திருக்க வேண்டும். சக நாற்காலிகள் ஒரு மாதிரி பார்த்தார்கள். நானும் அவர்களை ஒரு மாதிரியே பார்த்தேன். அய்யயோ… இல்ல இல்ல நான் நல்ல மாதிரியாகத்தான் பார்த்தேன். விட்டால் புன்னகைகூட செய்வேன். நான் அப்படி எல்லாம் சண்டை போடற ஆள் கிடையாது… என்று வெளிக்காட்ட முகத்தை இன்னும் வெள்ளந்தியாக்கி கொண்டேன். பாக்யராஜ் பாவனை. உடல்மொழியில்கூட மாற்றம். நிமிர்ந்த நடையைக் கொஞ்சம் குறுக்கிக் கொண்டேன். எதுக்கு வம்பு. மன்னர் அலுவகத்தில்… மாடுகள் போல நின்று விட்டு வந்து விட வேண்டும். மேனேஜர் என்ற சக்கரவர்த்திக்கு முன் நாமெல்லாம் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஜெர்மனி படைக்கு முன் ரொட்டிக்கு நிற்கும் வரிசையைப் போல.. நிற்பது ஆஹா என்ன சுகம். 

என் முறை வந்து விட்டது. நீட்டினேன். பார்சலை அதே போல வேகமாய் வாங்கிய வெள்ளாட்டு வால்… அதே வேகத்தில் அளவு இயந்திரத்தில் போட்டது. இதயத்தில் சுளீரென பட்டாலும்… சரி இப்ப என்ன… பார்சலைதான் அப்படி வீச முடியும். உள்ளே இருக்கும் நூல்களை ஒன்றும் செய்ய முடியாது… தேற்றிக் கொண்டேன்.

எடை அளப்பு முடிந்து… கணிப்பொறியில் ஏற்றுவதற்கு முகவரியைப் பார்த்தது.

டூ ஃபிரம் என்று வேக வேகமாய் மாறி மாறி பார்த்தது சோம்பேறி சுவர்க்கம்.

குனிந்து கொண்டே வேகமாய் எழுந்து சென்றது. அடுத்த நொடிகளில் பறந்தோடி வந்தார் ஆனந்த் பாந்தவன். பக்கத்து ஆண் நாற்காலியைப் பார்த்து உங்களுக்குனா இப்பிடி ஓடோடி வருவாரா என்று முனங்கினேன். என்ன… என்ன..கேக்கல என்பது போல பார்க்க… ஒன்னுமில்ல உண்மையை சொன்னேன் என்று மீண்டும் முனங்கியபடியே திரும்பி என் எதிரே மூச்சிரைக்க நின்ற ஆனந்த் பாந்தவனை பார்த்தேன்.

“பிரச்சனைக்குனே வர்றீங்களா…!” என்றார்.

“ஐயோ சாமி… அப்படி எல்லாம் இல்லைங்க…” கொஞ்சம் குனிந்த மாதிரி நின்று கொண்டேன்.

 
போன முறை நடுநிலைக்கு நின்றவர் வேகமாய் இடையே வந்து நேருக்கு நேர் எதிர் கொண்டிருக்கும்… எங்கள் கண்களை களைத்து விட்டார். அதே நேரம் அவர் கண்கள் முகவரியில் படர்ந்தது. 

வாய்விட்டே படித்தார். அதுவும் கீழிருந்து படித்தார்.

அலைபேசி இல்லை /வீட்டு எண் பழுதில் இருக்கிறது

உலகம்
இந்தியா
தமிழ்நாடு

கோயம்புத்தூர்- வடமேற்கு 641095
காட்டேரி நகர்  

யுத்தசாமி ஆசிரமம் பின்புறம் 
சிலுக்கு ஜிப்பாக்காரர் வீதி
13ம் நம்பர் வீடு
கரும்பாறை – எழுத்தாளர்

சத்தியம் பண்ணினேன். நிஜமா இது தாங்க முகவரி. 

பேயறைந்தது போல பார்த்தது றாஸாபுரம் தபால் நிலையம் மொத்தமும். எனக்குள் போரின் அமைதி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *