கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 764 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வீடா இது? ஒரு விநாடியாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா இங்கே? கர்மம்! கர்மம்! சகிக்க முடியாத தொல்லை யாக இருக்கிறது, வேலை செய்துவிட்டு அலுத்து வீடு வருகிறேன். நாடி நரம்பெல்லாம் குடைச்சல். நாலு விநாடி கண்ணை மூடிக் கொண்டு ஓய்வாக இருக்கலாம் என்றால், முடியவில்லையே இங்கு.”

“ஏன் இப்படி அனாவசியமாக அலட்டிக் கொள்கிறீர். உம்மை யார் உறங்க வேண்டாம் என்று சொன்னார்கள். அலுப்பாம் அலுப்பு – யாருக்குத்தான் இல்லை – இரண்டு நிமிஷம்கூட ஆகவில்லையே படுத்து, இதற்குள்ளாகவா தூங்கி விட்டிருக்கப் போகிறீர் என்று எண்ணிக் கொண்டு, உம்மிடம் பேசினேன் – அதுவும், எதற்கு? உம்மை உபத்திரவிக்கவா? காப்பி போடவா, டீ போடவான்னு கேட்கத்தான். இதற்கு இப்படி எரிஞ்சு விழறீர் என்மேலே.”

“சரியடி அம்மா! உங்க அப்பா மட்டுந்தானே வக்கீல்னு நான் எண்ணிண்டது தப்பு. போதும் நிறுத்திக் கொள் உன்னுடைய வாக்கு வாதத்தை”

”சரி, நீர் நிம்மதியாக நித்திரை செய்யும். காப்பியா, டீ யான்னு சொல்லிவிடும்-அது போதும். எனக்கு போட்டுக் கொடுடி, சுடுமூஞ்சி, ஏண்டி என்னை எழுப்பித் தொல்லை செய்யறேன்னு கேட்டதற்கு, இப்படி முகத்தைச் சுளிச்சிண்டா, நான் என்னத்தைச் செய்யறது.”

“வெறுமனே வீண் பேச்சு பேசிண்டிராதேயும்.”

“வீண் பேச்சும் சண்டையும் உன் வேலையடி, உன் வேலை. எங்க கோத்தரத்துக்கே கிடையாது, அந்தச் சுபாவம், தெரிந்துதோ!”

“கோத்திரத்துடைய பெருமையை, கோடியாத்து கோமளத் தோடே பாட்டி, கதை கதையாச் சொன்னா என்னிடம். நீங்க வேறே சொல்ல வேணாம். சும்மா இருங்கோ.”

“என்னடி உளறிண்டே போறே – என்னதான் எண்ணிண்டிருக்கே.”

”நாளை எண்ணிண்டிருக்கேன், ஈஸ்வரா! என்னை என்றைக்கு அழைச்சிண்டு போகப் போறயோ, அந்தநாள், வர இன்னும் எவ்வளவு நாள் இருக்கோண்ணு, நாள் எண்ணிண்டுதான் இருக்கறேன்.”

“கமலா! கமலா! என் கோபத்தைக் கிளறாதே! ஆமாம்! வேதனைப்படுத்தாதே – விபரீதமா வந்து முடியும், மனம் புண்பட்டு வந்திருக்கிறேன் – நீ அதிலே குத்திச் சித்திரவதை செய்யாதே – ஆத்திரத்தைக் கிளப்பாதே!”

”என் மனம், தாமரையா இருக்குன்னு உம்ம எண்ணமாக்கும்.”

”என்னடியம்மா, உன் மனதுக்குக் குறை? ஏண்டியம்மா, கமலாம்பிகா தேவி! என்ன குறை வந்து குடையறது இப்போ. போனமாதம், தாழம்பூச் சேலை குடைந்திண்டிருந்தது – அறுபது ரூபா அபிஷேகம் செய்த பிறகுதான் ஆவேசம் நின்றது – அதற்கு முன் மாதத்திலே.”

”ஆறாயிரத்திலே, வைரமாலை வாங்கித் தந்தீர் – ஆனைக்குட்டி இரண்டு வாங்கிக் கொடுத்தீர், எங்க அப்பா ஆத்துக்கு அனுப்பி வைத்தேன் – எவ்வளவு கொட்டிக் கொடுத்து அலுத்துப் போயிருக்கீர் – பாபம் – குறை இருக்கலாமா. மனதிலே. . .”

“ஆறாயிரத்திலே மாலைவேணுமா? அல்லாடி ஆத்து மாட்டுப் பெண்ணோடி நீ..”

“பேசும் – பேசும் – வேறே எங்கே பேசப் போறீர்-யார் கேட்டிண்டிருப்பா, உம்ம பிதற்றலை…”


இதற்குமேல், உரையாடல் இல்லை – கரம் விளையாட ஆரம்பித்தது – கண்ணீர் சிந்தவுமாயிற்று. கமலாம்பிகா தேவிக்கும் அவன் கணவன் கணபதி சுப்பிரமணியத்துக்கும, சச்சரவு, அது ‘அடிதடி’ அளவுக்கு முற்றியதற்கும், காரணம் அந்த நேரத்தில் அவர்களுக்குள் எழுந்த விவாதத்தினால் அல்ல இருவர் மனதிலும், முன்பிருந்து மூண்டு கொண்டிருந்த, கோபத்தால் அந்தக் கோபமும், இருவருக்குள் நடைபெற்ற சச்சரவுகளால் கூட அல்ல – கணபதி சுப்பிரமணியத்துக்கு ஆபீசில், மானேஜர், ‘காரசாரமான டோஸ்’ கொடுத்தார் கணக்குத் தவறாக இருந்ததற்காக. கமலாம்பிகைக்கும் கனகாவுக்கும் ஒரு தகறாரு. கண்ணன் கோயில் பிரகாரத்திலே. அதிலே விளைந்த வேதனை, கமலாம்பிகைக்குக் கோபத்தை மூட்டி விட்டது. கணபதியும் ஆபீஸ் கதையைக் கமலத்திடம் கூறவில்லை, கமலமும் கனகத்தின் வாய்த் துடுக்கைப் பற்றிக் கணவனிடம் கூறவில்லை. கணபதி ஆபீசிலிருந்து வந்ததும், கோபம் தாங்கதவராய், கட்டிலின் மீது படுத்து, கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, மானேஜர் மகாலிங்கம், அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருக்கிறார். கணபதியின் எதிரில் மனக்கண்ணில் தெரியும் டைரக்டர் ஆசனத்தில் அமர்ந்தபடி கனைக்கிறார்- “மகாலிங்கம் சார்! பேசாமல் வேலையை விட்டு விலகி விடுமய்யா. வரவர உமது மூளையே வேலை செய்வதில்லை ஏன் இப்படி, சகல காரியத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறீர். வயசானவராயிற்றே கொஞ்சம் மரியாதை காட்டவேணுமே என்று பார்க்கிறேன். முடியவில்லை. நிச்சயமாகச் சொல்கிறேன் இப்படி முட்டாள்தனமாக ஒரு மானேஜர் இருந்தால், கம்பெனி ‘திவால்’ ஆகவேண்டியதுதான்” என்று கணபதி சுப்பிரமணியம், மளமளவெனக் கண்டிக்கிறார் அந்தச் சமயம் வந்து கமலா கேட்கலாமா, “காப்பியா-டீயா எது தேவை?” என்று எப்படிப்பட்ட காட்சியைக் கலைத்து விட்டாள் என்று, கோபம் பிறந்தது அவருக்கு.


சற்று முன்புதான், சாரதா வந்திருந்தாள், அவளிடம். கனகாவின் துடுக்குத் தனத்தைக் கமலம் விளக்கி விளக்கிச் சொன்னாள் – அந்தச் சாரதா, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, கடைசியில், கனகாமீது தவறு இல்லை என்று தீர்ப்பளித்தாள் – அந்தக் கோபம் கமலாவுக்கு – கணவனை வந்து எழுப்பினாள் -காப்பி தரவேண்டும் பிறகு வழக்கையும் கூறவேண்டும் என்று எண்ணிக் கொண்டு – அது சச்சரவில் போய் முடிகிறது. கணபதி, மானேஜரின் கண்டனச் சொற்களைக் கூட மறக்கிறார்- கமலாவுக்கும் கனகத்தின் துடுக்குத்தனம். சாதாரணமாகத் தெரிகிறது இருவரும், குடும்ப வாழ்க்கையிலுள்ள தொல்லைகளைப் பற்றியே அதிகமாக எண்ணிக்கொண்டு, கவலைப்படுகிறார்கள்.

என் கர்மம் – என் விதி – என்று கூடத்திலே அவரும், சமயலறையிலே கமலமும் முணுமுணுக்கிறார்கள்.

மறுநாள் காலை, மானேஜர் ஆறுதல் கூறுகிறார் கணபதிக்கு, “குடும்பமென்றால் இப்படித்தானய்யா இருக்கும் பைத்யக்காராக இருக்கிறீரே” என்று – குளத்தங்கரையில் கனகாதான் கமலத்தின் கவலையைப் போக்குகிறாள், தன் கையில் உள்ள தழும்பைக் காட்டி, “எங்க ஆத்துக்காரர், குதிரைச் சவுக்காலே தந்த அடி இது” என்று கூறி.

குடும்பத்திலே, ஏற்படும் கொந்தளிப்பும் கோபமுமாகட்டும், சமூகத்திலேயும், நாடுகளுக்குள்ளாகவும் கிளம்பும் கோபம் கொதிப்பும்கூட, வெடித்துக்கொண்டு வெளிவரும்போது, தெரியும் காரணத்தினாலேயே மூண்டதாக இராது; ஆராய்ந்து பார்த்தால், உள்ளத்திலே, வேறு பல சமயங்களிலே, வேறு யாராரிடமோ, வேறு என்னென்ன காரணங்களினாலோ ஏற்பட்ட, கோபங்கள் ஒன்று சேர்ந்து, வெடிக்கும் பக்குவம் பெற்றிருந்திருக்கிறது என்பது தெரியும். வெடி மருந்துக் குழாயிலே, ஏற்கனவே வெடி மருந்தைப் போட்டுக் கெட்டித்து வைத்திருந்ததால்தான், தீப்பொறி பட்டதும், காது செவிடுபடும்படியான வெடி கிளம்ப முடிகிறது; வெறும் தீப்பொறியினால் ஏற்பட்டதல்ல அந்த நிகழ்ச்சி!

மக்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டே வாழ்கின்றனர் – பல்வேறு வழிகளிலே; நாடுகளும் அது போன்றே. அந்தத் தொடர்புகளின்போது, பல சமயங்களிலே ஏற்படும்,கோபம், குழாயிலே போடப்படும் வெடிமருந்துபோல, குவிந்தபடி இருக்கிறது – பிறகோர் சமயம், தீப்பொறி போன்ற ஓர் காரணம் கிடைக்கிறது கெட்டிக்கப்பட்டுள்ள மருந்து வெடிப்பதுபோல, மூண்டு கிடக்கும் வெடிமருந்தைப் போட்டுக் குழாயில் கெட்டித்து வைக்காமலிருந்தால், தீப்பொறி பட்டாலும், வெடி கிளம்பாதே, அது போலவேதான், உள்ளத்திலே, கோபம், மெள்ள மெள்ளவும், பல்வேறு காரணங்களாலும், சேர்ந்திரா விட்டால், தீப்பொறி போன்ற சிறு சம்பவம், குடும்பத்தில், கொந்தளிப்பை உண்டாக்காது.

வேலை செய்யுமிடத்திலே, கணபதி சுப்ரமணியத்துக்கு அவ்வப்போது ஏற்பட்டு வந்த வேதனைகள், அவருக்கு ஏற்பட்டு வந்த மனக்குறைகள் யாவும் குழாயில் போட்டு அடைக்கப்பட்ட வெடிமருந்து! கமலா, காப்பி சாப்பிட அழைத்தது, தீப்பொறியாக அமைந்து விட்டது!! கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலே எழும் சச்சரவு மட்டுமல்ல சமூகங்களுக் குள்ளும், நாட்டுக்கு நாடும் கிளம்பும் மாச்சரியங்களும் சச்சரவு களுக்குள்ளும், இதேவிதமாக அமைவதுதான்!!

தீப்பொறியும் படாமுன்பே, வெடிகிளம்பி, விபத்து நேரிடுவதுமுண்டு. சில சமயங்களிலே! குழாயிலே, அளவுக்கு மேல் வெடிமருந்தைக் கெட்டித்துவிட்டால், தீப்பொறி காட்டா முன்பேகூட, மோதுதலால், ஏதேனும் கடினமான பொருளின்மீது உராய்வதால்கூட, வெடிவிபத்து நேரிட்டு விடுகிறது. அது போலவேதான், உள்ளத்தின் தன்மையும்! காப்பி சாப்பிட அழைத்த கமலாவை அதே காரணத்துக்காக கோபித்துக் கொண்ட கணவன், அந்தக் காரணம்கூட இல்லாமலே கூடக் கோபித்துக் கொண்டிருந்திருப்பார். உள்ளத்தில், மூண்ட கோபத்தின் தன்மையும் அளவும் அதிகமானால்.


அலுப்போ, கவலையோ, அவருக்கு – அலுவலக சம்பந்தமாக ஏதேனும் யோசனை போலும், என்ன காரணமோ தெரியவில்லை, அவர் பேசாமல் கொள்ளாமல் இருக்கிறார். இந்தச் சமயத்திலே, நாம் அவரைத் தொல்லைப்படுத்தக் கூடாது, என்று எண்ணிக் கொண்டு, சாய்வு நாற்காலியிலே படுத்திருக்கும் கணவனை எழுப்பாமலே, கமலா, இருந்து விடுகிறாள், என்று வைத்துக் கொள்ளுங்கள்; கணவன், அவளுடைய புத்திக்காக மெச்சுவான் என்று எண்ணுகிறீர்களா! அப்படியும் சொல்லிவிட முடியாது! அதையே, வியாஜ்யமாகக் கொண்டு கூடச் சண்டை யிடக் கூடும்.

“ஏண்டியம்மா, கமலாம்பிகா!” என்று கடுகடுப்பாகக் கூப்பிடுகிறார் கணவன்.

காரணமின்றிக் கடுகடுப்பு, அனாவசியமாகக் கோபம், இப்படிப்பட்ட சுபாவக்காரராக இருக்கிறாரே கணவர், என்ற கவலையும் கோபமும் கமலாவுக்கு; அதேபோது, அடுப்பும் வேடிக்கை காட்டுகிறது. புகையைக் கிளப்பிக் கிளப்பி! எரிச்சலுடன், கமலா, ஒரு ‘ஏன்’ வீசிவிட்டு, அத்துடன் சேர்த்து, இருக்கிறேன் சாகவில்லை என்ற கணைகளையும் சேர்த்து அனுப்புகிறாள்! கணவனின் கோபம் கொழுந்து விட்டெரிகிறது; கமலா. எதிரே வந்து நிற்கிறாள்.

“கமலா! உனக்கு எண்டி இவ்வளவு மண்டைக் கர்வம்! மனுஷன் நாய் போல அலுத்து வீடு வந்திருக்கிறானே, வந்தவனுக்கு ஒரு முழுங்கு காப்பி தருவோம், என்று உன் மனதிலே ஒரு துளி அன்பு இருக்கிறதா! வந்தால் வரட்டும், நெஞ்சுலந்து செத்தால் சாகட்டும் என்று, எண்ணிக் கொண்டு இருக்கிறடி நீ!” என்று வெடிகுண்டுகளை வீசுகிறார் எதிர்பாரா விபத்துக்கு ஆளான அந்த ஏந்திழை. கேட்கச் சகிக்காத வார்த்தைகளை வீசியது கண்டு, காதுகளைப் பொத்திக்கொண்டு, கண் கலங்கியபடி, ராம, ராமா – என்றோ சிவ சிவா என்றோ முணுமணுக்கிறாள் – “ராமனைக் கூப்பிடுகிறாயா, ராமனை!” என்று ஒரு கூச்சலிட்டுக் கொண்டே, கமலாவின் கன்னத்தைப் பதம் பார்க்கிறார் கணபதி சுப்பிரமணியம்.

இவ்விதமும் நடைபெறுவதுண்டு! காப்பி சாப்பிட வாருங்கள் என்று அழைத்தாலும், கோபம் – காப்பி சாப்பிடக் கூப்பிடாமலிருந்தாலும், கோபம்! இது என்ன விசித்திரமான மனிதரய்யா இந்தக் கணபதி, என்று சம்பவத்தை மட்டும் கூறக் கேட்பவர், சொல்வர்! ஆனால், இந்தப் போக்கு, கற்பனை உருவான கணபதிக்கு மட்டுமா – நீங்களும் நானும் எவ்வளவோ தடவை, கணபதிகளாகி இருக்கிறோம், நமது கமலங்களிடம்!

– 14-1-1949, திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *