முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 32
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
10. காதல்ராணியின் ஆதிக்கம்!
கன்னல் மொழிப் பாவையான மாலினியின் சித்தப்பா நாற்பத்தி ஐந்து வயதைக் கடந்துவிட்ட போதிலும் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தகுந்த தோற்றத்துடனேயே காணப்பட்டார். மாலினியை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு எந்தவித சிந்தனையும் இல்லாத குபேரன் தன் மெய்காப்பாளனைப் போன்ற மூக்கனுடன் மாடிப்படிகள் வழியாக இறங்கி வந்தார்.
“பத்திரங்கள் எல்லாம் கிடைத்துவிட்டதா?” என்று தனக்கே உரித்தான கணமான குரலை அடக்கிக்கொண்டு மெதுவாகக் கேட்டான் மூக்கன்
“அந்தப் பத்திரத்தை நான் எங்கேயெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன். மாலினியின் குளியல் அறையினுள்கூட சோதனைப் போட்டுவிட்டேன். பத்திரங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மாலினி நேற்றிலிருந்து பதினெட்டு வயதைக் கடந்து விட்டாள். இனிமேல் அவள் நினைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டைவிட்டுத் துரத்தமுடியும். அந்தப் பத்திரங்களின் உரிமையை மாலினி மூலம் எழுதி வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பெருத்த ஏமாற்றமாகப் போய் விட்டது” என்றார் குபேரன் வருத்தமாக.
“பத்திரம் மாலினியிடமே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?”
“ஒருவேளை அந்தப் பத்திரங்களை அவள் எடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை அவள் எங்கே மறைத்து வைத்திருக்கிறாள் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? பத்திரத்தைப்பற்றிய பேச்சை எடுத்தாலேயே அவள் சீறி விழுவாள்.”
குபேரன் இப்படிச் சொல்லிக்கொண்டு நடந்தபோது “சித்தப்பா” என்று மாலினி அழைக்கும் அதிகாரக்குரல் கேட்டது. அது அவனுடைய நெஞ்சில் அடித்ததைப் போலிருந்தது
“மாலினியா? இதோ வந்துவிட்டேன்.” என்று சொன்ன குபேரன் நிமிர்ந்து நடந்து சென்றார்.
கூடத்தினுள் மாலினியும் குபேரனும் நின்றுகொண்டிருந்தார்கள். வாசலுக்கு வெளியே சைக்கிள் ஸ்டாண்டுப் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சைக்கிளின் உட்காரும் ஆசனத்துக்கு அடியில் உள்ள குழாயினுள்தான் பத்திரங்கள் சுருட்டி மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன என்ற ரகசியம் அவர்களுக்குத் தெரிந்தால் நிலைமை என்னாவது..?”
குபேரன் மாலினியின் பின்னால் நின்றுகொண்டு திருதிரு என்று விழிக்கும் ராஜாமணியைப் பார்த்து. “இவனுக்குச் சேரவேண்டிய பேப்பர் பில்களைக் கணக்குப் பார்த்துக் கொடுத்து விட்டோம் அல்லவா?” என்றார், ஏளனமாக.
“அவள் இப்போது பேப்பர் சம்பந்தமாக வரவில்லை. வீடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் நமது அவும் அவுஸை வாடகைக்கு விடலாமே என்று நினைத்துத் தான் கூட்டிக்கொண்டு வந்தேன்.”
மாலினி இப்படிச் சொன்னதும் குபேரன் ‘இடிஇடி’ என்று சிரித்தார். அவருடன் சேர்ந்த மூக்கனும் சிரித்தான்.
“சாப்பாட்டுக்கே வழியில்லாத ஒருவனை அழைத்து வந்து வீடு கொடுக்கச் சொல்கிறாயே; இந்த வீட்டில் குடியிருக்கும் தகுதி கொஞ்சம் கூட அவனுக்கு வேண்டாமா? ஒரு வக்கீல், ஒரு டாக்டர், இல்லாவிட்டால் ஒரு கவர்ன்மெண்ட் சர்வெண்ட் இப்படி இருந்தாலும் பரவரயில்லை. இவன் சாதாரண பேப்பர்பாய்! அதிலும் ரேஸ் புக் விற்கும் ஆள்.”
தன்னைக் கேவலமாகப் பேசியதும் ராஜாமணிக்குக் கோபம் வந்துவிட்டது. “பேப்பர் பாயும் மனிதன்தான் என்பதை மறந்து விட்டீர்கள். உங்களுக்குத் தேவையானது பணம்தானே…! அந்தப் பணத்தைக் கொண்டுவந்து விட்டேன்.” என்றான் சூடாக.
“நீ பணத்தைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் அந்தப் பணத்தை வாங்க வேண்டாமா? உனக்கு வீடு விடப்போவதில்லை.”
குபேரன் கனத்த குரலில் பேசியதும் மாலினி குறுக்கிட்டு, “சித்தப்பா, நான் அவருக்கு வீடு வாடகைக்கு விடுவதாக வாக்களித்திருக்கிறேன்.” என்று சொன்னாள். அவள் குரலில் கம்பீரம் தலை தூக்கியது.
“இந்த மாதிரியான நிர்வாக விஷயங்களில் நீ தலையிடாதே மாலினி, நீ சின்னக் குழந்தை. உனக்கு ஒன்றுமே தெரியாது.”
“நீங்கள் என்னை தவறாக எடைபோட்டு விட்டீர்கள். நான் பி.எஸ்.ஸி. படித்துக் சொண்டிருக்கிறேன் என்பதையும், முதிர்ந்த அறிவுள்ளவள் என்பதையும் அடியோடு மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. நான் இப்போது வயதுக்கு வந்தவள். மேலும் இது எனக்குச் சொந்தமான சொத்து. எல்லா உரிமைகளும் இருக்கிறது. நான் குழந்தை அல்ல. யூ நோ…?”
உரிமைப் பிரச்னையை மிகவும் கண்டிப்பான குரலில் மாலினி கிளப்பியதும் குபேரனும் மூக்கனும் அதிர்ந்து போனார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டார்களே தவில், எதுவும் பேசவில்லை . என்னதான் பேசுவார்கள்?
அவருக்குச் சரியான சூடுகொடுப்பதாக எண்ணி மாலினி “நீங்கள் என் சித்தப்பா என்பதால் உங்களுக்கு உயர்வான இடம் தருகிறேன். அதனால் உங்கள் கௌரவத்தை தானாகவே இழந்துவிடாமல் அவர் கொடுக்கப் போகும் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.” என்று சொன்னவள், “மிஸ்டர் ராஜா, அறுபது ரூபாய் கொடுங்கள். இரண்டுமாத அட்வான்ஸ்” என்று கூறினாள்.
ராஜாமணி பயந்தபடியே நோட்டுக்களை குபேரன் கையில் கொடுத்துவிட்டு, “நாணயமாக நடந்துகொள்வேன்.” என்று உறுதி கூறினான்.
அவனை பிறகு கவனித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய குபேரன், “நீ உன் பழைய வீட்டுக்காரரைக் கொலை செய்துவிட்டதைப் போல் என்னையும் செய்துவிட மாட்டாயே!” என்று குத்தலாகச் சொன்னார். அதில் எல்லாமே அடங்கியிருந்தன.
அதைக் கேட்டதும் ராஜாமணிக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் கண்ணபிரானைக் கொலை செய்தது போலவும், நீங்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கியது போலவும் போல் அல்லவா பேசுகிறீர்கள், தயவு செய்து இனிமேல் இவ்விஷயமெல்லாம் பேசாதீர்கள். அது தப்பு.”
மூக்கன் இதுதான் புஜபல புராக்ரமத்தைக் காட்டுவதற்கு தக்க தருணம் என்று நினைத்து “என்னா முதலாளி, இந்த பொடிப்பயல் உங்களைக் கொலை செய்துவிடுவான் என்றா பயப்படுகிறீர்கள்? நான் ஒருவன் உங்கள் பக்கத்தில் இல்லையா? அவன் உங்கள் அருகிலே நெருங்கினால் போதும் உடனே அவனுடைய குடலை அறுத்தெரிந்து விடுவேன்.” என்று தவ்வினான். மீசையை வேறு முறுக்கினான்.
“கசாப்புக்கடை நடத்திய அனுபவம் போல் இருக்கிறது இந்த ராஜாமணி வம்புச் சண்டைக்குப் போகமாட்டான். வந்த சண்டையை விடவும் மாட்டான். இது தெரியாவிட்டால் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். இது சமயத்தில் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையும்.”
அவன் முகத்தில் அறைந்ததைப் போல் பேசியதும் முக்கன் வாயை மூடிக்கொண்டான்.
அதே சமயத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த குமார் என்ற இளைஞன் “இங்கே என்ன கலாட்டா?” என்று கத்தினான்.
“வாருங்கள் குமார் மாப்பிளே: வாருங்கள்! இங்கே அநியாயம் நடக்கிறது என்று பார்த்தீர்களா? ஏற்கெனவே இவன் கொலை செய்திருக்கிறான். நேற்று முழுவதும் போலீஸ் காவலில் இருந்த இவனை உங்கள் வருங்கால மனைவி அழைத்துக்கொண்டு வந்து நம்முடைய அவுட் அவுஸையும் வாடகைக்கு விட்டிருக்கிறாள். மாஜிஸ்ரேட்டு கோர்ட்டுக்குச் சென்று ஜாமீன் கொடுத்து அழைத்து வந்தவளும் அவள்தான். குமார் மாப்பிளே, நீங்கள் மலைபோல் இருக்கும் போது இதைப் போன்ற அநியாயக் காரியங்கள் நடக்கலாமா? உங்கள் வருங்கால மனைவியைக் கண்டித்து நீங்கள் தான் புத்தி சொல்ல வேண்டும்” ஒப்பாரி வைத்தான்.
மூக்கன் அபயக்குரல் எழுப்பியதும் குமார் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ராஜாமணியைபும் மாலினியையும் மாறி மாறிப் பார்த்தான். கோபத்தின் காரணமாக அவன் குண்டான முகம் சிவந்து போயிருந்தது. கண்கள் உருண்டன.
“மாலினி, என்ன இதெல்லாம்?”
“என் மனச்சாட்சிக்கு விரோதமாக நான் எதுவும் செய்ய வில்லை இவர் தங்குவதற்கு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார். நம்முடைய அவுட் ஹவுஸ் காலியாக இருப்பதால் நானே அவரை அழைத்து வந்தேன். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது தவறா மிஸ்டர் குமார்? யூவார் எஜுக் கேட்டட் மேன்.”
“பார்த்தீர்களா குமார் சார்? கல்யாணம் செய்துகொள்ளப் போகும் உங்களைப் பார்த்து மிஸ்டர் குமார்? என்று சொல்லுகிறாள். மிஸ்டர் என்றால் அதன் அர்த்தம் தெரியுமா? நீங்கள் எந்தவிதமான சொந்த பந்தம் இல்லாத மூன்றாவது ஆள்” என்று அங்கலாய்த்துக் கொண்டான் மூக்கன்.
குமார் உதட்டைப் பிதுக்கியபடி மாலினியின் முகத்தைப் பார்த்தபடியே நின்றவாறு அவளிடம் இப்பொழுது மோதுவது சரியல்ல என்று நினைக்கிறானோ என்னமோ!
“மாலினி, நான் உன்னிடம் ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன். நீ இன்னும் கல்யாணமாகாத கன்னிப்பெண் என்பதை மட்டும் மறந்துவிடாதே”
மாலினி அவன் சொன்னதைக் கேட்டு தலையைத் தாழ்த்தி ஒரு பக்கமாக உயர்த்தி புருவங்களை மேல்நோக்கி சற்றுச் சிரித்து விட்டு, “நீங்கள் வாருங்கள் ராஜா. இவர்கள் இப்படி எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.” என்று கூறியபின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
யாருடைய முகத்திலுமே ஈயாடவில்லை. திக்பிரமை பிடித்தவர்களைப்போல் அவர்கள் ஜோடியாகப் போகும் திசையைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்கள்.
“குமார் மாப்பிளே! அவமானம் பிடுங்கித் தின்னுகிறது. நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருக்கிறது.” என்று பொறுமினார் குபேரன்.
“வருத்தப்படாதீர்கள் மாமா. இதைப்போன்ற நேரங்களில்தான் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றான் குமார்.
“நிதானத்துடன் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? லட்டு போன்ற நம் மாலினியை அந்தப் பயல் தட்டிக் கொண்டுபோய் விடுவான்.”
“அதைப்பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். மாலினி விஷயத்தில் நான் எப்போதும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவுமே நடந்து கொள்வேன். அவன் நம் மாலினியின் மீது விரலை வைத்தால்கூட போதும், அந்த நிமிடமே இரண்டு கொலைகள் விழும்” என்று கூறிய குமார் ஆத்திரத்துடன் மாடிப்படிகள் வழியாக மேலே போனான்.
“சபாஷ் குபேரன் ஸார்! மாப்பிள்ளையைக் கருவியாக வைத்தே அவர்கள் இரண்டு பேர்களையும் தொலைத்துக் கட்டிவிடலாம் ஒரு பெண்ணுக்காகத்தானே பல கொலைகள் விழுகின்றன.” என்று சொன்னான் மூக்கன்.
“என் மருமகன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. உணர்ச்சி வேகத்தில் எதிர்ப்பார்க்காத விதமாக எதையாவது செய்துவிடுவான், ஆனால் நான் முழுக்க முழுக்க நம்பியிருப்பது உன்னைத்தான்” என்றார் குபேரன், பொய்ச்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.
“என்னை நம்பிவிட்டீர்கள் அல்லவா? கவலையை விடுங்கள்.” என்று சொன்ன மூக்கன் சிரித்ததும் குபேரனும் பதிலுக்குச் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே சிரித்தார்.
11. இரவில் நடமாடும் எமகிங்கரர்கள்!
இரவு நேரம்.
மீனா சாதாரண நாற்கட்டிலில் படுத்தவாறு தூங்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் எத்தனையோ விதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
அவள் எழுந்திருக்க மனம் இல்லாமல் தவித்தபோதிலும் வந்திருப்பது முக்கியமான ஆளாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் படுக்கையைவிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
இருட்டோடு இருட்டாக வெளியே நின்றுகொண்டிருந்தது ஒரு கரிய உருவம். அந்த மனித உருவம் சட்டென்று வீட்டினுள் வந்து உட்புறமாகக் கதவைத் தாளிட்டது.
மீனா அந்த உருவத்தைப் பார்த்ததும், “இனிமேல் என்னைத் தேடிக்கொண்டு வரவே கூடாது என்று சொன்னேன் நீங்கள் கேட்க வில்லை. இங்கே வந்திருப்பது மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்னாவது? என்னை எல்லோரும் கௌரவமான முறையில் குடும்பம் நடத்தும் குடும்பப்பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாாகள். தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடாதீர்கள்.” என்று அழுதுகொண்டே கெஞ்சினாள்.
கருப்பு அங்கி அணிந்திருந்த அந்த முகமுடி உருவம் உஸ்…ஸ்… என்று அதட்டிவிட்டு சில பத்து ரூபாய் நோட்டுக்களை அவள் கையில் வைத்து அழுத்தியது.
மீனா தயங்கிய போதிலும் அந்த உருவம் இந்த இடத்தை விட்டு போனால் போதும் என்ற எண்ணத்துடன் ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, “சீக்கிரமாகப் போய் விடுங்கள். உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து மறுபடியும் இங்கே வராதீர்கள்.” என்று கூறி இரண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டாள்.
அந்த உருவம் பின்கதவைத் திறந்துகொண்டு வேகமாக வெளியேறியது.
மீனா கதவைச் சாத்தி பூட்டிவிட்டு பணத்தை தலையணைக்கு அடியில் வைத்ததும் மறுபடியும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
திரும்பவும் அந்தப் பொல்லாத உருவம்தான் வருகிறதா? தன் மனநிம்மதியை அந்த உருவம் அடியோடு அழித்துவிடுமா?
மீனா வேதனையால் பெருமூச்சு விட்டபோதிலும் வருவதை அனுபவித்துத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்து “யாரது?” என்று கேட்டாள்.
“நான்தான் மூக்காண்டி! மூக்கன் என்பது ஸ்டைல் நேம் இவர்கள் என் சிஷ்யர்கள்! பெயர் சின்னசாமி; பெரியசாமி.” என்று சொன்ன மூக்கன் தன்னுடைய இரண்டு அடியாட்கள் சகிதம் வீட்டினுள் நுழைந்தான்.
மீனாவின் முகம் சோர்ந்துவிட்டது. அவனால் என்னென்ன தொல்லைகள் ஏற்படக் காத்திருக்கின்றனவோ என்று வருந்தினாள்.
“நான் தூங்குகின்ற நோத்தைப் பார்த்து ஏன் இப்படி வந்து தொந்தரவு செய்கின்றீர்கள்? என்னை சென்னையிலேயே இருக்கவிட மாட்டீர்களா?” என்று பொருமினாள் மீனா.
“யாரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்பதை நினைவுப்படுத்திக்கொள். நான் முதலாளி குபேரன் ஐயாவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். நான் இங்கே வந்திருக்கிறேன் என்றால், அது முதலாளியே நேரில் வந்திருப்பதாகத்தான் அர்த்தம்.” என்று முழங்கினான் முக்கன்.
முதலாளி என்ற சொல்லைக் கேட்டதும் மீனா பெட்டிப்பாம்பைப் போல் அடங்கிவிட்டாள். அவளுடைய அழகிய உடல் நடுநடுங்கத் தொடங்கியது.
“முதலாளி ஏதாவது செய்தி சொல்லி அனுப்பினாரா?” என்று கேட்டாள்.
“நீ என்னை இப்படிக் கேட்பது விந்தையாக இருக்கிறது. நீ எதனால் இரண்டு தினங்களாக வேலைக்கு வரவில்லை? ஒருநாள் நீ கம்பெனிக்கு வராவிட்டால், எத்தனை ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆகும். என்பது உனக்கே தெரியும். எதனால் வேலைக்கு வரவில்லை என்ற காரணத்தைத் தெரிந்து வரும்படி அனுப்பியிருக்கிறார் முதலாளி.”
மீனா உடம்பை நெளித்துவிட்டு, “எனக்கு மனம் சரியாக இல்லை. அதனால் சில தினங்கள் வரையில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஓய்வா? உனக்கா?” என்று கேட்டுவிட்டு ‘கடகட’வென்று சிரித்த மூக்கன், “நம்மைப் போன்ற உண்மையான ஊழியர்களுக்கு ஓய்வு எப்பொது கிடைக்கும் தெரியுமா? நம் உயிர் நம் உடலை விட்டு பிரியும் போது தான்” என்று சொன்னவன், “நாளைக்கே நீ வேலைக்கு வந்தாக வேண்டும் இல்லா விட்டால் உன்னுடைய வலதுகை தனியாக போய்விடும்.” என்று மிரட்டினான்.
அவன் சொன்னதைக் கேட்டு பயந்து நடுநடுங்கிப்போன மீனா, “நான் நாளைக்கே வேலைக்கு வந்துவிடுகிறேன். தயவு செய்து அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள்.” என்று கெஞ்சினாள்.
“அப்படி வா வழிக்கு. நாளை காலையில் நாங்கள் உன்னை எதிர்பார்த்துக்கொண்டே இருப்போம். குறித்த நேரத்தில் நீ வேலைக்கு வரத் தவறினால் உன் வலதுகை தனியாகப் போய்விடும்.” என்று எச்சரித்த மூக்கன், “சின்ன பெரியசாமி.” என்று கூறி தன் கையாட்களை அழைத்துச் சென்றான்.
மீனா நெடுமூச்செறிந்துவிட்டு கதவைச் சாத்த எத்தனித்ததும், ஒருகை அந்தக் கதவைப் பிடித்து பலமாகத் தள்ளியது.
பதறிப்போன மீனா, “யாரது?” என்று கூக்குரலிட்டாள்.
“இந்த நேரத்தில் வருவது வேறு யாராக இருக்கமுடியும்? நான்தான் ராஜா.” என்று சொன்னவன் உள்ளே வந்து, “என்ன மீனா அப்படிப் பார்க்கிறாய்? நான் இங்கே வருவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா?” என்று கூறியவன் கட்டிலில் உட்கார்ந்தான்.
மீனா அவனைப் பார்த்ததும் சிரிக்க முயன்றாள். ஆனால் சிரிப்பு உதடுகளில் மின்னிய போதிலும் பரிபூரணமாக மிளிரவில்லை.
“உங்களைப் போலீஸார் பிடித்துக்கொண்டு போனதாக அறிந்தேன். என் உயிரே போய்விட்டதைப்போல் இருந்தது. இப்பொழுது உங்களைப் பார்த்த பிறகுதான் மறுபடியும் உயிர் வந்திருக்கிறது”. என்று மலர்ந்த முகத்துடன் சொன்னாள் மீனா. ஆனாலும் இடையிடையே பீதியின் சாயல்கள் முகத்தில் படரத்தான் செய்தன.
“அப்படியா? என் மீது எவ்வளவு ஆசை! அன்பு இருந்தால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். உன் காதல் வாழ்க.” என்று கூறிவிட்டுச் சிரித்த ராஜா, “ஏன் மீனா, கதவைத் திறந்து வைத்திருக்கிறாய்?’ சாத்தி உட்புறமாகத் தாழிடுவதுதானே!” என்று குத்தலாகச் சொன்னான்.
அவன் பேசியதன் உள் அர்த்தம் மீனாவிற்கும் புரியத்தான் செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவள் போல, “கதவைச் சாத்திக்கொண்டு பேசினால் யாராவது பார்த்தால் தப்பாக நினைத்துக் கொள்வார்கள்.” என்றாள்.
“ஆமாம், ஆமாம் தப்பாக நினைத்துக் கொள்வார்கள். பிறகு உன்னுடைய நல்ல பெயருக்கு களங்கம் வந்துவிடும்.” என்று சொன்ன ராஜாமணி, “கதவு திறந்தபடியே கிடக்கட்டும்.” என்று கூறிவிட்டு அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.
“ஏன் ராஜா அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள் பார்க்கும் தோரணை எனக்கு பயமாக இருக்கிறது.”
“என்ன…என்ன..நீ பயப்படுகிறாயா? ஆச்சரியமாக இருக்கிறதே. நான் வேறு விதமாக நினைத்திருந்தேன்.” என்று கிண்டலாகச் சொன்ன ராஜாமணி, “நான் வருவதற்கு முன்னால் ரௌடி மூக்கனும், அவனுடைய அடியாட்களும் இங்கே வந்து போனார்களே அது ஏன்?” என்று கண்டிக்கும் தோரணையில் கேட்டான்.
“இங்கே யாருமே வரவில்லை.” என்று பொய் சொன்னாள் மீனா.
“உன் நெஞ்சில் கை வைத்துவிட்டு அதன் பிறகு பேசு. எதற்காக முக்கன் வந்தான்? அவனுக்கும் உனக்கும் எந்த விதத்தில் தொடர்பு?”
அவன் கண்டிப்பு நிறைந்த குரலில் கேட்டதும், மீனா சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “எனக்கு எந்த மூக்கனையும் தெரியாது நான் உங்களிடம் பொய் சொல்வேனா இந்த உலகத்தில் எனக்கென்றிருக்கும் ஒரே ஜீவன் நீங்கள் ஒருவர் தானே…!” என்றாள், தொண்டை அடைத்துக்கொள்ள.
“அப்படியா? நான்தான் ஒரே ஜீவனாக உன் கண்முன்னால் தோன்றுகிறேன் போல் இருக்கிறது. பரவாயில்லை. இதையாவது. சொல். நீ அன்றைக்கு ஓடிவந்து என் சைக்கிளில் விழுந்தாயே! அன்று ஏன் அவ்வளவு பதட்டமடைந்தாய்?” என்று கேட்ட ராஜாமணி, அவளுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவள் முகத்தில் ஏற்படக்கூடிய சலனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.
“நான் பதட்டமடையவில்லை. என் சிநேகிதியிடம் குறித்த நேரத்தில் வருவதாகச் சொல்லியிருந்தேன். நேரமாகி விட்டதால் தான்.”
“நீ பொய் சொல்கிறாய் என்பதை உன் முகமே சொல்கிறது. பரவாயில்லை, நான் வாங்கிக் கொடுத்த ஆறு வளையல்களில் ஒன்று என்ன ஆயிற்று என்பதையாவது நான் தெரிந்து கொள்ளலாமா?”
“வளையல்.. வளையல்… ஆமாம்… அதை நான் இப்போது தான் கவனிக்கிறேன். அந்த வளையல் வேலை செய்யும்போது எனக்குத் தெரியாமலேயே உடைந்து விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”
“நன்றாக நினைவுபடுத்தி எங்கே உடைந்து விழுந்தது என்று பார். ஏனென்றால் இந்த வளையலின் பின்னணியில் ஒரு ரகசியம் இருக்கிறது.”
“எனக்கு எதுவும் தெரியாது. எங்கேயாவது எனக்குத் தெரியாமலேயே உடைந்து விழுந்திருக்க வேண்டும் ”
“உனக்கு எதுவுமே தெரியாதா? மீனா! என் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு உன்னை வாழவைக்கக் காத்துக் கொண்டிருக்கும் காதலனிடம் பேசுகிறாய் என்ற உணர்வுடன் பேசு. மீனா! நானே சொல்கிறேன். என்னுடைய அறையில் கண்ணபிரான் இறந்து கிடந்தார் அல்லவா? அவருக்குப் பக்கத்தில் உன்னுடைய வளையல்களில் ஒன்று உடைந்து கிடந்தது. உன் கூந்தலில் சூட்டியிருந்த மல்லிகைச் சரமும் அங்கே கிடந்தது. போலீசார் அவற்றைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்களே உன் பெயரும் இந்த கொலை. வழக்கில் அடிபட்டு வீணாகச் சீரழிந்து விடுமே என்ற நல்லெண்ணத்துடன் நானே அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன்- இனிமேலாவது உண்மையைச்சொல் என்னை நீ முழுக்க முழுக்க காதலிப்பதாக இருந்தால் எதையுமே மறைக்காதே. நல்லவள் என்ற பெயரை என் வரையிலாவது எடு.”
ராஜாமணி உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான். அவள் எப்படி யாவது தன்னுடன் ஒத்துழைப்பாள் என்ற நம்பிக்கை அவனுக் கிருந்தது.
மீனா சிரித்துவிட்டு, “நான் பொய் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஏதேதோ சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் நானே கண்ணபிரானை கத்தியால் குத்திக் கொலை செய்தேன் என்று சந்தேகப்படுவீர்கள் போலிருக்கிறதே!” என்று சொன்னாள்.
“அந்த அளவுக்கு நான் ‘காமன்சென்ஸ்’ இல்லாதவன் அல்ல. என் மீனா மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காத நல்லவளாக இருப்பாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. உண்மையிலேயே நீ கண்ணபிரானை கொலை செய்திருந்தால் கூட அதை நம்பமாட்டேன்.”
“அப்படியானால் உங்கள் நம்பிக்கை ஒருபோதுமே வீண்போகாது”.
“வளையல் துண்டு, மல்லிகைச்சரம் ஆகியவற்றைப் பற்றி என்ன சொல்லுகிறாய் மீனா?”
“அவை என்னுடையதல்ல கண்ணபிரானைக் கொலை செய்த பெண்ணினுடையதாக அவை இருக்கலாம்.”
அவள் உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு சாகசத்துடன் பேசுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட ராஜாமணி, தனக்கு எதுவுமே தெரியாததைப் போல் பாவனை செய்து, “அன்று உன் தாவணியில் ரத்தக்கறையைப் பார்த்தேன். அது என்ன” என்று கேட்டான்.
முகம் முழுவதும் ‘குப்பென்று’ வியர்வை வியர்த்துக்கொட்டிய போதிலும் ஒரு சிரிப்பின் மூலம் சமாளித்துக் கொண்ட மீனா, “என் தாவணியில் இரத்தக்கறையா? ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று சொன்னாள்.
“அந்தத் தாவணியை நான் பார்க்கவேண்டும்.” என்றான் ராஜாமணி.
“நேற்றைக்குத்தான் அந்தத் தாவணியை லாண்டரியில் வெளுக்கப் போட்டேன். இன்னும் இரண்டொரு தினங்களில் வந்ததும் அதை நானே எடுத்து வந்து உங்களிடம் காட்டுகிறேன். ராஜா, ஏன் என் மீது சந்தேகப்படுகிறீர்கள்? உங்களிடம் நான் பொய் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறீர்களா?”
கைதேர்ந்த நடிகைகளால் கூட இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என்பதை ராஜாமணி தெரிந்து கொண்டான். சிந்தித்துச் சிரித்து ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்மணியைப் போல் எவ்வளவு பொருத்தமாக பேசுகிறாள்.
“நீ என்னிடம் பொய் பேசமாட்டாய். ஆனால் நீ வேண்டுமென்றே பொய் பேசினால் அது உன் ராஜாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்பதை மட்டும் மறந்துவிடாதே.” என்று உணர்ச்சிப்பெருக்குடன் சொன்ன ராஜாமணி தற்செயலாக தலையணையை எடுத்துப் பார்த்தான்.
அதன் அடியில் சில பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன.
மீனா அவற்றைப் பார்த்துத் திடுக்கிட்ட போதிலும் சமாளித்துக் காண்டு, “இன்றைக்குத்தான் சம்பளம் வாங்கினேன்.” என்று குறிப்பறிந்து பேசினாள்.
“இன்றைக்குத் தேதி என்ன தெரியுமா? இருபத்தி நான்கு. எந்தக் கம்பெனியிலுமே சம்பளம் கொடுக்க மாட்டார்கள் ”
“நான் சம்பளம் என்று சொல்லிவிட்டேன் இல்லையா? அது தவறு! அட்வான்ஸ் வேண்டும் என்று சொன்னேன். முன்கூட்டியே கொடுத்து விட்டார்கள்.”
“அந்த நல்ல கம்பெனி எங்கே இருக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?”
“தெரிந்தாலும் அதனால் உங்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அந்தக் கம்பெனியில் ஆண்களையே வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.”
மீனாதானா இப்படி பேசுகிறாள்; அவளுடைய உதடுகளிலிருந்து தானா இப்படிப்பட்ட சொற்கள் உதிருகின்றன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சைக்கிளில் அவள் மோதிய நிகழ்ச் சிக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டாள்.
ஏன் இந்த நிலை…? மீனா எதற்காக மர்மமான முறையில் வாழ்க்கை நடத்தவேண்டும்! அவள் வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் ரகசியம்தான் என்ன?
அவள் செய்கையை நினைத்துக் குழம்பிப்போன ராஜாமணி, “ஆல்ரைட் மீனா! நீ இப்பொழுது மனம் சரியில்லாமல் இருப்பதால் உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இன்னொருநாள் வந்து பேசிக் கொள்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நினைவுப்படுத்திக்கொள் மீனா. எந்தச் சூழ்நிலையிலும் உனக்கு உதவி செய்வதற்கு இந்த ராஜாமணி இருக்கிறான் என்பதை மட்டும் மறந்துவிடாதே!” என்று சொன்னவன், தங்கியிருக்கும் விலாசத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
மீனா நெடுமூச்செறிந்தாள். அவளுடைய நெஞ்சம் ஏறி இறங்கியது.
12. கூட்டுச்சதி…?
மீனாதான் கண்ணபிரானைக் கொலை செய்திருப்பாளா? அவளுடைய நெஞ்சத்தில் அத்தகைய கொடிய எண்ணம் குடிகொண்டிருந்திருக்குமா?
ராஜாமணி தன்னைத்தானே மாறிமாறிக் கேட்டுக் கொண்டான். ஆனால் பதில் எதுவும் சரியான முறையில் கிடைக்கவில்லை. மீனா கொலைகாரியாக இருப்பாள் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
கலவரமடைந்த ராஜாமணி மீனாவின் நினைவாகவே நடந்து கொண்டிருந்தான். அவள் பொய் பேசினாள் என்பதையும், மர்மமான முறையில் ரகசிய வாழ்க்கை நடத்துகிறாள் என்பதையும் புரிந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
முக்கனும் அவனுடைய அடியாட்களும் வீட்டிலிருந்து வெளியே போனதை ராஜாமணி நேருக்கு நேராகவே பார்த்திருந்தான். ஆனால் அதை மீனா மறைத்து விட்டாள். யாருமே வரவில்லை என்று பொய் சொன்னாள்.
அவள் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன? தன்னிடமும் இரட்டை வாழ்க்கை நடத்துகிறாளா?
ராஜாமணி பலவிதமான சிந்தனையால் நடந்துகொண்டிருந்த போது சற்றுத் தொலைவில் ஒரு கருப்பு உருவம் எதிரில் வரும் கார்களின் வெளிச்சம் பட்டுவிடாதபடி மறைந்து மறைந்து செல்வதைக் கவனித்தான். உடனே அந்தக் கருப்பு உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த உருவமும் மீனாவின் வீட்டில் இருந்து தான் வந்ததா? தானும் மீனாவும் பேசிக் கொண்டிருந்ததை வெளியே மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்ததா?
மீனாவை நினைத்துக் குழம்பிய ராஜாமணி இப்பொழுது கருப்பு உருவம் ஒரு பிரச்னையாக இருந்தது. அந்த உருவத்தினுள் ஒளிந்து கொண்டிருப்பது யார் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கருப்பு உருவம் பல தெருக்களைக் கடந்து கடைசியில் குபேரனுடைய மாளிகை பின் காம்பவுண்டுச் சுவரில் எகிறிக் குதித்தது.
பின்னாலேயே வந்து கொண்டிருந்த ராஜாமணியும் சுவர் ஏறிக் குதித்து அந்த உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான். நெஞ்சில் திகில் முண்ட போதிலும் அந்தக் கருப்பு உருவத்தின் முகமூடியைக் கிழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்தான்.
அந்தக் கருப்பு உருவம் பின்னால் திறந்து கிடந்த கதவு வழியாக உள்ளே சென்றது உடனே ராஜாமணியும் அந்த உருவத்தைப் பின்தொடர்ந்து வீட்டினுள் சென்றான். உள்ளே ஒரே இருட்டாக இருந்ததாலும், அது பழக்கப்படாத இடமாக இருந்ததாலும், அந்த உருவத்தைப்போல் வேகமாக நடந்து செல்ல முடியவில்லை. தட்டுத்தடுமாறி எப்படியோ சென்று மாயமாக மறைந்து விட்டது.
ஏமாந்து விட்டோமே என்று நினைத்தான் ராஜாமணி கருப்பு உருவத்தைப் பிடித்திருந்தால் இந்த மாளிகையில் மறைந்திருக்கும் மர்ம மனிதன் யார் என்பதை நேருக்கு நேராகத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருந்தது.
ராஜாமணி வந்தவழியாகத் சென்று விடலாமா என்று நினைத்தபோது ‘பளிச்’சென்று மின்சார விளக்குகள் எரிந்தன. அவன் தூக்கிவாரிப் போட்டதைப் போன்ற நிலையில் திடுக்கிட்டுப் பார்த்தான்.
அங்கே குமார் மாப்பிள்ளே நின்றுகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த ராஜாமணி, “நீங்கள்…நீங்கள்…” என்று தயங்கினான். என்ன பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை.
“நள்ளிரவிலும் ‘பேப்பர்’ போட ஆரம்பித்து விட்டாய் போலிருக்கிறதே. ஆனால் பின் கதவைத் திறந்து கொண்டு இப்படி திருடனைப் போல் வந்திருக்க வேண்டியதில்லை. நீ மாலினியை ஏமாற்றி அழைத்துக் கொண்டு வந்த போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று சந்தேகப்பட்டேன். நான் நினைத்தது நடந்துவிட்டது.” என்று சீறினான் குமார்.
“குமார் ஸார், என்னை நீங்கள் தப்பாக நினைத்து விட்டீர்கள்” என்றான் ராஜாமணி.
“நினைக்காமல் வேறு என்னடா செய்வது? எல்லோரும் தூங்கிய பின்பு அவுட் ஹவுஸில் விழுந்துக் கிடக்கக்கூடிய உனக்கு இங்கே என்ன வேலை..? எதைத் திருடி எடுத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்துடன் வந்தாய்? இரும்புப் பெட்டியின் பக்கத்தில் போவதற்குள்ளேயே குமார் மாப்பிள்ளே வந்துவிட்டாரோ…?” என்று கத்திய குபேரன், “குமார் மாப்பிள்ளே, போலீஸாருக்கு போன் செய் யுங்கள். அவனை விடக்கூடாது”‘ என்று சீறினார்.
அப்பொழுது மூக்கன் விரைந்து வந்து, “‘கையால் ஆகாதவர்கள்தான் போலீஸின் துணையை நாடுவார்கள். உங்கள் சோற்றைத் தின்றுவிட்டு நாங்கள் இருக்கவில்லையா? உத்தரவு கொடுங்கள். இப்பொழுதே அவனைத் தூக்கி இரண்டாகக் கிழித்துப்போட்டு விடுகிறேன்” என்று உறுமினான்.
“என்னையும் பேப்பராக நினைத்துவிட்டிருக்கிறாய் போலிருக்கிறது. நான் மனிதன் என்பதையும், ஓரளவு மூளை உள்ளவன் என்பதையும் மறந்துவிடாதே. நான் பேப்பர் பாய்தான்! ஆனாலும் பேப்பர் மில் வைத்து நடத்துகிற அளவுக்கு தெளிவான சிந்தனைகள் உண்டு” என்றான் ராஜாமணி. அவன் குரல் திமிருடன் தூக்கியடித்தது.
அப்பொழுது தூங்கிக்கொண்டிருந்த மாலினியும், சமையல்காரன் வாசுவும் விரைந்து அங்கே வந்தார்கள். சிறிது நேரம் வரையில் அவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
“எல்லோரும் இங்கே நின்றுகொண்டு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாள் மாலினி.
“நீ செய்த தவறுகளுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நள்ளிரவில் ராஜாமணிக்கு நம்முடைய வீட்டில் என்ன வேலை என்று கேள்.” கத்தியது குமார்தான்.
மாலினி கண்களை உருட்டி விழித்துவிட்டு, “மிஸ்டர் ராஜா, இதெல்லாம் என்ன?” என்று கேட்டாள் கோபம் பொங்கியது.
“நல்ல பாப்பு ஒன்று இந்த வீட்டினுள் நுழைந்ததைப் பார்த் தேன். அதைக் கண்டபிறகு என்னால் வெளியே இருக்கமுடியவில்லை. உடனே வந்துவிட்டேன்” என்றான் ராஜாமணி,ஓர் உறுமலுடன்.
“நல்ல பாம்பா? எங்கே… எங்கே…?” என்று அலறிய மூக்கன், “ஏய் வாசு, தடியைத் தூக்கிக்கொண்டு வா…? வீட்டினுள் மறைந்திருக்கும் நல்ல பாம்பைத் தேடி அடிக்கலாம்” என்று ஓல மிட்டான்.
“வீட்டினுள் மறைந்த நல்ல பாம்பைத் தேடுவதைவிட நம் எதிரில் நின்றுகொண்டிருக்கும் இந்த நல்ல பாம்பையே அடித்து நொறுக்கலாம். இதைப் போன்ற ஆபத்தான நல்லபாம்பு இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்கப் போவதில்லை.” என்று முழங்கினார் குபேரன்.
“என்னைக் கேட்டால் ராஜாமணியை மன்னித்துவிடலாம் என்றே சொல்லுவேன். இந்த வீட்டில் இத்தனை அசம்பாவிதங்கள் நடந்தன என்றால் அதற்குக் காரணம் நம்முடைய மாலினிதான்! அதனால் அவளைத்தான் அடித்து நொறுக்க வேண்டும்” என்று சாடிய குமார் மாப்பிள்ளை, “மாலினி, இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? உன் ஆள் எதற்காக இந்த வீட்டினுள் அனுமதி இல்லாமல் நுழைந்தான் என்று கேள்?” என்று கூறினான்.
மாலினிக்குக் கோபம் வந்துவிட்டது. “மிஸ்டர் ராஜாமணி, நீங்கள் நடந்து கொள்ளும் முறை கொஞ்சம்கூட சரியில்லை. உங்களை நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைவை நொடிப்பொழுதில் வீணாக்கிவிட்டீர்கள் இனியும் இம்மாதிரியாக நடந்துகொண்டால் அதன் பிறகு நடப்பது வேறு மாதிரியாக இருக்கும்.”
“ஆல்ரைட்!” என்று சொன்ன ராஜாமணி அவர்களுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறது சரியான முறையல்ல என்ற எண்ணத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் போனதும் குபேரன், “மாலினி உன்னால்தான் எல்லா தொல்லைகளும் ஏற்படுகின்றன. உன் சித்தப்பா என்ற முறையில் இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று இரைந்தார்.
மாலினி பதில் பேசாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டு தன்னுடைய படுக்கையறைக்குச் சென்றாள்.
“குமார் மாப்பிளே, வாசு நீங்களும் போய் தூங்குங்கள். நானும் முக்கனும் வியாபார சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் பேசப் போகிறோம்” என்றார் குபேரன்.
குமார் மாப்பிள்ளையும், வாசுவும் அவரவர் தூங்கவேண்டிய அறைக்குச் சென்றார்கள்.
“மீனா என்ன சொன்னாள்? வேலைக்கு வருவதாக வாக்களித்து விட்டாள் அல்லவா?” என்று மெல்லிய குரலில் கேட்டார் குபேரன்.
“மூக்கன் ஒரு விஷயத்தில் தலையிட்டால் அது தோல்வியில் முடியுமா? நினைத்ததை எப்படியும் சாதித்தே தீருவேன். மீனா நாளைக்கே கம்பெனி வேலைக்கு வந்து விடுவாள். நம்முடைய சொற்படி நடப்பதற்கும் தயாராக இருப்பாள்” என்றான் மூக்கன், பொறாமையாக.
குபேரன் அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ராஜாமணி விஷயத்திலும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால்?”
“அதற்கும் நான் ஓர் அருமையான திட்டத்தை வைத்திருக்கிறேன். நாளை இரவு பன்னிரண்டு மணிக்கு அவன் படுகொலை செய்யப்படுவான் மாலினிக்கு இருக்கும் ஒரே துணையும் அதன்பிறகு போய் விடும். அதன்பிறகு மாலினியிடம் புதுப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சுதந்திரமான வாழ்க்கையை நாம் துவக்கலாம்” என்று யோசனை சொன்னான்.
“உண்மையிலேயே இது அருமையான திட்டம். ஆனால் உன்னால் ராஜாமணியைக் கொலை செய்ய முடியுமா?”
“முடியுமா என்று ஏன் கேட்கிறீர்கள்! நான் என்ன கொலைகள் செய்து அனுபவம் இல்லாதவனா…? எப்படி எப்படி, எந்தெந்த வழி களில் புதுமையான முறையில் கொலை செய்யலாம் என்று புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதுவதற்குத் தயாராக இருக்கிறேன்.”
“புத்தகம் எழுதும் வேலை உனக்கு வேண்டாம். ராஜாமணியைக் கொலை செய்வதற்கான ஏற்பாட்டைச் செய். நாளை இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு அவன் ஏழு வினாடி நேரம்கூட உயிருடன் இருக்கக்கூடாது.”
“நிச்சயமாக இருக்கமாட்டான். அதைப் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை” என்று உறுதியளித்த மூக்கன் அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தான்.
குபேரன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அந்தக் கணத்திலேயே ராஜாமணி கொலையுண்டு விட்டதைப் போல் உணாந்து மகிழ்ந்தார்.
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.