முத்து மணி மாலை!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 447

முத்து முத்தாக கண்ணீர் துளிகள் கண்களில் இருந்து விழுந்து மாரிடை வழியே சென்று இடுப்பின் மடிப்பில் அணை போல் தேங்கி நின்று அடிவயிற்றை சூடாக்கியது.
“முத்து…” தாய் அழைத்த பின்பே இவ்வுலகத்துக்கு வந்தவளாக கண்களை நன்றாகத்திறந்து தாய் மகழியை நோக்கினாள் இருபது வயதின் இளமை மிளிர்ந்த வதனத்தை நிமிர்த்தியபடி முத்து.
“என்னடி என்னத்தையோ எழக்காதத எழந்த மாதிரி, கப்பலே கவுந்தவளாட்டா மொகத்த சோகமா வெச்சுட்டு எழவு வீட்டுல அழுகற மாதர அழுகறே….? இந்த வயசுல கண்ணால ஏக்கத்துல கவலை வந்தா அது வேற மாதர இருக்கும். போன்ல கண்ட, கண்ட கருமத்தப்பாத்து பேயறைஞ்ச மாதர இருக்கறியோன்னு சந்தேகமா இருக்குது. எதுக்கும் முனியப்பங்கோயில் பூசாரியக்கூப்புட்டு ஒரு பூச போட்டா செரியாப்போகும்னு நெனைக்கறேன்” சொல்லிச்சென்ற தாயைப்பார்த்து கண்களில் நெருப்பு தெரிய முறைத்தாள்.
“ஏண்டா காத்தாலிருந்து கூப்புட்டா போனே எடுக்கலே….? நேத்தைக்கு ராத்திரில இருந்து முத்து மாலையக்காணாம தூக்கமில்லாம கதறிட்டு இருக்கறேன் தெரியுமா? உங்கூட பேசுனாலாவது துக்கம் கொறையும்னு கூப்புட்டா சுச்சாப்புன்னே வருது. செத்துப்போயிரலாம்னு நெனைச்சேன் தெரியுமா உனக்கு?” நண்பனும் உறவினருமான மணியிடம் உரிமையோடு பேசினாள் முத்து.
“செத்துப்போறதுக்கா பொறந்தோம்? நம்மள பெத்துப்போட்ட போது நம்ம அப்பனம்மா எத்தன கனாவோட சந்தோசப்பட்டிருப்பாங்க….? உசுரில்லாத ஒரு பொருளுக்காக வெலையே கொடுத்து வாங்க முடியாத நம்ம உசுர விட்டுப்போடோனுமா? ஆடு, மாடு எப்பவாச்சும் தற்கொலை பண்ணியிருக்குதா? பசிக்கு சாப்பிடறத தவுத்து வேற ஏதாச்சீமு சேத்தி வெக்கிதா?” மணி பேசப்பேச கவலை தளர்ந்து தனது மனம் லேசானதை உணர்ந்தாள்.
‘அம்மா பேசியது கண்டிப்பது போலிருந்தது. மணி பேசியது காயத்துக்கு மயிலிறகில் மருந்து தடவி விடுவது போலிருந்தது. முத்து மாலை காணாமப்போனதையே மறக்கடிச்சுட்டானே….? அப்ப இந்த உலகத்துல நம்மோட ஒத்துப்போறவங்க இருந்தா மத்த எதுவுமே மதிப்பிழந்து போகும்’ மணியைப்பற்றியே நினைத்ததில் இன்றிரவும் தூக்கம் இழந்தாள்.
முத்து மாலையைப்பற்றிய நினைப்பை முழுவதுமாக மறந்தவள் மணியை நேரில் சந்திக்க சூழ்நிலையை உருவாக்கி அவனது வீட்டிற்கு தனது தாய், வீட்டில் செய்து வைத்திருந்த முறுக்கை பாத்திரத்தில் போட்டு எடுத்து கொண்டு கொடுக்கச் சென்றாள்.
“அத்தை….” என சத்தமிட்ட படி கதவைத்தட்டினாள்.
கதவைத்திறந்த அத்தை மரிக்கொழுந்து “வாடி வாயாடி. உனக்கு புடிச்ச கச்சாயந்தா சுட்டேன். அதத்திங்கறதுக்கு மொதல் ஆளா மோப்பம்புடிச்சுட்டு வந்துட்ட பாரு…” என கூறியபடி கச்சாயத்தை தட்டில் போட்டு கொடுத்ததை கையில் வாங்கினாலும் கண்கள் மட்டும் வீடெங்கும் தேடியது.
“ஆரு உன்ற புருசனக்காணமுன்னு தேடறியாக்கும்?”
“ச்சீ போங்க. ஒன்னம் எனக்கு கண்ணாலமே ஆகல….”
“கழுத்துல கயிறு கட்டுணாத்தாங்கண்ணாலமா? மனசு நெறைய ஒருத்தன சொமந்தாலே கண்ணாலமான மாதர தான். என்ற மவன நீ மனசுல சொமக்கிறத உன்ற கண்ணே காட்டிக்கொடுக்குதே…. அவன் இப்பத்தான் புல்லட்ட எடுத்துட்டு புதுமாப்ள மாதர வெளில போயிருக்கான். சித்த இரு வந்துருவான்…” என மணியின் தாய் கூறியதும் போனில் அழைத்தாள்.
“என்ன முத்து, மாலை கெடைச்சிடுச்சா?” மணி ஆர்வமாக கேட்டான்.
“ஒன்னங்கெடைக்கல. ஆனா சீக்கிரமா கெடைக்கப்போகுது. முத்து மாலை மட்டுமில்ல. முத்துக்கு மணி கிட்டிருந்து மாலை கெடைக்கப்போகுது” என்றாள் வெட்கத்தில் முகம் சிவந்தபடி.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
