முடிவல்ல ஆரம்பம்
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 159

கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை அமைதி இழக்கச்செய்தது.
பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது.
மீண்டும் அவளது காதில் ஒலித்தது.
இங்க பாருங்கம்மா, உங்க கணவருடைய நடவடிக்கை ஏதும் சரியில்ல. இதே தனியார் அலுவலகம் னா வேலை யவிட்டு விரட்டியடி ச்சிருப்பாங்க. அரசு வேலைன்றதனால பாவபுண்ணியம் பாக்குறோம். இதான் கடைசி. சொல்லிவைங்க.
சரி என்று சொல்லக்கூட திராணியற்று ஃபோனைத் துண்டித்து வைத்தாள்.
எல்லாவற்றிற்கும் காரணம் இந்த குடிப்பழக்கம்தான்.
நான்காண்டுகளாய் ஆசை தீர காதலித்து இருவீட்டார் எதிர்பையும் மீறி செய்த திருமணம்.
அரசு வேலை கைநிறைய சம்பளம். மகிழ்ச்சிக்கும் குறைவில்லாமல் திகட்ட திகட்ட வாழ்ந்தார்கள். எல்லாம் தீபக் பிறந்து 2ஆண்டு வரைதான். அவனிடம் லேசுபாசாக ஆரம்பித்த குடிப்பழக்கம் இன்று அவனை மொடாக்குடியனாக்கி இருக்கிறது.
எத்தனையோ நல்லவிதமாகவும், மிரட்டியும், அழுது கெஞ்சியும் எதற்கும் பலனற்றுப் போக இறுதியில் அம்மா வீடே தஞ்சம் எனக் கிளம்பினாள். ஆனால் அங்கேயும் செக் வைத்தார்கள். குடிகாரனை தலைமுழுகிவிட்டு வா. உனக்கும் குழந்தைகளுக்கும் என்றும் இங்கு இடமுண்டு என்று.
அதற்கு மனம் இடம் தராமல் என்றாவது ஒருநாள் மீண்டும் பழைய பவித்ரன் கிடைப்பான் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அது வெறும் நப்பாசை என்று இப்போது புலப்பட்டது. இனியும் இப்படி இராமல் ஒரு முடிவு எடுக்கத் தீர்மானித்தாள்.
கவி, கவி.
அறையிலிருந்து பவித்ரனின் அழைப்பு.
தண்ணீர் பாட்டிலும் ஊறுகாயும் எடுத்திட்டு வா.
உரக்கக் கத்தினான்.
கண்களை அழுந்த துடைத்த கவிதா எழுந்தாள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த. தீபக்கை அழைத்து அவனிடம் கணவன் கேட்டவைகளை கொடுத்து விட்டு தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை தாரணியை தூக்கிக் கொண்டு கணவனின் எதிரே அமர்ந்தாள்.
இதுங்களை எல்லாம் ஏன் இங்க கூட்டி வந்தே? அதான் கொடுத்துட்ட இல்ல, கிளம்பு இங்கிருந்து.
கோபத்தில் கத்தினான் பவித்ரன்.
அவன் சொல்வதை காதில் வாங்காமல் கவிதா குழந்தையின் பீடிங் பாட்டிலில் லிக்கரை ஊற்றி, இரு டம்ளர்களில் தனக்கும் தீபக்குமாக ஊற்றிக்கொண்டாள். பின் பீடிங் பாட்டிலை தாரணியின் வாயில் சொருக முயல,
என்னடி செய்யறே?
பீடிங் பாட்டிலை தட்டிவிட்டான் பவித்ரன். தம்ளர்களில் இருந்த மதுவை கால்களால் எத்தித் தள்ளுனான்.
என்னடி டிராமா போடறயா பற்களை கடித்துக்கொண்டு உறுமினான்.
கவிதா பத்ரகாளியானாள்.
எந்த டிராமாவுக்கும் நீ மசியமாட்டேன்னுதான் நான் இந்த முடிவு க்கே வந்தேன். இது முடிவு இல்ல, ஆரம்பம்.
உன்னைய விட்டு தனியா நின்னு குழந்தைகளை வாழவைக்க என்னால முடியும். என் படிப்பு அதுக்கு கைகுடுக்கும். ஆனா அப்படி வாழநீ விடுவியா? வந்து தொல்லை குடுப்ப, உன்னை விட்டு பிரியணும்னா சட்டப்படி போகணும், உண்மை யான அன்பால இணைஞ்ச நாம மூணாவது ஆள் மூலமா பிரிய என் மனசு இடம் தரல. உன்னை விட்டு வாழவும் முடியல. சாகவும் முடியல.
எங்க வழிக்கு உன்னை கொணரவும் முடியல. அதனால உன் வழிக்கு நாங்க மாறிக்கலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்.
நாங்க சாகறத விட பெரிய தண்டனை உன்னோட சேர்ந்து நாங்களும் குடிக்கறதுதான். உன்னை கட்டின பாவத்துக்கு நானும் என் வயத்துல வந்து பொறந்த பாவத்துக்கு இதுகளும் இந்த தண்டனைய அனுபவிக்கட்டும். எங்களுக்கான ஆயுள் தண்டனை இதுவாயிருக்கட்டும்.
மூச்சு வாங்காமல் ஆவேசமாக பேசியவளை
மிரட்சி யுடன் அதிர்ந்துபோய் பார்த்தான் பவித்ரன்.
ஒருகணம் கண்களை மூடியவன் அடுத்த கணம் தன்னைத்தானே இருகைகளால் ஓங்கிஅடித்துக்கொண்டான்.
கவிதா, என்னை மன்னிச்சுடுன்னு கேட்கற. தகுதிய நான் இழந்திட்டேன். சத்தியம் செய்யறதுக்கான யோக்யதையும் எனக்கில்ல.ஆனா ஒன்னு மட்டும் உங்கிட்ட வேண்டிக்கேக்கறேன். இந்த பழக்கத்திலிருந்த நான் விடுபடணுன்னா அதுக்கான ஒரே வழி இருக்கு. கெட்ட பழக்கத்திலிருந்து மீள ஒரு மையம் இருக்காம். அதுல என்னை சேர்த்து மனுஷனாக்கு கவி, நான்உங்க வழிக்கே மாறி நல்ல குடும்பத்தலைவனாகணும்.கவிதாவின் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு பெருங்குரலில் அழ ஆரம்பித்தான் பவித்ரன்
அப்பாவின் அழுகைக்கான காரணம் புரியாமல் தாரணி அழகாக சிரித்தாள்.
கவிதாவின் இதயத்தில் நம்பிக்கை துளிர்த்தது.