முகவரி தேடும் காற்று

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 4,424 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் 10 – புனித பாத்திமா மாதா தேவாலயம்

பாந்திராவிலிருந்து, காந்திவிலிக்கு ஆட்டோ பிடித்து பொய்சரிலிருந்த புனித பாத்திமா மாதா தேவாலயத்திற்கு அருகில் இறங்கினான்.

ஆலயத்திலிருந்து வெளியே வந்த பெரியவரிடம் “நியூடெக் அனிமல் ஃபூட் புராடெக்ட் கம்பெனி எங்கே இருக்கிறது” என்று கேட்டான்.

“அடுத்தத் தெருவில் முதல் கட்டிடம்”என்றார் பெரியவர்.

அடுத்த தெருவிற்கு வந்து அந்தக் கட்டிடம் வந்த போது நியூடெக் புதிதாக திடீர் முயற்சியில் ஆரம்பிக்கப் பட்ட கம்பெனி என்று புரிந்தது.

உள்ளே வந்து ‘திலக்’ என்று ஒரு வேலையாளிடம் கேட்டபோது ”மூட்டை கட்டும் (பாக்கிங்) செக்சனில் நின்று கொண்டிருக்கிறார்” என்று இந்தியில் சொல்லி விட்டுப் போனான்.

அடுத்த பாக்கிங் செக்ஷனுக்கு வந்தபோது.’ இவந்தான் திலக்காக இருக்க வேண்டும்’ என்று அருகில் வந்தவுடன் “வாருங்கள் அரசு. நீங்கள் வரப்போவதாக தீபக் சொன்னார்” என்றான் திலக்.

“பரவாயில்லை தீபக். இவ்வளவு எனக்காக உதவி செய்திருக்கிறார். நீங்கள் ரொம்ப பிசி என்றால் வெளியே காத்திருக்கிறேன்.” என்றான்.

‘’அரசு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லி அருகிலிருந்த குழாயைத் திறந்து கையைக் கழுவிக் கொண்டு பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டு ”நாம் மராத்தியில் பேசுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே?” என்று கேட்டு விட்டு அரசுவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் ஒரு எக்ஸ்போர்ட் ஆர்டர்…. முதல் முதலாக எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. அதுதான் நேரடியாக நின்று பார்த்துக்

கொண்டிருந்தேன். ஆமாம் வீட்டை விட்டு வந்து விட்டீர்கள். எங்கே தங்கியிருக்கிறீர்கள்.” என்று கேட்டான்.

“அது.. வந்து… “ அரசுவின் தயக்கத்தைப் பார்த்து “பரவாயில்லை. நான் பக்கத்திலே ஒரு சால் கட்டிடத்தில்தான் தங்கியிருக்கிரேன். கொஞ்சம் கொசுக்கடிஅதிகமாக இருக்கும்” என்று தமிழரசின் அனுமதி கூட கேட்காமல் அருகில் நின்ற பியூனிடம் “போய் இரண்டு பிளேட் சாப்பாடு வாங்கிக் கொண்டு வா. ஆபீஸ் மேஜையில் வை. நானும் சாரும் சாப்பிட ஆரேஞ்ச் பண்ணு.” என்று சொல்லி விட்டு “சரி இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.

“இன்னும் முடிவெடுக்க வில்லை.ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்ற முடிவு. வேலை பார்த்து கண்டிப்பாக என் கனவு நிறைவேறாது. வேண்டுமானால் அன்றாடம் சாப்பாடு கழியும். என் குறிக்கோள் எல்லாம் என் அப்பா சம்பாதித்தைவிட அவர் அவரின் வியாபார சாம்ராஜ்யத்தை விட பெரிதாக அவர் முன்னால் செய்து காட்டவேண்டும்.

அதற்கு ஒரு அடி நுனி… அல்லது ஆணிவேர் தேட வேண்டும். கிளை பரப்ப நாளாகலாம். ஆனால் இது..என்ற முடிவில்

இறங்கவேண்டும். கனவில் கோட்டைகள் பல இருக்கின்றன. ஆனால் அவைகளை நிஜ சுவர்களாக எழுப்ப வேண்டும்.”என்றான் மராத்தியில்

“ரொம்ப அழகா மராத்தியில் பேசுகிறீர்கள். எனக்குக் கூட இவ்வளவு இலக்கண சுத்தமாக மராத்திய மொழி வராது. சரி, என்னிடம் என்ன எதிர்ப்பார்த்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது “சாப்பாடு தயார்” என்றான் பியூன் சந்தீப்.

“வாருங்கள் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். சாப்பிடும் போது பேசுவதில் பிரச்சினை இல்லையே. என் அம்மா சாப்பிடும் போது பேசினால் உண்வின் ருசி தெரியாது. சாப்பிடும் போது ருசித்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.”

“இங்கே மெஸ் சாப்பாடு அவ்வளவாக ருசிக்க முடியாது. அதனாலே பேசிக்கொண்டே சாப்பிடலாம். கையைக் கழுவுங்கள்” என்று சொல்லி விட்டு மேஜையில் அமர்ந்தான்.

சந்தீப் தட்டில் எடுத்து வைத்த கூட்டையையும் சப்பாத்தியையும் எடுத்துக் கொண்ட போது “சொல்லுங்கள். ஏதாவது அடிப்படையாக செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணியிருப்பீர்கள். எந்த வழியிலே… அல்லது எந்த விதமான பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினக்கிறீர்கள்?” என்று கேட்டான் தீலக் சப்பாத்தியைக் கடித்துக் கோண்டு

“திலக்… நீங்கள் தீர்க்கமாக சிந்திக்கிறீர்கள். அடிப்படையில் இதுதான் வழி… அல்லது இந்த வியாபாரம் செய்ய வேண்டும்… இதிலே எத்தனை மடங்கு சம்பாதிக்க முடியும் என்று நான் கணக்குப்போட்டு இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. நுனிப்புல் மேய்ந்த கதையாக ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்போடுதான் இருந்து விட்டேன். இனிதான் முடிவு செய்ய வேண்டும்.”

“சரி முடிவு செய்யாமல் ஒரு விஷயத்தில் இறங்க முடியாதே.?”

“ஆமாம்”

“அப்படியென்றால் உடனடியாகச் சொல்லுங்கள் என்ன வியாபாரம்?”

அத்தியாயம் 11 – என்ன வியாபாரம்?

“ஷிப்பிங் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ்” என்றவாறு தண்ணீர் குடித்தான் அரசு.

கல கலவென்று சிரித்தான் திலக்.

ஒன்றும் புரியாமல் “ஏன் சிரிக்கிறீர்கள் திலக்” என்று கேட்டான் அரசு.

“அரசு ஷிப்பிங் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்கிறீர்கள்… முதலிலே இரண்டும் ஒன்றையொன்று தொடர்புள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஷிப்பிங் என்றால் கப்பல் வியாபாரமா? அல்லது கப்பலுக்கு மால் சப்ளை பண்ணுகிற பிரைட் பார்வார்டிங் ஏஜெண்டா? அல்லது நாண் வாயேஜ் பில் ஆஃப் லேடிங் கொடுக்கிற கம்பெனியா? சொந்தக் கப்பல் ஆப்ரேட் பண்ணப் போறீங்களா? இன்னும் ஷிப்பிங்கில் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.”

“அதே மாதிரி ஏற்றுமதி பற்றிச் சொன்னீர்கள் என்றால்?…. முதலில் என்ன பொருள் ஏற்றுமதி செய்யப்போகிறீர்கள்? யாருக்கு அனுப்பப் போகிறீர்கள்? பணம் எப்படி கிடைக்கும்? வெளி நாட்டில் யாரைத் தொடர்பு கொண்டு எப்படி லெட்டர் ஆப் கிரெடிட் போட்டு

இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோர்ட் வாங்கி” என்று சொல்லிக்கொண்டே போனவனை ”என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்று இடை மறித்தான் அரசு.

”இது நான் செய்யப் போகிறேன், இதற்கு அடிப்படை தேவை இவை. இதனால் எனக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும்?” என்று திலக் சொல்லிக் கொண்டே போக ”முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்.”

“நான் இதைச் செய்வேன் என்று முடியுங்கள்.”

“இன்று இரவு முழுவதும் யோசிக்கிறேன்.”

“தாராளமாக சிந்தித்து முடிவிற்கு வாருங்கள். உங்கள் சொந்த விஷயம்”

“ஆனாலும் சில விஷயங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறீர்கள்?”

‘’ஏன் தெரியுமா? முதலில் உங்களைப் போல்தான் நானும் ஏதாவது பிஸினஸ் பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டேயிருந்தேனேயொழிய … இதைத்தான் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால்

இறுதியில் எனக்கு இது தெரியும்… என்னால் இது முடியும்… என்று உறுதி செய்த பிறகுதான் இதில் என்ன வருமானம் வரும்? என்ன செலவு? எவ்வளவு இலாபம்{நெட் பிராஃபிட்}வரும்? என்ன என்ன செய்ய வேண்டும்? என்று கணக்குப் போட்டு பார்த்து ஆரம்பித்தேன். அதே மாதிரி நீங்கள் என்ன செய்ய வேண்டும். என்று முடிவு எடுத்து வாருங்கள். அதன் பிறகு நிறை, குறைகளை நாம் அலசலாம். அதைச் செய்தால் என்ன லாபம் வரும் என்று கணக்குப் பார்க்கலாம்.” என்று கேட்ட திலக் “என்ன சார், தூக்கம் வருதா?” என்று கேட்டான்.

”இல்லை திலக். என் தந்தை எந்த அளவிற்கு மூளையைப் பிழிந்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.”

“சரிதான். ஆனால் அடிமட்டத்தில் ஆரம்பிக்கும்போதுதான் அந்தமாதிரி பிரச்சினைகள்,,, ஆரம்பித்த பிறகு வருமானம்… நிகர லாபம் வந்த பிறகு… அதைச் செய்து தருவதற்கு பணத்தை அள்ளி வீசினால், செய்து தருவதற்கு எக்ஸிகியூட்டிகளும் கன்சல்டேஷன்களும், நிறைய வந்து விடும்.”

“அதுவும் சரிதான்.” என்று சாப்பிட்டு முடித்து கையைக் கழுவினான்.

“அரசு வீட்டிற்கு போகலாமா? மாற்று உடை தருகிறேன். என் உடைகளை உடுப்பதில் தயக்கமில்லையே” என்றவன் உள்ளே போய் ஏற்றுமதி ஆர்டருக்கு தேவையானவைகளை சொல்லி விட்டு கீழே வந்து பைக்கை ஆன் செய்தான்.

“என்ன அரசு வாருங்கள் போகலாம். பைக்கில் வருவதாக இருந்தால் ஏதாவது பிரச்சினையா?” என்றான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. அருகிலேதானே நடந்து போய்விடலாம் என்று நினைத்தேன்.” என்று சொல்லி பைக்கில் அமர்ந்தான்.

வீடு வந்து உடையை மாற்றிக்கொண்டதும் பால் வந்தது. சூடு பண்ணி இருவரும் குடித்துக் கொண்டதும் “நீங்கள் அந்த அறையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையணை பெட்சீட் எல்லாம் இருக்கிறது.’ என்று காட்டி விட்டு தூங்கப் போனான் திலக்.

படுக்கையில் அமர்ந்தவன் கழற்றிப் போட்ட சட்டைப் பையிலிருந்து கிழிந்த பகுதியை வாசிக்க ஆரம்பித்தான்.

அத்தியாயம் 12 – ஜே.கே.யின் நாட் குறிப்பு

ஜே.கே.யின் நாட் குறிப்பிலிருந்து….

ஜூலை 10, 1972. பய்குல்லாவின் மார்கெட் பகுதியில் ஊரிலுள்ள நண்பரைத் தேடி வந்தேன். ஊரிலிருந்து அத்தையிடமும் தங்கையிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நூறு ரூபாய் பணத்தையும் அவளுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ரயில் டிக்கெட் எடுக்காமல் பாம்பாய்க்கு வந்து மூன்று நாளகி விட்டது.

இன்னும் ஒருமுறைதான் சாப்பிட பணம் இருக்கிறது. தாராவியில் தங்கியிருந்த நண்பரும் கோவாவிற்கு மாற்றலாகிப் போய் விட்டதால் இந்தப் பம்பாய் ஊரில் யாரையும் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் சங்கர் பய்குல்லாவில் காய்கறி மார்கெட்டில் வேலை செய்வதைக் கேள்விப்பட்டு வந்தேன்.

மூன்று நாளும் தூங்கி எழவும் குளிக்க, வெளியே போகப் பட்டபாடு திரும்பவும் ஊருக்குப் போய் அத்தையுடன் சேர்ந்து வயற்காட்டுக்கு தினக் கூலி வேலைக்குப் போய் விடலாமோ என்று தோன்றியது.

எப்போது வரும் என்று சொல்ல முடியாமல் கருமேகங்கள் மின்னல் மூலம் கண்ணை சிமிட்டிக் கொண்டு ’கொட்டிவிடப் போகிறேன் மழைத்தண்ணீரை…’ என மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ரோடெல்லாம் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி, போய் வருகின்ற கார்களின் வேகத்தில் தண்ணீர் தெறித்துக் கொண்டிருக்கிறது.

போட்டிருக்கும் இந்த ஒரே உடையும் பலமுறை நனைந்து உடலை நடுக்கிக் காய்ந்து விட்டது.

மிருகக்காட்சி சாலை, பூங்காவைத் தாண்டி பய்குல்லா மார்கெட் வந்து சேர்ந்த போது ஒரு கடையில் கூட்டம் கூடி நின்றது.

மழைவேறு ஆரம்பித்து விட, நனைந்து கொண்டே “சார், இங்கே சங்கர் எந்த கடையில் வேலை பார்க்கிறார் தெரியுமா” என்று அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையில் கேட்டேன்.

என்னை ஒரு மாதிரி வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த மனிதனைப் போல மேலும் கீழும் பார்த்து விட்டு “கியா” என்றான் அந்த பையாக்காரன்.

தமிழ் புரியாத இடம் என்று எண்ணி என் தலையில் தட்டிக் கொண்டு “சங்கர் கிதர்” என்று தெரிந்த ஒரே ஹிந்தி வார்த்தையை உபயோகித்தேன்.

வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலைச் சிவப்பை ‘புளிச்’ என்று கடையின் முன்னால் நடுரோட்டில் துப்பி விட்டு, “கோன்..சங்கர்… ஏதோ மர் கயா…” என்று அவன் கையைக் காட்டிய பக்கத்தில் அந்தக் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

அவன் சொன்ன வார்த்தை புரியாமல் அந்தக் கூட்டத்தை நெருங்கிய போது “அய்யோ …அண்ணா.. என்னை விட்டுப் போய் விட்டீர்களே “ என்று தலையில் அடித்துக் கொண்டு தமிழில் அழுது கொண்டிருந்த சப்தம் கேட்க, கூட்டத்தை நெருக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தேன்.

சங்கர் இறந்து போயிருந்தார். அருகில் அவர் தங்கை அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். என் தலைக்குள்ளே ஒரு இடி இறங்கிய மாதிரி இருந்தது. கண்கள் இருண்டுகொண்டு வந்தது.

சுற்றியிருந்தவர்கள் ஹிந்தியிலும், மராத்தியிலும் பேசியதிலிருந்து எனக்குப் புரிந்த ஒரு விஷயம் சங்கருக்குப் பிறகு அவர் தங்கையை யார் காப்பற்றுவார்கள் என்பது மட்டுந்தான். கொஞ்சம் உதவி செய்யலாம் என்று தோன்றியது.

என்ன செய்வது…?

நானே அடுத்த வேளை உணவிற்காக அல்லாடிக் கொண்டிருக்கிற, உறைவிட மில்லாத மாற்றுடையில்லாதவன்.

நான் என்ன உதவி செய்ய முடியும்? கொஞ்ச நேரத்தில் சங்கருக்கு இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. அருகில் அழுது கொண்டிருந்த அந்தப் பெண் மயங்கி விழுந்து விட… அருகிலிருந்த கடையி லிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன்.

சங்கரின் உடலை எடுத்துக் கொண்டு போகும்போது அந்தப் பெண் எழுப்பிய அபலக் குரல் குரல்வளையை நெறித்தது. சங்கரின் உடல் தீயில் எரியும் போது எந்தக் கனவுகளோடு பம்பாய்க்கு வந்தேனோ அத்தனையும் அந்தத் தீயில் கருகியதுபோல உணர்ந்தேன்.

திரும்ப வந்து அவன் தங்கையிடம் “ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டு விட்டு அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் இரண்டு கப் டீயும் இரண்டு ரொட்டி பொறையும் வாங்கி வந்து அவளுக்கு ஒன்று கொடுத்து விட்டு நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.

“எங்களுக்கு வீடெல்லாம் கிடையாது. இந்தக் கடையைக் கவனித்துக் கொண்டு அதற்குப் பின்னாலிலுள்ள மறைவிடத்தில் சமைத்து சாப்பிட்டு படுத்து கொள்வோம்.”

“குளிக்கிறதுக்கும், வெளியே போறதுக்கும் அந்தாலே பொது கழிப்பிடம் போயிருவோம். ஆமா.. நீங்க… நீ.. நீங்க யாரு?” என்று வாய் குழறிய வாறு கேட்டாள். சங்கரின் தங்கை

“நான்… நான்.. ஜெயக்குமார். என் நண்பர் சங்கர் பய்குல்லாவில் காய்கறி(பாஜி) மார்கெட்டில் வேலை செய்வதைக் கேள்விப்பட்டு அவர் மூலம் வேலை தேடிக் கொள்ள பம்பாய்க்கு வந்தேன். ஆமாம்.. உன் பெயர் என்ன?” என்று கேட்டேன்.

“ராணி” என்றாள் பயம் தீராமல்.

– தொடரும்…

– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *