முகத்தில் முகம் பார்க்கலாம்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 209 
 
 

‘படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா.

சின்னத்தம்பியின் தம்பி சொன்னான் ‘ரயில்வேல வேலை பார்க்கிற ஒருத்தர் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன் வான்னு கூப்பிடறார்! போகட்டுமா?’ என்று அம்மாவைக் கேட்டான் வேலைதேடும் தம்பி.

‘ஏண்டா சின்னத்தம்பி, இவனைக் கூட்டீட்டுப் போய் அவன் சொல்ற ஆளைத்தான் பார்த்துட்டு வாயேன்!’ என்றாள் அம்மா.

அண்ணனும் தம்பியுமாக ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்த அந்த ரயில்வே மனுஷன் வீட்டுக்கு முன் கூட்டியே தகவல் சொல்லிவிட்டுப் பார்க்கப் போனார்கள். அவர்களுக்கு தத்தெடுத்த ஒரு மகன். சுந்தரராஜன்னு பேர். அங்கே போனதும் அவர், இவர்கள் இருவரையும் வரவேற்று உட்காரச் சொன்னார்.

அண்ணன் சின்னத்தம்பி தம்பிக்காகப் பேச்சை ஆரம்பித்தார். ‘என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? எங்கு வேலை? ஒரே இடத்தில் வேலையா? என்றார்.

என்ன கேட்டும், எல்லாத்துக்கும் ரயில்வேக் காரர் குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்லி, ‘தம்பியை எப்ப வேலைக்கு அனுப்பறீங்க!’ன்னு கேட்டார்.

‘அம்மாவைக் கலந்துட்டு, தம்பி மூலம் சொல்லி அனுப்பறேன்னார்!’ சின்னத்தம்பி. வீடு வந்து சேர்ந்ததும் குடும்ப பாரம் குறையும்கற நெனைப்பில் அம்மா ஆர்வமாய்க் கேட்டாள் சின்னத்தம்பியை…

‘என்னடா வேலை தரேனுட்டாரா? என்ன சம்பளம் எப்ப சேரணுமாம்?’ ஆர்வமாய் அம்மா கேட்க, சின்னத்தம்பியின் வாய் பார்த்துக்காத்திருந்தார்கள் வேலை தேடும் அவர் தம்பியும் அம்மாவும்.

சின்னத்தம்பி சொன்னார்.’ அம்மா, அவர் சரியில்லைனு படுது!இவர் கிட்ட வேலை கேட்க வேண்டாம்!. அவர் சொல்ற வேலையும் வேண்டாம்!’

‘ஏண்டா?’ என்றாள் அம்மா.

‘நல்லவனா இருந்தாமுகத்துக்கு முகம் பார்த்துப் பேசுவார்! அவர் தலை குனிந்தே பேசறார். எதோ தப்பான வேலைனு நெனைக்கிறேன். தம்பியைச் சிக்கலில் சிக்க வைத்து விடுவார் போலத்தோணுது!’ என்றார் சின்னத்தம்பி உறுதியாக!.

‘அப்படியா?’ கேட்டாள் அம்மா.

‘ஆமாம்! முகத்தில் முகம் பார்ப்பது மட்டுமல்ல., முகத்தில் அகமும் பார்க்க முடியும்! அடுத்தது காட்டும் பளிங்குபோல உள்ளிருப்பதைக் காட்டும் முகம்!’ என்றார் அனுபவசாலி சின்னத்தம்பி.

அவர் சொன்ன படியே நடந்தது ரயிலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்னு கொஞ்ச நாளில் சிக்கினார் அந்த ரயில்வே சீமான். சின்னத்தம்பி பெரிய தம்பியானார்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *